Friday, December 6, 2024
முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்சிண்டிகேட் வங்கி ஜெயின் கைது – அரசு வங்கி சேவை யாருக்கு?

சிண்டிகேட் வங்கி ஜெயின் கைது – அரசு வங்கி சேவை யாருக்கு?

-

ரூ 50 லட்சம் லஞ்சம் தொடர்பாக மணிப்பால் நகரத்தை மையமாக கொண்டு செயல்படும் பொதுத் துறை சிண்டிகேட் வங்கியின் நிர்வாக இயக்குனர் எஸ்.கே.ஜெயின் உள்ளிட்ட ஒன்பது பேர் கடந்த சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 2, 2014) மத்திய புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எஸ்.கே.ஜெயின்
எஸ்.கே.ஜெயின்

மத்திய புலனாய்வுத் துறை பெங்களூரு, போபால், மும்பை, டெல்லி உள்ளிட்ட 20 இடங்களில் சோதனை நடத்தி லஞ்சப் பணமாக கொடுக்கப்பட்ட ரூ 50 லட்சத்தை கைப்பற்றியது. மேலும், பல நிதி ஆவணங்களையும், ரூ 21 லட்சம் ரொக்கம், ரூ 1.68 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் ரூ 63 லட்சத்துக்கான வைப்புத் தொகை ரசீதுகளையும் கைப்பற்றியிருக்கிறது.

எஸ்.கே.ஜெயினுடன் பூஷன் ஸ்டீல் நிறுவன துணைத் தலைவர் நீரஜ் சிங்கால், பிரகாஷ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குனர் வேத பிரகாஷ் அகர்வால், ஆடிட்டர் பவன் பன்சால், ஜெயினின் உறவினர்கள் வினீத் கோதா, மற்றும் புனீத் கோதா, விஜய் பஹூஜா, புருஷோத்தம் தோட்லானி, மற்றும் பங்கஜ் பன்சால் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தங்களுக்கான கடன் உச்சவரம்பை சட்டவிரோதமாக உயர்த்தவும், திருப்பிச் செலுத்தத் தவறிய கடன் தொடர்பாக போலி கணக்கு காட்டவும் லஞ்சம் கொடுத்ததாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரகாஷ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும், பூஷன் ஸ்டீல்சும் ஏற்கெனவே தலா ரூ 100 கோடி, ரூ 120 கோடி அளவில் சிண்டிகேட் வங்கியிடமிருந்து கடன் வாங்கியிருக்கிறார்கள். தமது தொழிலை விரிவுபடுத்துவதற்கு கூடுதல் கடன் பெறுவதற்கு எஸ்.கே.ஜெயினுக்கு லஞ்சம் கொடுத்திருக்கின்றனர்.

மத்திய புலனாய்வுத் துறை இவரது தொலைபேசி உரையாடல்களை ரகசியமாக கண்காணித்து வந்தது. பிரகாஷ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு கடன் உச்ச வரம்பை உயர்த்த அந்நிறுவன உயரதிகாரிகளுடன் அவர் பேரம் பேசியதும், ஹவாலா முறையில் பணத்தை மும்பையில் உள்ள பவன் பன்சால் என்ற இடைத்தரகர் மூலம் தனது மைத்துனரும், மற்றொரு உறவினருமான வினீத் மற்றும் புனீத் கோதாவிடம் ஒப்படைக்கும்படி பேசியதும் தெரிய வந்தது. அவ்வாறு பணம் கைமாறும் நேரத்தில் சிபிஐ இவர்களை பொறி வைத்து பிடித்தது.

பவன் பன்சால் நீரா ராடியாவைப் போன்ற ஒரு கார்ப்பரேட் தரகர். பெரிய முதலாளிகளுக்கு பொதுத்துறை வங்கிகளின் மூலமாக கடன் ஏற்பாடு செய்து தருவது இவரது நிறுவனத்தின் வேலை. இதற்காக பன்சாலின் நிறுவனத்தில் வேலை பார்த்த இருவர் பங்கஜ் பன்சால், முகேஷ் ஜிண்டால் பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுடனும் நட்புறவை ஏற்படுத்திக் கொள்கின்றனர். வங்கி விதிகளின்படி ‘தகுதி’ இல்லாத நிறுவனங்களுக்கு கடன் வழங்க ஏற்பாடு செய்வார்கள்.

கார்ப்பரேட் வங்கிக் கடன்இந்தத் தகுதி என்பது டாடா,அம்பானி போன்ற பெரிய தரகு முதலாளிகளின் நலனுக்கேற்றபடி உருவாக்கப்பட்டவை. அகர்வால் போன்ற சின்ன முதலாளிகள் அந்த விதிகளின்படி கடன் வாங்க முடியா விட்டால் பன்சால் போன்ற இடைத்தரகர்கள் மூலம் வங்கி விதிகளை வளைத்து கடன் பெறுகின்றனர். இதற்கான கமிசனை இடைத்தரகர்கள் வங்கி அதிகாரிகளுடன் பங்கு போட்டுக் கொள்வார்கள். சிண்டிகேட் வங்கியில் மட்டுமின்றி பல அரசு மற்றும் தனியார், பன்னாட்டு வங்கிகளிலும் முதலாளிகளின் சூதாட்டத்திற்காக பன்சால் நிறுவனம் இந்த திருகுதாள வேலையை செய்திருக்கிறது.

பன்சாலின் ஆல்டியஸ் ஃபைன்செர்வ் பி லிட் நிறுவனம் மும்பை நாரிமன் பாயிண்டில் நவீன அலுவலகத்துடன், முறையாக பதிவு செய்து கடந்த பத்தாண்டுகளாக செயல்பட்டு வருகிறது. பன்சாலின் இடைத்தரகு நிறுவனத்துக்கு சட்ட அங்கீகாரம் அளித்துள்ளதும் மத்திய அரசின் நிதித்துறைதான்.

முதலாளிகள்தான் நாட்டை முன்னேற்றுகிறார்கள், உழைக்கும் வர்க்கத்துக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துகிறார்கள் என்று பிரச்சாரம் செய்கின்றனர் முதலாளித்துவ அறிஞர்கள். ஆனால், முதலாளிகள் தொழில் செய்வதே கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் சேமிப்புகளை வங்கிக் கடன் (அல்லது வேறு நிதிக் கருவிகள் மூலம்) கைப்பற்றிய நிதியின் மூலமாகத்தான்.

டாடா, அம்பானி போன்ற பெரிய நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியில் கடன், தோல்வியடைந்த திட்டங்களுக்கு கடன் தள்ளுபடி என்று வங்கிகள் அனைத்து வசதிகளையும் செய்து தருகின்றனர்.

தங்களை விட ‘தகுதி’ குறைவான அகர்வால், சிங்கால் போன்று நடுத்தர அளவு முதலாளிகள் வங்கிப் பணத்தைக் கைப்பற்ற லஞ்சம் மூலம் முயற்சிப்பதை பெரிய முதலாளிகள் சகித்துக் கொள்வதில்லை. அந்த அடிப்படையில் சி.பி.ஐ இயக்குனர் ரஞ்சித் சின்ஹாவின் உத்தரவுப்படி கடந்த ஆறு மாத காலமாக மத்திய புலனாய்வுத் துறை சிண்டிகேட் வங்கியின் ஜெயினின் தொலைபேசி உரையாடல்களை ரகசியமாக கண்காணித்து வந்ததில் சிக்கியிருக்கிறார். நீரா ராடியாவுடனான தொலைபேசி உரையாடல்களில் சிக்கிய ரத்தன் டாடா, அவற்றின் மீதான விசாரணைகளை நீதிமன்றத்தில் உத்தரவு வாங்கி தடுத்து நிறுத்தியதும் நினைவிருக்கலாம்.

சிண்டிகேட் வங்கிஇவ்வாறு பொதுத்துறை வங்கிகளின் பணத்தை ‘விதிமுறைகளுக்கு புறம்பாக’ முதலாளிகள் கையாட முயற்சிப்பதற்கு உடந்தையாக இருந்ததாக பல அதிகாரிகள் சிக்கியுள்ளனர். 2010-ம் ஆண்டு வெளியான கார்ப்பரேட் கடன் ஊழல் விவகாரத்தில் பொதுத்துறை வங்கிகளின் மூத்த அதிகாரிகள் 8 பேரும், எல்.ஐ.சி நிதி நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியும் கைது செய்யப்பட்டனர். அதில் மணி மேட்டர்ஸ் இந்தியா என்ற இடைத்தரகு நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ராஜேஷ் சர்மாவும் கைது செய்யப்பட்டார்.

1990-களின் தொடக்கத்தில் இந்தியன் வங்கி சேர்மன் கோபாலகிருஷ்ணன் போதுமான பிணை இல்லாமல் கடன் வழங்கியதோடு மட்டுமல்லாமல் அருள் பில்டர்சுக்கு ரூ 64 லட்சம், இன்காம் பில்டர்சுக்கு ரூ 50 லட்சம் கடன் தள்ளுபடி செய்து வங்கிக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டார். இந்த குற்றங்களுக்காக சுமார் 25 ஆண்டு வழக்கு நடந்த பிறகு அவர் சென்ற ஆண்டு சி.பி.ஐ நீதிமன்றத்தில் 1 ஆண்டு மட்டும் தண்டனை பெற்றார்.

1991-ம் ஆண்டு யூகோ வங்கியின் சேர்மன் கே எம் மார்க்கபந்து ஹர்ஷத் மேத்தா பங்குச் சந்தை ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டார். 10 ஆண்டுகளுக்கு முன்பு இன்னொரு வழக்கில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு பொதுத்துறை வங்கியின் மேலாளர் கைது செய்யப்பட்டார்.

இது தவிர பாரத ஸ்டேட் வங்கியின் துணை நிர்வாக இயக்குனர் ஷ்யாமல் ஆச்சார்யா மீது ரூ 100 கோடிக்கு அதிக மதிப்பிலான வங்கிக் கடன்கள் வழங்குவதில் முறைகேடு செய்ததாக சி.பி.ஐ வழக்கு பதிவு செய்தது. 2010-ம் ஆண்டு கடன் வழங்குவதில் விதிமுறைகளை பின்பற்றவில்லை என்று எல்.ஐ.சி வீட்டுக் கடன் நிறுவனத்தின் முன்னாள் முதன்மை செயல் அலுவலர் ஆர் ஆர் நாயர் குற்றம் சாட்டப்பட்டார். 2010-ம் ஆண்டு நவம்பர் மாதம் கார்ப்பரேஷன் வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குனர் ராம்நாத் பிரதீப் மீது இதே மாதிரியான குற்றங்கள் சுமத்தப்பட்டன.

இந்தியாவில் வங்கித் துறையின் பெரும்பகுதி பொதுத்துறையின் கைவசம் இருப்பதாலும், தனியார் துறையில் வட்டி வீதம், கட்டணங்கள் அதிகமாக இருப்பதாலும், முதலாளிகள் சாதாரண மக்களின் பணத்தை பொதுத்துறை வங்கிகள் மூலமாகத்தான் கைப்பற்ற முடிகிறது.

2012-ம் ஆண்டு மார்ச் மாத புள்ளிவிபரங்களின் படி இந்திய வங்கிகளில் பாரத ஸ்டேட் வங்கி குழுமம் ரூ 10.21 லட்சம் கோடி, பிற பொதுத்துறை வங்கிகள் 23.72 லட்சம் கோடி, பழைய தனியார் வங்கிகள் – 2.2 லட்சம் கோடி, புதிய தனியார் வங்கிகள் – ரூ 6.5 லட்சம் கோடி, அன்னிய வங்கிகள் – 2.32 லட்சம் கோடி, ஊரக வங்கிகள் – 1.11 லட்சம் கோடி, மாநில கூட்டுறவு வங்கிகள் – 69,000 கோடி, நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் – 72,000 கோடி கடன் வழங்கியிருக்கின்றன. அதாவது மொத்த வங்கிக் கடனில் 70% (ரூ 33.9 லட்சம் கோடி) பொதுத்துறை வங்கிகளால் வழங்கப்படுகின்றன.

தனியார் வங்கிகளின் இயக்குனர்களாக தமது பிரதிநிதிகளை நியமிப்பது மூலம் பெரும் கார்ப்பரேட் முதலாளிகள் அவற்றை கட்டுப்படுத்துகின்றனர். உதாரணமாக, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் இயக்குனர்களை எடுத்துக் கொள்வோம்.

ஏப்ரல் 2009-ல் இவ்வங்கியின் நிர்வாக இயக்குனராக ஓய்வு பெற்ற கே வி காமத் சேர்மனாக பொறுப்பேற்றார். அதே ஆண்டு  மே மாதம் இன்ஃபோசிஸ் இயக்குனராக பதவியேற்றார். 2011-ல் இன்ஃபோசிஸ் சேர்மனான அவர் 2 ஆண்டுகள் அந்த பதவியில் நீடித்தார். 2013-ல் அந்த பதவியிலிருந்து விலகி  ஐ.சி.ஐ.சி.ஐ சேர்மனாகவும், இன்ஃபோசிஸ் மூத்த இயக்குனராகவும் தொடர்கிறார்.

இன்னொரு இயக்குனர் திலீப் சொக்ஸி என்பவர் டிலோய்ட் இந்தியா என்ற நிதி நிறுவனத்தின் கூட்டு நிர்வாக பங்காளியாக இருந்தவர். மற்றொரு இயக்குனர் ஹோமி ஆர் குஸ்ரோ கான் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக 2008-ல் ஓய்வு பெற்றவர். முன்னதாக டாடா டீ, கிளாக்சோ இந்தியா நிறுவனங்களின் நிர்வாக இயக்குனராக பணிபுரிந்திருக்கிறார்.

இவ்வாறு முதலாளிகள் நேரடியாகவோ, லஞ்சம் மூலமாகவோ தமக்குத் தேவையான வங்கிக் கடனை பெற்றுக் கொள்ள சாதாரண மக்களுக்கோ ஒரு சிறிய கடனுதவி வாங்கக் கூட நடையாய் நடக்க வைக்கின்றன வங்கிகள். வேலை கிடைக்காத காரணத்தால் கல்விக்கடனை தாமதமாக செலுத்த நேரும் மாணவர்கள், பெற்றோர்களின் படங்களை பிளக்சு பேனரில் போட்டு அசிங்கப்படுத்துகின்றன. தனியார் வங்கிகள் தரும் கடனை தாமதமாக கொடுத்தால் அடியாள் படையே வைத்து வீடு புகுந்து அசிங்கப்படுத்துகிறது. அதனால் மானமுள்ள மக்கள் பல இடங்களில் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.

பயிர்க் கடனை வாங்க அலைந்து திரிந்து, கடைசியில் விவசாயமும் அரசின் கொள்கையால் பொய்த்துப் போய் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளிடமும் பாரபட்சமில்லாமல் கறாராக கடனை வசூலிக்க முயல்கின்றன வங்கிகள். ஆனால் ஊரான் வீட்டு நெய்யே என்ற கதையாக மக்கள் பணத்தை வரைமுறையில்லாமல் முதலாளிகளுக்கு மறுபுறம் தூக்கிக் கொடுக்கவும் செய்கின்றன.

மத்திய நிதித்துறை செயலாளர் சிண்டிகேட் வங்கி தலைவர் ஜெயினை இடைநீக்கம் செய்துவிட்டு, தற்காலிகமாக இரண்டு இயக்குநர்களை வங்கிக்கு நியமித்திருக்கிறார்.

“இதனால் அரசு வங்கிகளின் நம்பகத்தன்மை குறைந்து விடவில்லை” என்கிறார் ரிசர்வ் வங்கி ஆளுனர் ரகுராம் ராஜன். “இதன் மூலம் வங்கித் துறையில் களையெடுக்க வேண்டிய சக்திகளை நம்மால் இனம் கண்டுகொள்ள முடிந்துள்ளது” என்கிறார் அவர். அரசு வங்கிகளின் நம்பகத்தன்மையை முற்றிலும் அழித்து விட்டால், வங்கித் துறையை தனியாரிடம் விட்டு விடலாம். ஆனால், தனியார் வங்கிகளின் நடைமுறைகள் சாதாரண மக்களுக்கு நம்பிக்கை அளித்து பணத்தை திரட்ட உதவுவதில்லை. எனவே, மக்கள் இன்னும் பொதுத்துறை வங்கிகள் மீது நம்பிக்கை இழக்காமல் முதலாளிகள் சுரண்டியது போக எஞ்சியதாக தரும் ஊதியத்தில், சேமிக்கும் பணத்தை அவற்றில் போட வேண்டும்; அதன் மூலம் முதலாளிகளின் ‘தொழில் முனைவு’க்கு உதவ வேண்டும் என்பதுதான் ரகுராம் ராஜனின் செய்தி.

“இடைத்தரகர் இல்லாமல், வெளிப்படைத் தன்மையுடன் நிறுவனங்களுக்கு கடன் வழங்க வேண்டும்” என்று பொதுத்துறை வங்கிகளுக்கு நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவுறுத்தியிருக்கிறார்.

ஆனால், இவர்கள் அனைவருக்குமே பன்சாலைப் போன்ற ஆடிட்டர்கள் இருப்பது தெரியாத ஒன்றல்ல. பன்சால் போன்ற ஆடிட்டர்கள், தாம் வேலை பார்த்த சிட்டி வங்கி, ஆக்சிஸ் வங்கி போன்றவற்றில் இருந்து விலகி சொந்த நிறுவனம் தொடங்குகிறார்கள். இப்போது எசகுபிசகாக மாட்டிய உடன் கூட்டத்தோடு கூட்டமா ஓடுறான் பிடி ஓடுறான் பிடி என்று அருண் ஜேட்லி போன்ற வழக்கறிஞர்கள் கத்துகிறார்கள்.

பன்சாலின் லேப் டாப், இரண்டு செல் பேசிகளை நோண்டினால் இன்னும் முப்பது நிறுவனங்களாவது இப்போதைக்கு மாட்டும் என்கிறார்கள். இவர்ளகோடு, இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக வங்கிக் கடனை பெறும்  முதலாளிகளும் கடந்த பத்தாண்டுகளில் மொட்டையடித்த வங்கிகளின் கணக்கை யாரிடம் போய் கேட்பது?

மேலும் படிக்க

  1. திருஷ்ஷூர்ணம்
    விபூதி
    நாமக்கட்டி
    பெரிய அளவில் தயார் செய்து விற்பனை செய்ய
    இருக்கிறேன்….
    எந்த வங்கியாவது கடன் வழங்குமா?

  2. மிக அருமையான பதிவு ——ஏழைகள் ஏமாற்றப்படுவதை சுட்டி உள்ளீர்கள் —–மாபெரும் முதலாளீகள் இடைநிலை முதலாலிகளை போட்டு த்ள்ள வேண்டும் எனற நோக்கில்தான் இது அம்பலம் ஆகி உள்ளது —– இல்லாவிடில் இந்த ஊழலும் வெலி வராமலேயே போய் இருக்கும். நிர்வாக இய்க்குனர்கள் ஆனாலும், எவ்வள்வு உயர் வருவாய் படைததவர்கள் ஆனாலும் காசுக்கு சோரம் போகதவர்கள் இந்த தேசத்தில் யாரும் இல்லை என்பதை அடையாள படுத்தி இருக்கிறீர்கள் ——- தேவைக்கு மிகுதியாய் விரும்பாத மனங்கள் இந்த தேசத்தில் வளர வேண்டும் —-மிகு பொருள் விரும்பா அறநெறி நாடெஙுகும் பெருக வேண்டும ——-

  3. கவனிக்க தவறிய ஒன்று:
    இந்த வங்கியில் இயக்குனர் பதவி வழஙக
    இவனிடம் யார் யார் எவ்வ்வளவு பணம் வாஙிகினார்?
    அந்த மாமாக்களையும் உள்ளே தள்ள வேண்டும்….
    வேறு யார்….வேட்டி கட்டிய சிவகஙை செட்டியார்தான்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க