privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்கத்ரா, பாக்னா : சமூக நீதி அரசியல் சமூக அநீதியானது !

கத்ரா, பாக்னா : சமூக நீதி அரசியல் சமூக அநீதியானது !

-

த்திரப்பிரதேச மாநிலத்தின் பதாவுன் மாவட்டத்திலுள்ள கத்ரா சதாத்கஞ்ச் கிராமத்தைச் சேர்ந்த 15 மற்றும் 14 வயதுடைய ஒன்றுவிட்ட சகோதரிகள் இருவர் கடந்த மே 27 அன்று இரவில் யாதவ் சாதிவெறியர்களால் கடத்திச் செல்லப்பட்டு, கும்பல் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு, பின்னர் உயிரோடு தூக்கில் தொங்கவிடப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் இந்திய ஜனநாயகத்தின் போலித்தனத்தை உள்நாட்டில் மட்டுமின்றி, எல்லை தாண்டியும் அம்பலப்படுத்திவிட்டது. அவ்விரண்டு சிறுமிகளும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் என முதலில் கூறப்பட்டாலும், அவர்கள் இருவரும் மிகவும் பிற்படுத்தப்பட்ட ஷாக்கியா சாதியைச் சேர்ந்தவர்கள் என்பது தற்பொழுது தெரியவந்திருக்கிறது.

கொல்லப்பட்ட சகோதரிகள்
யாதவ் சாதிவெறியர்களால் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டு, தூக்கில் தொங்கவிடப்பட்டுக் கொல்லப்பட்ட சகோதரிகளின் சடலங்களை கீழே இறக்க மறுத்து, நீதி கேட்டு நடந்த ஆர்ப்பாட்டம்.

கத்ரா கிராமத்தில் யாதவ் சாதியினர் சிறுபான்மையினராக இருந்தாலும், அவர்கள் வசதிமிக்க புதுப் பணக்கார விவசாயிகளாகவும் அரசியல் செல்வாக்குமிக்கவர்களாகவும் உள்ளனர். இதுவன்றி, பதாவுன் மாவட்டம் முழுவதுமே யாதவ் சாதிவெறியர்களும் மற்றும் அவர்கள் கட்சியான சமாஜ்வாதிக் கட்சியின் குண்டர்களும் வைத்ததுதான் சட்டமாக இருந்து வருகிறது. இந்தப் பின்னணிதான் சாதியப் படிநிலை அடுக்கில் யாதவ் சாதியினருக்குச் சேவை செய்யும் நிலையில் வைக்கப்பட்டுள்ள ஷாக்கியா சாதியைச் சேர்ந்த அச்சிறுமிகளுக்கு எதிரான மிகக் கொடூரமான குற்றத்தைச் செய்யும் துணிவைக் குற்றவாளிகளுக்குத் தந்திருக்கிறது. அச்சிறுமிகளின் வீட்டிலிருந்து சற்றுத் தொலைவில் உள்ள ஒரு மாமரத்தில் அவர்களை உயிரோடு தூக்கில் தொங்கவிட்டுக் கொன்றிருப்பதை யாதவ்களின் சமூக, பொருளாதார, அரசியல் ஆதிக்கத்தின் குறியீடாக, தங்களை யாரும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது எனச் சவால்விடும் யாதவ் சாதிவெறி பயங்கரவாதத்தின் குறியீடாக மட்டுமே காண முடியும்.

அச்சிறுமிகள் கடந்த மே 27 அன்று இரவில் இயற்கைக் கடன்களைக் கழிப்பதற்காக தமது வீட்டுக்கு அருகேயுள்ள வயல்வெளிக்கு வந்த சமயத்தில், உள்ளூரைச் சேர்ந்த உடன்பிறந்த சகோதரர்களான பப்பு யாதவ், அவதேஷ் யாதவ், உர்வேஷ் யாதவ் உள்ளிட்டு நான்கு பேரால் கடத்திச் செல்லப்பட்டனர். இதற்கு சத்ரபால் யாதவ், சர்வேஷ் யாதவ் என்ற இரண்டு உள்ளூர் போலீசார் உடந்தையாக இருந்துள்ளனர். அச்சமயத்தில் சிறுமிகள் கூக்குரல் எழுப்பியதைக் கேட்டு ஓடிவந்த அவர்களது மாமா ராம்பாபுவை அக்கும்பல் துப்பாக்கியைக் காட்டி மிரட்டித் துரத்தியடித்திருக்கிறது.

சிறுமிகள் யாதவ் சாதியைச் சேர்ந்த கும்பலால் கடத்தப்படுவதைக் கண்ணால் கண்ட நேரடி சாட்சியான ராம்பாபு, அச்சிறுமிகளின் பெற்றோர்களை அழைத்துக்கொண்டு ஊரில் உள்ள புறக்காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முயன்றபொழுது, அங்கிருந்த உதவி ஆவாளர் ராம்விலாஸ் யாதவ், ராம் பாபு குறிப்பிடும் நபர்கள் “கௌரவமானவர்கள்” எனக் குற்றவாளிகளுக்கு வக்காலத்து வாங்கிப் பேசியதோடு, அச்சிறுமிகளுள் ஒருவரின் தந்தையான சோஹன்லாலின் கன்னத்தில் அறைந்து துரத்தியடித்துவிட்டார். இதன்பின் அவர்கள் கிராமத்திலிருந்து 12 கி.மீ. தூரத்திலுள்ள மற்றொரு போலீசு நிலையத்தில் புகார் கொடுக்கச் செல்ல முயன்றதை போலீசு கான்ஸ்டபிள் சர்வேஷ் யாதவ்தான் தடுத்து நிறுத்தியிருக்கிறான்; சர்வேஷ் யாதவ்தான் பப்பு யாதவிடம் அச்சிறுமிகளைக் கொன்றுவிடுமாறு ஆலோசனை கூறியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. சிறுமிகளைக் கடத்தியது, பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கியது, உயிரோடு தூக்கிலிட்டுக் கொன்றது வரையிலும் உள்ளூரைச் சேர்ந்த இரண்டு போலீசாருக்குத் தொடர்பிருந்தாலும், கத்ரா போலீசு தொடங்கி அம்மாநில போலீசு இயக்குநர் வரையிலுமான ஒட்டுமொத்த போலீசு துறையும் குற்றவாளிகளுக்குச் சாதகமாக நடந்துகொண்டதற்கு அதனின் சொந்த (யாதவ்) சாதிப்பற்றும் ஆதிக்க சாதிவெறியும்தான் முதன்மையான காரணமாகும்.

ஜந்தர் மந்தர் ஆர்ப்பாட்டம்
அரியானாவின் பாக்னா கிராமத்தைச் சேர்ந்த நான்கு தாழ்த்தப்பட்ட மாணவிகளைப் பாலியல் பலாத்காரப்படுத்திய ஜாட் சாதிவெறியர்களைக் கைது செய்யக் கோரி டெல்லி – ஜந்தர் மந்தர் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டம்.

அம்மாநில டி.ஜி.பி.யாக உள்ள ஏ.எல்.பானர்ஜி விசாரணை தொடங்கிய நிலையிலேயே, அதனைத் திசைதிருப்பிவிடும் உள்நோக்கத்தோடு, “இக்கொலைகள் சொத்துக்காக நடந்திருக்கக்கூடும்; இறந்துபோன பெண்களின் நெருங்கிய உறவினர்களே இக்கொலைகளைச் செய்திருக்கலாம்; குற்றம் சுமத்தப்பட்டிருப்பவர்கள் அப்பாவிகள்; கொல்லப்பட்ட சிறுமிகளுள் ஒருவர் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது நிரூபணமாகவில்லை” என்றெல்லாம் வெளிப்படையாகவே குற்றவாளிகளுக்கு ஆதரவாகப் பேசி வந்தார்.

இக்குற்றத்தை மறைத்துவிடவும், நீர்த்துப்போகச் செய்யவும் உ.பி. போலீசு எடுத்த முயற்சிகள் அனைத்தும் கேவலமான முறையில் அம்பலமாகித் தோல்வியடைந்த பிறகுதான் உ.பி.யை ஆளும் சமாஜ்வாதி கட்சி தன்னை நியாயவானாகக் காட்டிக் கொள்ளும் அடிப்படையில் வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்து, ஐந்து இலட்ச ரூபாயை நட்ட ஈடாகத் தரவும் முன்வந்தது. எனினும், உ.பி. அரசின் இந்தத் திடீர்க் கரிசனமெல்லாம் அதற்கு எந்தவொரு மரியாதையையும் பெற்றுத் தரவில்லை. அச்சிறுமிகளின் பெற்றோர் உ.பி. அரசு வழங்கிய ஐந்து இலட்ச ரூபாய் இழப்பீடு தொகையை ஏற்றுக் கொள்ள மறுத்ததோடு, உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவின் முகத்தில் அறைந்தாற்போல, “எங்களுக்கு நீதிதான் வேண்டுமே தவிர, நட்ட ஈடல்ல” எனத் தெரிவித்தனர்.

இவ்வழக்கு விசாரணை சி.பி.ஐ.-க்கு மாற்றப்பட்டு, சத்ரபால் யாதவ், சர்வேஷ் யாதவ் என்ற இரண்டு உள்ளூர் போலீசுக்காரன்கள் மற்றும் பப்பு யாதவ் சகோதரர்கள் உள்ளிட்டு ஏழு பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, ஐந்து பேர் கைது செய்யப்பட்டிருந்தாலும் வழக்கைத் திசை திருப்பும் முயற்சிகளும் தொடருகின்றன. குற்றம் சுமத்தப்பட்டவர்கள் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்படுவதைத்தான் இதுவரை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இவ்வழக்கிலோ இதுவரை கேட்டிராத அதிசயமாக, வழக்கின் முக்கிய சாட்சிகளான கொல்லப்பட்ட சிறுமிகளின் பெற்றோரையும், மாமாவையும் உண்மை அறியும் சோதனைக்கு உட்படுத்துவதற்கான அனுமதியை நீதிமன்றத்தின் மூலம் பெற்றிருக்கிறது சி.பி.ஐ. “தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சாட்சியங்கள் பொய் சொல்லக்கூடியவர்கள்” எனப் பல்வேறு வன்கொடுமை வழக்குகளில் நீதிமன்றங்கள் கருத்துத் தெரிவித்திருப்பதால், இந்த அனுமதிக்குப் பின்னுள்ள நோக்கத்தைச் சந்தேகிக்காமல் இருக்கமுடியாது. நீதிமன்றம், போலீசு, சி.பி.ஐ., என அதிகாரத் தாழ்வாரங்கள் அனைத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் ஆதிக்க சாதி கண்ணோட்டத்தின் நீட்சியாகவே இப்பரிசோதனைக்கு அளிக்கப்பட்ட அனுமதியைக் காண முடியும்.

***

ச்சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டமெல்லாம் நடத்திய பா.ஜ.க., உ.பி. அரசைக் கலைத்துவிடுவோம் என மிரட்டவும் செய்தது. ராகுல் காந்தி, மாயாவதி, ராம்விலாஸ் பஸ்வான் ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் கூறும் நாடகத்தை நடத்திவிட்டுப் போனார்கள். எனினும், இவர்கள் அனைவரும் இச்சம்பவத்தைச் சட்டம் – ஒழுங்கு பிரச்சினையாகவும், உ.பி. அரசைக் குண்டர்களின் அரசாகக் காட்டுவதற்கும்தான் பயன்படுத்திக் கொண்டார்களே தவிர, இதற்குப் பின்னுள்ள யாதவ் சாதிவெறியைக் கண்டித்து ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை.

வினிதா
தமிழகத்தின் குளித்தலை கோட்டப் பகுதியில் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்ட தாழ்த்தப்பட்ட இளம்பெண் வினிதா.

ஒரு சில முதலாளித்துவ அறிவுத்துறையினர் அச்சிறுமிகளின் வீட்டில் கழிப்பறை இல்லாததால்தான் இந்தக் கொடிய சம்பவம் நடந்துவிட்டதெனப் புலனாய்வு செய்து, கழிப்பறை கட்டுவதுதான் இதற்குத் தீர்வு என முன்மொழிந்தனர். இந்த வாதத்தைக் கப்பெனப் பிடித்துக் கொண்ட உ.பி. அரசு, “கத்ராவில் ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறைகள் கட்ட இருக்கிறோம். இதனால் பெண்கள் வீட்டிலிருந்து வெளியே வர வேண்டிய அவசியம் இருக்காது” என அறிவித்தது. இதன் பின்னுள்ள முட்டாள்தனம் நிறைந்த வக்கிரம் ஒருபுறமிருக்க, கத்ராவில் கழிப்பறைகள் கட்டுவதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை தொடங்கப்படவில்லை. அதேசமயம், ஓட்டுக்கட்சிகளின் தலைவர்கள் வந்து செல்வதற்கு வசதியாக ஒரு ஹெலிகாப்டர் இறங்குதளம் அக்கிராமத்தில் அமைக்கப்பட்டுவிட்டது.

சமூக நீதி பேசும் ஓட்டுக்கட்சிகளின் வக்கிரமும் ஆணாதிக்க கொழுப்பும் சந்தர்ப்பவாதமும் இதோடு நின்றுவிடவில்லை. கத்ரா சம்பவம் பற்றிக் கேள்வி எழுப்பிய ஒரு பெண் நிருபரிடம், “நீங்கள் எந்த அபாயத்தையும் சந்திக்கவில்லைதானே? ” எனக் குதர்க்கமாக எதிர்க்கேள்வி எழுப்பினார் உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ். ஒருபுறம் கத்ரா சம்பவத்தையும் சமாஜ்வாதி அரசையும் கண்டிப்பதாக சவுண்டுவிட்டுக் கொண்டிருந்த பா.ஜ.க.இன்னொருபுறம் அகிலேஷுக்கு ஆதரவாகவும் நடந்து கொண்டது. “எந்தவொரு அரசும் பெண்களைப் பாலியல் வன்புணர்ச்சியிலிருந்து காப்பாற்றிவிட முடியாது; சில வன்புணர்ச்சிக் குற்றங்கள் சரியானவை; சில தவறானவை” என அகிலேஷுக்காகப் பரிந்து பேசினார், பா.ஜ.க. ஆளும் மத்தியப் பிரதேச மாநில உள்துறை அமைச்சர் பாபுலால் கௌர்.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையை கௌர் நியாயப்படுத்திய அதேவேளையில்தான் மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஒரு பழங்குடியினப் பெண், கும்பல் பாலியல் வன்புணர்ச்சிக்குப் பலியான சம்பவம் நடந்தது. மேலும், மோடி அரசில் இரசாயனம் மற்றும் உரத்துறையின் துணை அமைச்சராக இருக்கும் நிகல்சந்த் மேக்வால் மீது கும்பல் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டு நிலுவையில் இருப்பதும், நீதிமன்ற விசாரணைக்கு அவர் அழைக்கப்பட்டிருப்பதும் அம்பலமானது. “இது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு” எனப் பதில் அளித்து குற்றம் சாட்டப்பட்டுள்ள நிகல்சந்துக்கு வெளிப்படையாக வக்காலத்து வாங்கியது, பா.ஜ.க.

கடந்த மார்ச் மாதம் காங்கிரசு ஆளும் அரியானா மாநிலத்திலுள்ள பாக்னா எனும் கிராமத்தைச் சேர்ந்த பதின்வயதுடைய நான்கு தாழ்த்தப்பட்ட பெண்கள் – அதிலொரு பெண் பதின்மூன்றே வயதான சிறுமி – மாலை நேரத்தில் சிறுநீர் கழிப்பதற்காகத் தமது வீட்டுக்கு அருகிலுள்ள வயல்வெளிக்குச் சென்றிருந்த சமயத்தில் அவர்கள் ஐந்துபேர் கொண்ட ஜாட் சாதிவெறியர்களால் கடத்திச் செல்லப்பட்டு, மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, கும்பல் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு, மயங்கிய நிலையிலேயே வயல்வெளியில் தூக்கியெறியப்பட்டனர். இந்த வன்கொடுமையைக் கண்டித்துத் தாழ்த்தப்பட்ட மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்திய பிறகுதான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, ஐந்து குற்றவாளிகள் மட்டும் கைது செய்யப்பட்டனர்.

உ.பி.யின் கத்ரா கிராமத்திற்கு வந்து உங்களுக்கு நியாயம் கிடைக்கப் போராடுவேன் என ஜம்பம் அடித்துவிட்டுச் சென்ற ராகுல் காந்தி, பாக்னாவில் நடந்த வன்கொடுமை குற்றம் பற்றி வாய் திறக்க மறுக்கிறார். தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் தன்னைப் பிற்படுத்தப்பட்டவனாக அடையாளப்படுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி கத்ரா சம்பவம் பற்றிப் பேச மறுக்கிறார். இந்த “ஒற்றுமை” குறித்து மட்டுமல்ல, டெல்லியில் நடந்த பாலியல் வன்புணர்ச்சியைக் கண்டித்து நடுத்தெருவுக்கு வந்த நகர்ப்புற நடுத்தர வர்க்கமும் கத்ரா, பக்னா சம்பவங்கள் பற்றி அலட்டிக் கொள்ளாமல் இருப்பது குறித்தும் தாழ்த்தப்பட்ட மற்றும் அடித்தட்டு மக்கள் கேள்வி எழுப்ப வேண்டிய தருணமிது.

கத்ராவிலும் பாக்னாவிலும் நடந்துள்ள இப்பாலியல் வன்கொடுமைகள் ஒரு பெரும் போராட்டத்திற்குப் பிறகுதான் வெளியே தெரிந்து, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்படியான போராட்டங்கள் எதுவுமே நடைபெறாததால், தமிழகத்தில் குளித்தலை கோட்டப் பகுதியில் ஆறு தாழ்த்தப்பட்ட மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவங்கள் – கடந்த ஆறு மாதத்திற்குள் நடந்தவை இவை – சுவடே தெரியாமல் மறைக்கப்பட்டுவிட்டன. அதேபொழுதில் வழக்கு பதிவு செய்யப்பட்டாலே நீதி கிடைத்துவிடும் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை. இந்த நிலைமைகள் அனைத்தும் நீதி வேண்டுமா, இறுதி வரை எதிர்த்துப் போராடு என்ற உண்மையைத்தான் உரத்துச் சொல்கின்றன.

– குப்பன்
______________________________
புதிய ஜனநாயகம் – ஜூலை 2014
______________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க