Thursday, May 30, 2024
முகப்புகலைஇலக்கிய விமரிசனங்கள்ரஜினி, ஜெயமோகன் வழியில் சிம்புவின் இமய யாத்திரை !

ரஜினி, ஜெயமோகன் வழியில் சிம்புவின் இமய யாத்திரை !

-

ஆன்மிகம் ஃபர்ஸ்ட், சினிமா நெக்ஸ்ட், சிம்பு டிவிஸ்ட்” இது 25.08.2014 தேதியிட்ட குங்குமம் இதழின் அட்டைப்படக் கட்டுரை தலைப்பு.

ஆன்மிகம் ஃபர்ஸ்ட், சினிமா நெக்ஸ்ட், சிம்பு டிவிஸ்ட்
ஆன்மிகம் ஃபர்ஸ்ட், சினிமா நெக்ஸ்ட், சிம்பு டிவிஸ்ட்

இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு சிம்புவின் இரண்டு படங்கள் வருவதால், வழக்கம் போல படங்களுக்கான விளம்பரங்கள், செய்திகளாக, அட்டை கட்டுரைகளாக மாறும் மரபுப்படி வந்திருக்கிறது இந்த நேர்காணல். ஆனால் முதல் முறையாக, ஒரு நடிகர் என்ன பேசுவார் எனும் மரபை ஒடித்து கலகம் செய்திருக்கிறார் சிம்பு.

இந்த நேர்காணல் கருத்துக்களை பார்க்கும் போது இனி அவருக்கு ஆர்.எஸ்.எஸ் அம்பிகள் முதல் பின் நவீனத்துவ பேராசிரியர்கள் வரை புதிய ரசிகர்கள் கிடைக்க வாய்ப்புண்டு. எனினும் கருத்துக்களில் எது இந்து ஆன்மிகம், எது பிரெஞ்சு பின் நவீனத்துவம் என்று பிரித்துப் பார்க்க முடியாது. அதுவா இதுவா என்றால் இரண்டும்தான். இல்லைதான்.

தனது காதலிகளோடு சேர்ந்திருக்கும் படங்களையோ, ஊடலின் போது மிரட்டிய பேச்சுக்களையோ இணையத்தில் சந்தைப்படுத்தி விளம்பர ஆதாயத்தையும் வக்கிரத்தையும் ஒருங்கே கண்டதாக அறியப்பட்ட சிம்புவை பொதுவில் பணக்கொழுப்பெடுத்த ஒரு மேட்டுக்குடி பொறுக்கி என்றே பலரும் அறிந்திருப்பர்.

சினிமா உலகில் இருப்போருக்கு, அவர் நினைத்தால் படப்பிடிப்பிற்கு வருவதும், சமயத்தில் ஒரு ஷாட் முடித்து விட்டு “பை” சொல்வதும், தயாரிப்பாளரிடம் ஏகப்பட்ட வசதிகள் கேட்டு அலப்பறைகள் செய்வதும் என ஒரு வாரிசு குடும்பத்தின் அட்டகாசம் என்றே தெரியும்.

இதெல்லாம் இல்லாமல் சிம்பு எப்படியென நாம் நினைக்கிறோம். அப்படியில்லை இனி புதிய சிம்புவைப் பார்ப்பீர்கள் என்கிறார் பேட்டி கொடுக்கும் சிம்பு. இதனால் இறந்தகால இழிவுகளை மறக்கவோ இல்லை தூற்றுவதையோ அவர் செய்யவில்லை. அதெல்லாம் ஒழுக்கத்தின் பெயரில் கட்டுப்பெட்டித்தனத்தை வைத்திருக்கும் பெரியவர்களின் அணுகுமுறை. பழைய ஜாலி இருந்தாலும் புதிய நிதானமும் வந்திருக்கிறது என்கிறார் சிம்பு.

பாண்டிராஜின் “இது நம்ம ஆளு” படத்தில் “நானும் நயன்தாராவும் நடிக்கப் போறோம்னு சொன்னதுமே திரி கிள்ளிப் போட்ட மாதிரி ஆகிருச்சு. லைட் மேனே வந்தா நகராம பார்க்கிறார். ஆடியன்ஸும் நல்லாப் பாப்பாங்க” என்கிறார் இந்த மைனர் மகாத்மா. அதைத்தான் யூடியூப்பில் பார்த்து விட்டோமே என்பதாலேயே லைட்மேனோ இல்லை ரசிகர்களோ இந்தப் படத்தில் (எதிர்) பார்ப்பார்கள் என்று வெளிப்படையாக தனது அறியப்பட்ட பொறுக்கித்தனத்தையே ஒத்துக் கொள்ளும் திறந்த மனது யாருக்கு வரும்?

அதே போல “வாலு” எனும் படத்தை பேசும் போது, “ ‘அந்த’ சமயத்தில் எடுத்த படமா…..நானும், ஹன்சிகாவும் செம கெமிஸ்ட்ரியில் இருக்கோம்” என்று இன்னும் திறந்து பேசுகிறார். இதிலிருந்து பெறும் நீதி என்னவென்றால் படத்தில் மட்டுமல்ல வாழ்விலும் அதே நாயகிகளை காதலிப்பதால்தான் அவருக்கு நடிப்பு இயல்பாக வருகிறது. படமும் எதிர்பார்ப்புடன் நன்றாக ஓடுகிறது. இதனால் திரையுலகில் உள்ள நாயகிகள் அனைவரும் தங்களை சிம்பு இழிவுபடுத்திவிட்டதாக பொங்கி எழுவார்கள் என எதிர்பார்க்காதீர்கள். அவர்களைப் பொறுத்தவரை இந்த செய்திகள் விளம்பர புரமோஷனாக பயன்படுத்தலாம் என்பதால் அனுமதிக்கிறார்கள். ஆனல் சிம்பு மட்டும் உண்மையை பேசுகிறார்.

சிம்பு
அவர் ஏன் இப்படி பொறுக்கியாக இருந்தார்? (இருக்கிறார்?).

அவர் ஏன் இப்படி பொறுக்கியாக இருந்தார்? (இருக்கிறார்?). மற்ற நடிகர்கள் 24 வயதில் நடிக்க வரும் போது இவர் மட்டும் 9 மாதக் குழந்தையிலிருந்தே நடிக்க வந்து விட்டார். கைக்குழந்தைக்கெல்லாம் நடித்த நினைவுகள் எப்படி இருக்கும் என்று திருஞான சம்பந்தரை போற்றும் மண்ணிலிருந்து கொண்டு கேட்காதீர்கள். ஒரு பக்கம் பள்ளி பரீட்சை, மறுபக்கம் சினிமா டயலாக் என்று டைட்டாக வேலை பார்த்த அந்த் சிறுவனுக்கு என்ன நிம்மதி ஏற்பட்டிருக்க முடியும்?

இடையில் தாடிக்கார டாடிக்காக தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்று எதுகை மோகனையில் எஃபெக்டுடன் எட்டு நாள் பேசினால் அந்த பிஞ்சு மனது எப்படியெல்லாம் ஃபீல் பண்ணியிருக்கும்?

புதுப் பணக்காரர்களுக்குத்தான் ஆடம்பரமும், கேளிக்கைகளும் பிரச்சினைகளை கொண்டு வரும். இவருக்கு எல்லாமும் பிறக்கும் போதே இருந்ததால் பிரச்சினைகள் வேறு விதத்தில் வந்தன. அதுதான் தனிமை. பிறகு இரண்டு வருட இடைவெளி. இதில்தான் நீங்கள் புதிய சிம்புவை பார்க்கிறீர்கள்.

நான் யார், இந்த உலகிற்கு ஏன் வந்தேன், எதற்கு வாழ்கிறேன் போன்ற தேடல் கேள்விகள் ஜெயமோகனுக்குத்தான் சொந்தமென்று நினைக்க கூடாது. இதே வார்த்தைகளில் சிம்புவும் தனக்குள்ளே கேள்விகள் எழுந்துக்கிட்டே இருக்கு என்கிறார். கவனியுங்கள், அவர் எழுந்தது என்று முடித்து விடாமல் எழுந்துகிட்டே இருக்கு என்கிறார் அல்லவா, இதுதான் ஒரிஜினல் தேடல் என்பதற்கு அத்தாட்சி.

அதனால்தான், “தான் சிம்புதானா”ண்ணு அவருக்கு தோன்றுகிறதாம். சிறிய வயதில் நடிப்பு, புகழ், பணம், வசதிகள், காதலி எல்லாம் இருந்தாலும் தனிமையிலேயே அவதிப்பட்டிருந்தார் அல்லவா, அதுதான் இந்த தேடலில் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. இப்படித்தான் ஆன்மீகம் அறிமுகமாகிறது. “பைபிள், குர்ஆன், கீதை, மெட்டா பிசிக்ஸ், டி.என்.ஏன்னு கலந்து கட்டி” படிக்க ஆரம்பித்திருக்கிறார். இங்கேதான் அவர் ஜெயமோகன், அரவிந்தன் நீலகண்டன் வகை பாரம்பரிய இந்துத்துவாவில் இருந்து பின் நவீனத்துவ இந்துவாக மாறுபடுகிறார்.

அதே நேரம் அவரது தேடலில் குர் ஆனும், பைபிளும் இருப்பதால் மார்க்க சகோதரர்களும், பெந்தகோஸ்தே பெரியவர்களும் கூட முயற்சித்தால் யுவன் சங்கர் ராஜா, நடிகை தீபா போன்று பம்பர் பரிசுகள் கிடைக்கலாம். பிறகு ஃபேஸ்புக்கிலும் கொண்டாடலாம். என்ன, இசுலாம் ஒரே நாளில் கொஞ்சம் அல்ட்ரா மாடர்னாக மாறிவிடும், பரவாயில்லையா?

இதன் தொடர்ச்சியாக தியானமெல்லாம் இருந்திருக்கிறார். ஒரு முறை 8 மணி நேரம் தியானத்தில் இருந்த போது அவரது அம்மா பயந்திருக்கிறார். என்ன பயந்தார், பையன் ஏதும் வஸ்துக்களை உண்டு போதை மயக்கத்தில் சிக்கிவிட்டானா என்றா என்பதெல்லாம் நமக்கு தெரியவில்லை. இந்த போதி மர மாற்றத்திற்கு பிறகே அவர், தனது கடவுளுக்கு முகம் கிடையாது என்பதை கண்டுபிடித்திருக்கிறார். கூடவே நண்பனது தோளில் கை போட்டு என்ன மச்சி என்று பேசுவது போல கடவுளிடம் உரையாடுகிறார். கடவுளை டா போட்டு பேசும் நமது மரபில் இது வாழையடி வாழையாக தொடர்வது குறித்து இந்து ஞான மரபு ஆராய்ச்சியாளர்கள்தான் விளக்க வேண்டும்.

ஆரம்பத்தில் ரஜினி போல சூப்பர் ஸ்டார் ஆக வேண்டும் என்ற கனவுள்ளவர் இந்த “என்ன மச்சி, லார்டு” ஆன்மீக மாற்றத்திற்கு பிறகு சினிமா இரண்டாம் பட்சம்தான் என்று மாற்றியிருக்கிறார். ஒருவேளை ரஜினியே இப்படி ஆன்மீகம் என்று மாறிய பிறகே சூப்பர் ஸ்டார் ஆகியிருக்கலாம் என்றும் இதை எடுத்துக் கொள்ளாதீர்கள்.

ஏனெனில், இதைக் கேட்ட உடன் அப்பாவி குங்குமம் நிருபர் நா.கதிர்வேலன், டென்சனாகி தமிழகம் ஏதோ சிம்மக் குரலோன் சிவாஜி கணேசனை இழந்து விடுமோ என்றஞ்சி, “சினிமாவை விட்டு போய்விடுவீர்களா” என்று பதைபதைப்புடன் கேட்கிறார்.

இங்குதான் ஆன்மீகத்தை பற்றிய நித்தியானந்தா விளக்கத்தை ஜெயேந்திரானந்தா ஸ்டைலில், சாயிபாபானந்தா மொழியில், பாருநிவேதிதா களிப்பில், சுயமோகன் வார்த்தைகளில் நடிகர் சிம்பானாந்தா உபதேசிக்கிறார். “ஆன்மிகத்தில் வந்துட்டா கல்யாணம், தாம்பத்யம், தண்ணியடிக்கிறது, அசைவம் கூடாது என்பதல்ல. 24 மணிநேரமும் காவி உடையில் இருக்கிறதும் அவசியமல்ல. கடவுளை நோக்கிச் செல்ல அநேக வழிகள். அதனால் சினிமாவை விட மாட்டேன், என்னை நம்பின ரசிகர்களுக்கு என்னால ஏமாற்றம் தர முடியாது” என்று பட்டையைக் கிளப்புகிறார் சி ஆனந்தா.

முற்றும் துறக்கும் ஆன்மீகத்தையே அவஸ்தை போல கேட்டு பழகியிருக்கும் செவிகளுக்கு இந்த மறைபொருளின் உள்ளொளி மனப்பெருங்கடல் சுனாமி அலைகள் கேட்காது. எல்லாவற்றையும் வைத்துக் கொண்டே ஆன்மிகத்தை பின்பற்றுவது எவ்வளவு பெரிய சிரமம் என்பது லவுகீக வாசிகள் அறியாத ஒன்று. இதனால் அது சிரமம் என்று சொல்வது கூட பிழை. சோமபான, சுரா பானஆன்மிகத்தையே மாபெரும் கொண்டாட்டமாக மாற்றியிருக்கும் பாரிஸ் தேசத்து ஒயின் பின்நவீனத்துவமிது.

சிம்பு
யதி மட்டும் டிகிரி பாதுகாப்பை வைத்துக் கொண்டு சாமியார் ஆகும் போது சிம்பானந்தா சினிமாவை வைத்துக் கொண்டு ஆன்மிகம் பேசுவதில் என்ன தவறு?

சிம்புவை கேலி செய்வதாக நினைக்கும் அற்பப் பதர்களுக்கு ஒன்றை தெரிவிக்க விரும்புகிறோம். ஒருக்கால் சினிமா மைனர்தனத்தை வைத்துக் கொண்டு சிம்பானந்தா ஆன்மிகம் பேசுவதை கேலி செய்தால் நீங்கள் ரோல்ஸ்ராய்சில் முக்தி பரவசமடைந்த ஓஷோவை, கேபிள் டீவி பார்த்து அத்வைதத்தை ஆராய்ந்த பால பெரியவாள், மாமிகளை வைத்து யோகநிலை கண்ட நடு பெரியவாள், சன் செய்தி பார்த்துக் கொண்டே இருட்டை ஆராய்ந்த நித்தி, ஆண் நண்பர்களுக்கான விடுதலையை பாலியல் லேகியத்தில் கலந்து கொடுத்த சாயிபாபா அனைவரையும் கேலி செய்ய வேண்டும். அவ்வளவு ஏன் ஜெயமோகனது குரு நித்ய சைதன்ய யதியையும் கூட கேலி செய்ய வேண்டும்.

அந்த யதி கூட கேரளாவிலிருந்து துறவறம் பூண்டு ஊர் ஊராக அலைந்த போது கூட பின்னொரு நாளில் தனது கல்லூரி சான்றிதழ்கள் தேவைப்படலாம் என்று பத்திரமாக பூட்டி வைத்தே சென்றிருக்கிறார். துறவறம் என்றதும் அவசரப்பட்டு எரித்துவிடவில்லை. பிறகு சென்னை வந்து ஆங்கில அறிவைக் காண்பித்து, ஊரிலிருந்து சான்றிதழ்களை வரவழைத்து பேராசிரியர் ஆகி, அமெரிக்கா வரை வகுப்பு எடுக்க சென்றிருக்கிறார் என்றால் பார்த்து கொள்ளுங்கள். ஆகவே யதி மட்டும் டிகிரி பாதுகாப்பை வைத்துக் கொண்டு சாமியார் ஆகும் போது சிம்பானந்தா சினிமாவை வைத்துக் கொண்டு ஆன்மிகம் பேசுவதில் என்ன தவறு?

தனது குழந்தை குட்டிகளோடு ஒரு தனித்தீவில் வாழும் அளவுக்கு காசு இருந்தும், ரீல் லைஃபில் மக்களை எப்படி சந்தோஷப்படுத்துகிறாரோ, அதை ரியல் லைஃபில் செய்வதுதான் அடுத்த 30 வருட கனவு என்கிறார் சிம்பு. இந்த பெரிய மனது எத்தனை பேருக்கு வரும்? இதனால் அரசியலுக்கு அவர் அடி போடுகிறாரோ என்ற கேள்விக்கு தனக்கு அரசியல் பற்றி தெரியாது, புரியாது என்று சுயமோகன் போல பணிவுடன் கூறுகிறார்.

சினிமாவை மீறி மக்களுக்கு என்ன பண்ணலாம் என்று அவர் யோசிப்பதை கொச்சைப்படுத்த கூடாது என்பது சிம்பானந்தாவின் வேண்டுகோள். அதனால்தான் “உங்க எல்லோருக்குள்ளும் ஒரு லீடர், குரு இருக்கார். அவர் சொல்றதைக் கேளு! உனக்கெதுக்கு சிம்பு? ரசிகர்கள் என்னை பின்பற்ற வேண்டாம், சொல்லிட்டேன்” என்கிறார். ஜே.கிருஷ்ணமூர்த்தியை நினைவுபடுத்தும் இந்த மேதமைத்தனம் இத்தனை சிறிய வயதிலா என்று (ஆச்சரிய)படுத்துகிறார்.

சிம்புவின் படங்களை பார்த்து ரசிகர்கள் ஜன்ம விமோச்சனம் அடைந்தாலும், அவரென்னவோ சிவாஜி படத்தில் ரஜினி ஒரு ரூபாய் காசோடு டீக்கடையில் இருப்பாரே அப்படியொரு மனநிலையில்தான் இருக்கிறாராம். அதனால்தான் சமூக பிரச்சினைகளை பற்றி அற ஆவேசத்துடன் கேட்கிறார்.

மதம், நாடு, இனம் புரிந்தவர்கள் மனிதனை புரியாமல் போனதேன்? ஒரே நாடுன்னாலும் தண்ணி கொடுக்காமல் போவது ஏன்? நடு ரோட்டில் குழந்தைகளை வெட்டி, பாம் போடுகிறான், மனிதர் மீதான அன்பு எங்கே போனது? என்று அந்த கேள்விகள் குங்குமம் இதழில் ஹன்சிகாவின் குறுஞ்சிரிப்பு படத்திற்கு கீழே அணுகுண்டாய் வெடிக்க காத்திருக்கின்றன.

ரஜினி இமயமலையில்
பிறப்பும் இறப்பும் கடந்த முக்கால பாபா சாமியாரை பார்த்து வியந்ததும் பிறகு அதையே பாபா படமாக்கி – அது நட்டமானாலும் – சிறப்பு செய்தது ஊரறிந்த கதை.

வாழ்வில் கிடைத்தது திகட்டினால்தான் இப்படி ஊருக்கு உபதேசம் செய்வார்கள் என்று பொதுப்புத்தியில் இருந்து நா.கதிர்வேலன் கேட்கும் போது அதிரடியாக பதில் வருகிறது: “நான் பழைய சிம்பு இல்ல. சினிமாவில் நடிச்சாலும் ரேசில் இல்லை. ஏன்னா……நான் ஆன்மிகத்தில்இருக்கேன்”. போட்டி மனப்பான்மையை துறக்காமலேயே இந்த சிந்தனையை எதிர்பார்த்து, அது வந்தால்தான் முதலாளித்துவம் சுபிட்சமாகும் என்று கே.ஆர்.அதியமான் கரடியாக கத்துகிறாரே அவர் முதலில் சிம்பானந்தாவிடம் சீடனாக சேர்ந்து இந்த சூட்சுமத்தை கற்க வேண்டும்.

இப்படி ஓவராக ஆன்மிகம் பேசும் சிம்பானந்தாவை திருத்த வேண்டும் என்ற கொலைவெறியோடு அடுத்த கேள்வி “திருமணம் செய்தால் சரியாகி விடுமா” என்று வருகிறது. கடவுள் இப்படி ஆன்மிக ஞானத்தை கொடுத்த பிறகே வந்த துணையையும் வேண்டாமென்று சொன்னதாக புன்னகைக்கிறார் சிம்பானந்தா.

மகாபலிபுரம் பங்களா காக்டெயில் பார்ட்டிகளுக்கு புதுப்புது ஜோடிகளோடு சென்று வந்த சிம்பு திடீரென்று இமயமலை போனது ஏன்?

அந்த பயணம்தான் அவரை சிம்பானந்தாவாக மாற்றியிருக்கிறது. தான் யார் என்ற தேடல், எல்லாமும் இருந்து எதுவுமில்லாததான தனிமை, மத அறிவு அனைத்தும் இமயம் அருளிய ஞானம். இமய மலையெங்கும் துளி அடையாளம் கூட இல்லாமல் திரிந்தவர்தான், பிறகு வெறும் சிம்புவில் ஆனந்தம் இல்லை என்று தெளிந்திருக்கிறார்.

தமிழகத்தில் இருந்து இமயம் சென்றவர்களில் மூன்று பேர் முக்கியமானவர்கள். ஒருவர் ரஜினி, இரண்டாமவர் ஜெயமோகன் எனப்படும் சுயமோகன், மூன்றாமவர் சிம்பு எனப்படும் சிம்பானந்தா.

புகழின் உச்சியில் இருக்கும் போது சிம்புவுக்கு நேர்ந்த அலுப்பு ஏற்பட்டு ரஜினி இமயம் சென்று ரிஸ்க் எடுத்து பயணம் செய்த கதைகளும், காட்சிகளும் ஊடகங்களில் விரிவாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. முக்கியமாக அவர் பிறப்பும் இறப்பும் கடந்த முக்கால பாபா சாமியாரை பார்த்து வியந்ததும் பிறகு அதையே பாபா படமாக்கி – அது நட்டமானாலும் – சிறப்பு செய்ததும் ஊரறிந்த கதை.

சுயமோகனைப் பொறுத்த வரை பத்து வருடம் மகாபாரதம் எழுதுவதாக அறிவித்த போது ஆதரித்த மொக்கைகள் பிறகு அவரை கேட்பாரின்றி கைவிட்டு விட்டன. ஊடகங்களில் மகாபாரதத்தை தினமும் 50,000 பேர் படிப்பதாக பிரச்சாரம் செய்தும் ஃபேஸ்புக்கில் ஐந்து பேர் கூட பகிரும் நிலை இல்லை. இந்நிலையில்தான் அவர் ரிஸ்க்கெடுத்து ஜம்முவுக்கு புல்வெளி பயணம் போனார், சமீபத்தில்.

ஜெயமோகன் ஜம்மு
இந்தியாவிலேயே இப்படி புல்வெளிப் பயணம் எனும் மாபெரும் ரிஸ்க் எடுத்து ஜம்முவிற்கு சென்ற முதல் எழுத்தாளர் சுயமோகன்தான்

காஷ்மீரில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டும், காணாமற் போயும், இலட்சக்கணக்கான மக்கள் அடக்குமுறையில் வாழ்ந்தாலும், அவர்களுக்கு அது விதிக்கப்பட்டது. அதை ஒரு புல்வெளிப் பயணத்தோடு சென்று கண்டறிவது மிகப்பெரும் சவால். ஜம்முவில் ஒப்பீட்டளவில் பிரச்சினைகள் இல்லை என்றாலும் ஜம்முவின் எல்லையில் இருக்கும் காஷ்மீரப் பகுதிக்குள் வேலை நிறுத்தம் நடந்த நாளில் எந்த காயமோ, குண்டுவெடிப்போ இல்லாமல் சென்று மீண்ட சுயமோகனுக்காக இங்கே அவரது அடிப்பொடி அன்பர்கள் மாவிளக்கு யாகமெல்லாம் நடத்தியிருக்கின்றனர்.

இந்தியாவிலேயே இப்படி புல்வெளிப் பயணம் எனும் மாபெரும் ரிஸ்க் எடுத்து ஜம்முவிற்கு சென்ற முதல் எழுத்தாளர் சுயமோகன்தான் என்று விஷ்ணுபுரம் வரலாற்று நிறுவனம் இணையத்தில் பதிவு செய்திருக்கிறது. அவர் மீண்டு வந்தது காஷ்மீர் மக்களின் கருணையா இல்லை மாவிளக்கின் பவரா என்று விவாதிக்காமல் இந்த வீரத்தை போற்றும் அதே நேரத்தில்…………………………..?

ரஜினியின் இமயப் பயணத்தை வணிக ஊடகங்கள் பதிவு செய்தன. சுயமோகனது பயணத்தை ஜெயமோகன்.இன் தளமும், விஷ்ணுபுரம் வட்டமும் பதிவு செய்திருக்கின்றன.

ஆனால் நடிகர் சிம்பு, ஞானி சிம்பானந்தாவாக மீண்ட அந்த இமயப்பயணத்தை மட்டும் இதுவரை யாரும் பதிவு செய்யவில்லை. இங்கேதான் சிம்பானந்தா ஜம்மென்று நிற்கிறார். அவருக்கு நிகர் எவருமில்லை.

  1. சிம்புவுக்கு இப்போதைய தேவை:
    சேலம் பரம்பரை(அனேக தங்க மெடல்கள் பரிசு பெற்ற)
    “சிட்டுக்குருவி” லேகியம்…அப்புறம் பாருங்களேன்…

  2. ஏன் அதியமான் என்னும் கைப்புள்ளையை அடித்து அடித்து பெரிய ஆளாக்குகின்றீர்கள் ?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க