ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இங்கிலாந்து தொலைக்காட்சிகளில் பிரபலமான நிகழ்ச்சி தொகுப்பாளரான ஆஸ்திரேலியாவில் பிறந்த ரோல்ப் ஹாரிஸ் (வயது 84) க்கு லண்டன் நீதிமன்றம் ஐந்து ஆண்டுகள், ஒன்பது மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. தனது பிரபலத்தையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி சிறுமிகளையும், இளம்பெண்களையும் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியிருப்பதாக இவர் மீது 12 குற்றச்சாட்டுகள் சாட்டப்பட்டு நிரூபிக்கப்பட்டன. பாதிக்கப்பட்டவர்களில் சிலர் பின்னாட்களில் பிரபலங்களாக மாறியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. பன்னிரண்டு குற்றங்களில் ஆறில் பாதிக்கப்பட்டவர்கள் அவரது மகளின் சிநேகிதிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டிட்கெரிடோ என்ற ஆஸ்திரேலிய பழங்குடியின குழல் வாத்தியத்தை பயன்படுத்தி இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ள ஹாரிஸ் லண்டனில் குறிப்பாக குழந்தைகள் நிகழ்ச்சி, விலங்கு மருத்துவம் பற்றிய நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகளில் வழங்கி வந்தவர். 60-70 களில் ரோல்ப்-இன் கார்ட்டூன் கிளப், விலங்கு மருத்துவமனை போன்ற தொடர்கள் பார்வையாளர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றது. இசையில் மட்டுமின்றி ஓவியத்திலும் மிகவும் திறமை படைத்தவர் ஹாரிஸ். அதனால் கடந்த 2005-ல் தனது வைரவிழா பிறந்தநாளின் போது இங்கிலாந்து ராணி எலிசபெத் தனது உருவத்தை வரைவதற்கு இவரையே தேர்ந்தெடுத்து வரைய வைத்தார்.
இவரைப் போலவே தற்போது காலமாகி விட்ட பிபிசி சேனல் புகழ் ஜிம்மி சவில்-ம் சிறார்களை வன்புணர்வு செய்த்தாக குற்றச்சாட்டுகள் 2012 மத்தியில் கிளம்பியது. முன்னர் அத்தகைய புகார்கள் எழுந்தபோது அவர் உயிரோடிருந்த காரணத்தாலும், தனது புகழினாலும் அவற்றை காணாமல் அடித்தார். தற்போது அதுபற்றிய ஆவணப்படங்களே வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹாரிசின் வழக்கறிஞர் ஏற்கெனவே போதுமான காலம் அவர் சிறையில் இருந்து விட்டதாகவும், தேவையான அளவுக்கு அவரது புகழுக்கு இழுக்கு ஏற்பட்டு விட்டதாகவும், எனவே தண்டனையை ரத்து செய்யும்படியும் கூறினர். நீதிபதிகளும் தனது புகழை பயன்படுத்தி சிறுமிகளையும், பெண்களையும் ஹாரிஸ் வல்லுறவுக்குள்ளாக்கவில்லை என்று தீர்ப்பில் கூறியிருந்தனர்.
வழக்கின்போது, தான் 18 வயதுக்கு குறைந்த பெண்களிடம் பாலியல் உறவு கொள்ளவில்லை என்று வாதிட்டார் ஹாரிஸ். 1997-ல் இதுபோல ஒரு சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டு அதனை காதல் மற்றும் பரஸ்பர நட்பின் அடிப்படையில் நடந்த ஒன்றாக கூறி அப்பெண்ணின் தந்தைக்கு கடிதம் எழுதியிருந்தார் ஹாரிஸ். அதுவும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 1968-ல் தென்னாப்பிரிக்காவில் தன்னிடம் ஆட்டோகிராப் கேட்ட எட்டு வயது சிறுமியிடம் பாலியல் வல்லுறவை நிகழ்த்தியிருக்கிறார் இவர். 1978-ல் ஐடிவியின் ஸ்டார் கேம்ஸ் நிகழ்ச்சிக்காக கேம்பிரிட்ஜ் வந்த அவர் அங்கு ஒரு 14 வயது சிறுமியிடம் அத்துமீறி நடந்துள்ளார். விசாரணை கடந்த ஜனவரி துவங்கி நடந்து வந்த்து. ஜூலை 4-ம் தேதி தீர்ப்பு வெளியானது.

இதுதவிர வெனசா பெல்ட்ஸ் என்ற ரேடியோ பிரபலத்திடம் பொது நிகழ்ச்சியில் தவறாக நடந்திருக்கிறார் இவர். இது அவரது மனைவியின் கண் முன்னால் பிக் பிரேக்ஃபாஸ்ட் நிகழ்ச்சியில் 1996-ல் நடந்துள்ளது. தற்போது தீர்ப்பு வெளியான பிறகு ஸ்காட்லாண்டு யார்டிடம் இதனை ஒத்துக்கொண்டுள்ள வெனசாவுக்கு தற்போது வயது 52. இதுபற்றி வெனசா ட்விட்டரில் குறிப்பிட்ட உடனேயே அவர் புகழ் விரும்பி, மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும், பாலியல்ரீதியாக கொச்சைப்படுத்தியும் மூன்றாந்தர வசனங்களுடனும் ட்விட்டர்கள் நிரம்பின.
இதனை ஏன் அப்போதே சொல்லவில்லை என்று கேட்டதற்கு, அப்போது எனது திருமணத்தை முறித்துக்கொள்ள நான் விரும்பவில்லை, அதனால்தான் போலீசுக்குப் போகவில்லை என்று வெனசா தெரிவித்திருக்கிறார். ஆக இங்கிலாந்திலும் இந்தியாவைப் போலவே பாலியல் வன்முறை நிகழ்வில் பாதிக்கப்பட்ட பெண்தான் சமூகத்தை பொறுத்தவரை குற்றவாளி என்பதுதான் எதார்த்தம். இந்த இடம்தான் ரோல்ப் ஹாரிஸ் போன்ற அயோக்கியர்கள் ஒளிந்துகொள்ள கிடைத்த இடமாக போய் விடுகிறது.
இதுபோக லிண்டா நோலன் என்ற ஆஸ்திரேலிய பாடகிதான் இவர் ஆப்ரிக்காவில் வைத்து வல்லுறவுக்குள்ளாகிய பெண் (8 வயது குழந்தை) என்றும் தெரிய வந்துள்ளது. தற்போது மூன்று குழந்தைகளுக்கு தாயான 55 வயது நிரம்பிய அவர் இத்தண்டனை ரோல்ப் ஹாரிசுக்கு போதாது என்று தெரிவித்துள்ளார். இதனையே அரசு தரப்பு வழக்கறிஞரும் கூறியிருக்கிறார். எனினும் ஹாரிசிடமிருந்து நீதிபதிகள் வழக்கிற்கான செலவை மாத்திரமே வசூலிக்க உத்திரவிட்டனர். நட்ட ஈட்டுத்தொகை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.
பாதிக்கப்பட்டவர்களில் மிகவும் இளைய பெண்ணான எட்டு வயது சிறுமியின் அறிக்கை ஒன்று தீர்ப்புக்கு பிறகு வாசிக்கப்பட்டது. உலகம் முழுதும் இப்படி பொறுக்கிகளால் சீரழிக்கப்படும் குழந்தைகளுக்கு பாதுகாப்பளிக்கும் வகையில் தீர்ப்பு இருக்க வேண்டும் எனத் தான் விரும்புவதாக அதில் அந்த பெண் கூறியிருந்தார். ஹாரிஸ் நிகழ்த்திய பாலியல் வல்லுறவினால் எனது எட்டு வயதிலேயே அந்த வயதுக்குரிய குழந்தைத்தனத்தை இழந்து விட்டேன் என்கிறாள் ஒரு பெண். அந்த நாள்தான் என் வாழ்வின் அழுக்கும், துயரமும் நிறைந்த நாள் என்று ஒரு பெண்ணும், அன்றுதான் நான் முழுதுமாக நொறுங்கிப் போனேன் என்று இன்னொரு பாதிக்கப்பட்ட பெண்ணும் கூறியிருக்கின்றனர். அன்று முதல் என்னால் தூங்கவே முடியவில்லை, அவரால் எப்படி தினசரி வாடிக்கையாக வாழவும் இரவில் தூங்கவும் முடிகிறது என்று தெரியவில்லை என்கிறாள் இன்னொரு பெண்.
ஆஸ்திரேலிய நாடக குழுவை சேர்ந்த ஒரு பெண் 1986-ல் அவளுக்கு பதினைந்து வயது நடந்தபோது இங்கிலாந்துக்கு வந்திருந்தார். அப்போது ஹாரிஸ் அவரை பலமுறை வல்லுறவுக்குள்ளாக்கினார். நிரந்தர பய உணர்வை அது தோற்றுவித்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இன்னொரு பெண் அவர் தன்னை பாலியல் உறவுக்கான பொம்மையாக பாவித்து விட்டதை கண்ணீர் மல்க தெரிவித்திருக்கிறார். தற்போது இன்னும் பல அவரது பாலியல் குற்றங்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
அவர் ஒரு புகழ்பெற்ற மனிதர், ஒரு பெண் குழந்தைக்கு தகப்பன், மேலும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளை நடத்துபவர், எனவேதான் அவரை நாம் நம்புகிறோம். ஆனால் இவரே குழந்தைகளிடம் இப்படி நடந்து கொண்டால் பிறகு என்ன செய்வது என்று ஐடிவி செய்தியின்போதான கேள்விபதில் ஒன்றுக்கு பிரிட்டிஷ் பெண்மணி ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார். உண்மைதான். சினிமா, டிவி, ஆன்மீகம், அரசியல் என பிரபலமாக இருப்பதால் தமது பிரபலம் மற்றும் அதிகாரத்தை அல்லது அதிகார தொடர்புகளை பயன்படுத்தி அனைத்து குற்றங்களையும் மறைத்துக் கொள்ளலாம் என்றுதான் இத்தகையவர்கள் எண்ணுகின்றனர். இதற்கான வாய்ப்பையும் நிலவும் சமூக அரசியல் பொருளாதார கலாச்சார சூழல் ஏற்படுத்தி விடுகிறது.
தற்போது கூட குற்றம் சாட்டப்பட்டிருக்கும் சில சம்பவங்கள் வெளிநாட்டில் நடந்திருப்பதால் அவை தனது விசாரணை வரம்புக்கு வெளியில் இருப்பதாக சொல்லி லண்டன் நீதிமன்றம் தட்டிக்கழித்து விட்டது. குழந்தைகளை ஒரு நாட்டில் பாலியல் வன்முறை செய்து விட்டு இன்னொரு நாட்டில் அடைக்கலம் புகலாம் என்று மனித குலத்துக்கே ‘நாகரீகம்’ கற்றுக் கொடுத்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் நீதிமன்றமே சொல்லி விட்டது.
குற்றம் சுமத்தியவர்களில் ஒருவரான ஆஸ்திரேலிய பெண்மணி புகழுக்காகவும், பரபரப்பு செய்திக்காகவும் 30 ஆயிரம் டாலர் பணத்துக்காக ஹாரிஸ் மீது குற்றம் சுமத்தியதாகவும் இணையத்தில் கோட்டு சூட்டு கனவான்கள் நியாயப்படுத்துகிறார்கள். எல்லாவற்றையும் விட ரோல்ஃப் ஹாரிசின் மனைவியும், மகளும் தற்போது வரை அவருக்கு ஆதரவாக இருந்து வருகின்றனர். இந்த அடிமைத்தனத்தை என்ன வார்த்தைகளால் விவரிப்பது? நம்ம ஊர் கண்ணகியெல்லாம் எந்த மூலைக்கு.
இங்கே திரையுல பிரபலங்களால் வல்லுறவுக்குள்ளாகும் துணை நடிகைகளின் புகாரை காவல்துறை பெற்றுக் கொள்ளவே முன்வராது. மனிதப் புனிதர் ஆசாராம் பாபு மீது புகார் கொடுக்க பாதிக்கப்பட்ட சிறுமி முன்வந்தபோது அவளது பெற்றோரே முதலில் நம்பவில்லை. பிறகு புகார் சென்ற பிறகு அவளுக்கு மனநிலை சரியில்லை என்று ஆசாராம் பாபு தரப்பு கதை கட்டியது. சூரியநெல்லிப் பெண் இன்னமும் குரியனிடமிருந்து நீதி கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறாள். பிரபலங்களை எதிர்த்துப் போராட முன்வந்தால் அது பாலியல் வன்முறையாக இருந்தாலும் சரி, பொருளாதார, அரசியல் வன்முறையாக இருந்தாலும் சரி அதனை எதிர்கொள்ளவும், சமூக புறக்கணிப்பினை எதிர்கொள்ளவும் திராணி இருக்க வேண்டும். அதுவும் அடிமைப்படுத்தப்பட்ட பெண் பாதிக்கப்படுபவராக இருப்பின் இன்னமும் உறுதி தேவைப்படுகிறது என்பதைத்தான் ஹாரிசின் வழக்கும் பழைய சாவில்லேவின் வழக்குகளும் காட்டுகின்றன.
ஒருக்கால் அந்த உறுதி பாதிக்கப்பட்ட பெண்களிடம் இல்லை என்றால் அவர்களை அப்படி பலவீனமாக்கியது நாம்தான் இல்லையா?