Tuesday, May 28, 2024
முகப்புஉலகம்ஐரோப்பாஇட்லரின் போப்: திருச்சபையின் பாசிச முகம்

இட்லரின் போப்: திருச்சபையின் பாசிச முகம்

-

(ஜனவரி 2000, புதிய கலாச்சாரம் இதழில் வெளியானது)

போப் வருகையையொட்டி ஆர்.எஸ்.எஸ். கிளப்பிய கிறித்தவ எதிர்ப்பு வெறியை குறித்து சென்ற இதழில் எழுதினோம். ஆனால் இந்து மதவெறி பாசிஸ்டுகளால் எதிர்க்கப்படும் போப்புகளும் ஹிட்லரின் அபிமானிகளாகவே இருந்தனர் என்பதை அடுத்த இதழில் எழுதுவதாகக் குறிப்பிட்டிருந்தோம். இதோ… இட்லரின் போப்!

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
“போப்பாண்டவரும் ஜார் அரசனும்.. ஜெர்மன் உளவாளிகளுமாய் பழைய ஐரோப்பாவின் சக்திகளனைத்தும் இந்தப் பூதத்தை ஓட்டுவதற்காகப் புனிதக்கூட்டு சேர்ந்திருக்கின்றன.”

ம்யூனிஸ்டு கட்சி அறிக்கையின் முதல் வரியே கீழ்க்கண்டவாறுதான் துவங்குகிறது:

“ஐரோப்பாவை ஆட்டுகிறது ஒரு பூதம் – கம்யூனிசம் எனும் பூதம். போப்பாண்டவரும் ஜார் அரசனும்.. ஜெர்மன் உளவாளிகளுமாய் பழைய ஐரோப்பாவின் சக்திகளனைத்தும் இந்தப் பூதத்தை ஓட்டுவதற்காகப் புனிதக்கூட்டு சேர்ந்திருக்கின்றன”

மார்க்சும் எங்கெல்சும் அன்றைய போப் ஒன்பதாம் பயஸ் கடைப்பிடித்த வெறிகொண்ட சோசலிச எதிர்ப்பை அறிக்கையில் இவ்வாறு பதிவு செய்தனர். ஆனால் அதன் பின்னர் வந்த போப்பாண்டவர்கள் அனைவருமே தமது நடத்தையின் மூலம் அறிக்கையின் முதல் வாக்கியத்தை தீர்க்கதரிசனமிக்க பிரகடனமாக்கிவிட்டனர்.

சென்ற மாதம் இந்தியாவிற்கு வந்த தற்போதைய போப் இரண்டாவது ஜான் பால், மறைந்த போப் 12-வது பயஸ் என்பவருக்கு புனிதர் பட்டம் வழங்கத் திட்டமிட்டிருந்தார். அது போலவே தெரசாவுக்கும் புனிதர் பட்டம் வழங்க வாடிகன் திட்டமிட்டுள்ளதை வாசகர்கள் அறிந்திருக்கக் கூடும்.

ஏசுவின் நேரடியான சீடர்கள் அனைவரும் புனிதர்களாகக் (Saints) கருதப்படுகின்றனர். புனிதர் என்று அழைக்கப்படுவோர் “இறைவனால் தெரிவு செய்யப்பட்டவர்கள்” என்ற தகுதியை உடையவர்கள். எல்லா போப்பாண்டவர்களும் கூட புனிதர்களாக அறிவிக்கப்பட்டு விடுவதில்லை. ஒருவரைப் புனிதர் என அறிவிக்க அவரது “தியாகம், சேவை, துறவு மனப்பான்மை, அற்புதங்களை நிகழ்த்தியிருத்தல்” போன்ற பல “கடுமையான” அளவுகோல்களை வாடிகன் வைத்திருக்கிறது.

கத்தோலிக்கத் திருச்சபை வழங்கும் பட்டங்களிலேயே அதியுன்னதமான இந்தப் பட்டத்தை ‘போப் 12-வது பயஸ்’க்கு வழங்குவது என்று தற்போதைய போப் முடிவு செய்திருக்கும் நிலையில் ஐரோப்பாவில் வெளிவந்துள்ள ஒரு நூல் கத்தோலிக்கத் திருச்சபையின் முகத்தில் காறி உமிழ்ந்துள்ளது.

ஜான் கார்ன்வெல்
ஜான் கார்ன்வெல் – நாத்திகரோ, கம்யூனிஸ்டோ அல்ல. விசுவாசமுள்ள கத்தோலிக்கக் கிறித்தவர்

ஹிட்லரின் போப் – 12-வது பயஸின் அந்தரங்க வரலாறு” எனும் நூலை ஜான் கார்ன்வெல் என்பவர் எழுதியுள்ளார். இவர் நாத்திகரோ, கம்யூனிஸ்டோ அல்ல. விசுவாசமுள்ள கத்தோலிக்கக் கிறித்தவர்.

போப்பையோ, வாடிகனையோ அம்பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் இவருக்கு ஆரம்பத்தில் எள்ளளவும் இல்லை. போப் – 12-வது பயஸின் வாழ்க்கை வரலாறு எழுதுவதுதான் இவரது திட்டம். இதற்கான தரவுகளைத் திரட்டுவதற்காக வாடிகனின் ஆவணக் காப்பகத்தைப் பார்வையிட இவர் அனுமதிகோரிய போதும் வாடிகன் நிர்வாகம் தயக்கமின்றி இவருக்கு அனுமதி வழங்கியது. இவரது முந்தைய நூல்கள் எதுவும் திருச்சபைக்கு எதிரானதாக இல்லை என்பதே இதற்குக் காரணம்.

ஹிட்லரின் இரத்தவெறி பிடித்த பாசிச ஆட்சிக்கும், அவன் நடத்திய யூதப் படுகொலைகளுக்கும் போப் 12-வது பயஸ் நேரடியாகவும் மறைமுகமாகவும் உடந்தையாக இருந்தார் என்பதுதான் இந்நூலாசிரியரின் குற்றச்சாட்டு.

“வாடிகன் ஆவணங்களப் படிக்கப் படிக்க நான் தார்மீக ரீதியாகவே நிலை குலைந்து போனேன். இவற்றையெல்லாம் வெளிக் கொண்டு வருவதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை” என்று தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார் கார்ன்வெல்.

ஐரோப்பா முழுவதும் இலட்சக் கணக்கான யூத மக்கள் நாஜிகளால் படுகொலை செய்யப்பட்டபோது அப்போதைய போப்பாண்டவரான 12-வது பயஸ் வாய்திறந்து ஒரே ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை என்பதை அனைவரும் அறிவர். ஆனால் ஏன் பேசவில்லை என்ற கேள்விக்கான விடை இந்நூலில் தரப்படுகிறது.

ஹிட்லரின் போப்
“ஹிட்லரின் போப் – 12-வது பயஸின் அந்தரங்க வரலாறு”

12-வது பயஸ் போப் ஆவதற்கு முன்னால் 1930-களில் வாடிகன் அரசின் செயலராக இருந்தார். 1933-ல் ஹிட்லர் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றி ஜெர்மன் அதிபராவதற்கு இவர் இரகசியமாக உதவினார் என்பதே முதன்மையான குற்றச்சாட்டு.

ஜெர்மன் மக்களில் பெரும்பான்மையினர் புரோட்டஸ்டென்ட் கிறித்தவர்கள். மக்கள் தொகையின் 1/3 பங்கினரான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மத்தியில் “கத்தோலிக்க மையக் கட்சி” எனும் கட்சி செல்வாக்குப் பெற்றிருந்தது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத ஹிட்லரின் நாஜிக் கட்சி ஆட்சிக்கு வருவதற்கு கிறித்தவ மையக் கட்சி உதவியது. பிறகு ஹிட்லர் அதிபராவதற்கு ஏதுவாக கத்தோலிக்க மையக் கட்சி தன்னைத் தானே கலைத்துக் கொண்டதாகவும் அறிவித்தது. 1933-ல் ஹிட்லருடன் இதற்கான ஒப்பந்தத்தை இறுதியாக்கினார் பயஸ்.

நாஜிக் கட்சியின் கட்டுப்பாடும் உறுதியான கம்யூனிச எதிர்ப்பும் அவரைப் பெரிதும் கவர்ந்துள்ளது. “நாஜிகள் மதப்பற்றுள்ளவர்களல்ல, எனினும் கம்யூனிஸ்டுகளைக் காட்டிலும் நல்லவர்கள் தான். மேலும் ஹிட்லர் ஆட்சியுடன் உறவு வைத்துக் கொள்வதே ‘பாவம்’ என்று கருத முடியாது” என்று குறிப்பெழுதியிருக்கிறார் 12- வது பயஸ்.

இப்படியொரு நாஜி ஆதரவு நிலையை போப் எடுக்காமல் இருந்திருந்தால், மக்கள் தொகையின் 1/3 பங்குள்ள கத்தோலிக்கர்களை ஹிட்லருக்கு எதிராகத் திருப்பியிருக்க முடியும். பல இலட்சம் யூதர்கள் கொல்லப்படுவதையும் ஓரளவேனும் தடுத்திருக்க முடியும் என்கிறார் நூலாசிரியர்.

மாறாக நடந்ததென்ன? 1939-இல் ஹிட்லரின் எஸ்.எஸ். என்ற கொலைப் படையில் 25 சதவீதம் பேர் கத்தோலிக்கர்களாக இருந்தனர். பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட யூதக் கைதிகளை விஷவாயுக் கூடத்தில் அடைத்துக் கொல்வது, ஆக்கிரமிக்கப்பட்ட நாட்டு மக்களை சித்திரவதை செய்து கொல்வது போன்றவற்றை இந்த கத்தோலிக்க நாஜிகள் கூசாமல் செய்தனர்.

சாமானிய கத்தோலிக்கர்களை விடுங்கள், ஐரோப்பா முழுவதும் யூதர்கள் படுகொலை செய்யயப்பட்டபோது, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கத்தோலிக்க குருமார்களும், பல அரசுகளும் போப் 12-வது பயஸிடம் எவ்வளவோ மன்றாடிக் கேட்டுக் கொண்ட போதும் இந்தப் படுகொலைக்கெதிராக ஒரே ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. கண்டனம் தெரிவிக்கா விட்டாலும் வருத்தம் கூடத் தெரிவிக்கவில்லை.

போப் - ஹிட்லர்
ஹிட்லர் – போப் பயஸ் 12

இப்படியும் ஒரு மனிதன் நடந்து கொண்டிருக்க முடியுமா என்று நமக்கு வியப்பு ஏற்படலாம். ஆனால் நூலாசிரியர் அடுத்து விவரிக்கும் சம்பவம் நம் ரத்தத்தை உறையவும் வைக்கிறது – கொதிக்கவும் வைக்கிறது.

1943 அக்டோபரில் ரோம் நகரிலேயே யூதர்களைச் சுற்றி வளைக்கிறது நாஜிப் படை. அடிமாடுகளைக் கொண்டு செல்வதற்கான லாரியில் அவர்கள் ஏற்றப்பட்டு கொலைக் கூடத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறார்கள். லாரியின் உள்ளே காவலுக்கு நிற்கின்ற நாஜி இராணுவ அதிகாரிகள் அந்தப் புனித நகரத்தை வேடிக்கை பார்க்க வசதியாக, யூதக் கைதிகளின் கைகள் லாரிக்கு வெளியே தொங்க விடப்படுகின்றன. வெளியே தொங்குகின்ற பிஞ்சுக் குழந்தைகளின் கைகள் கடும் குளிரில் நடுங்குகின்றன.

‘செயின்ட் பீட்டர்ஸ்’ என்று அழைக்கப்படும் போப்பின் அரண்மனை வழியே செல்கிறது இந்த அடிமாட்டு லாரிகளின் ஊர்வலம். மாளிகையின் உள்ளே இருக்கிறார் போப். அப்பொழுதும் அவர் பேசவில்லை.

இந்தக் கிரிமினல் குற்றத்தினை நியாயப்படுத்த என்ன விளக்கம் தர முடியும்? எது சரி, எது தவறு என்று தீர்மானிப்பதற்கான அதிகாரத்தைத் தேவனிடமிருந்து பெறுகிறார்கள் போப்பாண்டவர்கள் என்று கூறப்படுகின்றது. எது கிறித்தவ நல்லொழுக்கம் என்பது போப்புக்குத் தெரியாது?

போப் பயஸ் 12
ஹிட்லரின் போருக்கும் படுகொலைகளுக்கும் எதிராக ஒரு வார்த்தை கூடப் பேசாத போப் 12-வது பயஸ்

தெரியாமலென்ன? ஹிட்லரின் போருக்கும் படுகொலைகளுக்கும் எதிராக ஒரு வார்த்தை கூடப் பேசாத போப்  12-வது பயஸ் இரண்டாம் உலகப் போர் முடிந்த பின், ஹிட்லரை ரசியா தோற்கடித்த பின் சுறுசுறுப்பாகச் செயல்பட்டார்.

கம்யூனிசத்திற்குப் பெருகி வரும் ஆதரவைக் கண்டு பீதியுற்று, உலகெங்கும் உள்ள கத்தோலிக்கர்களை படையாய்த் திரட்டினார். சோசலிச ரசியா ‘மனம் திரும்புவதற்காக’ உலகம் முழுவதும் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன.

12-வது பயஸின் இந்த கொடூரமான மவுனத்திற்கு இரண்டு காரணங்களைக் கூறுகிறார் நூலாசிரியர். “முதலாவதாக ஹிட்லரைப் போன்றே பயஸும் ஒரு சர்வாதிகாரி, எனவே ஹிட்லரின் உணர்வுகளை அவர் மதித்தார்; ரசித்தார்.”

“இரண்டாவதாக ஹிட்லரைப் போன்றே பயஸும் யூத, அராபிய எதிர்ப்பு இனவெறி கொண்டவர். ரசியப் புரட்சியைத் தொடர்ந்து 1919-ல் ஜெர்மனியின் மூனிச் நகரில் நடைபெற்ற தொழிலாளர் எழுச்சிக்குத் தலைமை தாங்கிய மாக்ஸ் லெவியன் என்பவரைப் பற்றிக் குறிப்பிடும்போது, “குடிகாரனைப் போலக் கண்கள், வெளிறிய முகம், விகாரமான தோற்றம் கொண்ட அழுக்கு மூட்டையான யூதன், ரசியன்” என்று எழுதுகிறார் 12-வது பயஸ். எனவே ஹிட்லர் யூதர்களைக் கொன்று குவித்ததைக் கூடப் போப் தனது அடிமனதில் ஆதரித்திருப்பார்.” – என்கிறார் நூலாசிரியர் கார்ன்வெல்.

தற்போது புனிதராக்கப்படுவதற்காக விண்ணுலகில் காத்திருக்கும் 12-வது பயஸ், மண்ணுலகில் துறவியாக வாழ்ந்திருந்த காலத்தில் விமானப் பயணம், அதிவேகக் கார்ப் பயணம் போன்றவற்றைப் பெரிதும் விரும்பியவராம், ஹாலிவுட் நடிகைகள் பற்றிய கிசுகிசுச் செய்திகளையும் ஆவலுடன் கேட்டுத் தெரிந்து கொள்வாரம்.

போப் – 12-வது பயஸைத் தரிசித்து அவரது புறங்கையைப் பணிந்து முத்தமிட்டு அருளாசி பெற்ற ஒரு ஆங்கிலேயர், “போப்பின் கையில் அதிகாலைப் பனியின் தூய்மையான மணம் வீசியதாகவும், அது புனிதர்களின் உடலிலிருந்து மட்டுமே வீசக்கூடிய நறுமணமாக இருக்கக் கூடும்” என்றும் எழுதிவைத்துள்ளார்.

pope-teresa
“யாரிடமிருந்து காசு வாங்குகிறோம் என்பது பற்றிக் கவலையில்லை இதை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதே முக்கியம்” – போப் 2-வது ஜான் பால் புனிதர் ஆக்க முன் மொழிந்த தெரசா.

“கையை முத்தமிடும் பக்தர்களிடமிருந்து கிருமிகள் தொற்றிக் கொள்ளாமலிருப்பதற்காக, மணம் வீசும் கிருமி நாசினித் தைலத்தில் கையை முக்கி எடுத்துவிட்டுத் தான் பக்தர்களுக்கு அவர் தரிசனம் தந்திருக்கிறார்” என்று அந்த ரகசியத்தையும் போட்டு உடைக்கிறார் வாடிகன் ஆவணங்களைக் குடைந்த நூலாசிரியர்.

அன்பு, மனித நேயம் போன்ற கிருமிகள் தன்னைத் தொற்றிக் கொண்டால் விளையக் கூடிய அபாயத்தை போப் யோசித்திருப்பார் போலும்! 12-வது பயஸை புனிதராக அறிவிப்பதற்கான ‘புனித நறுமணம்’ என்ற கடைசி ஆதாரத்தையும் நாறடித்து விட்டார் கார்ன்வெல்.

***

ன்னைச் சுற்றிலும் கோடிக் கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்ட போதும் கல்லுளி மங்கனைப் போல மவுனம் சாதித்ததற்கான காரணத்தையும் 12-வது பயஸ் எழுதி வைத்துள்ளார். “ஒரு வேளை தான் ஹிட்லரை எதிர்த்துப் பேசியிருந்தால் கத்தோலிக்கர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும்” என்பதுதான் போப் கூறும் காரணம்.

இந்த விளக்கமே அநீதியானது என்பது ஒருபுறமிருக்க இது உண்மைக்கும் புறம்பானதாகும். ஹிட்லரின் ஆக்கிரமிப்புக்கு உள்ளான ரசியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் நாஜிகளால் கொல்லப்பட்டவர்களில் கத்தோலிக்கர்களும்தான் அடக்கம்.

நாஜிகள் மீது நடத்தப்பட்ட நூரம்பர்க் விசாரணையில், அவர்களுக்கு உதவியவர்களும் தண்டிக்கப்பட்டார்கள். ஆனால் போப்பின் நடத்தை பரிசீலிக்கப்படவில்லை. ஏனென்றால் கம்யூனிசத்திற்கெதிராக அமெரிக்காவும் பிற ஏகாதிபத்தியங்களும் தொடர்ந்து நடத்திய யுத்தத்திற்கு வாடிகனின் ஆன்மீக அடியாள் படை அவர்களுக்குத் தேவைப்பட்டது. கம்யூனிச எதிர்ப்பு என்ற பொது நோக்கத்திற்காகப் போப்பின் பாவம் மன்னிக்கப்பட்டுவிட்டது.

போப் 2-வது ஜான் பால்
இரண்டாவது ஜான் பால் கூட ஜெர்மனியின் ஆக்கிரமிப்பு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட போலந்துக்காரர்தான். இருந்தாலும் தனது கம்யூனிச எதிர்ப்பு ‘லட்சியத்தை’ அவர் கைவிட்டு விடவில்லை.

தற்போதைய போப்பான இரண்டாவது ஜான் பால் கூட ஜெர்மனியின் ஆக்கிரமிப்பு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட போலந்துக்காரர்தான். இருந்தாலும் தனது கம்யூனிச எதிர்ப்பு ‘லட்சியத்தை’ அவர் கைவிட்டு விடவில்லை.

போலந்தின் லெக்வாலேசாவை ஆட்சியலமர்த்துவதற்கும், ரசியாவை உடைப்பதற்கும் அமெரிக்காவின் உளவுப் படையாகவே செயல்பட்டது வாடிகன். நிகராகுவாவில் அமெரிக்கக் கூலிப்படைக்கு எதிராகப் போராடி உயிர்நீத்த சான்டினிஸ்டா இளைஞர்களுக்காக பிரார்த்தனை செய்யக்கூட மறுத்தவர்தான் இன்றைய போப். ஆழ்ந்த மதப்பற்றுள்ள தாய்மார்களும், இலட்சக் கணக்கான நிகராகுவா மக்களும் இந்தப் போப்பை விரட்டியடித்த காட்சியெல்லாம் வீடியோ படமாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு ஐரோப்பாவிலும், ரசியாவிலும் போலி சோசலிசம் வீழ்ந்த பிறகு மேற்கத்திய ‘சுதந்திரச் சந்தை’ வேலையின்மையையும், பட்டினியையுமே அம்மக்களுக்குப் பரிசாக வழங்கியிருக்கிறது. அமெரிக்காவின் மேலாதிக்கமே இப்போது பச்சையாக சந்தி சிரிக்கிறது.

நிலைமையைக் கணக்கில் கொண்ட போப் இரண்டாவது பால் “நான் கம்யூனிசத்தை எதிர்க்கிறேன் என்பதனால் முதலாளித்துவத்தை ஆதரிக்கிறேன் என்று பொருள் அல்ல; நான் கம்யூனிசத்தை எதிர்த்ததற்குக் காரணம்கூட அதன் பொருளாதாரக் குறைபாடுகளால் அல்ல; அது தனிமனித கவுரவத்தை குலைக்கிறது என்பதனால்தான்” என்று மெதுவாகத் தட்டைத் திருப்பிப் போடுகிறார். இது புதிய தந்திரம்.

***

“யாரிடமிருந்து காசு வாங்குகிறோம் என்பது பற்றிக் கவலையில்லை இதை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதே முக்கியம்” என்று கூறி கொலைகார இராணுவ சர்வாதிகாரிகளிடம் நன்கொடை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு அருளாசி வழங்கியதை நியாயப் படுத்தினார் தெரசா.

“நாஜிகளுடன் உறவு வைத்துக் கொள்வது ஒன்றும் பாவமல்ல” என்று தனது பாசிச ஆதரவை நியாயப்படுத்தினார் போப் – 12-வது பயஸ்.

இந்த இரண்டு பேரும்தான் ‘புனிதர்’ ஆக்கப்படுவதற்காகக் காத்திருக்கும் ‘இறைவனால் தெரிவு செய்யப்பட்ட ஆத்மாக்கள்.’

கிறிஸ்துவுக்கும் கிறித்தவ திருச்சபைக்கும் உள்ள சிறிய வேறுபாட்டை ஒரே வரியில் விளக்கினார் கார்ல் மார்க்ஸ்:

“கிறித்தவத்தின் மாபெரும் ஞானி (கிறிஸ்து), மக்களின் ஆன்மாக்களுக்கு விமோசனம் கோரித் தமது உடம்பை தியாகம் செய்தார்; நவீனமான, கல்வியறிவு மிகுந்த ஞானியோ தமது சொந்த ஆன்மாவின் விமோசனத்திற்காக மக்களின் உடம்புகளைத் தியாகம் செய்கிறார்.”

குறிப்பு: போப்பை அம்பலப்படுத்தியதற்காக ஆர்.எஸ்.எஸ்.-காரர்கள் குதூகலிக்கத் தேவையில்லை. அகில உலக ஹிட்லர் ரசிகர் மன்றத்தின் தலைவரே கோல்வால்கர்தான் என்பதை ‘ஞான கங்கையைப் படித்துத் தெரிந்து கொள்க.

வாட்டிகன் புகைமூட்டம்
வாட்டிகன் புகைமூட்டம் : கத்தோலிக்க குருமார்களின் பாலியல் வக்கிரங்கள் பற்றிய செய்திகள் உலகெங்குமிலிருந்து வெளியாகின்றன.

– சூரியன்
_______________________________
புதிய கலாச்சாரம், ஜனவரி 2000
_______________________________
(படங்கள் இணையத்திலிருந்து)

  1. “””””போப்பை அம்பலப்படுத்தியதற்காக ஆர்.எஸ்.எஸ்.-காரர்கள் குதூகலிக்கத் தேவையில்லை”””” —நினப்ப பாத்தியா???? வினவு மற்றும் அதன் ஆதரவு கூட்டம், போராட்டம் எனும் பெயரில் நக்சலைட்டுகளையும், போலி சுதந்திரத்தை பறை சாற்றுவதாக பறையர்களின் கூட்டத்தை கூட்டி, இதையெல்லால் ஆதரிக்கும் ஒரு முஸ்ஸீம் கூட்டத்திடம் துட்டு வாங்கி தின்னுவதை எல்லோரும் அறிவார்கள்…. உன் கதையெல்லாம் யாருய்யா படிப்பா?? உன்னையெல்லாம் சீரியஸா எடுத்திருந்தா நி இன்னேறம் எங்கேயாவது களி தின்னுட்டு இருப்ப!!!! ஏதோ நேரம் கிடைச்சா ஒசியில ஏதாவது மொக்கையை படிப்பானுங்க அவ்வளவு தான்…நீ ரொம்ப சிலிப்பிகாத…. ஒரு பத்து பொண்ணுங்களும், ஒரு இருபது பசங்களும், இருந்தா என்னா வேணும்னா சீன் போடலாம்…. வேற ஒரு மண்ணும் செய்ய முடியாது, சவாலா??????

  2. //ஒரு இருபது பசங்களும், இருந்தா என்னா வேணும்னா சீன் போடலாம்…. வேற ஒரு மண்ணும் செய்ய முடியாது, சவாலா????????//

    எத்தனை நபர்கள் என்பது ஒரு கேள்வி அல்ல, பேர் வச்சிகிட்டு நீங்க என்ன புடிங்கிட்டேங்கனு மொதல்ல சொல்லுங்க. கட்டுரையை முழுமையாக வாசிக்கவும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க