Sunday, May 26, 2024
முகப்புகட்சிகள்பா.ஜ.கசென்னை, திருச்சி, கோவையில் சமஸ்கிருத வாரத்திற்கு எதிர்ப்பு

சென்னை, திருச்சி, கோவையில் சமஸ்கிருத வாரத்திற்கு எதிர்ப்பு

-

கோவை

“மோடி அரசின் சமஸ்கிருத வாரம், இந்துத்துவா திணிப்பே அதன் சாரம்”

எனும் முழக்கத்துடன் மத்திய அரசின் சமஸ்கிருத வார கொண்டாட்ட அறிவிப்புக்கு எதிராக கோவையில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தலைமையில் மக்கள் கலை இலக்கியக் கழகத்துடன் இணைந்து செஞ்சிலுவை சங்கம் முன்பு 06-08-2014 அன்று மாலை ஐந்தரை மணிக்கு துவங்கி ஏழு மணி வரை ஆர்ப்பாட்டம் நடந்தது. புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியை சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி தோழர் உமா தலைமையில் ஆர்ப்பாட்டம் முழக்கங்களுடன் துவங்கியது.

தோழர் உமா தனது தலைமையுரையில் சமஸ்கிருத வார கொண்டாட்ட அறிவிப்பு பற்றியும் அந்த அறிவிப்பு எவ்விதத்தில் பார்ப்பன மேலாதிக்கத்தின் அடையாளம் எனவும் சுருக்கமாக எடுத்துரைத்தார்.

அடுத்ததாக, மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மைய கலைக்குழு தோழர் கோவன் அவர்கள் கண்டன உரையாற்றினார். தோழர் கோவன் சமஸ்கிருதத்தின் உள்ளடக்கத்தையும் பார்ப்பனர்களின் பித்தலாட்டத்தையும் தம்மை எதிர்த்து கேள்வி கேட்டால், பார்ப்பனியத்துக்கு எதிராக குரல் கொடுத்தால், கொலையும் செய்ய தயங்க மாட்டார்கள் என்பதையும் சாருவாகன் கதை மூலம் விளக்கினார். மேலும், தோழர்.கோவன் வேதங்களிலும் உபநிடதங்களிலும் உள்ள சமஸ்கிருத சுலோகங்களை சொல்லி அவற்றின் பார்ப்பன மேலாதிக்க உள்ளடக்கத்தை தமிழில் மொழிபெயர்த்து பேசியவற்றை அருகிலுள்ள கோர்ட் வளாகத்தில் உள்ள வழக்குரைஞர்களும் சுற்றி நின்ற காவல் துறையினரும் கூட வியந்து கேட்டனர்.

அடுத்ததாக, மக்கள் கலை இலக்கிய கழகத்தின் கோவை மாவட்ட செயலர் தோழர் மணிவண்ணன் பேசுகையில் ஜெயலலிதா அரசு எப்படி மோடி அரசுக்கு பார்ப்பன விசுவாசத்துடன் இருக்கிறது என்பதனையும் இந்த இரு அரசுகளுமே எப்படி பார்ப்பன அடிவருடி அரசுகள் எனவும் எடுத்தியம்பினார்.

இறுதியாக, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியை சேர்ந்த தோழர் திலீபனின் நன்றியுரையுடன் ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,

கோவை

திருச்சி

ந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்ற நாளில் இருந்து பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட பார்ப்பன கும்பலின் கொள்கையான இந்துத்துவாவை திணிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் பலவழிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் ஒன்றாகத்தான் ஆகஸ்ட் 7 முதல் 13 வரை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் (CBSE) சமஸ்கிருத வாரம் கடைபிடிக்க வேண்டும் என மோடி அரசு உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பெரியார் சிலை முன்பு மக்கள் கலை இலக்கிய கழகத்தின் தோழர் லதா அவர்களின் தலைமையில் மோடி அரசின் சமஸ்கிருத வாரம் கொண்டாடும் உத்தரவு நகலை எரித்து போராட்டம் நடைபெற்றது.

  • “10 கோடி தமிழர்கள் பேசக்கூடிய தமிழ் மொழியை வேசி மொழி என்று பார்ப்பனக் கும்பல் தொடர்ந்து அவமானப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் செத்த மொழியான சமஸ்கிருதத்தை சிங்காரிப்பது, தமிழ் மொழியை அழிக்கும் நடவடிக்கை. எனவே, இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது” என்றும்,
  • “பெரியார் பிறந்த இம்மண்ணில் இந்தி திணிப்பு, சமஸ்கிருத மீட்பு, வரலாற்று திரிப்பு போன்ற மோடி அரசின் பார்ப்பன பாசிச நடவடிக்கைகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும் வகையில் மோடியின் சமஸ்கிருத வாரத்தை, சமஸ்கிருத எதிர்ப்பு வாரமாக கடைபிடிப்போம்” எனவும்,
  • “பார்ப்பன எதிர்ப்பு தமிழ் மரபை மீட்டெடுப்போம்” எனவும்

முழக்கமிடப்பட்டது. மேலும், இந்தி – சமஸ்கிருத திணிப்பை கல்வி நிலையங்களில் இருந்து ஒழித்துக்கட்ட கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர போராட வேண்டும் என அம்பலப்படுத்தப்பட்டது.

இது தொடர்பாக நூற்றுக்கணக்கான சுவரொட்டிகள் மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டது. செஞ்சிவப்பு சீருடையுடனும் பார்ப்பனிய எதிர்ப்பாளர்களான பெரியார் அம்பேத்கார் ஆகியோரின் படங்களுடனும், முழக்கப் பதாகைகளுடனும், செங்கொடி ஏந்தியும் விண்ணதிரும் பறை முழக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டம் நூற்றுக்கணக்கான மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இறுதியில் இந்த நகல் எரிப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட ம.க.இ.க மற்றும பு.மா.இ.மு தோழர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்பட்டார்கள்.

முழக்கம்

மக்கள் கலை இலக்கிய கழகம் – வாழ்க!
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி – வாழ்க!
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – வாழ்க!
பெண்கள் விடுதலை முன்னணி – வாழ்க!

மத்திய அரசு அலுவல்களில்
கட்டாயமாக இந்தித் திணிப்பு!

நோன்பிருந்த முஸ்லீம் வாயில்
கட்டாயமாக சப்பாத்தி திணிப்பு!

ஆட்சிக்கு வந்து அறுபது நாளில்
ஆர்.எஸ்.எஸ் சின் ஆட்டம் பாரு!

முறியடிப்போம்! முறியடிப்போம்!
சமஸ்கிருத வாரம் என்ற
மோடி அரசின் மொழித்திணிப்பை
பார்ப்பன பண்பாட்டு படையெடுப்பை
முறியடிப்போம்! முறியடிப்போம்!

யாரும் பேசாத சமஸ்கிருதம்!
யாரும் எழுதாத சமஸ்கிருதம்!
யாரும் பாடாத சமஸ்கிருதம்!
யாருக்கும் புரியாத சமஸ்கிருதம்!
செத்த மொழிக்கு கொண்டாட்டம்!
செத்த பிணத்துக்கு அலங்காரம்!

கொண்டாட வேண்டுமா சமஸ்கிருத வாரம்!
கூட்டித் தள்ளுவோம் குப்பை ஓரம்!

சூத்திரன் என்றும் பஞ்சமன் என்றும்
வேசிமக்கள் தமிழர் என்றும்
இழிவு படுத்திய மனு தர்மத்தை
எழுதிய மொழிதான் சமஸ்கிருதம்!

மானமுள்ள தமிழ் மக்களே!
கூடிப் புதைப்போம் சமஸ்கிருதத்தை

வே…தத்தை காதில் கேட்டால்
ஈயத்தைக் காய்ச்சி ஊத்து என்று
சூத்…திரனை தண்டித்த மொழிதான்
பார்ப்பானின் சமஸ்கிருதம்!

இழிவு படுத்தும் மொழியை எதிர்ப்போம்!
தாய் மொழியை உயர்த்திப் பிடிப்போம்!
தமிழ் மொழியை உயர்த்திப் பிடிப்போம்!

இந்தித் திணிப்புக்கு எதிராக
சமஸ்கிருத எதிர்ப்பு வாரம்
கடைபிடிப்போம்! கடைபிடிப்போம்!
பார்ப்பன எதிர்ப்பு தமிழ் மரபை
மீட்டெடுப்போம்! மீட்டெடுப்போம்!

சி.பி.எஸ்.ஈ பள்ளிகளில்
சமஸ்கிருத வாரக் கொண்டாட்டத்தை
தடுத்து நிறுத்துவோம்! தடுத்து நிறுத்துவோம்!

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்

மக்கள் கலை இலக்கியக் கழகம் – 7373217822;
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி – 9943176246
திருச்சி.

சென்னை

சமஸ்கிருத வாரத்தை அனுமதியோம் ! பார்ப்பன எதிர்ப்பு மரபை உயர்த்திப்பிடிப்போம்!
– புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டம்

என்ற முழக்கத்தின் கீழ் மக்கள் கலை இலக்கியக்கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி ஆகிய அமைப்புக்களின் சார்பில் சென்னையில் உள்ள சி.பி.எஸ்.இ பள்ளியான பத்மா சேஷாத்ரி பள்ளி முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

“மோடி அரசின் சமஸ்கிருத வாரம் ! இந்துத்துவா திணிப்பே அதன் சாரம் !
செத்த மொழியான சமஸ் கிருதத்தை சிங்காரிக்காதே! தேசிய இனங்களின் மொழிகளை  அழிக்காதே !”

என்ற முழக்கங்களுடன் காலை 11 மணிக்கு வள்ளுவர் கோட்டம் சிக்னலில் இருந்து மாணவர்கள், பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டவர்கள்  பேரணியாக சென்று அப்பள்ளி சாலையை அடைந்தனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்த மக்கள் கலை இலக்கியக்கழகத்தின் மாநிலப்பொருளாளர் தோழர். வெங்கடேசன் 1500க்கும் குறைவான மக்கள் கூட பேசாத செத்துப் போன மொழிக்கு மத்திய அரசு விழா எடுப்பதற்கான நோக்கம் என்பது இந்தி – இந்தி – இந்தியா என்ற ஆர்.எஸ்.எஸ் –ன் கருத்தியலை இந்தியா முழுக்கக் கொண்டு வந்து  இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய இனங்களையும் அழிக்கும் சதிதான், இந்த மோடி அரசுக்கு தமிழக முதல்வர் ஜெயா ஆதரவளித்து சமஸ்கிருத ஓலைச்சுவடிகளை இணையத்தில் தரவேற்றம் செய்வதை சுட்டிக்காட்டி  தமிழையும் மற்ற மொழிகளையும் அழிக்க  நடந்து வரும்  சதிக்கு எதிராக பெரியாரின் வாரிசுகளாக போராட வேண்டும்” என்று பேசினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

நக்கீரன் செய்தி

தகவல்

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
சென்னை

  1. நிகழ்வுகளை கைபேசியில் கூட வீடியோ எடுத்து யூடூபில் பதிவேற்றி இங்கு இணைப்புக் கொடுக்கலாமே? அவ்வப்பகுதித் தோழர்கள் இது சாத்தியமா என்று சிந்திக்கவும். (தோழர் கோவன் பேசியதைக் கேட்க கேட்க முடியவில்லையே என்று வருத்தம் ஏற்படுகிறது…)
    நல்ல முயற்சி, பெரியாரிய அமைப்புகளெல்லாம் தம் பிழைப்பைப் பார்க்கக் கிளம்பிவிட்ட நிலையில் புரட்சிகர அமைப்புகள் மட்டுமே (ஆங்காங்கு சொற்பக் கூட்டங்கள் நடத்தும் பெரியாரிய அமைப்புகளைத் தவிர) களத்தில் நிற்கின்றன!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க