Thursday, May 30, 2024
முகப்புஉலகம்அமெரிக்காரச்சேலின் கடிதம் - 2 : சாவின் நடுவில் சிரிப்பு , கருணை , குடும்பம்

ரச்சேலின் கடிதம் – 2 : சாவின் நடுவில் சிரிப்பு , கருணை , குடும்பம்

-

(அமெரிக்க ஆதரவுடன் பாலஸ்தீன மக்கள் மீது இசுரேல் நடத்தி வரும் ஆக்கிரமிப்பை எதிர்த்து 10 ஆண்டுகளுக்கு முன்பு போராடி உயிர் நீத்த அமெரிக்க இளம் பெண் ரச்சேல் கோரி காசா முனையிலிருந்து அவரது பெற்றோருக்கு அனுப்பிய மின்னஞ்சல்களிலிருந்து : (படங்கள் : இப்போது நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்பானவை)

2. ஆக்கிரமிப்புக்கு மத்தியில் வாழ்க்கையை எதிர்கொள்ளும் பாலஸ்தீன மக்கள், ஆக்கிரமிப்பை  எதிர்க்கும் இசுரேலின் ஜனநாயக சக்திகள்

ஐநா பள்ளி
ஜூலை 24 அன்று ஐநா நடத்தும் பள்ளியை இசுரேல் தாக்கியதில் காயமடைந்த சிறுமியுடன் மருத்துவமனையில் அவளது அப்பா. இந்தத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர் – நன்றி : time.com

(ரச்சேலின் கடிதங்கள் – 1 அம்மா புலம்பலுக்கு மன்னித்துக் கொள் )

பிப்ரவரி 28, 2003

(அவரது அம்மாவுக்கு)

எனது மின்னஞ்சலுக்கு நீ போட்ட பதிலுக்கு நன்றி. உன்னிடமிருந்தும் என்னைப் பற்றி அக்கறை கொண்டுள்ள மற்றவர்களிடமிருந்தும் கடிதம் வருவது உண்மையிலேயே எனக்கு ஆறுதலாக இருக்கிறது.

நான் உனக்கு கடிதம் எழுதிய பிறகு எங்கள் குழுவிடமிருந்து பிரிந்து 10 மணி நேரம் தகவல் தொடர்பு இல்லாமல் தாக்குதல் முனையின் முன்னணியில் உள்ள ஹை சலாம் குடும்பத்துடன் போய் தங்கினேன். அவர்கள் எனக்கு உணவு தயாரித்து தந்தார்கள், அவர்களிடம் கேபிள் டிவி இருக்கிறது. அவர்களது வீட்டின் முன் அறைகள் இரண்டின் சுவர்களை துப்பாக்கி குண்டுகள் துளைத்திருப்பதால் அவற்றை பயன்படுத்த முடியாது. எனவே, மொத்த குடும்பமும் – 3 குழந்தைகளும் பெற்றோரும் – ஒரே அறையில் தூங்குகின்றனர். இளைய மகள் இமானுக்கு அருகில் தரையில் நான் படுத்திருந்தேன். எல்லோரும் போர்வைகளை பகிர்ந்து கொண்டோம். மகனின் வீட்டுப் பாடம் செய்ய சிறிது உதவி செய்தேன்.

அதன் பிறகு எல்லோரும் “பெட் சிமெட்ரி” என்ற மோசமான படத்தை பார்த்தோம். அதை பார்ப்பதற்கு நான் எவ்வளவு சிரமப்பட்டேன் என்பது அவர்களுக்கு வேடிக்கையாக இருந்தது. வெள்ளிக் கிழமை விடுமுறை நாள். நான் கண் விழித்த போது அவர்கள் அரபி மொழியில் மாற்றம் செய்யப்பட்ட “கம்மி பியர்ஸ்” நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுடன் காலை உணவு சாப்பிட்டு விட்டு, அங்கு சிறிது நேரம் உட்கார்ந்திருந்தேன். நம் ஊரில் நாம் சனிக்கிழமை காலையில் கார்ட்டூன் பார்ப்பதை போன்ற உணர்வை இந்த குடும்பத்துடன் ஒரு போர்வைக்குவியலின் மத்தியில் அனுபவித்தேன்.

சிதைக்கப்பட்ட வீடுகள்
இசுரேலிய வான்வழி தாக்குதலில் சிதைக்கப்பட்ட வீடுகளுக்கு மத்தியில் ஒரு பாலஸ்தீன பெண் (நன்றி : aljazeera.com)

அதன் பிறகு கொஞ்ச தூரம் நடந்து, பி’ராசில் என்ற இடத்துக்கு போனேன். அங்குதான் நிடால், மன்சூர், பாட்டி, ரஃபாத் மற்றும் என்னை முழுமனதுடன் தத்து எடுத்துக் கொண்ட பெரிய குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் அனைவரும் வாழ்கிறார்கள்.

ஒரு நாள், பாட்டி அரபு மொழியில் சைகை உரை ஒன்றை நிகழ்த்தினார். பல முறை வாயால் ஊதி, தனது கருப்பு போர்வையை சுட்டிக் காட்டினார். “புகை பிடிப்பது என்னுடைய நுரையீரலை கருப்பாக மாற்றி விடும் என்று அறிவுரை சொல்ல ஒருவர் இங்கு இருக்கிறார் என்ற தகவல் எனது அம்மாவுக்கு பெருமளவு ஆறுதலாக இருக்கும்” என்று அவரிடம் சொல்லுமாறு நடாலிடம் சொன்னேன். நுசரத் முகாமிலிருந்து வந்திருக்கும் அவர்களது உறவினரை சந்தித்து அவரது கைக்குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தேன்.

நிடாலின் ஆங்கிலம் ஒவ்வொரு நாளும் மேம்பட்டு வருகிறது. அவன் என்னை “மை சிஸ்டர் (எனது சகோதரி)” என்று அழைக்கிறான். பாட்டிக்கு “ஹலோ, ஹவ் ஆர் யூ?” என்று சொல்ல கற்றுக் கொடுக்கிறான்.

வெளியில் டாங்குகளும் புல்டோசர்களும் போய்க் கொண்டிரும் சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் அவர்கள் எல்லோரும் அவர்களுக்குள்ளும் என்னிடமும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். பாலஸ்தீன நண்பர்களுடன் இருக்கும் போது நான் மனித உரிமை பார்வையாளர், ஆவணப் படுத்துபவர், நேரடி நடவடிக்கை போராளியாக இருப்பதை விட குறைந்த அளவே அச்சப்படுகிறேன். நீடித்து நடக்கும் ஒரு போராட்டத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு இவர்கள் ஒரு நல்ல வழிகாட்டி.

இனபிரிப்புச் சுவர்
காசா முனையை சூழ்ந்து கட்டப்பட்டுள்ள இசுரேலின் இனஅழிப்புச் சுவர் (நன்றி : aljaseera.com)

நிலைமை இவர்களையும் பாதிக்க ஆரம்பிக்கும், ஒரு நாள் இவர்களையும் அனைத்து மட்டங்களிலும் பாதிக்கும் என்று எனக்கு தெரிகிறது. ஆனால், நடந்து கொண்டிருக்கும் நம்ப முடியாத கொடூரங்களுக்கு மத்தியில், இறப்பின் இடைவிடாத இருப்பின் மத்தியில் சிரிப்பு, கருணை, குடும்ப நேரம் என்று தமது மனிதத் தன்மையை தக்க வைத்துக் கொள்ளும் அவர்களது வலிமையை பார்த்து வியக்கிறேன்.

இன்றைய காலை அனுபவத்துக்குப் பிறகு நான் பல மடங்கு ஆறுதலாக உணர்கிறேன்.

மனிதர்களிடம் நிரம்பியிருக்கும் தீங்கு செய்வதற்கான திறமையைப் பற்றி எழுத நான் கணிசமான நேரம் செலவிட்டிருக்கிறேன். ஆனால், மோசத்திலும் மோசமான சூழ்நிலைகளில், மனிதர்கள் உறுதியுடன் தமது மனிதத்தன்மையை தக்க வைத்துக் கொள்வது இதுவரை பார்க்காததை இங்கு நான் பார்க்கிறேன் என்பதையும் சொல்ல வேண்டும். இதைத்தான் மனித கௌரவம் என்று சொல்ல வேண்டும்.

இங்கு உள்ள மக்களை நீங்கள் ஒரு நாள் சந்திக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஒருவேளை ஒரு நாள் அந்த சந்திப்பு நடக்கலாம். ஒரு சுதந்திர பாலஸ்தீன நாட்டையும், ஜனநாயக இசுரேலிய நாட்டையும் எனது வாழ்நாளில் பார்க்க முடியும் என்று நினைக்கிறேன். பாலஸ்தீனத்துக்கு விடுதலை கிடைப்பது உலகெங்கிலும் போராடும் மக்கள் அனைவருக்கும் வியக்கத்தக்க நம்பிக்கைக்கான ஆதாரமாக விளங்கும் என்று நினைக்கிறேன். அமெரிக்க ஆதரவிலான ஜனநாயக விரோத அரசுகளின் கீழ் துன்புறம் மத்திய கிழக்கில் உள்ள அரபு நாட்டு மக்கள் அனைவருக்கும் அது நம்பிக்கையளிக்கும் ஆதாரமாக இருக்கும்.

________________

பிப்ரவரி 8, 2003

தாக்குதலுக்குப் பின்
காசா நகர் மீது இசுரேல் நடத்திய வான் வழி தாக்குதலின் விளைவுகளுடன் போராடும் பாலஸ்தீனர்கள்  (படம் : நன்றி aljazeera.com)

நேற்று இரவு நான் அனுப்பிய மின்னஞ்சலுக்கு பல அக்கறையான பதில்கள் வந்தன. பெரும்பாலானவற்றுக்கு பதில்போடுவதற்கு இப்போது நேரம் இல்லை. உங்கள் அனைவரின் ஊக்குவிப்பு, கேள்விகள், விமர்சனங்களுக்கு நன்றி.

வந்த கடிதங்களில் டேனியலின் எதிர்வினை எனக்கு ஊக்கமளிப்பதாக இருந்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். யூத மக்களிடையே ஆக்கிரமிப்புக்கு இருக்கும் எதிர்ப்பும், இசுரேலிய ராணுவத்தில் பணி புரிய மறுப்பவர்களின் துணிச்சலும், நமது பெயரில் கொடூரங்கள் நடத்தப்படும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு நமக்கு ஒரு முன் உதாரணமாக விளங்குகின்றன.

பிப்ரவரி 7, 2003 அன்று ரச்சேலுக்கு வந்த மின்னஞ்சல்

நான் இசுரேலிய பாதுகாப்பு படையில் சேம இராணுவ அலுவலராக (reserve first lieutenant) வேலை செய்கிறேன். போரை உணர்வுரீதியாக எதிர்ப்பவர்களால் இராணுவ முகாம்கள் நிரம்பிக் கொண்டிருக்கின்றன. அவர்களில் பலர் குடும்பங்களுடன் வாழும் சேமப் படையினர்; கடந்த காலத்தில் போர்க்களத்தில் தமது வீரத்தை நிரூபித்தவர்கள். பலர் ஆறு மாதங்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்; எப்போது வெளி வருவார்கள் என்று தெரியவில்லை.

AWOLS (அனுமதி இல்லாமல் பணியை புறக்கணிப்பவர்கள்), பணியாற்ற மறுப்பவர்கள் இவர்களின்எண்ணிக்கை எங்கள் தேச வரலாற்றில் இது வரை இல்லாத அளவு அதிகரித்திருக்கிறது.

வலன்சியா, ஸ்பெயின்
ஸ்பெயினில் உள்ள வலன்சியாவில் இசுரேலை கண்டித்து ஆர்ப்பாட்டம் (படம் : நன்றி rt.com)

பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடிய இலக்குகளின் மீது சுடுவதற்கான உத்தரவுகளை நிறைவேற்ற மறுப்பது அதிகரித்திருக்கிறது.

இசுரேலில் வேலை வாய்ப்புகள் குறைந்திருக்கும் இந்த நேரத்தில், ஷரோனின் பழிவாங்கலுக்காக தமது வீடுகளையும் தொழில்களையும் மக்கள் இழந்து வரும் நேரத்தில் பல தொழில்முறை படை வீரர்கள் – அவர்களில் பலர் விமானிகள், உளவுத் துறையினர் – பச்சைப் படுகொலைகளுக்கான உத்தரவுகளை மறுத்து சிறையையும், வேலையின்மையையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

நான் இராணுவ நீதித் துறையின் வேலைகளை செய்ய வேண்டும். ஓடிப் போன படைவீரர்களை தேடிப் பிடித்து கொண்டு வர வேண்டியதுதான் எனது வேலை. 18 மாதங்களாக நான் வேலைக்குப் போகவில்லை. மாறாக, சர்வதேச ஆர்வலர் குழுக்கள் எங்கள் படைவீரர்கள் செய்வதாக கூறும் குற்றச் செயல்களை நேரில் பார்க்கவும் படம் பிடிக்கவும் எனது திறமைகளையும், தகுதிகளையும் பயன்படுத்தி வருகிறேன்.

நான் எனது நாட்டை நேசிக்கிறேன். இசுரேல் மிக மோசமான சில தலைவர்களின் கீழ் உள்ளது என்று கருதுகிறேன். குடியேறிகளும், உள்ளூர் காவல்துறையினரும் ஒருவருக்கொருவர் உள்கையாக உள்ளனர். எல்லைக் காவல் படையினர் கேவலமாக நடந்து கொள்கிறார்கள். 40% இசுரேலிய மக்கள் அவர்களை நினைத்து வெட்கப்படுகிறார்கள். அவர்களுக்கு தெரிந்த விபரங்கள் மற்றவர்களுக்கும் தெரிய வந்ததால் எஞ்சிய 90% இசுரேலிய மக்களுக்கும் காவல் படையினர்  அவமானமாகி விடுவார்கள்.

நாசரேத் ஆர்ப்பாட்டம்
இசுரேலின் நாசரேத் நகரில் அரசை எதிர்த்து அரபு இசுரேலியர்கள் ஆர்ப்பாட்டம் (படம் : நன்றி rt.com)

உங்களால் முடிந்த அனைத்தையும் ஆவணப்படுத்துங்கள். கைச்சரக்கை சேர்த்து எதையும் மிகைப்படுத்த வேண்டாம். ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் அனைத்துக்கும் இங்கு உள்ள ஊடகங்கள் திறமையான பிரச்சார கருவிகளாக செயல்படுகின்றன.

இந்த கடிதத்தை உங்கள் நண்பர்களுக்கு கொடுக்கவும்.

ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் பணி புரியும் பல படைவீரர்கள் அவர்கள் பார்ப்பதை குறித்து மிகவும் வெறுப்படைந்திருக்கிறார்கள்.

இசுரேலிய பாதுகாப்பு படைகள் மத்தியில் “தொவ்ஹர் ஹனேஷெக்” என்ற கௌரவ நடத்தை உள்ளது. நிராயுதபாணியான ஒரு கைதியை கொல்வது அல்லது மனிதப் பண்புக்கு மாறான உத்தரவை நிறைவேற்றுதல் போன்ற கொடுமையான ஒன்றை செய்யப் போகும் சக படைவீரரிடம் இதைத்தான் நாங்கள் சொல்வோம். இதன் பொருள் “ஆயுதத்தின் புனிதம்”.

ஒரு படைவீரரிடம் அவரது மொழியிலேயே பேசும் இன்னொரு சொற்றொடர் “தேகல் ஷஹோர் – அதன் பொருள் “கருப்புக் கொடி”. “அதா மெடாசட் தேகல் ஷஹோர்” என்று சொன்னால், “நீங்கள் நியாயத்துக்குப் புறம்பான உத்தரவை நிறைவேற்றுகிறீர்கள்” என்று பொருள். இசுரேலிய படைவீரர்களைப் பொறுத்தவரை இது மிகப்பெரிய விஷயம், “அற்பத்தனமான, தவறாக வழிநடத்தப்பட்ட வெளிநாட்டவர்கள்” இதைச் சொல்லக்  கேட்பது பல படைவீரர்களை அதிர்ச்சியடையச் செய்யும்.

சாத்தியப்படும் போதெல்லாம் படைவீரர்களுடன் உரையாட முயற்சி செய்யுங்கள். அவர்கள் உங்களை முகமற்றவர்களாக செய்திருப்பது போல, நீங்கள் அவர்களை மனிதத் தன்மை இல்லாமல் கருதும் தவறை செய்து விடாதீர்கள். மரியாதையும் சரி, அவமரியாதையும் சரி பொருத்தமானதோ இல்லையோ தொற்றிக் கொள்ளக் கூடியவை.

நீங்கள் நல்ல செயல் செய்து வருகிறீர்கள். உங்களுக்கு நன்றி.

அமைதியை விரும்பும்,

டேனி

நன்றி : கார்டியன்
மின்னஞ்சல்கள் ஆங்கிலத்தில்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க