Thursday, May 13, 2021
முகப்பு கட்சிகள் பா.ஜ.க ஜீவராஜை கொன்ற அய்யம்மாள் ஒரு ஜிகாதி - ஹிந்து முன்னணி பகீர் தகவல்!

ஜீவராஜை கொன்ற அய்யம்மாள் ஒரு ஜிகாதி – ஹிந்து முன்னணி பகீர் தகவல்!

-

ப்ரியத்துக்குரிய பாரதீயர்களே,

“இந்த நாடு ஹிந்து நாடு ஹிந்து மக்கள் சொந்த நாடு
சந்த்ர சூர்யர் உள்ள வரை ஹிந்து நாடிது, எங்கள் நாடிது”

– என்பது தர்மம் காக்க சாத்சாத் அந்த ஸ்ரீ ராமனின் இன்னொரு அவதாரமாக இந்தக் கலியுகத்தில் அவதரித்துள்ள நமது ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் ஷாகா கீதங்களில் ஒன்று. ஆனால்,  இன்றைக்கு நிலைமை அவ்வாறு தான் உள்ளதா? ”பாரில் எல்லா தேஷங்களில் எங்கள் தேஷம் உயர் தேஷம்” என்று அனுதினமும் பாரத மாதாவின் புகழ் பாடி அவளைப் பரம பவித்ர நிலைக்கு உயர்த்த செயல்பட்டு வரும் ஹிந்து செயல் வீரர்களின் நிலையோ, உண்மையில் படு மோசமாகவே இருக்கிறது.

ஜீவராஜ் - அய்யம்மாள்
இந்து இயக்க தீரர் ஸ்ரீமான் ஜீவராஜ், ஜிகாதி அய்யம்மாள்

தமிழ்நாட்டில் ஹிந்து இயக்கங்களில் செயல்பட்டு வரும் தன்னலமில்லா செயல்வீரர்கள் பலர், தேஷ விரோதிகளால் கொலை செய்யப்படும் சம்பவங்கள் சமீப நாட்களாகவே அதிகரித்த அளவில் நடந்து வருவது உங்களுக்கெல்லாம் நன்றாகவே தெரியும். ஹிந்துக்களின் ஹ்ருதயக் குரலான பரமபூஜனிய செல்வி ஜயலலிதா அவர்களால் இந்த மாநிலம் ஆளப்பட்ட போதிலும் பன்னெடுங்காலமாக அசுரர்களான  திராவிட திம்மிகளின் சித்தாந்த செல்வாக்குக்கு ஹிந்துக்களே ஆட்பட்டிருப்பது நீங்கள் அறிந்ததே.

இதன் காரணமாகவோ என்னவோ ஆடிட்டர் ரமேஷில் தொடங்கி, கடந்த சில நாட்களுக்கு முன்பு சங்கரன் கோயிலில் கொல்லப்பட்ட ஜீவராஜா வரையிலான சம்பவங்களில், கொலைகாரர்களான ஆப்கானிய தாலிபான்களையும் பாகிஸ்தான் ஜிகாதிகளையும் கைது செய்வதில் காவல் துறை சுணக்கம் காட்டி வருகிறது.

சமீப வருடங்களில் நடந்த கொலைகளில் கைது செய்யப்பட்டவர்களின் விபரங்களை நீங்களே பாருங்கள் –

1) நாகை பா.ஜ.க செயற்குழு உறுப்பினர் புகழேந்தி கொலை வழக்கில் குற்றவாளி முனீஸ்வரன் சரண் அடைந்தார்.

2) வேலூர் பா.ஜ.க மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் அரவிந்த் ரெட்டியை கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளான உதயா, சந்திரன், ராஜா, தரணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

3) பரமக்குடி நகராட்சி முன்னாள் பா.ஜ.க கவுன்சிலர் முருகன் கொலை வழக்கில் ராஜபாண்டி, மனோகரன் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர்.

4) ராமேஸ்வரம் ஒன்றிய இந்து முன்னணி செயலாளர் குட்டநம்பு கொலை வழக்கில், ராமச்சந்திரன், சண்முகநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

5) கடைசியாக சங்கரன் கோயில் இந்து முன்னணி நகர செயலாளர் ஜீவராஜா கொலையில் அவரது முதல் மனைவி அய்யம்மாள் கைது.

கொலையாளிகளின் பெயர்களைப் பார்த்தாலே தெரியவில்லையா, அனைவரும் ஹிந்துக்கள்! மேற்படி ஸம்பவங்களில் பாகிஸ்தான் ஜிகாதிகள் ஒருவரைக்கூட காவல்துறையால் ஏன் இனம் கண்டு கைது செய்ய முடியவில்லை? எங்களிடம் கேட்டிருந்தால் நாங்களே பிடித்துக் கொடுத்திருப்போமே! அட அதுகூட வேண்டாம், கைது செய்யப்பட்டவர்களுக்கும் ஜிகாதிகளுக்கும் இடையிலான கள்ளத்தொடர்பையாவது நிரூபித்திருக்கலாமே… இந்த விஷயத்தில் முன்னுதாரணமாக செயல்பட்ட ஸ்ரீமான் மோடிஜி அவர்கள் தலைமையில் செயல்பட்ட குஜராத் காவல்துறையிடமிருந்து தமிழக காவல்துறை பயிற்சி பெற வேண்டும். பரம பூஜனிய ஜயலலிதா அவர்கள் இதனை கவுரவக் குறைச்சலாக கருதாமல் அப்படி ஒரு ட்ரையினிங்கிற்கு குஜராத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

தற்போது சங்கரன் கோயிலில் கொல்லப்பட்ட ஹிந்து முன்னணி செயல்வீரர் ஸ்ரீமான் ஜீவராஜா கொலையில் அவரது மூத்த மனைவி அய்யம்மாளை காவல் துறை கைது செய்துள்ளது. இந்தப் பெயரும் ஹிந்துப் பெயராகவே இருப்பது, ஹிந்துக்களின் ஹிருதயங்களை ஆணியால் கீறுவது போல் இருக்கிறது.

காவல் துறை தான் செய்த துடுக்குத்தனமான செயல்களுக்கு சொல்லும் காரணங்களை நாம் காணும் முன், இது தொடர்பாக ஹிந்து முன்னணி மாநில தலைவர், வீரத் துறவி மானனீய ஸ்ரீ ராம கோபாலன்ஜி விடுத்துள்ள அறிக்கையில் (தினமணி – ஜூலை 5, 2014) இருந்து சில வரிகளை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறோம்.

”நமது அரசியல்வாதிகள் இப்படிப்பட்ட படுகொலையின் மீது வாய் மூடி மௌனியாக நின்றால்,மக்கள் கோபவேசமாக மாறிவிடுவார்கள், நம்பிக்கை இழந்துவிடுவார்கள்! எனவே, தமிழக அரசும், காவல்துறையும் உடன் நடவடிக்கை எடுத்து கொலைகாரர்களை கைது செய்ய வேண்டும். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காதவாறு கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். சந்தேகத்திற்கு இடமானவர்களை உடனே கைது செய்யவும், சந்தேகப்படும் இடங்களில் திடீர் சோதனைகளை மேற்கொள்ளவும் காவல்துறையை கையில் வைத்திருக்கும் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா உத்திரவிட வேண்டும் என ஹிந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது”

என்று பரம பூஜனிய ஜயலலிதா அவர்களை அன்போடும் உரிமையோடும் எச்சரித்துள்ள நமது வீரத்துறவியார்,

”சமுதாய சேவையில் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றிய ஜீவராஜ் மறைவிற்கு ஹிந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பதாருக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. அவரது ஆன்மா நற்கதி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறது”

மானனீய ஸ்ரீ ராம கோபால்ஜி
மானனீய ஸ்ரீ ராம கோபால்ஜி

மானனீய ஸ்ரீ ராம கோபால்ஜியே சொல்லிவிட்டபடியால் அவரது ஆத்மா நற்கதி அடையத்தான் போகிறது. ஆனால் திராவிட திம்மிகளின் செல்வாக்கின் கீழ் வேலை செய்து பழுதுபட்டுப் போன காவல்துறையோ ஸ்ரீமான் ஜிவராஜின் மேல் கடந்த காலத்தில் இரு முறை குண்டர் சட்டத்தை பாய்ச்சிய தகவல்களை வேண்டுமென்றே இப்போது பத்திரிகைகளுக்கு கசிய விட்டுள்ளது. ஹிந்து இயக்கங்களின் பெயரை கெடுப்பதற்காகவே இத்தகைய சூழ்ச்சிகளில் ஈடுபடும் புல்லுருவிகள் காவல்துறையில் இருப்பதை முதல்வரின் கவனத்துக்கு கொண்டுவருகிறோம்.

மானனீய ஸ்ரீ ராம கோபால்ஜீ ‘சந்தேகத்துக்கு இடமானவர்களை உடனே கைது செய்யவும், சந்தேகப்படும் இடங்களில் திடீர் சோதனைகளை செய்யவும்” காவல் துறைக்கு சூசகமாக வலியுறுத்தி இருக்கிறார். சங்கரன் கோவிலில் கொலை நடந்தவுடனே காவல்துறை என்ன செய்திருக்க வேண்டும்? உடனே மேலப்பாளையத்திற்கு சென்று நாலைந்து ஜிகாதிகளைப் பிடித்திருக்க வேண்டுமா இல்லையா? குறைந்த பட்சம் ஆம்பூர், வாணியம்பாடி, கோவை கோட்டை மேடு போன்ற ஜிகாதிகளின் மறைவிடங்களை சுற்றி வளைத்து முற்றுகை இட்டிருக்க வேண்டாமா?

காவல்துறை திம்மிகளோ ஸ்ரீமான் ஜீவராஜின் மனைவி அய்யம்மாளை கைது செய்திருக்கிறார்கள். இந்து இயக்க தீரர் ஸ்ரீமான் ஜீவராஜ், முதல் மனைவி அய்யம்மாள் இருக்கும் போதே ஷர்மிளா தேவி என்கிற பெண்ணை சேர்த்துக் கொண்டதாகவும் தினமும் குடித்து விட்டு வந்து தன்னை அடிப்பதோடு தன் கண் முன்னாலேயே ஷர்மிளா தேவியோடு உறவு கொண்டு தன்னை சித்திரவதை செய்ததாகவும், அதனால்தான் அரிவாள்மனையால் கழுத்தை அறுத்து தானே கொன்றதாகவும் அய்யம்மாள் விசாரணையில் தெரிவித்திருக்கிறாள்.

இதெல்லாம் வெறும் சால்ஜாப்புகள் அன்றி வேறென்ன? இதற்கும் ஜிகாதிகளை கைது செய்யாமல் இருப்பதற்கும் என்ன சம்பந்தம்? உமையொரு பாகத்தான் சிவனே கங்காதேவியை உச்சிக் கொண்டையில் வைத்து ஆதரவு அளித்துள்ளாரே. அதற்காக சிவபெருமானின் தலையை உமாதேவியார் அரிவாள் மனையில் வைத்தா அறுத்துவிட்டார்? கோயில் பிரகாரங்களில் பகிரங்கமாக சம்போகத்தில் ஈடுபடும் சிற்பங்களை செதுக்கி, நமது தர்மம் எது என்பதை முன்னோர்கள் கல்வெட்டு போல நிலையாட்டியிருக்கும் நிலையில், தன் ஒருத்தி முன்னிலையில் சம்போகத்தில் ஈடுபட்டதற்காக, ஜீவராஜ் மீது அய்யம்மாள் ஆத்திரப்பட்டதாக கூறுவதை தர்மசாத்திரங்களை அறிந்த ஹிந்துக்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா?

இல்லை ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்தீரிகளை கல்யாணம் செய்வது நமது தர்மத்தில் இல்லையா? பலதார திருமண முறையை தடை செய்து அம்பேத்கர் சட்டம் எழுதும் போது அதை எதிர்த்துக் குரல் கொடுத்தவர்கள் நம்முடைய ஹிந்து மஹாசாபாக்காரர்கள் அல்லவா? “ஹிந்து தர்மத்துக்கு விரோதமான ஒரு சட்டத்தை எழுதி விட்டு அதற்கு ஹிந்து சட்டம் என்று பெயர் வைக்காதீர்கள். வேறு ஏதாவது பெயர் வைத்துக் கொள்ளுங்கள்” என்று மானனீய முன்ஷிஜி அன்றைக்கே அம்பேத்கரை எதிர்த்து குரல் கொடுத்ததை யாராவது மறுக்க முடியுமா?

காந்தர்வ விவாக முறை முதல், அரிதாரம் போட்டு கள்ள உறவு கொள்வது வரையிலான பலவும்  ஹிந்து சம்பிரதாயத்தில் இருப்பதற்கு புராணங்கள் சாட்சியில்லையா? புராணமெல்லாம் வரலாறில் சேராதென்று எவனாவது வெள்ளைக்காரன் சொன்னால் அதை அப்படியே ஒத்துக் கொள்ள முடியுமா? மனைவியாகப்பட்டவள் கணவனுக்கு தொண்டூழியம் செய்ய வேண்டியது தான் நமது தர்மம். அப்படி செய்யாத பட்சத்தில் அவளை விரட்டி விடுவதற்கும் கூட ஒரு கணவனுக்கு உரிமை இருக்கிறது என்று ஆர்.எஸ்.எஸ் அகில பாரத தலைவர் பரமபூஜனீய ஸ்ரீ மோகன் ஜி பாகவத் கடந்த ஆண்டே தெள்ளத் தெளிவாக சொல்லி எது ஹிந்து தர்மம் என்பதை உணர்த்தியிருக்கிறாரே.

கொலை செய்யப்படும் அளவுக்கு ஜீவராஜ் என்ன தப்பு பண்ணி விட்டார்? அந்த அய்யம்மாளுக்கு துர்புத்தி சொல்லிக் கொடுத்து தூண்டிவிட்டது யார் என்ற கோணத்தில் வழக்கை விசாரிக்க காவல்துறை மறுப்பது ஏன்? ஜிகாதிகள் இவ்வாறு தூண்டி விட்டிருக்கவே எல்லா சாத்யதையும் உள்ளது. “ஹம் பாஞ்ச் ஹமாரே பச்சீஸ்” என்று (நாம் ஐவர் நமக்கு 25 பேர்) ஜிகாதிகள் பெருகுவது பற்றி பிரதமர் மானனிய மோடிஜி அவர்களே  எச்சரித்திருக்கிறார்களே! ஹிந்துக்களை மட்டும் ஒரு தார மணத்தில் கட்டிப்போட்டு காலப்போக்கில் ஹிந்துக்களை சிறுபான்மையினர் ஆக்கும் சதி தானே இது! இதெல்லாம் போலீசுக்கும் உளவுத்துறைக்கும் புரியாமல் போனது ஏன்?

இதெல்லாம் எதைக் காட்டுகிறது என்றால், அய்யம்மாள் ஏதோ ஒரு வகையில் ஆபிரகாமிய மதங்களால் சொல்லப்படும் ஐரோப்பிய மையவாத ஒழுக்க கோட்பாடுகளால் கெட்டுப் போயிருக்கிறார். அல்லது ஹிந்து பாரம்பரியத்திலிருந்து அவர் விலகி இருப்பதை அறிந்த ஜிகாதி இயக்கங்கள் ஓசைப்படாமல் அவரை மதம் மாற்றியிருக்கும் வாய்ப்புகளும் உண்டு. இப்படி அரிவாள் மனையை எடுத்து தலையைக் கொய்ததில் இருந்தே இவர் ஜிகாதிகளோடு தொடர்புடையவர் என்பது தெரியவில்லையா? சொந்த பார்யாளை வைத்தே ஹிந்து செயல் வீரரான ஸ்ரீமான் ஜீவராஜை கொன்று விட்டார்கள் படுபாவிகள்.

ஹிருதயம் துடிக்கிறதல்லவா? எங்களுக்கும் தான். பழைய வழக்குகளில் கூட கட்டப்பஞ்சாயத்து விவகாரங்களும் ரியல் எஸ்டேட் தகராறுகளும் தான் ஹிந்து செயல்வீரர்கள் பலரின் கொலைகளுக்கு காரணம் என்கிறது காவல் துறை. கட்டப் பஞ்சாயத்து, ரியல் எஸ்டேட் என்பதெல்லாம் நம்முடைய பாரம்பரியத்தை கொச்சைப்படுத்த வெள்ளைக்காரன் சூட்டிய பெயர்கள். ஜீவராஜ் பண்ணியது ரியல் எஸ்டேட் என்றால், பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் இடையே நடந்ததும் ரியல் எஸ்டேட் பிரச்சினையா? அதில் தலையிட்டு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பண்ணியது கட்டப் பஞ்சாயத்தா? ஹிந்துக்களுக்கு சொந்தமான வீட்டை முசல்மான்கள் வாங்க அனுமதிக்காதீர்கள் என்று ஸ்ரீமான் தொகாடியாஜி ஸமீபத்தில் பேசினாரே, அது ஹிந்து சம்ரக்ஷண நடவடிக்கையா, ரியல் எஸ்டேட் விவகாரமா? அல்லது ஸ்ரீமான் மோடிஜி அம்பானிக்கும் அதானிக்கும் டாடாவுக்கும் சர்வமான்யம் வழங்கியிருப்பதும் ரியல் எஸ்டேட் விவகாரம்தானா?  தான் ஒரு கர்மயோகி என்று மோடிஜி அடிக்கடி சொல்கிறாரே, அது தமிழக காவல்துறைக்கு கொஞ்சமாவது புரிந்திருக்கிறதா?

இதெல்லாம் ஹிந்து தருமப்படி சமூகத்தின் மேன்மைக்காக செய்யப்படும் நிஷ்காம்ய கர்மங்கள் (தனிப்பட்ட பற்று இல்லாமல் செய்யப்படும் காரியங்கள்) என்று கீதையிலே பகவான் கூறியிருப்பது ஹிந்துக்களுக்கும் கூட மறந்துவிட்டதே! இப்படி ஒரு கர்ம யோகியை அவருடைய சொந்த பார்யாளே அரிவாள்மனையில் வைத்து அறுத்துப் போட்டபின்னரும் ஹிந்து சமூஹத்துக்கு சொரணை வரவில்லையே!

வென்டி டோனிகர் போன்றோருக்கும், இந்திய அறிவுத்துறையினருக்கும், ஸ்ரீமான் நம்பூதிரிபாடைத் தவிர்த்த பிற மார்க்சியர்களுக்கும், என்.ஜி.ஓக்களுக்கும் பின்னால் இருக்கும் மிகப்பெரிய கிறிஸ்தவ திருச்சபை வலைப்பின்னலானது, பலதார மணம் உள்ளிட்ட நமது பாரம்பரியப் பண்பாடு குறித்து அவமானம் கொள்ளும் மனோபாவத்தை ஹிந்துக்கள் மனதில்  திட்டமிட்டே உருவாக்கியிருப்பது பற்றியும், இந்த அறிவுத்துறை பயங்கரவாதத்திற்கு சீனாவிலிருந்து பணம் வருவது பற்றியுமான ரஹஸ்யத்தை  ஸ்ரீமான் ஜெயமோகன் அவர்கள் தனது சொந்தக் காதால் கேட்டு சொந்தக் கையினால் எழுதியுமிருக்கிறார். அதையே ஈராயிரம் பக்க வியாஸமாக ஸ்ரீமான் அரவிந்தன் நீலகண்டன் எழுத, அதனை ஸ்ரீமான் பத்ரி வெளியிட இருக்கிறார்.

காவல் துறைக்கு நாங்கள் வைக்கும் வேண்டுகோள் இது தான். காவல் துறை என்றால் அதன் வேலை பாகிஸ்தான் ஜிகாதிகளைப் பிடிப்பது தான் என்பது ஸ்ரீமான் விஜயகாந்த், ஸ்ரீமான் அர்ஜூன், ஸ்ரீமான் மணிரத்தினம் படங்களில் கூட தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. நீங்கள் ஹிந்து தர்மத்தைக் காக்க ஒன்று ஜிகாதிகளை கைது செய்யுங்கள், அது முடியாவிட்டால் இந்துப் பெயர்களோடு கைதாகும் நபர்கள் ஜிகாதிகள் தான் என்பதையாவது தயவு செய்து நிரூபியுங்கள்.

தி.மு.க அ.தி.மு.க போன்ற கட்சிகளில் இருந்து கொண்டு ரியல் எஸ்டேட், கள்ளக்காதல் மற்றும் கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபட்டு, கேட்பாரின்றிப் போட்டுத்தள்ளப்படும் ஹிந்து சகோதர்களே, உங்கள் மரணத்துக்காக என்றைக்காவது கருணாநிதி கண்டனம் தெரிவித்திருக்கிறாரா? சி.பி.ஐ விசாரணை கோரியிருக்கிறாரா? உங்கள் யாருக்காவது படம் திறக்கப்பட்டதுண்டா? பத்து லட்சம் நிவாரணம் கொடு, வாரிசுக்கு வேலை கொடு என்று கோரிக்கையாவது எழுப்பியிருக்கிறாரா?

ஆனால் ஜீவராஜ் என்ற ஹிந்து சகோதரனின் தலையை அரிவாள் மனையில் வைத்து அறுக்கத் தொடங்கியவுடனேயே, ராமகோபாலன்ஜி துடித்தார். ஜிகாதிகளுக்கு எதிராக குரல் கொடுத்தார். இதை எண்ணிப்பாருங்கள். உடனடியாக முடிவெடுத்து சீக்கிரமாக ஹிந்து இயக்கங்களில் சேருங்கள்.

இப்படிக்கு

என்றும் தேசிய, தெய்வீக பணியில்
கிருஷ்ண ஷர்மா, மயிலாப்பூர், மதராஸ்.

– தமிழரசன்

 1. Fantastic. Hilarious. Terrific. Amazing. Fabulous. No words to describe. Really had fun and thoroughly enjoyed reading this article. Couldn’t control my laugh while reading this article.

  Great work!!! Keep it up.

 2. காக்கி அரைடவுசர்களுக்கும், காவிக் கிரிமினல்களுக்கும் செருப்படி….

 3. Vinavu should also appreciate the “journalistic ethics” of Dinamani.It has published the news about the murder of Jeevaraj with full details till the arrest of his wife.In that news story,it has described about 12 old cases against Jeevaraj for extortion,attempt to murder,katta panchayat and his two times prison terms under Goondas” Act.It also narrated how he has constructed Muneeswaran temple in Govt land and that he was expelled by Hindu Munnani about 3 months back.On the same page,by the side of this “divya”story,it has published Ramagopalan”s outburst condemning the murder of a person who “entwined”himself in “social services”.

 4. படிக்கும் போது சிரிப்பை அடக்கவேமுடியவில்லை.

  வாழ்த்துக்கள். தொடரட்டும் இதுபோன்ற கட்டுரைகளும்.

 5. பிஞ்ச செருப்பை வாயில கவ்வ கொடுத்து, சாணில முக்கிய கட்ட வெளக்கமாத்த கொண்டு இன்றைக்கு முழுசும் அடிச்சாலும் எங்க தலை கொள்கையே மாத்த்தாது. எங்க தல தில்ல பார்த்தியா ….

 6. ஒரு விஷயம் இந்த உலகத்தில் மறுக்க முடியாது. இந்த மாதிரி மனித குல விரோதிகள், படுமோசமான அயோக்கியர்கள் சீக்கிரம் செத்து தொலையமாட்டார்கள்.(உதா. பால் தாக்கரே) நல்லவர்கள் உதவும் மனம் கொண்டவர்கள், மனிதநேயம் மிக்கவர்கள் ஏனோ அல்ப ஆயுசுல போய் சேர்ந்திடுகிறார்கள்.நிறைய பேரை சொல்லலாம்.

 7. // மயிலாப்பூர்

  முத்திரை
  குத்தி குத்தி
  என் முகம்
  மொழு மொழு என
  முட்டை போல்
  ஆகி
  விட்டது

  – திருமயிலை வெங்கடேசன்.

 8. இந்து முன்னணி மற்றும் பாஜக தலைவர்களுக்கு எத்தனை பேருக்கும் ‪#‎சின்னவீடு‬ இருக்கு என்பதை முறையாக கணக்கெடுத்து அவர்களை , அவர்களுடைய மனைவியிடமிருந்தும், ‪#‎சின்னவீட்டு_வப்பாட்டிகளிடமிருந்தும்‬ பாதுகாத்து , முஸ்லீம்கள் மீது பழி வராமல் தடுத்து நிறுத்துமா தமிழக காவல் துறை ?
  ‪#‎குறிப்பு‬ :- இவர்களுடைய கொலைக்கு பின்னணியில் இருப்பவர்கள் முஸ்லீம்கள் அல்ல ! அவர்களை சுற்றியுள்ளவர்களால் தான் கொலை செய்யப்படுகிறார்கள் இது தான் நாடறிந்த உண்மை .இதனை மறைத்து ராம .கோபாலன் போன்றவர்களால் முஸ்லீம்கள் மீது பொய் குற்றம் சுமத்தப்படுகிறுது .
  ((இது போல் தொடர்ந்து ‪#‎இந்துதலைவர்கள்‬ சின்ன வீட்டு வப்பாட்டிகளால் கொலைசெய்யப்படுகிறார்கள் !!!))

  • மற்ற மதங்களைப் பற்றி பேசினால் மட்டும் பாய்ந்துகொண்டு வந்துவிடுங்கள்.
   எங்களைப் பொருத்தவரை நீங்கள் அனைவரும் ஒரே குட்டைகள் தான்.
   அதாவது இந்துமதவெறியன் ராமகோபாலனும் இஸ்லாமிய மதவெறியன்
   பி.ஜைனுலாபிதீனும் ஒன்னு தான். ரெண்டு பயல்களும் சாதாரண மக்களை மதவெறியர்களாக்குகிறார்கள். இதை ரபீக் புரிந்துகொள்ள வேண்டும்.

 9. ஓ…..பாரத் மாதா!!!

  எத்தனனை முறை ஒட்டு போட்டாலும் டவுசரை கிழிகிழின்னு கிழிகரான்களே……கிழியாத “அரைடவுசர்” ஒன்னு தாடியம்மா…..:-) 🙂

 10. //காவல்துறை திம்மிகளோ ஸ்ரீமான் ஜீவராஜின் மனைவி அய்யம்மாளை கைது செய்திருக்கிறார்கள்//
  திம்மிகள் என்று தாங்கள் கூறுவதின் பொருள் டம்மிகளா……

 11. (திம்மி என்றால், இஸ்லாமிய ஆட்சியில் வாழும் இஸ்லாமியரல்லாதவர்கள்,முக்கியமாக யூதர்கள், கிறிஸ்தவர்கள் சேபியன்கள் போன்றவர்கள் இதில் அடங்குவர்)

  http://www.answering-islam.org/tamil/authors/jochenkatz/why-not/31hypocrisy.html

  http://en.wikipedia.org/wiki/Dhimmi

 12. super..செருப்படி

  “கோயில் பிரகாரங்களில் பகிரங்கமாக சம்போகத்தில் ஈடுபடும் சிற்பங்களை செதுக்கி, நமது தர்மம் எது என்பதை முன்னோர்கள் கல்வெட்டு போல நிலையாட்டியிருக்கும் நிலையில், தன் ஒருத்தி முன்னிலையில் சம்போகத்தில் ஈடுபட்டதற்காக, ஜீவராஜ் மீது அய்யம்மாள் ஆத்திரப்பட்டதாக கூறுவதை தர்மசாத்திரங்களை அறிந்த ஹிந்துக்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா?”

 13. கண்களில் நீர் தளும்ப சிரித்து ரசித்து படித்தேன்.

  சத்தியமார்க்கம் தளத்தில் கண்ட கேள்வி ஒன்றை இங்கே ஒட்டுகிறேன்.

  இத்தகையவற்றைத் தொடர்ச்சியாக கண்டு வரும் தமிழர்கள் மனதில் ஒட்டு மொத்தமாக எழும் கேள்வி ஒன்றே ஒன்று தான். எங்கு எது நடந்தாலும் அதற்கு காவி முலாம் பூசி மத வியாபாரம் செய்து பிழைக்கும் இராம. கோபாலன் மீது இந்திய பீனல் கோடு செக்’ஷன் 153A இன் படி, இன்னும் வழக்குகள் பாயாமல் இருப்பது ஏன்?

  http://www.satyamargam.com/news/news-and-views/2393-rama-gopalans-hate-speech,-communal-violence-and-the-law.html

 14. கடந்த மாதம் 18–ந்தேதி இரவு தனது அலுவலகம் அருகே நின்ற சுரேஷ்குமாரை, 3 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிக்கொன்றது.

  இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கொலையாளிகளை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்தநிலையில் கொலை வழக்கு தொடர்பாக 6 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வந்தனர். அதில் 2 பேர், சுரேஷ்குமார் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு இருப்பது தெரியவந்தது.

  அதில் ஒருவர், கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த குத்புதீன்(24) ஆவார். பி.காம் பட்டதாரியான இவர், பாடியில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை செய்து வந்தார். மற்றொருவர் பெயர் நசீர் என்ற நாசர்(33). சென்னை பாடியை சேர்ந்த இவர், அந்த பகுதியில் செல்போன் ‘ரீசார்ஜ்’ கடை நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி குடும்பம் உள்ளது. இதையடுத்து இவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

  source: 19 ஜூலை நக்கீரன்

  • மணவை சிவா, இந்தக் கூத்துக்கு பதில் சொல்லுங்கள்.

   சுரேஷ் கொலை செய்யப்பட்ட அடுத்த நாள் இந்துத்துவ இயக்கங்கள் ஸல் மீது ஆணையாக என்று போட்டு பாட்சா என்பவரின் பெயரில் மிரட்டல் கடிதம் எழுதியதை போலீசடம் ஒப்படைத்தன. ஊடகங்கள், ஆங்கில ஹிந்து மற்றும் தமிழ் ஹிந்து அந்த கடிதத்தை ஸ்கேன் செய்து வெளியிட்டு பாட்சாவை அதிகாரப்பூர்வ குற்றவாளியாக அறிவித்தன. இப்பொழுது குத்பூதின் தான் குற்றவாளி என்றால் இந்துத்துவ இயக்கங்கள் கொடுத்த கடிதத்தின் யோக்கியதை என்ன? அல்லது இந்துத்துவ இயக்கங்களின் யோக்கியதை என்ன? உங்களால் இதன் அரசியலை பரிசீலிக்க முடியுமா?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க