privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கபட்ஜெட் 2014 – பாமரனுக்கு ஆப்பு முதலாளிக்கு சோப்பு

பட்ஜெட் 2014 – பாமரனுக்கு ஆப்பு முதலாளிக்கு சோப்பு

-

ன்மோகன் சிங் ஆட்சிக்கும் மோடி ஆட்சிக்கும் என்ன வித்தியாசம்? மன்மோகன் சிங் ஆட்சி தாங்க முடியாத கொடூரமாக இருந்தது, மோடி ஆட்சி கொடூரமாக தாங்க முடியாததாக இருக்கிறது.

அருண் ஜெட்லி - நிர்மலா சீத்தாராமன்
பட்ஜெட் நாளன்று நிதி அமைச்சர் ஜெட்லியும், நிர்மலா சீத்தாராமனும் துறை அதிகாரிகளுடன் படத்துக்கு நிற்கின்றனர். (படம் : நன்றி deccanchronicle.com)

காலையில் மளிகைக் கடைக்குப் போய் “ஒரு ரெண்டு ரூபாய்க்கு பச்சை மிளகா கொடுங்க”ன்னு கேட்டால், “ரெண்டு ரூபாய்க்கா?” என்று கொஞ்சம் சங்கடப்பட்டார் கடைக்கார அம்மா.

“ஏன், விலை அதிகமா, சரி ஒரு ஏழெட்டு வர்ற மாதிரி போதும்”-என்று கேட்டால், “இல்ல 50 கிராமே 4 ரூபாய்” என்று 2 ரூபாய்க்கு 4 பச்சை மிளகாய் கொடுத்தார். அதாவது ஒரு மிளகாய் 50 காசுகள். கால் கிலோ தக்காளி 15 ரூபாய். “நேத்து பெட்டி 500 ரூபா வித்த தக்காளி இன்னைக்கு 750 ரூபாய்க்கு விக்குது, என்ன செய்றது” என்றார் கடைக்காரர்.

‘மோடி வந்ததும் விலைவாசி எல்லாம் கொறையும், பதுக்கல்காரர்கள் எல்லாம் பாகிஸ்தானுக்கு ஓடிப் போவாங்கன்னு சொன்னாங்களே, இப்ப நிலைமை இவ்வளவு மோசமாக இருக்கிறதே?’ என்று கேட்டால், “எல்லாத்துக்கும் மோடி வர முடியுமா? அவரு வந்தா தக்காளி விளைவிக்க முடியும்? அவரு வந்தா பச்சை மொளகா கொண்டு வர முடியும்? அதுவும் ஆட்சிக்கு வந்து 2 மாசம் கூட ஆகல” என்று மோடி ரசிகர்கள் மிரட்டுகிறார்கள். இதே நபர்கள்தான் தேர்தலுக்கு முன்னாடி “மன்மோகன் சிங்குதான் குற்றவாளி, அவரோட ஆட்சியை ஒழிச்சுக் கட்டி, மோடி வந்துட்டா நம்ம பிரச்சனை எல்லாம் ஒரே ராத்திரியில சரியாயிரும்”னு மோடி லேகியத்தை விற்றுக் கொண்டிருந்தவர்கள்.

சரி, தக்காளி, பச்சை மிளகாய் விலையை விட்டு விட்டு, அடுத்த 5 வருடங்களில் விலைவாசியை குறைக்க, வேலை வாய்ப்புகளை பெருக்க மோடி அரசு என்ன திட்டம் போட்டிருக்கிறது என்று தெரிந்து கொள்ள மோடி அரசின் வரவு செலவு நிதிநிலை அறிக்கை பற்றி பார்ப்போம். தமிழ் இந்து நாளிதழில் இராம. சீனுவாசன், பாஜக அரசின் பட்ஜெட், ‘செலவைக் குறைத்து (மானியங்கள் வெட்டு), வரவை அதிகரிப்பதன் மூலம் (முதலாளிகளுக்கு வரிக் குறைப்பு, பொதுமக்களுக்கு வரி உயர்வு) நிதி பற்றாக்குறையை குறைத்திருக்கிறது’ என்று எழுதியிருந்தார்.

வரி வருவாயில் பெரும்பகுதி சேவை வரி உயர்வின் மூலம் பெற திட்டமிட்டுள்ளது மோடி அரசு. சேவை வரி வருவாய் இந்த ஆண்டு 30% உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது நேரடி வரிகளான கார்ப்பரேட் வரி, பணக்காரர்களின் தனிநபர் வருமான வரி இவற்றை உயர்த்தாமல், ஏழைகளை அதிக அளவில் பாதிக்கும் வரி வருமானம் அதிகரிக்கப்படவிருக்கிறது. 2008-09 ஆண்டில் ரூ 4.14 லட்சம் கோடியாக இருந்த முதலாளிகளுக்கான வரிச் சலுகை நடப்பு ஆண்டில் ரூ 5.72 லட்சம் கோடியாக உயரவிருக்கிறது. சென்ற ஆண்டு இது ரூ 5.66 லட்சம் கோடியாக இருந்திருக்கிறது.

மக்களுக்கு மானியமும், முதலாளிகளுக்கு வரிவிலக்கும்
மக்களுக்கு மானியமும், முதலாளிகளுக்கு வரிவிலக்கும் (படம் : நன்றி தி இந்து)

நடுத்தர வர்க்கத்துக்கு உதவியாக வரி விதிப்பதற்கான வருமானம், வரி விலக்குக்கான சேமிப்பு, வரி விலக்குக்கான வீட்டுக் கடன் வட்டி ஆகியவற்றின் வரம்பு உயர்த்தப்பட்டிருக்கிறது. இவற்றின் மூலம், சலுகைகள் அனைத்தையும் பயன்படுத்தும், ஆண்டு வருமானம் ரூ 20 லட்சம் உடைய ஒருவருக்கு ரூ 36,000 வரிச் சலுகை கிடைக்கும். ரூ 12 லட்சம் ஆண்டு வருமானம் உடையவருக்கு ரூ 25,570 வரிச்சலுகை கிடைக்கும். ஆனால், இந்த உயர் நடுத்தர வர்க்க நபருக்கு கிடைக்கவிருக்கும் சலுகை, பெட்ரோல் விலை, டீசல் விலை, சமையல் வாயு விலை, ரயில் கட்டண உயர்வு என்று மறுபக்கத்தில் திருடப்பட்டு விடும்.

முதலாளிகளுக்கு வரி விலக்கை அதிகரித்து, நடுத்தர வர்க்கத்துக்கு சில ரொட்டித் துண்டுகளை வீசியிருக்கும் மோடி அரசு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது, கனிமங்கள், அலைக்கற்றை விற்பனை மூலம் வரி சாராத வருவாயை 25% அதிகரிக்க விருக்கிறது. அதாவது, இன்னும் சில ஆண்டுகளில் கூடுதல் கட்டணத்தில் தனியார் ரயில் சேவை, உயர் விலையில் தொலைபேசி சேவை, அதிக கட்டணத்தில் மின்சாரம் என்று மக்கள் மீதான சுமை அதிகரிக்கப்படும்.

ஒரு பக்கம் மறைமுகமான அடி என்றால் இன்னொரு பக்கம் நேரடியாக மானிய வெட்டு என்ற வகையில் அடி விழவிருக்கிறது. 2012-13 ஆண்டில் ரூ 2.47 லட்சம் கோடியாக இருந்த மானிய செலவு 2013-14 ஆண்டுக்கு ரூ 2.45 கோடியாக குறைந்திருக்கிறது. இது 2008-09 ஆண்டில் ரூ 2.19 லட்சம் கோடியாக ஆக இருந்தது.

சமையல் வாயு, பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், உணவுப் பொருட்கள், விவசாயிகளுக்கு உரம் இவற்றிற்கான மானியங்கள் குறைக்கப்படவிருக்கின்றன. ரயில் கட்டணம் ஏற்கனவே உயர்ந்து விட்டது. கேஸ் விலை உயரும், பெட்ரோல் விலை உயரும், உர விலை உயரும். இதுதான் மன்மோகன் சிங் செய்தது, இதையேதான் மோடியும் செய்கிறார். முன்பை வீட தீவிரமாக. .

நிதிப் பற்றாக்குறையை குறைக்க ‘உணவு மானியம், உர மானியம் போன்ற வீண் செலவுகளை ஆய்வு செய்து குறைக்க வேண்டும்’ என்றெல்லாம் சொல்லும் அரசும் முதலாளித்துவ ஆய்வாளர்களும், முதலாளிகளுக்கு கொடுக்கப்படும் பல லட்சம் கோடி ரூபாய் வரி விலக்கினால் என்ன பயன், அதனால் எத்தனை வேலை வாய்ப்புகள் உருவாகின என்று இதுவரை எந்த ஆய்வும் செய்ததில்லை. ஒவ்வொரு ஆண்டும் வரி விலக்கை மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே போகிறார்கள்.

தேர்தலின் போது மோடிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து, இன்றைக்கும் மோடி அரசுக்கு சப்பை கட்டிக் கொண்டிருக்கிற டெக்கான் குரோனிக்கிளை எடுத்து பார்த்தால், அதில் இப்படி ஒரு தலையங்கம்.

மோடி - ஜெட்லி
படம் : நன்றி தி இந்து

சந்தை அடிப்படைவாதிகள், “மானியங்கள் ஏன் ஒழித்துக் கட்டப்படவில்லை? வரி விதிப்பை முழுக்கவே ஒழித்துக் கட்டி முதலீட்டுக்கு சாதகமான சூழலை ஏன் உருவாக்கவில்லை? தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்குவதற்கு வசதியாக தொழிலாளர் நலச் சட்டங்கள் ஏன் மாற்றப்படவில்லை? பொதுத்துறை நிறுவனங்களை விற்பதற்கான திட்டத்தை பட்ஜெட்டிலேயே ஏன் அறிவிக்கவில்லை” என்று அவசரப்படுகிறார்கள் என ஆரம்பிக்கும் அந்த தலையங்கம் மோடியின் அரசு அவர்கள் விரும்பும் பொதுவான திசையில் நகர்ந்து கொண்டிருப்பதாக ஆறுதல் சொல்கிறது.

“பா.ஜ.கவுக்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லை. இந்த ஆண்டு வரவிருக்கும் ஹரியானா, ஜார்கண்ட், மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்றால்தான் அந்த நிலைமையை மேம்படுத்த முடியும். அதை சாதித்த பிறகு அரசியல் விளைவுகளைப் பற்றி கவலைப் படாமல் சுதந்திர சந்தை வாதிகள் விரும்பும் மாற்றங்களை மோடி அரசு செய்ய ஆரம்பிக்கும்.”

“சட்டசபை தேர்தல்களில் வாக்குகளை அள்ளும் நோக்கத்தில்தான் பா.ஜ.கவுக்கு ஓட்டு போட்ட நடுத்தர வர்க்கத்துக்கு ஒரு சில வரிச்சலுகைகள் வழங்கியிருக்கிறது மோடி அரசு. மேலும் கிராமப் புற, நகர்ப்புற ஏழை மக்களுக்கு உதவும் 100 நாள் வேலை திட்டம், உணவு பாதுகாப்புத் திட்டம் இவற்றில் கை வைக்காமல் இருக்கிறது” என்று விளக்கி விட்டு,  “மாநில சட்டசபை தேர்தல்கள் சீக்கிரம் வரவிருக்கும் நிலையில் மோடி பொருளாதார அடிப்படைவாதிகள் விரும்பும் வகையில் செயல்பட முடியவில்லை. கொஞ்சம் பொறுத்திருக்க வேண்டும்” என்கிறது டெக்கான் குரோனிக்கிள். நீண்ட கால நோக்கங்களுக்கு அச்சாரமாக அரசு செலவுக் குறைப்பு, அன்னிய முதலீடு ஊக்குவிப்பு, தனியார்-அரசு கூட்டு போன்ற வாக்குறுதிகளை சுட்டிக்காட்டுகிறது.

மோடி மன்மோகன் சிங்கின் கொள்கைகளை அப்படியே பின்பற்றுவதோடு நில்லாமல் மக்கள் மீது மேலும் கூடுதல் சுமைகளை இறக்கி வைப்பார், முதலாளிகளுக்கு ஆதரவாக நடந்து கொள்வார் என்று இதன் மூலம் தெரிய வருகிறது. தொழில்துறை வளர்ச்சி, வேலை வாய்ப்பு உருவாக்கம், விவசாய வளர்ச்சி என அடிப்படை துறைகளில் சுயசார்பு பொருளாதாரத்தை முடக்கிப் போடும் உலக வர்த்தகக் கழகத்தின்  கொள்கைகளை ஏற்றுக் கொண்டிருக்கும் இந்திய அரசு இப்போது ரியல் எஸ்டேட் குமிழிகளை உருவாக்குவதன் மூலம்தான் ஓரிரு ஆண்டுகள் வளர்ச்சி என்று போக்கு காட்ட முடியும்.

ஜெயலலிதா, கருணாநிதி
நவீன நகரங்கள் கட்டுவதற்கான காண்டிராக்டுகளை தத்தமது கட்சிக்காரர்களுக்கு வாங்கித் தர வேண்டும் என்ற அக்கறை இவர்களை மோடியின் கால்களை சுற்றி வரச் செய்கிறது.

அந்த வகையில் 100 நவீன நகரங்கள் அமைக்கப் போவதாக அருண் ஜெட்லி அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பொன்னேரியில் ஒரு நவீன நகரம் அமைக்கப்படவுள்ளது. தமிழகத்தில் திருநெல்வேலி, வேலூர், திருப்பூர் என சிறுநகரங்களை எல்லாம் மாநகராட்சி ஆக்கி ரியல் எஸ்டேட் மதிப்புகளை ஊதிப் பெருக்கி, ஆளும் கட்சியினருக்கு புதிய காண்டிராக்டுகளை வாரி வழங்கியதைப் போல இப்போது இந்த நவீன நகரங்கள் திட்டம் உருவெடுத்து வருகிறது. இதில் நடுத்தர வர்க்கம் தனது ஆயுள் சேமிப்பை கொட்டி விட்டு பிறகு இந்த ரியல் எஸ்டேட் குமிழ் உடையும் போது அதன் சுமையையும் சேர்ந்து சுமக்க வேண்டும்.

காங்கிரஸ் அரசுகள் நேரு, இந்திரா, ராஜீவ் பெயர்களை திட்டங்களுக்கு சூட்டி மக்களுக்கு மொட்டை போட்டதை மாற்றி, 1951-ல் பாரதிய ஜனசங்கத்தை உருவாக்கிய சியாமா பிரசாத் முகர்ஜி பெயரில் RURBAN mission, ஜனசங்க தலைவர் தீன்தயாள் உபாத்யாயா பெயரில் கிராம் ஜ்யோதி யோஜனா, பனாரஸ் இந்து பல்கலைக் கழக ஆசிரியர்  பண்டித மதன்மோகன் மாளவியா பெயரில் புதிய ஆசிரியர் பயிற்சி திட்டம் என்று இந்துத்துவ ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் பெயர்களை சூட்டி மகிழ்கிறார் மோடி. இதில்தான் மோடி அரசின் பட்ஜெட் மன்மோகன் சிங் பட்ஜெட்டுகளிலிருந்து மாறுபடுகிறது.

இதை இன்னும் விரிவுபடுத்தி கோட்சே, பிரக்யா சிங், அசீமானந்தா, ஆஸ்ரம் பாபு, நித்தி போன்ற மேன்மக்கள் பெயரில் திட்டம் வரும் என்று நம்புவோம்.

இந்த பட்ஜெட்டைதான், ‘நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பொறுப்புடன் தயாரிக்கப்பட்டிருப்பதாக’ ஜெயலலிதாவும், ‘மத்திய பட்ஜெட்டில் வரவேற்கத் தக்க அறிவிப்புகளே அதிகமாக உள்ளன’ என்று கருணாநிதியும் வரவேற்றுள்ளனர். நவீன நகரங்கள் கட்டுவதற்கான காண்டிராக்டுகளை தத்தமது கட்சிக்காரர்களுக்கு வாங்கித் தர வேண்டும் என்ற அக்கறை இவர்களை மோடியின் கால்களை சுற்றி வரச் செய்கிறது. ஜெயலலிதாவுக்கோ சொத்துக் குவிப்பு மற்றும் வருமான வரி வழக்கினை முடக்க மோடியின் தயவு தேவைப்படுகிறது. இல்லையேல் ப.சிதம்பரத்தின் பட்ஜெட்டையே இப்படி காக்காய் பிடிப்பாரா என்ன?

ஒரு விஷயம் புரிகிறது. மன்மோகன் சிங்  பிரதமராக இருக்கும் போது பொது மக்களிடம் இருந்து வாங்கிய வசவுகளால மனம் நொந்து போய் மோடியிடம் பேசியிருக்கிறார். ‘எப்படியாவது எனக்கு நல்ல பேரு வாங்கி கொடுங்க’ என்று கெஞ்சியிருக்கிறார்.

பழைய காலத்துல ஒரு கிராமத்துல ஒரு வழிப்பறிக் கொள்ளையன் இருந்தானாம். வழியில போறவங்களை கொள்ளை அடிச்சு எல்லா பொருளையும் பறிச்சுகிட்டு, கட்டிக் கொள்ள ஒரு துண்டு மட்டும் கொடுத்து துரத்தி விடுவானாம். அவனை எல்லா மக்களும் கரிச்சு கொட்டினாங்களாம். அவன் சாகும் போது மகன்கிட்ட, ‘எப்படியாவது ஜனங்க என்ன பாராட்டுற மாதிரி நடந்துக்க’ன்னு சொல்லிட்டு செத்துட்டானாம்.

மகனும் அப்படியே செய்திருக்கான். அவன் வழி மறித்து கொள்ளை அடித்தவர்களுக்கு ஒரு துண்டு கூட கொடுக்காம புடுங்கிகிட்டு, தலையையும் மொட்டை அடிச்சு தொரத்தி விட்டானாம். “இவன் அப்பனாவது பரவாயில்ல, ஒரு துண்டையாவது கொடுத்து அனுப்பினான்” என்று ஜனங்க அப்பன பாராட்ட ஆரம்பிச்சிட்டாங்களாம்.

அது போல மோடி வந்து மன்மோகன் சிங்கை நல்லவன் ஆக்கி கொண்டிருக்கிறார்.

– அப்துல்

மேலும் படிக்க