privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.ககும்பகோணம் தீ விபத்து வழக்கு – தனியார்மயம் தண்டிக்கப்படவில்லை !

கும்பகோணம் தீ விபத்து வழக்கு – தனியார்மயம் தண்டிக்கப்படவில்லை !

-

ல்வி தனியார்மயத்தின் கொடூர படுகொலைகளில் ஒன்றான கும்பகோணம் தீ விபத்து வழக்கில் தஞ்சை முதல் அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. 94 குழந்தைகள் உயிரோடு எரிக்கப்பட்டு கொல்லப்பட்ட அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேரை விடுதலை செய்து 10 பேரை குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. பள்ளி நிறுவனர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனையும் ரூ 51 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது. பள்ளித் தாளாளர் சரஸ்வதி, தலைமையாசிரியை, சத்துணவு அமைப்பாளர்கள் ஆகியோருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. அரசு அதிகாரிகளுக்கு 5 ஆண்டு சிறை, அபராதம் மற்றும் பள்ளிக்கு சான்றிதழ் வழங்கிய பொறியாளருக்கு 2 ஆண்டு சிறை, அபராதம் வழங்கப்பட்டிருக்கிறது.

பெற்றோர்
தமது குழந்தைகளின் முகங்களை மறக்க முடியாத பெற்றோர், சிறார்களின் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து கண்ணீர் சிந்தி கொண்டிருக்கின்றனர். (படம் : நன்றி தி இந்து)

3 ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள், நகராட்சி அலுவலர்கள் உட்பட 11 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்ட 94 குழந்தைகள் இன்று உயிரோடு இருந்திருந்தால் 17-18 வயது ஆகியிருக்கும். வாழ வேண்டிய தமது குழந்தைகளின் முகங்களை மறக்க முடியாத பெற்றோர், சிறார்களின் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து கண்ணீர் சிந்தி கொண்டிருக்கின்றனர். படுகாயமடைந்த 18 குழந்தைகள் இப்போதும் உயிர் வாழ்வதற்கு போராடிக் கொண்டிருக்கின்றனர்.

இப்போது 17 வயதாகும் ராகுல் தீக்காயங்களால் சிதைக்கப்பட்ட கைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறான். “அப்ப நான், இங்கிலீஷ் மீடியத்துல 3-வது படிச்சிக்கிட்டிருந்தேன். ஷூ, சாக்ஸ், டை எல்லாத்தையும் கழட்டிட்டு மேல கூட்டிப் போய் ஒக்கார வச்சிட்டு, கிரில் கதவப் பூட்டிட்டு டீச்சருங்க எல்லாம் கோயிலுக்குப் போயிட்டாங்க” என்கிறான். “நடந்த கொடுமைக்குக் காரணமா இருந்தவங்களுக்கெல்லாம் சரியான தண்டனை கிடைக்கணும், இது மாதிரி வேற யாருக்கும் இனிமே நடக்கக் கூடாது” என்கிறான்.

“நான் எங்கயுமே வெளியே போக முடியாது. இந்தப் புள்ளக்கி என்ன ஆச்சி? கை ஏன் இப்படி இருக்குன்னு கேக்குறாங்க” என்று சொல்லும் அப்போது 3-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த கௌசல்யா, “நான் நெறயப் படிக்கணும்னு ஆசப்படுறேன். ஆனா, எங்க அப்பா கூலி வேலதான் பாக்குறாங்க. அதனால, அரசாங்கம்தான் என்னப் படிக்க வெக்கணும்” என்று கேட்கிறாள். குழந்தைகளை படிக்க வைக்கும் பொறுப்பை அரசாங்கம் கை கழுவ வேண்டும் என்பதுதான் நாட்டின் மிகச்சிறந்த ‘அறிஞர்’களின், நடுத்தர வர்க்கத்தின் நம்பிக்கை என்பது அவள் உலகில் இன்னும் தெரியாத ஒன்று.

“அத மறக்க நெனச்சாலும் முடியல. சின்னதா ஃபயர் சர்வீஸ் சத்தம் கேட்டாக் கூட ஸ்கூலோட ஞாபகம்தான் வருது” என்று சொல்லும் பா.விஜய், “கேஸ் நடந்தப்ப கும்பகோணத்துல அப்படி ஒரு ஸ்கூலே இல்ல. நீ பொய் சொல்றன்னுல்லாம் சொன்னாங்க. அவங்க புள்ள இப்படிப் பாதிக்கப்பட்டிருந்தா இப்படி கேப்பாங்களா? எங்கள பேசவே விடல. இதுல பாதிக்கப்பட்ட 18 பேரு உயிரோடதான் இருக்கோம்” என்று வேதனையோடு கூறுகிறான்.

கும்பகோணம் பள்ளி
நடுத்தர வர்க்கத்தினரோ முறையான கட்டிடம், பாதுகாப்பான ஏற்பாடுகள் இல்லாத பள்ளிக்கு தமது குழந்தைகளை அனுப்பிய கொல்லப்பட்ட குழந்தைகளின் பெற்றோரை குற்றவாளியாக்குகின்றனர்.

விபத்து குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு நியமித்த சம்பத் கமிஷன் நடந்த விபத்துக்கு முழுக்க முழுக்க அரசு அதிகாரிகள்தான் பொறுப்பு என்று முடிவு செய்தது. அறிக்கையை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு, ‘இறந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு ரூ 1 லட்சம், காயம் அடைந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு ரூ 50,000, இறந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு வீட்டு வசதி பட்டா’ என்று ஏற்கனவே வழங்கி விட்டதாக தனது கருணையை முடித்துக் கொண்டது.

சரியான இழப்பீடு கோரி பெற்றோர் தரப்பில் 2010-ல் உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆய்வுகுழு அமைக்க உத்தரவிடப்பட்டது. அதை எதிர்த்து செய்த முறையீடு தள்ளுபடி செய்யப்பட்ட பிறகும் விசாரணை குழு அமைக்காமல் மோசடி செய்து வந்தது தமிழக அரசு. அது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்ட பிறகு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது தமிழ அரசு. அதன் மீதான விசாரணையும் உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது, தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்கே பத்து ஆண்டுகள் ஆகியிருக்கிறது.

மூத்த கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன், “ஓலைக் கொட்டகையில் பள்ளி செயல்பட்டதால்தான் கும்ப கோணம் பள்ளித் தீ விபத்து ஏற்பட்டது என்று வழக்கை மாற்றிவிட்டனர்.” என்று குற்றம் சாட்டுகிறார்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணைச் செயலர் காளியப்பன், “இன்று வரை ஏராளமான பள்ளிக் குழந்தைகள் விதிமீறல், அலட்சியம், பொறுப்பின்மை காரணமாக அன்றாடம் பலியாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள் யாரும் தண்டிக்கப்படவில்லை” என்று கூறுகிறார். பத்மா சேஷாத்ரி மாணவர் ரஞ்சன், சேலையூர் சீயோன் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி சுருதி, கடலூர் செயின்ட் ஜோசப் பள்ளியில் ராம்குமார், நாமக்கல் தனியார் பள்ளியில் அருண்குமார், திருவொற்றியூர் ஸ்ரீசங்கர வித்யாலயா பள்ளி மாணவி வைஷ்ணவி என்று கல்வி தனியார் மயம் அடுத்தடுத்து இளம் உயிர்களை பலி வாங்கிக் கொண்டிருக்கிறது.

சீயோன் பள்ளி சுருதிபள்ளிக் கல்வியில் லாபவேட்டையை ஊக்குவிக்கும் தனியார் மயத்தை புகுத்தி, அரசுப் பள்ளிகளை புறக்கணிக்கும் கொள்கை முடிவெடுத்து, சாதாரண ஏழை மக்களைக் கூட தனியார் கல்வி வியாபாரிகளின் லாப வேட்டை தோற்றுவிக்கும் பேரழிவை நோக்கித் தள்ளிய மத்திய, மாநில அரசுகளை ஊடகங்களோ இல்லை கட்சிகளோ அவ்வளவு ஏன் மக்களால் கருத்தளவில் கூட குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்படவில்லை. சொல்லப் போனால் கல்வியில் தனியார்மயமே சரி, சாத்தியமென்பதை ஜனநாயகத்தின் நான்கு தூண்களும் உறுதிபட நிலைநாட்டியிருக்கின்றன.

குறுகலான ஒரு கட்டிடத்தில் ஸ்ரீ கிருஷ்ணா உதவிபெறும் தொடக்கப்பள்ளி, சரஸ்வதி நர்சரி பள்ளி, ஸ்ரீகிருஷ்ணா மகளிர் உயர்நிலைப்பள்ளி என மொத்தம் 700 மாணவ–மாணவிகள் படித்து வந்தது, அங்கு போதிய பாதுகாப்பு வசதியும், தீயணைப்பு கருவிகளும் இல்லாதது இவற்றை சுட்டிக் காட்டும் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரோ முறையான கட்டிடம், பாதுகாப்பான ஏற்பாடுகள் இல்லாத பள்ளிக்கு தமது குழந்தைகளை அனுப்பிய கொல்லப்பட்ட குழந்தைகளின் பெற்றோரை குற்றவாளியாக்குகின்றனர். தமது குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் இந்த வசதிகள் எல்லாம் இருப்பதாக சமாதானப்பட்டுக் கொள்கின்றனர்.

இவ்வாறாக, இந்த தீவிபத்துக்கு காரணமாக இருந்த முதன்மை குற்றவாளிகளை சம்பவத்துக்கு முன்னரே சமூகத்தின் கூட்டு மனசாட்சி விடுவித்து விட்ட பிறகு அடுத்தடுத்த நிலையில் இருந்த குற்றவாளிகள் மீது சட்டம் தனது கடமையைச் செய்ய ஆரம்பித்தது.

மாநில தொடக்கப்பள்ளி கல்வி இயக்குனர் கண்ணன், வட்டாட்சியர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம். பழனிச்சாமி போன்ற உயர் அதிகாரிகள் முதல், கல்வித் துறையின் கீழ்நிலை ஊழியர்கள், நகராட்சி அதிகாரிகள் மற்றும் பள்ளி நிறுவனர், தாளாளர், ஆசிரியர்கள், சத்துணவு பொறுப்பாளர், சமையல்காரர் என்று 24 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.

பெற்றோர்
நீதிக்கு காத்திருக்கும் பெற்றோர் (படம் : நன்றி தி இந்து)

கும்பகோணம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஒன்றரை ஆண்டுகளில் 501 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன. 3,126 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், இந்த வழக்கு தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு 2006, ஜூலை 12-ஆம் தேதி மாற்றப்பட்டது.

ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்களின் செல்வாக்கு, பதவி அந்தஸ்து, பண பலம், இவற்றின் மூலம் அவர்கள் அமர்த்த முடிகிற வழக்கறிஞர்கள் இந்த அடிப்படையில் இந்திய நீதித்துறையின் நீதி என்ற விசித்திரமான ஜந்து வாலை ஆட்டும். குற்றம் சாட்டப்பட்டவர்களில் மாநில தொடக்கப்பள்ளி கல்வி இயக்குனர் கண்ணன், வட்டாட்சியர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம். பழனிச்சாமி ஆகிய மூவரும் தங்களை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில் தமிழக அரசின் பரிந்துரைப்படி அவர்கள் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். விபத்து என்று வந்த பிறகு அரசின் உயர் அதிகாரிகளை காப்பாற்ற வேண்டிய தேவை அரசுக்கு இருப்பதால்தான் இது நடந்ததே அன்றி அந்த அதிகாரிகளின் தனிப்பட்ட விருப்பம் மட்டுமல்ல.

இதை அரசின் எல்லாத் துறைகளிலும் பார்க்கலாம். லாக்கப் கொலைக்காக உயர் போலிசு அதிகாரிகள் தண்டிக்கப்படாமல் கீழ் நிலை போலிசுக்காரர்கள் மட்டும் தண்டிக்கப்படுவது போன்று, அல்லது ஏதாவது பெரும் ஊழல் வழக்கோ இல்லை வேறு பிரச்சினைகளிலோ மாட்டிக் கொண்டால் அதிகார வர்க்கத்தின் ஒரு நபரை மட்டும் பலிகடாவாக கொடுத்து மற்றவர் தப்பிவிடுவார்கள். இதுதான் அரசின் தாரக மந்திரம். அது கும்பகோணம் தீ விபத்து வழக்கிலும் ஒளிவு மறைவின்றி நடந்திருக்கிறது. தொடக்கப்பள்ளி கல்வி அதிகாரிகளின் வேலைகளை பார்த்து ஆய்வு செய்து கட்டுப்படுத்த வேண்டிய உயர் அதிகாரிகள் இங்கே வேண்டுமென்றே தப்பவைக்கப்பட்டிருக்கின்றனர். கீழ் நிலையில் வாங்கப்படும் லஞ்சம் மேல் நிலை வரைக்கும் பங்கு வைக்கப்படும் சமத்துவம் இங்கு இல்லை.

நினைவகம்
குழந்தைகளுக்கு கல்வி அளிக்கும் பொறுப்பை தட்டிக் கழித்த, கொல்லப்பட்ட குழந்தைகளுக்கு இழப்பீடு கொடுக்க மறுத்து நீதிமன்ற படியேறும் தமிழக அரசு அவர்களது நினைவாக கும்பகோணத்தில் ஒரு நினைவகத்தை கட்டியிருக்கிறது.

கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பாலகிருஷ்ணன் தன்னை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த பிறகுதான் உச்சநீதிமன்றம் “என்னது இன்னும் வழக்கு முடியவில்லையா?” என்று ஏதோ அதிர்ச்சியடைந்தது போல கேட்டது. என்ன இருந்தாலும், நீதிமன்றங்களில் நீதி கிடைக்கும் என்ற மக்களின் நம்பிக்கையை பெயரளவுக்காவது தக்க வைக்க வேண்டுமல்லவா? இந்த வழக்கை வேகமாக நடத்தி முடிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து 2012 செப்டம்பர் 12 அன்று தஞ்சாவூர் முதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் 21 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இந்த தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.

“முதலில் இந்த வழக்கில் 3 பேரை விடுவித்தனர். இன்று 11 பேரை விடுவித்துள்ளனர். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக குற்றவாளிகளை விடுவிப்பதை காட்டிலும் மொத்தமாக அனைவரையும் விடுவித்து விடுங்கள். குழந்தைகளை இழந்த நாங்கள் இவர்களுக்கு பதிலாக சிறை தண்டனையையும் சேர்த்து அனுபவித்துக் கொள்கிறோம்” என அழுகின்றனர் கொல்லப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்.

குழந்தைகளுக்கு கல்வி அளிக்கும் பொறுப்பை தட்டிக் கழித்த, கொல்லப்பட்ட குழந்தைகளுக்கு இழப்பீடு கொடுக்க மறுத்து நீதிமன்ற படியேறும் தமிழக அரசு அவர்களது நினைவாக கும்பகோணத்தில் ஒரு நினைவகத்தை கட்டியிருக்கிறது. கொல்லப்பட்ட குழந்தைகள் அந்த நினைவகத்தில் புகைப்படங்களாகவும், ராகுல், கௌசல்யா, விஜய் உள்ளிட்ட 18 குழந்தைகள் தமது வாழ்க்கை போராட்டத்தினூடாகவும் தனியார் லாபவேட்டையின் ரத்தவெறியை நமக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கின்றனர்.

கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் மூலம் கல்வி தனியார்மயத்தில் இருக்கிறது. இந்த அநீதியை முறியடிக்கும் வரை கொல்லப்பட்ட குழந்தைகளுக்கு இப்போது நீதி வழங்கியதாக யாரும் கருதிக் கொண்டால் அதுதான் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.

மேலும் படிக்க

  1. தவறு செய்பவர்களுக்கு ஒரு பாடமாக இந்த தீர்ப்பு அமையும் என எதிர்பார்த்திருந்த நிலையில், 11 பேரை விடுவித்து கோர்ட் அளித்துள்ள தீர்ப்பு, ஏமாற்றமும் மனவேதனையும் அளிப்பதாக உள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 21 பேருக்கும் தண்டனை வழங்க வேண்டும்.

  2. இந்த தீர்ப்பு மக்களுக்கு ஒரு நல்ல பாடம், இந்த நாட்டில் நீதி இறந்து பல காலம் ஆகி விட்டது. இனி இங்கு வாழ்வதற்க்கு உண்டான தகுதிகள் – அரசியல்வாதி (வியாதி அ வியாபாரிகள் என்றும் சொல்லலாம்), பண முதலைகள், ஊழல் பெருச்சாளிகள் மற்றும் உயிர் இருந்தும் பிணமாக…….

  3. சாமானியனுக்கு ஒரு சட்டமும், அவாள்களுக்கு ஒரு சட்டமும் உள்ள தேசத்தில் இன்னும் என்ன கிடைக்கும்.
    இதுவாவது பரவாயில்லை. ஆனால் பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கும், குஜராத் கலவர வழக்குகளும் இதற்கும் முந்தியவையாயிற்றே….. இன்று வரை வழக்கையே தொடரமுடியாத அளவிற்கு வாடிக்கையாகிக் கொண்டிருக்கின்றதே ….

  4. இன்னும் விடியவில்லை,நள்ளிரவில் வாங்கியதாக சொல்லப்படும் சுதந்திரம் தொலைந்து போனதோ! பெரியார் கருப்புக்கட்டம் போட்டு எழுதியது சரியே! பார்ப்பன-பனியா கூட்டமைப்பில் மக்கள் ரத்தம் உறிஞ்சப்படும்?

  5. கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பு 10 ஆண்டுகளுக்குப் பின் வெளிவந்துள்ளது. இன்னும் உயர்நீதிமன்றம்,உச்சநீதிமன்றம் என படிக்கட்டுகள் உள்ளன.அங்கு மீதியுள்ள குற்றவாளிகள் அனைவரும் விடுதலை ஆக வாய்ப்புள்ளது.அதிகார வர்க்கமும்,அரசியல் வாதிகளும் தண்டிக்கப்பட வாய்ப்பில்லை.உச்சநீதிமன்றத்தில் விசித்திர காட்சிகளும் அரங்கேறலாம்.94 பள்ளி குழந்தைகள் இறக்க அபரிமிதமாக நெருப்பை கக்கிய தீ குச்சியே காரணம் என்பதால் அந்த தீ பெட்டியை விற்பனை செய்த பெட்டிக்கடை பாயை தூக்கில் போட்டு தேசத்தின் மனசாட்சியை திருப்தி செய்யவேண்டும்,அப்படியும் தேசத்தின் மன சாட்சி திருப்தி அடையாவிட்டால் இன்னும் இரண்டு பாய்களை….என திருப்தி அடையும்வரை போட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.

  6. first this the parents’ mistake. they need more moiney. so they need englishmedium education.they want to show their prestige to others. so they are admiting nursery schools. this accident happened unexpectedly. the same in Padma seshadrischool. how long that swimmingpool running in that school. howmany students learned swimming? on that day that happened unexpectedly. the parents also to teach the lifesavingsystems. in our countryonly the killer of the primeminister can marry in jail, canenjoy firstnight and deliver the kid. and the fools are supporting that and representing to free them.In poone yesterday what happened. who made that. how many lives gone.howmany persons help the firedkids’ family in Kumbakonam.just mouthwash talking everybody. Some 2 days back Annanagar police helped a lot to save a life. We have to appreciate the driver Srinivasan who drived the vehicle to handover the heart.everybody is seeing the minuspoints and make that big like cinimas. good things is not comingout.

Leave a Reply to Sarav பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க