Thursday, May 30, 2024
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்ஓ.என்.ஜி.சியை எதிர்த்து தஞ்சையில் விவிமு ஆர்ப்பாட்டம்

ஓ.என்.ஜி.சியை எதிர்த்து தஞ்சையில் விவிமு ஆர்ப்பாட்டம்

-

  • ஓ.என்.ஜி.சி யின் எண்ணெய் எரிவாயு துரப்பண பணிகள் மக்கள் எதிர்ப்பையும் மீறி விரிவாக்கம்!
  • அரசின் மனிதகுல விரோத நடவடிக்கை!
  • தலைமுறைகளைக் காக்க தடியெடுப்போம்!

டந்த மாதம் ஆந்திர மாநிலத்தில் ஓ.என்.ஜி.சி- யின் ( கெயில் ) எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துரப்பண பணிகளின் போது ஏற்பட்ட பெரும் விபத்தினை தொடர்ந்து தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்ட விவசாயிகள் மத்தியில் ஓ.என்.ஜி.சி க்கு எதிரான பொதுக்கருத்து வலுவடைந்து வருகிறது. ஓ.என்.ஜி.சி யின் துரப்பண பணிகளால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்கொண்டு வரும் அச்சுறுத்தல்கள் குறித்து பசுமை விகடனில் கு. ராமகிருஷ்ணன் என்பவர் பல்வேறு ஆதாரங்களுடன் தொடர் கட்டுரைகளாக எழுதிவருகிறார்.

இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை ஊராட்சியில் தீபாம்பாள்புரம், நெய்குன்னம் ஆகிய பகுதிகள், திருவாரூர் மாவட்டத்தில் அடியக்காமங்களம், கோவில்களப்பால் உள்ளிட்ட பகுதிகள், மன்னார்குடி வட்டத்தில் கூத்தாநல்லூர் ஆகியவற்றில் ஓ.என்.ஜி.சி யின் துரப்பண பணிகள் புதிதாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளன. இது குறித்து மக்களுக்கே தெரியாமல் கண்துடைப்பு நாடகத்திற்கான கருத்து கேட்பு கூட்டங்கள் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட ஆட்சியர்களால் மாவட்ட வாரியாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடத்தப்பட்டன. எமது அமைப்புகள் உள்ளிட்டு பல்வேறு விவசாய சங்கங்கள் அனைத்தும் ஓ.என்.ஜி.சி திட்டத்திற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததால் ஒருமித்த எதிர்ப்பு என்று கூட்ட குறிப்பில் பதிவு செய்துவிட்டு மறுபுறம் போலீசு பாதுகாப்புடன் துரப்பண பணிகள் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பெயரில் நடத்தப்பட்டு வருகின்றன. இனி களத்தில் இறங்கி மக்களைத் திரட்டி தடுத்தாக வேண்டிய நிலையே உள்ளது.

கருத்து கேட்புக் கூட்டங்களில் ஆவேசமாக பேசிய போலி கம்யூனிஸ்ட் கட்சிகளின் விவசாய சங்கங்கள் உட்பட பலரும் கூட்டத்திற்கு பிறகு மவுனம் சாதிக்கின்றன. பாதிக்கப்பட உள்ள கிராம மக்களைதிரட்டி எதிர்ப்பு போராட்டங்களை ஒருமுகப்படுத்தும் வகையில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக்கலைக்குழுவினருடன் விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர்கள் மற்றும் மீத்தேன் திட்ட எதிர்ப்பு போராட்டக் குழுவினரும் களத்தில் இறங்கி செயல்பட துவங்கினோம்.

இதன் முதல் கட்டமாக தஞ்கை மாவட்டம் அம்மாபேட்டை ஊராட்சியில் தீபாம்பாள்புரம், நெய்க்குன்னம், மலையபுரம், எக்கல், பள்ளியூர், களஞ்சேரி, விண்ணப்புத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் பிரச்சார செய்து போராட்டக் கமிட்டிகள் கட்டப்பட்டன. இதில் பெரும்பாலான கிராம மக்கள் ஆரம்பத்தில் இத்திட்டத்தின் பாதிப்புகள் குறித்து ஏதும் அறியாமல் இருந்தனர். ஓ.என்.ஜி.சி சார்பாக தையல்மிசின் வழங்குவதாக கூறி ஆங்கிலத்தில் டைப்பிங் செய்யப்பட்டிருந்த காகிதங்களில் கையெழுத்தை ஏமாற்றி பெற்று சென்றதை விளக்கினர் அப்பகுதியில் உள்ள பெண்கள். நமது பிரச்சாரத்திற்கு பிறகு, விரிசல் விட்டு ஆங்காங்கே பிளந்து நிற்கும் தனது வீட்டையும், கரி கலந்து மாசுபட்ட நீரையும் குடித்து தான் வாழ்வதாகவும், எனது வீடு மட்டுமல்ல இந்த கிராமம் முழுவதுமே இதே நிலைதான் என்று தோழர்களை தனது வீட்டிற்குள் அழைத்து சென்று காட்டினார் விவசாயி கணேசன். “ நீங்க வந்து சொன்னதுக்கு அப்புறம் தான் இதற்கான காரணமே புரியுது. எங்க புள்ளைங்களையாவது காவந்து பண்ணுங்க” என்று கையறு நிலையில் கலங்கி நின்ற அவரை தேற்றி போராட்டமே தீர்வு என்பதை உணர்த்தினோம்.

இப்படி திண்ணைப் பிரச்சாரம், இரவு நேரக் கிராம கூட்டங்கள், புரட்சிகர பாடல்கள் என பல்வேறு வடிவங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளபட்டன.

மையக் கலைக்குழுவினரின் பாடலான “தண்ணீ  வந்தது தஞ்சாவூரு” என்ற பாடல் அங்குள்ள கிராமத்து சிறுவர்களின் சொந்த பாடலாகவே மாறிவிட்டது.

வரப்புகளில் நின்று கொண்டும், கரையில் கூட்டம் கூட்டமாக அமர்ந்திருக்கும் கூலி விவசாயிகள் மற்றும் பெண்களிடம் “சாமக்கோழி கூவும் நேரத்தில் நாங்கள் சம்பா அறுவடை செய்ய போனோம், விளக்கு வைக்கிற நேரத்திலும் நெற்றி வேர்வையும் காயாம பாடுபட்டோம்” என்று கம்பீரமான குரலில் தோழர்கள் பாடிய போது தம் வாழ்நிலையோடு அதை ஒப்பிட்டு பார்த்து எம்மை நோக்கி ஆர்வமாக திரண்டனர்.

கூலி விவசாயிகள் முதற்கொண்டு குத்தகை விவசாயிகள், பெரு விவசாயிகள் வரை “என்னதான் இருந்தாலும் ஓ.என்.ஜி.சி வந்த பிறகுதானே ரோடு போட்டான், லைட்டு போட்டான். பேக்டரி வந்தா தானே வளர்ச்சி வரும்” என்ற புரிதலில் இருந்தே நம்மிடம் கேள்விகள் கேட்டனர். இத்தனை ஆண்டுகளாக செய்யாதவர்கள் இப்போது மட்டும் ரோடு போடுவது உங்களுக்க வீசப்படும் தூண்டில் புழு என்பதை தாண்டி அவனுடைய லாரிகளும், கண்டெய்னர்களும் தங்கு தடையின்றி வந்து செல்வதற்காகவே போடப்பட்டிருக்கின்றன என்பதை புரிய வைத்தோம்.

“அப்போ பெட்ரோலுக்கு நாம என்ன செய்றது” என்ற போது ஏற்கனவே எடுத்த பெட்ரோலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதையும், உள்நாட்டு தேவை அதிகரிப்பிற்கும் கூட அரசு போக்குவரத்து கழகத்தின் காலை உடைத்து நொண்டியாக்கி தனியார் வாகன விற்பனையை அதிகரிக்க செய்த அதிகார வர்க்கத்தின் சதி வேலையையும் விளக்கி பேசிய போது அதிகாரிகளை அவர்கள் ஏசிய விதம் தட்டச்சு செய்ய முடியாதவை.

ஓ.என்.ஜி.சி அரசு நிறுவனம் என்ற நிலையில் இருந்து மாறி பிரிட்டிஷ் பெட்ரோலியம் உட்பட பல்வேறு தனியார் முதலாளிகள் அதன் பங்குகளை கைப்பற்றி வருகின்றனர். இனி எப்படி அரசு நிறுவனமாக நீடிக்க முடியும் என்று விளக்கியும், யூனியன் கார்பைடு நிறுவனம் போபாலில் உருவாக்கிய பேரழிவோடு ஒப்பிட்டு ஆளும் வர்க்கங்கள் பரப்பிவரும் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, வல்லரசு என்ற மாயையை தோலுரித்து காட்டினோம். நமது பேச்சின் வர்க்க அரசியலால் ஈர்க்கப்பட்ட மக்கள் தம் உணர்வினை வெளிப்படுத்தும் வகையில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை அப்பகுதியில் நடத்த திட்டமிட்டோம்.

இதனையொட்டி துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள் என பரவலாக பிரச்சாரம் செய்யப்பட்டது. அதன்படி 4.8.2014 அன்று மாலை 6 மணி அளவில் தஞ்சை அம்மாபேட்டை பேருந்து நிலையம் அருகில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு போராட்டக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர். மாரிமுத்து தலைமையில் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டமாக விவசாயிகளின் பங்கேற்புடன் நடத்தப்பட்டது.

வலங்கைமான் ஒன்றிய அமைப்பாளர் திரு. சின்னதுரை, தீபாம்பாள்புரத்தை சேர்ந்த திரு. டி.எஸ். சேவியர், முன்னாள் வி.ஏ.ஓ. திரு. தாம்தாஸ் மற்றும் மலையபுரம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் உள்ளிட்டோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

இறுதியாக உரையாற்றிய ம.க.இ.க மாநில இணைப் பொதுச்செயலர் தோழர். காளியப்பன், அதிகார வர்க்க முதலாளிகளான ஓ.என்.ஜி.சி அதிகாரிகளின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் எப்படி விவசாயிகள், மக்கள் விரோத தன்மையில் ஊறிப்போயுள்ளன என்பதை நடைமுறை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கினார். மாவட்ட ஆட்சியர், போலீசு அதிகாரிகள் உள்ளிட்ட மிகப்பெரிய அரசு எந்திரத்தை எதிர்த்து போராடும் விவசாயிகளை அவர்கள் எவ்வளவு துட்சமாக கருதுகிறார்கள் என்பதையும் அம்பலப்படுத்தினார். உண்ணாவிரதம் உள்ளிட்ட வடிவங்கள் காலாவதியாகிப் போன ஒன்று, நன்கு உண்டு நம் தலைமுறைகளை காக்க தடியெடுத்து இந்த அரசை விரட்டியடித்தால் ஒழிய விடிவில்லை என்பதை விளக்கி பேசியது விவசாயிகளுக்கு புது நம்பிக்கை அளித்தது.

மாவட்ட ஆட்சியர் அலுவலக கருத்துக் கேட்புக் கூட்டத்தில் எதிர்ப்பு, கண்டன ஆர்ப்பாட்டம் அடுத்து ஓ.என்.ஜி.சி துரப்பண பணிகளை நேரடியாக தடுத்து நிறுத்தும் வீரியமிக்க போராட்டங்களுக்கு விவசாயிகளை திரட்டும் பணிகளை நோக்கி விரைந்து செயல்பட்டு வருகிறது நமது விவசாயிகள் விடுதலை முன்னணி.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்
விவசாயிகள் விடுதலை முன்னணி.
தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க