Saturday, May 30, 2020
முகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் தருமபுரி - குடிநீர் வேண்டுமா இப்படி போராடுங்கள் !

தருமபுரி – குடிநீர் வேண்டுமா இப்படி போராடுங்கள் !

-

ருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்தில் உள்ள கள்ளிபுரம், அண்ணாநகர், திருவள்ளுவர் நகர் மக்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீருக்காக ஓரிரு கிலோ மீட்டர் தூரம் அலைந்து திரிந்துதான் தங்களின் தாகத்தை தீர்த்து வருகின்றனர். குடி தண்ணீர் பிரச்சினையை தீர்க்க பல அதிகாரிகளைச் சந்தித்து மனு கொடுத்தும், சாலை மறியல் உள்ளிட்ட பல போராட்டங்களை செய்தும் அரசு இப்பிரச்சினையை தீர்க்கவில்லை.

இந்நிலையில் ஜப்பான் நிதிஉதவியுடன் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த்திட்டம் கொண்டுவரப்பட்டது. இதை தனது தலைமையிலான அரசுதான் கொண்டுவந்தது என்று கருணாநிதியும், ஜெயாவும் போட்டிப் போட்டுக் கொண்டு உரிமை பாராட்டினார்கள். இது அவர்களின் அரசியல் ஆதாயத்திற்கு பயன்பட்டது. ஆனால் கள்ளிபுரம், அண்ணாநகர், திருவள்ளுவர் நகர் போன்ற கிராம மக்களுக்கு கானல் நீராகவே போனது. கிராம மக்கள் வலியுறுத்தும் போது இரண்டு மாதத்திற்கு ஒரு முறை தண்ணீர் வரும்…

வன்னிய சாதி மக்கள் வாழும் எரங்காட்டில் உள்ள ஆழ்துளை கிணற்றிலிருந்து வரும் மினி டேங் தண்ணீர்தான் அண்ணாநகர் மக்களுக்கு குடிநீர். ஒரு கிலோ மீட்டர் உள்ள அங்கு மிதிவண்டி, இரு சக்கர வாகனத்தில் சென்று தண்ணீர் எடுத்து வருவார்கள். ஆனால் எரங்காட்டு மக்கள் முழுமையாக தண்ணீர் பிடிக்கும் வரை காத்திருந்து அவர்கள் பிடித்த பிறகுதான் தாழ்த்தப்பட்ட மக்களான அண்ணாநகர் மக்கள் பிடிப்பார்கள். இவ்வாறு தண்ணீர் பிடிக்க சென்ற தாழ்த்தப்பட்ட இளைஞர் நீண்ட நேரம் காத்திருந்தும் தண்ணீர் கிடைக்க வில்லை. இதனால் வாய் சண்டை ஏற்பட்டது.

இதை ஒட்டி இந்த இளைஞர் மீது போலிசில் புகார் தெரிவித்தனர். இரண்டு தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் மீது எஃப்.ஐ.ஆர் போட திட்டமிட்டது போலிசு. மக்களிடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு எஃப்.ஐ.ஆர் போடவேண்டாம் என்று வன்னிய மக்கள் கேட்டுக் கொண்ட பிறகும் போலிஸ் எஃப்.ஐ.ஆர் போட்டுவிட்டது.

அரசு முறையாக தண்ணீர் கொடுத்தால் இந்த பிரச்சினை வராது என்பதை உணர்ந்த இப்பகுதியில் இயங்கும் விவசாயிகள் விடுதலை முன்னணித் தோழர்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 17.6.2014 அன்று ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்டுப் பெற்றார். இப்பிரச்சனை குறித்து பகுதி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டி பிரச்சாரம் செய்யயப்பட்டது.

காலை 10.00 மணிக்கு ஒலி பெருக்கி வைத்து புரட்சிகர பாடல்களை போட்டு பிரச்சாரம் செய்தனர். “வட்டாட்சியர் உள்ளே இருக்கிறார். ஒலியை குறையுங்கள். 11 மணிக்குதானே ஆர்ப்பாட்டம், அப்போது ஒலிபெருக்கி வையுங்கள்” என்றது போலிசு. வாக்குவாதத்தில் ஈடுபட்ட தோழர்கள் அதை ஏற்க மறுத்தனர்.

வழக்கம் போல 50-லிருந்து 100 பேர் திரள்வார்கள் என்று எதிர்பார்ந்த போலிசு காலி குடங்களுடன் சாரை சாரையாக திரண்ட 500-க்கும் மேற்பட்ட மக்களைக் கண்டதும் கலக்கம் அடைந்தது. வட்டட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சிறு சாலையில் அதிக எண்ணிக்கையில் மக்கள் திரண்டு வந்ததால் ஆர்ப்பாட்டம் மறியல் போல ஆனது. அந்த சாலை வழியே பேருந்துகள் கடந்து செல்ல முடியவில்லை. இதனால் போலிசே பேருந்துகளையும் இரு சக்கர வாகனங்களையும் வேறு வழித்தடத்தில் திருப்பி அனுப்பியது.

முதலில் பறை இசை முழங்க, பிறகு விண்ணதிர முழக்கம் எழுப்பினர் தோழர்கள். “குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு கொடுக்கப்பட்ட மனுக்கள் எல்லாம்…. போண்டா கடையில் கிடக்குது” என்று அதிகார வர்க்கத்தின் அலட்சியத்தை  எள்ளி நகையாடி உழைக்கும் மக்கள் அதிகாரத்திற்கான போராட்டம் தான் ஒரே தீர்வு என முழக்கமிட்டனர்.

இதனைத் தொடர்ந்து தலைமையேற்று பேசிய தோழர் சிவா, “ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் நம் தாகம் தீர்க்க வந்ததல்ல. ஜப்பான் ஏகாதிபத்தியம் லாபம் பார்க்க வந்த திட்டமே” என்று பேசியதை சுற்றி நின்று மக்கள் ஆச்சரியத்துடன் கவனித்தனர்.

அடுத்து பேசிய தோழர் அருண் கடந்த 15 ஆண்டு காலமாக தங்கள் பகுதி மக்கள் எத்தனை போராட்டங்களை செய்துள்ளோம் என்பதையும் அதிகாரிகளின் அலட்சியத்தை அம்பலப்படுத்தியும் பேசினார். குடிநீர் பிரச்சினையை தீர்க்க வக்கற்ற அரசு, அதற்காக போராடுபவர்களை கைது செய்வது, பொய் வழக்கு போடுவது, சாதிய முரண்பாடுகளைத் தீவிரப்படுத்துவது என்றவாறு செயல்படுவதை அம்பலப்படுத்தினர்.

மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜானகிராமன் பேசும் போது “பூமியில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்காத அரசு செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா என்று ஆய்வு நடத்துவது எதற்காக, யாருக்காக” என்று கேள்வி எழுப்பினார். “தண்ணீர் வழங்குவது அரசின் கடமை. இதை வழங்காத கையாலாகாத அரசு அதிகாரிகளின் அதிகாரத்திற்கு நாம் ஏன் கட்டுப்பட வேண்டும்” என்றும் “கடமையை செய்வதற்கே கைதட்டு பெறும் இந்த கயவர்களின் நிர்வாகத்தை நாம் ஏன் மதிக்க வேண்டும்?” என்றும், “ஓட்டு வாங்கிச் சென்ற எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் எங்கே போய் தொலைந்தார்கள்” என்றும் “காலங்காலமாக நமது வாழ்நிலையை தகவமைத்து கொள்ளும் மக்கள் தங்களின் பிரச்சினைகளை தாங்களே தீர்த்துக் கொள்ள முடியும். வேண்டாத சதை பிண்டமா இந்த அதிகார வர்க்கத்தை தூக்கியெறிவதுதான் ஒரே தீர்வு” என்று அம்பலப்படுத்தி, ஆக்ரோசமாக பேசியது அனைவரும் எழுச்சி கொள்ளும் வகையில் இருந்தது.

வட்டாட்சியர் அலுவலகம் அருகே சந்தை கூடியிருந்ததால் திரளான மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை சுற்றி நின்று கவனித்தனர். அதிகாரிகளின் இலஞ்ச லாவண்யத்தை அம்பலபடுத்தி பேசியபோது அலுவலகத்தின் மேலும் கீழும் நின்ற மக்கள் அவர்களின் உள்ளக்குமுறலை நாம் வெளிப்படுத்தியதை உணர்ந்து மகிழ்ச்சி பொங்க ஆச்சரியத்துடன் கவனித்தனர்.

ஆர்ப்பாட்டத்தை முடித்து கொண்டு 10 தோழர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வட்டாட்சியரை சந்தித்து மனுகொடுக்க சென்றார். தோழர்களிடம் மரியாதையாக கோரிக்கைகளை கேட்ட தாசில்தார் உடனே பென்னாகரம் குடிநீர் பிரிவு ஆபரேட்டரின் தொலைபேசி எண்ணைப் பெற்று அழைத்தார். அதற்கு அவர் “ஈ.பி-யில் உயர் மின்னழுத்தம்தான் இதற்கு காரணம், இதனால் தண்ணீர் ஏற்ற முடியவில்லை” என்றார்.

உடனே மீண்டும் ஈ.பி -க்கு போன் செய்தார். அங்கு உள்ளவர்கள் ஜே.ஈ-க்கு போன் செய்யுங்கள் என்றனர்.

ஜே.ஈ-க்கு தாசில்தார் போன் செய்த போது அவர் “நாங்கள் இதற்கு பொறுப்பல்ல, இது ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்ட கன்ட்ரோலில் வருது” என்றார்.

ஒகேனக்கல் கன்ட்ரோலுக்கு போன் செய்த தாசில்தாருக்கு “தருமபுரி கன்ட்ரோல்” என்று பதில் கிடைத்தது.

தருமபுரி கன்ட்ரோலுக்கு போன் செய்த போது “இது கோயமுத்தூர் கன்ட்ரோல்” என்றனர்.

கோயமுத்தூருக்கு போன் செயத போது “இதற்கு சென்னைதான் தலைமை, அங்கே ஃபோன் செய்து கேளுங்கள்” என்று அங்கு பதில் கிடைத்ததும் எரிச்சல் அடைந்த தாசில்தார், “இதற்கு நானே ஒகேனக்கல்லிருந்து தண்ணீர் கொண்டுவந்து கொடுத்து விடுவேன்” என்று கூறியதும் கடமை உணர்ச்சியே இல்லாத போலிசும், தாலுக்கா அலுவலக ஊழியர்களும் பல்லைக்காட்டினர்.

ஒரு வட்டாட்சியருக்கே முறையான பதில் இல்லாத போது சாதாரண மக்களுக்கு எப்படி பதில் கிடைக்கும் என்று தோழர்கள் கேட்டபோது “அரசு நிர்வாகமே பலவீனமாகத் தான் உள்ளது”என்று வருத்தமாக பதில் அளித்தார்.

கடமை உணர்வு சிறிதுமின்றி காமெடி பீசாகி விட்டது முதலாளித்துவ அரசு நிர்வாகம் என்பதையே இந்த சம்பவம் காட்டுகிறது. இதன்பிறகு பி.டி.ஓ விடம் உடனே வருமாறு கடிந்து கொண்டார் வட்டாட்சியர். பி.டி.ஓ வந்ததும் 10 நாட்களுக்குள் பிரச்சினையை தீர்த்து தருவதாக கூறினார். அதுவரை லாரிமூலம் தண்ணீர் எடுத்து வந்து பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று தோழர்கள் கூறியதை அதிகாரிகள் ஏற்றனர்.

ஆர்ப்பாட்டத்தை முடித்து வீட்டிற்கு வருவதற்கு முன்பே மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு தண்ணீர் வந்து விட்டது. அதற்கு முன்பு ஒரு அடி, இரண்டு அடி அளவிற்கு தண்ணீர் ஏற்றுவதற்கே பல காரணங்கள் கூறிவந்தனர். ஆனால் போராட்டத்திற்கு பிறகு தொட்டி முழுவதும் நீர் நிரம்பியது.  போராட்டம் தான் தண்ணீரை வரவழைத்தது என்பதை உணர்ந்த மக்கள் தற்போது வி.வி.மு தோழர்களின் பின்னால் நம்பிக்கையோடு திரண்டு வருகின்றனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீடு சொடுக்கவும்]

தகவல்

விவசாயிகள் விடுதலை முன்னணி
பென்னாகரம் (வட்டம்)
தருமபுரி

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க