privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்செய்திகள் தயாரிப்பது ரிலையன்சின் முகேஷ் அம்பானி !

செய்திகள் தயாரிப்பது ரிலையன்சின் முகேஷ் அம்பானி !

-

டந்த மே 29 அன்று முகேஷ் அம்பானியின் 4 இலட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடைய ரிலையன்ஸ் நிறுவனம், ராகவ் பால் எனும் தரகு முதலாளிக்கு சொந்தமான நெட்வொர்க்-18 நிறுவனத்தை வாங்கியுள்ளது.

ராகவ் பால்
ராகவ் பால்

இதன் மூலம் நெட்வொர்க்-18 கட்டுப்பாட்டில் உள்ள பிரபல ஆங்கில செய்தி தொலைக்காட்சி சி.என்.என்-ஐ.பி.என், வணிக தொலைக்காட்சி சி.என்.பி.சி-டிவி18, ஃபோர்ப்ஸ் இந்தியா, கலர்ஸ் தொலைக்காட்சி, ஈநாடு குழும தொலைக்காட்சிகள் மற்றும் ஃபர்ஸ்ட் போஸ்ட் இணையதளம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட ஊடகங்களை நேரடியாக தனக்கு சொந்தமாக்கிக் கொண்டுள்ளார் முகேஷ் அம்பானி.

ஊடகங்களை கைப்பற்றும் முகேஷ் அம்பானியின் முயற்சி 2008-லேயே தொடங்கியது. அப்போது பொருளாதார நெருக்கடியில் இருந்த, ராமோஜி ராவ் குழுமத்துக்கு சொந்தமான ஈநாடு தொலைக்காட்சி நிறுவனத்தின் பங்குகளை சுமார் 2,600 கோடி ரூபாய்க்கு ரிலையன்ஸ் வாங்கியது. ரூபாய் 525 கோடி மதிப்பிடப்பட்டிருந்த ஈநாடு  நிறுவனம், 2007-08ம் நிதியாண்டில் 56.6 கோடி ரூபாய் இழப்பை சந்தித்தது. இந்நிறுவனத்தின் பங்குகளைத்தான் ஒரு பங்குக்கு ரூ 5,28,630 விலைக்கு ரிலையன்ஸ் வாங்கியது.

நிறுவனத்தின் மதிப்பீட்டை விட 5 மடங்கு அதிக தொகை கொடுத்து ரிலையன்ஸ் அதை வாங்கியதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை என்றும், வெளியாகியிருக்கும் இந்த பரிமாற்றத்தோடு வெளியில் தெரியாத பல மறைமுக பரிமாற்றங்கள் இருக்கலாம் என்றும் இந்தியா டுடே செய்தி வெளியிட்டிருக்கிறது. இதன் பின்னணியில் உள்ள உண்மை என்னவென்று வாசகர்கள் யாருக்காவது தெரிந்தால் அறியத் தாருங்கள்.

இந்த காரணத்தை சொல்லி ஈநாடு நிறுவனத்தை ரிலையன்ஸ் வாங்கிய இந்த பரிமாற்றம், 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் அமலாக்க பிரிவின் விசாரணையின் கீழ் வந்தது.

இந்நிலையில்தான் ரிலையன்ஸ் தன் வசமிருந்த ஈநாடு தொலைக்காட்சியின் பங்குகளை, ராகவ் பாலுக்கு சொந்தமான நெட்வொர்க்-18 நிறுவனத்துக்கு ரூ 2,053 கோடிக்கு விற்று விட்டது. ராகவ் பாலின் ஊடக நிறுவனங்கள் அப்போது நிதி இழப்புகளை சந்தித்து கடனில் தத்தளித்துக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி

ராகவ் பால் நிறுவனங்கள் கடனிலிருந்து மீளவும், ஈநாடு தொலைக்காட்சியில் ரிலையன்சின் பங்குகளை வாங்கவும் கடனுதவியளித்தது இண்டிபென்டன்ட் மீடியா டிரஸ்ட் என்ற அறக்கட்டளை. இந்த கடனுக்கு கைமாறாக நெட்வொர்க்-18 மற்றும் டி.வி-18-ன் தகவல் உரிமங்களையும், ஈவு பங்குகளாக மாற்றிக் கொள்ளக் கூடிய பத்திரங்களையும் பெற்றுக்கொண்டது அந்த அறக்கட்டளை.

ஆனால், அந்த அறக்கட்டளையை இயக்குவது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸேதான். இதன் மூலம் ஈநாடு தொடர்பான வழக்குகளை நீர்த்துப் போகச் செய்ததோடு நெட்வொர்க்18 குழுமத்தையும் மறைமுகமாக தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது ரிலையன்ஸ். நெட்வொர்க்18-ன் கட்டுப்பாட்டில் இருந்த ஊடகங்களில் அம்பானிக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் கட்டுரைகள், செய்திகள் வெளியிடுவதை தவிர்க்குமாறு ராகவ் பால் உள்ளிட்ட தலைமை நிர்வாகிகள் நேரடியாக தலையிட்டு நிர்ப்பந்தம் கொடுத்தனர். அதனால் ரிலையன்ஸ் நிறுவனம் தொடர்புடைய பல கட்டுரைகள் வெளியிடப்படாமல் கைவிடப்பட்டன.

இந்நிலையில்தான், இண்டிபென்டன்ட் மீடியா அறக்கட்டளை வசம் இருந்த கட்டுப்பாட்டை பயன்படுத்தி நெட்வொர்க் 18-ன் 78% பங்குகளையும், டிவி18-ன் 9% பங்குகளையும் சுமார் 4,000 கோடி ரூபாய்க்கு வாங்கி அந்நிறுவனங்களை ரிலையன்ஸ் தனது நேரடி ஆதிக்கதிதன் கீழ் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் முர்டோசின் ஸ்டார் குழுமத்தைவிட அதிக எண்ணிக்கையிலான ஊடகங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் முகேஷ் அம்பானி.

ஏற்கனவே தனது மறைமுக கட்டுப்பாட்டில் இருந்த நிறுவனத்தை ரிலையன்ஸ் தனது நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டிய அவசியம் என்ன?

நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் அம்பானியின் இயற்கை எரிவாயு ஒதுக்கீடு விவகாரத்தை கொண்டு ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால், நடப்பது “குரோனி கேப்பிடலிசம்” என்று விமர்சித்திருந்தார். இதை மற்ற ஊடகங்கள் பரபரப்பு செய்திகளாக வெளியிட்டு கொண்டிருந்த போது நெட்வொர்க்18 குழும தொலைக்காட்சிகளும் செய்தி என்ற வகையில் வெளியிடத்தான் செய்தன.

ராமோஜி ராவ்
ராமோஜி ராவ்

தனது கட்டுப்பாட்டிலிருக்கும் சேனல்களில், ரிலையன்சுக்கு எதிரான கருத்துகள் இடம் பெறுவதை கூட ரிலையன்ஸ் விரும்பவில்லை. குறிப்பாக அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் பிரச்சாரங்களையும், விமர்சனங்களையும் புறக்கணிக்க வேண்டும் என்றும், அம்பானி தரப்பு வாதங்களை செய்திகளாகவும், நிகழ்ச்சிகளாகவும் முன் வைக்க வேண்டும் என்றெல்லாம் ரிலையன்ஸ் கோரியிருக்கிறது. ஆனால், அதை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை.

எனவே, தனக்குத் தேவையான ஊடகங்களை கட்டுப்படுத்துவதில் எந்த ஒரு திரை மறைவு அல்லது ஒளிவு மறைவும் தேவையில்லையென களத்தில் குதித்துவிட்டார் அம்பானி.

நெட்வொர்க் 18-ஐ ரிலையன்ஸ் கையகப்படுத்தியதைத் தொடர்ந்து நெட்வொர்க்18-ன் ராகவ் பால் உள்ளிட்ட தலைமை நிர்வாகிகள் அனைவரும் நிறுவனத்தை விட்டு வெளியேறி விட்டனர். சி.என்.என்-ஐ.பி.என் தொலைக்காட்சியின் தலைமை தொகுப்பாளர் ராஜ்தீப் சர்தேசாய் மற்றும் அவரது மனைவியும் தொகுப்பாளருமான சகாரிகா கோஷ் இருவரும் வேலையிலிருந்து வெளியேறியுள்ளனர்.

ராஜ்தீப் சர்தேசாய்
ராஜ்தீப் சர்தேசாய்

இனி தமிழ்நாட்டில் ஜெயா டிவி ஜெயலலிதா புகழ் செய்திகளையும், கலைஞர் டிவி கருணாநிதி புகழ் செய்திகளையும் ‘நேர்மையாக’ வழங்குவது போல அம்பானிக்கு சொந்தமான ஊடகங்கள் ரிலையன்சின் புகழ் பரப்பும் நிகழ்ச்சிகளை தயாரித்து இந்தியா முழுவதும் வெளியிடும். மிகவும் திறமையான தொழில்முறை ஊடகவியலாளர்கள் மூலம் அவை விளம்பரம் என்று தெரியாதபடிக்கு பார்வையாளர்களுக்கு கடை விரிக்கப்படும். சி.என்.என்-ஐ.பி.என் அம்பானி சேனல் ஆக செயல்படுவது போல எதிர்காலத்தில் பிற ஊடகங்களும் நேரடி கார்ப்பரேட் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, கார்ப்பரேட்டுகளின் செய்திகள் தமக்குள் போட்டி போடுவதை கண்டு களிக்கும் வாய்ப்பு மக்களுக்கு வழங்கப்படும்.

கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வதற்காகவே கட்டியமைக்கப்பட்ட அரசு அமைப்பிலும் நேரடியாக முதலாளிகளின் நேரடி தலையீடு வளர்ந்து வருவதைப் போல, ஜனநாயகத்தின் 4-வது தூணான ஊடகங்களிலும் கார்ப்பரேட்டுகளின் நேரடி சாம்ராஜ்யங்கள் உருவாகி வருகின்றன.

இந்திய அரசின் பட்ஜெட் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர் அம்பானியின் அலுவலகத்தில் ஒப்புதல் பெற்று விடும் என்பது புது தில்லி பத்திரிகையாளர்களிடம் நிலவும் பிரபலமான பழமொழி. இனி தில்லி பத்திரிகையாளர்கள் எழுதும் செய்தி அம்பானியின் மேசைக்கு சென்று அனுமதி பெற வேண்டும் என்ற புது பழமொழி உருவாக வேண்டும் போலிருக்கிறது!

மேலும் படிக்க