privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

சிறை எம்மை முடக்கி விடாது

-

மது அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுவதை கண்டித்து ஆகஸ்ட் 15-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமைதியான ஆர்ப்பாட்டம் நடத்திய GSH நிறுவன மற்றும் அவர்களுக்கு ஆதரவான பிற தொழிலாளர்கள் மீது தடியடி நடத்தப்பட்டு 167 பேர் கைது செய்யப்பட்டனர். உயர்நீதிமன்ற உத்தரவின்படி பிணையில் வெளிவந்த தொழிலாளர்கள் 23-ம் தேதி காலை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் திருவள்ளூர் மாவட்டம் நெமிலிச்சேரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் தமது சிறை அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

1. GSH கிளை நிர்வாகி தோழர் புரட்சி மணி :

ஆகஸ்ட் 15-ல் தொழிலாளர் கைது
ஆகஸ்ட் 15-ல் தொழிலாளர் கைது

சிறைக்குச் சென்றதன் மூலம் தொழிலாளர்கள் மட்டுமின்றி அவர்களின் குடும்பங்களும் அரசியல்படுத்தப்பட்டுள்ளன, எனவே எங்களை சிறைக்கு அனுப்பி எங்கள் குடும்பத்தை அரசியல்படுத்தும் நல்ல வேலையை செய்திருக்கும் அரசுக்கு முதலில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களோடு கைதான முன்னணித் தோழர்கள் சிறையில் எங்களுக்கு முன்மாதிரியாகவும், நம்பிக்கையூட்டுபவர்களாகவும் இருந்தனர். எதிர்கால புதிய ஜனநாயக சமூக அமைப்பு எப்படி இருக்கும் என்பதை சிறையில் இருந்த போது நாங்கள் கூட்டாக, குழுவாக வேலைகளை செய்த போது உணந்துகொண்டோம். இனி சிறைக்கு எப்போதும் செல்லத் தயாராக இருக்கிறோம்.

சிறை எங்களுக்கு அரசியலை மட்டுமல்ல கலையையும் கற்றுக்கொடுத்திருக்கிறது. சிறைக்குள் நாங்கள் கவிதைகள் எழுதினோம், பாடல்கள் எழுதினோம், பாடினோம், நாடகங்கள் எழுதினோம், நடித்தோம். சிறைச்சாலை எங்களை கவிஞர்களாகவும் பாடகர்களாகவும் கலைஞர்களாகவும் மாற்றியது.

2. GSH கிளை நிர்வாகி தோழர் சிறீதர் :

அனுபவக் கூட்டம்
அனுபவக் கூட்டம்

முதல் முறை சிறைக்குச் சென்ற அனைவருக்கும் ஒருவித தயக்கமும் பயமும் இருந்தது உண்மை தான். பல தொழிலாளிகள் குடும்பத்திற்கு தெரிவிக்கவே இல்லை, ஆனால் அந்தத் தயக்கமும் பயமும் இப்போது இல்லை. சிறையில் அனைத்து வேலைகளுக்கும் கமிட்டிகள் அமைக்கப்பட்டன. பல தொழிலாளர்களின் பெற்றோர்களும் துணைவியார்களும் இங்கு வந்திருக்கிறீர்கள். இனி உங்கள் வீட்டில் நீங்கள் எந்த குழம்பை வைத்தாலும், அதில் உப்பு, காரம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் உங்கள் கணவன்மார்கள், பிள்ளைகள் குறை கூறாமல் சாப்பிடுவார்கள், உங்கள் மீது அன்பு மழை பொழிவார்கள். சிறையும், சிறையில் நாங்கள் குழுவாக சேர்ந்து வேலை செய்ததும் எங்களிடமிருந்த தவறுகளையும் குறைகளையும் களைந்திருக்கிறது.

இந்தப் போராட்டத்தில் நாங்கள் கைது செய்யப்பட்டோம், சிறையில் இருந்தோம், இப்போது வெளியிலும் வந்து விட்டோம், ஆனால் இந்தப் போராட்டத்தில் இரண்டு உயிர்கள் போய்விட்டன. போலீசு நடத்திய தடியடியில் ஆணா பெண்ணா என்று தெரியாத இரண்டு கருக்கள் கலைந்து விட்டன. நமக்காக இல்லையென்றாலும் பிறக்காமல் போன அந்த கருக்களுக்காகவாவது நாம் போராட வேண்டாமா? போராட வேண்டும். இனி சிறை என்றால் முறையாக வீட்டில் தெரிவித்துவிட்டு தான் செல்வோம்.

3. பு.ஜ.தொ.மு காஞ்சி மாவட்ட செயலாளர் தோழர் சிவா :

தோழர் முகுந்தன் உரை
தோழர் முகுந்தன் உரை

சிறை என்பது தொழிலாளர்களின் ஆற்றல்களை வெளிக்கொண்டு வரும் மேடையாக இருந்தது. அரசு என்பது வர்க்க ஒடுக்குமுறை கருவி என்பதை தொழிலாளர்கள் படித்திருக்கிறார்கள். ஆனால் நடைமுறையில் இப்போது தான் முதல் முறையாக அதை எதிர்கொண்டிருக்கிறார்கள். தொழிலாளர்கள் நடத்தியது வெறும் உரிமைகளுக்கான போராட்டமல்ல, இது வர்க்கப் போராட்டம். இந்த போராட்டம் தொடரும், ஆனால் இதை எப்போதுமே சட்ட வரம்பிற்குள் நின்று செய்ய முடியாது. நமது அடுத்தடுத்த கோரிக்கைகள் அனைத்தையும் வெல்ல வேண்டுமானால் மீண்டும் மீண்டும் சிறை செல்ல வேண்டியிருக்கும். எந்த பிரச்சினைகளுமின்றி பாதுகாப்பாக வீட்டிற்குள் அமர்ந்து கொண்டு நமது உரிமைகளைப் பெற முடியாது.

4. ஒரு தொழிலாளியின் துணைவியார் :

னைவரையும் பிணையில் எடுக்க உதவியாக இருந்த வழக்கறிஞர்களுக்கும் சங்க நிர்வாகிகளுக்கும் என்னுடைய நன்றி. எனது கணவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது அமைப்பு தோழர்கள் தான் எங்கள் வீட்டுக்கு வந்து என்ன என்ன தேவை என்பதை கேட்டு செய்து கொடுத்தனர். எங்கள் வீட்டிற்கு மட்டுமல்ல கைதான அத்தனை தொழிலாளிகளின் வீடுகளிலும் என்ன தேவை, கையில் பணம் இருக்கிறதா இல்லையா, சமையல் பொருட்கள் இருக்கிறதா இல்லையா, குழந்தைகள் பெரியவர்கள் உடல்நலப் பிரச்சினைகள் என்று அனைத்தையும் அருகில் இருந்து கவனித்துக்கொண்டனர். கைதான முதல் நாளில் மட்டும் சங்கத்தின் பொருளாளர் தோழர் விஜயகுமாருக்கு தொழிலாளர்களின் குடும்பங்களிலிருந்து 600-க்கும் மேற்பட்ட போன் கால்கள் வந்திருக்கிறது, அனைத்திற்கும் தோழர் பொறுமையாக பதில் கூறியிருக்கிறார்.

தோழர் சு.ப.தங்கராசு உரை
தோழர் சு.ப.தங்கராசு உரை

இப்படி ஒரு அமைப்பை இதுவரை நான் பார்த்தது இல்லை. உண்மையில் எனது கணவர் பு.ஜ.தொ.மு வில் இருப்பதை நான் பெருமையாக கருதுகிறேன். இங்கே வந்திருக்கின்ற தொழிலாளர்களின் அப்பா அம்மாவா இருந்தாலும் சரி, மனைவிகளாக இருந்தாலும் சரி நீங்களும் அவர்கள் அமைப்பில் இருப்பதை பெருமையாக நினைக்கணும். இனி எந்த போராட்டம் நடந்தாலும் அவரை நான் மகிழ்ச்சியாக அனுப்பி வைப்பேன் அதே போல நீங்களும் உங்களுடைய பிள்ளைகளையும், கணவன்மார்களையும் அனுப்பி வைக்க வேண்டும்.

5. பு.ஜ.தொ.மு ஆவடி அம்பத்தூர் பகுதி தோழர் முகிலன்:

ங்களோடு முதல் முறையாக சிறைக்கு வந்த தொழிலாளியின் அம்மா அவரை பார்க்க வந்த போது அவர் என்னையும் உடன் அழைத்துச் சென்றார். தோழர் தனது அம்மாவிடம் பேசும் போது, என்னை அறிமுகப்படுத்தி இவர் தான் என்னை போராட்டத்திற்கு அழைத்துச் சென்றார் என்று கூறினார். அதை கேட்ட அந்த தாய் என் பிள்ளையை நல்ல தைரியசாலியாக மாத்தியிருக்கீங்க தம்பி என்றார். பல தொழிலாளிகளுக்கு ஹான்ஸ், பான்பராக் போடும் பழக்கங்கள் இருந்தன, அந்தப் பழக்கங்களை எல்லாம் சிறையில் இருந்த இந்த ஏழு நாட்களில் தொழிலாளர்கள் கைவிட்டுவிட்டனர்.

தொழிலாளர்களும் குடும்பத்தினரும்
தொழிலாளர்களும் குடும்பத்தினரும்

வீட்டில் வேலை செய்யாத பல தொழிலாளிகள் சிறையில் கூட்டாக உழைத்ததன் மூலம் வீட்டு வேலைகளை செய்ய வேண்டும், துணைவியாருக்கு உதவ வேண்டும் என்பதை கற்றுக்கொண்டனர். நாம் முறையாக இயங்கியது, நமது பகுதியை சுத்தமாக வைத்துக் கொண்டது, உணவு உழைப்பு என்று அனைத்தையும் சமமாக பகிர்ந்து கொண்டதை எல்லாம் பார்த்துவிட்டு விடுதலையாவதற்கு முதல் நாள் எங்கள் மத்தியில் வந்து பேசிய ஜெயிலர், “உங்களிடமிருந்து நாங்களே நிறைய கற்றுக்கொண்டிருக்கிறோம். நீங்கள் இன்னும் கொஞ்ச நாட்கள் இங்கே இருந்திருந்தால் மொத்த சிறையையும் மாற்றிவிடுவீர்கள் போலிருக்கிறதே” என்றார். சிறைக்கு வந்த தொழிலாளர்கள் நிறைய கற்றுக்கொண்டு வெளியே வந்திருக்கின்றனர். இது அவர்களை மேலும் உறுதியான போராட்டங்களை நடத்த பக்குவப்படுத்தும்.

6. தோழர் அசோக்குமார் :

சிறையில் அடைப்பதற்கு முன்னால் அனைத்து கைதிகளையும் ஜட்டி வரை கழட்டி பரிசோதனை செய்து அங்க அடையாளங்களை குறித்துக்கொள்வது தான் சிறை வழக்கம். நமது தோழர்களையும் அப்படி உடைகளை கழட்டச் சொன்னார்கள், ஆனால் முன்னணியாக நின்ற தோழர்கள், “நாங்கள் கிரிமினல்கள் இல்லை அரசியல் கைதிகள் எனவே உடைகளை எல்லாம் கழட்ட முடியாது” என்று கூறியதோடு, “யாரும் சட்டை பட்டனைக் கூடக் கழட்டக் கூடாது” என்று கூறிவிட்டனர். “மச்சம் தானே வேணும் இதோ பார்த்துக்க”ன்னு ஒவ்வொருவரும் தமது அடையாளங்களை காட்டினோம். உடைகளை கழட்ட மறுத்ததும், “ஐயா, சட்டையை கழட்ட மாட்டேங்கிறாங்கய்யா”ன்னு ஜெயிலரிடம் போய் முறையிட்டனர், ஜெயிலர் வந்தார்.

தொழிலாளர்கள்“நீங்கல்லாம் என்ன அமைப்புப்பா” என்றார்.

“பு.ஜ.தொ.மு” என்றோம்.

“ஓ.. ம.க.இ.க வா! சரிய்யா, இவங்க கம்யூனிஸ்டுகள் இவங்களை சட்டையை எல்லாம் கழட்டாம அப்படியே அடையாளத்தை குறிச்சிக்கங்க”ன்னு சொன்னார். இந்த முதல் சம்பவமே எங்கள் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

சிறையில் அடைக்கப்பட்டோம். முதல் நாள் இரவு குடும்பத்தை நினைத்து ரொம்ப கஷ்டமா இருந்தது. பல தொழிலாளிகள் மிகவும் மன வருத்தத்தில் உடைந்து போகும் நிலையில் இருந்தாங்க. நானும் அப்படி தான் இருந்தேன் பிறகு எப்படியே தூங்கிவிட்டேன். மறுநாள் காலை 6 மணிக்கு எழுந்தோம். முன்னணியாக இருந்த தோழர்கள் 167 பேரையும் சுகாதாரக் குழு, மருத்துவக் குழு, உணவுக் குழு, குடிநீர் குழு, விசாரணைக் கைதிகளை சந்திப்பதற்கான குழு, தொண்டர் குழு என்று ஆறு குழுக்களாக அமைத்தனர். ஒரு குழுவுக்கு 10 தோழர்கள் இருந்தனர். இந்த குழுக்கள் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் மாற்றியமைக்கப்பட்டன.

எனக்கு சிறை அனுபவம் புதிதாக இருந்ததால், என்னடா இது சிறைக்குள்ள வந்தும் குழு அது இதுன்னு பண்ணிக்கிட்ருக்காங்களேன்னு தோணிச்சி. ‘நாம ஒரு போராட்டத்தில் கலந்துகிட்டு கைதாகி வந்திருக்கோம், ரெண்டு நாள்ல வெளிய போகப் போறோம், ஏதோ நிரந்தரமா இங்கேயே தங்குறதுக்கு ஏற்பாடு செய்ற மாதிரி குழுவெல்லாம் அமைக்கிறாங்களே’ன்னு கொஞ்சம் எரிச்சலாவும் கூட இருந்துச்சி, பிறகு தான் அது எவ்வளவு சரியானது என்பதை புரிஞ்சிக்கிட்டேன்.

ஆகஸ்ட் 15 அன்று அடக்குமுறை
ஆகஸ்ட் 15 அன்று அடக்குமுறை

அமைப்பு கூட்டங்களுக்கும், பிரச்சாரங்களுக்கும் செல்லும் போது தோழர்கள் புதிய ஜனநாயக சமூக அமைப்பைப் பற்றி விளக்குவார்கள். புதிய ஜனநாயக அரசில் நாம் தான் அரசு, நாம் அமைப்பதுதான் அரசாங்கம். மக்கள்தான் அரசை நடத்துவார்கள். அந்த அரசில் ஒவ்வொரு குடிமகனும் தலைவனாக இருப்பான். மக்கள் கூட்டாக உழைப்பார்கள், உழைப்பவர்களுக்கு தான் உரிமைகளும் அதிகாரமும் இருக்கும், மக்களைச் சுரண்டுபவர்கள் கொள்ளையடிப்பவர்களுக்கு அதிகாரம் இருக்காது, இப்படித்தான் சீனாவில் மாவோ தலைமையிலான சீன அரசு இருந்தது என்று விளக்கும்போதெல்லாம் அதைப் பற்றி ஒன்றும் புரியவில்லை. ஆனால் சிறையில் இந்த ஏழு நாட்களில் நாங்கள் 167 பேரும் ஒரு குட்டி அரசாங்கமாகவே இயங்கினோம். நாங்கள் குழுக்களாக இயங்கியது போலத் தான் புதிய ஜனநாயக சமூக அமைப்பும் இயங்கும், ஆனால் அது இதை விட பிரம்மாண்டமாக கோடிக்கணக்கான குழுக்களைக் கொண்டு இயங்கும் என்பதை உணர்ந்து கொண்டேன்.

இனிமேல் சிறையில் கற்றுக்கொண்ட ஒழுங்கு முறைகளை எனது குடும்பத்திலும் அமுல்படுத்துவேன். இந்த மாதிரியான முறைகளை கடைபிடித்தால் ஒரு குடும்பத்தின் பொருளாதார தேவைகளை எவ்வளவோ குறைத்துக் கொள்ள முடியும், முறைப்படுத்திக் கொள்ள முடியும். ஒரு குடும்பத்திற்கு பொருந்துகின்ற இந்த முறைகள் ஒரு நாட்டிற்கு ஏன் பொருந்தாது? இதை ஒரு நாட்டிற்கு பொருத்தினால் அந்த நாட்டில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க முடியும். உண்மையில் உழைக்கும் மக்களுக்கான ஒரு அரசை நம்மால் கட்டியமைக்க முடியும், அதை நாமே நிர்வாகம் செய்யவும் முடியும் என்கிற உறுதியான நம்பிக்கையை இந்த சிறை அனுபவம் தான் எனக்கு அளித்தது.

குடும்பத்தினர்உதாரணத்திற்கு பார்த்தீங்கன்னா தினமும் வெவ்வேறு தொழிலாளர்களின் உறவினர்கள் வந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஒரு சில நாட்கள் உறவினர்கள் குறைவாக வருவார்கள், உணவுப் பொருட்களும் குறைவாக வரும். அப்படி ஒரு நாள் மொத்தமே ஆறு வாழைப்பழங்கள் தான் வந்தது. சரி இந்த ஆறு வாழைப்பழத்தை எப்படி 167 பேருக்கு பிரித்து கொடுக்கப்போறாங்கன்னு பார்ப்போமேன்னு நான் உள்ளுக்குள் கிண்டலாக நினைத்துக்கொண்டு காத்திருந்தேன். ஆனால் தோழர்கள் அதையும் 167 பேருக்கு பகிர்ந்தளித்தனர். தனியாக நின்று யோசித்தால் என்னடா இது முட்டாள்தனமா இருக்கு, 167 பேருக்கு ஆறு பழம்னா தோல் கூட கிடைக்காதேன்னு தான் தோணும், ஆனால் உண்மை அப்படி இல்லை. கூட்டாக சிந்திக்கும் போது, கூட்டாக உழைக்கும் போது அனைத்தையும் செய்ய முடியும் என்பதையும் இதில் கற்றுக்கொண்டேன் என்றார்.

7. கோவிந்தராஜ், தொழிலாளி

ன்னைக்காவது ஒரு நாள் சிறைக்கு போகணும்கிற வித்தியாசமான ஆசை எனக்கு இருந்தது. ஆனா அந்த வாய்ப்பு இவ்வளவு சீக்கிரம் அமையும்னு நான் எதிர்பார்க்கல. நிறைய கூட்டங்கள்ல நம்ம தோழர்கள் பேசும் போது சோசலிச சமூகத்தை பத்தியும், புதிய ஜனநாயக சமூகத்தை பத்தியும் சொன்னதை எல்லாம் இதுவரை கற்பனையா தான் மனதில் ஓட்டிக்கிட்டிருந்தேன், ஆனால் அதை நடைமுறையில் பார்க்கும் வாய்ப்பு இந்த சிறை அனுபவத்தில் கிடைத்தது.

குழந்தைகள்இந்த அரசை ஏன் தொழிலாளி வர்க்கத்தால் நடத்த முடியாது, உழைக்கும் மக்களாலும் ஒரு அரசை நடத்திக்காட்ட முடியும் என்கிற நம்பிக்கையை நாங்கள் பெற்றிருக்கிறோம். இந்த ஆர்ப்பாட்டத்தில் நாங்க மட்டும் கைதாகவில்லை, எங்களோடு வந்து நின்ற ஒரு தொழிலாளியின் அப்பாவும், இன்னொரு தொழிலாளியின் அண்ணனையும் கைது செய்து விட்டனர். அந்த தொழிலாளியின் அண்ணன் முதல் நாள் கொஞ்சம் வருத்தப்பட்டார், பிறகு சகஜமாகி விட்டார். எனக்கு இதுவரை ஒரு தம்பிதான் இருந்தான், இப்ப 167 தம்பிங்க கிடைச்சிருக்காங்கன்னாரு. மற்றொரு தொழிலாளியின் அப்பா நாங்கள் சிறையில் நாடகம் போட்ட போது அந்த நாடகத்தில் ஒரு தொழிலாளியின் அப்பாவாகவே பங்கேற்று நடித்தார்.

நாங்க இருந்த வரைக்கும் அந்த பிளாக்கில் எந்த பிரச்சினையும் இல்லை, தண்ணீர் பிரச்சினை சுத்தமாக இல்லை, அனைத்து தேவைகளும் உடனடியாக தீர்த்து வைக்கப்பட்டது. நாங்க குழுவாக ஒற்றுமையாக வேலை செய்ததைப் பார்த்த மற்ற சிறைக்கைதிகள் அவர்களுடைய பிரச்சினைகளை எங்களிடம் சொல்லி அதற்காகவும் எங்களை போராடச் சொன்னார்கள். அப்பாவியாக மாட்டிக்கொண்டு சிறையில் இருக்கும் பல கைதிகளிடம் அரசியல் பேசியிருக்கிறோம், இந்த அரசியல்தான் சரியானது என்றும் கூறினார்கள்.

அரசு என்றால் என்ன என்பதை இதுவரை தோழர்கள் மூலம் கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் அரசு இயந்திரம் எப்படி இயங்கும் என்பதை சிறைக்குச் சென்றதன் மூலம் தெரிந்து கொண்டோம். பல அப்பாவிகளை கைது செய்து உள்ளே வைத்திருக்கிறார்கள், சின்னச் சின்ன திருட்டு வழக்குகளில் மாட்டியவர்கள் மீதெல்லாம் பல பொய் வழக்குகளை போட்டு உள்ளே வைத்திருக்கிறார்கள். ஆனால் பெரிய பெரிய கொள்ளைக்காரர்கள் எல்லாம் வெளியே சுதந்திரமாக சுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த அரசு யாருக்கானது என்பதை இந்த சிறை அனுபவம் மூலம் நன்றாக தெரிந்து கொண்டோம். இந்த சமூக அமைப்பு உழைக்கும் மக்களுக்கு எதிரானது என்பதற்கு இந்த சிறை நல்ல உதாரணமாக இருக்கிறது. இந்த சமூக அமைப்பை அடியோடு மாற்றி ஒரு புதிய ஜனநாயக சமூக அமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும், அதற்காக தீவிரமாக வேலை செய்ய வேண்டிய தேவையையும் எங்களை சிறைக்கு அனுப்பியதன் மூலம் இந்த அரசு எங்களுக்கு உணர்த்தியிருக்கிறது.

8. சிறை சென்று வந்த GSH தொழிலாளி புரட்சி மணியின் தந்தை தோழர் கருப்பையாவுக்கு 65 வயது. திருவாரூர் மாவட்டத்தில் CPI கட்சியின் விவசாயத்தொழிலாளர் சங்கத்தில் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டவர். தஞ்சை மாவட்டத்தில் நடந்த நிலமீட்பு இயக்கத்தின் போது மூன்று முறை கைதாகி சிறை சென்றிருக்கிறார்.

“நான் மூன்று முறை சிறைக்கு போய்ட்டு வந்திருக்கேன். ஒரு நியாயமான கோரிக்கைக்காக சிறை சென்று வந்த தோழர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். தொழிலாளர்களின் குடும்பத்தில் உள்ள அனைவரும் தமது பிள்ளைகளையும், கணவன்மார்களையும் ஆதரிக்க வேண்டும்.

சிறை எல்லாம் எங்க குடும்பத்துக்கு பழக்கப்பட்ட இடங்க, என் பையன் போய்ட்டு வந்தது பெருமையா தான் இருக்கு. யூனியன் தலைவர் சொன்ன மாதிரி சிறைக்கு போனவங்க எல்லாம் என்ன கொலையா பண்ணிட்டு போனாங்க போராடிட்டு தானே போனாங்க.

எங்க மாவட்டமே சிவப்பு மாவட்டங்க, சீனிவாசராவைப் பத்தி கேள்விப்படிருக்கீங்களா? எங்க ஊர் பக்கம் பல பிள்ளைகளுக்கு இப்பவும் சீனிவாசன்னு தான் பேரு, அவரோடெல்லாம் ஒப்பிடும் போது நாம என்ன வேலை செஞ்சிருக்கோம். என் பையனுக்கு கல்யாணசுந்தரம் தான் பேர் வச்சாரு, அந்த பேர் தான் இன்னைக்கு வரைக்கும் இருக்கு. கம்யூனிஸ்ட் இயக்கமெல்லாம் கொடிகட்டி பறந்த காலம் ஒன்னு இருந்துச்சிங்க.

இந்த அரசு முதலாளிகளுக்கான அரசு, தொழிலாளர்களை ஒடுக்கத்தான் செய்யும், பாட்டாளி வர்க்க சோசலிச அரசு தான் உழைக்கும் மக்களுக்கான அரசு. அதைத் தான் நாம் உருவாக்க வேண்டும்.

– வினவு செய்தியாளர்