privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்கோதாவரி கெயில் விபத்து – வளர்ச்சியின் பெயரில் கொலை

கோதாவரி கெயில் விபத்து – வளர்ச்சியின் பெயரில் கொலை

-

கெயில் தீ விபத்து 1ந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த நகரம் எனும் கிராமத்தில், கெயில் நிறுவனத்தின் (இந்திய எரிவாயுக் கழகம்) இயற்கை எரிவாயு குழாய் வெடித்து சிதறியதில், பெண்கள், குழந்தைகள் உள்பட 19 பேர் தீயில் கருகி பலியாயினர்.

கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஓ.என்.ஜி.சியின் தடிப்பாக்கம் எரிவாயு வயலில் உற்பத்தி செய்யப்படும் இயற்கை எரிவாயு, கெயில் நிறுவனத்தின் குழாய்கள் மூலம் கிருஷ்ணா மாவட்டம் கொண்டபள்ளியில் உள்ள தனியார் மின் உற்பத்தி நிறுவனமான லான்கோ உள்ளிட்ட 3 தொழிற்சாலைகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.  தரைக்கடியில் பதிக்கப்பட்டிருக்கும் இக்குழாய்கள் எண்ணெய் வயலிலிருந்து சில மீட்டர்கள் தூரத்திலிருக்கும் நகரம் கிராமத்தின் வழியாக கொண்டு செல்லப்படுகின்றன.

கடந்த ஜூன் 27 வெள்ளிக்கிழமை அதிகாலை 4:30 மணியளவில் கெயில் இயற்கை எரிவாயு குழாய் வெடித்து நகரம் கிராமம் முழுவதும் தீ பரவி சம்பவ இடத்திலேயே மொத்தம் 13 பேர் உடல் கருகி உயிரிழந்த்துடன் 31 பேர் படுகாயமடைந்தனர். சிகிச்சை பலனின்றி மேலும் சிலர் உயிரிழந்ததை தொடர்ந்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 19- ஆக உயர்ந்துள்ளது. பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வரும் 18 பேரில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இயற்கை எரிவாயுவுக்கு வாசனை இல்லாததால், கசிவை அப்பகுதி மக்களால் உணர இயலவில்லை என்றும் அந்த கிராமத்தில் உள்ள ஒரு டீக்கடையில், அடுப்பு பற்றவைக்க தீ மூட்டியதால், கசிந்த எரிவாயு தீப்பற்றி ஊர் முழுவதும் தீ பரவியதாக கூறப்படுகிறது. குழாய் பதிக்கப்பட்ட இடத்திற்கு மிக அருகில் விதிமுறைகளை மீறி குடியிருப்புகள் அமைக்கப்பட்டிருந்த்தாகவும் கூறப்படுகிறது. அதாவது இக்கோர விபத்து ஏற்படுவதற்கும் கூட பாதிக்கப்பட்ட மக்களே காரணம் என்ற வகையில் செய்திகள் கசிய விடப்படுகின்றன.

சுமார் 200 அடி உயரத்துக்கு கொழுந்துவிட்டு எரிந்த தீயில் தென்னை மரங்கள், பயிர்கள், கால்நடைகள், அருகில் மரத்திலிருந்த பறவைகள்  உள்ளிட்ட ஒட்டு மொத்த கிராமமே  எரிந்து சாம்பலாகிப் போனது.

20 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட இக்குழாய் அமைப்பு முழுவதுமே கசிவை கண்டறியும் உணர்கருவிகள், கசிவு ஏற்பட்டால் அதை எச்சரிக்கும் அமைப்பு, நெருக்கடியான சூழலில் எரிவாயுவை நிறுத்துவதற்கான தானியங்கி அமைப்பு என எந்த பாதுகாப்பு அம்சங்களும் இன்றி காலாவதியான தொழில்நுட்பத்தில் உள்ளதாக துறை சார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் 20 ஆண்டுகளில் துருப்பிடித்தல், தேய்மானம் போன்றவற்றால் மொத்த குழாயமைப்பும், குறிப்பாக குழாய் இணைப்புகள் கசிவு ஏற்படும் அபாயகரமான சூழலில் இருக்கின்றன.

இப்பகுதியில் எரிவாயு கசிவு ஒரு அன்றாட நிகழ்வாக இருக்கிறது. அமலாபுரம் அருகே பசர்லபுடி என்ற இடத்தில் ஏற்பட்ட கசிவு இரண்டு மாத காலத்திற்கும் மேல் நீடித்திருக்கிறது. கசிவு குறித்து பலமுறை முறையிட்டாலும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு குழாய்கள் பழுது பார்க்கப்பட்டாலும், புதிய குழாய் அமைப்புகளை கொண்டு அமைக்கப்படுவதில்லை என்பதோடு பாதுகாப்பு அம்சங்களும் மேம்படுத்தப்படவில்லை.

கெயில் தீ விபத்து 2
நகரம் கிராமத்தில் இறந்து போனவர்களின் உறவினர்கள்

மூன்று நாட்களுக்கு முன்னரே நகரம் கிராம மக்கள் எரிவாயு கசிவு குறித்து புகார் தெரிவித்திருக்கின்றனர். ஆனால் பெயரளவில் மட்டும் சீரமைப்புப் பணிகளை செய்துவிட்டு மீண்டும் அந்த இடத்தில் கசிவு ஏற்படுகிறதா என்பதைக் கூட சோதித்தறியாமல் விட்டுவிட்டதாக கெயிலின் மீது  அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதனிடையே விபத்து ஏற்பட்டதற்கு முதல் நாள் கசிவு குறித்து புகார் பெறப்பட்டு குழாய்கள் பழுது பார்க்கப்பட்டதாக தெரிவித்துள்ள கெயில் நிறுவனம், சம்பந்தப்பட்ட இரு அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. உயர்மட்ட விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ 20 லட்சமும், காயமுற்றவர்களுக்கு ரூ 50 ஆயிரமும் இழப்பீடு தருவதாக அறிவித்துள்ளது கெயில்.

இதே கெயில் நிறுவனம் தான் கொச்சியிலிருந்து பெங்களூருக்கு இயற்கை எரிவாயுவை குழாய் மூலம் தமிழகத்தின் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஏழு மாவட்டங்களின் வழியாக கொண்டு செல்லும் திட்டத்தை அறிவித்து நடைமுறைப்படுத்தி வருவது குறிப்பிட்தக்கது.

குழாய் பதிக்கப்படும் இடத்தில் நிலத்தை உழுவதோ, அந்த இடத்தில் ஆழ்குழாய்க் கிணறு போடுவதோ கூடாது என்றும் வயலில் பதிக்கப்படும் குழாய்களுக்குச் சேதமோ, விபத்தோ நேர்ந்தால் சம்பந்தப்பட்ட விவசாயியின் மீது கிரிமினல் குற்றவழக்கு போடப்படும் என்றும் பல்வேறு நிபந்தனைகளை வைத்துள்ளது  கெயில் நிறுவனம். ஆனால் குடியிருப்பு பகுதிக்கு அருகில் குழாய்களை கொண்டு செல்லக்கூடாது, மீறி கொண்டு செல்வதாக இருந்தால் நடைமுறைப்படுத்த வேண்டிய உயர் பாதுகாப்பு அம்சங்கள் என்பது போன்ற எந்த அடிப்படை விதிமுறைகளையும் பின்பற்றுவதில்லை.

இக்கையகப்படுத்துதல் விவசாய நிலங்களை துண்டு துண்டாக்கி விவசாயத்தை சீர்குலைக்குமென்பதால் வாழ்வாதாரத்தை இழக்கும் விவசாயிகள் கடுமையாக போரடி வருகின்றனர். சுமார் 310 கி.மீ. தூரத்துக்கும் மேல் விவசாய நிலங்களின் வழியே குழாய்களைப் பதிக்கும் இத்திட்டத்தினால், கோவை மாவட்டத்தில் மட்டும் 50,000 ஏக்கர் பாதிக்கப்படும். விவசாய நிலத்தில் 20 மீட்டர் அகலம் மட்டுமே கையகப்படுத்துவதால்,  நிலத்தின் சந்தை மதிப்பில் 10 சதவீதம் மட்டுமே இழப்பீடாக தரப்படும் என அறிவித்திருக்கிறது கெயில்.

பொது நலன், நாட்டின் வளர்ச்சி என்ற காரணங்களை கூறி ஆளும் வர்கங்களும் நீதிமன்றமும் இக்கையகப்படுத்தல்களை நியாயப்படுத்தப்படுகின்றன. வளர்ச்சி, முன்னேற்றம் என்ற  பெயரில் கெயில் மக்களின் பொருளாதார வாழ்வாவை சூறையாடுகிறது. அவ்வளர்ச்சி மக்களின் உயிரையும் சேர்த்து பறிக்கிறது.

முதலாளிகளின் வளர்ச்சிக்கு பேயாய் வேலை செய்யும் அரசு மக்களை பொறுத்த வரை அதே வளர்ச்சிக்காக பலி கொடுக்கும் பிணம் தின்னும் அரசாகவும் இருக்கிறது.