பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கொலையில், கொலை வழக்கை விசாரித்துக் கொண்டிருந்த விசாரணை அதிகாரிதான் கொலைக் குற்றவாளி என்று உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராம்பூர் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கொலை செய்தது, தடயங்களை அழித்தது, தனது பதவி அதிகாரத்தை பயன்படுத்தி கொலை செய்யப்பட்டவரின் மனைவியை குற்றவாளியாக சிக்க வைத்தது ஆகிய குற்றங்களின் அடிப்படையில் விசாரணை அதிகாரிதான் கொலையாளி என்று நீதிபதி கூறியுள்ளார்.

ஷம்ஷத் மிர்சா என்பவர் ராம்பூரைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர். 2001-ம் ஆண்டு டிசம்பர் 12 அன்று முகமூடி அணிந்து வந்த நான்கு பேர் கொண்ட கும்பலால் அவருடைய வீட்டில் வைத்தே ஷம்ஷத் அடித்துக் கொல்லப்பட்டார். “நள்ளிரவுக்குப் பிறகு முகமூடி அணிந்த 4 பேர் துப்பாக்கிகளுடனும், கோடரியுடனும் வீட்டுக்குள் நுழைந்து தனது தந்தையுடன் சண்டை போட்டு பிறகு அவரை கோடரியால் வெட்டி கொன்றனர்” என்று ஷம்ஷத் மிர்சாவின் மகன் கமால் அகமது மிர்சா புகார் கொடுத்தார்.
ஆனால், ராம்பூர் காவல் நிலைய துணை ஆய்வாளர் ரத்னாகர், “குடும்பத் தகராறு காரணமாக இந்த கொலை நடந்தது” என்று வழக்கு பதிவு செய்து சம்சத் மிர்சாவின் மனைவி ஜஹீதா தபசும் மற்றும் மகன் கமால் அகமதுவை கொலைக் குற்றவாளிகளாக கைது செய்தார். 2002-ம் ஆண்டு ரத்னாகர் தலைமையிலான போலீசார் கமால் அகமதுவை விசாரிக்கிறேன் என்கிற பெயரில் அடித்தே கொன்றனர். ஜஹீதா தபசும் பிணையில் வெளியில் வந்து விட 13 ஆண்டுகளுக்குப் பிறகு உண்மை வெளியாகியிருக்கிறது.
பதிமூன்று ஆண்டுகள் கழித்து ரத்னாகர் என்ற கிரிமினல் தண்டிக்கப்பட்டிருப்பதற்கு நீதி மன்றத்தின் நீதி வழுவாத தன்மை காரணம் அல்ல. வசமாக மாட்டிக்கொண்டதால் நீதிமன்றத்தால் ரத்னாகர் தண்டிக்கப்பட்டிருக்கிறான்.
ஷம்ஷத் மிர்சாவின் மகள் சயீதா ஃபாத்திமா கூறிய சாட்சியத்தின்படி, காவல் ஆய்வாளர் ரத்னாகர் சில ஆபாச புகைப்படங்களுக்கான நெகட்டிவ்களை ஷம்ஷத் மிர்சாவிடம் கொண்டு வந்ததாகவும், அதை டெவலப் செய்ய மறுத்த அவர், நெகட்டிவ்களை எரித்து விட்டதால் ரத்னாகர் தனது ஆட்களுடன் வந்து மிர்சாவை கொலை செய்ததாகவும் தெரியவந்தது. ரத்னாகரின் முகமூடி நழுவிய போது அவரது முகத்தை தான் பார்த்து விட்டதாகவும், ரத்னாகரின் உதவியாளர் விஷாம்பர் தாசையும் பார்த்தாகவும் அவர் தெரிவித்தார்.
வழக்கில் சேர்க்கப்பட்டிருந்த அனைத்து அரசு சாட்சியங்களும் நீதிமன்றத்தில் பிறழ் சாட்சியங்கள் ஆக மாறி, விசாரணை அதிகாரி வெற்றுத் தாளில் தங்களிடம் கையெழுத்து வாங்கியதாக தெரிவித்திருக்கின்றனர். வழக்கில் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்த மிர்சாவின் பக்கத்து வீட்டுக்காரர் உமேஷ் துபே ரத்னாகர் தன்னை மிரட்டி வெற்றுத் தாள்களில் கையொப்பம் பெற்று எதிர் சாட்சியாக்கினார் என்று சாட்சி கூறியுள்ளார்.
வழக்கு டைரியின் சில பக்கங்கள் கிழிக்கப்பட்டிருந்தன. தாயும் மகனும் மிர்சாவை கொல்வதற்கான நோக்கம் எதையும் ரத்னாகரால் தர முடியவில்லை. மிர்சா விஷம் கொடுத்து கொல்லப்பட்டார் என்றால் அதற்கான மருத்துவச் சான்றிதழை நீதி மன்றத்திடம் வழங்க வேண்டும், ரத்னாகர் அதை செய்யவில்லை.
மேலும் ரத்னாகர் 2010-ம் ஆண்டு ஒரு விசாரணைக் கைதியை சிறையில் வைத்து அடித்து கொன்றிருக்கிறார். அந்த வழக்கில் 7 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டு இப்போது பிஜ்னோர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
இந்த காரணங்களால் ரத்னாகர்தான் உண்மை குற்றவாளி என்று நீதிபதி முடிவு செய்திருக்கிறார்.
குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்ட ஜஹீதா மிர்சாவுக்கு இப்போது அறுபது வயதாகிறது. டெல்லியில் வசிக்கிறார். பதின்மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் ஜஹீதாவுக்கு நீதி கிடைத்திருக்கிறது. ஆனால் தனது மகனை கொன்ற வழக்கில் ரத்னாகர் தண்டிக்கப்படும் வரை அவருடைய போராட்டம் முடிந்து விடாது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மதவெறி கலவரங்களை தூண்டி விட்டு பாரதிய ஜனதா பெரும்பான்மை பெற்ற உத்திரபிரதேசத்தில் தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. தற்போது மோடியால் பா.ஜ.க தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் அமித்ஷா உ.பியில் கட்சி பொறுப்பாளராக இருந்திருக்கிறார். இரண்டு முஸ்லீம்களை அடித்து கொலை செய்ததற்கே ஒரு இந்து போலீசு, நீதி மன்றத்தால் தண்டிக்கப்பட்டிருப்பதை அடுத்து ரத்னாகர் ஒரு இந்து தியாகியாக அமித்ஷாவால் அறிவிக்கப்படலாம். இசுலாமிய தீவிரவாதம், ஜிகாதி, பாக் ஐஎஸ்ஐ என்று பீதியைக் கிளப்பி இசுலாமிய மக்களை ஒடுக்கும் அரசு இங்கே ஒரு சிவில் சமூக குற்ற வழக்கில் கூட ஏதுமற்ற ஒரு அப்பாவி முசுலீம் குடும்பத்தை எப்படி சித்திரவதை செய்துள்ளது என்பதைப் பார்க்க வேண்டும். முசுலீம்களை ஒடுக்கவதற்கு பெரிய அளவு தயாரிப்போ, பிரயத்தனங்களோ தேவையில்லை. ஒரு வேளை இங்கே மிர்சா இடத்தில் ஒரு ஏழை இந்து இருந்திருந்தாலும் அவர்களுக்கும் இதே கதிதான் ஏற்பட்டிருக்கும்.
ஏனெனில் போலீசு என்பதே உழைக்கும் மக்களை ஒடுக்குவதற்கு ஆளும் வர்க்கம் வைத்திருக்கும் சட்டபூர்வ அடியாட்படைதான். காவல்துறை உங்கள் நண்பன் என்றெல்லாம் எவ்வளவு முக்கி முக்கி பிரச்சாரம் செய்தாலும் போலீசு என்பது மக்களுக்கானது அல்ல என்கிற உண்மையை இது போன்று பல வழக்குகள் தெரிவிக்கின்றன. இங்கே பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு போலிசு தண்டிக்கப்பட்டால் அப்படி தண்டனை பெறாத பல குற்றவாளிகள் போலிசாகத்தான் இன்னும் பணிபுரிகின்றனர்.
மேலும் படிக்க