privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைமாணவர் - இளைஞர்உங்க வீட்டில் நாங்களும் எங்க விடுதியில் நீங்களும் தங்கலாமா ?

உங்க வீட்டில் நாங்களும் எங்க விடுதியில் நீங்களும் தங்கலாமா ?

-

தரம் குறைந்த உணவு, சுகாதாரமற்ற குடிநீர்

திருச்சி அரசு அம்பேத்கர் விடுதி மாவணர்களின் உள்ளிருப்புப் போராட்டம் !

திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள டாக்டர் அரசு அம்பேத்கர் கல்லூரி மாணவர்கள் விடுதியில் பல்வேறு கல்லூரிகளைச் சே்ாந்த மாணவர்கள் 250 பேர் தங்கி படித்து வருகின்றனர். கழிவறை வசதி கேட்டும், நல்ல சோறு, நல்ல தண்ணீர் வசதி கேட்டும் விடுதியின் அவலநிலைக்கு எதிராக மாணவர்கள் தொடர்ந்து கடந்த ஏழு ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

டாக்டர் அம்பேத்கர் மாணவர் விடுதிகடந்த டிசம்பர் மாதம் (2013), “சுகாதாரத்தைப் பற்றி வாய்கிழிய வகுப்பெடுக்கும் மாவட்ட ஆட்சியரே! கழிவறையை கட்டி கொடு, இல்லையேல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து விடு!” என புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி தோழர்கள் மற்றும் விடுதி மாணவர்கள் இணைந்து நகரமெங்கும் சுவரொட்டி ஒட்டினோம்.

அதன் பிறகு, நிர்வாகம் புதிய கழிவறை கட்டிக் கொடுத்தது. பராமரிப்பின்றி கிடந்த கழிவறைகளை சீர்செய்தது. விடுதியில் உள்ள முட்புதர்களை வெட்டியதும், தண்ணீர் குழாய்களை போட்டு தருவதும் என கண்துடைப்பு நாடகமாக பெயரளவுக்கு சில பராமரிப்பு வசதிகளை செய்து கொடுத்தனர்.

அப்போது, ‘போர்டு மாணவர்களின் சாப்பாட்டை கெஸ்ட்டாக தங்கி இருக்கும் மாணவர்கள் வாங்கிக் கொள்வதும், கழிவறையை பயன்படுத்தியதும்தான் பிரச்சனை, அவர்கள் தான் போராடுகிறார்கள்’ என்று கெஸ்ட் மாணவர்களை விடுதியை விட்டு வெளியேற்றியது. மாணவர்கள் நலனில் அக்கறை காட்டியது போல அதிகாரிகள் நடித்தனர்.

குள்ளநரி சாயம் வெளுத்து போனது போல, மாவட்ட அதிகாரிகளின் யோக்கியதை அம்பலமாக தொடங்கியது.

02-07-2014 அன்று காலை குடிநீர் பிடிக்கச் சென்ற மாணவர்கள் குடிநீர் சகதி கலந்த செம்மண் நிறத்தில் வருவதை கண்டனர். மேலும், கல்லூரி துவங்கி ஏழு நாட்கள் ஆகியும் தரம் குறைந்த உணவு சமைத்து மாணவர்களுக்கு வழங்குவது, கழிவறையை திறந்து விடாமல் பூட்டி வைத்திருப்பது என மாவட்ட நிர்வாகம் மாணவர்களை வஞ்சிக்க ஆரம்பித்தது. அதிகாரிகள் தன் வீட்டில் குளிரூட்டப்பட்ட மேற்கத்திய பாணி கழிவறையில் மலம் கழிக்கின்றனர். ஆனால் இங்கு விடுதி மாணவர்கள் திறந்த வெளியில், முட்புதர்களில் மலம் கழிக்கின்றனர்.

தொடர்ந்து இது போன்ற இன்னல்களை பொறுக்க முடியாத மாணவர்கள் பு.மா.இ.மு வுடன் தொடர்பு கொண்டு, விடுதி மாணவர்களும், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி தோழர்களும் அன்று காலையே உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முதலில் வந்த அப்பகுதி காவல் ஆய்வாளர் முருகவேல், ஏதோ மாணவர்களுக்கு நல்லது செய்வது போல, சகதி கலந்த குடிநீரை விடுதி அட்டண்டரிடம் கொடுத்து, “இந்த நீரை நீ குடிய்யா? பாக்கலாம்”, என்று கூறி, பிறகு அந்த நீரை அவர் குடித்து காட்டினார். பிறகு அட்டண்டர் குடித்தார். தனது சொந்த செலவில் குடிநீர் வரவழைப்பதாக கூறி போராட்டத்தை முடிக்கக் கூறினார்.

“ஒரு நாள் கொடுப்பீங்க சார், வருடம் முழுவதும் கொடுப்பீங்களா?” என்று மாணவர்கள் கேட்டனர். “எங்கள் விடுதி குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும், நல்ல தண்ணீர் வர வேண்டும்” என பேசிய மாணவர்கள் “அதிகாரியை வரச்சொல்லுங்கள்” என்று அந்த காவல் ஆய்வாளருக்கு பதிலடி கொடுத்தனர்.

அதன்பின் வந்த கோட்டாட்சியர் பஷிர் அலி, வழக்கம் போல் பிரச்சனையை கேட்டு மாணவர்களின் கோபத்தை தணிக்கும் வகையில் பேசினார். உடனே மாணவர்கள், “சார் செய்து தரேன்னு சும்மா சொல்லாதீங்க சார்…, ஏன் இத்தனை நாளா எதுவும் செய்யலைனு பதில் சொல்லுங்க..” என கேள்வி கேட்டு அவரை சூழ்ந்து கொண்டனர்.

பின்னர் புதிய பொறுப்பு என அறிவித்த ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் சொர்ணா பியுலா அங்கு வந்து, “10 அல்லது 15 நாட்களில் சரிசெய்வோம்” என திமிராக பேசினார்.

உடனே மாணவர்கள் பதிலடியாக, “அப்ப அதுவரைக்கும் உங்க வீட்டையும், கக்கூசையும் திறந்து விடுங்க… நாங்க அங்க தங்கியிருக்கோம்! நீங்க இங்க எங்க விடுதில தங்கி பாருங்க, அப்ப தெரியும் எங்க கஷ்டம் என்னனு…” என ஆதங்கத்தோடு பேச வாயை மூடினார் தாசில்தார்.

உடனே சுத்தமான தண்ணீர், நல்ல உணவு, நூலகவசதி, பத்திரிக்கை, மின்விசிறி போன்றவை ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தபின் போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.

அன்று மாலை வந்த உதவி கலெக்டர் முருகையா, ‘அமைப்பில் இணைந்து போராடினால் படிப்புக்கு பிரச்சனை’ என மாணவர்களை மிரட்டினார்.

பிறகு நாம் தலையிட்டபோது ‘மாணவர் அமைப்பிற்கு விடுதியில் என்ன வேலை’ என பு.மா.இ.மு தோழர்களை பார்த்து பணிந்து கேட்டார்.

“UGC விதிமுறைப்படி கல்லூரியிலும், விடுதியிலும் மாணவர்கள் கோரிக்கைகாக மாணவர்கள் சங்கமாக, அமைப்பாக சேர்ந்து செயல்படலாம் என உரிமை உள்ளது. அதனால் விடுதியில் அல்லது கல்லூரிகளில் எதாவது பிரச்சனை என்றால் மாணவர்கள் எங்களிடம் (பு.மா.இ.மு) தான் சொல்கிறார்கள். எந்த அதிகாரியிடமும் சொல்வதில்லை. மாணவர் உரிமைக்காக போராடுவது எங்கள் உரிமை. அதை மறுப்பது சட்டப்படியும், நீதிப்படியும் தவறு, மறுத்தால் பணிந்து போக மாட்டோம்” என்று கூறினோம்.  “மாணவர்களை சங்கமாகசேரக் கூடாது என்று மிரட்டினால் – UGC சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் அதிகாரிகள் உங்கள் யோக்கியதையை அம்பலப்படுத்தி போஸ்டர் போட்டு மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம்” என்று கூறிய போது வாயை மூடிக் கொண்டு ஓடிவிட்டார் உதவி கலெக்டர் முருகையா.

மாணவர்கள் அமைப்பாக இருந்து போராடினால் மட்டுமே வெற்றி என்று கூறியதை விடுதி மாணவர்கள் ஆதரித்தனர்.

தகவல்:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
திருச்சி