privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திபெண்ணை சித்திரவதை செய்த போலீஸ் பொறுக்கிகள்

பெண்ணை சித்திரவதை செய்த போலீஸ் பொறுக்கிகள்

-

ந்திய நாடு முழுவதும் 68-வது சுதந்திர தினத்தை கொண்டாட தயாராகிக் கொண்டிருந்த ஆகஸ்ட் 14-ம் தேதி, மதுரையைச் சேர்ந்த 49 வயதான சந்திராவுக்கு இந்திய மக்களுக்கு கிடைத்திருக்கும் சுதந்திரத்தின் உண்மை முகத்தை காட்டும் விதமாக விடிந்தது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டையில் அவர் வாடகைக்கு தங்கியிருந்த வீட்டு சொந்தக்காரர் மரணம் தொடர்பாக சில கேள்விகள் கேட்பதற்காக சொல்லி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படுகிறார், சந்திரா.

ராஜகுமாரி
சந்திராவின் சார்பாக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள அவரது மகள் ராஜகுமாரி (படம் : நன்றி deccanchronicle.com)

ஆனால், காவல் நிலையத்தில் அவர் ஒரு பெண் எதிர் கொள்ளக் கூடிய மிகக் கொடூரமான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவரது விரல் கணுக்களில் ஊசியால் குத்தியிருக்கின்றனர். அவரை நிர்வாணப்படுத்தி, தலைகீழாகத் தொங்க விட்டு 7 ஆண் போலீஸ் அதிகாரிகள் லத்தியால் அடித்திருக்கின்றனர்.

இப்போது நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சந்திராவை டெக்கான் குரோனிக்கிள் நாளிதழின் நிருபர், சந்திராவின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த வழக்கறிஞர் மஞ்சு மேனகா ராஜேஸ்வரியுடன்  சந்தித்திருக்கிறார்.

“மாதவிடாய் காரணமாக ரத்தம் கொட்டுகிறதா, அடிகளின் காயத்தால் ரத்தம் கொட்டுகிறதா என்று தெரியாமல் மயங்கிக் கொண்டிருந்தேன்” என்று நடுங்குகிறார் சந்திரா. பல மணி நேரத்துக்கு சுயநினைவிழந்து மயக்கமாக இருந்திருக்கிறார். நீண்ட நாட்களுக்கு அவரால் நடக்கக் கூட முடியவில்லை.

“நான் குடியிருந்த வீட்டு சொந்தக்காரரான லீலாவதியை கொலை செய்ததாக ஒத்துக் கொள்ளும்படி நான் கட்டாயப்படுத்தப்பட்டேன். லீலாவதி எப்படி கொல்லப்பட்டார் என்று எனக்கு எதுவும் தெரியாது, நான் ஏன் அவரை கொல்ல வேண்டும், சொல்லுங்க” என்று கேட்கிறார்.

நாள், நேரக் கணக்கை மறக்கும்படி அடித்து சித்திரவதை செய்யப்பட்ட அவர் இறுதியில் நீதிபதி முன்பு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார். மேலும், போலீசின் சித்திரவதையை எதிர் கொள்ள முடியாத நிலையில், வேறு வழியில்லாமல் லீலாவதியை தான் கொன்றதாக போலீஸ் சொல்லிக் கொடுத்ததை கிளிப்பிள்ளை போல நீதிபதி முன்பு கூறியிருக்கிறார். நீதிபதியும், வாக்குமூலத்தை ஏற்றுக் கொண்டு, சந்திராவை கோவை மத்திய சிறைக்கு அனுப்பியிருக்கிறார்.

சிறைச்சாலை அதிகாரிகள் சந்திராவின் நிலைமையை பார்த்து தங்கள் பாதுகாப்பில் ஏதாவது நிகழ்ந்து அவர் இறந்து விட்டால் பிரச்சனை என்று கருதி, அரசு மருத்துவமனையிலிருந்து மருத்துவ சான்றிதழ் வாங்கி வரும்படி உடுமலை போலீசிடம் கூறியிருக்கின்றனர். ஆனால், கொலைக்குற்றம் சாட்டப்பட்டு தன் முன் நிறுத்தப்பட்டிருக்கும் பெண், சரியாக நடக்கக் கூட முடியாமல் சிதைக்கப்பட்ட நிலையில் இருப்பதை பார்த்த பிறகும் மாவட்ட நீதிபதிக்கு சந்திராவின் நிலைமை கண்ணில் படவில்லை, அல்லது மண்டையில் உறைக்கவில்லை. அது குறித்து போலீசிடம் எதுவும் விசாரிக்கவில்லை.

கொலைக்குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகள் சந்திரா போன்ற ஏழைகளாக இருந்தால் இதுதான் போலீஸ் மற்றும் நீதிமன்றத்தின் நடைமுறை. இதுவே 10 ஆண்டுகளுக்கு முன்பு சங்கரராமன் கொலை வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட ஜெயேந்திரனை சிறைக்கு அனுப்ப வேண்டுமா, என்னுடைய வீட்டிலேயே காவலில் வைத்து விசாரிக்கலாமே என்று கரிசனம் காட்டியது நீதித்துறை. அதையும் மீறி, ‘அம்மா’வின் போலீஸ் கறாராக காவல் நிலையம் அழைத்துச் சென்ற பிறகு, ஜெயேந்திரன் மலம் கழிக்க வாழை இலை அறுத்துப் போட்டு அதை அள்ளியும் போட்ட தமிழ்நாடு போலீஸ்தான் சந்திரா போன்ற ஏழை பெண்களை நிர்வாணப்படுத்தி தலைகீழாக கட்டி தொங்க விட்டு விசாரிக்கிறது.

கோவை சிறையில் சந்திராவைச் சந்திக்க சென்ற மகள் ராஜகுமாரியிடம், போலீஸ் தன்னை அடித்து சித்திரவதை செய்ததை சொல்லி, மீண்டும் போலீஸ் அழைத்துச் சென்று அடிப்பார்களா என்று கேட்டு நடுங்கியிருக்கிறார். மகள் ராஜகுமாரி, உள்ளூர் வழக்கறிஞர் மூலம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார். அதன் அடிப்படையில், இது தொடர்பாக மருத்துவர் உதவியுடன் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி உயர்நீதிமன்றம் மாவட்ட நீதிபதிக்கு உத்தரவிட்டுள்ளது.

இது போன்று அரிதிலும் அரிதான சம்பவங்களில் வழக்கறிஞர்கள் அல்லது சில இயக்கங்கள் மூலம் உண்மை வெளியே கசிகிறது.  சந்திரா போன்று எத்தனை அப்பாவிகள் போலீஸ் வெறிநாய்களால் குதறப்பட்டு சிறையில் வாடுகின்றனர் என்ற கணக்கு ஒரு போதும் வெளிவரப் போவதில்லை.

“இப்போதும் என்னால் தூங்கக் கூட முடியவில்லை. அதற்குக் காரணம் வெளியிலும், உள்ளேயும் ஏற்பட்ட காயங்கள் மட்டுமில்லை. என் சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு போட்ட எனது மகள் மீது போலீசின் கோபம் திரும்பி அவளும் சித்திரவதை செய்யப்படுவாளோ என்று பயப்படுகிறேன். அவளது உயிருக்கு ஆபத்து என்று பயப்படுகிறேன்” என்கிறார் சந்திரா.

சந்திராவும் அவரது கணவர் செல்லையாவும், மகன் பேரின்பனும் திருப்பூர் ஆலை ஒன்றில் சில மாதங்களுக்கு வேலை செய்திருக்கின்றனர். 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆலை மூடப்பட்டதால் மதுரைக்கு திரும்பியிருக்கின்றனர். ரூ 1 லட்சம் கடனை அடைப்பதற்காக, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உடுமலைப்பேட்டையில் உள்ள ஒரு சிறு உணவகத்தில், ஒரு நாளைக்கு ரூ 200 சம்பளத்தில் சமையல்காரருக்கு உதவியாளராக சந்திரா வேலை பார்த்து வந்திருக்கிறார். காலையில் சாப்பிடாமல் காசை மிச்சப்படுத்தியிருக்கிறார்.

திருப்பூரில் மலர்ந்து கொண்டிருந்த முதலாளித்துவ வளர்ச்சியால் ஒளியேற்றப்பட்டதாக முதலாளித்துவ அறிஞர்கள் சொல்லும் ஏழை மக்கள் இவ்வாறு கடனாளிகளாகவும், வாழ்நாள் கொத்தடிமைகளாகவும் வேலை செய்யும் பாக்கியத்தைத்தான் இந்த ‘வளர்ச்சி’ தந்திருக்கிறது.

ரூ 1 லட்சம் கடனுக்காக தனது வாழ்க்கையையே தேய்த்துக் கொண்டிருந்த சந்திரா போன்ற உழைக்கும் மக்கள் இருக்கும் நாட்டில்தான், பல ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடனை ஆட்டையை போட்ட பிறகும் கவர்ச்சிப் பட காலண்டர் எடுக்க உலகம் சுற்றி வருகிறார்கள் மல்லையா போன்ற முதலாளிகள்.

70 ஆண்டுகளை நெருங்கப் போகும் ‘சுதந்திர’ இந்தியாவின் சட்டங்கள், சமூக நடைமுறைகள், போலீஸ், நீதித் துறை அனைத்தும் ஏழைகளின் வாழ்க்கையை மயிரளவு கூட மதிக்காமல் சிதைக்க தயாராக இருப்பதோடு, ஆளும் வர்க்கங்களின் விரல் நகத்தைக் கூட தொடுவதற்கு தயாராக இல்லை என்பதே நிதர்சனம்.

மேலும் படிக்க