Thursday, February 20, 2020
முகப்பு கட்சிகள் பா.ஜ.க சட்டபூர்வமாகிறது இந்து ராஷ்டிரம்!

சட்டபூர்வமாகிறது இந்து ராஷ்டிரம்!

-

“முஸ்லிம்களின் ஆதரவு இல்லாமல் பெரும்பான்மை பெற முடியும் என்பதை கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நிரூபித்திருக்கிறது. முஸ்லிம்கள் இந்துக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவேண்டும். தொடர்ந்து அவர்கள் இந்துக்களை எதிர்த்துக் கொண்டே எத்தனை நாள் வாழ்ந்து விட முடியும்?

சுதர்சன் ராவ்
இந்திய வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பார்ப்பனக் கோமாளி சுதர்சன் ராவ்.

அயோத்தி, காசி, மதுரா ஆகிய மூன்று இடங்களிலும் மசூதியை அவர்கள் விட்டுக் கொடுத்துவிட வேண்டும். பொது சிவில் சட்டத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், தற்போது மத்தியில் நடந்திருப்பதைப் போல மாநிலம் தோறும் இந்துக்களின் ஒருங்கிணைவை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

மோடி ஒரு முன்மாதிரியான ஆர்.எஸ்.எஸ். ஊழியர். முந்தைய (வாஜ்பாயி தலைமையிலான) தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் போல அல்லாமல், இந்த முறை இந்துத்துவ திட்டங்களை மோடி நிறைவேற்றிக் காட்டுவார். எங்களிடம் பெரும்பான்மை இருக்கிறது. நாங்கள் என்ன செய்ய விரும்புகிறோமோ அதனைச் சட்டப்படியே செய்து முடிப்போம்”

“இந்துஸ்தான் டைம்ஸ்” நாளேட்டிற்கு (ஜூலை, 14) விசுவ இந்து பரிசத் தலைவர் அசோக் சிங்கால் அளித்திருக்கும் பேட்டியின் சுருக்கம் இது.

இந்த அப்பட்டமான மதவெறிப் பேச்சுக்காக சிங்கால் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். குறைந்தபட்சம் அரசியல் கட்சிகளால் கண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். எதுவும் நடக்கவில்லை. “சிங்காலின் இந்தப் பேச்சுக்கு எதிராக எந்தவித கண்டனத்தையோ, எதிர்ப்பையோ, கோபத்தையோ நான் எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால், ஒரு தேசம் என்ற முறையில் பெரும்பான்மை சமூகத்தின் மதவெறியை ஒப்புக் கொள்வதற்கு நாம் பழகிவிட்டோம்” என்று குமுறியிருக்கிறார் தீஸ்தா சேதல்வாத்.

முந்தைய வாஜ்பாயி ஆட்சிக் காலத்தில் (1999-2004) இத்தகைய அறிக்கைகள் வெளிந்தால், உடனே “ஆர்.எஸ்.எஸ். -இன் இரகசியத் திட்டம் அம்பலம்” என்று எதிர்க்கட்சிகள் கூச்சல் போடுவார்கள். உடனே வாஜ்பாயி அதனை மறுத்து, “நாங்கள் குறைந்தபட்ச செயல்திட்டத்தை மீற மாட்டோம்” என்று பெயருக்கு ஒரு வாக்குறுதி அளிப்பார். இன்று குறைந்த பட்ச திட்டமும் இல்லை, கூச்சலும் இல்லை.

இந்து ராஷ்டிரத்தைச் சட்டப்படியே நிறுவ முடியும் என்று கூறுகிறார் சிங்கால். இந்து பாசிசத்தை தேர்தல் அரசியல் மூலமே முறியடித்து விட முடியும் என்று நம்புகிறவர்களும், நம்பச் சொல்கிறவர்களும்தான் இதற்குப் பதில் சொல்லவேண்டும்.

***

ளர்ச்சி என்ற சொல் அயோத்தி என்று காதில் ஒலிப்பது போலவும், முன்னேற்றம் என்ற சொல் இந்து ராஷ்டிரம் என்று பொருள் தருவதைப் போலவும் மறுகாலனியாக்க கொள்கைகளுக்குள் இந்து மதவெறியை பொதித்து வைத்துத் தேர்தல் பிரச்சாரத்தை நடத்திய மோடி, முதல் நாடாளுமன்ற உரையிலேயே தனது முகமூடியை விலக்கிக் காட்டிவிட்டார். 200 ஆண்டு கால பிரிட்டிஷ் காலனியாதிக்க அடிமைத்தனம் என்று நினைவு கூர்கின்ற மரபை மாற்றி, 1200 ஆண்டு கால அடிமை மனோபாவம் என்று பேசினார். முகலாய ஆட்சிக் காலத்தையும் அந்நிய ஆதிக்கமாகச் சித்தரிக்கும் அந்த மதவெறிப் பேச்சை மறுத்து எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பவில்லை.

வென்டி டோனிகர்
பென்குயின் நிறுவனத்தால் அச்சிடப்பட்டு பின் அழிக்கப்பட்ட “இந்து மதம் – ஒரு மாறு வரலாறு” என்ற நூலின் முகப்பு அட்டை. (வலது) அந்நூலின் ஆசிரியர் வென்டி டோனிகர்.

மோடியின் பட்ஜெட்டிலோ, ஆர்.எஸ்.எஸ்.-ன் கொள்கைக்கேற்ற திட்டங்கள் நிறைந்திருக்கின்றன. ஆன்மீக வளர்ச்சி மற்றும் தீர்த்த யாத்திரை ஊக்குவிப்புக்கான தேசிய முயற்சி, பாரம்பரிய நகரங்கள் வளர்ச்சி மற்றும் ஊக்குவிப்புத் திட்டம், கங்கைக்கு நமஸ்காரம், விவேகானந்தர் பிரச்சார ரயில், காஷ்மீர் பார்ப்பனர்கள் மறுவாழ்வுத் திட்டம் போன்ற நேரடியான பார்ப்பன இந்துமதவாத திட்டங்களை எதிர்க்கட்சிகள் சாடவில்லை.

இந்திய வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவராக பார்ப்பன வெறி பிடித்த சுதர்சன் ராவ் என்ற கோமாளியை நியமித்திருக்கிறது மோடி அரசு. “சாதியமைப்பு என்பது நமது சிறந்த பாரம்பரியம், அந்தக் கலாச்சார பாரம்பரியத்தை மீட்கவேண்டும்”; “ராமாயணமும் மகாபாரதமும் புனைவுகள் அல்ல, வரலாற்று உண்மை”; “இரான், இராக், ஆப்கானிஸ்தான் தொடங்கி தென்கிழக்காசியா வரையில் அகண்ட பாரதம் பரவியிருந்த காரணத்தினால், அங்கெல்லாம் நமது தொல்லியல் ஆய்வை விரிவுபடுத்த வேண்டும்” – என்பனவெல்லாம் சுதர்சன் ராவ் தெரிவிக்கும் கருத்துகள்.

குஜராத் மாநில அரசு இந்துத்துவ அறிவுத்துறை அடியாட்படையின் தலைவரான தீனாநாத் பாத்ரா என்ற ஆர்.எஸ்.எஸ்.காரர் எழுதிய 9 நூல்களை பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்த்திருக்கிறது. அகண்ட பாரதம், ஆன்மீக பாரதம், ஒளிமயமான பாரதம், விஞ்ஞான பாரதம் என்ற பெயர்களிலான அந்த நூல்களில் காணப்படும் “அரிய” கருத்துகள் கீழ் வருவன:

“இன்று ஸ்டெம் செல் ஆராய்ச்சிக்கு அமெரிக்கா உரிமை கொண்டாடுகிறது. ஆனால் மகாபாரத காலத்திலேயே நமக்கு அது தெரியும். காந்தாரிக்கு கருச்சிதைவு ஏற்பட்டவுடன், வெளியேறிய சிதைந்த தசைப்பிண்டத்தை நூறு நெய்க்கிண்ணங்களில் போட்டு இரண்டாண்டுகள் பாதுகாத்த பின் அதிலிருந்து கவுரவர்கள் பிறந்தார்கள் என்று பாரதம் சொல்கிறது”;

“தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தவர் ஒரு ஸ்காட்லாந்துக்காரர் என்கிறார்கள். மகாபாரத காலத்திலேயே யோக வலிமையால் திவ்ய திருஷ்டி மூலம் எங்கோ நடப்பதையெல்லாம் பார்த்திருக்கிறார்கள் முனிவர்கள்”;

“அதேபோல, வேத காலத்திலேயே கார் இருந்திருக்கிறது. இதற்கான ஆதாரம் ரிக் வேதத்தில் உள்ளது”; “நம்முடைய பாரதபூமியை இந்தியா என்ற சூத்திர (இழிந்த) பெயரால் அழைத்து நம்மை நாமே கேவலப்படுத்திக் கொள்ளக் கூடாது”; “நமது மதத்துக்காக உயிர் கொடுப்பது கவுரவம்; அந்நிய மதங்கள்தான் துயரங்களின் தோற்றுவாய்.”

– இவையெல்லாம் மேற்படி நூல்களில் காணப்படும் கருத்துகள். இந்த நூல்களைப் பாடத்திட்டத்தில் சேர்த்ததற்காக மோடி எழுதியுள்ள பாராட்டுக் கடிதமும் அந்த நூல்களிலேயே பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.

தீனாநாத் பத்ரா, வித்யாபாரதி என்ற ஆர்.எஸ்.எஸ். கல்வி நிறுவனத்தின் செயற்குழு உறுப்பினர். பத்ரா போட்ட வழக்கைத் தொடர்ந்து பென்குயின் வெளியீட்டு நிறுவனம் வென்டி டோனிகர் எழுதிய “இந்துமதம் – ஒரு மாற்று வரலாறு” என்ற நூலின் அச்சிட்ட பிரதிகள் அனைத்தையும் சென்ற பிப்ரவரி மாதம் அழித்தது. அடுத்து பிளாக் ஸ்வான் என்ற புத்தக நிறுவனம் வெளியிட்ட “மதவெறியும் பாலியல் வன்முறையும், அகமதாபாத் கலவரங்கள் பற்றிய ஆய்வு-1969 முதல்” என்ற நூலும் “நவீன இந்தியாவின் வரலாறு, பிளாசி முதல் பிரிவினை வரை” என்ற நூலும் சென்ற ஜூன் மாதம் விற்பனைக்கு கொண்டு செல்லாமல் முடக்கப்பட்டன. இவையெல்லாம் அசோக் சிங்கால் சொல்வது போல அரசியல் சட்டத்துக்கு உட்பட்டே இந்துத்துவத்தை நிலைநாட்டும் முயற்சிகள்.

***

ட்டிஸ்கர் மாநிலத்தில் மக்கட்தொகையில் 1 சதவீதம் கூட இல்லாத கிறித்தவர்கள் இந்து மதத்துக்குத் திரும்புமாறு மிரட்டப்படுகிறார்கள். இந்து கோயிலுக்கு நன்கொடை தர மறுத்ததற்காக கிறித்தவர்களுக்கு ரேசன் மறுக்கப்பட்டிருக்கிறது. இது பற்றிப் புகார் செய்தவுடனே அம்மக்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். டெல்லி மகாராட்டிரா பவனில் ரமலான் நோன்பிலிருந்த ஒரு இசுலாமிய ஊழியரின் வாயில் திமிர்த்தனமாக சப்பாத்தியைத் திணிக்கிறார் சிவசேனா எம்.பி. விச்சாரே. இந்த ரவுடித்தனம் நாடு முழுவதும் ஒளிபரப்பப்பட்ட போதிலும் அந்த ஊழியர் புகார் கொடுக்கவில்லை. போலீசும் வழக்கு பதிவு செய்யவில்லை. முசாபர்நகர் கலவரத்தை அம்பலப்படுத்தும் “ஏக் தினோ முசாபர்நகர்” என்ற ஆவணப்படத்துக்குத் தணிக்கைக் குழு அனுமதி மறுத்திருக்கிறது. கல்கத்தாவில் திரையிடுவதற்குக்கூட மம்தா அரசு அனுமதி மறுக்கிறது.

எதுவும் இலைமறை காயாக இல்லை. ஆர்.எஸ்.எஸ். வெளிப்படையாகவே பாரதிய ஜனதாவை இயக்குகிறது. ஆர்.எஸ்.எஸ். -ன் சிந்தனைக் குழாமான விவேகானந்தா இன்டர்நேசனல் பவுண்டேசனில் நிரம்பியிருக்கும் ஓய்வு பெற்ற அதிகார வர்க்கத்தினர்தாம் இப்போது மோடி அரசின் முக்கியப் பதவிகளில் நியமிக்கப்படுகிறார்கள். முன்னாள் உளவுத்துறை (ஐ.பி.) இயக்குநரும் விவேகானந்தா பவுண்டேசனின் நிறுவன இயக்குநருமான அஜித் டோவல்தான் தற்போது மோடியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர். அவசரச் சட்டத்தின் மூலம் மோடியின் முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டிருக்கும் நிருபேந்திர மிஸ்ரா, பவுண்டேசனின் செயற்குழு உறுப்பினர். கேந்திரமான துறைகள் அனைத்திலும் நியமிக்கப்படவிருக்கும் இந்த சிந்தனைக் குழாமின் பட்டியலை தெகல்கா இதழ் வெளியிட்டிருக்கிறது. ராம் நாயக், கேசரி நாத் திரிபாதி போன்ற ஆர்.எஸ்.எஸ்.காரர் களே கவர்னர்களாக நியமிக்கப்படுகின்றனர்.

உளவுத்துறை மூலம் ஊடகங்களில் கிசுகிசு செய்தி பரப்பப்பட்டு, வழக்குரைஞர் கோபால் சுப்ரமணியத்தின் நீதிபதி நியமனத்தை தடுக்கிறது மோடி அரசு. அதேநேரத்தில், குஜராத் இனப்படுகொலை வழக்குகளில் கொலைக் குற்றவாளிகளுக்கும் மோடி அரசுக்கும் ஆதரவாக ஆஜரான முகுல் ரோதகி உள்ளிட்டோர் அரசு வழக்குரைஞர்களாக நியமிக்கப்படுகின்றனர்.

அமித் ஷா
மோடிக்கு அடியாளாகவும் “மாமா”வாகவும் வேலை பார்த்ததற்காக அமித் ஷாவிற்குக் கிடைத்த சன்மானம் பா.ஜ.க.-வின் தேசியத் தலைவர் பதவி.

இஷ்ரத் ஜகான் கொலை வழக்கின் குற்றவாளியும், மோடிக்காக பெண்ணை வேவு பார்த்து, அது தொடர்பான தொலைபேசி உரையாடல் ஒலிநாடாக்களை வெளியிட்டவருமான ஐ.பி.எஸ். அதிகாரி சிங்கால் குஜராத்தில் மீண்டும் பணிநியமனம் செய்யப்பட்டிருக்கிறார். சோரபுதீன் ஷேக் கொலை வழக்கின் குற்றவாளியான தினேஷ் என்ற ஐ.பி.எஸ். அதிகாரியை ராஜஸ்தான் அரசு மீண்டும் பணி நியமனம் செய்திருக்கிறது. முசாபர்பூர் கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் சஞ்சீவ் பலியானும், ராஜஸ்தானில் வல்லுறவுக் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நிகால் சந்தும் மத்திய அமைச்சர்களாக நீடிக்கிறார்கள். குஜராத்தில் உள்துறை அமைச்சராக இருந்து கொண்டு, மோடிக்காக போலி மோதல் கொலைகள் முதல் பெண்ணை வேவு பார்ப்பது வரையிலான எல்லா குற்றச் செயல்களிலும் ஈடுபட்ட அமித் ஷாவை பாரதிய ஜனதாவின் தலைவராக நியமித்திருக்கிறார் மோடி.

மோடி அரசின் எல்லாவிதமான பாசிச கிரிமினல் நடவடிக்கைகளும் வெளிப்படையாகவும், குறிப்பிட்டுச் சொல்லும்படியான எதிர்ப்பின்றியும் அரங்கேறுகின்றன. “எங்களை ஆர்.எஸ்.எஸ். எதற்காக இயக்கவேண்டும்? எங்கள் உடம்பில் ஓடுவதே ஆர்.எஸ்.எஸ். ரத்தம்தான்” என்று திமிராகப் பேட்டி கொடுக்கிறார் உமா பாரதி. அது வெறும் திமிர்ப்பேச்சல்ல. இந்தித் திணிப்பு முதல் சமஸ்கிருத வார வரையிலான அனைத்து இந்துத்துவ திட்டங்களும் அடுத்தடுத்து அரங்கேறுகின்றன.

ஆட்சிக்கு வந்த கணத்திலிருந்தே ஒரு இனப்படுகொலையின் கோரத் தாண்டவத்துக்கு இணையான வேகத்துடனும் வெறியுடனும் உழைக்கும் வர்க்கத்துக்கு எதிரான மறுகாலனியாக்கத் தாக்குதல்கள் தீவிரமாக முடுக்கி விடப்படுகின்றன. சம்பிரதாயக் கூச்சல்களுக்கு மேல் எதிர்க்கட்சிகளிடமிருந்து இவற்றுக்கு வேறெந்த எதிர்வினையும் இல்லை.

“மசூதிகளை ஒப்படைத்து விடுங்கள்” என்று முஸ்லிம் மக்களுக்கு சிங்கால் விடுக்கும் வெளிப்படையான எச்சரிக்கைக்கும், “காடுகள், நிலங்களை கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைத்து விடுங்கள்” என்று பழங்குடி மக்களுக்கு பிரகாஷ் ஜவடேகர் விடுக்கும் மறைமுக எச்சரிக்கைக்கும் பாரிய வேறுபாடு இல்லை. மோடி அரசு இந்து ராஷ்டிரத்தை அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு நிறுவ விரும்புவதைப் போலவே, மறுகாலனியாக்கத்தையும் சட்டபூர்வமாகவே நிறைவேற்ற விரும்புவதால், சுற்றுச் சூழல் சட்டம் முதல் நிலம் கையகப்படுத்தும் சட்டம் வரையிலான அனைத்தும் திருத்தப்படக் காத்திருக்கின்றன.

***

வற்றையெல்லாம் முறியடிப்பது எப்படி? முறியடிக்கப் போகிறவர்கள் யார்? “ஐந்தாண்டுகளுக்குப் பின் ஆட்சி மாற்றம்” என்பதுதான் எல்லா ஓட்டுக்கட்சிகளிடமும் உள்ள தீர்வு. அது அவர்களுக்கான தீர்வு. மக்களின் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்கான தீர்வு அல்ல.

“மோடியின் பொருளாதாரக் கொள்கைகள் அனைத்தும் காங்கிரசின் கொள்கைகள்தான், குஜராத் மாடலே எங்களுடைய மாடல்தான்” என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார் ப.சிதம்பரம். உண்மைதான். நிதிஷ் குமாரில் தொடங்கி கருணாநிதி வரையில் எல்லோருடைய கொள்கையும் மன்மோகன் சிங்கின் கொள்கைதான். இதில் யாருக்கும் வேறுபாடு கிடையாது. திணிக்கும் வேகத்தில்தான் வேறுபாடு.

இந்து மதவெறி நடவடிக்கைகளைப் பொருத்தவரை, பாரதிய ஜனதாவின் எதிர்த்தரப்பாக காங்கிரசு தன்னைச் சித்தரித்துக் கொண்டாலும், அது ஒரு மிதவாத மதவாதக் கட்சி. இதுவரையிலான இந்து மதவெறிக் குற்றங்களுக்காக ஆர்.எஸ்.எஸ். கும்பல் தண்டிக்கப்படாமல் பாதுகாத்து வருவதும், பல குற்றங்களுக்கு உடந்தையாகவும் கள்ளக் கூட்டாளியாகவும் இருந்து வருவது காங்கிரசு கட்சிதான். மதச்சார்பற்ற கட்சிகள் என்று கூறிக்கொள்ளும் மற்ற கட்சிகளோ பல சந்தர்ப்பங்களில் பா.ஜ.க.வுடன் கூட்டுச் சேர்ந்தவர்கள். எல்லா கட்சிகளின் தலைமைகளிலும் தனியார்மய, தாராளமயக் கொள்கைகளால் ஆதாயமடைந்த புதிய தரகு முதலாளிகளும் பணக்காரர்களும்தான் நிறைந்திருக்கிறார்கள். இக்கட்சிகளைப் பொருத்தவரை, இந்துத்துவ எதிர்ப்பு என்பது ஓட் டுப் பொறுக்குவதற்கான வாய்ச்சவடால் என்ற அளவுக்கு மேல் பொருளற்றது.

அதேபோல, புதிய பொருளாதாரக் கொள்கையால் உருவாக்கப்பட்டிருக்கும் புதிய நடுத்தர வர்க்கமோ, புது வகைப் பார்ப்பனர்களாக, சாதித் திமிர் கொண்ட வர்க்கமாக உலா வருகிறது. சாதித்திமிரும் இந்துத்துவத் திமிரும் வேறல்ல. பார்ப்பன எதிர்ப்பு, சமஸ்கிருத எதிர்ப்பு, தாய்மொழிப்பற்று என்பனவெல்லாம் இந்த வர்க்கங்களுக்குத் தேவையற்றவையாகிவிட்டன. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த இம்மேட்டுக்குடி வர்க்கம் பார்ப்பன மேட்டுக்குடியுடன் சேர்ந்து வல்லரசுக் கனவு காண்கிறது. இந்த வல்லரசுக் கனவும் சுதர்சன ராவின் அகண்டபாரதக் கனவும் வேறல்ல. இவர்களெல்லாம் இத்தகைய கட்சிகளின் சமூக அடித்தளமாக இருக்கிறார்கள்.

தமிழகத்தைப் பொருத்தவரை ஊர் ஊராக மோடியை அறிமுகப்படுத்தி, பா.ஜ.க.வுக்கு தளம் அமைத்துக் கொடுத்த வைகோ, ராமதாசு, விஜயகாந்த், பச்சமுத்து, ஏ.சி.சண்முகம் முதலானவர்கள், “மோடி அரசு இந்துத்துவத்தை அமல்படுத்தாது” என்றும், “நாட்டை வளர்ச்சிப் பாதையில் இட்டுச்செல்லும் என்றும், ராஜபக்சேவை அடக்கி வைக்கும்” என்றும் சான்றிதழ் கொடுத்தார்கள். தமது பதவிக்காகவும், பிழைப்புவாத ஆதாயங்களுக்காகவும் தெரிந்தே புளுகிவிட்டு, இன்று ஈழப்பிரச்சினை முதல் சமஸ்கிருத திணிப்பு வரையிலான அனைத்துக்கும் மோசடித்தனமாக ஒரு எதிர்ப்பு அறிக்கை விடுகிறார்கள்.

இது நாற்காலிக்காக அமைக்கப்பட்ட கூட்டணி மட்டுமல்ல, தமிழகத்திலிருந்து திராவிட இயக்க மரபையும், பெரியாரையும் அகற்றத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்.-ற்கு இவர்கள் காலாட்படைகள். சாதி உணர்வைத் தூண்டி விடுவதன் மூலம்தான், தமிழகத்தில் பார்ப்பன எதிர்ப்புணர்வு முதல் தமிழுணர்வு வரையிலான அனைத்தையும் ஒழிப்பது சாத்தியம் என்று திட்டமிட்டுத்தான் பாரதிய ஜனதாக் கட்சி இவர்களைக் களத்தில் இறக்கியிருக்கிறது. இனி இந்த வீடணர்கள் போட்டுக் கொடுத்த பாதையில் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பா.ஜ.க. பரவும். இதுநாள் வரை தமிழகம் இந்து வெறியர்கள் காலூன்ற இடம் கொடுக்காமல் அவர்களுக்குச் சவாலாக இருந்து வந்தது. இன்று மதச்சார்பற்றவர்களுக்கும் ஜனநாயக சக்திகளுக்கும் சவாலாக மாறியிருக்கிறது.

இன்று பார்ப்பன பாசிசம் அதிகாரத்துக்கு வந்திருக்கும் சூழல் மிகவும் முக்கியமானது. ஏற்கெனவே புதிய தாராளவாதக் கொள்கைகள், மக்களின் வாழ்வுரிமை உள்ளிட்ட பல ஜனநாயக உரிமைகளைச் சட்டபூர்வமாகவே அரித்துத் தின்று விட்டன. அதனை நிறைவு செய்வதற்கு பார்ப்பன பாசிசம் வந்திருக்கிறது. இதனைத் தேர்தல் அரசியலுக்கு உட்பட்டு முறியடிக்க முயற்சிப்பது மட்டும்தான் நடக்கிற காரியம் என்றே பலரும் எண்ணுகிறார்கள்.

அது நடக்காத காரியம் என்பதைத்தான் வேறு வார்த்தைகளில் சொல்கிறார் தீஸ்தா. கல்லிலே நார் உரிப்பது போல இந்த நீதிமன்றத்தின் வழியாகவே குஜராத் இனப்படுகொலை குற்றவாளிகள் பலரைச் சிறைக்கு அனுப்பியிருக்கும் தீஸ்தா, “ஒரு தேசம் என்ற முறையில் இந்துமதவெறியை ஒப்புக்கொள்வதற்கு நாம் பழகிவிட்டோம்” என்று கூறியிருப்பது வெறும் குமுறல் மட்டுமல்ல. அது கசப்பானதொரு உண்மை.

உயிரின் ஆதாரமான தண்ணீரை, காசுள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் கடைச்சரக்கு என்று மக்களை ஒப்புக்கொள்ள வைப்பதில் தனியார் மயம் எங்ஙனம் வெற்றி கண்டு விட்டதோ, அதே போல, முன்னர் மதவெறியாக கருதி வெறுக்கப்பட்ட நடவடிக்கைகளை இயல்பாக எடுத்துக்கொள்ளுமாறு பெரும்பான்மை மக்களைப் பழக்குவதிலும் இந்து பாசிசம் வெற்றி கண்டிருக்கிறது. அதனால்தான் பாபர் மசூதியை இடித்த டிசம்பர் 6-ம் நாளன்று, குற்றவாளிகளான ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் திமிராக உலா வர, பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்கள் குற்றவாளிகளைப் போல அஞ்சி ஒடுங்கவேண்டியிருக்கிறது.

“யாருக்கான வளர்ச்சி, யார் இந்து?” என்ற கேள்விகளை எழுப்பி, அவற்றுக்குத் தீர்வு கூற முடிந்தவர்கள் மட்டும்தான் பார்ப்பன பாசிசத்தை அரசியல் ரீதியில் எதிர்கொள்ள முடியும். இக்கேள்விகளை எழுப்பும் நேர்மையும் துணிவும் கொண்டவர்களும், அவற்றுக்கான விடை இந்த அரசமைப்புக்கு வெளியே இருக்கிறது என்ற உண்மையைக் கூறத் தயங்காதவர்களும் கம்யூனிச புரட்சியாளர்கள் மட்டுமே. வேறு யாரும் இல்லை. இந்துத்துவத்தை எதிர்க்க விழையும் ஜனநாயக சக்திகள் இந்த உண்மையை அங்கீகரிப்பதும் புரட்சிகர சக்திகளுடன் கைகோர்ப்பதும் அவசியம்.

– அஜித்
______________________________
புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2014
______________________________

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

 1. “யாருக்கான வளர்ச்சி, யார் இந்து?” என்ற கேள்விகளை எழுப்பி, அவற்றுக்குத் தீர்வு கூற முடிந்தவர்கள் மட்டும்தான் பார்ப்பன பாசிசத்தை அரசியல் ரீதியில் எதிர்கொள்ள முடியும். இக்கேள்விகளை எழுப்பும் நேர்மையும் துணிவும் கொண்டவர்களும், அவற்றுக்கான விடை இந்த அரசமைப்புக்கு வெளியே இருக்கிறது என்ற உண்மையைக் கூறத் தயங்காதவர்களும் கம்யூனிச புரட்சியாளர்கள் மட்டுமே. வேறு யாரும் இல்லை. இந்துத்துவத்தை எதிர்க்க விழையும் ஜனநாயக சக்திகள் இந்த உண்மையை அங்கீகரிப்பதும் புரட்சிகர சக்திகளுடன் கைகோர்ப்பதும் அவசியம்.
  TRUE WORDS

 2. “இஷ்ரத் ஜகான் கொலை வழக்கின் குற்றவாளியும், மோடிக்காக பெண்ணை வேவு பார்த்து, அது தொடர்பான தொலைபேசி உரையாடல் ஒலிநாடாக்களை வெளியிட்டவருமான ஐ.பி.எஸ். அதிகாரி சிங்கால் குஜராத்தில் மீண்டும் பணிநியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.”

  மோடியை எதிர்த்தவர் மறுபடியும் பதவியில் அமர்த்தப் பட்டிருக்கிறார் என்றால் அது மோடிக்குப் பின்னடைவுதானே ! எதிர்ப்பு சக்திகளுக்கு வெற்றிதானே ! சந்தடி சாக்கில் ஏதோ இது இந்து சக்திகளின் வேலை என்பது போல எழுதியிருக்கிறீர்களே !

  அரண்டவன் கண்களுக்கு நடப்பதெல்லாம் மோதியாலே !

 3. ‘காசி, மதுரா ஆகிய மூன்று இடங்களிலும் மசூதியை அவர்கள் விட்டுக் கொடுத்துவிட வேண்டும்.’

  காசி விஸ்வனாதர் கோவிலை இடித்து கட்டியதுதான் கியன்வாபி மசூதி. கோவின் தேவ் கோவிலை இடித்துக் கட்டியதுதான் ஷாகி எய்கா மசூதி. இது இரண்டும் இந்துக்களுக்கு திருப்பி தரப்பட வேண்டும். இதை கேட்பது எப்படி குற்றமாகும் ?

  • இது கடைந்தெடுத்த பொய். வரலாற்று ஆதாரங்கள் எதுவும் இல்லை. பார்ப்பனர்கள் பொய்யுரைப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்கள். வரலாற்றைத் திருத்துவதிலும், உண்மையை மறைப்பதிலும், திரிப்பதிலும் கை தேர்ந்தவர்கள்

 4. ‘முகலாய ஆட்சிக் காலத்தையும் அந்நிய ஆதிக்கமாகச் சித்தரிக்கும் அந்த மதவெறிப் பேச்சை மறுத்து எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பவில்லை.’

  முகலாயர்கள் அன்னியர்கள் என்று வினவுக்கு தெரியாதா ? இதில் என்ன மதவெறிப் பேச்சு இருக்கிறது?

  • பார்ப்பனீயம் (இந்து மதம்) என்பதும் அந்நிய மதம் தானே. அதன் படி ஆர்.எஸ்.எஸ் , இந்துத்துவா அமைப்பினரும் அந்நியர்கள் தானே

   • இந்து மதம் அன்னியம் என்பதற்கு என்ன ஆதாரம் ? சிவன் வணக்கம் எந்த ஊரிலிருந்து வந்தது என்று சொல்ல முடியுமா ?

    • இந்து மதம் ஒரு தனிப்பட்ட மதமே இல்லை! ஆரியர்கள் தாங்கள் சென்ற இடங்களில் கேட்ட கதைகள், வெளினாட்டு யாத்திரிகர்கள் மூலம் அரைகுறையாக புரிந்துகொண்ட மற்றும் உல்ட்டா செய்து புனையப்பட்ட கதைகளை வைத்துக்கொண்டு அதையே வேதம் என்றனர்! அதில் சிவன் வழிபாடு இல்லை! யாரையும் கடவுள் என்று கூறப்படவில்லை! பிற பழங்குடிகள் (திராவிடர்கள்) வழிபட்ட மூதாதையரான தெய்வங்களை, புராணகதைகள் மூலம் இணைத்து தாங்களே பூசாரிகளாய் இருந்து பிழைப்புக்கு வழிதேடிக்கொண்டனர்! பலவாஙளாயும், முட்டாளாகவும் இருக்கும் அரசர்களை மயக்கி தங்கள் ஆதிக்கத்தைநிலைனாட்டிகொண்டனர்! மனுசாஸ்திரம் முதல் கீதை வரை எல்லாம் பார்பன புகழ் பாடுவதுதான்! சமஸ்கிருதமும் மற்ற கிரேக்க மொழி குடும்பத்தை செர்ந்த இலக்கணமும், திராவிட் மொழிகலப்பும் கொண்டதுதான்! மக்கள் ஆதரவு அற்ற மொழியாதலின், புத்தர் பிரான் அதை புறக்கணித்து பாலி மொழியில் உபதேசம் செய்தார்! தமிழை விட, வஙக தெலுங்கு மொழிகளை விட எந்த விதத்திலும் சம்ஸ்கிருதம் உயர்ந்தது அல்ல! விவேகானந்தர் கருத்தும் அதுவே! இதுவரை பொதுபணத்தில் பார்ப்பனர்கள் சமஸ்கிருத ஆராய்ச்சி என்றும், வேத பாடசாலை என்றும் கொள்ளை அடித்து வருவதற்கு ஒரு முடிவு ஏற்படுத்தவேண்டும்! பொதுப்பணத்தை பொதுனலனுக்காகவே செலவு செய்யவேண்டும்!

     • இராமாயண கதையை அதன் மூல சமக்கிருத வடிவில் படித்தால் அதில் தெளிவாக பல இடங்களில் மன்னர்களின் தர்மம் என்பது மனுவின் நான்கு வர்ண நியதியை பின்பற்றுவது என்று கூறப்பட்டுள்ளது. மனுவின் நான்கு வர்ண நியதியை பட்சிகள் கூறுகின்றன, ஜடாயு கூறுகிறது, இராமனே பல இடங்களில் கூறுகிறான். சூத்திரன் சூத்திர வேலையை மட்டும் செய்ய வேண்டும், வைசியன், சத்திரியன், பிராமணன் ஆகியவர்கள் அவர்களுக்குரிய வேலைகளை தான் செய்ய வேண்டும். மற்ற வேலைகளை செய்வது பெரும்பாவம் என்றும் அத்தகைய நிகழ்வுகள் நடந்தால் ஆட்சியில் தர்மம் குடிகொள்ளவில்லை என்றும் விளக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக பேச்சுவாக்கில், கதா காலட்சேபங்களில், சொல்லப்பட்ட இராமாயண கதையை மவுரிய காலத்தில் (கிபி 5௦௦௦ காலம்) எழுத்து வடிவமாக்கப்பட்டபோது இந்த நால்வர்ண நியதிகளை பார்ப்பனர்கள் புகுத்தியிருப்பது தெரியும். ஒரு சூத்திரன் தவம் செய்தால் (சம்பூகன்) அவனை கொலை செய்வது தர்மம் என்றும், அந்த கொலையை செய்த இராமன் தர்மபுருடன் என்று பாராட்டப்படுவதும் எந்த வகையில் நியாயம்?

     • அஜாத்,
      இப்படி மூச்சு முட்ட பேசுவதற்கு பதிலாக ஆரியர்கள் எங்கிருந்து வந்தார்கள், இப்போது எங்கே இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா ? அதே விவேகானந்தர் ஆரிய திராவிடர் என்பது கட்டுக் கதை என்று சொன்னாரே படிக்கவில்லையா ?

 5. மோடிக்கு ஓட்டு போட்ட ஒருத்தரு:
  “இந்த அரகிருக்கைங்க தொல்லை தாங்க முடியல. மோடி ஆட்சியில BJP கொள்கை இல்லாம communist கொள்கையா அமுல்படுத்தனும்? இல்ல BJP கொள்கை communist கொள்கையோடு ஒத்து போச்சுன்னா ஆட்சியத்தான் புடிச்சிருக்குமா? எல்லாம் எங்களுக்கு தெரிஞ்சு தான் ஓட்டு போட்டோம். நீறு எல்லாத்தையும் மூடிட்டு இரும்” ங்காரு.

 6. வெள்ளையர்களை தேவர்குலமாக உயர்த்திவிட்டால் ப்ராமனர்கள் அவர்களுடைய மிலேச்சுகளாக இந்தியாவை ஆண்டு கொண்டு இருப்பார்கள். ஏற்கனவே இந்திய அடிமைகளை பல நூற்றாண்டுகள் ஆண்ட இஸ்லாமிய மேல்குடி மக்கள் மீண்டும் ஆள வந்து விடுவார்கள் என்ற பயம்தான். ஆள்பவர்களின் போட்டியில் மோடிக்கு என்ன வேலை என்பதுதான் தெரியவில்லை. சுப்பரமணிய சாமி ப்ராமண பட்டம் ஏற்கனவே கொடுத்துவிட்டார். வெளுத்து கட்டுங்கள் மோடி அவர்களெ
  … என்று தனியும் இந்த அடிமையின் மோகம்!

 7. 1200 ஆண்டுகள் அல்ல 2000 ஆண்டுகளாக பார்ப்பனிய சனாதனத்துக்கு அடிமைப்பட்டிருக்கிறோம் என்பதே உண்மை.ஹிந்துத்வா என்பவர் யாரோ? அவர் ஒரு சூத்திரனாக இருந்தால் அவர் இன்றைக்கு ஒரு நல்ல அடிமை.பார்ப்பனராயிருந்தால் ஒரு பாஸிஸ்டு.இந்து மதம் என்று ஒரு மதம் இல்லவே இல்லை. அப்படிச் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.ஊருக்கு வெளியே ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பவர்களும், கோவிலுக்குள் நுழைய முடியாதவர்களும்,பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்க முடியாதவர்களும்,தனிக் குவளையில் சாயா குடிப்பவர்களும் இந்து என்று பார்ப்பனீயம் ஏற்றுக்கொள்கிறதா?அவர்களுடைய பிரச்சினைகளுக்காக ஹிந்துத்வா என்றைக்காவது போராடியிருக்கிறதா?மராட்டிய பேஷ்வாக்கள் இழந்துவிட்ட அதிகாரத்தை மீண்டும் கைப் பற்றி இருக்கிறார்கள்.ராமன் வானரப் படையை வைத்துக்கொண்டு லங்காவை அழித்தது போல் மோடி தனக்கு ஓட்டுப் போட்டவர்களையே அழிக்கப் போகிறார்.அதனால் தான் ஹிந்துத்வாவின் வாய்க் கொழுப்பு சீலையில் வடிகிறது.மோடி ஒரு ஹிட்லர்.ஹிட்லரைப் படித்திருக்கிற மோடி ரொம்ப எச்சரிக்கையாகத்தான் காய் நகர்த்துகிறார்.ஆனால் அவர் மக்களை- ஓட்டுப்போட்ட ஏழைகளை- விட்டு விலகிப் போய்த்தான் ஆகவேண்டும்.இல்லாவிட்டால் ஹிட்லரைப் போல் மோடியும் முடிவை எய்துவார்.எதிர்காலம் ஒடுக்கப் பட்ட மக்களின் காலம்.அதற்கு புரட்சிகரத் தலைமையும் இருக்கிறது மோடி&கோ மறந்துவிட வேண்டாம்.

 8. //சிவன் வணக்கம் எந்த ஊரிலிருந்து வந்தது என்று சொல்ல முடியுமா ?//

  ஏன் முடியாது? வியாசன் போன்றோர் ஆயிரம் சப்பைக்கட்டு கூறினாலும், சிவலிஙக வழிபாடு ‘பேலியாக்’ எனப்படும் ஆண்குறி வழிபாடே! போட்டியாக வட இந்தியாவில் பெண்குறி வழிபாடும் இருந்தது! இப்போதுள்ள சைவ , வைணவ சித்தாந்தங்கள் அவ்வழி வந்தவையே! காட்டுமிராண்டி காலத்து கடவுளர்களை வைத்துக்கொண்டு மக்களை மூளையை மழுங்கடித்து ஆன்மீகம் என்ற பெயரில் அரசியல் பண்ணுவதே மதவாதிகளின் பிழைப்பு! கொள்ளையடிப்பவனுக்கெல்லாம் குல்லாய் போட்டு அரசனாக்குவதும், அவன் வலிமை குன்றும்போது எதிரிக்கு தூதுவிட்டு கட்சி மாறுவதும் இந்த ஆதிக்க சக்திகளுக்கு கைவந்த கலை! காலம் மாறும்போது கடவுள் கையில் ஆனுகுண்டு கூட வரும், ஆனால் அந்தக்கடவுள் (பிள்ளையார்) அழுக்குருண்டைதானே !

  • நான் கேட்டது சிவன் வணக்கம் எந்த ஊரில் இருந்து வந்தது என்று ? நான் உங்களிடன் சிவன் / சிவலிங்கம் பற்றிய ஆராய்ச்சியை கேட்கவில்லை.

 9. பாபர் மசூதியை இடித்த டிசம்பர் 6-ம் நாளன்று, குற்றவாளிகளான ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் திமிராக உலா வர, பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்கள் குற்றவாளிகளைப் போல அஞ்சி ஒடுங்கவேண்டியிருக்கிறது.

 10. Its vinavu mistake expecting the communalism person to do the secularism job for india. Indian borne religion should be saved otherwise the money powerhouse of other two religions will eat indian culture and its identity. Last two hundred years our hindu community changed a lot from the traditional followings and removed the bad practices in the hindu religions. Some of the bad things are still exist and it will be eradicated by our indian laws and changing mentality of hindu citizens in future we can expect the hindu religion will be pure. In russia communism is the identity, europe chritianity is the identity, middle east is the identity for the muslim religions and for hindus cant say due to india is the secular country. its the right time for hindus to become the powerhouse of indian country and declare the hindu religions is the mother religions of this country.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க