privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஐரோப்பாபாதிக்கப்பட்டோர் மன்னிக்கட்டும், பாவிகள் பாவம் செய்யட்டும்

பாதிக்கப்பட்டோர் மன்னிக்கட்டும், பாவிகள் பாவம் செய்யட்டும்

-

பாதிரிகள் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் செய்தி தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. போப்பாண்டவர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்களும் அதற்கான ஆதாரங்களும் வாடிகனிலேயே இருக்கின்றன. மனிதன் தனக்கான துணையை தேடுவதும், பாலியல் நாட்டமும் இயல்பானது மற்றும் தவிர்க்க இயலாதது என அறிவியல் சொல்கிறது. பாதிரியாருக்கு படிக்கும் ஆட்களில் பாதிபேர் இடையிலேயே இறையியல் படிப்பை விட்டு ஓடுகிறார்கள், காரணம் குடும்ப வாழ்வின் மீதான நாட்டம். ஏராளமான விடயங்களில் திருச்சபை தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டிருக்கிறது. அப்படியிருக்கையில் இன்னமும் ஏன் திருச்சபைகள் பிரம்மச்சர்யத்தை வலியுறுத்துகின்றன? திருமணத்தை நீங்கள் அனுமதிக்கும்பட்சத்தில் இத்தகைய பாலியல் குற்றச்சாட்டுக்களை ஓரளவு தவிர்க்கலாமில்லையா?

கத்தோலிக்க ஒழுக்க அறம்
கத்தோலிக்க ஒழுக்க அறம் (படம் : நன்றி cartoonmovement.com )

மேலேயுள்ள நீண்ட கேள்வியை சில மாதங்களுக்கு முன்னால் சந்தித்த பாதிரியார் ஒருவரிடம் கேட்டேன். அவர் ஐரோப்பிய நாடுகளில் படித்தவர், மூன்று கண்டங்களில் பணியாற்றிய நீண்ட அனுபவம் கொண்டவர். அதற்கு இப்படி சுருக்கமாக பதில் சொன்னார், “பிரம்மச்சர்யத்தை கட்டாயமாக்கினால் பாலியல் குற்றங்கள் நடக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதனை சமாளித்துக் கொள்ள முடியும். ஆனால் திருமணத்தை அனுமதித்தால் தேவாலயங்கள் பாதிரிகளின் தனியுடமையாகும் வாய்ப்பு அதிகம். இது சபையின் அடித்தளத்தையே குலைத்துவிடும். ஆகவே பாதிரியார்களும் கன்னியாஸ்திரிகளும் பிரம்மச்சாரிகளாக இருக்க வேண்டும் எனும் நடைமுறையே திருச்சபையின் நன்மைக்கு உகந்தது (இதே கேள்வியை வேறொரு கத்தோலிக்க நண்பரிடம் கேட்ட நிமிடத்திலேயே நட்புக்கு ஃபத்வா போட்டுவிட்டு போய்விட்டார்.)

ஒப்பீட்டளவில் மேற்சொன்ன பாதிரியாரின் பதில் நேர்மையானது. இந்த பதிலின் வாயிலாக நாம் சில உண்மைகளை உணர்ந்துகொள்ள முடியும். முதலாவது, கிருஸ்துவ இறை பணியாளர்கள் மத்தியில் உள்ள பாலியல் குற்றங்களை வாடிகன் நன்கறிந்திருக்கிறது, அதனை தெரிந்தேதான் அனுமதிக்கிறது. இரண்டாவதாக அறிவியல், யதார்த்தம் என்பதைத் தாண்டி தேவாலயம் எனும் சொத்தைப் பாதுகாப்பதன் மூலமே தங்கள் மதத்தை பாதுகாக்க இயலும் என திருச்சபை நிர்வாகம் கருதுகிறது. அந்த சொத்தைப் பாதுகாப்பிற்காக தமது பக்தர்கள் பாதிக்கப்படுவதையும் சபை கண்டுகொள்ளாது.

கோவணத்தை இறுக்கி கட்டினால்தான் கருவூலத்தை பத்திரமாக காப்பாற்ற முடியும் என்று தேவனும், திருச்சபையும் கூடிப்பேசியோ இல்லை பார்த்து பட்டோ இப்படி முடிவு செய்திருக்கலாம். ஆனால் ஃபைனான்சைக் காப்பாற்ற செக்சுக்கு தடை எனும் இந்த முடிவை, “செக்சுக்கு மட்டும் அனுமதி, ஃபேமிலிக்கு இல்லை” என்று மாற்றினால் திருச்சபை மானம் மீளுமா? உடனே குடும்பம் இல்லாமல் பாலியல் உறவு எப்படி சாத்தியமென்றால் நம்மைப் போன்ற ‘ஒழுக்கவாதிகளிடம்’ பதில் இல்லை. போகட்டும் துறைசார் வல்லுநர்கள் நிறைய பேர் இருக்கிறார்களே ஐயா?

சுதந்திரப் பாலுறவு பேசும் பின் நவீனத்துவ பிதாமகன்கள் பலர் அமெரிக்கா முதல் ஆண்டிப்பட்டி வரை பேச மேடையில்லாமல் தவிக்கிறார்களே, அவர்களிடம் ஆலோசனை கேட்கலாமே?  ஆனால் ஒன்று, சொத்துடைமை குறித்த உறவுகள்தான் இந்த உலகின் பண்பாட்டு கட்டமைப்பை உருவாக்குகிறது என்று கம்யூனிஸ்டுகள் சொல்வதற்கு இப்படி ஒரு ‘சான்று’ காட்டுவது கொஞ்சம் ‘சரியில்லை’ என்றாலும் பரிசீலியுங்கள்.

சென்ற வாரத்தில் போப் பிரான்சிஸ் பாதிரியார்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான ஆறு சிறார்களை சந்தித்திருக்கிறார். அதுமட்டுமல்ல சமீபத்தில் லா ரிபப்ளிகா எனும் இத்தாலிய தினசரி பத்திரிக்கைக்கு தந்த நேர்காணலில் ”இரண்டு சதவிகித பாதிரிகள் சிறார்களோடு உறவு கொள்ளும் இயல்பு கொண்டவர்கள்” என குறிப்பிட்டிருக்கிறார் (இது பிஷப்புகளையும் கார்டினல்களையும் உள்ளடக்கிய எண்ணிக்கை, ஆனால் இத்தகைய அத்துமீறல் செய்யும் நபர்கள் மீதான நடவடிக்கை பற்றி பிரான்சிஸ் எதையும் குறிப்பிடவில்லை). இதற்கு முன்பும் ஒருமுறை ஏழை பணக்கார பாகுபாடு கடுமையாக அதிகரிப்பதை கண்டிக்கும் விதமாக பிரான்சிஸ் பேசியிருக்கிறார். அவரை கம்யூனிஸ்ட் போப் என சில ஊடகங்கள் வர்ணித்த கதையும் நடந்தது. போப் பிரான்சிஸின் இத்தகைய நடவடிக்கைகள் பார்க்கையில் வாடிகன் ஒரு புரட்சிகரமான மாற்றத்துக்கு தயாராவதைப்போல தோன்றலாம்.

போப் - பாலியல்

ஆனால் மதங்களின் வரலாறு இது அவர்களின் உயிர் பிழைக்கும் உபாயம் என்பதற்கான நிரூபணங்களைக் கொண்டிருக்கிறது. கிருஸ்துவத்தின் சமீபத்தைய ‘கலகப்’பிரிவான பெந்தகொஸ்தே 1930-களில் அமெரிக்காவில் உருவான பொருளாதார பெருமந்தத்தின்போது உருவாக்கப்பட்டது.

ராயல் கத்தோலிக்கப் பிரிவில் திருச்சபை எனும் மத நிறுவனம் வலுவானது மற்றும் அதிமுக்கியமானது, அங்கே இயேசுகூட இரண்டாம்பட்சமே. இன்னொரு பிரிவான சி.எஸ்.ஐ அத்தனை இறுக்கமான திருச்சபையை கொண்டதல்ல, ஆனால் அங்கும் சர்ச்சின் கட்டுப்பாடு என்பது உண்டு. 1930 பொருளாதார நெருக்கடியின்போது இவ்விரண்டு பிரிவுகள் போதுமானதாக இல்லை.

அப்போது உலகில் மிகவேகமாக வேர்விட்ட கம்யூனிசத்தின் பக்கம் மக்கள் சென்றுவிடாமல் தடுக்க இன்னும் எளிமையான கட்டுப்பாடுகளற்ற ஒரு பிரிவு தேவைப்பட்டது. அதற்காக இறக்கிவிடப்பட்டதுதான் நாம் இப்போது அல்லேலூயா கோஷ்டி என குறிப்பிடும் பெந்தகோஸ்தே பிரிவினர். 1930 நெருக்கடியின் போது அமெரிக்காவில் ஒருபுறம் கோதுமையை கடலில் கொட்டிய முதலாளிகள் மறுபுறம் கஞ்சித் தொட்டிகளை திறந்த கையோடு, ஆமென் ஆசிர்வாதத்திற்கு பெந்தகோஸ்தேக்களை பயன்படுத்தினர். ஆத்திரம் அடைந்த மக்களை டாஸ்மாக் இல்லாமலே போதையேற்றி சாந்தி கொடுப்பதில் பெந்தகோஸ்தேக்கள் வல்லவர்கள். இதனாலேயே இந்த ‘கலகப்’பிரிவு மீது பாரம்பரிய திருச்சபைகள் கடும் வெறுப்பில் உள்ளன.

அல்லேலுயாவில் தேவாலயத்துக்கோ, பிரார்த்தனைக்கோ எவ்விதமான வரையறையும் கிடையாது. நீங்கள் திருச்சபையை நிராகரிக்கிறீர்களா, பரவாயில்லை அங்கே பிரார்த்தனையை தொடரலாம் (ஆர்.சியில் அது சாத்தியமில்லை). நீங்கள் பைபிளை குப்பை என்கிறீர்களா, அதனாலொன்றும் தோஷமில்லை, நீ கடவுளை நம்பு, பைபிள் வெறும் கருவிதான் என்பார்கள். இதில் சர்ச் ஆரம்பிப்பது பெட்டிக்கடை ஆரம்பிப்பதைவிட சுலபம். நீங்கள் விரும்பும் வகையிலான எல்லா ஆப்ஷன்களும் இங்கே கிடைக்கும் ஆனால் நீ கடவுளை கைவிட்டுவிடாதே என்பதுதான் கிருஸ்துவம் தனது உட்பிரிவுகள் மூலம் சொல்லும் செய்தி.

மதத்தை விட்டு மக்கள் வெளியேறிவிடாமல் இருக்க மதம் எத்தகைய சமரசத்துக்கும் இறங்கிவரும். எந்த மதமும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆடு, மாடு, குதிரை என சகல ஜந்துக்களையும் வளைத்து வளைத்து சாப்பிட்ட ஆரிய மதம் (சமகால வழக்கின்படி இந்து மதம்) பவுத்த மற்றும் சமண மதங்களோடு போட்டிபோட இயலாமலும் கால்நடைகளை பறிகொடுத்த மக்கள் குழுக்களின் கலகங்களினாலும் புலாலுண்ணாமை எனும் கொள்கையை சுவீகரித்துக் கொண்டது அல்லது  சுவீகரிக்க நிர்ப்பந்திக்கப்பட்டது. புலாலுண்ணாமையை வலியுறுத்திய புத்தமதம் சீனா போன்ற நாடுகளில் அதனை கைவிட்டுவிட்டது, அங்கே சாப்பாட்டில் ஒதுக்கப்படும் ஜீவராசி என்று அனேகமாக ஏதுமில்லை.

கடவுளாலும் கட்டுப்பாடுகளாலும் இனி தாழ்த்தப்பட்ட மக்களை பிடித்துவைக்க முடியாதோ எனும் சந்தேகம் வந்தபிறகு சங்கராச்சாரி சேரிகளில் உள்ள கோயில்களுக்கு பயணம் போகிறார் (ஆனால் யாரும் தொட்டுவிடாதபடி கால்கள் போர்வைகொண்டு மூடப்பட்டது, குளிச்சிட்டு கோயிலுக்கு வாங்கோ எனும் எகத்தாள அருள்வாக்கு தரப்பட்டது). உலகெங்கிலும் இஸ்லாமிய மதத்தில் நீக்கமற நிறைந்திருக்கும் தர்கா எனும் சமாதி வழிபாடு தமிழக இசுலாமியர்களிடையேயும் இருக்கிறது. அதனை தவ்ஹீத் ஜமாத் போன்ற வகாபியிச மதவாதிகள் எதிர்க்கிறார்கள்.

முன்பு நிலப்பிரபுத்துவம் மதங்களுக்கு சோறூட்டி வளர்த்தது, அதற்கு பதிலாக மக்களிடமிருந்து நிலபிரபுக்களை மதம் முடிந்த மட்டும் காப்பாற்றியது. இப்போது நிலப்பிரபுக்களின் இடத்தை பெருமுதலாளிகள் நிரப்புகிறார்கள். மக்களைப் பிரித்து வைப்பதன் வாயிலாக செல்வந்தர்களை பாதுகாப்பாக வைப்பதுதான் மதத்தின் பணி. அதனால்தான் எல்லா மதங்களும் பெண்களை இரண்டாந்தர மனிதர்களாக அல்லது அதனினும் கீழாக நடத்துகின்றன. அதன்வாயிலாக மக்கள் பலத்தை சரிபாதியாக குறைக்க இயலும். பெண்கள் பங்கேற்பற்ற சமூகம் ஒரு மலட்டு சமூகமாக, முட்டாள் சமூகமாகவே இருக்கும். பெண்கள் மீது கடும் கட்டுப்பாடுகளை விதிக்கும் இந்தியா மற்றும் அரபு தேசங்கள் அதற்கான வாழும் உதாரணங்கள்.

சிலுவைப்போரில் தொடங்கி இரண்டாம் உலகப்போர் வரை ஐரோப்பா தொலைத்த ஆண்கள் எண்ணிக்கை கற்பனை செய்ய இயலாத அளவுக்கு அதிகம். அதனால் சமூகத்தில் ஆண்களது பங்கு பல நூற்றாண்டுகளுக்கு மோசமாகி அங்கே பெண்களது சமூகப்பங்கேற்பு என்பது தவிர்க்க இயலாததானது. இன்று ஒப்பீட்டளவில் ஐரோப்பிய சமூகம் முன்னேறியிருப்பதற்கு இதுவும் ஒரு காரணமென்று சமூக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். பெண்ணடிமைத்தனம் என்றால் என்னவென்றே அறியாத பழங்குடி மக்கள் குழுக்கள் பல பாலியல் சமத்துவ பண்பாட்டில் மேம்பட்டவர்களாக இருக்கிறார்கள். இதுமட்டுமில்லாமல் இடத்துக்கு தக்கவாறு பல்வேறு வழிகளில் மதம் மக்களை பிரித்து வைக்கிறது.

பிரார்த்தனை என்பதே கையாலாகாத்தனத்தின் நாசூக்கான வெளிப்பாடுதான். அதனால்தான் ஒரு கடவுளை நம்பி ஏமாறும் ஒரு இந்து அந்த கடவுளின் இருப்பை சந்தேகிக்காமல் இன்னொரு கடவுளை தேடுகிறான். எல்லா முக்கியமான செயலுக்கு முன்பும் ”எனக்காக பிரார்த்தனை செய்” என ஆகப்பெரும்பாலான கிருஸ்துவர்கள் தங்கள் நலன்விரும்பிகளிடம் கோரிக்கை வைக்கிறார்கள். பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்பான இசுலாமியர்களின் நிலைத்தகவல்களைப் பாருங்கள், அனேகமாக அவை இஸ்ரேலை இறைவன் தண்டிப்பான் என்பதாகவே இருக்கும்.

நாகரீகமடைந்த மனிதனை காட்டுமிராண்டியாக்கும் வல்லமை மதத்துக்கும் பணத்துக்கும் மட்டுமே உண்டு (மிக அரிதாக உருவாகும் ஆண்ட்டி-சோஷியல் எனும் மனநல குறைபாடு கொண்டவர்கள் காட்டுமிராண்டியாக நடந்து கொள்வார்கள்). உலகில் அதிக கொலைகளுக்கு காரணமாக மதம் மட்டுமே இருந்திருக்கிறது, இருக்கிறது. கடவுளும் மதமும் முற்றிலுமாக மக்களுக்கு விரோதமானவை. போப்பாண்டவரின் மன்னிப்பைப் போன்ற பாசாங்குகளால் அதனை மாற்றிவிட இயலாது. குற்றத்துக்கான பரிகாரமும் குற்றவாளிக்கான தண்டனையும் தரப்படாமல் கேட்கப்படும் வெறும் மன்னிப்பானது பாதிக்கப்படும் நபர்களுக்கு இழைக்கப்படும் இன்னொரு அநீதி. அதனை வாடிகன் தொடர்ந்து செய்யும்.

ஆகவே மதத்துக்குள் புரட்சி செய்து அதன் அநியாயங்களைக் களைவது என்பது சாத்தியமே இல்லை. ஆனால் புரட்சி செய்து மதத்தைக் களைவது நிச்சயம் சாத்தியம்.

–    வில்லவன்.