privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காரச்சேலின் கடிதங்கள் - 1 : அம்மா புலம்பலுக்கு மன்னித்துக் கொள் !

ரச்சேலின் கடிதங்கள் – 1 : அம்மா புலம்பலுக்கு மன்னித்துக் கொள் !

-

காசா மீது இசுரேல் நடத்தும் பொருளாதார, இராணுவ தாக்குதல்கள் பற்றிய அனுபவம்

மெரிக்க ஆதரவுடன் பாலஸ்தீன மக்கள் மீது இசுரேல் நடத்தி வரும் ஆக்கிரமிப்பை எதிர்த்து 10 ஆண்டுகளுக்கு முன்பு போராடி உயிர் நீத்த அமெரிக்க இளம் பெண் ரச்சேல் கோரி காசா முனையிலிருந்து அவரது பெற்றோருக்கு அனுப்பிய மின்னஞ்சல்களிலிருந்து : (படங்கள் : இப்போது நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்பானவை)

பிப்ரவரி 20, 2003

அம்மா,

காசா - சிதைக்கப்பட்ட வீடு
காசா நகரின் அல் ஷேக் ரித்வான் பகுதியில் இடிக்கப்பட்ட ஒரு வீட்டை பார்வையிடுன் பாலஸ்தீனர்கள். இந்த வீட்டில் இசுரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஒரு பெண் உட்பட 3 பேர் கொல்லப்பட்டனர்.

காசாவுக்கு போகும் சாலையை இசுரேலிய இராணுவம் இப்போது முழுமையாக தோண்டி போட்டு விட்டது. போகும் வழியில் இருந்த இரண்டு முக்கியமான சோதனைச் சாவடிகளும் மூடப்பட்டு விட்டன.

இதனால், அடுத்த காலாண்டு பல்கலைக்கழக படிப்புக்கு பதிவு செய்ய நினைக்கும் பாலஸ்தீனிய இளைஞர்கள் அதை செய்ய முடியாது.

மக்கள் வேலைக்குப் போக முடியாது.

மறு பக்கத்தில் மாட்டிக்கொண்டவர்கள் வீடு திரும்ப முடியாது.

மேற்கு கடற்கரை கூட்டத்தில் கலந்து கொள்ளவிருந்த சர்வதேச ஆர்வலர்கள் அங்கு போக முடியாது. எங்களது சர்வதேச வெள்ளையருக்கான சலுகைகளை முனைப்பாக பயன்படுத்தினால் நாங்கள் அங்கு போவது சாத்தியமாகலாம். ஆனால், அப்படி முயற்சித்தால் சட்டவிரோதமாக எதையும் செய்திருக்காவிட்டாலும் நாங்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவது நடக்கலாம்.

இப்போது, காசா முனை மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. “காசாவை மறுபடியும் ஆக்கிரமிப்பது” இசுரேலுக்கு உலக அரசியல் ரீதியாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அது நடக்காது என்று கருதுகிறேன். என்ன நடக்கும் என்றால் சர்வதேசத்தின் கவனத்தை கவராத சிறு தாக்குதல்களும், அடிக்கடி உணர்த்தப்படும் “மக்களை இடம் மாற்றுதலும்” நடக்கலாம்.

நான் ராஃபாவிலேயே தங்க முடிவு செய்திருக்கிறேன். வடக்கே போக திட்டமிடவில்லை. ஒப்பீட்டளவில் நான் இங்கு பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறேன். அப்படியே பெரும் அளவில் ஆக்கிரமிப்பு ஆரம்பித்தால் எனக்கு அதிகபட்சம் நடக்கவிருப்பது கைது செய்யப்படுவதுதான்.

அமைதி பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டே அரசியல் கொலை செய்வது, நிலங்களை கைப்பற்றுவது என்ற ஷரோனின் (அப்போதைய இசுரேல் பிரதமர்) உத்தியை விட காசாவை மறுபடியும் ஆக்கிரமிப்பது உலக அளவில் பல மடங்கு அதிகமான கண்டனங்களை எதிர் கொள்ளும். தற்போதைய அணுகுமுறையில் எல்லா இடங்களிலும் குடியிருப்புகளை உருவாக்குவது சிறப்பாக நடந்து வருகிறது; பாலஸ்தீன சுய நிர்ணய உரிமைக்கான சாத்தியங்கள் அனைத்தும் ஒழிக்கப்பட்டு வருகின்றன.

காசா - தப்பி ஒடும் மக்கள்
இசுரேல் தாக்குதலுக்கு உள்ளான காசா நகரத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள சஜய்யா நகரிலிருந்து தப்பி ஓடும் மக்கள்.

அன்பான பாலஸ்தீனர்கள் பலர் என்னை கவனித்துக் கொள்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள். எனக்கு ஒரு சிறு ஃபுளூ காய்ச்சல் வந்திருந்த போது அதை சரி செய்வதற்கு பல குடும்பங்களிடமிருந்து எலுமிச்சை பானங்கள் வந்தன. இதுவரை நாங்கள் தூங்கும் கிணற்றின் சாவியை வைத்திருக்கும் பெண் உன்னைப் பற்றி இன்னும் விசாரித்தார். அவருக்கு ஒரு துளி கூட ஆங்கிலம் பேச வராது. ஆனால் எனது அம்மாவைப் பற்றி அடிக்கடி விசாரிப்பதோடு, நான் உனக்கு தொலைபேசுகிறேன் என்று உறுதி செய்து கொள்கிறார்.

உனக்கும் அப்பாவுக்கும், சாராவுக்கும் கிறிசுக்கும் எல்லோருக்கும் எனது அன்பு.

ரச்சேல்

பிப்ரவரி 27, 2003

(அவரது அம்மாவுக்கு)

உன்னை நேசிக்கிறேன். உண்மையிலேயே உன்னை தேடுகிறது. நம் வீட்டுக்கு வெளியில் டாங்குகளும், புல்டோசர்களும் நிற்பதாகவும் நானும் நீயும் வீட்டுக்குள் இருப்பதாகவும் கெட்ட கனவுகள் காண்கிறேன்.

பரபரப்பான நிலைமை தோற்றுவிக்கும் சுரப்பிகள் (அட்ரீனலின்) அமைதிப் படுத்தும் மருந்தாக பல வாரங்களுக்கு வேலை செய்கின்றன. ஆனால் சில சமயம் மாலை நேரங்களில், நிலவரத்தின் தீவிரம் சிறிதளவு என்னை தாக்குகிறது. இங்கு உள்ள மக்களுக்காக உண்மையிலேயே மிகவும் அச்சப்படுகிறேன்.

நேற்று ஒரு அப்பா தனது இரண்டு குட்டிக் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியில் போவதை பார்த்தேன். அவர்கள் அப்பாவின் கைகளை பிடித்துக் கொண்டு டாங்குகள், தொலைதூர துப்பாக்கிச் சூடு கோபுரங்கள், புல்டோசர்கள், இராணுவ ஜீப்புகளின் பார்வையின் கீழ் நடந்து செல்கிறார்கள். அவரது வீடு வெடி வைத்து தகர்க்கப்படப் போகிறது என்று அவர் நினைத்திருக்கிறார்.

காசா - துயரம்
இசுரேலி தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்ட கேலானி குடும்பத்தின் உறவினருக்கு ஆறுதல் சொல்லும் அண்டை அயலார்.

ஜென்னியும் நானும் இன்னும் பல பெண்களுடனும் இரண்டு கைக்குழந்தைகளுடனும் அந்த வீட்டில் தங்கியிருந்தோம். நாங்கள் மொழிபெயர்ப்பில் செய்த தவறினால், அவரது வீடுதான் இடிக்கப்படப் போவதாக நினைத்து விட்டார். உண்மையில், பாலஸ்தீனிய எதிர்ப்புப் படையினரால் வைக்கப்பட்ட ஒரு வெடிகுண்டை அவரது வீட்டுக்கு அருகில் உள்ள நிலத்தில் இசுரேலிய இராணுவம் வெடிக்கவிருந்தது.

இந்தப்பகுதியில் ஞாயிற்றுக் கிழமை சுமார் 150 ஆண்கள் சுற்றி வளைக்கப்பட்டு குடியிருப்பு வெளியே அடைத்து வைக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் தலைக்கு மேலும், அவர்களைச் சுற்றிலும் துப்பாக்கிக் குண்டுகள் பறந்து கொண்டிருந்தன. டாங்குகளும், புல்டோசர்களும் 300 பேருக்கு வாழ்க்கை அளித்து வந்த 25 பசுமைக் குடில்களை இடித்து சிதைத்தன.

தன் குழந்தைகளுடன் டாங்குகளின் குறிக்கு மத்தியில் நடப்பது வீட்டில் தங்கியிருப்பதை விட பாதுகாப்பானது என்று அந்த மனிதர் கருதுகிறார் என்பதை நினைத்து எனக்கு கதி கலங்கியது. அவர் தனது குட்டிக் குழந்தைகளுடன் கொல்லப்படப்போகிறார் என்று நினைத்து அவர்களுக்கும் டாங்குக்கும் நடுவில் நான் நின்று கொண்டேன். இத்தகைய நிகழ்வுகள் தினமும் நடப்பதுதான். ஆனால், இந்த அப்பா தனது குட்டிக்குழந்தைகளுடன் வெளியில் போனது குறிப்பிடத்தக்க வகையில் என் கவனத்தை ஈர்த்ததற்கு காரணம் எங்களது தவறான மொழிபெயர்ப்புதான் அவரை வெளியில் வரச் செய்தது என எனக்கு தோன்றியதாகவும் இருக்கலாம்.

பாலஸ்தீன வன்முறை பிரச்சினையை மோசமாக்குகிறது என்று நீ தொலைபேசியில் சொன்னது குறித்து நான் நிறைய யோசித்தேன்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ராஃபாவைச் சேர்ந்த 60,000 தொழிலாளர்கள் இசுரேலுக்கு வேலைக்கு போய்க் கொண்டிருந்தார்கள். இப்போது 600 பேர் மட்டும்தான் போக முடியும். இந்த 600 பேரில் பலர் அங்கு இடம் மாறி போய் விட்டார்கள். ஏனென்றால், இங்கிருந்து அஷ்கெலோன் (அருகாமையில் உள்ள இசுரேலிய நகரம்) போகும் வழியில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள 3 சோதனைச் சாவடிகள் முன்பு 40 நிமிடங்களில் போக முடிந்த தூரத்தை இப்போது 12 மணி நேரத்திலும் கடக்க முடியாத பயணமாக மாற்றி விட்டிருக்கின்றன.

காசா பெண்கள்
குடியிருப்பின் மேல் பகுதியை ஒரு ராக்கெட் தாக்கியதைத் தொடர்ந்து அதிர்ச்சியுடன் வீட்டை காலி செய்யும் பெண்கள்.

காசா பன்னாட்டு விமான நிலையம் (ஓடுதளங்கள் அழிக்கப்பட்டு முழுமையாக மூடப்பட்டது), எகிப்துடன் வர்த்தகத்துக்கான எல்லைச் சாவடி (கடந்து போகும் இடத்தின் நடுவில் மிகப்பெரிய இசுரேலியதொலைதூர துப்பாக்கி கோபுரம்), கடற்கரைக்குப் போகும் வழி (கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு சோதனைச் சாவடியினாலும், குஷ் கதீஃப் குடியேற்றத்தினாலும் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது) என 1999-ல் ராஃபாவின் பொருளாதார வளர்ச்சிக்காக அடையாளம் காணப்பட்ட அனைத்து ஆதாரங்களும் இப்போது முழுமையாக அழிக்கப்பட்டு விட்டன. ராஃபாவில் இந்த முறை எதிர்ப்பு இயக்கம் ஆரம்பித்ததிலிருந்து அழித்தொழிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 600. அவர்களில் பெரும்பான்மையோர் எதிர்ப்பு இயக்கத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாதவர்கள், ஆனால் எல்லையில் வாழ்கிறார்கள் என்பதற்காக வீடுகளை இழந்தார்கள்.

ராஃபா உலகத்திலேயே மிகவும் ஏழ்மையான பகுதி என்று அதிகாரபூர்வமாக சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

சமீபகாலம் வரை இங்கு ஒரு நடுத்தர வர்க்கம் இருந்தது. ஏற்றுமதிக்காக கொண்டு செல்லப்பட்ட காசா மலர்கள் ஏரெஸ் சோதனைச் சாவடியில் 2 வாரங்கள் வரை தாமதப்படுத்தப்பட்டிருக்கின்றன. இரண்டு வாரம் ஆகி விட்ட பறித்த பூக்களுக்கு ஐரோப்பிய சந்தையில் என்ன மதிப்பு இருக்கும் என்பதை கற்பனை செய்து கொள்ளலாம். எனவே அந்தத் தொழில் அழிந்து போனது. புல்டோசர்கள் மக்களின் வீடுகளையும் தோட்டங்களையும் அழித்து விட்டன. இதற்கு மேலும் இந்த மக்களுக்கு என்ன மிஞ்சியிருக்கிறது என்று உங்களால் ஏதாவது யோசிக்க முடிந்தால் சொல்லுங்கள். என்னால் முடியவில்லை.

நமது வாழ்க்கையும், நலவாழ்வும் முழுமையாக நெறிக்கப்பட்டு, சுருங்கிக் கொண்டே போகும் ஒரு இடத்தில் குழந்தைகளுடன் வாழ்ந்தால், படைவீரர்களும் டாங்குகளும் எந்த நேரத்திலும் வந்து பல ஆண்டுகளாக நாம் கட்டியமைத்து பாதுகாத்து வரும் பசுமைக் குடில்களை இடித்து சிதைத்து விடலாம் என்று தெரிந்தால், நம்மில் பலர் அடித்து உதைக்கப்பட்டு இன்னும் 149 பேருடன் பல மணி நேரம் அடைத்து வைக்கப்பட்டிருந்தால், நாம் நம்மிடம் எஞ்சியிருக்கும் மிச்சங்களை பாதுகாக்க ஏதாவது வன்முறை வழியை பயன்படுத்த முயற்சிக்க மாட்டோம் என்றா சொல்கிறீர்கள்?

தப்பி ஓடும் குழந்தைகள்
சஜாய்யா பகுதியிலிருந்து தப்பி ஓடும் குழந்தைகள்

மலர் தோட்டங்களும், பசுமைக் குடில்களும், கனி மரங்களும் அழிக்கப்படும் போது வருடக் கணக்கிலான உழைப்பும், கவனமும், பயிரிடுதலும் அழிக்கப்படும் போது உன்னை நினைத்து பார்க்கிறேன். ஒவ்வொன்றையும் வளர்ப்பதற்கு எவ்வளவு காலம் பிடிக்கிறது, எவ்வளவு நீண்ட கரிசனமான உழைப்பின் விளைவு அது. இது போன்ற நிலைமையில் பெரும்பான்மையோர் தங்களால் இயன்ற வழிகளில் எல்லாம் தங்களை தற்காத்துக் கொள்வார்க்ள். கிரெய்க் மாமா அதை செய்திருப்பார், பாட்டி கூட செய்திருப்பார் என்று நினைக்கிறேன். நான் கூட அப்படித்தான் செய்திருப்பேன்.

அகிம்சை போராட்டம் பற்றி என்னிடம் கேட்டாய்.

நேற்று வெடிகுண்டு வெடிக்க வைக்கப்பட்ட போது வீட்டின் அனைத்து ஜன்னல்களும் உடைந்து விட்டன. அவர்கள் எனக்கு தேநீர் தயாரித்துக் கொண்டிருந்தார்கள், நான் சிறு குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தேன். இப்போது கூட அதை நினைக்கும் போது என்னால் தாங்க முடியவில்லை. அழிவை எதிர் கொள்ளும் மக்கள் எல்லா நேரமும் என்னை கொண்டாடுவதும் என்னை கவனிக்க பரபரப்பதும் என்னை கலங்கச் செய்கிறது.

அமெரிக்காவில் இருந்து கேட்கும் போது உங்களுக்கு இது எல்லாம் மிகைப்படுத்தப்பட்டதாக தெரியலாம். ஆனால், இங்கு வாழும் மக்களின் அதீத அன்பும், அவர்களது வாழ்க்கை வேண்டுமென்றே அழிக்கப்படுவதற்கான சாட்சியங்களும் இவை அனைத்தையும் கனவு போல தோன்ற வைக்கின்றன.

இது போல ஒன்று இந்த உலகில் நடக்க முடியும், அதை எதிர்த்து பெருமளவு கண்டனங்கள் இல்லாமலே நடக்க முடியும் என்று என்னால் நம்பவே முடியவில்லை. இதற்கு முன்பும் நமது உலகில் எவ்வளவு கொடூரமானவற்றை அனுமதிக்கிறோம் என்பதை பார்க்கும் போதெல்லாம் எனது மனம் காயப்பட்டது போலவே இதுவும் என்னை உண்மையிலேயே புண்படுத்துகிறது.

இடது சாரியினர் ஆர்ப்பாட்டம்
காசா மீதான இசுரேலின் தாக்குதலை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்யும் இசுரேலிய இடது சாரிகள்.

உன்னிடம் பேசிய பிறகு நான் சொல்வதை எல்லாம் நீ முழுவதுமாக நம்பவில்லை என்று நான் உணர்ந்தேன். அப்படி நம்பாவிட்டால் நல்லதுதான். ஒவ்வொருவரும் விமர்சனபூர்வமாக சிந்திப்பதன் முக்கியத்துவத்தை நான் அனைத்துக்கும் மேலாக மதிக்கிறேன். உன்னிடம் பேசும் போது மற்றவர்களிடம் பேசுவதை போல் இல்லாமல் சொல்வதை கறாராக உறுதிப்படுத்திய பிறகு பேச வேண்டும் என்பதற்கு நான் கவனம் எடுப்பதில்லை என்று உணர்கிறேன். நீ எப்படியும் சொந்தமாக தேடி விபரங்களை சரி பார்த்துக் கொள்வாய் என்று எனக்கு தெரிந்ததுதான் அதற்குக் காரணம்.

ஆனால், நான் சரியான வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறேனா என்று நான் கவலைப்படுகிறேன்.

மேலே நான் விவரிக்க முயன்ற அனைத்து நிலைமைகளும் – இன்னும் பலவும் – இந்த மக்கள் திரள் உயிர் வாழ்வதற்கான சாத்தியங்களையே படிப்படியாக, கண்ணுக்குத் தெரியாமல், ஆனால் பெருமளவில் நீக்கவும், அழிக்கவும் செய்து வருகின்றன. நான் இங்கு நேரடியாக பார்த்துக் கொண்டிருப்பது இதுதான். அரசியல் கொலைகள், எரிகணை தாக்குதல்கள், குழந்தைகளை சுடுவது எல்லாமே கொடூரங்கள்தான். ஆனால் அவற்றின் மீது கவனத்தைக் குவிப்பதன் மூலம் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை தவற விடுகிறோமோ என்று கலக்கமாக இருக்கிறது.

இங்கு வாழும் மக்களில் மிகப் பெரும்பான்மையினர், பொருளாதார ரீதியாக தப்பிப்பதற்கு சாத்தியம் இருந்தாலும், தமது நிலத்தை தக்க வைத்துக் கொள்ளும் போராட்டத்தை கைவிட்டு வெளியேற நினைத்தாலும் அவர்களால் அதைச் செய்ய முடியாது. ஏனென்றால் விசாவுக்கு விண்ணப்பிக்க கூட அவர்கள் இசுரேலுக்குள் போக முடியாது. ஏனென்றால் அவர்கள் போக விரும்பும் நாடுகள் (நம்முடைய நாடும் அரபு நாடுகளும்) அவர்களை அனுமதிக்கப் போவதில்லை.

ஒரு கூடாரத்தில் (காசா) உயிர் வாழ்வதற்கான எல்லா சாத்தியங்களும் துண்டிக்கப்பட்ட பிறகு, அங்கிருந்து மக்கள் வெளியேற முடியாத நிலை ஒரு இனப்படுகொலையாக தகுதி பெறுகிறது என்று நினைக்கிறேன். அவ்வாறு, அவர்கள் வெளியேற முடிந்தாலும் அது இனப்படுகொலைதான் என்று கருதுகிறேன். பன்னாட்டு சட்டத்தின்படி இனப்படுகொலை என்பதன் வரையறை இப்போது எனக்கு நினைவு இல்லை, நீ சரி பார்த்துக் கொள்ளலாம். இதை இன்னும் திறமையாக விளக்குவதற்கு நான் தேர்ச்சி பெற வேண்டும். இது போன்ற பெரிய வார்த்தைகளை அலட்சியமாக பயன்படுத்த நான் விரும்புவதில்லை என்று உனக்கு தெரியும். நான் உண்மையிலேயே வார்த்தைகளை அளந்து பயன்படுத்துகிறேன். தகவல்களை சொல்லி, கேட்பவர்கள் தாங்களே தமது முடிவுகளை எடுத்துக் கொள்ளும்படி விட்டு விடுகிறேன்.

கொல்லப்பட்ட காசா குழந்தைகள்
தாக்குதலில் கொல்லப்பட்ட அபு ஜராத் குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் உட்பட 8 பேர் மற்றும் ஒருவரின் இறுதி ஊர்வலத்தில் குழந்தைகளின் உடலை தாங்கிச் செல்லும் பாலஸ்தீனர்கள்.

நான் புலம்பிக் கொண்டிருக்கிறேனோ! விடாப்பிடியான, மோசடியான ஒரு இனப்படுகொலையை நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்று என் அம்மாவுக்கு கடிதம் மூலம் தெரிவிக்க விரும்புகிறேன். நான் உண்மையிலேயே கலங்கி போயிருக்கிறேன். மனித இயல்பின் நல்ல தன்மையை பற்றிய எனது அடிப்படை நம்பிக்கை கேள்விக்குள்ளாகியிருக்கிறது. இது நிற்க வேண்டும்.

நம் வாழ்க்கையில் எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு, இதை நிறுத்துவதற்காக நாம் அனைவரும் வேலை செய்வது தேவையானது என்று நினைக்கிறேன். அப்படி செய்வது ஒரு அதீத நடவடிக்கை என்று எனக்கு தோன்றவில்லை.

பேட் பெனாடரின் பாடல்களுக்கு நடனமாடும் விருப்பம் எனக்கு இருக்கிறது; ஆண் நண்பர்களை தேடிக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்; உடன் வேலை செய்பவர்களுக்காக கேலிச் சித்திரங்கள் வரைய வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால், இது நிற்க வேண்டும் என்றும் விரும்புகிறேன்.

வெளியேறும் சிறுவன்
காசா நகரின் வடபகுதியை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு போய் விடும்படி இசுரேல் இராணுவம் எச்சரித்ததைத் தொடர்ந்து தனது துணிகளை தலையில் சுமந்தபடி வெளியேறும் சிறுவன்.

நான் உணர்வது நம்பிக்கையின்மையும், அச்சமும்தான். பெருத்த ஏமாற்றம். இதுதான் நம்முடைய உலகத்தின் அடிப்படை நிதர்சனம் என்பதும் நாம் அனைவரும் இதில் பங்கேற்கிறோம் எனக்கு ஏமாற்றமளிக்கிறது.

இந்த உலகத்துக்குள் நான் பிறந்த போது இதை எல்லாம் நான் விரும்பி நான் வரவில்லை. காசாவில் வாழும் மக்களும் அவர்கள் இந்த உலகத்துக்கு வந்த போது இதை எல்லாம் கேட்கவில்லை. என்னை பெற்றெடுக்க முடிவு செய்த போது நீயும் அப்பாவும் இத்தகைய ஒரு உலகுக்கு என்னை கொண்டு வர விரும்பியிருக்க மாட்டீர்கள். கேப்பிடல் ஏரியைப் பார்த்து, “இது ஒரு பெரிய உலகம், நான் அதை நோக்கி வருகிறேன்” என்று சொன்ன போது என் மனதில் இது இருக்கவில்லை. ஒரு இனப்படுகொலையில் பங்கேற்பது குறித்த உணர்வே இல்லாமல் சுகமாக, கிட்டத்தட்ட முயற்சியே இல்லாமல் வாழ முடியும் உலகுக்குள் வர நான் விரும்பியிருக்க மாட்டேன்.

வெளியில் இன்னும் பல பெரிய வெடிச் சத்தங்கள் கேட்கின்றன.

நான் பாலஸ்தீனத்திலிருந்து திரும்பியபிறகு எனக்கு பல கெட்ட கனவுகள் வரலாம். இங்கிருந்து போய் விட்டதற்காக தொடர்ந்து குற்றவுணர்ச்சி அடைவேன். ஆனால், அதை எல்லாம் இன்னும் கூடுதல் பணிகளுக்கு திருப்பி விடலாம். இங்கு வந்ததுதான் நான் செய்த நல்ல காரியங்களிலெல்லாம் சிறந்த ஒன்று.

நான் பைத்தியம் போல தோன்றினால், அல்லது வெள்ளையர்களை தாக்குவதில்லை என்ற தனது இனவாதத்தை இசுரேலிய இராணுவம் மாற்றிக் கொண்டால், அதற்கான காரணம் முழுக்க முழுக்க இதுதான் : மறைமுகமாக என்னால் ஆதரிக்கப்படும் ஒரு இனப்படுகொலையின் மத்தியில் நான் இருக்கிறேன். இந்த இனப்படுகொலைக்கு எனது அரசாங்கம் பெருமளவு பொறுப்பானது.

உன்னையும் அப்பாவையும் நேசிக்கிறேன். புலம்பலுக்கு மன்னித்துக் கொள்.

சரி, அருகில் யாரோ ஒரு புதிய மனிதர் சில பட்டாணிகளை சாப்பிடத் தருகிறார். அதை சாப்பிட்டு விட்டு அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

ரேச்சல்

நன்றி : கார்டியன்
மின்னஞ்சல்கள் ஆங்கிலத்தில்

படங்கள் : நன்றி latimes.com