Saturday, May 30, 2020
முகப்பு கட்சிகள் இதர கட்சிகள் டேப் காதர் – இது அவலத்தின் குரலல்ல

டேப் காதர் – இது அவலத்தின் குரலல்ல

-

டந்த ஜூன் 10-ம் தேதியிட்ட தமிழ் இந்து நாளிதழில் டேப் காதர் எனும் லாவணிக் கலைஞர் பற்றிய செய்தி வெளியானது. அந்தக் கட்டுரை காதர் எனும் மூத்த கம்யூனிஸ்ட் தோழரைப் பற்றிய பதிவாக இல்லாமல் பெருமளவு மார்க்சிஸ்ட் கட்சியை குறை சொல்லும் பதிவாக வந்திருந்தது. அதற்கான மார்க்சிஸ்ட் கட்சியின் எதிர்வினையோ அவர்களது சமகால தரத்துக்கு சற்றும் குறைவின்றி வெளியானது. “காதர் எனும் பாடகர் சில காலம் கட்சியில் இருந்தார். பிறகு 30 வருடங்கள் தொடர்பில் இல்லாமல் வடஇந்தியாவுக்கு பிழைக்க சென்றுவிட்டார். பிறகு அவரை ஒரு தோழர் எங்களிடம் அழைத்துவந்தார். எங்கள் கட்சி அலுவலகத்தில் தங்கியிருந்த அவர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு அவரே வெளியேறி விட்டார்” என்பதாக இருக்கிறது மார்க்சிஸ்ட் நீலமேகத்தின் அறிக்கை.

டேப் காதர்அவ்வறிக்கையின் இறுதி வாசகங்கள்தான் ஜெமோவுக்கு இணையான ஒரு எழுத்தாளனை அடையாளம் காட்டியது. அதாவது மார்க்சிஸ்ட் கட்சி எப்போதும் கட்சிக்காக உழைத்தவர்களை கைவிட்டதில்லையாம். அப்படியானால் காதர் எனும் ”பாடகர்” கட்சிக்காக பெரிதாக உழைத்தவரல்ல என நாம் பொருள் கொண்டாக வேண்டும். ஆனால் உண்மை அதற்கு முற்றிலும் எதிரானது என்பது தஞ்சைப் பகுதி நண்பர்களை விசாரிக்கையில் தெரிகிறது. நண்பர்களின் செய்தியில் உள்ள உண்மையின் சதவிகிதத்தையும் மார்க்சிஸ்ட் நீலமேகத்தின் அறிக்கையில் உள்ள பொய்யின் சதவிகிதத்தையும் நேரில் அறியும் ஒரு எளிய நோக்கத்தோடு அமைந்தது திரு டேப் காதர் அவர்களுடனான நமது சந்திப்பு.

ஆனால் அது ஒரு எளிதில் கடந்து போகக்கூடிய நிகழ்வாக இல்லை. அந்த சந்திப்பில் காதர் மார்க்சிஸ்ட் கட்சியின் புறக்கணிப்பு பற்றி குறிப்பிட்டது மிக சொற்பமே. இன்னும் சொல்வதானால் அவர் தமது குடும்பத்தினரின் புறக்கணிப்பைக்கூட ஒரு வாக்கியத்தில் குறிப்பிட்டுவிட்டு முடித்துக்கொண்டார். நடமாட இயலாத அளவுக்கான உடல்நிலை, தொன்ணூறு வயது முதுமை, குடும்பத்தார் உடனில்லாத தனிமை என ஒரு மனிதனை நிலைகுலைய வைக்கும் சகல காரணிகளுக்கு இடையேயும் அவர்வசம் தமது கடந்தகாலம் பற்றிய எந்த சலிப்பும் இல்லை.

காங்கிரசும் திமுகவும் ஏதோ முந்தாநாள்தான் சீரழிந்து விட்டது போல சொல்லப்படும் சமகால கருத்துக்களை பகடி செய்கின்றன முன்பு அவர் பாடிய பாடல்கள். ஓட்டுக்கு பணம் தருவதும் கிரிமினல்கள் தேர்தலில் நிற்பதும் இந்தியக்குடியரசின் முதல் தேர்தலில் இருந்தே வழக்கத்தில் இருப்பதை நமக்கு அறியத் தருகின்றன அவரது அனுபவங்கள். சுதந்திரத்துக்கு முன்பிருந்தே காங்கிரஸ் கட்சிக்கு பலமான எதிரியாக இருந்த காலம் முதல் இப்போது நாதியற்றுப் போயிருக்கும் காலம் வரைக்குமான மார்க்சிஸ்ட் கட்சியின் சீரழிவு வரலாற்றுக்கு ரத்த சாட்சியாக இருக்கிறார் அவர்.

அவருடனான சந்திப்பை ஒரே பதிவில் எழுதிவிட இயலாது. ஒரு கேள்விக்கான பதிலை உரையாடலின் வேறுவேறு இடங்களிலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டியிருந்ததால் இதனை ஒரு பேட்டி வடிவிலும் தர இயலவில்லை. ஆகவே இதனை ஒரு சிறு தொடர் கட்டுரையாக தர முயற்சிக்கிறோம்.

டேப் காதர்1944 ல் கும்பகோணத்தில் இருந்த ஒரு மூக்கணாங்கயிறு உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தொழிலாளர் சங்கம் அமைத்ததில் இருந்து துவங்குகிறது திரு.காதர் அவர்களின் அரசியல் வாழ்வு. விடுதலைக்குப் பிறகு கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் தடைசெய்யப்பட்டபோது தலைமறைவாக இருந்த தோழர்களுக்கு தகவல் தொடர்பாளராக பணியாற்றியிருக்கிறார். பிறகு சில மாதங்கள் பம்பாயில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துவிட்டு 1951-ல் கம்யூனிஸ்ட் கட்சியில் முறைப்படி இணைந்திருக்கிறார் காதர். (இந்திய விடுதலைக்குப் பிறகு, வெள்ளையனைக் காட்டிலும் மோசமான ஒடுக்குமுறையை கம்யூனிஸ்டுகள் மீது கையாண்டது சமாதானப் புறா நேருவின் அரசு. பொதுவுடமை இயக்கம் வீரியமாக செயல்பட்ட தஞ்சை மாவட்டத்தில் இருந்த பல தோழர்களை சுட்டுக்கொல்லும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது).

குடும்பப் பொறுப்புகள் காரணமாக கட்சியின் முழுநேர ஊழியராக ஆகாமல் வாரம் நான்கு நாட்கள் பகலில் குடும்ப வருவாய்க்காக உழைப்பது எனவும் மாலை மற்றும் வாரத்தின் ஏனைய மூன்று நாட்களும் முழுமையாக கட்சிப் பணியாற்றுவது எனவும் திட்டமிட்டு அதன்படி செயல்படுகிறார் காதர். இந்த விதி தேர்தல் காலத்திற்கு பொருந்தாது, அப்போது தொடர்ந்து மூன்று மாதங்கள் கட்சிப்பணி மட்டுமே (அன்றைய காலகட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மூன்று மாதகாலத்துக்கு நீடிக்கும்).

அப்போது சாதாரண கட்சி ஊழியர்களுக்கு முன்கூட்டியே திட்டமிடப்பட்ட கட்சி வேலை எதுவும் இருக்காது. தோழர்கள் ஆளுக்கொரு பக்கமாக கிளம்பிச் செல்ல வேண்டும். அங்கே சந்திக்கும் மக்களின் பிரச்சனைகளை சரி செய்வதற்கான வேலைகளை செய்ய வேண்டும், அதனை ஒரு குறிப்பேட்டில் பதிவு செய்துகொள்வதும் அவசியம். வாரம் ஒருமுறை அல்லது மாதம் இருமுறை சந்தித்துக்கொண்டு அவரவர் செய்த வேலைகளை பற்றி விவாதித்து அதில் கிடைக்கும் படிப்பினைகளின் அடிப்படையில் அடுத்த வேலைகளை செம்மைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

டேப் காதர்திரு காதர், பிரச்சாரங்களின்போது பாடல் மற்றும் நாடகங்கள் வாயிலாக மக்களைத் திரட்டும் வேலைக்கே அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கிறார். ஆகவே அவர் கட்சிக்காரர் என்பதைத்தாண்டி ஒரு பாடகராகவே அப்போதைய தஞ்சை மக்களால் அறியப்பட்டிருக்கிறார். இந்தப் பணியில் குறிப்பிடப்படவேண்டிய மற்றுமோர் ஆளுமை திருமூர்த்தி பாகவதர் எனப்படும் திருமூர்த்தி.

பகலெல்லாம் பிரச்சாரத்துக்கு செல்லும் ஊர்களில் வீதிகளில் தள்ளுவண்டியில் பழைய இரும்புக்கு வெங்காயம் விற்கும் அவர் மாலை வேளையில் கட்சிப் பிரசாரத்தை மேற்கொள்வார். கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டங்களுக்கு மக்களைத் திரட்ட இவர்களது பாடல்களும் நாடகங்களும் பெரிதும் பயன்பட்டிருக்கின்றன. ஒரு கூட்டத்தின் ஆரம்பத்தில் கலைநிகழ்ச்சியை முடித்துவிட்டு இன்னொரு ஊரில் நடக்கும் கூட்டத்தின் இறுதியில் நடக்கும் கலைநிகழ்ச்சியில் கலந்துகொள்ள புறப்பட்டுப் போவதென்பது மிக சாதாரணமாக நடக்குமளவுக்கு அவர்களுக்கான தேவை இருந்திருக்கிறது. (எங்கள் பாடல்களுக்காக மட்டுமே நீங்கள் இங்கே வந்திருப்பீர்களேயானால் இனி இங்கு நிகழ்ச்சி நடத்துவதையே நிறுத்திவிடுவேன் என திருமூர்த்தி பாகவதர் ஒரு கூட்டத்தின்போது மக்களை எச்சரித்திருக்கிறார்)

கூட்டங்களுக்கு மக்களைத் திரட்டும் ஒரு கலைஞனாகவும் சாதாரண மக்களிடம் பிரச்சாரம் செய்யும் ஒரு தொண்டராகவுமே இருந்ததால் அவர் தஞ்சை மாவட்ட அளவில் மட்டும் கட்சிப்பொறுப்பில் இருந்திருக்கிறார். மார்க்சிஸ்ட் கட்சி தனது குறைந்தபட்ச கொள்கைகளை உதிர்த்துவிட்டு ஒருசில சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற சீட்டுக்களை மட்டுமே இலக்காகக் கொண்டு செயல்படத்துவங்கிய காலகட்டத்தில் இருந்தே அவர்களுக்கு பிரச்சாரம் என்பது தேவையற்றதாகிறது. ஆகவே காலப்போக்கில் காதர் போன்ற கலையின் வாயிலாக பிரச்சாரம் செய்யும் கலைஞர்களும் கட்சிக்கு தேவையற்றவர்களாகிறார்கள். 70-களின் பிற்பகுதியில் தமக்கான வேலைகள் கட்சியில் கணிசமாக குறைந்துபோனதாக காதர் குறிப்பிடுவதன் பின்னிருக்கும் காரணம் இவைதான்.

டேப் காதர்பிறகு 1985-ல் காதர் குடும்பப் பிரச்சனைகள் காரணமாக தஞ்சையை விட்டு வெளியேறி பம்பாயிலும் ராஜஸ்தானிலும் சுமார் பதினைந்தாண்டுகாலம் வசித்து விட்டு மீண்டும் 2000-ம் ஆண்டில் மீண்டும் தமிழகம் வருகிறார். தஞ்சையில் உள்ள ஒரு மகளிர் விடுதியில் சமையல்காரராக சில ஆண்டுகள் பணியாற்றிவிட்டு நடமாடவியலாத சூழலில்தான் அவர் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தங்கியிருந்திருக்கிறார் (சுமார் ஆறு மாதங்கள்). அலுவலகக் கழிவறையை சுத்தமாக வைத்திருக்கவில்லை எனும் காரணத்தால் அங்கிருந்து வெளியேறும்படி வேண்டுகோள் தொடர்ச்சியாக வைக்கப்பட, மக்கள் கலை இலக்கியக் கழக தோழர்கள் உதவியோடு அங்கிருந்து வெளியேறி இப்போது தோழர் ராஜேந்திரன், செல்வி தம்பதியரின் பராமரிப்பில் வசிக்கிறார் காதர்.

திட உணவு எடுத்துக்கொள்ள இயலாத, எழுந்து நிற்கக்கூட இன்னொருவர் உதவி தேவைப்படும் தோழர் காதரின் வாழ்நாளை இந்த தம்பதியர்தான் நீட்டித்துக் கொண்டிருக்கிறார்கள் (காதரின் வார்த்தைகள் இவை). டேப் காதரின் மிகச்சுருக்கமான வாழ்க்கை வரலாறு இதுதான். தமிழகத்தில் எஞ்சியிருக்கும் இரண்டு லாவணிக் கலைஞர்களில் ஒருவர், தஞ்சை மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சியினுடைய எழுபதாண்டுகால வரலாற்றின் ஆவணம் அவர் என்பதும் நாம் குறிப்பிட்டே ஆகவேண்டிய கூடுதல் தகவல்கள்.

அவர் முன்னெடுத்த போராட்டங்களில் சிலவற்றை அறிந்துகொள்வதுஅன்றைய இந்தியாவையும் தமிழகத்தையும் அறிந்துகொள்ள உதவும் என்பதால் அவற்றை சுருக்கமாக பார்க்கலாம்.

1950-களில் நடந்த தேர்தல்களிலேயே காங்கிரஸ் கட்சி பண விநியோகம் செய்திருக்கிறது. இளையராஜாவின் பிரபலமான நாட்டுப்புறப் பாடலான ஒத்தைரூபாய் தாரேன் பாடல் முதலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாடப்பட்டதே. அப்போது ஒரு ஓட்டுக்குத் தரப்பட்ட ஒருரூபாயை குறிப்பிடும் விதமாக இடதுசாரிப் பாடகர்களால் பாடப்பட்டதுதான் “ஒத்தை ரூபாய் வேணாம் , உன் உப்புமா காபியும் வேணாம்.. ஓட்டுப்போட மாட்டேன்” எனும் பிரச்சாரப் பாடல்.

கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலத்தில் பொதுவுடமை பிரச்சாரப் பாடல்களை திராவிடர் கழக மேடைகளில் முன்னறிவிப்பின்றி பாடியிருக்கின்றார்கள் திருமூர்த்தி பாகவதர் குழுவினர். அதனை முழுமனதோடு அனுமதித்திருக்கிறார் பெரியார்.

டேப் காதர்
டேப் காதருடன் செல்வி, ராஜேந்திரன்

தஞ்சை சேவப்ப நாயக்கன்வாரியைச் சேர்ந்த ஒரு முஸ்லீம் பெண், பேருந்து ஓட்டுனரான தன் கணவரை தேடி பேருந்து நிலையம் வந்த போது காவலர்களால் சந்தேகத்தின் பேரில் அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்புணர்ச்சி செய்து கொல்லப்படுகிறார். அவர் ஒரு சாராய வியாபாரி என போலி குற்றச்சாட்டுக்கள் புனையப்பட்டு, அவர் வாயில் மாலத்தியான் எனும் பூச்சிக்கொல்லி மருந்தை ஊற்றி அரசு மருத்துவர்கள் துணையோடு அவர் மரணத்தை தற்கொலையாக மாற்றியிருக்கிறார்கள் போலீசார். போஸ்ட்மார்ட்டம் செய்த இடத்தில் இருந்த நகர சுத்தி தொழிலாளர் சங்கத்தவர்கள் இந்த அக்கிரமத்தை கம்யூனிஸ்ட் கட்சியின் கவனத்துக்கு கொண்டுவருகிறார்கள். இவ்விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்ட காதர் அந்த மரணத்திற்கான மறு பிரேதப் பரிசோதனையையும் மறு விசாரணையும் கோரி ஒரு ஊர்வலத்தை ஏற்பாடு செய்திருக்கிறார். தஞ்சை சுற்றுவட்டார கிராமங்களில் அதற்காக பெரிய பிரச்சாரம் செய்திருக்கிறார்.

ஊர்வலத்தன்று ஒரு பெரும் படையான போலீஸ் தஞ்சை கீழவாசலை யாரும் நுழைய முடியாத அளவுக்கு முற்றுகையிடுகிறது. வெறும் ஏழுபேர் மட்டுமே இருந்த ஊர்வலத்தின் முன்னும் பின்னும் போலீசார் நெருக்கமாக நின்றிருக்கிறார்கள். அப்போது போலீசாரிடம், “என்னோடு சேர்ந்து கோஷம் போடுங்கள்” என வாக்குவாதம் செய்திருக்கிறார் காதர். பிரச்சனை முற்றி அங்கே காவல்துறை உயரதிகாரி தேவாரம் வரவழைக்கப்பட, அவரிடமும் காதர் அதையேதான் சொல்லியிருக்கிறார்

“பாதுகாப்பு தருவதாயிருந்தால் ஓரமாக நில்லுங்கள், எங்களோடு ஒட்டிக்கொண்டு நிற்பதாயிருந்தால் கோஷம் போடுங்கள்”. பிறகு போலீசார் தள்ளியிருக்கும்படி உத்தரவாகிறது. ஏழு பேரோடு ஆரம்பித்த அந்த ஊர்வலம் இரண்டாயிரம் பேரோடு முடிந்திருக்கிறது.

பிறகு இப்பிரச்சனையை சங்கரய்யா சட்டமன்றத்தில் எழுப்ப, இறந்த பெண்மணி ஒரு சாராய வியாபாரி என முதல்வர் கருணாநிதி சாதித்திருக்கிறார். முதல் தகவல் அறிக்கையில் உள்ள ஓட்டைகளை அம்பலப்படுத்திய பிறகு மறுவிசாரணைக்கு அரசு உத்தரவிட்டிருக்கிறது. ஆர்.டி.ஓ விசாரணையில் காவலர்களின் குற்றம் ஊர்ஜிதமாகி 14 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு வழக்கு பதியப்பட்டிருக்கிறது. இந்த வழக்கிற்கு பிறகுதான் மாலை ஆறு மணிக்கு மேல் பெண்களை காவல் நிலையத்தில் வைத்திருக்கக்கூடாது, பெண்களை கைதுசெய்யும்போது பெண் காவலர்கள் உடனிருக்க வேண்டும் என்பன போன்ற விதிமுறைகள் தமிழக அரசால் வகுக்கப்பட்டிருக்கின்றன.

ரேஷன் பொருட்கள் கள்ளத்தனமாக ஓட்டல்களுக்கு விற்பனை செய்யப்படுவதை கண்டுபிடித்து அவற்றை மக்களுக்கு வினியோகம் செய்யவைத்திருக்கிறார். காங்கிரஸ் மற்றும் திமுகவினரின் அச்சுறுத்தலையும் தாக்குதலையும் தன் சக தோழர்களோடு எதிர்கொண்டிருக்கிறார். திருவையாற்றில் போலீசை கண்டித்து ஒட்டிய போஸ்டர்களை போலீசார் கிழித்து அப்புறப்படுத்தியதை அறிந்து, மறுநாள் அதே போஸ்டர் செய்தியை ஒரு பெரிய பேனரில் எழுதி அதனை மக்கள் கூடுமிடத்தில் வைத்து ஒரு நாள் முழுக்க அதற்கு காவல் இருந்திருக்கிறார்.

மேற்சொன்ன காரியங்கள் எல்லாம் ஒரு கம்யூனிஸ்ட் வழக்கமாகவும் சாதாரணமாகவும் செய்பவைதான். ஆனால் காதர் அவர்களது வாழ்க்கை நிகழ்வுகள் வாயிலாக நாம் சுட்டிக்காட்ட விரும்புவது இவற்றைதான், இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்திலேயே ஓட்டுக்கு பணம் தரப்பட்டிருக்கிறது, கட்சிகள் ரவுடித்தனம் செய்திருக்கின்றன, ரேஷன் பொருட்கள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. அண்ணாதுரை-கருணாநிதி ஆட்சிகாலத்திலேயே போலீஸ் பாலியல் வன்முறைகளையும் கொலைகளையும் செய்திருக்கிறது. அதற்கு அரசு உடந்தையாக இருந்திருக்கிறது.

ஆக, இந்திய ஜனநாயகமாகமானது அது ஆரம்பமான காலந்தொட்டே மக்களுக்கு விரோதமானதாகத்தான் இருந்திருக்கிறது. இந்த தேர்தல் ஜனநாயக அமைப்பை ஏற்றுக்கொண்டு அதனை சீர்படுத்திவிடலாமெனும் போலி கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்திட்டம் படுதோல்வியடைந்து, இந்த போலிஜனநாயக அமைப்பானது கம்யூனிஸ்ட் கட்சியை சீரழித்ததுதன் நடந்திருக்கிறது.

(மார்க்சிஸ்ட் கட்சி டேப் காதரை புறந்தள்ளியதற்கும், காதர் அக்கட்சியைவிட்டு விலகியதற்கும் அடிப்படையான காரணங்கள் என்ன? ஒரு கம்யூனிஸ்டை இன்றைய பொருள்சார் குடும்ப அமைப்பு எப்படி கையாள்கிறது, லாவணி என்றால் என்ன? – அடுத்த கட்டுரைகளில்)

– வில்லவன்

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

 1. தலைப்பு சரியில்லை என்று கருதுகிறேன். டேப் காதரின் இன்றைய நிலை ஒரு அவல நிலையில் இல்லை என்பது போல் தொணிக்கிறது. அவர் எவரிடமும் தன் அவல நிலைக்கு நேரிடையாக உதவி கோரவில்லை என்பது உண்மைதான். ஆனால் ஆதவற்று போன நிலையில் தான் உழைத்த கட்சி அவருக்கு உதவவில்லை என்பதுதான் அவர்பற்றி வந்துள்ள கட்டுரைகளின் மையக்கருத்து. காங்கிரஸ், திமுக, அதிமுக போன்ற கட்சிகளில் ஆதரவற்ற தொண்டனை பராமரிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஒரு கம்யூனிஸ் கட்சி அப்படி செய்வதை ஏற்கமுடியாது என்பதாலேயே முதன் முதலில் அவர் பற்றி ஒரு கட்டுரை பறையோசையில் வெளிவந்தது. பார்க்க: http://paraiyoasai.wordpress.com/?s=%E0%AE%9F%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D

  • தான் கைவிடப்பட்டதாகவே, ஒரு அவலவாழ்வு வாழ்வதாகவோ அவர் குறிப்பிடவேயில்லை. மார்க்சிஸ்ட் அலுவலத்தில் இருந்து தன்னை வெளியேற்றினார்கள் என்றுகூட அவர் சொல்லவில்லை. கட்சியின் செயல்பாடுகளில் தனக்கு இருக்கும் அதிருப்தி காரணமாகவே தான் வெளியேறியதாக காதர் தெரிவித்தார்.

   குடும்பத்தோடு சேர்த்துவைக்கவோ அல்லது ஒரு முதியோர் காப்பகத்தில் வைத்துப் பராமரிக்கவோ தோழர்கள் சிலர் தயாராக இருந்தும் அவர் அதனை முற்றாக நிராகரித்திருக்கிறார். ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகும் அவர் அதில் உறுதியாக இருக்கிறார். அவர் குரல் சுமந்துவந்த செய்திகளில் அவரது சிரமமான வாழ்வு பிரதானமானதாக இருந்திருக்கவில்லை.

   கட்டுரைத் தொடர் முழுமையடந்த பிறகு உங்கள் கருத்துக்கான பதில் கிடைக்கும் என நம்புகிறேன். இல்லாவிட்டால் கடைசி பாகத்தில் நாம் இதுபற்றி விவாதிக்காலாம்.

   • வில்லவன் தெளிவாக அழகாக வந்துள்ளது கட்டுரை. புதுக்கோட்டையில் கலைஞருடன் தொடக்க காலத்தில் பழகி தற்போது அரசியலில் இருந்து ஒதுங்கி வாழும் சிலரைச் சந்தித்த போது உருவான சங்கடங்கள் உங்கள் எழுத்தின் வாயிலாக உணர்கின்றேன்.

 2. தோழர் காதரை அறிமுகம் செய்த வினவுக்கு நன்றி. தோழர் காதரை புறந்தள்ளிய மார்க்சிஸ்ட் (போலி) கட்சி ஒழிக!

 3. மாலை ஆறு மணிக்கு மேல் பெண்களை காவல் நிலையத்தில் வைத்திருக்கக்கூடாது, பெண்களை கைதுசெய்யும்போது பெண் காவலர்கள் உடனிருக்க வேண்டும் என்பன போன்ற விதிமுறைகள் தமிழக அரசால் வகுக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு காரணம் தோழர் காதர் போராட்டம் என்று கொள்ளலாம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க