முகப்புசமூகம்சாதி – மதம்உங்கள் நகைகளுக்காக கருகிய நுரையீரல்களின் கதை

உங்கள் நகைகளுக்காக கருகிய நுரையீரல்களின் கதை

-

கோலார் : தங்கத்திற்காக உயிர் கொடுத்த தமிழ் மக்கள் – 2

மது உடலின் இயக்கத்துக்கு ஆக்சிஜன் (பிராணவாயு அல்லது உயிர்வளி) மிக அவசியம் என்பது எல்லோரும் அறிந்த உடற்கூறியல் சார்ந்த அடிப்படை உண்மை. நாம் சுவாசிக்கும் காற்றில் இருந்து உயிர்வளியைப் பிரித்து உடலின் இயக்கத்துக்கு அதைப் பயன்படுத்திக் கொள்ளும் வேலையை நுரையீரல் செய்கிறது.

சுவாச மண்டலம்
மூச்சு மண்டலம்

மூக்கின் வழியே நாம் சுவாசிக்கும் காற்றானது, மூச்சுக் குழாய் (Trachea) வழியாக நுரையீரலுக்கு செல்கிறது. மூச்சுக் குழாய் மார்புப் பகுதியில் இரண்டாக பிரிந்து வலது, இடது நுரையீரல்களுக்குச் செல்கிறது. நுரையீரலுக்குள் நுழைந்தவுடன் மூச்சுக்குழல் ஒவ்வொன்றிலிருந்தும் கிளைகள் பிரியும். பின்னர் அவற்றிலிருந்து இன்னும் சிறு கிளைகள் என நிறைய பிரிவுகள் ஒரு மரத்தின் பெரிய கிளையிலிருந்து பிரிந்து சின்னச்சின்ன தளிர்கள் வருவது போல் பிரிகின்றன. இது மூச்சுமரம் (Respiratory tree) என்று அழைக்கப்படுகிறது.

முதல் நிலை மூச்சுக் குழல் (Primary bronchi), இரண்டாம் நிலை மூச்சுக் குழல், மூன்றாம் நிலை மூச்சுக்குழல், மூச்சுக் குறுங்குழல் (bronchiole) என்று படிப்படியாகப் பிரிந்து கடைசியாக சின்னச் சின்ன பலூன்கள் மாதிரி தோன்றும் குட்டிக்குட்டி அறைகளை இந்தக் குழல்கள் சென்றடையும். இந்த சின்னச் சின்ன பலூன் அமைப்புகள் காற்று நுண்ணறைகள் (Alveoli) என்று அழைக்கப்படுகின்றன. மூக்கின் வழியே உள்நுழையும் காற்று மூச்சு மரம் வழியே பயணித்து இறுதியாக காற்று நுண்ணறைகளுக்குள் வந்து சேர்கிறது.

இவ்வாறு காற்று நுண்ணறைகளுக்குள் வந்து சேர்ந்த உயிர்வளி தான் நமது உடலில் ஓடும் இரத்தத்தை சுத்திகரிக்கும் முக்கியமான வேலையைச் செய்கிறது. இது எப்படி நடக்கிறது என்பதை பார்க்கலாம்.

உடலில் பல பாகங்களிலும் இருந்து பயன்படுத்தப்பட்ட ரத்தம் மெல்லிய இரத்தக் குழாய்களின் வழியே பயணித்து இதயத்தின் வலது வெண்டிரிக்கிளை அடையும். அங்கிருந்து தமனி மூலம் நுரையீரலுக்கு கொண்டுசெல்லப்படுகிறது. நுரையீரல் தமனியும், வலது கிளை, இடது கிளை என்று இரண்டாகப் பிரிந்து இரண்டு நுரையீரலுக்கும் செல்கிறது. இதுவும் பலமுறை கிளைகளாகப் பிரியும். இப்படிப் பிரியும்போது காற்று நுண்ணறைகளின் அக்கம் பக்கமாக தமனிகளின் மிக மிகச் சிறிய கிளைகள் அமைந்திருக்கும். இந்தச் சின்ன தமனிக் கிளைகள் நுண்துளை ரத்தக்குழாய்கள் (Capillaries) எனப்படுகின்றன.

மூச்சு விடுதல்
மூச்சு விடுதலின் போது ரத்தத்திலிருந்து கரியமில வாயு பிரிக்கப்பட்டு, உயிர்வளி சேர்க்கப்படுதல்.

காற்று நுண்ணறை மற்றும் நுண்துளை ரத்தக் குழாய்கள் இவற்றின் சுவர்கள் மிக மிக நுண்ணியவையாக இருக்கும். நுண்ணறைக்குள் உயிர்வளி (ஆக்ஸிஜன்) நிறைந்த காற்றும் நுண்துளை ரத்தக் குழாய்களுக்குள் உயிர்வளி குறைந்த கரியமில வாயு (கார்பன் டைஆக்சைட்) நிறைந்த ரத்தமும் இருக்கும். இந்த நிலையில் காற்று நுண்ணறை – நுண்துளை ரத்தக் குழாய் சுவர்களின் வழியாக ஒரு பரிமாற்றம் நடக்கிறது. நுண்ணறை காற்றில் அடர்த்தியாக இருக்கும் உயிர்வளி (ஆக்ஸிஜன்) நுண்துழை குழாய் இரத்தத்துக்குள் பாயும். நுண்துழை குழாய் ரத்தத்தில் அடர்த்தியாக இருக்கும் கரியமில வாயு (கார்பன்டை ஆக்ஸைடு) நுண்ணறை காற்றுக்குள் பாயும். இதுதான் வாயுப் பரிமாற்றம் (Exchange of gases). இப்படித்தான் நமது உடலில் ஓடும் ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது.

நாம் உயிரோடு இருக்க இந்த வேலை ஒழுங்காக நடக்க வேண்டும். இந்த வேலை ஒழுங்காக நடக்க நாம் போதுமான உயிர்வளி (ஆக்சிஜன்) நிறைந்த காற்றை சுவாசிக்க வேண்டும். ஒருவேளை நாம் சுவாசிக்கும் காற்றில் நிறைய மாசு கலந்திருந்தால் என்னவாகும்? ஒருவேளை அந்த மாசுக்கள் உலோகத் துணுக்குகளாக அமைந்து விட்டால் என்னவாகும்?

அவ்வாறு தொடர்ந்து உலோகத் துணுக்கு அல்லது தூசுகளைச் சுவாசிக்கும் ஒருவருக்கு நுரையீரலில் சிறு சிறு பள்ளங்கள் ஏற்படும். அந்நோயின் பெயர் ந்யூமகொனியோசிஸ் (pneumoconiosis). தமிழில் அதை தூசுவளிநோய் என்று சொல்லலாம்.

ந்யூமோகோனியோசிஸ்
ஆரோக்கியமான நுரையீரலும், நியூமோகோனியாசிஸால் பாதிக்கப்பட்ட நுரையீரலும்

ந்யூமகொனியோசிஸ் என்பது ஒரு பொதுப்பெயர். பாதிப்பு ஏற்படுத்தும் தூசு வகை அல்லது உலோகத் துணுக்கின் வகைக்கு ஏற்ப இந்நோய் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. நிலக்கரி தூசுகளால் உண்டாகும் நோயை கருப்பு நுரையீரல் நோய் (Black lung disease) அல்லது ஆந்த்ராகோசிஸ் என்று அழைக்கிறார்கள். ஆஸ்பெஸ்டாஸ் தூசு மூலம் உண்டாகும் நுரையீரல் நோயை ஆஸ்பெஸ்டாசிஸ் என்றும், பாக்சைட் தூசு மூலம் உண்டாகும் நுரையீரல் நோயை பாக்சைட் ஃபைபரோசிஸ் என்றும், இரும்புத் துகள் மூலம் உண்டாகும் நுரையீரல் நோயை சிடரோசிஸ் என்றும் பருத்தி தூசு முலம் உண்டாகும் நுரையீரல் நோயை பைசினோசிஸ் என்றும் அழைக்கிறார்கள்.

தங்கச் சுரங்கத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு உண்டாகும் ந்யூமகொனியோசிஸ் நோயின் பெயர் சிலிகோசிஸ் – அதாவது சிலிக்கான் (மணல்) துகளை தொடர்ந்து சுவாசிப்பதால் இந்நோய் ஏற்படுகிறது.

கோலார் தங்க வயல் உலகின் ஆழமான வெகு சில சுரங்கங்களில் ஒன்று. தக்காண பீட பூமியின் மேற்பரப்பில் அமைந்திருக்கும் கோலாரின் நிலத்தடியானது கண்ட மேல்தட்டினால் (continental crust) ஆன கடும் பாறைகளைக் கொண்டதாகும். இப்பாறைகளைத் தொழிலாளர்கள் தங்கள் வழக்கில் நிலத்தடி மலைகள் என்கிறார்கள். அப்பாறைகளைக் குறித்த தொழிலாளர்களின் எதார்த்தமான வருணனை மெய்யிலும் மெய்யானதாகும் – ஏனெனில், கோலார் தங்க வயலின் சுரங்கப் பாதைகளில் எதிர்படும் பாறைகள் மலைகளை ஒத்த கனபரிமாணம் கொண்டவை.

ஆக, கோலாரில் சுரங்கம் தோண்டிச் செல்வதை நீங்கள் ஏதோ கிணறு தோண்டும் வேலைக்கு ஒப்பானதாக நினைத்துக் கொள்ளக் கூடாது. இது வெறும் மண்ணைக் கிண்டிச் செல்லும் சில்லறைச் சமாச்சாரம் இல்லை. பாறைகள் கனம் குறைந்த இடங்களில் துளையிட வேண்டும்; கனம் மிகுந்த பகுதிகளிலோ வெடிவைத்துத் தகர்த்து முன்னேற வேண்டும். அவ்வாறு வெடிவைத்துப் பிளப்பது தங்க வயலின் அன்றாட நிகழ்வு- இதற்காக துளையிடுபவர் (Driller) மற்றும் வெடிப்பவர் (Blaster) என்கிற தனித்தனி வேலைப் பிரிவுகளே இயங்குகின்றன.

சிலிக்கோசிஸ் பாதித்த நுரையீரல்
சிலிக்கோசிஸ் பாதித்த நுரையீரல்

கோலார் சுரங்கத்தின் அதிகபட்ச ஆழம் சுமார் 12,000 அடி – அதிகபட்ச வெப்பம் 160 டிகிரி பாரன்ஹீட். இந்த ஆழத்தில் இயற்கையாகவே நிலவும் வெப்பமும், சூழலின் இறுக்கமும் அழுத்தமும் உள்ளே வேலை செய்யும் தொழிலாளர்களின் நுரையீரலை இயல்பாக வேலை செய்ய அனுமதிக்காது. மேலும் அந்த ஆழத்தில் இயற்கையிலேயே உயிர்வளியின் (பிராணவாயு / ஆக்சிஜன்) அளவும் குறைவானதாகவே இருக்கும். ஒரு பிரம்மாண்டமான பிரஷர் குக்கருக்குள் தொழிலாளர்கள் நின்று கொண்டிருப்பார்கள் – அந்த சூழலில் தான் பாறைகளைப் பிளக்க டைனமைட்டுகளை வெடிக்க விடுவார்கள்.

வெடிமருந்தின் சிதறல் உண்டாக்கும் புகை மண்டலமும் வெடித்துத் தகர்க்கப்பட்ட பாறைகளில் உறைந்திருக்கும் மணல் (சிலிக்கான் துகள்) நிறைந்த தூசு மண்டலமும் சுரங்க டனலின் வால் பகுதியெங்கும் மண்டிக் கிடக்கும். தொழிலாளர்கள் அந்த தூசு மண்டலங்களின் ஊடாகச் சென்று தான் தங்கப் படிமங்கள் உறைந்த பாறைத் துண்டுகளைச் சேகரித்தாக வேண்டும். அமிலக் குட்டையில் முங்கி முத்தெடுக்கும் வேலை அது.

மூச்சுக் குழாய்களின் வழியே நுரையீரலுக்குள் நுழையும் மணல் (சிலிக்கான்) தூசுகள் நுரையீரலின் உட்புறத் திசுக்களின் மேல் சத்தமின்றி ஒட்டிக் கொள்ளும். நாட்கள் செல்லச் செல்ல மணல் (சிலிக்கான்) தூசு தான் அமர்ந்திருக்கும் நுரையீரல் திசுவின் மேல் சிறிய பள்ளங்களை உண்டாக்கும். இந்தப் பள்ளங்கள் மெல்ல மெல்ல அகன்று பெரிதாகிக் கொண்டேயிருக்கும். மணல் தூசுகளால் நுரையீரலில் ஏற்படும் பள்ளங்களை தொழிலாளர்கள் ‘துளைகள்’ என்கிறார்கள்.

கோலார் தங்க வயலுக்கென்று சில சிறப்புகள் உண்டு. இந்தியாவில் முதன் முறையாக மின்சாரம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு 1902-ம் வருடம்; அறிமுகப்படுத்தப்பட்ட நகரம் கோலார் தங்க வயல். ஜப்பானின் தலைநகர் டோக்கியோவுக்கு அடுத்து ஆசியாவிலேயே இரண்டாவதாக மின்சாரம் அறிமுகம் செய்யப்பட்ட நகரம் கோலார் தங்க வயல். அதே போல், இந்தியாவில் முதல் நீர்மின் நிலையம் அமைக்கப்பட்டது கோலார் தங்க வயலுக்காகத் தான். இந்த வரிசையில் உலகில் முதன் முறையாக மணல் துகளால் உண்டாகும் ந்யூமகொனோசிஸ் நோய் கண்டறியப்பட்டதும் கோலார் தங்க வயலில் தான்.

சுரங்க மருத்துவமனை
சுரங்க மருத்துவமனை (அன்று)

1880ம்-ஆண்டு ஆங்கிலேய ஜான் டெய்லர் கம்பெனியால் நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு சுரங்கப் பணிகள் துவங்கியவுடனே முன்பை விட அதிக தங்கம் வெள்ளை முதலாளிகளுக்கும் சிலிக்கோசிஸ் நோய் இந்தியத் தொழிலாளர்களுக்கும் பரிசாக கிடைத்தது. நோய்க்கு ஆளாகி தொழிலாளர்கள் கொத்துக் கொத்தாக செத்து வீழ்ந்த போதும் சுமார் அறுபதாண்டு காலம் வரை – அதாவது 1940-ம் ஆண்டு வரை இந்த உண்மைகள் வெளியுலகை அடையாதவாறு பார்த்துக் கொண்டது சுரங்கத்தின் வெள்ளை நிர்வாகம்.

1940-ம் ஆண்டு இயற்றப்பட்ட மைசூர் சிலிகோசிஸ் சட்டம் தொழிலாளர்களுக்கு ஓரளவுக்காவது நிவாரணம் கிடைப்பதை உத்திரவாதப்படுத்தியது. கிடைத்த நிவாரணம் பற்றி சில தொழிலாளர்களிடம் நாங்கள் விசாரித்தோம்.

“அது இன்னா சார்.. ஒரு தொளைக்கு ஆயிரம் ரூவா நட்ட ஈடா குடுப்பான்”

“வெறும் ஆயிரம் ரூபா தானா?”

”ஆமா சார்… வருசா வருசம் பி.ஜி.எம்.எல் ஆஸ்பத்திரில ஸ்கேன் செஞ்சி டாக்டர் ரிப்போர்ட் எழுதுவாரு… அம்பது தொளைக்கு மேல போச்சின்னா கைல சுளையா அம்பதாயிரம் கெடைக்கும்… அப்புறம் கம்பெனி குடுத்த குவாட்டர்ஸ் வீட்டையும் வச்சிக்கிலாம்.. அதோட வியாரெஸ் குடுத்து வீட்டுக்கு அனுப்பிடுவான்..” (கம்பெனி கொடுத்த “வீடு” எனப்படும் அந்த கொடூரம் குறித்து பின்னர் வரும் பாகத்தில் விரிவாக சொல்கிறோம்).

”உங்க சர்வீஸ் முடியும் போது எத்தனை துளை இருந்தது?”

“எனக்கு எப்படியும் நூறுக்கு மேல இருந்திருக்கும்….”

“அப்ப.. உங்களுக்கும் அம்பதாயிரமும் வீடும் கிடைச்சிருக்குமே?”

”அய்யே… இல்ல சார். ரிப்போர்ட் படி எனக்கு நுப்பது தான்”

“என்ன சொல்றீங்க, குழப்பமா இருக்கே?”

கோலார் தொழிலாளர்களின் நினைவாக
கோலார் தொழிலாளர்களின் நினைவாக

“அதாவது சார்.. நிறைய துளை இருக்குன்னு ரிப்போர்ட்ல எழுதினா நிறைய நட்ட ஈடு குடுக்கனும்.. அதே மாதிரி அம்பது துளைக்கு மேல போச்சின்னா லேபரு கைல சுளையா அம்பதாயிரம் கொடுத்து வீட்டுக்கும் அனுப்பனும்… அதனால ரிப்போர்ட்ல எப்பவும் கொறைச்சி தான் கணக்கு காட்டுவானுக. இப்ப அம்பது துளை ஒரு ஆளுக்கு இருக்குன்னு ரிப்போர்ட்ல குடுத்துட்டான்னா எப்படியும் நூத்தம்பது இருநூறு துளையாவது இருக்குன்னு அர்த்தம்.. இப்ப புரிஞ்சதா?”

“ஓ… சரி… அப்ப நிரையீரல்ல இருநூறு துளை ஒரு ஆளுக்கு இருந்தா அவரோட கதி?”

“என்னா ஒரு அஞ்சி வருசத்துக்கு வண்டி ஓடும்.. அப்பால இருமியே சாக வேண்டியது தான்…”

கோலார் தங்க வயல் தொழிலாளிகள் அனேகமாக எல்லோருக்கும் சிலிக்கோசிஸ் பாதிப்பு வெவ்வேறு அளவுகளில் இருக்கிறது. சிலிக்கோசிஸ் பாதிப்புக்கு உள்ளான நுரையீரலில் எப்போதும் சளி மண்டிக் கொண்டிருக்கும். இயல்பாக சுவாசிக்க முடியாது. இருமிக் கொண்டே இருக்க இருக்க வேண்டும். ஒவ்வொரு இருமலும் குரல்வளையின் வழியே குடலை உருவியெடுப்பதற்கு ஒப்பான அனுபவமாக இருக்கும்.

ஒவ்வொரு தொழிலாளியும் காலை எழுந்ததும் இருமி இருமி கோழையை வெளியே எடுக்க வேண்டும். இல்லையென்றால் சுரங்கம் என்கிற அந்த பிரஷர் குக்கருக்குள் அவர்களால் சளி மண்டிய நுரையீரலைச் சுமந்து கொண்டு வேலை செய்ய முடியாது. விதிவிலக்கின்றி எல்லா தொழிலாளர்களும் பீடி புகைக்கும் பழக்கத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். பீடியின் காரமான நிக்கோடின் புகை சளியை இளக்கி வெளியேற்றுவதாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள். தொழிற்சாலையில் ஆலைச் சங்கு ஊதும் அதிகாலை வேளையில் குடியிருப்புகளில் இறுமல் சப்தம் கேட்கத் துவங்கும். ஒவ்வொரு முறை அடிவயிற்றை எக்கி பலமாக இறுமும் போதும் கோழையோடு சேர்ந்து புண்பட்ட நுரையீரலில் இருந்து இரத்தத் திவலைகளும் கலந்து வழவழப்பான சிவப்புத் திரவமாக வெளியேறும்.

”அந்த மாதிரி நேரத்துல எங்க புள்ளைங்கள கிட்ட விட மாட்டோம் சார்…”

”ஏன்?”

“பயந்துடுவாங்க சார்.. பொண்டாட்டிங்க வீட்டுக்கு உள்ற குந்திக்கினு கண்ல தண்ணி வுட்னு தேம்பிக்கினு இருப்பாங்க. என்னா செய்யிறது பொழப்பு சார். இந்த சுரங்கம் தான் சார் எங்க வயித்தை ரொப்பினுச்சி. வெளியே சும்மா இருந்து பட்டினில சாவறதுக்கு உள்ளே போனா துட்டாவது கெடைக்கும்.. துண்ணுட்டு சாவறது எத்தினியோ மேல் இல்லையா சார்..”

“…..”

கேஜிஎப் போக்குவரத்து துறை
கேஜிஎப் போக்குவரத்து துறை

”எப்படியாவது சுரங்கத்த திரும்ப தொறக்கனும் . தெனைக்கும் பிச்சகாரங்க மாதிரி பெங்களூருக்கும் மாலூருக்கும் ஓடினு இருக்கோம்.. இது எங்க சுரங்கம் சார்.. நீ பாட்டுக்கு தொழிலாளி அப்டி கஸ்டப்பட்டான் இப்டி கஸ்டப்பட்டான்னு எழுதி கெவருமெண்டு தொறக்காம போயிடப் போறான்… பாத்து எழுது சார்..”

அவர் கண்கள் கலங்கி விட்டது. எம்மைத் தாண்டி எங்கோ வெறித்தவாறே உதடுகளில் வலிந்து வரவழைக்கப்பட்ட செயற்கையான சிரிப்போடு பேசிக் கொண்டே இருந்தார்… அந்த தொழிலாளியின் பெயர் ஜெயக்குமார். பெங்களூருவில் செக்யூரிட்டியாக பணிபுரிகிறார். பெற்றது இரண்டும் பெண் பிள்ளைகள் என்றார். மூத்த மகளை கல்லூரியில் சேர்த்துள்ளார். கல்லூரிக் கட்டணத்திற்காக காசு புரட்ட கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக டூட்டி பார்த்து விட்டு அன்று தான் சம்பளக் காசோடும் இரத்தச் சிவப்பான கண்களோடும் ஊர் திரும்பியிருந்தார். நாங்கள் சென்று திரும்பி இத்தனை நாட்களுக்கு பின்னரும் ஜெயக்குமாரின் முகத்தை எங்களால் மறக்கவே முடியவில்லை.

பழுக்க காய்ச்சிய இரும்புக் கம்பி தோலைப் பொசுக்கும் என்று தெரிந்தே யாராவது அதைப் பற்றுவார்களா? ஆனால் அது தான் வேலை என்றால்? அப்படித்தான் வயிற்றை நிரப்ப முடியுமென்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்? கோலார் தங்க வயலின் தொழிலாளர்கள் தகதகக்கும் அந்தக் கம்பியை மார்போடு ஆரத் தழுவிக் கொண்டார்கள்.

கோலார் தங்க வயலின் முன்னாள் தொழிலாளர்கள் எல்லோருக்கும் சுரங்கத்தின் பாடுகள் தெரியும். சொல்லப் போனால் நாம் புரிந்து கொள்வதை விட, அவர்களுக்கே மேம்பட்ட புரிதல் உள்ளது. அது அவர்களின் சொந்த வாழ்க்கை நடத்திக் கற்பித்த பாடம். சிலிகோசிஸ் நோய் பற்றி மருத்துவர்களுக்கு இணையாக விளக்குகிறார்கள். சிலிக்கோசிஸ் பாதிப்புகளைக் குறித்தோ சுரங்க வேலையின் அபாயம் குறித்தோ அவர்கள் சொன்னதில் நூறில் ஒரு சதவீதத்தையாவது எமது எழுத்தினால் மறு உருவாக்கம் செய்ய முடியாது.

கேஜிஎப் மின் துறை
கேஜிஎப் மின் துறை

என்றாலும் அவர்களுக்கு அவர்களது சுரங்கம் திரும்பவும் வேண்டுமாய் இருக்கிறது. ஏன்? அவர்களே சொல்லிக் கொள்வது போல் அவர்கள் சாகசப் பிரியர்களாக இருப்பதினாலா?

நீங்கள் கோலாரின் நண்டு சிண்டுகளிடம் பேசினால் கூட தங்களது தைரியத்தைக் குறித்தும் இயற்கையை அச்சமின்றி எதிர்த்து வெல்லும் தீரம் குறித்தும் உயிரைத் துச்சமாக மதிக்கும் வீரம் குறித்தும் பெருமிதத்தோடு விவரிப்பார்கள். ஆனால், உண்மையை சில நேரங்களில் வாய்வார்த்தைகளில் இருந்து மட்டுமல்ல, அதனையும் கடந்த சமூக எதார்த்தத்திலிருந்தே நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

கோலார் தங்க வயலின் மக்கள் தொகையில் எண்பதுக்கும் அதிகமான சதவீதம் தமிழர்கள். தமிழர்களில் ஆகப் பெரும்பான்மையானோர் தலித்துகள். கோலார் தங்க வயலில் நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் சுரங்கப் பணிகளைத் துவக்கிய ஜான் டெய்லர் முதலில் இங்கிலாந்தில் இருந்து தொழிலாளர்களை வரவழைக்க முயன்று தோற்றுள்ளார். பின் அக்கம் பக்கத்தில் இருந்த கிராமங்களான ஊரிகான் மற்றும் மாரிக்குப்பத்திலிருந்து தொழிலாளர்களை வேலைகளுக்கு நிர்பந்தமாக வரவழைத்துள்ளார்.

சுரங்கத்தின் ஆழம் ஆயிரம் அடிகளைக் கடந்தது. 1880-களில் பின்னர் ஏற்படுத்தப்பட்ட சொற்ப வசதிகள் கூட இருக்கவில்லை. உள்ளே செல்லும் தொழிலாளர்கள் மூச்சுத் திணறிச் சாவது நிச்சயம் என்கிற நிலைமையில் உள்ளூர் தொழிலாளர்கள் பின்வாங்கினர். அதன் பின்னர் தொழிலாளர்களை வரவழைக்க ஜான் டெய்லர் கங்காணிகளின் வடிவில் அற்புதமான தீர்வு ஒன்றைக் கண்டார்.

கங்காணிகள் எனப்படுவோர் அன்றைய வட ஆற்காடு, தருமபுரி, சித்தூர், சேலம் போன்ற மாவட்டங்களில் இருந்து ஆதி திராவிடர் வகுப்புகளைச் சேர்ந்த அப்பாவி ஏழைகளை ஆசை காட்டி கோலார் தங்க வயலுக்கு வரவழைத்தனர். ஏறக்குறைய கொத்தடிமைகளின் நிலையில், எந்த உரிமையும் இன்றி சுரங்கத்தில் வேலை பார்க்க அவர்கள் நிர்பந்திக்கப்பட்டனர். செத்து விழுந்த தொழிலாளிகளைப் புதைக்க சுடுகாடு கூட அன்றைக்கு இருக்கவில்லை. பிணத்தை ஊருக்கு எடுத்துச் சென்று புதைக்க போக்குவரத்து வசதிகளும் இல்லை.

1930-ம் ஆண்டு தங்க வயலில் நடந்த பொது வேலை நிறுத்தத்தின் கோரிக்கைகளில் முக்கியமானது தொழிலாளர்களுக்கான சுடுகாடு அமைத்துத் தரக் கோரியது தான். சுமார் ஐம்பதாண்டு காலம் – இரண்டு தலைமுறைகளுக்கும் மேலாக – சுரங்க விபத்துகளில் மாண்டு போன தொழிலாளர்களின் பிணங்களை கைவிடப்பட்ட சுரங்கங்களில் வீசியெறியப் பணித்துள்ளனர் நிர்வாகத்தில் இருந்த வெள்ளை அதிகாரிகள்.

உங்கள் கழுத்தில், கையில், கைவிரல்களில் மின்னும் தங்கம் பூலோக நரகத்திலிருந்தே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது என்கிற உண்மை உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம் – ஆனால், அதை உற்பத்தி செய்த தொழிலாளர்களுக்கு அவர்களின் சொந்த அனுபவத்திலிருந்தே நன்றாகத் தெரியும். எனில், அந்த மக்கள் இப்படி ஒரு நரகத்தை ஏன் விரும்பித் தேர்ந்தெடுத்தார்கள்?

ஏனெனில், வெளியே சமூகத்தில் அன்றைக்கு நிலவிய சாதிக் கொடுமையின் வீரியம் தான் அம்மக்களைப் பிடித்து எரியும் எண்ணெய் கொப்பறைக்கு இணையான கோலாரின் சுரங்கங்களுக்குள் தள்ளியது. இன்றைக்கு நாம் (தர்மபுரி) இளவரசனின் காலத்தில் இருக்கிறோம். இன்றைக்கு சுமார் நூற்றி நாற்பது ஆண்டுகளுக்கு முன் நிலைமை எப்படி இருந்திருக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். தமிழகத்தின் வடமாவட்டங்களில் ஆதிதிராவிட வகுப்பில் பிறந்த ஒருவர் அனுபவித்திருக்க கூடிய கொடுமைகளை நம்மால் நினைத்துக் கூட பார்க்கமுடியாது.

அன்றைய வட தமிழகத்து தலித்துகள் கங்காணிகளிடம் விரும்பியோ விரும்பாமலோ ஏமாறத் தேவையான சகல விதமான சமூக காரணிகளும் இருந்தன. ஆண்டாண்டு காலமாய், செத்த மாட்டை உரிக்கவும், சாவுக்கு சொல்லியனுப்பவும் பணிக்கப்பட்டு ஒட்டு மொத்த சாதிப் படிநிலையின் கடைக்கோடியில் அழுந்திக் கிடந்த அவர்கள் கேடுகெட்ட அந்த நிலையிலிருந்து வெளியேறக் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டனர். அப்படிக் கிடைத்த வாய்ப்பும் அவர்களின் உயிரையே விலையாகக் கேட்டது.

இன்றைக்கு ஆண்ட பரம்பரை வீரம் பேசும்  ஆதிக்க சாதிகளின் வீரமெல்லாம் வெறும் வாய் சொற்கள் தான். சுமார் நூற்றாண்டுகளுக்கு முன் தமிழ்ச் சமூகத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டு நிர்கதியாய் கோலார் தங்க வயலில் வந்து விழுந்த தலித்துகளின் வீரமோ ஒப்புவமையற்ற தனித்துவமானது. மரணம் நிச்சயம் என்ற நிலையில் ஆலைச் சங்கு கேட்டதும் துண்டை உதறித் தோளில் போட்டுக் கிளம்பிய தொழிலாளிகளைச் சொல்வதா, இல்லை பூமிக்குள் புதைய கணவனை அனுப்பி விட்டு பிள்ளைகளோடு காத்திருந்த அவரது மனைவியைச் சொல்வதா…?

வீரம் என்பதற்கான புதிய இலக்கணத்தை தொழிலாளர் வர்க்கமாக படைத்துக் கொடுத்துள்ளனர் தங்க வயல் மக்கள். வீரம் என்பது சக மனிதர்களைக் கொல்லத் துணிவதும் கொன்றழிப்பதும் அல்ல, படைத்து உருவாக்குவதும் அதற்காக உயிரையே பணயம் வைக்கத் தயாராக இருப்பதுமே வீரம் என்பதை தங்கள் வாழ்க்கையால் இந்த பூமி இருக்கும் மட்டும் அழிக்க முடியாத எழுத்துக்களில் எழுதிச் சென்றுள்ளனர் வீழ்ந்து போன தொழிலாளிகள்.

தங்க வயலின் தலித்துகள் கடந்த நூற்றாண்டு காலமாக தங்கள் வாழ்வின் ஒவ்வொரு நாளும் இயற்கையின் உக்கிரத்தோடு மோதி வென்றார்கள்; அல்லது வீழ்ந்து வீரமரணம் அடைந்தார்கள். தங்கள் உற்றாரின், ரத்த சொந்தங்களின் மரணங்கள் கூட அவர்கள் நெஞ்சைக் கலக்கவில்லை.. பிணங்கள் வரிசை கட்டி சுரங்கத்தின் கீழிருந்து மேலே வந்த போதும் எஞ்சியவர்கள் மீண்டும் மீண்டும் சுரங்கத்தின் ஆழம் நோக்கிச் சென்றார்கள். சுமார் நூற்றி முப்பது ஆண்டுகள் இயற்கையின் கோபாவேசத்தின் முன் அடிபயணியாமல் நெஞ்சு நிமிர்த்தி நின்ற அந்த வீரம் பதிமூன்று ஆண்டுகளுக்கு முன் தொழிற்சங்க துரோகிகளாலும் ஆளும் வர்க்க எதிரிகளாலும் முதுகில் குத்தி வீழ்த்தப்பட்டது.

உழைப்பைக் கவிதை என்பார்கள். கவிதையை விட அழகானதொன்றை மொழியால் படைத்துக் காட்ட முடியாது எனில் தவிக்கும் நுரையீரல் காற்றுப் பைகளோடு, உடலின் மேற்தோலை பொசுக்கும் வெப்பத்தில், தலைக்கு மேல் இடிந்து விழக் காத்திருக்கும் பூமியின் கீழ் மரணத்தோடு விளையாடியவாறே தங்க வயல் தொழிலாளர்கள் காட்டிய உழைப்பை என்னவென்பது…? மொழி தோற்றுப் போகும் இடத்தில் மண்வெட்டியை ஆவேசத்தோடு உயர்த்தினர் அந்தத் தொழிலாளிகள்.

மின்னும் அந்த தங்க ஆரத்தை உங்கள் கழுத்துகளில் பூட்டி நீங்கள் மகிழ வேண்டும் என்பதற்காக அவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைக்கவில்லை. பார்ப்பனிய சாதியடுக்கின் கீழ்தட்டில் நெறிபட்டு ஆதிக்க சாதித் திமிரில் வதைபட்டு வரலாற்றுப் புறக்கணிப்பில் ஓய்ந்து போன அவர்கள் கடைசியில் தொழிலாளர் வர்க்கமாக நிமிர்ந்தார்கள். சாதி அளித்த இழிவை வர்க்கமாகத் துடைத்தெறிந்தார்கள். ஆயிரம் பொருளாதாரச் சுரண்டல்கள் இருந்தாலும், சுரங்கம் அந்த மக்களின் சமூக இழிவைத் துடைக்க ஒரு வாய்ப்பைக் கொடுத்தது என்பதை மறுக்கவே முடியாது.

அந்த நன்றியை தொழிலாளர்கள் இத்தனை தலைமுறைகளுக்குப் பின் இன்றும் மறக்கவில்லை. தங்கள் முன்னோர்களின் பாடுகளை கதைகளாக நினைவில் பொதிந்து வைத்திருக்கிறார்கள். தங்கள் வரலாற்று இழிவைத் துடைக்க உதவிய அந்தச் சுரங்கம் என்றாவது மீண்டும் திறக்காதா என்ற ஏக்கத்தோடு காத்திருக்கிறார்கள்.

சுரங்கம் மீண்டும் திறக்குமா? அது மூடப்பட்டதன் பின்னணி தான் என்ன? கோலார் தங்க வயலின் வரலாறு என்ன? அடுத்து வரும் பாகங்களில் பார்க்கலாம்.

(தொடரும்)
கோலார்: தங்கத்திற்காக உயிர் கொடுத்த தமிழ் மக்கள் !
_________________________________________________
–    வினவு செய்தியாளர்கள், கோலாரிலிருந்து…
படங்கள் : இணையத்திலிருந்து

 1. தகவல் பிழை. மின்சாரம் பெற்ற இந்தியாவின் மூன்றாவது நகரம் கோலார் தங்க வயல்.

  1897 – டார்ஜிலிங்
  1989 – கல்கத்தா
  1902 – கோலார் தங்க வயல்

 2. கோலார் சுரங்கத் தொழிலாளி கஷ்டங்களை இவ்வளவு ஆழமா யாரும் காட்டியதில்லை. செய்தி சேகரித்த தோழர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்!

 3. மிக அருமையான விளக்கம். நெஞ்சை பிழியும் ஒரு போர்க்களக் காட்சியை விவிரிப்ப்பது போல் உங்கள் பதிவு.
  தங்கம் வாங்கும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டியது

  வேதாந்தி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க