Thursday, August 5, 2021
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க சென்னை போரூர் கட்டிட விபத்தின் சதிகாரர்கள் யார் ?

சென்னை போரூர் கட்டிட விபத்தின் சதிகாரர்கள் யார் ?

-

சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் பிரைம் சிருஷ்டி என்ற நிறுவனத்தால் கட்டப்பட்டு வந்த 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து இது வரை 50 தொழிலாளிகள் கொல்லப்பட்டும் 27 பேர் காயங்களுடனும் மீட்கபட்டிருக்கின்றனர்.

தற்போது வந்திருக்கும் செய்திகளைப் பார்க்கும் போது பலி எண்ணிக்கை இன்னும் அதிகமாகும் போலத் தெரிகிறது. எவ்வளவு பேர் உள்ளே சிக்கியிருக்கின்றனர் என்ற விவரம் கட்டுமான முதலாளிக்கோ இல்லை அரசு, போலீசுக்கோ தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. உயிரிழப்புகள் அதிகமாய் பதிவு செய்யப்படுவது இருதரப்பினருக்கும் நல்லதல்ல என்பதால் ஆரம்பத்தில் இருந்தே இவர்கள் அதை குறைத்தே தெரிவிக்கின்றனர். காணமல் போன தொழிலாளிகளின் உறவினர்கள் அதை முறையாக புகார் செய்ய மாட்டார்கள் என்று கூட இவர்கள் யோசித்திருக்க கூடும். 11 மாடி கட்டிடத்தின் உள்ளே எத்தனை பேர் வேலை செய்தார்கள், மாட்டிக் கொண்டார்கள் என்பதைக் கூட இவர்களால் கூற முடியவில்லை என்றால் இந்த கட்டிடம் என்ன இலட்சணத்தில் கட்டப்பட்டிருக்கும் என்பதை புரிந்து கொள்ளலாம்.

கட்டிடம் கட்ட ஏரிப் பகுதி நிலத்தை தேர்ந்தெடுத்த கட்டிட நிறுவன முதலாளிகளிருந்து, விதிமுறைகளை தளர்த்தி தேவையான அனுமதிகளை வழங்கிய சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள், நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலர்கள், துறை அமைச்சர் வைத்தியலிங்கம் மற்றும் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா ஆகியோர் அடங்கிய ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசுதான் இந்த கட்டிடம் இடிந்து விழுந்த குற்றச் செயலுக்கான முதன்மை குற்றவாளிகள். அவர்களது குற்றத்தின் விளைவாக கட்டிடம் இடிந்த பிறகும் அவர்களில் யாரும் கட்டிட இடிபாடுகளை நீக்கி சிக்கியிருந்த தொழிலாளர்களை மீட்க வரவில்லை.

நூற்றுக் கணக்கான மீட்புப் பணி ஊழியர்கள், காவல் துறையினர், தீயணைப்புப் படையினர்தான் இரவும், பகலும் உழைத்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க உழைத்து வருகின்றனர்.

விதிமுறைகளை மீறி கட்டிடத்துக்கு அனுமதி வழங்கி, அதற்கு உடந்தையாக இருந்து இந்தக் கொலைகளுக்கு காரணமாக இருந்த ‘புரட்சித்’ தலைவியும் அவரது கூட்டாளிகளும் எதுவுமே தெரியாதது போல மறுநாள் வந்து கட்டிடத்தை பார்வையிட்டு காயமடைந்த தொழிலாளிகளுக்கும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் ஆறுதலும் கூறிச் சென்றிருக்கின்றனர்.

‘அம்மா’ உள்ளே சென்று பார்வையிடும் போது, கட்டிடத்தில் முன்பகுதியில் உள்ள பொக்லைன் இயந்திரங்கள் அவருக்கு தடையாக இருக்கும் என்பதால் இயந்திரங்களை பயன்படுத்துவது தற்காலிமாக நிறுத்தப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு நிமிடமும் உயிரை தக்க வைத்துக் கொள்வதற்கான போராட்டத்தில் பொன்னான கணங்களாக விரிந்த அந்த நாளில் ‘அம்மா’வின் வருகை உள்ளே சிக்கியிருந்த தொழிலாளிகள் சிலரை காப்பாற்ற முடியாமல் போயிருக்கும் என்பதற்கு வாய்ப்பில்லையா என்ன?

கட்டிடத்துக்கு அனுமதி வழங்கியதில் தவறு இழைக்கப்படவில்லை என்றும், கட்டுமான நிறுவனம் விதிமுறைகள அனைத்தையும் மீறியதாகவும், விபத்துக்கான முழு காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுவதாகவும் ஜெயலலிதா பச்சையாக பொய் சொல்லியிருக்கிறார். அவரது அமைச்சரின் உத்தரவின்படியும், ஒப்புதலோடும் பிரைம் சிருஷ்டிக்காக விதிமுறைகளை தளர்த்தி, மாற்றி அரசாணைகள் பிறப்பிக்கப்பட்ட உண்மை அவருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

மவுலிவாக்கம் போரூர் ஏரிக்கருகில் உள்ள 1.11 லட்சம் சதுர அடி பரப்பளவு நிலத்துக்கு சொந்தக்காரர்தான் கலிபுல்லா. இவரது மர வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் அந்த நிலம் ஏலத்திற்கு வந்தது. இந்தியன் வங்கியில் கிளார்க்காக வேலை செய்து வந்து 2011-ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்ற மனோகரன் தான் கூட்டாளியாக இருந்த பிரைம் சிருஷ்டி ஹவுசிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்காக நிலத்தை வாங்கியிருக்கிறார். தலா 44 குடியிருப்புகளைக் கொண்ட இரண்டு அடுக்கு மாடி கட்டிடங்கள கட்ட திட்டமிட்டுள்ளார்.

மனோகரனது பிரைம் சிருஷ்டி நிறுவனம் மதுரையில் வணிக வளாகங்கள், அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டியிருக்கிறது. லேக் வியூ ஹோம்ஸ் என்று வீடுகள் கட்டி விற்பனை செய்திருக்கிறார்கள். ஆட்சியில் இருக்கும் தி.மு.க அல்லது அ.தி.மு.க அரசியல் தலைவர்களின் ஆதரவுடன் தமது ரியல் எஸ்டேட் தொழிலை செய்து வந்திருக்கிறது இந்தக் கும்பல். ஆட்சிகள் மாறினாலும் மக்கள் மீதான மறுகாலனியாக்க சுரண்டலுக்கு இரு கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஆதரவு அளிக்கின்றனர் என்பதற்கு பிரைம் சிருஷ்டி மனோகரன் ஒரு எடுத்துக்காட்டு.

2011-ம் ஆண்டு தேசிய குற்றப் பதிவேட்டு விபரங்களின் படி தமிழ்நாட்டில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து ஒவ்வொரு நாளும் ஒருவர் சாகிறார். அந்த ஆண்டில் 437 பேர் இவ்வாறு உயிரிழந்திருக்கின்றனர். சென்னையில் 22 கட்டிட இடிந்து விழுந்த நிகழ்வுகளில் 21 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

பெரும்பான்மையான கட்டிடங்கள் இடிந்து விழுந்த பிறகு விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதால் நடப்பதாக ‘கண்டுபிடிக்கிறார்கள்’. ஆனல் இந்த விதிமீறலை அனுமதித்து விதியை வளைத்ததும் இவர்கள்தான். நகராட்சிகளும், குடிசை மாற்று வாரியம் போன்ற அரசு அமைப்புகளும், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக அடையாளம் கண்டுள்ளனர். அதற்கு இவர்கள்தான் பொறுப்பு என்பதை யார் அடையாளம் காண்பது? மேலாக கட்டிடங்கள் இடிந்து விழுந்தாலும் இந்த கட்டிட உரிமையாளர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. அல்லது பேருக்கு எடுத்து விட்டு அவர்கள் தண்டிக்கப்படாமல் தொழிலை செவ்வனே தொடர்கிறார்கள்.

தன்னிடம் இரண்டு 11 மாடி கட்டிடங்கள் கட்டும் திட்டத்துக்கு அனுமதி கேட்டு வந்த மனோகரனிடம் “போரூர் ஏரிக்கரையில் உள்ள இந்த கிராமத்தில் 6 அடி தோண்டினாலே ஏரி தண்ணீர் வரும். 18 அடிக்கு மேல் களிமண் வரும். 60 அடியில்தான் பாறைகள் வரும்” என்று அவரை எச்சரித்திருக்கிறார் மவுலிவாக்கம் பஞ்சாயத்து தலைவர் சதாசிவம்.

விழுந்து நொறுங்கிய கட்டிடத்தின் அண்டை வீட்டுக்காரர்களிடம் (சீனிவாசன், ரவி முதல்தெரு, ராஜராஜன் நகர்) பேசிய போது

”நாங்க இவ்வளவு பெரிய கட்டிடம் இங்க வருமுன்னு நினைக்கல. அந்த கட்டிடத்துக்கு அடித்தளம் போடும்போது கூட, அவங்க பெரிய மெசின் எதையும் எடுத்துவரலை. அதனால் சின்ன அபார்ட்மென்டுகள் கட்டப்போறாங்கன்னு நெனைச்சோம். வீட்டுக்கு போர் போடும் அளவிலதான் இந்த 12 மாடிக்கும் அடித்தளம் போட்டாங்க. மொத்த நிலத்திலயும் 5அடி ஆழத்துக்கு குளம் போல் பள்ளம் தோண்டி அந்த பள்ளத்தில அங்கங்கே 15 அடி ஆழத்துக்கு ஒரு அடி விட்டத்தில பில்லர் எழுப்பி அதன் மேல் 12 அடுக்கு மாடியை உட்கார வெச்சிட்டாங்க. இங்க எல்லாம் 10 அடி தோண்டினாலே தண்ணீ வரும். 50 அடி ஆழம் வரை களிமண்ணும் சேறும்தான் வரும்…

இது ஏரி சார்..! இதை ரெட்டை ஏரின்னு சொல்லுவாங்க. 20 வருஷத்துக்கு முன்னால நாங்க இங்க குடியேறி வாழ்ந்து வாரோம். அதிகபட்சம், 5 அடிக்குமேல் யாரும் இங்க கடைக்கால் தோண்டுவது கெடையாது. அதற்கே தண்ணீர் சொளசொளவென ஊறும். 2 மாடிக்கு மேல் இங்கு யாரும் கட்டிடம் கட்டுவதே இல்லை.” என்றார்.

11 மாடி கட்டிடம் கட்ட தனியார் நிறுவனத்துக்கு அதிகாரிகள் எப்படி  அனுமதி கொடுத்தார்கள் என்றே தெரியவில்லை என்கின்றனர் பகுதி மக்கள்.

88 குடியிருப்புகளை கொண்ட அடுக்கு மாடி கட்டிடங்களை கட்டுவதற்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருக்கிறது பிரைம் சிருஷ்டி நிறுவனம்.

போரூர் கட்டிட விபத்து குற்றவாளிகள் 3
கட்டுமான முதலாளிகளின் இலாபவெறிக்காக உயிரை பணயம் வைத்து வேலை செய்யும் தொழிலாளிகள்.

அடுக்கு மாடி குடியிருப்பு எனில் 60 அடி சாலை இருக்க வேண்டும். நிலத்தின் பட்டா, கட்டிட வரைபடம், மண் தன்மையை உறுதி செய்யும் சான்றிதழ், போக்குவரத்து துறை, தீயணைப்பு துறை, சென்னை மாநகராட்சி, சென்னை குடிநீர் வடிகால் வாரியம், சுற்றுச் சூழல் ஆகிய துறைகளின் அனுமதி கடிதங்கள் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பிரைம் சிருஷ்டியின் விண்ணப்பத்தோடு பட்டா, கட்டிட வரைபடம் மட்டுமே இணைக்கப்பட்டிருக்கின்றன, சம்பந்தப்பட்ட துறைகளின் அனுமதி கடிதங்கள் இணைக்கப்படவில்லை.

அமைச்சர் வைத்தியலிங்கத்தை சந்தித்து ‘கவனித்த’ பிறகே விண்ணப்பம் அனுப்பியதால் நடைமுறைகளை பின்பற்றுவதை பிரைம் சிருஷ்டி அலட்சியம் செய்திருக்கிறது. பெருநகர வளர்ச்சிக் குழுமம் கேட்ட பிறகு மண்வள உறுதிக்கான சான்றிதழை மட்டும் பெற்று இணைத்திருக்கிறது. ஆவணங்கள் போதாமையால் பிரைம் சிருஷ்டியின் விண்ணப்பம் நிராகரிக்கப்படாததை, மேலிடத்து ‘அருள்’ உறுதி செய்திருக்கிறது.

பிரைம் சிருஷ்டியின் விண்ணப்பம் திட்ட ஒப்புதல் பிரிவின் உதவி திட்ட அமைப்பாளர் துணை திட்ட அமைப்பாளர் ஆகியோரால் பரிசீலிக்கப்பட்டு, கட்டிடம் கட்டும் இடத்தை இருவரும் நேரடி ஆய்வு செய்த பிறகு தலைமை திட்ட அமைப்பாளர் ராஜசேகர பாண்டியனுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

உதவி திட்ட அமைப்பாளரும், துணை திட்ட அமைப்பாளரும் கட்டிடம் அமையவிருக்கும் பகுதியில் சாலை 42 அடி அகலம் மட்டுமே இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் பிரைம் சிருஷ்டிக்கு தலைமை பூசாரியான அமைச்சர் வைத்தியலிங்கத்தின் ஆசீர்வாதம் இருந்ததால் இந்த முக்கிய குறைபாடு புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், பிரைம் சிருஷ்டி பத்திர பதிவுத்துறையிடம் சமர்ப்பித்த வில்லங்க சான்றிதழிலேயே நிலத்தின் தெற்கில் கட்ட தோட்டி நிலம் மற்றும் ஏரி கால்வாய் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதை திட்ட அமைப்பாளர்கள் புறக்கணித்ததோடு நேரில் ஆய்வு செய்தும் உள்ளூர் மக்கள் அனைவருக்கும் தெரிந்த இந்த விபரத்தை ஆட்சேபணையாக எழுப்பவில்லை.

தனது சாதியைச் சேர்ந்த ராஜசேகர பாண்டியனை தலைமை திட்ட அமைப்பாளர் பதவியில் உட்கார வைத்தவரே அமைச்சர் வைத்தியலிங்கம். எனவே அமைச்சரின் பினாமியாக, அவர் சொல்வதுபடி கட்டிட ஒப்புதல்களை வழங்குவதுதான் இந்த அடிமையின் வேலை என்று புரிந்து கொள்ளலாம்.

ராஜசேகரபாண்டியன் தன் தரப்பில் எந்த ஆய்வையும் நடத்தாமல் கோப்பை மாநகர வளர்ச்சிக் குழு செயலர் வெங்கடேசன் ஐ.ஏ.எஸ்சுக்கு அனுப்பியிருக்கிறார். வெங்கடேசன் தான் தலைவராக உள்ள அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு அனுமதி வழங்கும் குழுவை கூட்டியிருக்கிறார். இந்த குழுவின் உறுப்பினர்களாக தலைமை திட்ட அமைப்பாளர் (ராஜசேகர பாண்டின்), போக்குவரத்து துறை இணை ஆணையர், தீயணைப்புத் துறை இயக்குநர், மெட்ரோ வாட்டர் நிர்வாக இயக்குநர், சுற்றுச் சூழல் துறை நிர்வாக இயக்குநர், மின்வாரிய தலைவர், சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் இருப்பார்கள். இத்தனை உயரதிகாரிகள் அடங்கிய குழு 60 அடி சாலை இல்லை என்பதையும், கட்டிடத்தின் பக்கவாட்டில் போதுமான இடம் விடப்படாததையும், கட்டிடம் கட்டப்படவிருக்கும் நிலம் ஏரி நிலம் என்பதையும், விண்ணப்பத்தோடு தேவையான ஒப்புதல்கள் அனைத்தும் இணைக்கப்படவில்லை என்பதையும் பொருட்படுத்தாமல் விதிகளை தளர்த்தி பிரைம் சிருஷ்டியின் கட்டிடங்களுக்கு அனுமதி அளித்திருக்கிறது.

“நகரத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு” இந்த முடிவை எடுத்ததாக குழு பதிவு செய்திருக்கின்றனர். ‘வளர்ச்சி’ என்றால் மக்கள் விரோத அதிகாரிகளும், முதலாளிகளுக்கு தொண்டு செய்யும் அரசியல்வாதிகளும் ஊதிப் பெருப்பது, பெரும்பான்மை உழைக்கும் மக்களை சிறுகச் சிறுக அல்லது ஒரேயடியாக கொன்று குவிப்பது என்பதற்கு பிரைம் சிருஷ்டி ஒரு உதாரணமாக அமைந்து விட்டது.

பிரைம் சிருஷ்டி கட்டிடங்களுக்கான ஒப்புதலை குழு வழங்க வேண்டும் என்பது அமைச்சரின் விருப்பம் என்று அந்த கூட்டத்தில் தெரிவித்திருக்கிறார் வெங்கடேசன் ஐ.ஏ.எஸ்.

அதன் பிறகு கோப்பு அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு அனுப்பப்பட்டு துறையின் துணை செயலாளர், செயலாளர் ஆகியோரின் பார்வைக்குப் பிறகு அமைச்சரின் முத்திரையை பெற்றிருக்கிறது. அதைத் தொடர்ந்து சிருஷ்டி நிறுவனத்திற்காக சாலை அகலம் குறித்த விதியையும், பக்கவாட்டு இடம் பற்றிய விதியையும் தளர்த்தியும், வரன்முறை செய்தும் இரண்டு அரசாணைகளை பிறப்பித்திருக்கிறது வீட்டு வசதித் துறை.

அதன் அடிப்படையில் கட்டிடம் கட்ட அனுமதி வழங்கியிருக்கிறது பெருநகர வளர்ச்சிக் குழுமம்.

அமைச்சரிலிருந்து, கீழ்மட்ட ஆய்வாளர்கள் வரை ஒவ்வொருவரும் கொல்லப்பட்ட தொழிலாளர்களின் உயிரை பலி வாங்கியதற்கு பொறுப்பு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இவர்கள் கைது செய்யப்பட்டு கொலைக் குற்றத்திற்காக விசாரித்து தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.

2013-ம் ஆண்டு ஜூலை மாதம் அதிமுக அமைச்சர் கோகுல இந்திரா பூஜை போட கட்டிட வேலை ஆரம்பித்திருக்கிறது. 1,260 சதுர அடி, 1,410 சதுர அடி, 1,600 சதுர அடி, 1,713 சதுர அடி என்று நான்காக பிரித்து சதுர அடி விலை ரூ 4,800 முதல் ரூ 5,500 வரை வைத்து விற்று விட்டார்கள். ரூ 58 லட்சம் முதல் ரூ 90 லட்சம் வரை விலை வைத்து விற்கப் போகும் கட்டிடத்தை வேகமாக முடிப்பதற்கு வெகுவேகமாக கட்டி வந்திருக்கின்றனர்

கட்டிடம் கட்டும் ஒவ்வொரு நிலையிலும் கட்டிடம் விதிமுறைகளின்படி கட்டப்படுகிறதா என்று வளர்ச்சிக் குழும பொறியாளர்கள் கண்காணிக்க வேண்டும் என்ற விதிமுறை பின்பற்றப்படவில்லை. பல மாடி கட்டிடத்துக்கு போட வேண்டிய முறையான அடித்தளம் போடப்பட்டதா, மண்ணின் தாங்கு திறனுக்கு ஏற்றபடி வடிவமைக்கும்படி கட்டுமான பொறியாளர் கலந்தாலோசிக்கப்பட்டாரா, சராசரி சிமெண்டுக்கு பதிலாக அதிக தரம் உள்ள கிரேட் சிமெண்ட் பயன்படுத்தப்பட்டதா என்று கண்காணிக்கப்படவில்லை. தரமான சிமெண்ட் கலவையை பற்றி கவலைப்படாமல் ரெடிமிக்ஸ் கலவையை பயன்படுத்தியிருக்கிறது பிரைம் சிருஷ்டி. எடை அதிகமில்லாத ஹாலோ பிளாக்குகளை பயன்படுத்தாமல் எடை அதிகமுள்ள சாம்பல் கற்களை பயன்படுத்தியிருக்கிறது. இவை அனைத்தையும் கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் எதையும் கவனிக்கவில்லை.

அரை மணி நேர காற்று, மழை, இடியில் அப்பளம் போல நொறுங்கி விழுந்திருக்கிறது கட்டிடம். அருகில் கட்டப்பட்டு வரும் இன்னொரு கட்டிடம் சீல் வைக்கப்பட்டு அது பாதுகாப்பற்றது என்று பொதுப்பணித்துறை அறிவித்திருக்கிறது.

ஆனால், பிரைம் சிருஷ்டியின் முதலாளிகளோ, கட்டிடம் எல்லா விதிமுறைகளுக்கும் உட்பட்டு, தரமாக கட்டப்பட்டது. கட்டிடம் இடிந்து விழுந்தது இயற்கையின் சீற்றத்தால்தான் என்று சாதிக்கிறார்கள்.

ஜெயலலிதாவும், கருணாநிதியும் இந்த கட்டிடக் கொலை குறித்து பாதுகாப்பாகவே பேசியிருப்பதன் காரணம் என்ன? எல்லா ஓட்டுக் கட்சிகளின் தளபதிகளுக்கும் வாழ்வளிப்பது ரியல் எஸ்டேட் துறைதான். இடங்களை வளைப்பது, ஆக்கிரமிப்பது, விற்பது, என்று அதிகார வர்க்கம், கட்டுமான முதலாளிகள் துணையுடன் இவர்கள் பணத்தை அள்ளுகிறார்கள். சொகுசு கார்களில் கட்சி கொடி கட்டிவிட்டு சுற்றும் இவர்களை வைத்தே தமிழக அரசியல் இயங்குகிறது என்றால் மிகையல்ல.

பிரைம் சிருஷ்டி கட்டிய இந்த இரு கட்டிடங்களிலும் 60 லட்சம் முதல் 90 லட்சம் வரை வீடுகள் வாங்கும் நடுத்தர வர்க்கத்தின் கதை தனி. இந்த வார ஆனந்த விகடன் நேர்காணலில் இடிந்து போன கட்டிடத்தில் 60 லட்சம் கொடுத்து வீடு வாங்கிய ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஒருவர் புகாரே கொடுக்கவில்லையாம், காரணம் என்ன? 30 லட்சம் வங்கி கடன் வாங்கியவர் புகார் கொடுத்தால் இன்னொரு 30 லட்சத்திற்கு கணக்கு கொடுக்க வேண்டும் என்பதால் புகார் கொடுக்க வில்லையாம். எனில் அந்த கணக்கில் வராத முப்பது இலட்சத்திற்கும் கட்டுமான நிறுவனத்தின் விதிமீறலுக்கும் என்ன வேறுபாடு? பிரைம் சிருஷ்டி விதிமீறலில் பல பேர் கொலை செய்யப்பட்டனர் என்றால் அரசு ஊழியரின் முறைகேடான பணத்தால் வாழ்க்கை இழந்தோர் எத்தனை பேர்?

இது போக எப்படியாவது சொந்த வீடு கட்டியாக வேண்டும் என்ற நுகர்வு வெறி காசி யாத்திரை போல நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கை இலட்சியமாக மாற்றப்பட்டிருக்கிறது. இதில் சிக்கி தனது ஆயுள்கால சேமிப்பையும் இழந்து ஆயுள் தண்டனை போல வாழ்பவர்கள் பலர் இருக்கிறார்கள். ஏன் இப்படி அழிய வேண்டும்?

இந்த மக்களை இப்படி வெறியேற்றும் குற்றச் செயலை அனைத்து ஊடகங்களும் அணிசேர்த்து செய்கின்றன. பிரைம் சிருஷ்டி கட்டிடத்திற்கு விளம்பரம் கொடுக்கவில்லை என்று எதாவது ஒரு பத்திரிகையோ இல்லை தொலைக்காட்சியோ நெஞ்சு நிமிர்த்தி சொல்ல முடியுமா?

இந்த அரசியல்வாதிகளும் முதலாளிகளும் கொண்ட கொலைக் கூட்டத்தின் பயங்கரவாத தாக்குதலால் கொல்லப்பட்ட, தமது உடைமைகளை இழந்த தொழிலாளர்களில் கணிசமான பகுதியினர் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மற்றும் விஜயநகரம் பகுதியை சேர்ந்தவர்கள். விவசாயம் இல்லாததால் கட்டிட வேலைக்கு வந்திருக்கின்றனர். ஊரில் பெரியவர்கள் விவசாயம் செய்வதாகவும் அறுவடை சமயம் போன்ற முக்கியமான சமயங்களில் இரண்டு மாதங்கள் அங்கே சென்று விவசாய வேலை செய்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் மாலா, சக்லி சாதியை சேர்ந்த தலித் மக்கள். நிலமற்ற கூலி தொழிலாளிகளாக இருந்தவர்கள். இவர்களை தவிர ரெட்டி, யாதவ் போன்ற இடைநிலை சாதியினரும் இருக்கின்றனர்.

தங்கள் மோதுகவலசா கிராமத்திலிருந்து சுமார் 40 பேர் இந்த கட்டிடத்தில்  வேலை செய்து வந்தாகவும் அவர்களில் பெரும்பான்மையானோர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாக கூறினார் ஒரு இளைஞர். ஹிரமண்டலம் அணைத்திட்டத்தால பாதிக்கப்பட்ட  கிராமங்களில் மோதுகவலசாவுன் கிராமமும் ஒன்று. அணைக்காக அரசு அவர்களை நிலத்திலிருந்து விரட்டியடித்திருக்கிறது. விவசாய நிலம் இல்லாமல் போனதால் பலர் வெளியூருக்கு வேலைக்கு செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இவர்கள் சென்னைக்கு வந்திருக்கிறார்கள்.

சொந்த ஊரில் விவசாயிகளை வாழவிடாமல் துரத்தியடித்த ‘வளர்ச்சி’ வந்த இடத்திலும் காவு வாங்குகிறது.

ஆந்திர தொழிலாளர்களுக்கு உதவி செய்ய வந்திருந்த நெல்லூர் கூடுதல் ஆட்சியாளர் டைம்ஸ் நவ் நிருபருக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்தார்.

“இந்த மக்கள் அப்பாவிகள். ஒன்றும் அறியாதவர்கள். பாருங்கள் நூற்றுக்கணக்கான உறவினர்களை இழந்திருக்கிறார்கள். பாருங்கள் ஒரு எதிர்ப்பும் இல்லை. ஒரு சத்தம் கூட இல்லை.”

ஆம், அவர்களது வாழ்வையும் உறவினர்களின் உயிரையும் பறித்த அரசியல்வாதிகளே அவர்களுக்கு ஆறுதல் சொல்கிறார்கள்; உயிரிழந்தவர்களுக்கு இவ்வளவு, காயமடைந்தவர்களுக்கு இவ்வளவு என்று நிவாரணத் தொகை அறிவிக்கிறார்கள். தொழிலாளர்களோ அடுத்த வேளை சோற்றுக்குக் கூட, தவிக்கும் வாய்க்கு தண்ணீருக்குக் கூட அந்த கொலைகாரர்களின் கருணையை நாடி நிற்க வேண்டியிருக்கிறது.

வறுமை என்றால் என்ன என்று தெரியுமா உங்களுக்கு? ஒருவேளை சோறு என்பது மட்டுமா வறுமை? “சீ நாயே போடா வெளியே” என்ற பின்னாலும் “சாமீ…” என்று வில்லாக வளைவது வறுமை. கட்டிய பெண்டாட்டியை கையைப் பிடித்து இழுத்தவனிடம் கைகட்டி சேவகம் செய்வது வறுமை. பத்து ரூபாய் காசுக்காக பட்டணத்துக்கு லாரியேறி “வாழ்க” கோஷம் போடுவது வறுமை.  வறுமை கொடியது; காசிருப்பவன்தான் சிரிக்க முடியும், மகிழ முடியும். ஆனால் அழுவதற்கும் வறுமை தடையாகுமோ!

– புதிய கலாச்சாரம் இதழில் வெளி வந்த “கண்ணீர் சிந்தவும் காசு வேண்டும்” என்ற கட்டுரையிலிருந்து

போராடுவதற்கும் காசு வேண்டுமா? வறுமை தடையாகுமா?

தங்களை கொலை செய்த ஆளும் வர்க்கம், அதிகார வர்க்கத்தின்  கருணையில்தான் தங்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்றால் இந்த தொழிலாளிகளின் வாழ்க்கை எவ்வளவு கொடூரமானது?

–    வினவு செய்தியாளர்கள்

படங்களை பெரியதாக பார்க்க சொடுக்கவும்

  1. வறுமை என்றால் என்ன என்று தெரியுமா உங்களுக்கு? ஒருவேளை சோறு என்பது மட்டுமா வறுமை? “சீ நாயே போடா வெளியே” என்ற பின்னாலும் “சாமீ…” என்று வில்லாக வளைவது வறுமை. கட்டிய பெண்டாட்டியை கையைப் பிடித்து இழுத்தவனிடம் கைகட்டி சேவகம் செய்வது வறுமை. பத்து ரூபாய் காசுக்காக பட்டணத்துக்கு லாரியேறி “வாழ்க” கோஷம் போடுவது வறுமை. வறுமை கொடியது; காசிருப்பவன்தான் சிரிக்க முடியும், மகிழ முடியும். ஆனால் அழுவதற்கும் வறுமை தடையாகுமோ!

  2. வீரச்சமரில் மட்டும் விளைவதல்ல புரட்சி.

    சமூக வழ்க்கை முழுவதையும் விரிவாக மாற்றியமைப்பதில் நீடிக்கிறது அதன் தொடர்ச்சி…

    தோழர்களே புரட்சி ஒன்றுதான் தீர்வு…

  3. // ஒவ்வொரு நிமிடமும் உயிரை தக்க வைத்துக் கொள்வதற்கான போராட்டத்தில் பொன்னான கணங்களாக விரிந்த அந்த நாளில் ‘அம்மா’வின் வருகை
    கருமம், தமிழ்நாட்டின் தலைவிதி இப்படியான (தறு)தலைவர்கள் அமைந்தது!

  4. நிறைய தகவல்கள் இருக்கிறது, நம்பகத்திற்குரியதா என்பதுதான் தெரியவில்லை. ஆனாலும் வீடு வாங்க பணம் செலுர்தியிருப்பவர்கள் எல்லோரும் இலஞ்ச பணம் கொடுத்திருப்பது போல பொதுமைப் படுத்தியிருப்பதும், சொந்த வீடு வாங்க நினைப்பதை நுகர்வு வெறி என்று சொல்வதெல்லாம் கொஞ்சம் ஓவர்.. ம.க.இ.கவில் எல்லோரும் சென்னையில் வாடகை வீட்டில்தான் இருக்கிறார்களா, அப்படி இருப்பதுதான் சரியா?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க