Tuesday, May 28, 2024
முகப்புஉலகம்அமெரிக்காநஜி அல் அலி: பாலஸ்தீன் ஹந்தாலாவைக் கொல்ல முடியாது !

நஜி அல் அலி: பாலஸ்தீன் ஹந்தாலாவைக் கொல்ல முடியாது !

-

“அமெரிக்காவைப் பற்றி அரபு மக்கள் என்ன நினைக்கிறார்கள் எனத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் நஜி அல்-அலியின் கேலிச் சித்திரத்தை பார்த்தாலே போதும்” என்று எழுதியது நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை. “கேலிச்சித்திரம் வரைபவர்களில் முதுகெலும்புள்ள தைரியசாலிகளில் முதன்மையானவர் அவர்” என்றது டைம்ஸ் பத்திரிகை. “தனது கேலிச் சித்திரங்களை பாஸ்பாரிக் அமிலம் கொண்டு வரைகிறார்” என்றது ஜப்பானிய தேசிய நாளிதழ் அசாஹி. “பதினெட்டாம் நூற்றாண்டு துவங்கி இதுவரையில் வந்தவர்களில் தலைசிறந்த கேலிச் சித்திரக்காரர்” என்று அவரது மறைவுக்கு பிறகு 1988-ல் தங்கப் பேனா பரிசை அளிக்கையில் சர்வதேச நாளிதழ் வெளியிடுவோர் சங்கம் கூறியது.

இப்படிப்பட்ட பெரும்பெயர் வாய்ந்த நஜி அல்-அலி என்ற பாலஸ்தீன கேலி சித்திரக்காரர் தனது கூர்மையான அரசியல் கார்ட்டூன்களுக்காக இசுரேலின் மொசாத் உளவாளியால் 1987 ஜூலை 22 அன்று தனது 49-வது வயதில் லண்டனில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

ஹந்தாலா
ஹந்தாலா

இன்றைக்கும் அவர் தீட்டிய ஹந்தாலா என்ற கற்பனை குழந்தை பாத்திரம் உலகெங்கிலும் அமெரிக்க எதிர்ப்பு போராளிகளின் முதன்மையான கதாபாத்திரமாக இருக்கிறது. பின்புறம் மடித்த கைகளை காட்டியபடி நிற்கும் அந்த பத்து வயது சிறுவனது உடைகள் கிழிந்திருக்கின்றன. காலில் செருப்பு இல்லை. தலை முடி அலங்கோலமாக இருக்கிறது. அகதி முகாமில் இருக்கும் பத்து வயது சிறுவன்தான் ஹந்தாலா. அவன் தன் தாயகத்தை அடையும் வரை வளர மாட்டான். தனித்துவமானவன் அவன். அவனது புறங்கை மடிப்பு என்பது வெளியில் இருந்து வரும் தாயகத்திற்கான அமெரிக்க பாணி தீர்வுகளை மறுப்பது, அதாவது சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கை.

ஹந்தாலா என்ற அரபுச் சொல்லுக்கு கசப்புத்தன்மை என்று பொருள். “நான் எனது கடமையில் இருந்து தவறாமல் இருப்பதற்கான எனது ஆன்மாவின் குறியீடாக ஹந்தாலா இருந்தான்” என்று தான் வடித்த அந்த பாத்திரத்தைப் பற்றி நஜி அல்-அலி குறிப்பிட்டிருக்கிறார். அந்த வகையில் அந்த சிறுவன் ஒரு கேலிச்சித்திரப் பாத்திரம் மட்டுமல்ல, போராளிகளது பொறுப்புணர்வின் குறியீடாகவும் இருந்தான்.

அலியின் கார்ட்டூன்களில் வசனங்கள் மிகவும் குறைவு. ஆனால் அனைவருக்கும் புரியும்படியான எளிமையான படங்களுடன், அழுத்தமான கோடுகளாலும் அவை மக்களிடையே புயல் வேகத்தில் பரவின. முதலில் வெறும் பார்வையாளனாக மட்டுமே இருந்த ஹந்தாலா அவரது பிற்கால கேலிச்சித்திரங்களில் எதிரிகளின் ராணுவத்துக்கெதிராக கல்லெறிபவனாகவும், பேனாவையே வாளாக மாற்றி ஏந்துபவனாகவும் மாறத் துவங்கினான்.

அலியின் பாத்திரங்களில் பெரும்பாலும் அரசியல் தலைவர்கள் யாரும் நேரடியாக இருக்க மாட்டார்கள். அதற்கு பதிலாக நல்லவர்கள், கெட்டவர்கள் என்பதை உருவகப்படுத்த சில பாத்திரங்களை மாத்திரம் படைத்தார் அலி. ஹந்தாலா அந்த வகையில் போராடும் சிறுவனாக, சற்றேறக்குறைய அவரது வாழ்க்கையின் பாத்திரத்தையே பிரதிபலிப்பவனாக இருந்தான்.

நஜி அல் அலி
நஜி அல் அலி

ஆம். 1936-ல் அல்-சஜரா என்ற பாலஸ்தீனிய கிராமத்தில் பிறந்த அலி பன்னிரெண்டு வயதில் 1948-ல் அங்கிருந்து குடும்பத்தோடு லெபனானில் உள்ள எய்ன் அல்-ஹில்வா அகதி முகாமிற்கு கட்டாயமாக குடிபெயர வேண்டியதாகிறது. ஆம், அப்போது தான் இசுரேல் என்ற தேசம் பாலஸ்தீனத்தை சூறையாடி உருவாக்கப்பட்டது. ஏறக்குறைய 480 பாலஸ்தீனிய கிராமங்கள் அருகில் உள்ள நாடுகளுக்கு குடிபெயர்ந்த  சோகத்தில் இருந்த அலி என்ற சிறுவனது தாய்நாடு மீதான ஏக்கத்தில் அதன்பிறகு பத்தாண்டுகள் கழித்து உருவான பாத்திரம்தான் ஹந்தாலா. பிற்காலத்தில் அவரே குறிப்பிட்டது போல உலகெங்கிலும் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள், தேசங்கள் அனைவரின் பிரதிநிதியாக ஹந்தாலா மாறினான். ஒடுக்கப்படுவோரின் விடுதலை வேட்கைக்கு மதம், மொழி, இனம் என எந்த வேறுபாடுமில்லை.

அறுபதுகளில் உருவான அரபு தேசிய இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட அலி அதில் இருந்த மார்க்சிய லெனினிய குழுக்களுடன் அடையாளப்படுத்திக் கொண்டார். அரபு இளைஞர்கள் பலரும் அறுபதுகளில் வீதிக்கு வந்து போராடத் துவங்கினர். லெபனான் நாட்டின் சுவர்களில் கேலிச்சித்திரங்களை வரைவது எனத் துவங்கிய அரசியல் நடவடிக்கை காரணமாக கைது செய்யப்பட்ட இவர் சிறையில் இதனை மேலும் கூர்மையான அரசியல் விமர்சன ஆயுதமாக பயன்படுத்த முடியும் என்பதை கண்டுகொண்டு, சிறைச் சுவர்களில் எல்லாம் கேலிச்சித்திரங்களைக் கரித்துண்டுகளைக் கொண்டு தீட்டத் துவங்கினார். அங்கு அவரது சித்திரங்களைப் பார்த்த இன்னொரு போராளியும், பத்திரிகையாளருமான ஹாசன் கனாஃபினி இவரது ஓவியங்களை பெய்ரூட்டில் இருந்த வெளியாகும் ஹுரியா பத்திரிகையில் வெளியிட உதவி செய்தார். விடுதலையான அலி பெய்ரூட்டிலும் ஷாட்டிலா அகதி முகாமில் ஒரு அகதியாக இருந்தபடி சின்ன சின்ன வேலைகளுக்கு சென்று வந்தார்.

1957-ல் ஒரு கார் மெக்கானிக்காக படித்துவிட்டு சவுதிக்கு சென்ற அவருக்கு தோட்ட வேலைகள்தான் கிடைத்தன. ஒரு அகதி என்பதால் மறுக்கப்பட்ட வாய்ப்புகளை அவரும் எதிர்கொள்ள நேர்ந்தது. பின்னாட்களில் அவரது கேலிச் சித்திரங்களில் வாய்ப்பு மறுக்கப்பட்ட சாதாரண அராபியர்கள் வருவதற்கு இதுவும் ஒரு தூண்டுகோலாக இருந்திருக்கலாம். 1960-ல் லெபனான் திரும்பிய அவர் அங்கு ஓவியக்கலையைப் பயிலத் துவங்கினார். ஆனால் அரசியல் போராட்டங்களில் ஈடுபட்டு சிறை செல்ல நேர்ந்த காரணத்தால் படிப்பை பாதியிலேயே கைவிட வேண்டியதாயிற்று.

கல்லெறியும் ஏசு1960-61-ல் அரபு தேசிய இயக்கத்தில் இருந்த தனது தோழர்களுடன் இணைந்து ‘அழு குரல்’ என்ற கையெழுத்துப் பிரதியை நடத்தத் துவங்கினார். 1963-ல் குவைத் வந்தவர் மீண்டும் கெய்ரோ அல்லது ரோமில் போய் கலை சார்ந்த படிப்புகளை தொடர வேண்டி வேலைகளுக்கு செல்லத் துவங்கினார். அல்-டாலி என்ற அரபு தேசிய நாளிதழ் ஒன்றில் ஆசிரியர், கேலிச் சித்திரக்காரர், வடிவமைப்பாளர் எனப் பல வேலைகளைப் பார்க்கத் துவங்கினார். 1968 முதல் அல்-சியாஸா என்ற பத்திரிகையில் வேலை பார்த்தவர், 1974-ல் லெபனான் திரும்பி அல்-சபீர் என்ற பத்திரிகையில் வேலை செய்யத் துவங்கினார்.

1982-ல் லெபனானை இசுரேல் ஆக்ரமித்தபோது சில நாட்கள் இசுரேலிய ராணுவத்திடம் கைதியாக இருந்தவர் அப்போது வரைவதை நிறுத்த வேண்டியதாயிற்று. பிற்காலத்தில் கருத்துரிமைக்கான அவரது ஓவியங்களில் சைலன்ஸ் என்ற குறியீடுகள் அதிகரித்தன. பிறகு 1983-ல் அவர் குவைத் நாட்டுக்கு இடம்பெயர நேர்ந்தது. சவுதி அரேபியா போன்ற நாடுகளின் நெருக்குதல் காரணமாக 1985-ல் லண்டனுக்கு குடிபெயர்ந்த அலி கடைசியில் மொசாத்திற்கு வேலை பார்த்த ஒரு பாலஸ்தீன துரோகியால் பத்திரிகை அலுவலகத்துக்கு வெளியே வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். கார்ட்டூனிஸ்டான அவரது வலது கண்ணை குறிவைத்து அவன் சுட்டான்.

போராளிகளின் ஓவியத்தை கூட ஆக்ரமிப்பாளர்களால் அனுமதிக்க முடியாது என்பதற்கு எடுத்துக்காட்டாக இத்தாக்குதல் அமைந்திருந்தது. அதற்கு இரு வாரங்களுக்கு முன்புதான் யாசர் அராபத்தையும், அவரது பெண் தோழியையும் பற்றி ஒரு கார்ட்டூன் வரைந்த காரணத்துக்காக அவருக்கு கொலை மிரட்டல் வந்திருந்தது.

ஃபாத்திமா

அமெரிக்க ஏகாதிபத்தியம், இசுரேலின் அடாவடித்தனம், அரபு நாடுகளின் அடிமைத்தனம் என எல்லாவற்றையும் தனது கேலிச் சித்திரங்களால் சாடிய அலியின் கார்ட்டூன்களில் சிலவற்றை எதிரிகளால் நிச்சயமாக ஜீரணிக்கவே முடியாது. சிலுவையில் அடிக்கப்பட்ட ஏசுநாதர் தன் கைகளை விடுவித்துக் கொண்டு கல்லெறியும் காட்சியும், அரபு நாடுகளில் உள்ள ஷேக்குகளின் வாய்க்கு யு.எஸ் என்ற ஜிப் வைத்து பூட்டப்பட்டிருப்பதையும், அரபு பெண்களை இசுரேல் ராணுவம் குதறுவதையும், அகதி குழந்தைகள் பற்றிய கார்ட்டூன்களையும் பார்ப்பவர்கள் நிச்சயமாக எதிரியாக இருக்கும் பட்சத்தில் அல்-அலியை மன்னிக்க வாய்ப்பே இல்லை.

மறுபுறம் அரசியல் உணர்வற்ற நடுத்தர வர்க்கத்தினரின் மனசாட்சியை கிளறும் வகையிலும் அக்கேலிச்சித்திரங்கள் பேசுகின்றன. மக்களுக்கோ தமது அடக்கப்பட்ட குரலின் ஓங்கிய முழக்கமாக அவரது கேலிச்சித்திரங்கள் உணர்வூட்டின. உலகெங்கிலும் உள்ள ஜனநாயக சக்திகளுக்கோ அல்-அலியின் ஓவியங்கள் பாசிசத்திற்கெதிரான போராட்டத்திற்கு உதவும் படைக்கலன்களாக மின்னின.

கருப்பு வெள்ளையில் தனது பாத்திரங்களை படைத்திருக்கும் நஜி அல்-அலி அவற்றை பெரும்பாலும் நல்லது-கெட்டது, அழகு-அவலட்சணம், ஏழ்மை-ஊதாரித்தனம், நீதி-அநீதி, வலிமை-கையறுநிலை, தியாகம்-சந்தர்ப்பவாதம், இருள்-வெளிச்சம் என முரண்பாடுகளை காட்சிப்படுத்தியே அரசியலை மக்கள் முன்வைத்தார். இழந்த தாயகமான பாலஸ்தீனம், அகதிகள் முகாம், தாயகம் திரும்புதல் என்பதன் அடையாளமாக பாத்திமா என்ற தாய் பாத்திரத்தை தாயகத்தின் குறியீட்டாக பதிய வைத்திருந்தார் அலி. பாத்திமாவின் கண்ணீர் துளிகளும், அவள் மூடியிருக்கும் துப்பட்டாவின் கருப்பு வண்ணமும் துயரத்தின் சாயலை கூட்டும் வண்ணம் சித்திரம் வரையப்பட்டிருக்கும். அவளது கழுத்துப் பகுதியில் அநேகமாக பழங்காலத்து வீட்டின் பழைய பாணி திறவு கோல் ஒன்று சங்கிலியுடன் பிணைக்கப்பட்டிருக்கும். வீடற்ற அகதிகளின் குறியீடாக, நாடற்ற மக்களின் ஏக்கமாக அந்த திறவுகோல் அவரது கார்ட்டூன்களில் நீங்காத இடம்பெற்றிருக்கும்.

ref7பாலஸ்தீனத்தை பங்குபோட நினைத்த அரபு நாடுகளின் சகோதர துரோகத்தை சில இடங்களில் சுட்டிக் காட்டியிருந்த போதிலும், அரபு ஒற்றுமையையும் அவரது கார்ட்டூன்கள் வலியுறுத்தின. அதே நேரத்தில் அங்குள்ள சாதாரண அரபு மக்களுக்கும், ஷேக்குகளுக்கும் உள்ள வர்க்க முரண்பாட்டை தோலுரிக்கவும் செய்தார். அங்குள்ள ஆட்சியாளர்கள் மனித உரிமைக்கெதிராக இருப்பதையும், ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டு மக்கள் அடிமைகளாக இருப்பதையும் சுட்டிக்காட்டும் அவரது கார்ட்டூன்களில் சிறுவர்களும், பெண்களும் தொடர்ச்சியாக பாதிக்கப்படுபவர்களாக, எளியவர்களாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றனர். போர் நடக்கும் பாலஸ்தீன பகுதியில் இது எதார்த்தம் என்பதால் இதனை வரைவதை தவிர வேறு வழி அவருக்கு முன் இல்லை. எனினும் தனிநபர்களின் அர்த்தமற்ற துயரங்களை பரிசீலிக்கும் இலக்கிய மேட்டிமைத்தனத்தில் ஒருபோதும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை.

இத்துடன் நல்லவனுக்கு குறியீடாக அல் சலாமா என்ற சாதாரண அரபு முதிய மனிதனை காட்டியிருப்பார். கிழிசலான உடையும், மொட்டைத் தலையும், உயரமானவனாகவும் காட்டப்படும் அந்த ஏழை அரேபியன் பெரும்பாலும் அகதி, கிறிஸ்தவன், இசுலாமியன் என எல்லா தரப்பிலும் அல் சலாமா இருப்பதாக காட்டியிருப்பார். தீயவர்களாக அமெரிக்க முதலாளிகள், அரபு ஷேக்குகளை காட்டும்போது அவர்களுக்கு கால்களே இருக்காத (வெளியே தெரியாத) அளவுக்கு குண்டாக இருப்பார்கள். பார்த்தாலே பூதங்களைப் போன்ற தோற்றம் தரும் அழகற்ற மனிதர்களாக அவர்களை சித்தரித்திருப்பார்.

யாசர் அராபத் அணிந்திருக்கும் சால்வைதான் பாலஸ்தீனின் அடையாள வண்ணமாக இருக்கும். குப்பியா என்றழைக்கப்படுத் அந்த துணியை பெண்கள் அணிந்தால் அது நல்லவர்கள், பாதிக்கப்படுபவர்களை குறிப்பதாகவும், நாகரிக கோமான்களான ஆண்கள் தொப்பி செய்து அணிந்திருந்தால் கெட்டவர்களாகவும் அவரது கார்ட்டூன்கள் காட்டின.

அவரது ஒரு கார்ட்டூனில் அல் சலாமாவை நோக்கி ஒரு குண்டு தீயவன் (அமெரிக்க எண்ணெய் முதலாளிதான்) “நீ யார் ஷியாவா, சன்னியா” என்று கேட்பான். பதிலுக்கு அல் சலாமா “நான் அராபியன்” என்பான், அல்லது “பசியோடிருப்பவன்” என்பான். இன்னொரு கார்ட்டூனில் அல் சலாமா “மன்னர்களின் கடவுள்களை மக்களும் வழிபடுவது தான் சரி” என்று அப்பாவியாக சொல்வான். பதிலுக்கு ஹந்தாலா “நாங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்” என்று புதிய சமூகத்தின் பிரதிநிதியாக காட்சியளிப்பான். இதெல்லாம் அரபு நாடுகளில் இருந்து கொண்டே போராடி போராடி, கொலை மிரட்டல்களை நாள்தோறும் சந்தித்து சந்தித்து, நாடுகளின் நாடு கடத்தல்களையும் மீறி வரைந்து சாதித்தவை என்பதை நினைக்கையில் ஆச்சரியமாகவும், காலம் கடந்த பிறகும் வியப்பாகவும் இருக்கிறது.

ref5பெரும்பாலான அவரது ஓவியங்களுக்கு வசனங்கள் தேவைப்படவில்லை அல்லது குறைவாக மட்டுமே தேவைப்பட்டன. முட்கம்பிகளை பிய்த்து அதன் நடுப்பகுதியை மண்ணில் நட்டி அதில் ஆலிவ் மலரை செருகி வைப்பாள் பாத்திமா, மறுபுறம் இருக்கும் இருண்ட வானத்தில் பிறை நிலவு மாத்திரம் வெள்ளையாக இருக்கும், ஹந்தாலா அதனை நோக்கி கையில் இருக்கும் கல்லை எறிய ஆயத்தமாவான். இதற்கெல்லாம் பொழிப்புரை தேவையில்லை. அதனால்தான் அவர் இறந்து முப்பது ஆண்டுகள் ஆன போதிலும் இப்போதும் ஹந்தாலா மீண்டும் மீண்டும் அரபு நாடுகளில் போராடும் மக்களிடையே பிரபலமாக இருக்கிறான்.

ஜூலை 22 அவர் சுடப்பட்ட நாள். மரணத்துக்கு சில நாட்களுக்கு முன் அவரது கார்ட்டூன் ஒன்று அவரது மரணத்தை முன்னறிவித்தது. அதில் “சாக விரும்புகிறீர்களா அல்லது வாழ விரும்புகிறீர்களா” என்ற எச்சரிக்கையுடன் ஆட்சியாளர்களின் விளம்பரம் இருக்கும். இதற்கிடையில் அதனை புறக்கணித்து தாய்நாட்டுக்கான ஏக்கத்தை வெளிப்படுத்தும் பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும். அதுதான் ஒரு பாலஸ்தீனத்து அகதியின் நிறைவேறாத தாயகத்திற்கான குரல். அதுதான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கலைஞன் வெளிப்படுத்தும் கடைசிக் குரலாகவும் இருக்க முடியும் என்பதை தன் வாழ்நாளில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமல் வாழ்ந்து காண்பித்து, அதனால் ஏற்பட்ட மரணத்தையும் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்ட அல்-அலி நிரூபித்து விட்டு சென்றிருக்கிறார்.

நாளிதழின் கடைசிப் பக்கத்தில் தான் அவரது கார்ட்டூன்கள் வெளியாகும். ஆனால் சாமானிய மக்களின் முதற்பக்கமாக அந்த கடைசிப் பக்கங்கள் மாறின. பாத்திமா ஒரு விடுதலைப் போராளியாகவும் இவரது கார்ட்டூன்களின் அந்த முப்பதாண்டு கால வளர்ச்சியில் பாத்திரமேற்க துவங்கினாள். அப்போது உண்மையில் சிறுவர்களோடு சேர்ந்து பெண்களும் நேரடியாக தெருவுக்கு போராட முன்வந்தார்கள் என்பதை நெகிழ்ச்சியோடு தனது நேர்காணல் ஒன்றில் நஜி அல்-அலி நினைவுகூர்ந்திருப்பார். குரலற்ற மனிதர்களின் குரலாகத்தான் தனது கார்ட்டூன்கள் இருப்பதாக அலி குறிப்பிட்டார்.

davidcampaccordபாலஸ்தீன மண்ணில் அரபியர்களின் குரலை உலகம் காதுகொடுக்க மறந்த அல்லது மறுத்த போது தவிர்க்கவியலாமல் அலியின் கார்ட்டூன்கள் அதனை உலகத்தின் காதுகளுக்கும், கண்களுக்கும் கொண்டு சேர்த்தன. அதனால்தான் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை அப்படி சொன்னது. அதனால்தான் எதிரிகள் அவரை கொலை செய்ய நீண்ட காலம் திட்டம் தீட்டினார்கள். 49 வயதில் அவர் இறக்கவும் நேரிட்டது. கடைசி ஆண்டில் மட்டும் ஏறக்குறைய நூறு கொலை மிரட்டல்களை அவர் லண்டன் நகரத்திலேயே சந்திக்க நேர்ந்தது என்றால் அந்தப் போராளியின் மன உறுதியை என்னவென்று சொல்வது..

அவரது பாத்திரமான ஹந்தாலா ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் போன்றவற்றின் பிரதிநிதியாகவே இருந்தான். அதனால் அவன் அகில உலக பிரதிநிதியாக மாறத் துவங்கினான். எகிப்து, வியட்நாம், தென்னாப்பிரிக்கா என இடம்பெயரத் துவங்கினான். பாலஸ்தீனம் என்பதை புவியியல்ரீதியாக தான் குறிப்பிடவில்லை என்றும், அதனை ஒரு மனிதர்கள் வாழும் ஒரு சமூகமாக தான் பார்ப்பதாகவும் அலி குறிப்பிட்டதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. ஆம். அவரே சொல்வது போல அகதி முகாமில் இருந்தவர்கள் யாரும் செல்வந்தர்கள் இல்லை. சிறிதளவு நிலத்தையும் பறிகொடுத்த சாதாரண பாலஸ்தீனியர்கள்தான் பிறகு அகதிகளானார்கள் என்று குறிப்பிடுகிறார் அலி. “பூர்சுவாக்களுக்கு அகதி முகாமில் என்ன வேலை” என்று சுய எள்ளலுடன் கேட்கிறார். முள்வேலி முகாம் வரையிலும் உலகெங்கிலும் கடைசி வரை இந்த வர்க்கத்தினர்தான் அகதிகளாக மீந்து நிற்கிறார்கள் என்பதை பார்க்கும்போது அந்த கலைஞன் கூறியது சரிதான் என்பது இப்போதும் நிரூபணமாகிறது.

fatima7அரபு விடுதலை இயக்கங்களின் ஆயுத வழிபாட்டை எதிர்த்து பேசியவர்களின் மிக முக்கியமான கலைஞன் இவர். “அவர்களது முகாம்களில் ஆயுதங்கள் இருந்த அளவுக்கு அரசியல்ரீதியில் தெளிவு இருக்கவில்லை” என்பதை தனது நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருக்கிறார். பிற்கால அமைதி ஒப்பந்தங்கள் என்ற பெயரில் பாலஸ்தீன விடுதலை இயக்கம் செய்த துரோகங்களை பார்க்கையில் அவரது கூற்று எவ்வளவு தூரம் உண்மையானது என்பதை புரிந்து கொள்ளலாம். அல்-ஹெல்வா பற்றிய அவரது கணிப்பு இது. பின்னாட்களில் அமெரிக்க தீர்வுக்கு அடிபணிந்த பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினரை 1982-ல் தெற்கு லெபனான் பகுதியில் ஊடுருவிய இசுரேலை சமாளிக்க முடியாத கோழைத்தனத்தை எல்லாம் சாடிய அவர் அப்போது பெண்களும், சிறுவர்களும் களமாடியதால், இசுரேலிய ராணுவத்தினர் பன்னிரெண்டு வயது சிறுவர்களைப் பார்த்து பயப்படும் நிலைமை உருவாகியதை கண்டு தான் மகிழ்ச்சியடைந்ததையம் நேர்காணல் ஒன்றில் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறார்.

மீண்டும் அங்கிருந்த சுவர்களில் ‘பாலஸ்தீன புரட்சி நீடூழி வாழ்க’ என்று சிறுவர்களால் எழுதப்படுவது துவங்கியதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறார் அந்த உண்மையான மக்கள் கலைஞன்.

ஆம். நஜி அல் அலி கொல்லப்பட்டிருக்கலாம். ஹந்தாலாவும், ஃபாத்திமாவும் கொல்லப்பட முடியாதவர்களாக இறுதி வரை போராடுவார்கள்.

மேலும் சில கார்ட்டூன்கள் (பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

கௌதமன்