privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்தொழிலாளர் நலச்சட்டங்களைத் திருத்தாதே! பிரச்சார இயக்கம்

தொழிலாளர் நலச்சட்டங்களைத் திருத்தாதே! பிரச்சார இயக்கம்

-

ஏகாதிபத்திய நிதி மூலதன ஆதிக்க கும்பலுக்கு அடிபணியாதே!
தொழிலாளர் நலச்சட்டங்களைத் திருத்தாதே!

பிரச்சார இயக்கம்

ன்பார்ந்த தொழிலாளர்களே!

nalachattam-bannerஇந்தியாவில் தொழில் வளர்ச்சி ராக்கெட் வேகத்தில் பாய்கிறது என்றும், அதை தொழிலாளர் நலச்சட்டங்கள் தான் கெடுக்கின்றன என்றும் அச்சட்டங்களைத் திருத்தத் துவங்கியுள்ளது, மோடி அரசு! முதல் கட்டமாக, தொழிற்சாலைகள் சட்டம், அப்ரண்டீஸ் சட்டம், ஆலைகள் சம்பந்தப்பட்ட அறிக்கைகள் தருதல் மற்றும் பதிவேடுகள் பராமரித்தல் குறித்த சட்டம் ஆகியவற்றில் திருத்தங்கள் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு சட்டத் திருத்தத்துக்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றால், அதன் நகல்களை குறைந்தபட்சம் இரண்டு நாட்களுக்கு முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தர வேண்டும் என்பது விதியாக உள்ளது. அந்த விதிகளை மயிராக மதித்து அவசர, அவசரமாக மேற்படி சட்டத் திருத்த மசோதாக்களைத் தாக்கல் செய்துள்ளது மோடி அரசு. இதுதான் மோடி அரசின் ஜனநாயகம்!

  • ஒவ்வொரு சிப்டிலும் ஆட்களை குறைத்துவிட்டு, எஞ்சி இருக்கின்ற தொழிலாளியை கூடுதல் நேரம் வேலை செய்ய வைப்பதை ஓவர்டைம் என்கின்றனர், முதலாளிகள். இப்படி ஓவர்டைம் செய்வது தொழிலாளியின் உடல்நலத்துக்கு கேடு என்பதால், காலாண்டுக்கு 50 மணி நேரம் மட்டுமே ஓவர்டைம் செய்ய வேண்டும் என்று தொழிற்சாலைகள் சட்டத்தில் வரம்பு இருந்தது. இந்த வரம்பினை 100 மணிநேரமாக உயர்த்தி, சட்டத்திருத்தம் செய்யப்போகிறது, மோடி அரசு. இந்த சட்டத்திருத்தம் செய்யப்படுமானால், 8 மணிநேர வேலை என்பதையே 10, 12 மணி நேரமாக மாற்றி விடுவார்கள். அதற்கு மேல் 2, 3 மணிநேரம் ஓவர்டைம் செய்யவைத்து விடுவார்கள், முதலாளிகள். மொத்தத்தில், நாளொன்றுக்கு 12 – 15 மணிநேரம் வேலை செய்வது கட்டாயமாகி விடும். கட்டாய உழைப்பினால் முதலாளியின் உற்பத்தியும், லாபமும் பன்மடங்கு பெருகிவிடும். தொழிலாளிக்கு என்ன ஆகும்? 30 வயதில் மூட்டு தேய்ந்து, 40 வயதில் நாடி தளர்ந்து, 50 வயதில் சாக வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம். முதலாளியின் லாபவேட்டைக்கு தொழிலாளியை நரபலி கொடுப்பதுதான் மோடியின் இந்த தொழிலாளர் நலச்சட்ட திருத்தம்.
  • சில தொழிற்சாலைகளில், சில வேலைப் பிரிவுகளில் பெண் தொழிலாளர்கள் இரவு சிப்டில் (இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை) வேலை செய்வதற்கு தடை இருந்தது. இரவு 7 மணி முதல் 10 மணி வரை வேலை செய்தால், வீட்டுக்கு வாகன ஏற்பாடு செய்ய வேண்டும் போன்ற நிபந்தனைகளும் இருந்தன. இவை எல்லாம் பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு தந்தன. புதிய சட்டத் திருத்தம் செய்யப்பட்டால், இந்த பாதுகாப்புகள் பறிக்கப்படும். பெண் தொழிலாளர்கள் ஆண்களை விட குறைவான சம்பளத்தில், எந்தக் கேள்வியும் கேட்காமல் வேலை செய்வார்கள்; சங்கம் அமைக்கவோ, உரிமைகளைக் கேட்கவோ முடியாது; பணிய வைப்பது சுலபம். இந்த காரணங்களுக்காகவே, அவர்களை இரவு சிப்டில் வேலை செய்ய நிர்பந்தம் தருகின்றனர். இந்த சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால், ஆண் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும், பெண் தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆனால், பெண் தொழிலாளர்களோ வேலைச்சுமை, குறைந்த சம்பளம், பாலியல் வன்கொடுமை, குடும்ப நெருக்கடி போன்ற கொடுமைகளுக்கு ஆளாக நேரிடும்.
  • தொழில்பழகுநர் (அப்ரண்டீஸ்) சட்டத்தைத் தளர்த்துவது என்பது மற்றொரு திட்டமாகும். தொழில்நுட்பத் தகுதி உள்ளவர் மட்டுமே அப்ரண்டீஸ் பயில முடியும் என்கிற இப்போதைய நிபந்தனை நீக்கப்பட்டு, படித்தவர், படிக்காதவர் யார் வேண்டுமானாலும் அப்ரண்டீஸ் ஆகலாம் என்கிற வகையில் கதவு திறக்கப்படும். இந்த சட்டத்திருத்தம் அமுலுக்கு வருமானால், 10 – 20 நிரந்தரத் தொழிலாளர்களை வைத்துக் கொண்டு, எஞ்சிய தொழிலாளர்களை அப்ரண்டீஸ் என்று கணக்கு காட்டிவிடுவார்கள். மலிவான கூலிக்கு தொழிலாளர்களைச் சுரண்டுவதும், நிரந்தரம் செய்யாமலேயே பல ஆண்டுகளுக்கு ஒட்ட ஒட்ட உறிஞ்சுவதும் தான் நடக்கும். இப்போது சட்டவிரோதமான முறையில் இலட்சக் கணக்கான தொழிலாளர்கள் டிரெய்னி, அப்ரண்டீஸ் என்கிற பெயரில் பல ஆண்டுகளுக்கு சுரண்டப்பட்டு, வேலைநிரந்தரம் இல்லாமலேயே துரத்தப் படுகின்றனர். இந்நிலையில், மேற்படி சட்டத்திருத்தமானது, மேலும் பல இலட்சம் பேரை முதலாளிகள் சுரண்டுவதற்கு சட்ட அங்கீகாரத்தை தந்துவிடும். வேலைநிரந்தரம் என்பதையே குதிரைக் கொம்பாக்கிவிடும்.
  • இந்திய நாட்டில் தொழிலாளி வர்க்கத்தின் நலன் காக்க 44 சட்டங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு சட்டமும் தொழிலாளி வர்க்கத்தின் தீரமிக்கப் போராட்டத்தின் பலனாகப் போடப்பட்டவைதான். ஆனால், ஒரு சட்டமாவது தொழிலாளி வர்க்கத்தைப் பாதுகாத்திருக்கிறதா? இல்லை. 7 பேர் சேர்ந்தால் சங்கம் ஆரம்பிக்கலாம் என்கிற உரிமையை 88 ஆண்டுகளுக்கு முன்பே காலனியாதிக்க காலத்திலேயே நிலைநாட்டி இருக்கிறோம். ஆனால், 700 பேர் சேர்ந்தால் கூட சங்கம் ஆரம்பிக்க முடியவில்லையே, இதைக் கண்டு சந்தோசப்பட முடியுமா? முதலாளிகளது தொழிலாளர் விரோதப் போக்கிற்கு எதிராக கிரிமினல் வழக்கினை தொடுப்பதற்கு கூட சட்டத்தில் வழியைக் கண்டோம். இந்த சட்டத்தால் ஒரு முதலாளியாவது தண்டிக்கப்பட்டிருக் கிறானா? புகார் கொடுத்த தொழிலாளிக்கு வேலை பறிபோன கொடுமையைத்தான் கண்டிருக் கிறோம். 480 நாட்கள் தொடர்ந்து வேலை செய்தால் வேலைநிரந்தரம் என்று கூட சட்டப் பாதுகாப்பை பெற்றோம். எல்லா வேலைகளும் காண்ட்ராக்ட் மயமாகி, வேலை நிரந்தரம் என்பதே கேலிக்கூத்தாகிவிட்டது.

தொழிலாளர் நலச்சட்டங்கள் வெறும் காகிதத்தில் இருப்பதைக் கூட முதலாளிகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இதனால்தான், அதை எல்லாம் “திருத்து” என்கிறான். “காலாவதியாக்கிவிடு” என்கிறான்.

தொழிலாளர் நலச் சட்டங்களை கழிப்பறைக் காகிதமாக்கிய கனவான்களில் முதலிடம் பிடிப்பது, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள்தான். வேலையைப் பறிகொடுத்த தொழிலாளியிடம் செட்டில்மெண்ட் பேரம் பேசுவது, தொழிற்சங்கப் பதிவுக்கு விண்ணப்பம் கொடுத்த மறுநிமிடமே முதலாளிக்குத் தகவல் தந்து தொழிலாளியைக் காட்டிக் கொடுப்பது, முதலாளிக்கு புரோக்கராக இருந்து சங்கத்தைக் கலைக்குமாறு ‘அதட்டல் அறிவுரை’ தருவது, சட்டப்படியான போராட்டங்களைக் கூட சட்டவிரோதம் என்று அறிவித்து முதலாளிகளுக்கு எடுப்பு வேலை செய்யும் அலுவலகமாக மாறிவிட்டது, தொழிலாளர் துறை. இங்குள்ள அதிகாரிகள் பணி ஓய்வு பெற்ற மறுதினமே முதலாளிகளது சட்ட ஆலோசகர்களாகி விடுகின்றனர். முதலாளிகளின் கைக்கூலியான மனிதவள (எச்.ஆர்.) அதிகாரிகளை விட, ஓய்வு பெற்ற தொழிலாளர் துறை அதிகாரிகள் சிறந்த கைக்கூலிகளாக இருப்பதாக முதலாளிகள் பாராட்டுகின்றனர். ஒரு கையில் அரசாங்க பென்சன்! மறு கையில் தொழிலாளர்களது கழுத்தை அறுத்ததற்கு முதலாளிகள் கொடுக்கின்ற கமிசன்.

தொழிலாளர் நலச்சட்டங்களை செல்லாக் காசாக்கியதில் நீதித்துறையின் பங்கு அலாதியானது! தப்பித்தவறி ஏதாவது ஒரு வழக்கில் தொழிலாளிக்கு சாதகமாக தீர்ப்பு வந்து விட்டால், முதலாளிகள் அடுத்தடுத்த கோர்ட்டுகளுக்கு மேல்முறையீடு செய்து, தொழிலாளியின் ஆயுள் முழுவதையும் கோர்ட்டு வாசலிலேயே அழித்து விடுவதற்கேற்பதான் கோர்ட்டு நடைமுறையும் உள்ளது. இதற்கு உச்ச நீதிமன்றமே காண்டிராக்ட் என்கிற கொத்தடிமை முறையைப் பாதுகாத்து தரப்பட்ட தீர்ப்புகள், பணிநிரந்தர உரிமையை நிராகரித்து வழங்கப்பட்ட தீர்ப்புகள், சட்டவிரோத வேலைநீக்கத்தை அங்கீகரித்து தரப்பட்ட தீர்ப்புகள் ஏராளம்…ஏராளம். உலகமயமாக்கத்துக்கு ஏற்பத்தான் அரசியல் சட்டத்துக்கு நீதிமன்றம் விளக்கம் கூற முடியும் என்று தீர்ப்புகள் தொழிலாளர்களுக்கு எதிராக களமிறங்குகின்றன. போதாக்குறைக்கு, சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் தொழிலாளர் நலச்சட்டங்கள் செல்லுபடி ஆகாது என்று அரசே ஒப்பந்தம் போட்டிருக்கிறது.

nalachattam-poster

தொழிலாளர் நலச்சட்டங்கள் இருந்த சுவடு கூட தெரியாமல் அவற்றை அழித்துவிட சொல்கிறது முதலாளிவர்க்கம். எந்தச் சூழ்நிலையிலும் தொழிலாளி வர்க்கம் தன்னுடைய உரிமைகளை நினைத்துக் கூடப் பார்க்கக் கூடாது என்பதும் முதலாளிகளின் கட்டளையாக இருக்கிறது. ஏகாதிபத்திய நிதி மூலதன ஆதிக்கக் கும்பலின் அடியாளாக இருந்து அடுத்தடுத்த தாக்குதல்களைத் தொழிலாளி வர்க்கத்தின் மீது தொடுத்து முடக்குவதே அரசின் நோக்கமாக இருக்கிறது.

இனியும் விழித்துக் கொள்ளாவிட்டால் என்றைக்கும் நமக்கு விடிவு இல்லை என்பதை உணர்வோம். தொழிற்சங்கங்கள் என்கிற போர்வையில் தரகு வேலை செய்யும் துரோகிகளால் நமது துயரங்களைப் போக்கவோ, உரிமைகளைப் பாதுகாக்கவோ முடியாது. மூலதன கொடுமைக்கு முடிவு கட்டவோ, இவர்களின் அடியாளான அரசைத் தகர்த்தெறியவோ முடியாது. தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப்படையான புரட்சிகர தொழிற்சங்கங்களால் மட்டுமே இதனை சாதிக்க முடியும். போர்க்குணமிக்க போராட்டங்களைக் கட்டியமைத்து தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளைக் காப்போம்! அதற்கு மாற்று அதிகாரத்திற்கான கமிட்டிகளைக் கட்டியமைப்போம்!

மத்திய, மாநில அரசுகளே!

  • தொழிலாளர் நலச்சட்டங்களைத் திருத்துகின்ற முயற்சிகளைக் கைவிடு!
  • தொழிலாளர் நலச்சட்டங்களை மதிக்காத முதலாளிகளைக் கைது செய்! அவர்களது சொத்துக்களை நட்ட ஈடின்றி பறிமுதல் செய்!
  • தொழிலாளர் நலத்துறையை தொழிற்சங்கங்களது கண்காணிப்பில் கொண்டுவர சட்டம் இயற்று!
  • தொழிலாளர் விரோதப் போக்கின்கீழ் தரப்படும் புகார்களை 3 மாதத்தில் விசாரித்து, கிரிமினல் நடவடிக்கை எடு!
  • ஓய்வு பெற்ற தொழிலாளர் துறை அதிகாரிகள் முதலாளிகளது ஆலோசகர்களாக இருப்பதை தடை செய்! அவர்களது பென்சனை ரத்து செய்!

தொழிலாளர்களே!

  • தொழிலாளர்களது குரல்வளையை நெருக்கும் வகையில் தொழிலாளர் நலச்சட்டங்கள் திருத்தப்படுவதை முறியடிப்போம்!
  • 8 மணிநேர வேலைக்கு வேட்டு வைத்து, தினசரி 15 மணிநேரம் வேலை செய்வதை நிரந்தரமாக்கும் சட்டத்திருத்தங்களை தகர்த்தெறிவோம்!
  • அப்ரண்டீசுக்கான தகுதிகளை அப்புறப்படுத்தி, காண்டிராக்ட் முறையை  நிரந்தரமாக்கும் சட்டத்திருத்தங்களை அனுமதியோம்!
  • பெண்களை இரவுப்பணியில் அமர்த்தி, அதிக வேலைச் சுமை – குறைந்த கூலி கொடுத்து, வரம்பற்ற சுரண்டலுக்கு வழிவகுக்கும் சட்டத்திருத்தங்களை தடுத்து நிறுத்தப் போராடுவோம்!
  • வேலைநிரந்தரத்தை அடியோடு மறுத்து , சுரண்டலுக்கு அங்கீகாரம் தருகின்ற சட்டத்திருத்தங்களை எதிர்த்து முறியடிப்போம்!

செப்டம்பர் – 2014

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
கிருஷ்ணகிரி – தருமபுரி – சேலம் மாவட்டங்கள்
பதிவு எண் 24/KRI
தொடர்புக்கு – 97880 11784 ஒசூர்.

[நோட்டிசைப் பெரிதாகப் பார்க்க படங்களின் மீது சொடுக்கவும்]

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க