Monday, December 6, 2021
முகப்பு சமூகம் சினிமா நகைச்சுவை நடிகர் வெங்கல்ராவ் – நேர்காணல்

நகைச்சுவை நடிகர் வெங்கல்ராவ் – நேர்காணல்

-

சினிமா நேர்காணல் – 3

நாங்கள் சென்றபோது துணைவியார் உதவியுடன் வெங்கல்ராவ் மொட்டை போட்டுக் கொண்டிருந்தார். இந்த மொட்டையும் சமீபத்திய நகைச்சுவை வேடங்களில் அவருக்கு கிடைத்த ஒரு அங்கீகாரம்தான். ஆனால் சினிமா உலகில் இந்த அங்கீகாரம் என்ன வாழ்க்கையை வழங்க முடியும்?நேர்காணலை படியுங்கள்!

வினவு:– சினிமாவுக்கு வந்து சேர்ந்த வரலாறை விளக்குங்களேன்!

வெங்கல்ராவ்:– எங்க ஊரு விஜயவாடா பக்கத்துல நாட்டுப்புறம் சார். அதோட பேரு புனாதிபாடு. விவசாயம் தான் தொழில். அதிலயும் கூலி வேல தான். எங்களுக்கு நெலமெல்லாம் அதிகமில்ல. ஜமீன்தார் நெலத்துல தான் வேல அதிகம் செய்வாங்க. சின்ன வயசுலயே அப்பா இறந்துட்டாரு. நாங்க அண்ணன் தம்பி நாலு பேரு, அக்கா ஒருத்தரு. அம்மாவால எங்களுக்கு சோறு போட முடியல. காலைல அம்பது இட்லிக்கு நானு எங்கடா போறதுன்னு சொல்வாங்க. ஐதராபாத்தில் ஒரு பத்து வருசம் போராடி பாத்துட்டுத்தான் சினிமாவுக்கு வந்தேன்.

அப்போ சினிமா அங்கே எடுக்காங்க, இங்கே எடுக்காங்க, அங்கே போனா சோறு கிடைக்கும்னு கேள்விப்பட்டேன். அதற்கு யாரை பாக்கணும்னு தெரியாது. அதுக்காக ரொம்ப ட்ரை பண்ணினேன் சார். அப்ப எனக்கு தமிழே வராது. முப்பத்தெட்டு வயசுலதான் மெட்ராஸ் வந்தேன்.

டிக்கட், ரிசர்வேசன் என எதுவமே இல்லாம ஒத்தக் காலில் நின்னுட்டே ட்ரெயின்ல இங்க வந்து பைட்டர் யூனியன்ல கார்டு வாங்கிட்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒரியா, பெங்காலி, இந்தி, இங்கிலீசுன்னு நடிச்சு ஒரு நல்ல ஃபைட்டரா மாறிட்டேன். தர்மேந்திரா சார், அமிதாப்பச்சன் சார், அப்புறம் தர்மேந்திரா சாரோட பையன், ரஜினி சார், கமல் சார், அப்புறம் விஜயகாந்த் சார், கார்த்திக், சத்யராஜ் சார், தெலுங்கில என்.டி.ராமாராவ், நாகேஸ்வராராவ், பாலகிருஷ்ணா, நாகார்ஜூனா என எல்லோரிடமும் ஃபைட் பண்ணியிருக்கேன் சார்.

35 வருசமா ஃபைட் பண்ணியதில் முட்டி, இடுப்பெல்லாம் ஒரே வலி. அதுனால இனிமே முடியாதுன்னு ஒரு முடிவுக்கு வந்துட்டேன். வடிவேலு ஐயாகிட்ட போயி ‘’ஐயா இத்தன வருசமா இத்தினி லேங்குவேஜ்ல பைட் பண்றேன். ட்ரெயின், குதிரை, மேல கீழ எல்லாம் ஃபாலிங் பண்ணி உடம்பெல்லாம் போச்சு. உங்க கூட காமெடிக்கு வாரேன்யா’’ன்னு கேட்டேன். அவரும் சரிப்பா வான்னு எனக்கு நெறய காமெடி கொடுத்தாரு.

“தலைநகரம்”-ங்குற படத்துல ஜெயில்ல ‘ரா ரா சரசக்க ரா ரா’ன்னு ஒரு சின்ன பிட்டு கொடுத்தாரு. ஏபிசிடி-ங்கிற படத்துல மூக்குல பஞ்சு வச்சிட்டு பஸ்ஸூல பிணமா நடிக்கணும். அத வெச்சு எம் மவன் சம்பாதிப்பாங்கிறதுதான் சீன். இது டில்லி, பம்பாய்னு எங்கெங்கோ போய் பேமசாக்கியிருச்சு. கந்தசாமி படத்துல தலையில வச்ச கைய எடுத்தா அப்படியே கடிக்கிற மாதிரி ஒரு சீன் கொடுத்தாரு. அப்படி அவரு கொடுத்த வாய்ப்புலதான் நான் இன்னைக்கு சோறு சாப்பிடுறேன்.

ஃபைட்டர் சங்கம் இல்லன்னா நான் இல்ல. ஃபைட் மாஸ்டர்களுக்கு நான் செல்லப்பிள்ள மாதிரி. வெங்கல்ராவுக்கு வயசு சாஸ்தினு காமெடி பைட் மட்டும் தருவாங்க.

சினிமா முன்ன மாதிரி இல்ல சார். எம்.ஜி.ஆர் சார், சிவாஜி சார் இருந்த காலம் மாதிரி இப்போ இல்ல. அப்போ நூறு பேருக்கு ஒரு படத்துல வேல இருக்கும். இப்போ அஞ்சு பேருக்குத்தான் வேல. இப்போ சினிமாவ நம்பி யாரும் சோறு சாப்பிட முடியாது. பசங்களுக்கு பீசு கட்ட முடியல. வாடகை கட்ட முடியல. சினிமாக்காரர்ல நூத்துக்கு எழுபத்தி ஐந்து பேருக்கு சொந்த வீடே கிடையாது சார். தெலுங்கு தெலுங்குக்கு போயிருச்சு, மலையாளம் மலையாளத்துக்கு போயிருச்சு, கன்னடம் கன்னடத்துக்கு போயிருச்சு, இந்தி, இங்கிலீசெல்லாம் இங்கிருந்து போயிருச்சு. தமிழ்நாடு ஒன்ன வச்சு எல்லோரும் சாப்பிட முடியல ஐயா.

இந்த சினிமா தொழிலுக்கு வந்ததே தப்புன்னு இப்போதான் தெரியுது. வேற தொழிலும் தெரியாது. வாய்ப்பு வரும், நேரம் வரும்ணு எதிர்பார்த்து எதிர்பார்த்து எல்லாருக்கும் வயசானதுதான் மிச்சமுங்க. எம்.ஜி.ஆர். ஐயா மாதிரி, சிவாஜி ஐயா மாதிரி, ரஜினி சார் மாதிரி, கமலஹாசன் சார் மாதிரி வாய்ப்பு எல்லாருக்கும் வருமா. சினிமாவுல யாருக்கோதான் அதிர்ஷ்டம் வரும்.

வினவு:– உடன் பிறந்தவர்கள் என்ன செய்கிறார்கள்?

வெங்கல்ராவ்:– அக்கா, மாமா எல்லாம் இறந்துட்டாங்க. அவங்க பசங்க இருக்காங்க. மத்தவங்க எல்லாம் விவசாயம்தான் பண்ணுறாங்க. நான் சினிமாவுக்கு வந்து முப்பது வருசமானாலும் யாரையும் இங்க கூட்டி வரவில்லை.

வெங்கல்ராவ் வினவு:– சண்டைக் காட்சிகளில் நீங்க ஏதாவது ஆபத்தான சம்பவங்களை சந்திச்சிருக்கீங்களா?

வெங்கல்ராவ்:– நாலைந்து வாட்டி உயிரு போயிட்டு வந்திச்சு சார். ஆபவாணன் இயக்கத்துல விஜயகாந்த், ராம்கி, நிரோஷா நடித்த செந்தூரப்பூவே படம் தேனியில ஷூட்டிங்க்.

ட்ரெயின் வந்து போன பிறகு மட்டும் படப்பிடிப்பு நடக்கும். பதினைந்து நாட்கள் வரை படப்பிடிப்பு நடைபெற்றது. ஃபாலிங் பண்ணும்போது, ட்ரெயினை தாண்டி குதிக்கிறதுன்னு எல்லோருக்குமே நிறைய அடிபட்டது. எனக்கு குதிக்கையில் மாரிலயும், கழுத்து பின்னாடியும் அடிபட்டது. அப்பிடி பத்து பதினைஞ்சு வாட்டி அடிபட்டிருக்கிறது.

தயாரிப்பாளர் தரப்புல மாத்திரை கீத்திரை தருவாங்க. சின்ன கம்பெனியா இருந்தால் ஐம்பதாயிரம் ஒரு லட்சம் வரைக்கும் ஆசுபத்திரில செலவு பண்ண முடியாது, பெரிய கம்பெனின்னா கொஞ்சம் பார்ப்பாங்பக. அதற்கப்புறம் படப்பிடிப்புக்கு வரும் வரைக்கும் மாதம் இரண்டாயிரம், மூவாயிரம் வரை குடும்பத்துக்கு தருவாங்க.

நான் எந்த கம்பெனியிலும் வாங்கியதில்லை. அப்படியே அடிபட்டாலும் முரடன் போல ஜம்முனு வந்திடுவேன். நிறைய பேரு காரு, பைக்ல ஜம்ப் பண்ணி ஸ்பாட்லயே இறந்து போயிருக்காங்க.

ரொம்ப முன்னால ராமராஜன் சார் படம்னு நினைக்கிறேன். மாஸ்டர் ஆர்.எஸ்.பாபு சாரோட மச்சானுக்கே கண்ணாடியை உடைக்கையில் பின்புறமாக ஒரு அரையடிக்கு கண்ணாடி பீஸ் இடுப்புக்கு மேலே குத்திக் கொண்டது. ஒரு பக்கம் கையும், காலும் வரவேயில்லை. இவர் பேரும் பாபுதான். ஒரு பத்து வருசம் எந்த வேலைக்கும் போக முடியல. ஆர்.எஸ்.பாபு சார்தான் உதவி செய்தார். கடைசியில அவரு திரும்பவும் வந்து பெரிய பைட்டரா மாறிட்டாரு. இப்போ அவரு பையன் கூட பைட்டராயிட்டாரு.

லோகுன்னு பல்ராம் தம்பி இறந்திருக்கான். ஓசூர்ல ஒரு பைக் ஜம்பர் இறந்திருக்கான். யார் யாரு என்னென்ன படத்துல இறந்தாங்கனு எனக்கு கரெக்டா தெரியாது. பத்து பதினைந்து வருடமாக நான் இந்த பைட்டுக்கெல்லாம் போகவில்லை. காமெடி சீனுக்கு வந்துட்டேன். ஆனால் பைட்டருங்க நிறைய பேருக்கு கை, கால் அடிபட்டு தொழிலுக்கு வர முடியாம போனத பாத்திருக்கேன். அவங்க பேமிலி படுற கஷ்டமெல்லாம் யாருக்கு தெரியும்

வினவு:– அப்படியானால் எதிர்காலத்துக்கு என்னதான் பண்ணுவார்கள்?

வெங்கல்ராவ்:– அட நீ வேற சார். பைட்டருக்கு கவர்ன்மெண்ட் இன்சூரன்சே இல்லங்குறான். நீ பாட்டுக்கு கப்பல் மேல இருந்தெல்லாம் குதிப்பே. அதுக்கெல்லாம் இன்சூரன்சு தர முடியாதுன்னுட்டான். யூனியன்ல தலைவருங்க நிறைய யோசனையெல்லாம் பண்ணுறாங்க. ஆனாலும் முடியாது சார்.

வினவு:– முப்பது ஆண்டு சினிமா வேலையில வாழ்க்கைய எப்படி சமாளிக்கிறீர்கள்?

வெங்கல்ராவ்:– சாப்பிட போக, பசங்களுக்கு பீசு கட்ட, கல்யாணம் கட்டிக் கொடுக்கவும் சரியா போச்சு சார். வாடகை வீட்டில்தான் இருக்கிறேன். (அவர் வீடு ஒரு பத்துக்கு பத்து அறையும், ஒரு ஆள் கூட நுழைய முடியாத சமையல் அறையும் மட்டும்தான். பொது குளியலறைதான். இதற்கு மாதம் நான்காயிரம் ரூபாய் வாடகை). சினிமாவுல கார்ல போனா ஒரு சம்பளம், பைக்ல போனா ஒரு சம்பளம். நான் இப்போதான் சைக்கிள்ல போக ஆரம்பிச்சிருக்கேன். இதுதான் விசயம். நான் ஊருக்கு போனா நீ சினிமாவுல இருக்க, நல்லா காசு வரும், ஏன்டா பிச்சக்காரன் மாதிரி இருக்கனு கேக்குறாங்க.

வினவு:– சண்டை வேலை பாத்த போது எத்தனை நாள் வேலை? என்ன வருமானம் கிடைக்கும்?

வெங்கல்ராவ்:– ஐந்தாறு நாள்தான் வேல கெடைக்கும். மத்த நாட்களெல்லாம் சும்மாதான் இருக்க வேண்டும். அப்போ இரண்டு நாளைக்கு முந்நூற்று ஐம்பதிலிருந்து நானூறு வரை கிடைக்கும். இப்போ அது கொஞ்சம் உயர்ந்து ஆயிரத்து ஐநூறு ஆகியிருக்கிறது.

வினவு:– உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்? அவர்கள் என்ன செய்கிறார்கள்?

வெங்கல்ராவ்:– ஒரு பையன் இறந்து விட்டான். ஒரே பொண்ணு. ஆந்திராவில் கட்டிக் கொடுத்து விட்டேன். பத்தாவது வரைக்கும் படிக்க வைத்தேன். ஒரு பேரன், பேத்தி. அவங்க படிப்புக்கும் அப்பப்ப ஏதாச்சும் உதவி பண்ணுவேன்.

வினவு:– ஊரில் நிலம் ஏதாவது வாங்கிப் போட்டிருக்கிறீர்களா?

வெங்கல்ராவ்: – ஒண்ணும் வாங்கல. எனக்கு மட்டுமில்ல, சினிமாவுல நெறய பேருக்கு ஒண்ணுமேயில்ல. வடிவேலு சாரோட இருக்கதால வெளியில இருந்து பாத்தா எனக்கு வீடு, காரெல்லாம் இருக்கும்ணு நீங்க நெனைக்கலாம். அதெல்லாம் உண்ம கிடையாது.

ஆனா இந்த தொழில்ல இருக்குற பல பேரு பக்கத்து வீட்ல நூறு இருநூறு கடன் வாங்கியாவது பொழுத பெருமையா கழிப்பாங்க. பைக் வச்சிருப்பான் பெட்ரோல் போட துட்டிருக்காது. கையில காதுல செயின் போட்டிருப்பான் சாப்பாட்டுக்கு வழியிருக்காது. இது அப்படிப்பட்ட தொழில் சார்.

வினவு:– உங்களை தமிழ்நாட்டில் தெலுங்குக்காரன் என்று வித்தியாசம் பார்க்கிறார்களா?

வெங்கல்ராவ்: – அந்த மாதிரி பார்ப்பதில்லை. திறமை இருந்தால் வாய்ப்பு தருவார்கள். அரசியல்வாதிகள் பற்றி எனக்குத் தெரியாது. சினிமா தொழிலில் மட்டும்தான் என்னால் சொல்ல முடியும். நமது பைட்டர் யூனியனில் ஆயிரம் பேர் மலையாளி, இந்திக்காரர், தெலுங்குக்காரர் என பலவிதமாக இருக்கிறார்கள். இவரு இந்திக்காரரு, இவரு மலையாளத்துக்காரரு, இவரு கன்னடத்துக்காரருங்குற டிஃப்ரென்சு இங்கே கிடையாது. ‘உன்னால குதிரை ஓட்ட முடியுமா?’ ‘ம் பண்றேன்யா’ என்றால் ‘சரி வா’, ‘உன்னால ஹீரோக்கு டூப் போட்டு ஜம்ப் பண்ண முடியுமா’ ‘ம் சரிய்யா’ என்றால் ‘சரி வா’ என்பார்கள். கப்பலில் இருந்து குதிக்க யார் தயாரோ அவங்கள கூப்பிடுவாங்க. நீச்சல் தெரியாதுன்னா போ ன்னுடுவாங்க. காஸ்ட் டிஃப்ரன்சு பாக்க மாட்டாங்க.

வினவு:– குதிரைச் சண்டை போடுவீர்களா? இப்போது உங்களை சண்டைக் காட்சிகளுக்கு கூப்பிடுகிறார்களா?

வெங்கல்ராவ்: – குதிரை சண்டை போடுவேன். யானை சண்டை போடுவேன். ட்ரெயின் ஓட்டுவேன். கேப்டன் பிரபாகரன் படம் மாதிரி பல படங்களில் குதிரை ஓட்டியிருக்கிறேன். ‘வா மாமா, ஒரு காமெடி பைட் இருக்கு’ என்று கூப்பிடுவார்கள். ஆனால் இப்போல்லாம் சின்ன பசங்க வந்துட்டாங்க. சும்மா அடிச்சா கில்லி மாதிரி போய் விழணும். நம்மாள முடியாது. வயசாயிட்டுது. நாம ஃபைட்டுக்கு போயி சரியா பண்ணலேன்னா யாரும் நம்மள கேவலமா நெனச்சுறக் கூடாதுன்னு பயமா இருக்கு. அதான் போறதில்ல.

வினவு:– காமெடி சண்டை என்றால் என்ன? சம்பள வித்தியாசம் இருக்குமா?

வெங்கல்ராவ்: – காமெடி சண்டை என்றால் ஹீரோ நம்மள அப்படி திரும்பி பார்க்குறப்போ நம்ம திருப்பி அடிக்காம ‘ஐயா சாமி, என்ன விட்டுரு. எனக்கொன்னும் தெரியாது’ன்னு சொல்லி கையெடுத்துக் கும்பிட்டு பயந்து போனது போல நடிக்கணும். ஆபத்து இல்லாத சண்டை. சம்பள வித்தியாசம் கிடையாது.

வினவு:– சண்டையில் இருந்து காமெடி பாத்திரங்களுக்கு மாறி எவ்வளவு காலம் ஆகிறது.? இதில் சம்பளம் அதிகமா?

வெங்கல்ராவ்:– ஆறு வருசம் ஆச்சு. நான் முப்பத்தைந்து வருசமா சினிமாவில் இருக்கேன். ஆனா இந்த ஆறு வருசத்துலதான் தமிழ்நாட்டுக்கே தெரியுமளவுக்கு மாறி விட்டேன். சம்பளம் ரொம்ப கம்மி சார். சில பேர் மூவாயிரம் தர்றான், சில பேரு நாலாயிரம் தர்றான். சூட்டிங் இப்போ கம்மி. ரெண்டு மாசமா வாய்ப்பே இல்லை.

வினவு:– சினிமாவுக்கு புதிதாக வர விரும்புபவர்களை நீங்கள் வரவேற்பீர்களா?

வெங்கல்ராவ் 3வெங்கல்ராவ்:– என்னோட சொந்தக்கார பசங்களையெல்லாம் நான் கூட்டிட்டு வரல. காரணம் நானே சொந்தமாக ஒரு வீடோ காரோ வாங்க முடியவில்லை. பசங்களுக்கோ, மனைவிக்கோ ஒரு நெய்ச்சோறு போடக் கூட வழியில்லாத நீயெல்லாம் ஏன் இருக்கேனு கேக்குறாங்க. ஃபைட் சீனெல்லாம் நடிக்க கூட்டியாந்து அவங்களுக்கு கை கால் போச்சுன்னா அவங்க அப்பா அம்மாவுக்கு யார் பதில் சொல்றது. சினிமால டான்சு, பைட், கேமராமேன் என எல்லாத்துலயும் நுழையுறதுக்கு இந்த மெட்றாசுல வந்து நெறய பேரு கஷ்டப்படுறாங்க. ஆனா அதுல நூத்துக்கு பத்து பேரு தான் ஜெயிக்கிறாங்க. மீதி தொன்னூறு பேரும் படுற கஷ்டத்த கொஞ்சம் யோசித்துப் பாருங்க

வினவு:– விலைவாசி உயர்வுக்கேற்ப உங்களுக்கு சம்பளம் அதிகரித்துள்ளதா? கேட்டால் உயர்த்தித் தருகிறார்களா?

வெங்கல்ராவ்:– பெரிய ஆர்ட்டிஸ்ட் கேட்டா தருவாங்க சார். நமக்கெல்லாம் தருவாங்களா? ஒரு பத்து நாள் சூட்டிங் இருக்கு வாறியான்னு கேப்பாங்க. நாமும் ஒரு முப்பதாயிரம் வருகிறதே என்று போவோம். போனால் இரண்டு நாட்களுக்குதான் வாயப்பு தருவார்கள். இப்போ அறுபது லட்சத்தில் கூட படமெடுக்கிறார்கள். அதுல என்ன சார் நமக்கு வாய்ப்பு கிடைக்கும். முன்னாடியெல்லாம் பெரிய ராஜ தர்பார், குதிரை அது இதுன்னு நூறு பேராவது நடிப்போம். இப்போ அதெல்லாம் இல்லாததால பத்து பேருக்குதான் சாப்பாடு கிடைக்குது.

எனக்கு சம்பளத்த கூட்டித் தரச் சொல்லி எல்லோரும் சொல்ல மாட்டார்கள். வடிவேலு சார் ஒரு மூவாயிரம், ஐயாயிரம் போட்டுத் தரச் சொல்லி கம்பெனில சொல்வார்தான். ஆனால் எப்போதும் அப்படி தர முடியாதுதானே. பத்து பேரு என்னப் போல இருப்பாங்க இல்லையா. இது சினிமா சார்.

வினவு:– எதிர்காலத்தை பற்றி என்ன திட்டம்?

வெங்கல்ராவ்:– இங்கே வரும்போது போட்டுக்கொண்டு வந்த அதே பேண்டு சட்டையோட திரும்பிப் போக வேண்டியதிருக்குமோ என்று நைட்டெல்லாம் யோசித்துப் பார்க்கிறேன். ஒரு பைட்டராக முடியல, ஒரு பெரிய நடிகராக முடியல. அப்படியே காலம் ஓடிப் போச்சு. நானே நகைய அடகு வச்சுதான் வாடகைய கட்டியிருக்கேன். அடுத்து வாய்ப்பு வந்தால் நகைய மீட்டு வருவேன். இப்படித்தான் காலம் போகுது. ஒரு நோய் நொடி வந்து படுத்தா என்ன செய்யணும்னு கூடத் தெரியல. சினிமா இப்போ தூங்குது சார். முன்னாடி காலைல ஆறு மணிக்கு ரெடியாகி யாரு கூப்பிடுவாங்கனு போனை எதிர்பார்ப்பேன். அஞ்சு மணிக்கெல்லாம் டாண்ணு அலாரம் அடிக்காமலே எழுந்து யார் கூப்பிடுவாங்கனு எதிர்பார்த்த நான் இப்போல்லாம் பதினோரு மணிக்கு எழுந்து பன்னிரெண்டு மணிக்குதான் யூனியன் ஆபிசுக்கு போறேன்.

பல பேரு வேல இருந்தாதான வருவாங்க. பஸ் கண்டக்டர், ஏர்போர்ட் வேல, கப்பல்ல வேலன்னு போயிடுறாங்க. மூட்டை தூக்குவது, குப்பை லாரி ஓட்டுவது, கார்ப்பரேசனில் வேலைக்கு போவது எனப் பலர் போய் விட்டார்கள். ரிப்பேரான வண்டிகளை சரிசெய்து அந்தந்த ஊர்களில் விட்டுவருவது என பல வேலைகளுக்கும் செல்கின்றனர். சினிமாவை நம்பி இப்போ அவர்கள் இல்லை

வினவு:– நீங்கள் அப்படி வெளி வேலைக்கு இதுவரை போகவில்லையா?

வெங்கல்ராவ்:– நான் இதையே நம்பியிருப்பதால வேற எந்த வேலைக்கும் போகல. என்னப் போல நெறைய பேர் வாய்ப்பு வரும் என்று தூங்கிக் கொண்டுதான் பொழுதைப் போக்குறோம்.

வினவு:– உங்களுக்கு பிடித்த கட்சி எது? தலைவர் யார்?

வெங்கல்ராவ்: – சினிமாக்காரனாக இருந்துகொண்டு நான் இதைச் சொன்னால் எதிர்க்கட்சிக் காரனுக்கு நான் பிடிக்காதவனாகி விடுவேன். அதனால் அது வேண்டாம். சினிமாவில் இருந்துகொண்டு அரசியல் பேசக் கூடாது. ஆனால் எனக்கு பிடித்த கட்சி, தலைவர்கள் இருக்கிறார்கள். அதனால்தானே நான் ஓட்டுப் போடுகிறேன். நான் யாருக்கு போட்டேன் என்று ஆண்டவனுக்கு தெரியும். கட்சியை பற்றி நான் பேசி விட்டு தமிழ்நாட்டில் நான் இருக்க முடியாது. தெலுங்கைப் பற்றியும் கேட்காதீர்கள். சென்னையிலேயே பாதி தெலுங்கு பேசுபவர்கள் இருக்கிறார்கள்.

வினவு:– உங்களுக்கு படிக்க தெரியுமா?

வெங்கல்ராவ்:– எனக்கு தெலுங்கு கூட படிக்க, எழுத தெரியாது. எங்க அம்மா, அப்பா கொடுத்த உடம்பை கொண்டு அப்போ என்னால நூறு கிலோ அரிசி மூட்டைய தூக்க முடியும். அத வச்சுதான் பைட்டரா வந்தேன். இப்போ பத்து வருசமா இங்க தொழிலு நல்லா இல்ல. இருந்தாலும் தமிழ் சினிமா போட்ட சோற்றைத்தான் இப்போதும் சாப்பிடுகிறேன்.

வினவு:– எழுதப் படிக்க தெரியவில்லை என்றால் ஏமாற்றி விட மாட்டார்களா?

வெங்கல்ராவ்:– நான் என்ன பத்து லட்சமா சம்பளம் வாங்குறேன். இரண்டு சீனுக்கு போனால் நாலாயிரம் நாலாயிரம் ஆக எட்டாயிரம் வாங்கப் போறேன். நம்ம சம்பளம் என்ன மளிகைக்கடை சாமான்கள் போல நீளமா என்ன, ஏமாறுவதற்கு? இதுக்கு படிப்பு தேவையில்லை

வினவு:– உங்களது அனுபவத்தில் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து பத்து தலைமுறை கதாநாயகர்களை பார்த்து விட்டீர்கள். அவர்களெல்லாம் கோடிகளில் சம்பாதித்துக் கொண்டு போகின்றபோது,  இங்கு வந்தபோது போட்டிருந்த ஆடையோடு நாற்பது ஆண்டுகள் கழித்தும் திரும்ப வேண்டியிருக்குமோ என்று இருக்கும் உங்களது நிலைமையை எப்படி பார்க்கிறீர்கள்?

வெங்கல்ராவ்:– அந்தக் காலத்திலேயே பெரிய திமிங்கல நடிகர்களிடம் போய் நிலம், வீடு வாங்க வேண்டும் என்று சொல்லி பணம் கேட்டு கைகட்டி நிற்கவில்லை. இப்போதும் இருக்கும் நடிகர்களிடமும் போய் கைகட்டி நிற்கப் போவதில்லை. இன்னைக்கு ஒரு பத்தாயிரம் ரூபா வாங்கிட்டா நாளைக்கு நம்ம பாத்து அவன் பணம் கேக்குறான்டானு கேவலமா பேசிருவாங்க. அதுனாலதான் நான் யாருட்டயும் பணம் வாங்கினதில்ல. அப்படியே பணம் சம்பாதித்தவங்க யாரும் என்ன கூப்பிட்டு ‘இந்தாடா இருபது வருசம் கஷ்டப்பட்டுட்டே. இந்தா ஒரு ரெண்டு மூணு செண்டு நெலம் வாங்கிக்கோ’னு சொல்லி பணமும் கொடுக்கல. எப்படி அவரு கொடுப்பாரு. பணமில்லையா. அவரு புள்ளங்களுக்கு வீடு, தோட்டம் வாங்குவாரு.

வினவு:– நீங்க நடிக்க வந்த பிறகு வில்லனாகவோ, அல்லது ஒரு பெரிய நடிகராகவோ முயற்சி செய்யவில்லையா?

வெங்கல்ராவ்:– முதல்ல பைட்டரா வந்துதான் இப்போ நடிகராயிருக்கேன். படிக்கட்டுல மேல போறப்ப ஸ்லிப்பாகி கீழே வர்றேனே தவிர மேல போகல. முயற்சி பண்ணாம இருந்தா இங்க இருக்க முடியுமா ஐயா

வினவு:– உங்களுக்கு என்ன வயது?

வெங்கல்ராவ்:– அறுபத்தி ஐந்துக்கு மேலே இருக்கும். என் மனைவிக்கு அறுபத்தி இரண்டு வயசாகுது. கவர்ன்மெண்ட் தரும் முதியோர் பென்சன் எங்களுக்கு தர மாட்டேங்குறாங்க. நான் யார் யாரையெல்லாமோ பிடிச்சு கவுன்சிலர பிடிச்சு பென்சனுக்கு எழுதிப் போட்டேன். இந்த ஏரியால எல்லோருக்கும் வந்துச்சு. எனக்கும் என் சம்சாரத்துக்கும் மாத்திரம் வரல. ஐந்தாறு வருசமா முயற்சி பண்றேன். கேட்டா என்னோட பிறந்த தேதி கேக்குறாங்க. எங்க அப்பா அம்மாக்கே அது தெரியுமானு எனக்கு தெரியாதே.

வினவு:– குடும்பத்தோடு தியேட்டருக்கு போயிருக்கிறீர்களா?

வெங்கல்ராவ்:– போனதில்லை சார். நான் நடிச்ச படத்தயே அங்க போயி பாக்கவா. பீச்சுக்கு, கோவிலுக்கு எல்லாம் போனதில்லை. என் சம்சாரம் மட்டும் சர்ச்சுக்கு போகும். அவங்க ஏசுநாதரை கும்பிடுவாங்க.

வினவு:– நீங்க சினிமாவில் சம்பாதிக்க முடியாமல் இருப்பதை பற்றி உங்கள் மனைவிக்கு எந்த குறையும் இல்லையா?

வெங்கல்ராவ்:– ‘இத்தன வருசமா இருக்கே, பைட்டரா இருந்தே, இப்போ நடிகராயிட்டே. நமக்கு வீடு இல்ல வாசல் இல்லே’னு அந்த அம்மா சண்ட போடும். நான் காதுலயே போட்டுக்க மாட்டேன். சும்மா படுத்துக்குவேன். ‘எதுக்கு நீ இங்க வந்தே?’ என்று என்னிடம் கேட்பார்கள். ‘நாம அங்கயே இருந்திருக்கலாமே!’ என்பார்கள். எனக்கு அம்மா கொடுத்த ஒன்னரை ஏக்கரில் எல்லாத்தையும் இருபத்தி ஐந்தாயிரத்துக்கு வித்திட்டேன். ‘இப்போ அது இருந்தா ஆறு கோடி ரூபா. நாம தலைமுறை தலைமுறையா உக்காந்து சாப்பிடலாமே’னு சண்டை போடும். ‘அட போமா’ ன்னுடுவேன். ‘நீ சினிமால இருக்க. சம்பாதிக்கே. ஒரு கோவில் பீச்சுன்னு கூட்டிட்டு போக வேணாமா’ ன்னு கேட்டா, ‘பீச்சுல்ல தண்ணியிருக்கும், மண்ணு இருக்கும், உட்கார முடியாது, நான் பாத்திருக்கேன்’ ன்னு சொல்வேன். ‘நீ பாத்திருக்கே நா பாக்க வேணாமா’ என்பார். வயசாகிப் போச்சு, இப்போ போயி எங்க போறது. வேளாங்கண்ணிக்கு போனால் அந்த அம்மனை பாத்துட்டு வருவேன். ஆந்திராவில் ஒரு ஏசுநாதர் கோவிலுக்கும் போய் விட்டுதான் வருவேன்.

இந்த மாதிரி கோவில், ஓட்டல் போன்றவற்றுக்கு வெளியே போவதற்கு அந்த வயதிலேயே எனக்கு விருப்பம் இல்லை. எந்த பண்டம் வேண்டுமானாலும் வீட்டிலேயே பண்ண சொல்லி சாப்பிட்டுக் கொள்வேன். பணமும், நேரமும் மெட்ராசுக்கு வந்தபோதே சில சமயம் இருந்தும் ஓட்டலுக்கெல்லாம் குடும்பத்தோடு போனதில்லை.

வினவு: – குதிரை தாவிக் குதித்தலில் சில சமயம் குதிரைகளே செத்துப் போய் விடுமே. நீங்கள் அதெல்லாம் பண்ணியிருக்கிறீர்களா?

வெங்கல்ராவ்: – நான் ஐந்தாறு தடவை பண்ணியிருக்கிறேன். அதிகமாக பண்ணியதில்லை. குதிரை ரோப் அதன் காலில் சிக்குவதற்குள் நாம் கரெக்டாக டைம் பார்த்து குதித்தாக வேண்டும். சிலர் அதில் கீழே சிக்கி எலும்பு நொறுங்கிப் போகும். அதன் பிறகு அந்த குடும்பத்தை பெண்கள் தான் வேலை செய்து காப்பாற்ற வேண்டும். ஃபாலிங் பண்ணும்போது கால் குத்துமா தலை குத்துமானு தெரியாது சார். ‘தில்’லில்தான் பொழப்பு ஓடும்.

வினவு:– நீங்க நடித்த படங்களின் பெயர் சொல்ல முடியுமா?

வெங்கல்ராவ்: – நான் பைட் பண்ண படமெல்லாம் சொல்லத் தெரியாது. தலைநகரம், கந்தசாமியில் காமெடி, ஏபிசிடி யில் மூக்கில் பஞ்சு வைத்துள்ள காமெடி, இங்கிலீசுக்காரன் படமொன்றில் சத்யராஜ் கதாநாயகன் ஆக நடித்த படத்தில் பிச்சைக்காரன் பாத்திரம், சீனா தானா படத்தில் தலையில் கையை எடுத்து விட்டால் கடிப்பேன், எம்டன் மகன் படத்தில் சுடுகாட்டு சீனில், சரத்குமார் நடித்த கம்பீரம் படத்தில் வடிவேல் சாரை லஞ்சம் கேட்டதற்கு கும்முவது போன்ற சீனில் என நிறைய நடித்திருக்கிறேன்.

வடிவேல் சார் என் தெய்வம். நான் ஆந்திரா போகலாமா என நினைத்த நேரத்தில் எனக்கு அவர் வாய்ப்புகளை கொடுத்தார். அரிசியை வாங்கலாம், பருப்பை வாங்கலாம், அதிர்ஷ்டத்தை வாங்க முடியாது சார். எனக்கும் நேரம் வந்தால் ‘அந்த மொட்டக் காமெடியன் நல்லா நடிக்கிறா’னு தமிழ் நாடே சொல்லும் சார். அதைத் தான் நான் இப்போதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

வினவு:– இதற்கு மேல் சினிமாவில் வாய்ப்பே இல்லை என்று ஆகி விட்டால் என்ன செய்வீர்கள்.?

வெங்கல்ராவ்: –என்ன செய்ய முடியும். என்னைப் போல நெறய பேரு ஊருக்கு போயி சேந்துட்டாங்க. பொண்டாட்டி பிள்ளைங்களுக்கு சோறு போட முடியாம தண்ணியடிச்சு தண்ணியடிச்சு என்னோட பிரண்டுகளே பல பேரு சுடுகாட்டுக்குதான் சேந்திட்டாங்க சார்.

____________________________________

வெங்கல்ராவ்பின்குறிப்பு – வெங்கல்ராவ் என்ற இந்த மூத்த கலைஞரிடம்,  எதைப் பற்றி கேட்டாலும் அவரது கருத்தும் கவலையும் மற்ற தொழிலாளிகளுக்கும் சேர்த்தே வருகிறது. இத்தனை தூரம் சினிமா எதார்த்தங்களை சந்தித்திருந்தாலும் அவரிடம் இனியும் சினிமாவில் ஜெயிப்போம் எனும் நம்பிக்கை ஒரு அவலமான அதிருஷ்டமாக இருந்து கொண்டேதான் இருக்கிறது.

நடப்பது சூதாட்டம், இந்த சூதாட்டத்தில் நாம் ஒரு ஜோக்கர் கூட கிடையாது என்று தெரிந்த பிறகும் வெங்கல்ராவ் போன்றவர்கள் தங்களது முயற்சியை கைவிடவில்லை. அதிர்ஷ்டம் வரும் என்ற நம்பிக்கையில்தான் வாடகை கட்ட மனைவியின் காதில் கழுத்தில் இருந்த்தை கழற்றி அடகுக்கடையை நோக்கி செல்கிறார் ராவ். வழியில் பார்க்கும் கவுன்சிலர் முதல் சின்னப் பையன்கள் வரைக்கும் வணக்கம் வைக்கிறார். மாடிப்படிகளில் ஏற முடியாத அளவுக்கு அவரது மூட்டுக்கள் பலமிழந்து போய் விட்டன என்ற போதும் இப்போதும் உழைத்துதான் பிழைக்க வேண்டிய நிலைமை. ஆனாலும் கைகட்டி நிற்க மாட்டேன் என்ற சுயமரியாதை அவருக்குள் நிற்கிறது. வேலையை சரியா செய்யவில்லை என யாரும் எள்ளி நகையாடி விடக் கூடாது என் குறியாக இருக்கிறார்.

இன்னொரு புறம் இனி இந்த தொழிலை விட்டுவிட்டு வேறு எங்கே போவது என்ற கேள்வியும் அச்சுறுத்துகிறது. சினிமாவில் பெரிய வாய்ப்பில்லை, வெளியேயும் வாழ்க்கையில்லை. இப்படித்தான் பல ஆயிரம் சினிமா உலக மாந்தர்கள் எந்த வரலாறும் இல்லாமல் அழிக்கப்படுகிறார்கள். வெங்கல்ராவ் அழகானவர் என்றாலும் வெள்ளித்திரையின் பின்னே இருக்கும் வாழ்க்கை அத்தனை அழகானதல்ல.

___________________________________

– நேர்காணல்: வினவு செய்தியாளர்கள்

 1. சிறு வயதில் வெங்கல் ராவ் போன்ற நடிகர்களின் காமெடி சண்டை களைப்பார்த்து நிறைய சிரித்திருக்கிறேன்.சினிமாவுக்கு இவர் போன்ற சிறு நடிகர்களின் பங்களிப்பு எவ்வளவு முக்கியமானது என்று இப்போது புரிகிறது.
  விஜய் , அஜீத், ரஜினி,கமல் போன்றவர்களின் ஆக்சன் சண்டை காட்சிகளை பார்க்கும் போது இப்போது சிரிப்பு வருகிறது. தமிழ் சினிமா யதார்த்ததிலிருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது.

  எல்லா கட்டுரைகளுக்கும் போல் இந்த கட்டுரைக்கும் தோழர்களின் மறுமொழிகளை எதிர்பார்க்கிறேன்.

 2. வினவு:– உங்களது அனுபவத்தில் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து பத்து தலைமுறை கதாநாயகர்களை பார்த்து விட்டீர்கள். அவர்களெல்லாம் கோடிகளில் சம்பாதித்துக் கொண்டு போகின்றபோது, இங்கு வந்தபோது போட்டிருந்த ஆடையோடு நாற்பது ஆண்டுகள் கழித்தும் திரும்ப வேண்டியிருக்குமோ என்று இருக்கும் உங்களது நிலைமையை எப்படி பார்க்கிறீர்கள்?

  வெங்கல்ராவ்:- அந்தக் காலத்திலேயே பெரிய திமிங்கல நடிகர்களிடம் போய் நிலம், வீடு வாங்க வேண்டும் என்று சொல்லி பணம் கேட்டு கைகட்டி நிற்கவில்லை. இப்போதும் இருக்கும் நடிகர்களிடமும் போய் கைகட்டி நிற்கப் போவதில்லை. இன்னைக்கு ஒரு பத்தாயிரம் ரூபா வாங்கிட்டா நாளைக்கு நம்ம பாத்து அவன் பணம் கேக்குறான்டானு கேவலமா பேசிருவாங்க. அதுனாலதான் நான் யாருட்டயும் பணம் வாங்கினதில்ல. அப்படியே பணம் சம்பாதித்தவங்க யாரும் என்ன கூப்பிட்டு ‘இந்தாடா இருபது வருசம் கஷ்டப்பட்டுட்டே. இந்தா ஒரு ரெண்டு மூணு செண்டு நெலம் வாங்கிக்கோ’னு சொல்லி பணமும் கொடுக்கல. எப்படி அவரு கொடுப்பாரு. பணமில்லையா. அவரு புள்ளங்களுக்கு வீடு, தோட்டம் வாங்குவாரு
  /// சபாஷ், எளிய மக்களிடம் தான் தன்மான உணர்வும் சுயமரியாதையும் காணக் கிடைக்கிறது.

 3. சினிமாவில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் இது போன்ற தொழிலாளர்களின் நிலை இப்படித்தான் இருக்கிறது. வெங்கல்ராவ் பல படங்களில் அடியாளாக நடித்திருந்தாலும் வடிவேலுவுடனான நகைச்சுவை காட்சிகளில் தான் அவர் பரிட்சயம் ஆனார். இப்போதெல்லாம் பழைய படங்களை பார்க்கும்போது இவரை அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது. வடிவேலு அரசியல் பேசி அவரையே கெடுத்துகொண்டதுமில்லாமல் இவரைபோல் அவரை நம்பி இருந்தவர்களின் வயிற்றில் மண் அள்ளி போட்டுவிட்டார். வெங்கல்ராவ் நல்ல மனிதர். அவருக்கு நெறைய பட வாய்ப்புகள் கிடைக்கவேண்டும் என்பதே என் அவா.

 4. கனவுத் தொழிற்சாலை என்ற பெயர் அர்த்தம் பொதிந்தது தான்.ஆனால் அதன் அர்த்தத்தை ஒரு 30-35 வயதில் புரிந்து கொண்டுவிட்டால் திரும்பி போய் விடலாம். ஒரு நல்ல நகைச்சுவை காட்சி வெற்றி பெற சேர்ந்து நடிக்கும் ஒருவரின் பங்கு முக்கியமானது என்பதை இயக்குனரோ தயாரிப்பாளரோ உணர முடியாமல் போவது வியாபாரம். ஆனால் வடிவேல் போன்ற ஒரு மணிக்கு எவ்வளவு என கால்சீட் பேசி நடிப்பவர்கள் கூட 3000/5000 என கொடுக்க சொல்வது எப்படி? அந்த அளவு பணம் தரச் சொல்லுகின்றவரை தெய்வமாக கொண்டாட முடிகிறது என்றால் வெங்கல்ராவ் போன்றவர்கள் எவ்வளவு அப்பாவிகள் அல்லது அந்த கனவு தொழிற்சாலை யதார்த்தத்தில் எவ்வளவு கொடூரமானது ?

 5. மனசு வலிக்கிறது… Can I get his mobile name, bank account number, bank name, and IFSC code. Considering them as my grandpa and grandma, I can send at least 1000 rupees per month for their daily misc expenses? Can you share please? Thanks.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க