privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காபயனர்களை ஆட்டுவிக்கும் பேஸ்புக் அல்காரிதம்

பயனர்களை ஆட்டுவிக்கும் பேஸ்புக் அல்காரிதம்

-

பேஸ்புக்கில் நீங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக போடும் நிலைத்ததகவல்கள் அனைத்துமே உங்கள் நட்பு வட்டத்திலிருக்கும் அனைவரின் முகப்பக்கத்திலும் காட்டப்படுகிறதா என்பதையும் உங்கள் நண்பர்கள் அனைவருடைய நிலைத்ததகவல்கள் அனைத்துமே உங்கள் முகப்பக்கத்தில் காட்டுகிறதா என்பதையும் சோதித்து பார்த்திருக்கிறீர்களா?

லைக்வயர்ட் (Wired) இணையதளத்தை சேர்ந்த மேட் ஹோனன் (Mat Honan) என்ற பத்திரிக்கையாளர் சோதனை முயற்சியாக இரண்டு நாட்களுக்கு பேஸ்புக்கில் பிடித்தது, பிடிக்காதது என தான் பார்க்கும் அனைத்தைக்குமே லைக் என்ற விருப்பத்தை தெரிவிப்பது என முடிவெடுத்து செயல்படுத்தியுள்ளார்.

நண்பர்களின் நிலைத்தகவலில் இருந்து செய்தி ஓடையில் வரும் தகவல்கள் மற்றும் விளம்பரங்கள் வரை அனைத்திற்கும் அவர் விருப்பம் (Like) தெரிவித்துள்ளார். சோதனையின் ஒரு நாள் முடிவிலேயே அவரது பேஸ்புக் பக்கம் அவருடைய நண்பர்களின் நிலைதகவல்கள் எதையுமே காட்டவில்லை, பக்கம் முழுவதுமே விளம்பரதாரர் மற்றும் செய்தி நிறுவனங்களின் தகவல்களால் நிரம்பி வழிந்துள்ளது. இது மட்டுமல்ல இச்சோதனையின் மோசமான விளைவு மறுநாள் தெரியவந்தது. அவரது பக்கம் மட்டுமின்றி நண்பர்களின் பக்கத்திலும் கூட இவர் விருப்பம் தெரிவித்த விளம்பர மற்றும் செய்தி நிறுவனங்கள் பற்றிய தகவல்கள் ஆக்கிரமித்திருக்கின்றன. அவர்கள் “என்ன நடந்து விட்டது” என்று அவரை தொடர்பு கொண்டு விசாரிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

அதாவது நட்பு வட்டத்திலிருப்பவர்களுடன் பகிர்ந்து கொள்ள நீங்கள் பதியும் எல்லா நிலைத்தகவல்களும் உங்கள் நண்பர்களுடைய பக்கத்தில் காண்பிக்கப்படுவதில்லை என்பதையும் நட்பு வட்டத்திலிருப்பவர்கள் பகிர்ந்து கொள்ளும் நிலைத்தகவல்கள் அனைத்தும் உங்கள் பக்கத்தில் காட்டப்படுவதில்லை என்பதையும் ஒரு அதிதீவிர – லைக் போடும் சோதனையின் மூலம் நிரூபித்துள்ளார் மேட் ஹானன்.

பேஸ்புக் உங்கள் முகப்பக்கத்தில் எதை காட்ட வேண்டும் என்பதை தீர்மானிக்க மென்பொருள் படிமுறையை (Algorithm) பயன்படுத்துகிறது. 2014 முதல் பேஸ்புக் செய்தி ஓடை என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியது. பேஸ்புக்கில் ஒருவர் விருப்பம் தெரிவிக்கும் தகவல்கள் மற்றும் இணையத்தில் பார்க்கும் பக்கங்களின் அடிப்படையில் அவருடைய விருப்பத்தை கணக்கிடுவதன் அடிப்படையில் பிற விளம்பரதாரர் மற்றும் செய்தி நிறுவனங்களின் தகவல்கள் அச்செய்தி ஓடையில் காட்டப்படுகின்றன.

பேஸ்புக்கின் அல்காரிதம் ஒருவர் விருப்பம் தெரிவிக்கும் தனிநபர் நிலைத்தகவல்கள் மற்றும் இணையத்தில் பார்க்கும் பக்கங்களின் அடிப்படையில் அவருடைய ஆர்வத்தை அறிந்து அது சார்ந்த தகவல்களை, செய்திகளை, விளம்பரங்களை காட்டுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. நண்பர்களின் நிலைத்தகவல்களுக்கு மட்டும் நீங்கள் விருப்பம் தெரிவித்தாலும் கூட அவற்றில் உள்ள குறிச்சொற்களை கொண்டு அவை சார்ந்தவை செய்தி ஓடையில் காட்டப்படும்.

உதாரணமாக, ஏதோ ஒரு நண்பரின் மொக்கை நிலைத்தகவல்களுக்கு நீங்கள் தொடர்ச்சியாக விருப்பம் தெரிவித்து வருகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். கொஞ்சம் சீரியசாக பதிவிடும் நண்பரின் நிலைத்தகவல்களை நீங்கள் தொடர்ந்து கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால், அவர் தனது மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்ளும் தகவல்கள் உட்பட பதிவிடும் எந்த நிலைத்தகவலையும் உங்கள் பக்கத்தில் பேஸ்புக் காட்டாது.

மேலும், நாம் போடும் எல்லா நிலைத்தகவலும் நண்பர்களுக்கு காட்டப்படுகிறதா என்பதையும் நண்பர்களுடைய எல்லா நிலைத்தகவலும் நமக்கு காட்டப்படுகிறதா என்பதையும் அறிந்து கொள்ள எந்த வசதியும் பேஸ்புக்கில் இல்லை.

நேரடியாக நண்பர்களுடைய பக்கத்திற்கு போய் பார்ப்பதன் மூலம் அவரது நிலைத்தகவல்களை நேரிடையாக அங்கு பார்க்க முடியும் என்றும் சிலர் வாதிடலாம். நாள் முழுவதும் நம் நட்பு வட்டத்தில் இருக்கும் அனைவரின் முகப்பக்கத்திற்கும் நேரிடையாக சென்று பார்ப்பதை செயல்படுத்த முடியுமா? அதற்கு வேறு வேலையின்றி முகநூல் மட்டுமே பார்த்துக்கொண்டிருக்க வேண்டி வரும்.

மேற்சொன்ன அல்காரிதத்தை பேஸ்புக் பயன்படுத்த வேண்டிய தேவையையும், அமெரிக்காவின் FTC போன்ற நெறிப்படுத்தும் அமைப்புகள் அதை கண்டுகொள்ளாமல் விடுவதன் காரணத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பேஸ்புக் பரீசீலனையில்நீங்கள் உங்கள் உணர்ச்சிகளை, கருத்துக்களை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வதன் மூலமா பேஸ்புக் வணிகரீதியில் லாபங்களை ஈட்டி வருகிறது. பயனரின் பக்கத்தில் காட்டும் விளம்பரங்களும், பயனர் பற்றிய தகவல்களை விளம்பர நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்வதாலும் தான் பேஸ்புக் வணிகரீதியில் வெற்றிகரமாக தொடர்கிறது. சுமார் 132 கோடிக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தும் பேஸ்புக்கின் மொத்த சந்தை மதிப்பு சுமார் ரூ. 12 லட்சம் கோடிக்கும் மேல். ஏற்கனவே பேஸ்புக் தனது பயனர்களின் உணர்ச்சிகளை (லைக்குகளை) வணிக நிறுவனங்களுக்கு விற்பது பற்றிய பதிவை வினவில் வெளியிட்டிருந்தோம்.

மேலும், பேஸ்புக் உள்ளிட்ட பல இணைய சேவை நிறுவனங்கள் தங்களது பயனர்களின் தகவல்களை அமெரிக்க உளவு நிறுவனமான தேசிய பாதுகாப்பு அமைப்பிடம் பகிர்ந்து கொள்வது எட்வர்டு ஸ்னோடன் வெளியிட்ட தரவுகளில் அம்பலமாகியிருக்கிறது.

எனவே உலகளாவிய தமது கண்காணிப்புக்கு உதவுவதாகவும், விளம்பர மற்றும் பங்குச் சந்தையில் பெரும் சக்தியாகவும் விளங்கும் பேஸ்புக்குக்கு எதிராக ஏதேனும் செய்துவிடுவார்களா என்ன?

அதையும் மீறி நெறிப்படுத்தும் விதிமுறைகளை விதித்து பேஸ்புக்கை சீர்செய்தால், பேஸ்புக் நீங்கள் விரும்பும் பேஸ்புக்காக இருக்காது. பேஸ்புக்கின் தற்போதைய பரபரப்பு, கிளர்ச்சி (Sensation), அவற்றுக்கான லைக்குகள் இதில் பழக்கப்பட்டுவிட்டவர்களுக்கு வரிசைகிரமமாக வரும் நண்பர்களின் நிலைத்தகவல்கள் அலுப்பை ஏற்படுத்தும்.

புரியும்படி சொன்னால், சிறுவர்களுக்கு விற்கப்படும் ஐஸ்கிரீமில் சிறிது போதைபொருளை கலந்து விற்கப்படுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். சிலகாலத்திற்கு பின் போதையில்லா சுத்தமான ஐஸ்கிரீம் சிறுவர்களுக்கு பிடிக்காது, ஐஸ்கிரீம் இல்லாமல் இருக்கவும் முடியாது. ஏற்கனவே பேஸ்புக்கில் லைக் என்ற விருப்பத்தை பெறுவதே ஒரு ஈகோ-போதையாக நம்மில் பலரை அடிமைப்படுத்தியுள்ளது.

எனவே, பேஸ்புக்கை எதற்காக பயன்படுத்துகிறோம் என்று நாம் நினைப்பதற்கும் நடைமுறையில் பேஸ்புக் யாருக்கு பயன்படுகிறது என்பதற்கும் பாரிய இடைவெளி உள்ளது.

இன்றைய ’நாகரீக’ உலகில் நாம் மேலும் மேலும் தனித் தனித்தீவுகளாக பிரிந்து உணர்ச்சிகளையும், கருத்துக்களையும் சமூகத்திடம் பகிர்ந்து கொள்ளுவதற்கான வாய்ப்பை வெகுவாக இழந்து வருகிறோம். மெய் உலகில் சமூக உறவுகளை பேண இயலாதவர்களுக்கு மெய்நிகர் உலகு பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களின் மூலம் அந்த வாய்ப்பை வழங்குவதாக நாம் நினைக்கிறோம்.

பேஸ்புக் தனிதகவல் பாதுகாப்பு
பேஸ்புக்கின் பாதுகாப்பு அமைப்புகளை முழுமையாக பயன்படுத்தாததால் அல்லது புரிந்து கொள்ளாததால் இன்று வரை அத்துமீறல்கள் தொடர்ந்து கொண்டு தானிருக்கின்றன

பேஸ்புக்கில் ஒருவர் தனது குழந்தைப் பருவம் முதலான பழைய, புதிய நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள், உறவினர்கள் என தனக்கு பிடித்த, பிடிக்காத, ஒத்த கருத்துள்ள, எதிர் கருத்துள்ள அனைவரையும் தனது நட்பு வட்டத்தில் வைத்துக் கொண்டு உணர்ச்சிகளையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள முடியும் என்ற வகையில் பலர் பேஸ்புக்கை பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால், பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளப்படும் தனிநபரின் தகவல்கள், புகைப்படங்கள் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை விபரங்களை பகிரங்கப்படுத்துவதுடன், சமூக மற்றும் இணையக் குற்றங்கள் நடப்பதற்கு அடிப்படையாக அமைகின்றன. குறிப்பாக பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளப்படும் பெண்களின் படங்களை பாலியல் ரீதியில் தவறாக சித்தரித்து பதிவேற்றுவதில் ஆரம்பித்து கடும் மன உளைச்சலை கொடுக்கும் பல அத்துமீறல்கள் நடக்கின்றன.

பேஸ்புக் தனது பயனர்களின் அந்தரங்கத்தை பாதுகாப்பதற்கு, ஒவ்வொரு பயனரும் தான் பதிவிடும் ஒவ்வொரு நிலைத் தகவலையும் யார் யார் பார்க்கலாம் என்பதை மட்டுப்படுத்தும் வசதி, தங்களது தனிப்பட்ட விவரங்களையும் நிலைத்தகவல் ஓடைகளையும் (status feed) நட்பு வட்டத்தையும் முன்பின் அறியாதவர்கள் பார்க்க முடியாமல் மட்டுப்படுத்தும் வசதி, உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளை (Privacy Settings) கொண்டு வந்தது. ஆனால் பலரும் பேஸ்புக்கின் பாதுகாப்பு அமைப்புகளை முழுமையாக பயன்படுத்தாததால் அல்லது புரிந்து கொள்ளாததால் இன்று வரை அத்துமீறல்கள் தொடர்ந்து கொண்டு தானிருக்கின்றன. இந்த வகையான அத்துமீறல்களை மட்டுமே பெரும்பாலான பயனர்கள் பிரச்சனையாக கருதுகின்றனர்.

ஆனால், தனிநபர்கள் மட்டும் பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை முறைகேடாக பயன்படுத்தவில்லை. பேஸ்புக் நிறுவனமே தனது பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடி விற்றுள்ளது.

பயனர்களின் தனித் தகவல்கள் பகிர்ந்து கொள்வதை மட்டுப்படுத்தும் அமைப்பை (Privacy Settings) அவர்களை அறியாமலேயே மாற்றுவதிலிருந்து தனிநபர் தகவல்களை விளம்பர நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டது வரை பல மீறல்கள் நடந்ததை அடுத்து 2011-ம் ஆண்டு அமெரிக்காவின் மத்திய வர்த்தக ஆணையம் (FTC) தனிநபர் அந்தரங்கம் தொடர்பாக சில நெறிமுறைகளை நிர்ணயித்து அவற்றை பின்பற்றுமாறும் அவை பின்பற்றப்படுவதை கண்காணிக்க சுயாதீனமான அமைப்பு ஒன்றை ஏற்படுத்தவும் பேஸ்புக்கிற்கு உத்தரவிட்டது.

“என்ன செய்வது, திரும்பவும் புறா வழி தூது என்று மறுபடியும் கற்காலத்திற்கே சென்றுவிடலாமா” என்று அவர்கள் கேட்கலாம். இதற்கு பதிலளிக்கிறார் ஆஸ்திரியாவைச் சேர்ந்த சட்டக் கல்வி மாணவர் மேக்ஸ் செரிம்ஸ்.

பேஸ்புக்கின் நடைமுறைகள் ஐரோப்பிய தகவல் பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவதாக குற்றம் சுமத்தியுள்ள மேக்ஸ் செரிம்ஸ், பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை பேஸ்புக் வேவு பார்த்ததாகவும், அவற்றை அமெரிக்க உளவு அமைப்பான என்.எஸ்.ஏ-வுக்கு தருவதாகவும், பயனர்களின் அந்தரங்க தகவல்களை வேவு பார்த்ததற்காக அந்நிறுவனம் பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு தலா ரூ 40 ஆயிரம் நஷ்ட ஈடு தரவேண்டும் என்றும் வியன்னா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

இந்த வழக்கில் பேஸ்புக்கால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களை இணைத்துக் கொள்ளவும், வழக்கிற்கு ஆதரவளிக்கவும் அவர் அழைப்பு விடுத்ததையடுத்து அவருக்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேஸ்புக் பயனர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேக்ஸ்சுக்கு பெருமளவில் ஆதரவு பெருகியிருப்பதால் இது தொடர்பாக பதில் அளிக்குமாறு பேஸ்புக் நிறுவனத்துக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இவ்வழக்கு பற்றி கருத்து கூறிய மேக்ஸ் “நாம் அனைவரும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தவே விரும்புகிறோம். ஆனால் அந்தரங்கம் பற்றிய கவலையும், அச்சமும் இன்றி பயன்படுத்த விரும்புகிறோம். இப்போது நம் முன்னால் இரண்டு தேர்வுகள் உள்ளன, கற்காலத்திற்கு திரும்பி செல்வது அல்லது எதிர்த்து போராடும் நடவடிக்கையில் இறங்குவது. நாங்கள் இரண்டாவதை தேர்ந்தெடுத்திருக்கிறோம்” என்கிறார்.

முன்னதாக 2011-ம் ஆண்டு முதல் 22 விதிமுறை மீறல் புகார்கள் அயர்லாந்தின் தகவல் பாதுகாப்பு ஆணையரிடம் (ODPC) மேக்ஸ் செரிம்சும் அவரது நண்பர்களும் பதிவு செய்திருந்தனர். சென்ற 2013-ம் ஆண்டு பயனர்களின் தகவல்களை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் பிரிசம் (PRISM) திட்டத்திற்கு அளித்த விவகாரத்தை விசாரிக்க வேண்டும் என மேலும் ஒரு புகார் பதிவு செய்யப்பட்டது. ப்ரிசம் (PRISM) திட்டத்திற்கு தகவல்களை அளித்த புகாரை நிராகரித்த தகவல் பாதுகாப்பு ஆணையம் மற்ற 22 புகார்களை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

தற்போது அயர்லாந்தின் தகவல் பாதுகாப்பு ஆணையம் முழுமையாக அயர்லாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தகவல் பாதுகாப்பு சட்டத்தை செயல்படுத்தும் என்பதை எதிர்பார்க்க முடியாது என்று மேக்ஸ் செரிம்ஸ் குழுவினரின் இணையதளங்களுள் ஒன்றான  europe-v-facebook.org தெரிவிக்கிறது. அதனால் தான் இம்முறை தங்களது போராட்டத்தை நீதிமன்றத்தில் மட்டுமின்றி மக்களிடமும் கொண்டு சென்றிருக்கின்றனர்.

முதலாளித்துவ அமைப்பை தக்கவைத்துக்கொள்ள ஏற்படுத்தப்பட்ட சட்டங்களும், அமைப்புகளும், அதன் ஆன்மாவான லாபத்திற்கு எதிராகவும், உலகளாவிய கலாச்சார தாக்குதலுக்கும் எதிராக ஒரு துரும்பையும் அசைத்து விடாது. அதனால் தான் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மட்டுமின்றி நமது நாட்டின் தகவல் தொடர்பு அமைச்சகம் போன்ற நெறிப்படுத்தும் அமைப்புகள் பேஸ்புக் தனது பயனர்களின் அந்தரங்கத்தை மீறுவதை கண்டும் காணாமல் விட்டுவிடுகின்றன. மேக்ஸ் செரிம்ஸ் குழுவினரும் கூட விரைவிலேயே சட்ட வழிமுறிகளில் இதற்கு தீர்வு இல்லை என்பதை புரிந்து கொள்ளக்கூடும்.

இதற்கான தீர்வு பேஸ்புக்கின் மெய்நிகர் உலகிற்கு வெளியே மெய் உலகில் சமூகத்திடம் உணர்வுகளை பகிர்ந்து கொள்வதிலும், முதலாளித்துவ லாபவெறியின் அல்காரிதம் நம்மை அடிமைப்படுத்துவதற்கு எதிராக போராடுவதிலும் தான் உள்ளது.

– மார்ட்டின்