Monday, August 15, 2022
முகப்பு உலகம் அமெரிக்கா அமெரிக்காவை ஒட்டுக் கேட்ட ஜெர்மனி, சபாஷ் சரியான போட்டி !

அமெரிக்காவை ஒட்டுக் கேட்ட ஜெர்மனி, சபாஷ் சரியான போட்டி !

-

மெரிக்காவின் வெளியுறவுத் துறை செயலர் ஜான் கெர்ரியின் தொலைபேசி உரையாடலை,ஜெர்மனியின் உளவுத் துறை நிறுவனமான பி.என்.டி (BND) ஒட்டுக் கேட்ட செய்தி வெளியாகியிருக்கிறது. இதை ஜெர்மனியின் “டெர் ஸ்பீகல்” (Der Spiegel) நாளிதழ் அம்பலப்படுத்தியிருக்கிறது.

ஜான் கெர்ரி, எர்டோகன்
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, துருக்கி பிரதமர் தயீப் எர்டோகன்

இசுரேல் – பாலஸ்தீன் பதட்டம் குறித்து, 2013-ம் ஆண்டு பேசிய ஜான் கெர்ரியின் உரையாடலை ஒரு விபத்தாகத்தான் ஜெர்மன உளவுத்துறை பதிவு செய்து விட்டதாம். இதே போல முன்னாள் அமெரக்க வெளியுறவுத் துறை செயலர் ஹிலாரி கிளிண்டனின்  தொலைபேசி பேச்சையும் ஒரு விபத்தாக பதிவு செய்திருப்பதாக வேறு ஜெர்மன் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த பேச்சு திருமதி கிளின்டனுக்கும், அப்போதைய ஐநா தலைவர் கோஃபி அன்னானுக்கும் இடையே நடைபெற்றதாகவும், அதில் சிரியா சென்று பேச்சுவார்தை நடத்தியதை அன்னான் கிளின்டனிடம் தெரிவித்தாகவும் “டெர் ஸ்பீகல்” நாளிதழ் தெரிவித்துள்ளது. ஐ.நா தலைவர் தனக்கு படியளக்கும் ஆண்டவனின் சன்னிதியில் வேண்டுதல்களை முன்வைப்பதை ஒட்டுக் கேட்காமலேயே அறிய முடியும் என்பது வேறு விசயம்.

இந்த விவகாரங்கள் ஜெர்மன் ஊடகங்களுக்கு எப்படி கிடைத்தனவாம்? ஜெர்மன் உளவுத்துறையின் ஆவணங்களை இரகசியமாக பெற்ற சிஐஏதான் உதவியிருக்கின்றது. அதிமுக ஊழல்கள் கலைஞர் டிவியிலும், திமுக ஊழல்கள் ஜெயா டிவியிலும் வருவதுதானே ஜெர்மனி – அமெரிக்க நாடுகளுக்கும் பொருந்தும்?

திருமதி கிளின்டன், ஜான் கெர்ரி மட்டுமல்லாமல், அமெரிக்காவின் மற்ற அரசியல்வாதிகள், ஜெர்மனியின் நட்பு நாடுகளின் பேச்சுக்களும் கூட பதிவு செய்யப்பட்டு பி.என்.டி தலைவருக்கு அளிக்கப்பட்டதாக மேற்படி செய்தி தெரிவிக்கின்றது. “இந்த உரையாடல்களை உடனே அழிக்காமல் இருந்தது அடி முட்டாள்தனம்” என்று பெர்லினைச் சேர்ந்த அரசு அதிகாரி ஒருவர் கூறியதாக என்.டி.ஆர் ஊடகம் தெரிவித்திருக்கிறது. எல்லாம் பிடிபட்ட பிறகே புத்தி வருமென்பதெல்லாம் காலத்தால் அழியாத காவிய வழக்கு போலும்!

துருக்கியை பொறுத்த வரை நேட்டோவின் கூட்டாளி என்பதால் ஜெர்மனிக்கும் நட்புநாடுதான். எனினும் பெர்லினில் கணிசமான துருக்கி மக்கள் வாழ்வதால் அந்த நாட்டின் அதிகாரப்பூர்வ பேச்சுக்களையும் ஜெர்மனி 2009 முதல் ஒட்டுக் கேட்டு வந்திருக்கிறது. அது குறித்து எச்சரிக்கையுடன் ஆய்வு செய்வதாக துருக்கி அரசு தெரிவித்திருக்கிறது. ஆளும் கட்சியைச் சேர்ந்த மெஹ்மத் அலி சாஹின், “இது குறித்து தீவிரமான விசாரணையை அரசும், அயலுறவுத் துறை அமைச்சகமும் செய்ய வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

நான்கு வருடத்திற்கொரு முறை ஜெர்மனி அரசு தனது உளவுத்துறை நிகழ்வுகளை பரிசீலனை செய்யுமென்றாலும், ஸ்னோடன் மூலம் அமெரிக்காவின் என்.எஸ்.ஏ ஊழல் அம்பலமாகி அமெரிக்க-ஜெர்மன் உறவில் நெருடல் ஏற்பட்டபோது தனது உளவு நடவடிக்கைகளை மறு சீரமைப்பு செய்யவில்லை என்று “டெர் ஸ்பீகல்” கூறியிருக்கிறது.

கடந்த அக்டோபரில், ஸ்னோடன் அம்பலப்படுத்திய தகவலின் படி ஜெர்மனியின் அதிபர் ஏஞ்செலா மெர்கெல் உள்ளிட்ட 35 அரசு பிரமுகர்கள் அமெரிக்காவால் ஒட்டுக் கேட்கப்பட்ட செய்தி வெளியானது. இது தொடர்பாக ஒபாமாவிடம் பேசிய ஏஞ்செலா, “இதை அடியோடு ஏற்வில்லை, இது நம்பிக்கையை புதைக்கும் செயல்” என்று கண்டித்திருக்கிறார்.

இதன் தொடர்ச்சியாக ஜூலையில், ஜெர்மனியின் அரசு நிறுவனங்களில் வேலை செய்தவர்களே சி.ஐ.ஏவிற்கு தகவல் பரிமாறியது கண்டறியப்பட்டு, பதிலடியாக பெர்லினின் சி.ஐ.ஏ தலைவரை ஜெர்மனி வெளியேற்றியது.

நாங்கள் மட்டும் உளவுபார்க்கவில்லை நீங்களும்தான் உளவு பார்த்தீர்கள் என்று பதிலுக்கு பதில் அமெரிக்கா தற்போது இந்த செய்தியை வெளியே கொண்டு வந்திருக்கிறது.

கடந்த மாதம் ஊடகங்களுக்கு பேட்டியளித்த ஜெர்மன் அதிபர், உளவுத்துறை குறித்து அடிப்படையிலேயே வேறுபட்ட நோக்கங்களை தமது அரசு கொண்டிருப்பதாக கூறினார்.

ஆனால் உளவுத்துறை என்று வந்து விட்ட பிறகு, மற்றவர்களை ஒற்றாடுவதுதானே தொழில் தர்மம்? அதில் மாட்டிக் கொள்ளாத திறனைத் தவிர அறமோ, அன்போ கடுகளவும் கிடையாது.

முதலாளித்துவ பொருளாதாரத்தின்படி முதலாளிகளுக்கிடையே போட்டி என்பதை சந்தையின் ஜனநாயகம் என்று பொய்யுரைப்பார்கள் அறிஞர் பெருமக்கள். சரியாகச் சொன்னால் அது சந்தையில் ஆதிக்கம் செய்யும் சர்வாதிகாரப் போட்டிதான். ஒரு நாட்டில் முதலாளிகள் ஏக போகமானதும், மற்ற நாடுகளின் சந்தைகளை காலனியாக பிடிப்பதும், தற்போது முழு உலகையே ஆதிக்கம் செய்வதுமாக முதலாளித்துவம் வளர்ந்து தனது முரண்பாடுகளை பெருக்கியிருக்கிறது.

இப்போது அமெரிக்கா ஒற்றைத் துருவ வல்லரசாக இருந்தாலும், பொருளாதாரத்தில் வல்லரசாக இருக்கும் ஜெர்மனி அதோடு போட்டியில்தான் உள்ளது. இராணுவத்தில் மட்டும் வல்லரசாக இருக்கும் ரசியாவும், ஜெர்மனியைப் போல பொருளாதாரத்தில் மட்டும் வல்லரசாக இருக்கும் ஜப்பான் கூட  இந்த உலக மேலாதிக்க போட்டிகளில் ஈடுபடவே விரும்புகின்றன. அமெரிக்காவிற்கு போட்டியாக உள்ள இந்த வல்லரசு நாடுகளின், பலவீனமான மற்ற துறைகளில் பலம் வந்த பிறகு இது மூர்க்கமான போட்டியாகவும் இறுதியில் அது போரைக் கொண்டு வரும் அபாயமாகவும் இருக்கும்.

ஜெர்மனி – அமெரிக்க நாடுகளின் பரஸ்பர ஒட்டுக் கேட்கும் விவகாரங்களில் அதன் துவக்க நிலையை பார்க்கலாம். ஆம். முதலாளித்துவம் அமைதியையோ இல்லை நல வாழ்வையோ ஒரு போதும் கொண்டு வராது!

Germany tapped John Kerry’s phone, spied on Turkey for years – report
நன்றி: ரசியா டுடே

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க