Monday, March 17, 2025
முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்வழக்குரைஞர் சங்கரசுப்புவை இழிவுபடுத்திய நீதிபதி கர்ணன் !

வழக்குரைஞர் சங்கரசுப்புவை இழிவுபடுத்திய நீதிபதி கர்ணன் !

-

“மக்கள் வழக்குரைஞரும், மூத்த வழக்குரைஞருமான சங்கரசுப்புவை இழிவுபடுத்திய நாட்டமை நீதிபதி கர்ணனே பகிரங்க மன்னிப்பு கேள்!”

கடந்த (24/07/2014) அன்று மூத்த வழக்குரைஞரும் மக்கள் வழக்குரைஞருமான சங்கரசுப்பு அவர்கள் அவருடைய வழக்கிற்காக ஆஜராகும் பொழுது, நீதிபதி கர்ணன்

“எலி அம்மணமா ஓடுதுன்னு என போஸ்டர் ஓட்டுறியா?
இரு, இரு! உன்ன புழலுக்கு அனுப்பி, களி தின்ன வைக்கிறேன் பார்”

– என ஒருமையிலும், மரியாதை இல்லாமலும் ஆவேசமாக கத்தினார்.

ஏன் இந்த ஆவேசம்?

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாதுமணல் கொள்ளையன், மக்கள் விரோத தேசத்துரோக வைகுண்டராஜன் தரப்பு மத்திய அரசிடம் தாதுமணல் எடுப்பதற்கான லைசென்ஸை புதுப்பிக்க முயன்ற பொழுது, மத்திய அரசு அதை ரத்துசெய்துவிட்டது.

மத்திய அரசு, இந்நாட்டின் கனிம வளங்கள் சூறையாடப்படுவதை தடுத்து நிறுத்தும் நோக்கத்திற்காக லைசன்சை ரத்து செய்யவில்லை. மணலில் தாதுப்பொருளை பிரித்து எடுக்கும் பொழுது அதில் இருந்து பரவும் மாசுவினால் ஏற்படும் நோய்களால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காகவும் ரத்து செய்யவில்லை. தப்பும் தவறுமாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்காகவே ரத்து செய்தது!

இயற்கை – கனிமவளம் சூறையாடப்படுவது, இதனால் மக்கள் நலன் பாதிக்கப்படுவது குறித்து மத்திய மாநில அரசுகள் கவலைப்படாததற்கு காரணம் அவை நடைமுறைப்படுத்தி வரும் தனியார்மய, தாராளமய, உலகமய மறுகாலனியாதிக்க கொள்கைகளே! இந்த நாசகாரக் கொள்ளையை எதிர்த்து மனித உரிமைப் பாதுகாப்பு மையம் தொடர்ந்து போராடி வருகிறது. இந்த அடிப்படையில் தான் தனியார் கல்விக் கொள்ளைக்கு எதிராகவும், இயற்கை கனிம வளங்கள் சூறையாடப்படுவதற்கு எதிராகவும் தொடர்ந்து போராடிவருகிறது.

இதன் தொடர்ச்சியாகத் தான் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் தாதுமணல் கொள்ளையன் வைகுண்டராஜனின் தாதுமணல் சூறையாடலையும் இதனால் அப்பாவி மக்கள் கேன்சர் நோய் இன்னும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவதையும் தடுத்து நிறுத்தும் போராட்டத்தை முன்னெடுத்தது!

  • மனித உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பாக உண்மை அறியும் குழு ஒன்றை அமைத்து, பாதிக்கப்பட்ட கடலோர பகுதிகளை மீனவ மக்கள் உதவியுடன் ஆய்வு செய்து, வைகுண்டராஜன் அடித்த தாது மணல் கொள்ளையை அம்பலப்படுத்தியது.
  • ஊடகங்கள் மூலமாகவும், நேரடி பிரச்சாரத்தின் மூலமாகவும் மக்கள் மத்தியில் வைகுண்டராஜனை அம்பலப்படுத்தியது.
  • தமிழகம் தழுவிய அளவில் மக்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் பொதுக்கூட்டம் என தொடர்ந்து அம்பலப்படுத்தவும் செய்தது.
  • உண்மை அறியும் குழு அறிக்கையை லட்சகணக்கில் அச்சிட்டு மக்கள் மத்தியில் விநியோகித்தது.
  • தமிழக அரசு நியமித்து ஆய்வு செய்த சுகன் தீப் சிங் பேடியின் அறிக்கையை வெளியிட வேண்டும். தாது மணல் அள்ளுவதை நிரந்தரமாக தடை செய்யவேண்டும் என மதுரை உயர் நீதி மன்றத்தில் ஒரு பொதுநல வழக்கை (W.P. (Md) No: 6683/2014) தாக்கல் செய்து உள்ளது.

இத்தருணத்தில் தான் தாதுமணல் கொள்ளையன் லைசென்சுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கச் சொல்லி சென்னை உயர் நீதி மன்ற நீதிபதி கண்ணன் அவர்களிடம் வைகுண்டராஜன் தரப்பு வழக்கை தாக்கல் செய்தது. இதை அறிந்த மனித உரிமைப் பாதுகாப்பு மையம் தன்னையும் ஒரு மனுதாரராக சேர்த்துக்கொள்ளும்படி மனுதாக்கல் செய்தது.

இதனடிப்படையில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் சார்ந்த வழக்குரைஞர்கள் (W.P. No.12862 to W.P.No: 12880) வழக்காடும் பொழுது நீத்பதி கர்ணன் அதை காது கொடுத்து கேட்காமல், “நீங்கள் என்ன சமூக ஆர்வலரா? சுதந்திரத்தை வாங்கித் தந்தவரா? எப்பொழுது பார்த்தாலும் விளம்பரத்திற்காக இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதே உங்கள் வேலையாகிவிட்டது. அரசாங்கம் லைசென்ஸ் தருகிறது. அவர்கள் லைசன்ஸ் பெற்று கனிமங்களை அள்ளுகிறார்கள். உங்களுக்கு என்ன வந்தது? கடல் எங்கே இருக்கிறது? ஊர் எங்கே இருக்கிறது? எதற்காக வந்து இங்கே தொல்லை தருகிறீர்கள்?” என 15 நிமிடம் வைகுண்டராஜன் தரப்பு வழக்குரைஞரைப் போல கடுமையாக கத்தித் தீர்த்தார்.

வழக்கின் விசாரணையில் நடுநிலையோடு விபரங்களை கேட்டறியாமல், வைகுண்டராஜன் வழக்குரைஞரை போல பேசுவதை குறிப்பிட்டு, இந்த வழக்கை நீதிபதி கர்ணன் விசாரிக்ககூடாது என மனித உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் தலைமை நீதிபதியிடம் ஒரு புகார் மனு கொடுக்கப்பட்டது. ஆனால், தலைமை நீதிபதி அந்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது, மக்கள் வழக்குரைஞரும், மூத்த வழக்குரைஞருமான சங்கரசுப்பு ஆஜரானார். உடனே நீதிபதி கர்ணன் “எந்த முகாந்தரத்தில் இந்த வழக்கில் சேர்கிறீர்கள்? மனுதாரருக்கும் இந்த வழக்குக்கும் என்ன சம்பந்தம்?” என சீறினார்.

“மனித உரிமைப் பாதுகாப்பு மையம் உண்மை அறியும் குழு ஒன்றை அமைத்து பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டுள்ளார்கள். அந்த பகுதியில் சுற்றுச் சூழலே கடுமையாக பாதிப்படைந்துள்ளது. அரசும் ஒரு ஆய்வை நடத்தி கனிமம் அள்ளுவதை தடை செய்துள்ளது. அந்தத் தடையை விலக்கி, கனிமங்கள் அள்ளுவதற்கு இந்த நீதிமன்றம் அனுமதி அளித்தால் கனிம கொள்ளையர்களுக்கு இந்த நீதிமன்றம் உதவி செய்வதாக ஆகிவிடும்” என்றார் சங்கரசுப்பு.

உடனே நீதிபதி கர்ணன் “என்ன துணிச்சல் உங்களுக்கு? நான் கனிம கொள்ளையர்களுடன் தொடர்பில் இருக்கிறேன் என்று சொல்ல! இப்போதே உடனடியாக அவர்கள் கேட்ட கோரிக்கையை ஏற்றுக்கொண்டு உத்தரவிட்டு விடுவேன். என் அதிகாரத்தை யாரும் கேள்வி கேட்க முடியாது. மீறிப்போனால் என்ன செய்வீர்கள்! என்னைப் பற்றி நோட்டிஸ் போடுவீர்கள். ஆர்ப்பாட்டம் செய்வீர்கள்; அவ்வளவு தானே..! என்னுடைய சர்வீஸில் இதுபோல எத்தனையோ பார்த்துவிட்டேன். இதெல்லாம் எனக்கு சாதாரணம். இதற்கெல்லாம் அசரும் நபரும் நான் அல்ல!” என சீறினார்.

இதற்கு வழக்குரைஞர் சங்கரசுப்பு அவர்கள் “கனிம கொள்ளையர்களுக்கு நீதிமன்றம் துணைபோகிறது என்று சொல்லவில்லை. நீதிமன்றம் துணை போய்விடக்கூடாதே என்று தான் சொன்னேன்” என நிதானமாக விளக்கமளித்தார்.

“வைகுண்டராஜனால் அரசாங்கத்துக்கு எத்தனை வரி வருவாய் வருகிறது என தெரியுமா? இப்படிப்பட்டவர்கள் தொழில் செய்வதால் தான் அரசுக்கு வரி வருவாய் வருகிறது” என்று வைகுண்டராஜன் வக்கீலைப் போல வக்காலத்து வாங்கினார் நீதிபதி கர்ணன்.

இதற்கும் வழக்குரைஞர் சங்கரசுப்பு அவர்கள் “தொழில் வளம் என்பது சுற்றுச்சூழலை அழித்து வளர்ந்தால் அதை எதிர்க்கவேண்டியது எங்களது கடமை. இந்த கனிமக் கொள்ளையின் காரணமாக கடலே சிவப்பு நிறமாக மாசுபட்டிருக்கிறது. மக்களுக்கு கேன்சர், இன்னும் இதுபோன்ற ஆபத்தான நோய்களை உண்டாக்கியிருக்கின்றன” என்று விளக்கமளித்தார்.

“கேன்சர் வந்ததென்றால் மருத்துவ சான்றிதழ் எங்கே? உடம்புக்கு முடியவில்லை என்றால் 108 ஆம்புலன்ஸை அழையுங்கள். மருத்துவனையில் போய் படுங்கள்” என மக்களின் உயிரை மயிராக மதித்து பதிலளித்தார்.

மீண்டும் மதியம் வந்து தீர்ப்பளிக்கிறேன் என சொல்லிவிட்டு, மதியத்திற்கு பிறகு அமர்ந்ததும் நீதிமன்ற நேரம் முடிவடையும் வரை அமைதியாக இருந்துவிட்டு, இறுதியில் “விசாரணையை பிறகு தொடர்கிறேன்” என்று கூறிவிட்டு சென்றவர், தாதுமணல் கொள்ளையனுக்கு ஆதரவாக வாதாடியதோடு அவனுடைய தரப்பு வழக்குரைஞர் தான் என்பதை நிரூபித்துவிட்டார்.

இதைக் கண்டித்து மனித உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பாக

“இது நீதிமன்றமா?
நீதிபதி கர்ணனின் காட்டுத் தர்பாரா?

பொதுமக்களே, வழக்குரைஞர்களே!
தாதுமணல் கொள்ளையன் வைகுண்டராஜனுக்கு
நீதியை வளைக்கிறார் கர்ணன்.

இதை எதிர்த்து வழக்காடினால் எகிறி குதிக்கிறார்.
எகிறுவதும் குதிப்பதும் எதற்கு தெரியுமா?
வைகுண்டராஜன் முக்கி முக்கி எடுத்த தாதுமணலை
சிந்தாமல் சிதறாமல் நாடு கடத்துவதற்கு
அனுமதி வழங்கவே!

இப்பொழுது புரிகிறதா?
எலி ஏன் அம்மணமாய் ஓடுகிறதென்று?
கடலோர மக்களின் உயிரை மயிராய் மதிக்கும்
தேசத்தின் வளத்தை சூறையாடும்
மக்கள் விரோத, தேசத்துரோக வைகுண்டராஜனுக்கு
துணை போகும் நீதிபதி கர்ணனின் நாட்டாமைத்தனத்தை முறியடிப்போம்!”

– என்ற முழக்கங்களை வடித்து சுவரொட்டிகளாக ஒட்டினோம்.

வழக்கில் எதிர்மனுதாரராக இணைந்ததும், சுவரொட்டி ஒட்டியதும் மனித உரிமைப் பாதுகாப்பு மையம். பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராடி வரும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்திற்காக எந்தவித பிரதிபலனும் எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்து வழக்காடிய மூத்த வழக்குரைஞர் சங்கரசுப்புவைத்தான் நீதிபதி கர்ணன் இவ்வளவு இழிவுபடுத்தி பேசியுள்ளார்.

இப்படி ஒருமையில் பேசி, இழிவாக பேசிய நீதிபதி கர்ணனை மக்கள் வழக்குரைஞரும், மூத்த வழக்குரைஞருமான சங்கரசுப்பு அவர்களிடம் மன்னிப்பு கேட்கவும், வழக்குரைஞர்களை தரக்குறைவாக நடத்தும் நீதிபதி கர்ணனின் நாட்டமைத்தனத்தை முறியடிக்கவும் அனைத்து வழக்குரைஞர்களும் ஓர் அணியாக திரண்டு போராடுவோம்.

இது தொடர்பாக கடந்த 25-ம் தேதியன்று மனித உரிமைப் பாதுகாப்பு மையம், சென்னை கிளை சார்பாக “மக்கள் வழக்குரைஞரும், மூத்த வழக்குரைஞருமான சங்கரசுப்புவை இழிவுப்படுத்திய நாட்டமை நீதிபதி கர்ணனே பகிரங்க மன்னிப்பு கேள்!”

என்ற முழக்கத்தின் அடிப்படையில் உயர் நீதிமன்றத்தின் நுழைவுவாயிலில் மதியம் 1.30 அளவில் ஆவின் கேட்டருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!

“இது நீதிமன்றமா?
நீதிபதி கர்ணனின் காட்டுத் தர்பாரா?

பொதுமக்களே, வழக்குரைஞர்களே!
தாதுமணல் கொள்ளையன் வைகுண்டராஜனுக்கு
நீதியை வளைக்கிறார் கர்ணன்.

இதை எதிர்த்து வழக்காடினால் எகிறி குதிக்கிறார்.

கடலோர மக்களின் உயிரை மயிராய் மதிக்கும்
தேசத்தின் வளத்தை சூறையாடும்
மக்கள் விரோத, தேசத்துரோக வைகுண்டராஜனுக்கு
துணை போகும் நீதிபதி கர்ணனின் நாட்டாமைத்தனத்தை முறியடிப்போம்!

மன்னிப்பு கேள்! மன்னிப்பு கேள்!
மக்கள் வழக்குரைஞர் சங்கரசுப்புவிடம்
பகிரங்க மன்னிப்பு கேள்!”

முழக்கங்களை உயர்நீதி மன்றம் முழுவதும் எதிரொலித்தனர்.

1000 துண்டறிக்கைகள் வழக்குரைஞர்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டது. ஆர்வத்துடன் எல்லோரும் வாங்கி சென்று படித்தார்கள். குறைவான நேரத்திலேயே துண்டறிக்கைகள் தீர்ந்து போனது!

மனித உரிமைப் பாதுகாப்பு மையத் தோழர்களும், ஜனநாயக சக்திகளும், வழக்குரைஞர்களும் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்!

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தோழமையுடன்,

மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை, தொடர்புக்கு : 9842812062

  1. நீதிபதி கர்ணன்:
    என் அதிகாரத்தை யாரும் கேள்வி கேட்க முடியாது !

    எனது பதில்:
    உழைக்கும் மக்களின் வாழ்க்கையை கேள்வி கூறியாக்குபவர் எவராக இருந்தலும் அவரை கேள்வி கேட்கும் உரிமை ஜனநாயக சக்திகளுக்கும்,புரட்சிகர அமைப்புகளுக்கும் உள்ளது வைகுண்டராஜன் சேவகர் நீதிபதி கர்ணன் அவர்களே.

    நீதிபதி கர்ணன்:
    என்னுடய சர்வீஸில் இது போல எத்தனையோ பார்த்துவிட்டேன்.

    எனது பதில்:
    உங்க சர்வீஸ்ல எத்தனையோ பார்த்து இருப்பீர் ஆனால் எங்கள மாதிரியான புரட்சிகர அமைப்பை நீங்க பார்த்திருக்க மாட்டீர், அதான் இவ்வளவு திமீரு.

    நீதிபதி கர்ணன்:
    வைகுண்டராஜனால் அரசாங்கத்துக்கு எத்தனை வரி வருவாய் வருகிறது என தெரியும?

    நீதிபதி கர்ணன்:
    உடம்புக்கு முடியவில்லை என்றல் 108 ஆம்புலன்ஸை அழையுங்கள்.

    எனது பதில்:
    தனியார் கொள்ளைக்காக நாட்டு மக்களை நோய்வாய்பட செய்து சுடுகாட்டுக்கு அல்லி செல்லதான் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை அரசு நடத்தி வருகிறது என்பதை சொல்கிறார் மதிப்பிழந்த நீதிபதி கர்ணன். நாங்கள் ஏன் 108 ஆம்புலன்ஸ்க்கு போகணும் மக்களுக்கு நீதி வழங்கமல் வைகுண்டராஜனுக்காக பேசும் ஏன் நீதி மன்றத்தில் இருக்கிங்க.

    நீங்கள் கர்ணனாக இருந்தள் உங்கள் சொத்துக்களை வைகுண்டராஜணுக்கு வாரி வழங்குங்கள் மக்கள் சொத்துக்களை வாரி வழங்கும் உரிமை உங்களுக்கு கிடையாது.

    மக்கள் வழக்குரைஞரும், மூத்த வழக்குரைஞருமான சங்கரசுப்புவை. இழிவுபடுத்தியதற்க்கு உடனே பகிரங்க மன்னிப்பு கேளுங்கள் வைகுண்டராஜனின் தாதுமணல் கொள்ளைக்கன உறிமம் வழங்கதே வைகுண்டராஜன் தாக்கள் செய்த மணுவை நிரகரி.

  2. பூனைக்கு யார் மணி கட்டுவது? என்பது போல தான் ‘லார்ட்’ கர்ணன் வலம் வந்தார். மனித உரிமைப் பாதுகாப்பு மையம் மணியை கட்டும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தொடர்ந்து போராட வாழ்த்துக்கள்!

  3. This ‘லார்ட்’ கர்ணன் also a DALIT is in’t? Why he behaves like this.
    After nomination as Judge his caste also changes as BRAHMIN or what.
    Otherwise you are talking about Judge KANNAN not of KARNAN,please clarify.

  4. What is the status of his son death case? Any links in vinavu regarding his son death case articles? Please share if any one have. Feeling very sad for him. Good that we have guy like him.

  5. கர்ணன் வாஙிகின காசுக்கு கூவுறா….
    (அ)நீதிமன்றங்களில் நடக்கும் கூத்து இது..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க