privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்பா.ஜ.கதிருச்சி சட்டக் கல்லூரியில் சமஸ்கிருத உத்தரவு எரிப்பு !

திருச்சி சட்டக் கல்லூரியில் சமஸ்கிருத உத்தரவு எரிப்பு !

-

சமஸ்கிருத வாரம் கடைபிடிக்கும் மோடி அரசின் சுற்றறிக்கை நகலை எரித்து திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் – சாலை மறியல்!

பார்ப்பனிய மோடி அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற 60 நாட்களுக்குள் தனது இந்தி – இந்து – இந்தியா என்ற அகண்ட பாரத கனவை நிறைவேற்றும் விதமாக பார்ப்பனிய கொள்கைகளை அமல்படுத்தத் தொடங்கியுள்ளது. இதன் அங்கமாகவே ‘சமூக வலைத் தளங்களில் இந்தியில் தான் மத்திய அரசு அலுவலர்கள் தகவல் பரிமாற்றம் செய்ய வேண்டும்’ எனவும், ‘மத்திய அரசு சுற்றறிக்கைகளை இந்தியில் தான் அனுப்ப வேண்டும்’ எனவும் உத்தரவிட்டது. தமிழகத்தை சேர்ந்த 11 அதிகாரிகளுக்கு ‘இந்தி ஏன் தெரியவில்லை’ என்று நோட்டிஸ் அனுப்பியது. இப்படி தனது இந்துத்துவா கருத்துக்களை சட்டபூர்வமாகவே செயல்படுத்தத் துவங்கியுள்ளது.

இதன் அடுத்த கட்டமாக செத்த மொழியான சமஸ்கிருதத்தை மீண்டும் சிங்காரித்து அரியணை ஏற்றி தனது இந்துத்துவா கொள்கையை அமல்படுத்தும் நோக்கில், மத்திய அரசுப் பள்ளிகளில் (CBSE) ஆகஸ்ட் 7 முதல் 13 வரை சமஸ்கிருத வாரம் கடைப்பிடிக்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பியது. ‘இந்திய மொழிகள் அனைத்திற்கும் தாய் மொழி சமஸ்கிருதம்’ என்ற வாசகத்துடன் தொடங்கும் படியான அந்த சுற்றறிக்கை நஞ்சை தூவியது.

இதன் அபாயத்தை மக்களுக்கு உணர்த்தும் வகையிலும், பார்ப்பனியத்திற்கு என்றுமே தலைவணங்காத தமிழ் மண்ணின் பாரம்பரியத்தை மக்களுக்கு உணர்த்தும் வகையிலும், மக்கள் கலை இலக்கிய கழகம் மற்றும் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி ஆகிய அமைப்புகள் சார்பாக சமஸ்கிருத எதிர்ப்பு வாரம் கடைபிடித்து இதனை எதிர்க்க வேண்டும் என பிரச்சாரம் செய்யப்பட்டது.

இதன் முதல் கட்டமாக ஆகஸ்ட் 6-ல் மக்கள் கலை இலக்கிய கழகம் மற்றும் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள் பெரியார் சிலை முன்பு சமஸ்கிருத வாரம் தொடர்பாக மோடி அரசு அனுப்பிய சுற்றறிக்கை நகலை எரித்து கைதாகினர்.

அதன் பிறகு இதனை கண்டித்து திருச்சி முழுவதும் பிரச்சாரம் செய்யப்பட்டது. இறுதியாக, ஆகஸ்ட் 13 அன்று புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் சட்டக்கல்லூரி கிளை சார்பாக மோடி அரசின் நகல் எரிப்புப் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.

அதனடிப்படையில் ஆகஸ்ட் 13 மாலை புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் தோழர்கள் கல்லூரியில் உள்ள ஒவ்வொரு வகுப்பறையிலும் சென்று “சமஸ்கிருத வாரத்தை ஏன் எதிர்க்க வேண்டும்” என்று விளக்கி பேசி மாணவர்களைப் போராட்டத்திற்கு அழைத்தனர். சமஸ்கிருத வார எதிர்ப்பின் அவசியத்தை உணர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கோரிக்கையை ஏற்று போராட்டத்தில் கலந்து கொள்ளத் தயாரானார்கள். போராட்டத்திற்கு திருச்சி மாவட்ட புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் செயலாளர் சேக் தலைமை தாங்கினார்.

போராட்டம் நடக்கும் போது “மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு” என்ற தந்தை பெரியாரின் படம் போடப்பட்ட பிரசுரத்தை அந்த வழியாக சென்ற பொதுமக்களுக்கு மாணவர்கள் விநியோகித்து போராட்டத்தின் நோக்கத்தை விளக்கினர். பொது மக்களும் உடனிருந்து ஆதரவு தெரிவித்தனர். அரை மணி நேரம் முழக்கமிட்ட பிறகு அங்கு கூடியிருந்த மக்கள் முன்னிலையில் மோடி அரசின் சுற்றறிக்கை நகல் எரிக்கப்பட்டது.

மீண்டும் முழக்கம் போட்டுக் கொண்டே மாணவர்கள் சாலையை மறித்து போராட்டம் நடத்தி மீண்டும் நகலை எரித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். சுமார் 45 நிமிடம் அளவில் சாலை மறியல் போராட்டம் நீடித்தது. இதன் இறுதியில், போராட்டத்திற்கு வந்த மாணவர்களுக்கு நன்றி தெரிவித்து சட்டக்கல்லூரி கிளை பு.மா.இ.மு தோழர்கள் உரையாற்றினர்.

இந்தப் போராட்டம் மாணவர்கள் மத்தியில் பார்ப்பன எதிர்ப்பு தமிழ் மரபினை விசிறியெழச் செய்வதாக அமைந்தது. தினகரன், தினத்தந்தி உள்ளிட்ட பத்திரிகைகளிலும், சன் டிவி உள்ளிட்ட சில உள்ளுர் தொலைக்காட்சிகளிலும் இப்போராட்டம் குறித்த செய்தி வெளியானது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
திருச்சி
99431 76246