Tuesday, May 28, 2024
முகப்புஉலகம்அமெரிக்காஇசுரேல், அமெரிக்காவைக் கண்டித்து தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்

இசுரேல், அமெரிக்காவைக் கண்டித்து தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்

-

க்கள் கலை இலக்கியக் கழகம், விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பில் ஜூலை 31, 2014 அன்று தமிழகத்தின் மாவட்ட தலைநகரங்களில், பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் போரைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

அவை குறித்து வரப்பெற்ற சில செய்திகளை கீழே தருகிறோம்.

சென்னை

றுபது ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் பாலஸ்தீனத்தின் மீதான இசுரேலின் ஆக்கிரமிப்புப் போர் தற்போது குண்டுகளைப் பொழிந்து நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்களை கொன்று அவர்களின் வாழ்விடங்களை தரைமட்டமாக்கி இருக்கிறது. இப்போரினை அமெரிக்கா பின்நின்று இயக்குவதை கண்டித்தும் இந்தியா இசுரேலுடன் கூடிக்குலாவுவதை அம்பலப்படுத்தியும் ஒடுக்கப்படும் நாடுகளின் விடுதலைக்காக நாம் போராட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புக்களின் சார்பில் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் மாலை நான்கு மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்ற புஜதொமுவின் மாநில இணைச் செயலர் தோழர்.இரா.ஜெயராமன் “அறுபது ஆண்டுகளாக பாலஸ்தீனத்தின் மீது யூத இனவெறி பிடித்த இசுரேல் நடத்தி வரும் இந்த ஆக்கிரமிப்புப் போர் பல்லாயிரக்கணக்கான மக்களை காவு கொண்டு இருக்கிறது. குறிப்பாக கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் மூன்று முறை மிகப்பெரிய தாக்குதலை இசுரேல் மேற்கொண்டிருக்கிறது. தற்போது 23 நாட்களாக நீடித்து வரும் போரில் மட்டும் 1500-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக்கப்பட்டு இருக்கின்றனர். வாழ வழி இன்றி பள்ளிக்கூடத்தில் தஞ்சம் அடைந்த மக்களின் மீது கூட தாக்குதல் நடத்தி தன் யூதவெறியினை ஆக்கிரமிப்பு போரின் மூலம் இசுரேல் பறைசாற்றியிருக்கிறது என்றால் அது வெறும் இசுரேல் மட்டும் தனியாக நடத்தும் போர் அல்ல.

உலகத்திலேயே மிகவும் யோக்கியனாக தன்னைக் காட்டிக்கொண்டு ரசியா உக்ரேனிய கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் வழங்குகிறது என்று நியாயம் பேசும் அமெரிக்கா அதற்கு பின்னால் நின்று வழி நடத்துகிறது என்பது தான் உண்மை. இந்தியாவோ தற்போது இசுரேலை கண்டிப்பதற்கான நேரமில்லை என்று யூத இனவெறி இசுரேலுக்கு தோள் கொடுக்கின்றது. இந்த அயோக்கியத்தனத்தை நாடு முழுவதும் உள்ள உழைக்கும் மக்கள் கண்டிக்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழகம் முழுவதும் புரட்சிகர அமைப்புக்களின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் இன்று நடைபெற்று வருகின்றன” என்று குறிப்பிட்டார்.

அடுத்ததாக கண்டன உரையாற்றிய புமாஇமுவின் மாநில அமைப்பாளர் தோழர்.த.கணேசன்  “மொத்த உலகையே சூறையாடிவரும் உலக பயங்கரவாதியான அமெரிக்கா பின்நின்று இயக்கும் பாலஸ்தீனத்தின் மீதான இசுரேலின் போரினை இந்தியா தோள் கொடுத்துக்கொண்டு இருக்கின்றது என்ற அநியாயத்தினை கண்டிப்பதற்கு கூட நமக்கு உரிமை இல்லாமல் போலீசைக் குவித்து இந்த ஆர்ப்பாட்டத்தை மக்கள் கேட்கக் கூடாது என்பதில் குறியாக இருக்கும் இந்த இந்திய அரசில் எங்கே இருக்கிறது சனநாயகம்? ” என்ற கேள்வியோடு தொடர்ந்தார்.

“பாலஸ்தீனத்தின் மீது இசுரேல் தாக்குதல் என்றுதான் ஊடகங்களும் கூறுகின்றன. இது தாக்குதல் அல்ல, ஆக்கிரமிப்புப் போர் என்ற வரலாற்று உண்மை திட்டமிட்டே மறைக்கப்பட்டு இருக்கின்றது. ஆயிரத்து தொள்ளாயிரத்தின் ஆரம்பங்களில் இசுரேல் என்ற தேசம் ஒன்றே இல்லை. ஆனால் இன்று நாடாக மாற்றப்பட்டு அது பாலஸ்தீனத்தை ஆக்கிரமிப்பு செய்யும் அளவில் வந்திருக்கின்றது என்றால் அதன் பின்னணியை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நாசிசக் கொடுங்கோலன் ஹிட்லரின் ஆட்சியில் கொத்து கொத்தாக கொல்லப்பட்டு துரத்தியடிக்கப்பட்ட யூதர்கள் பல நாடுகளில் தஞ்சம் அடைந்தார்கள். தஞ்சம் பிழைக்க வந்தவர்களை பாலஸ்தீன மக்கள் அரவணைத்தார்கள். ஆனால் யார் தங்களை அரவணைத்தார்களோ எந்த மண் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததோ அந்த மண்ணையே கைப்பற்றிக் கொண்டார்கள் யூத வெறியர்கள். அப்படி பாலஸ்தீனத்தின் சில நகரங்களை கைப்பற்றிக்கொண்டு 1940-களின் பின்பகுதியில் இசுரேல் என்ற தனி நாட்டை அறிவித்தார்கள். அந்த இசுரேல் என்ற நாட்டை முதலில் அங்கீகரித்தது அமெரிக்கா. காரணம் மத்திய கிழக்காசியப்பகுதியில் தன்னுடைய பேட்டை ரவுடியாக இசுரேலை வளர்த்து அதன் மூலம் தனது உலக மேலாதிக்கத்தை நிறுவுவதுதான்.

அதன் விளைவு பாலஸ்தீனம் என்ற பரந்து விரிந்த தேசத்தை கொஞ்சம் கொஞ்சமாக கைப்பற்றி காசாமுனை, மேற்கு கடற்கரை என்ற இரு பகுதிகளாக சுருக்கப்பட்டு இருக்கிறது. இந்த சிறிய பகுதியையும் கைப்பற்றி அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிறுவவே லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்களின் மீதான இசுரேலின் போர் நடக்கிறது.

இசுரேலுக்கு நண்பனாக இருந்து இந்தப்போரினை ஆதரிக்கும் இந்திய அரசு தான் ஈழத்தமிழர்களை லட்சக்கணக்கில் கொன்று குவிக்க ராணுவத்தையும் ஆயுதத்தையும் ராஜபட்சேவுக்கு அளித்தது. அதே இந்திய அரசுதான் வட கிழக்கில் , காசுமீரில் இன விடுதலைக்காகப் போராடுகின்ற மக்களை தாக்கி அழிக்கின்றது. ஈராக்கிலும் ஆப்கானிலும் சொந்த நாட்டு விடுதலைக்காகப் போராடுகின்ற மக்களை தீவிரவாதிகளாக சித்தரித்து கொன்றொழிக்கும் அமெரிக்காவின் பின்புலத்தில் இருந்து கொண்டு தான் இசுரேல் ஹமாஸ் இயக்கத்தினரை தீவிரவாதிகள் என்று கூறி அப்பாவி பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்கிறது. இந்த அமெரிக்காவையும் இசுரேலையும் ஆதரிக்கும் இந்தியாவோ இயற்கை வளங்கள் சூறையாடப்படுவதற்கு எதிராக போராடுகின்ற ,தேசிய இன உரிமைக்காக போராடுகின்ற மக்களையும் அமைப்புக்களையும் தீவிரவாதிகளாக சித்தரித்து தாக்குதலைத் தொடுக்கின்றது. இந்த அமெரிக்கா – இசுரேல் – இந்தியாவின் கள்ளக்கூட்டினை எதிர்க்காமல் சொந்த நாட்டின் விடுதலையைப்பற்றிப் பேச யாருக்கும் உரிமை இல்லை.

எனவே ஒடுக்கப்படுகின்ற ஒரு நாட்டின் விடுதலைப்போராட்டத்திற்கு ஆதரவாக பாட்டாளிவர்க்கம் என்ற வகையிலும் ஒடுக்கப்படும் தேசம் என்ற வகையிலும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக வீதிகள் தோறும் தெருக்கள் தோறும் நாம் போராட்டங்களை தொடர்ந்து நடத்த வேண்டும். அப்படிப்பட்ட போராட்டங்கள் தான் இசுரேலுக்கு ஆதரவாக செயல்படும் இந்திய அரசுக்கு மரண அடியைக் கொடுக்கும்.” என்று தனது உரையினை தோழர். கணேசன் நிறைவு செய்தார்.

இசுரேலை கண்டிக்கும் வகையிலும் பாலஸ்தீனத்தின் மீதான போரை பின்நின்று வழி நடத்தும் அமெரிக்காவையும் இசுரேலுக்கு நண்பனாக செயல்படும் இந்தியாவையும் அம்பலப்படுத்தும் வகையிலும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள், பெண்கள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட தோழர்களின் எண்ணிக்கையை விட போலீசை அதிகமாகக் குவித்து தான் இசுரேலின் நண்பன் தான் என்பதை ஆர்ப்பாட்டம் முடியும் வரை நிரூபித்துக்கொண்டு இருந்தது தமிழக அரசு.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
சென்னை

மதுரை

துரையில் ம.க.இ.க., வி.வி.மு., பு.ஜ.தொ.மு ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து மாலை 6 மணியளவில் தலைமை தபால் நிலையம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ம.க.இ.க மதுரை அமைப்பாளர் தோழர் ராமலிங்கம் தலைமை தாங்கினார்.

யூத மதவெறி இசுரேலின் கொலைமுகத்தை திரைகிழித்தும், அமெரிக்காவின் ஆசியுடன் நடைபெறும் இந்த கோர தாண்டவத்தை ஆதரிக்கும் அமெரிக்க அடிவருடி மோடி அரசின் நாடகத்தை அம்பலப்படுத்தியும் புஜதொமு சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் அமைப்பாளர் தோழர். நாகராஜன் மற்றும் மனித உரிமை பாதுகாப்பு மையம் மதுரை செயலர் தோழர்.லயனல் அந்தோனி ராஜ் ஆகியோர் எழுச்சியுரை ஆற்றினர் .

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

செய்தி:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
மதுரை .

தருமபுரி

ருமபுரியில் விவசாயிகள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி அமைப்புகள் சார்பாக தந்தி அலுவலகம் முன்பு மதியம் 3 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. முன்னதாக 2 நாட்கள் பேருந்து பிரச்சாரமும், சுவரொட்டி பிரச்சாரமும் செய்யப்பட்டது.

போரை நிறுத்து போரை நிறுத்து
பாலஸ்தீன குழந்தைகளை
பாலஸ்தீன பெண்களை
கொன்று குவிக்கும் இஸ்ரேலின்
ஆக்கிரமிப்பு யுத்தத்தை
உடனே நிறுத்து உடனே நிறுத்து

என்று முழக்கம் எழுப்பப்பட்டது.

வி.வி.மு தோழர் மாயாண்டி தலைமை உரையாற்றினார்.

மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் தருமபுரி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜானகி ராமன் தனது உரையில், “அமெரிக்கா தனது மேலாதிக்க நலனுக்காகவே இஸ்ரேலை ஆதரித்து வருகிறது. இதன் ஒரு அங்கமாகவே இந்தியாவின் எதிர்ப்பும் ஆதரவும் அவ்வப்போது மாறுகிறது. ஐ.நா என்பதும் அதன் சர்வதேச மனித உரிமை சட்டம் என்பதும் அமெரிக்க மேலாதிக்கத்தை நிறுவும் கருவியாகவே உள்ளது. இது மனித உரிமை மீறல் மட்டுமல்ல,  இன அழிப்புப்போர்” என்று குறிப்பிட்டார்.

அடுத்து பு.ஜ.தொ.முவின் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டத் தலைவர் தோழர் பரசுராமன், “இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு போருக்கு எதிராக உலெகெங்கும் கண்டனங்கள் அதிகரித்து வரும் போது இந்தியா மவுனம் காக்கிறது. நரேந்திர மோடி கக்கூஸ் உட்கார்ந்ததை தவிர்த்து அவரது அனைத்து அசைவுகளையும் புகழ்ந்து வெளியிட்ட பத்திரிகைகள் அவரது தற்போதைய மவுனம் குறித்து எழுத மறுக்கின்றன” என்று அம்பலப்படுத்தி பேசினார்.

பு.மா.இ.மு தோழர் ராஜா பேசுகையில், “ஹமாஸ் இயக்கம்தான் இந்த போருக்கு காரணம் என்பது பித்தலாட்டமானது. இது இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் திட்டமிட்ட ஆக்கிரமிப்பு. இஸ்ரேல் அரசிடம் இராணுவ தளவாடங்கள் பெறும் இந்தியா இதை எதிர்க்காது” என்று குறிப்பிட்டார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

கோத்தகிரி

நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கம் சார்பில் காலை 9 மணிக்கு கோத்தகிரி மார்க்கெட் ஜீப் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தலைமை : ஆனந்த்ராஜ்உரை : பாலன்
நன்றியுரை : ராஜா

திரளான தொழிலாளிகளும், தோழர்களும் கலந்து கொண்டனர்.

கோத்தகிரி காசா தாக்குதல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

இவண்
நீலமலை அனைத்து தொழிலாளர் சங்கம்,
கோத்தகிரி

கோவை

மூலதனம் நடத்தும் போர்

“பாலஸ்தீனத்தின் மீதான போரை நிறுத்து..!” எனும் முழக்கத்துடன் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் 31-07-2014 அன்று மாலை ஐந்து மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மகஇக மாவட்டச் செயலர் தோழர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். கோவைத் தொழிலாளர் வர்க்கம் ஆவேசமாக முழக்கம் எழுப்பி தனது சர்வதேசிய உணர்வை வெளிப்படுத்தியது.

உள்ளூர் பிரச்சினைகள் ஆயிரம் இருக்க இவர்கள் உலகப் பிரச்சினைக்கு போராட கிளம்பி விட்டார்கள் எனும் விமர்சனத்துக்கு பதிலளித்து பு.ஜ.தொ.மு மாவட்டச் செயலாளர் தோழர் விளவை இராமசாமி கண்டன உரையாற்றுகையில்,

“உலகப் பிரச்சினைகளுக்கு போராடாத எவனும் உள்ளூர் பிரச்சினைக்கும் போராட மாட்டான். வெறுமென கேள்வி மட்டும் எழுப்பி விமர்சனம் மட்டும் செய்து கொண்டிருப்பான். இவர்களை புறம் தள்ளி நாம் போராட்டப் பாதையில் நடைபோட வேண்டும்.

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக குரல் எழுப்ப நாம் தமிழர்கள் எனும் அடிப்படையிலும், இந்தியர்கள் எனும் நிலையிலும், மனிதர்கள் எனும் உணர்விலும், கம்யூனிஸ்டுகள் எனும் பெருமிதத்திலும், நமக்கு ஆயிரம் காரணங்கள் உள்ளன. போராட்டப் பாதையில் புடம் போடப்பட்டு முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும். உயர்ந்த பட்ச வர்க்க உணர்வையே நாம் வெளிப்படுத்த வேண்டும். பாலஸ்தீனத்தின் மீதான போர் என்பது மூலதனம் தனது லாப வெறிக்காக நடத்தும் போர். இதுதான் இறுதியானது. இதர காரணங்கள் இரண்டாம் பட்சமே.

முதலாளித்துவம் தனது மூலதனத்திற்கு லாபம் இல்லை என்றால் தொழிலை நடத்தாது. குறைவான லாபத்தையும் ஏற்றுக்கொள்ளாது.

10% லாபம் வரும் என்றால் எங்கு வேண்டுமானாலும் மூலதனம் பயணம் செய்யும்.

20% லாபம் வரும் என்றால் ரொம்பவும் சுறுசுறுப்பாக முதலீடு செய்ய ஓடுகிறது.

50% சதவீதம் லாபம் வரும் என்றால் எல்லா கெடுதலையும் செய்ய துணிவு கொள்கிறது.

100% லாபம் வரும் என்றால் அனைத்து சட்டங்களையும் காலில் போட்டு மிதிக்கத் தயார் ஆகிறது.

300% லாபம் வரும் என்றால் இதற்காக எந்தக் குற்றத்தையும் செய்யத் துணியும்.

தூக்கிலிடப்படுவோம் என்றாலும் துணிந்து எதையும் செய்யும். சமூகக் கொந்தளிப்பும், மோதலும் லாபம் தருமென்றால் அதையும் மூலதனம் ஊக்குவிக்கும் என்று மூலதனம் நூலில் தோழர்.மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.

மேற்கண்ட அடிப்படையில் தான் பாலஸ்தீனப் போர் நடக்கிறது. பாலஸ்தீனத்தில் கிடைக்க உள்ள எண்ணெய் வளத்தையும் எரிவாயு வளத்தையும் கொள்ளையடிக்க சர்வதேச மூலதனம் நடத்தும் இந்த போரை பாட்டாளி வர்க்கமாக நாம் எதிர்க்க வேண்டும். முறியடிக்க வேண்டும்” என்று பேசினார்.

இறுதியாக பு ஜ தொ மு மாவட்டத் தலைவர் தோழர் இராஜன் நன்றியுரையுடன் ஆர்ப்பாட்டம் நிறைவடைந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
கோவை

விழுப்புரம்

“பாலஸ்தீனம் மீதான போரை நிறுத்து!” என்ற முழக்கத்தின் அடிப்படையில் விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநில விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து 31.07.2014 வியாழன் அன்று மாலை 4.30 மணியளவில் விழுப்புரம், இரயில் நிலைய வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
விழுப்புரம்

  1. பெண்கள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட தோழர்களின் எண்ணிக்கையை விட போலீசை அதிகமாகக் குவித்து தான் இசுரேலின் நண்பன் தான் என்பதை ஆர்ப்பாட்டம் முடியும் வரை நிரூபித்துக்கொண்டு இருந்தது தமிழக அரசு.?||

    சென்னை ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட பெண் தோழர் கூறியது, ஆர்ப்பாட்டத்தில் தோழர்களின் பேச்சு, பாலஸ்தீனத்திற்கு நடுவே நம்மை அழைத்துசென்றது, அங்குள்ள மக்களின், குழந்தைகளின் நிலைமைக் கண்டு வெகுண்டு எழ வைத்தது.

    கொள்கைக்காகப் போராடும் மக்களின் மத்தியில், முதலாளிகளின் பணநாயகத்துக்காக வாலாட்டும், அரசுகளின் எத்தனை அடுக்குப் பாதுகாப்பும் எடுபடபோவதில்லை, என்பது புரியும் நாள் வெகுதொலைவிலில்லை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க