குஜராத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டில் நடந்த இந்துவெறி பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் நீதிக்காக இந்திய நீதிமன்றங்களில் தொடர்ந்து போராடிவரும் மனித உரிமை ஆர்வலரான தீஸ்தா சேதல்வாதைப் பழிவாங்க அவர்மீது பொய்வழக்கு போட்டு, அவரைக் கைது செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறது குஜராத் அரசு.
குஜராத்தில் நடந்த இந்துவெறி பயங்கரவாதப் படுகொலைகளைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்குச் சட்ட உதவிகள் செய்வதை நோக்கமாகக் கொண்டு “நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் அமைப்பு” என்ற தன்னார்வ அறக்கட்டளையை தீஸ்தாவும் அவரது கணவர் ஜாவீத் ஆனந்த் உள்ளிட்ட மனித உரிமை ஆர்வலர்களும் இணைந்து நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே, மும்பை இந்துவெறி பயங்கரவாதத்துக்குப் பின்னர் “சப்ரங்” என்ற தன்னார்வ அமைப்பை 1993-ல் இவர்கள் ஏற்படுத்தியிருந்தனர்.
குஜராத் படுகொலையின்போது, குல்பர்க் சொசைட்டி எனும் முஸ்லிம் குடியிருப்புப் பகுதியில் கொடூரமான முறையில் 69 பேரைக் கொன்று இந்துவெறியர்கள் நடத்திய பாசிச வெறியாட்டத்தின் வரலாற்று சாட்சியமாக அந்த இடத்தையே ஒரு நினைவகமாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். குல்பர்க் நினைவகத்துக்காக இவர்கள் திரட்டிய தொகை ரூ 4.5 இலட்சத்தில் ரூ 50 ஆயிரம் மட்டுமே வெளிநாடுகளிலுள்ள தீஸ்தாவின் நண்பர்கள் வழங்கிய நன்கொடை. இதற்கான தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளும் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. இருப்பினும், குல்பர்க் குடியிருப்பைச் சேர்ந்த சிலரை மிரட்டி, தீஸ்தாவுக்கெதிராக நிதி மோசடிக் குற்றம் சாட்டி பொய்ப்புகார் ஒன்றை எழுதி வாங்கியிருக்கிறது குஜராத் போலீசு. பொய்வழக்குப் போட்டு சிறை வைக்க முயன்றது. அவர்களது வங்கிக் கணக்குகளையும் முடக்கியிருக்கிறது. எனினும், உயர்நீதிமன்றம் இவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கி யிருக்கிறது.
குல்பர்க் சொசைட்டி படுகொலை வழக்கில் மோடி உள்ளிட்டு குஜராத் அரசின் உயரதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பதை தீஸ்தாவும் குல்பர்க் சொசைட்டியில் கொல்லப்பட்ட முன்னாள் காங்கிரசு எம்.பி.யான இஷான் ஜாப்ரியின் துணைவியார் ஜாகியா ஜாப்ரியும் உச்ச நீதிமன்றத்தில் 2006-ம் ஆண்டில் ஆதாரங்களுடன் அறிக்கையாகச் சமர்ப்பித்தனர். இந்த வழக்கின் கடைசி முனை மோடியை நெருங்கியதால், அன்று முதலே தீஸ்தாவுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடங்கி விட்டன. இந்த அறிக்கையைப் பரிசீலித்த உச்ச நீதிமன்றம், சி.பி.ஐ. இயக்குனர் ராகவன் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவை ஏற்படுத்தி விசாரணை நடத்த உத்தரவிட்டது. மோடியின் நேரடிப் பார்வையில்தான் குஜராத் இனப்படுகொலை நடத்தப்பட்டது என்பதைச் சட்ட ரீதியாகவே நிலைநாட்டுவதற்கு வலுவான சாட்சியங்கள் இருந்தபோதிலும், சிறப்புப் புலனாய்வுக் குழு படுகொலைக்கு அவரைப் பொறுப்பாக்குவதற்கான சாட்சியங்கள் இல்லை எனக்கூறி 2012-ல் மோடியை விடுவித்தது.
இதனை எதிர்த்து ஜாகியா ஜாப்ரி உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கையை மீளாய்வு செய்யுமாறு மூத்த வழக்குரைஞர் ராஜு ராமச்சந்திரனை நியமித்தது உச்ச நீதிமன்றம். சிறப்புப் புலனாய்வுக் குழு திரட்டியுள்ள சாட்சியங்களின்படியே மோடியின் மீது குற்றம் சாட்ட முடியும் என்று அவரது அறிக்கை கூறியது. மோடியைக் குற்றவாளிகள் பட்டியலில் சேர்ப்பதா என்பதை முடிவு செய்து கொள்ளுமாறு விசாரணை நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். விசாரணை நீதிமன்றம் மோடியைக் குற்றவாளிகளின் பட்டியலில் சேர்க்கவில்லை. விசாரணை நீதிமன்றத்தின் இந்த முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனுச் செய்திருக்கிறார் ஜாகியா ஜாப்ரி.
கார்ப்பரேட் முதலாளிகளின் அதிகார பலம், பண பலம், சட்ட வல்லுநர்கள் படை, அரசு அதிகாரம் ஆகிய அனைத்து வலிமைகளும் பொருந்திய ஒரு பாசிஸ்டுக்கு எதிராக, நீதிமன்றத்தில் இத்தகைய விடாப்படியானதொரு சட்டப்போராட்டம் நடத்துவதென்பது சாதாரண விசயமல்ல. தன் உயிரைப் பணயம் வைத்துத்தான் இத்தகைய நடவடிக்கையில் யாரும் இறங்க முடியும்.
இதுவரை 5 பொய் வழக்குகள் தீஸ்தாவின் மீது போடப்பட்டிருக்கின்றன. பெஸ்ட் பேக்கரி வழக்கின் முக்கிய சாட்சியான ஜாகிரா ஷேக் என்ற பெண்ணை மிரட்டியும் பணம் கொடுத்தும் தீஸ்தாவுக்கு எதிராகப் புகார் கொடுக்க வைத்தது பாரதிய ஜனதா கும்பல். அதனையெல்லாம் சட்டரீதியாக முறியடித்தது மட்டுமல்ல, இந்து பாசிசம் கோலோச்சும் அந்த மாநிலத்தில், தம் குடும்ப உறுப்பினர்களைப் பறிகொடுத்தவர்களான சாட்சிகளுக்குத் தைரியம் கொடுத்து, அவர்களைச் சாட்சி சொல்ல வைத்து குற்றவாளிகளுக்கு எதிராகத் தீர்ப்பும் பெற்றிருக்கிறார் தீஸ்தா.
ரதயாத்திரை, மும்பை படுகொலை உள்ளிட்டு நாடு முழுவதும் நடந்துள்ள நூற்றுக்கணக்கான முஸ்லிம் எதிர்ப்புக் கலவரங்கள் எதிலும் இதுநாள்வரை இந்து வெறியர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டதில்லை. குஜராத்தில் இதுவரை 117 இந்துவெறியர்கள் குற்றவாளிகள் என்று நீதித்துறையால் தண்டிக்கப்பட்டுள்ளதிலும், நரோடா பாட்டியா படுகொலை வழக்கில் மோடி ஆட்சியில் அமைச்சராக இருந்த மாயா கோத்னானிக்கு 28 ஆண்டு சிறைத்தண்டனை அளிக்கப்பட்டதிலும் தீஸ்தாவின் உழைப்பும் பங்கும் முக்கியமானவை.
தீஸ்தா, ஜாகியா ஜாப்ரி மற்றும் பிற மனித உரிமை ஆர்வலர்களின் போராட்டத்தை ஆதரித்து தோள்கொடுப்பதன் மூலம்தான், இந்துவெறி பாசிசத்துக்கு எதிராகப் போராடுவதற்கான உந்துதலையும் துணிவையும் அனைவருக்கும் ஏற்படுத்த முடியும்.
– கதிர்
______________________________
புதிய ஜனநாயகம் – ஜூலை 2014
______________________________