privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்ஆகஸ்டு-15: கொரியாவின் கொடி பறக்குது !

ஆகஸ்டு-15: கொரியாவின் கொடி பறக்குது !

-

“சுதந்திர தினம்” என்றழைக்கப்படும் ஆகஸ்டு 15-ம் தேதியன்று, சங்கம் அமைக்கும் சுதந்திரம் மறுக்கப்பட்ட தொழிலாளர்கள், தென்கொரிய பன்னாட்டு நிறுவனம் ஒன்றை எதிர்த்துப் போராடிய குற்றத்துக்காக, காஞ்சிபுரத்தில் போலீசால் கொடூரமாகத் தாக்கப்பட்டு சிறையில் தள்ளப்பட்ட செய்தியை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம்.

“இது சட்டவிரோதக் காவல் என்பதால் உடனே விடுவிக்க வேண்டும்” என்று தாக்கல் செய்யப்பட்ட மனு 17-ம் தேதியன்று உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. 19-ம் தேதியன்று காஞ்சிபுரம் அமர்வு நீதிமன்றமும் தொழிலாளர்களை பிணையில் விடுவிக்க மறுத்தது. பிறகு 22-ம் தேதியன்று சென்னை உயர்நீதி மன்றம் தொழிலாளர்களை பிணையில் விடுவித்திருக்கிறது. தொழிலாளர்கள் பிணையில் வெளியே வரவே முடியாமல் செய்வது என்ற நோக்கத்தில் வெறித்தனமாக இருந்தது நிர்வாகம். தற்போது பிணையில் வெளியே வந்த தொழிலாளர்கள் அனைவரையும் பணிநீக்கம் செய்திருக்கிறது.

இது ஒரு தென்கொரிய கம்பெனியின் தொழிலாளர் பிரச்சினை அல்ல, எல்லா கம்பெனிகளும் தொழிலாளி வர்க்கத்துக்கு எதிராகத் திரண்டு நின்று தொழிலாளி வர்க்கத்தை நசுக்கும் பிரச்சினை. எனவே, நாம் இதன் பின்புலத்தை அறிவது அவசியம்.

000

காஞ்சிபுரம் மாவட்டம் திருபெரும்புதூரில் இயங்கி வரும் கெஸ்டாம் சுங்வூ ஹைடெக் (GSH) என்ற என்ற தென்கொரிய நிறுவனம் ஹூண்டாய் கார்களுக்கு கதவுகளை தயாரித்து கொடுக்கிறது. இங்கு பணிபுரியும் 3000 பேரில் 300 பேர் கூட நிரந்தரத் தொழிலாளர்கள் இல்லை.

ஊதியம் குறைவு என்பது மட்டுமல்ல, 8 மணி நேரத்தை தாண்டி எத்தனை நேரம் சொன்னாலும் வேலை செய்யவேண்டும். லீவு நாட்களில் வரச்சொன்னால் வர வேண்டும், அடுத்தடுத்து ஷிப்டுகள் தொடர்ந்து வேலை செய்யச் சொன்னால் மறுக்க முடியாது. வேலை நிரந்தரம் கிடையாது. சங்கமும் கூடாது. இந்த தொழில் நிறுவனத்தில் மட்டுமல்ல, எல்லா பன்னாட்டு நிறுவனங்களிலும், இந்திய தரகுமுதலாளிகளின் நிறுவனங்களிலும் இதுதான் நிலைமை.

இவ்வாறு தொழிலாளிகளின் ரத்தத்தைப் பிழிவதை, சட்டபூர்வமாக நியாயப்படுத்துவதற்கு இந்நிறுவனம் ஒரு அயோக்கியத்தனமான தந்திரம் செய்துள்ளது. தொழிலாளி என்ற வரையறையில் வந்தால்தான், “சங்கம், தொழிற்தகராறு சட்டம், வேலைநேரம்” போன்ற பிரச்சினைகளெல்லாம் வரும் என்பதால் தொழிலாளர்களையெல்லாம், “அலுவலக ஊழியர்கள்” (ஸ்டாஃப்) என்று வகைப்படுத்தி வைத்திருக்கிறது. தென்கொரிய கம்பெனி மட்டுமின்றி பல நிறுவனங்களும் கடைப்பிடித்து வரும் தந்திரம் இது – ஐ.டி துறையில் எல்லா ஊழியர்களுக்கும் “எக்சிகியூடிவ்” என்று பெயரிட்டிருப்பது போல!

புதிய ஜனநயாகத் தொழிலாளர் முன்னணி இதனை எதிர்த்து விடாப்பிடியாக போராடியதன் விளைவாக, “இவர்களெல்லாம் தொழிலாளர்களே” என்று தொழிலாளர் துறை துணை ஆணையர் அறிவித்து விட்டார். இந்த அறிவிப்பின் தொடர்ச்சியாக தொழிலாளர்களுக்குரிய உரிமைகளைக் கேட்டு பு.ஜ.தொ.மு வழக்குகள் போட்டிருக்கிறது, போராட்டமும் நடத்தி வருகிறது.

மாவட்ட ஆட்சியருக்கு மனு

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

இது மட்டுமல்ல, நிரந்தரத் தொழிலாளிகள் என்று 10% பேரை வைத்துக் கொண்டு, 90% பேரை காண்டிராக்ட் தொழிலாளிகளாக வைத்து சுரண்டி வந்த பிரித்தாளும் சூழ்ச்சிக்கும் பு.ஜ.தொ.மு முடிவு கட்டியது. காண்டிராக்ட் தொழிலாளிகளுடன் நிரந்தரத் தொழிலாளிகளையும் ஒன்றுபடுத்தி சங்கம் கட்டியது. வரவிருக்கும் “அபாயத்தை” புரிந்து கொண்ட பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட எல்லா நிறுவனங்களும் GSH உடன் சேர்ந்து சதியாலோசனையில் இறங்கின.

GSH நிர்வாகம், சங்க நிர்வாகிகள் மற்றும் முன்னணி தொழிலாளர்கள் 43 பேரை வேலை நீக்கமும், 12 பேரை தற்காலிக வேலை நீக்கமும் செய்தது. தொழிலாளிகள் பணியவில்லை. இதற்கெதிரான வழக்கு விசாரணை 2014 ஜூலையில் முடிந்து, நிர்வாகத்தின் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு தகுதியானவை என்று நிரூபிக்கப்பட்டன. இருப்பினும் தொழிலாளர் துறை ஆணையர் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

நிர்வாகம் மீண்டும் பழிவாங்கும் என்று எதிர்பார்த்து, “வழக்கு முடிவதற்கு முன் புதிதாக யாரையும் வேலைநீக்கம் செய்யக்கூடாது” என்று உயர் நீதிமன்றத்தில் பு.ஜ.தொ.மு தடையாணை பெற்றது. நீதிமன்ற தடையாணையை மீறி, 2014 மே மாதம் 12 பேரை தற்காலிக வேலை நீக்கம் செய்தது நிர்வாகம்.

மேற்கூறிய நிர்வாகத்தின் எல்லாவிதமான குற்றங்களையும், நீதிமன்ற உத்தரவு மீறல்களையும் காஞ்சி மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துக்கூறி நடவடிக்கை எடுக்க கோரினார்கள் தொழிலாளர்கள். இல்லையேல் “ஆகஸ்டு 15 அன்று போராடுவோம்” என்று அறிவித்தார்கள். நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்காத ஆட்சியர், “போராடுவது உங்கள் உரிமை” என்று பதிலளித்தார். அந்த உரிமையை அமல்படுத்தியதற்குத்தான் தொழிலாளிகள் மீதும் பெண்கள் குழந்தைகள் மீதும் தடியடி, சிறை!

000

தொழிலாளிகளை விடுவிப்பதற்காக ஒரு வாரமாக நீதிமன்றத்தில் நடந்த போராட்டம், அரசையும் போலீசையும் பற்றிய உண்மையை பலருக்கும் புரிய வைத்திருக்கிறது.

17 -ம் தேதியன்று உயர்நீதிமன்ற விசாரணையின்போது “சுதந்திர தினத்தன்று போராட்டம் நடத்தி சுதந்திர தினம் கொண்டாடுவதை தடுக்கிறார்கள் மை லார்டு” என்று ரொம்பவும் உணர்ச்சி வசப்பட்டு நீதிபதியிடம் குமுறினார், தென்கொரிய GSH நிறுவனத்தின் வக்கீல். அப்புறம், “தென்கொரியாவின் சுதந்திர தினமும் ஆகஸ்டு 15-ம் தேதிதான் மைலார்டு” என்று கொரியாவின் சார்பிலும் கூவினார் அந்த வக்கீல். கொரிய முதலாளிகள் மட்டும் இதை நேரில் பார்த்திருந்தால், “கொடுத்த காசுக்கு மேல கூவுறான்டா ங்கொய்யால” என்று கண் கலங்கியிருப்பார்கள். மேற்படி வக்கீலின் பெயர் சந்திர சேகரன். தொழிலாளர் தரப்பு வழக்குகளை நடத்தும் லேபர் லாயர்கள் நிறைந்த ராவ் அண்டு ரெட்டி என்ற நிறுவனத்தில் வேலை பார்த்து தொழில் கற்றுக்கொண்டு, தற்போது தொழிலாளர்களுக்கு எதிராக கோடரிக்காம்பாக “தொழில்” செய்பவர்.

19-ம் தேதி காஞ்சிபுரம் செசன்சு நீதிமன்றத்தில் தொழிலாளர்களின் பிணை மனு விசாரணைக்கு வந்தது “மாவட்ட ஆட்சியர் அலுவலத்தின் முன் சட்டவிரோதமாக கூடினார்கள், அரசு ஊழியர்களை தாக்கினார்கள், பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தார்கள்” என்பதுதான் வழக்கு. இந்த வழக்கை நடத்த வேண்டியவர் அரசு வழக்குரைஞர். ஆனால் தென்கொரிய கம்பெனி வக்கீல்தான் அவரை முந்திக் கொண்டு, வழக்கை நடத்தினார். “இந்த சங்கத்துக்காரர்களால் பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள் மட்டுமல்ல, இதோ டி.வி.எஸ் காரர்கள் (ஆக்சில் இந்தியா) வந்திருக்கிறார்கள், அவர்களையும் கேளுங்கள், யுவர் ஆனர்” என்று கூட்டணி அமைத்துக் கூவினார் GSH நிறுவனத்தின் வக்கீல். அரசை நடத்துவதே பன்னாட்டு கம்பெனிகள்தான் எனும்போது, வழக்கையும் அவர்கள் தானே நடத்தவேண்டும்!

காக்கிச் சட்டையைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. கம்பெனியின் சம்பளப் பட்டியலில் உள்ள அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். கோர்ட்டா, போலீசு ஸ்டேசனா என்று சந்தேகப்படும் அளவுக்கும், நீதிபதியை மிரட்டும் அளவுக்கும் காக்கிக் கூட்டம். ஆகஸ்டு 15 அன்று நடைபெற்ற போராட்டத்தை புகைப்படம், வீடியோ எடுத்த உளவுத்துறை போலீசார் அவற்றை பிரதி எடுத்துக் கொண்டு வந்திருந்தனர். அங்கே திரண்டிருந்த பல்வேறு கம்பெனிகளின் எச்.ஆர் அதிகாரிகளிடம் கொடுத்து “இவன் உங்க கம்பெனியா பாருங்க” என்று ஆள்காட்டி வேலை செய்து கொண்டிருந்தனர். ரிட்டையர்டு உளவுத்துறை அதிகாரிகளும் கிளம்பி வந்து விட்டார்கள். பத்து பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன் தாங்கள் பணிக்காலத்தில் சேமித்து வைத்திருந்த பு.ஜ.தொ.மு பிரசுரங்கள், சுவரொட்டிகள் போன்ற “தொல்லியல் ஆவணங்களை” நகல் எடுத்து எச்.ஆர் அதிகாரிகளுக்கு விநியோகித்துவிட்டு, தலையைச் சொரிந்து பல்லிளித்துக் கொண்டிருந்தனர்.

காலையில் விசாரணைக்கு வந்த பிணை மனு பிற்பகலுக்கு ஒத்தி வைக்கப்பட்டதால், காக்கிகள் அனைவருக்கும் அருகிலுள்ள பெரிய லாட்ஜ்களில் கறிசோறும், ஓய்வெடுக்க ஏ.சி ரூமும் ஏற்பாடு செய்திருந்தார்கள் கொரிய முதலாளிகள். ஒரே நாளில் விசாரித்து உத்தரவிடவேண்டும் என்று உயர்நீதி மன்றத்திடம் உத்தரவு வாங்கியிருந்த காரணத்தினால், வழக்கு மறுநாளைக்கு ஒத்திவைக்கப்படவில்லை. மறுநாளும் வழக்கு நடந்திருந்தால், ஏட்டு முதல் டி.எஸ்பி வரையிலான அனைவருக்கும் தேவைப்பட்ட அனைத்தையும் நிர்வாகம் சப்ளை செய்திருக்கும். காஞ்சி அமர்வு நீதிமன்றம் அன்று மாலை தொழிலாளிகளின் பிணை மனுவை நிராகரித்து விட்டது.

புஜதொமு வின் மேல்முறையீட்டு மனு 21-ம் தேதி சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதி தேவதாசன் முன் விசாரணைக்கு வந்தது.

நிர்வாகத்தின் வக்கீலான மேற்படி சந்திரசேகரன், “சுதந்திர தினத்தன்று முழக்கமிட்டார்கள் மைலார்டு” என்று தொடங்கினார்.

“நீங்கள் கொண்டாடுகிறீர்கள், அவர்கள் கஷ்டம், அவர்கள் போராடுகிறார்கள்” என்றார் நீதிபதி.

“வேலை போய்விடும் என்று பயந்து வீட்டு முகவரியை மாற்றிக் கொடுத்திருக்கிறார்கள் யுவர் ஆனர்” என்றார் அரசு வக்கீல்.

“பயப்படுவது நியாயம்தானே” என்றார் நீதிபதி.

“முகவரி பொய்யாக இருந்தால், புலன் விசாரணை நடத்த முடியாது மைலார்டு” என்றார் சந்திரசேகரன்.

“அதை விசாரணை அதிகாரி பார்த்துக் கொள்வார், நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்?” என்று மூக்கறுத்த நீதிபதி,

“இது மூலதனத்துக்கும் தொழிலாளிகளுக்கும் இடையிலான போராட்டம்; போலீசார் தொழிலாளிகளை கிரிமினல்கள் போல நடத்தக்கூடாது” என்றும் கூறி, தொழிலாளர்கள் அனைவரையும் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.

கஸ்டு 23 சனிக்கிழமையன்று, சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தொழிலாளர்களும், அவர்களது மனைவி, குழந்தைகள், பெற்றோர், நண்பர்கள், பல்வேறு ஆலைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் எனப் பெருந்திரளாக கூடிய அனுபவப் பகிர்வுக் கூட்டம் நடைபெற்றது. உயர்நீதி மன்ற வழக்குரைஞர்கள் சங்கரசுப்பு, சிவக்குமார் ஆகியோரும், மனித உரிமைப் பாதுகாப்பை மையத்தின் வழக்குரைஞர்களும் போராட்டத்தின் நியாயத்தையும், இதில் பன்னாட்டு நிறுவனமும் அரசும் போலீசும் அமைத்திருக்கும் கூட்டணியையும், இத்தகைய போராட்டங்கள் குறித்த வரலாற்றையும் விளக்கிப் பேசினர். புஜதொமு பொருளாளர் தோழர் விஜயகுமார் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் வழக்குகள் குறித்து விளக்கிப் பேசினார். சிறை சென்ற தொழிலாளர்களில் சிலர் கவிதை வாசித்தனர். தொழிலாளர் வீட்டுப் பெண்கள் தமது பார்வையில் இந்த போராட்ட அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

“வீட்டுக்காரர் ஜெயிலுக்குப் போவதெல்லாம் குடும்பத்துக்கு அவமானம் என்றுதான் முதலில் நினைத்தோம். இப்போது பெருமையாக இருக்கிறது. பெயில் கிடைக்கவில்லை என்றவுடன் ஒவ்வொருத்தரும் பத்து முறைக்கு மேல் போன் பண்ணி சங்கத்து தோழர்களிடம் பேசியிருப்போம். ஆயிரம் ரெண்டாயிரம் போன் வந்திருக்கும். அத்தனைக்கும் அலுத்துக் கொள்ளாமல் பதில் சொன்னார்கள். குடும்பங்களை தனித்தனியாக விசாரித்து கவனித்துக் கொண்டார்கள்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர் பெண்கள். கூடியிருந்த தொழிலாளர்களிடையே குடும்பம் என்ற எல்லையைத் தாண்டி, தோழமை ஒரு புதிய பரிமாணத்துக்கு விரிவடைவதைக் காண முடிந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

000

கஸ்டு 15 போராட்டம் GSH நிறுவனத் தொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பாகத்தான் நடத்தப்பட்டது என்ற போதிலும், இதில் கலந்து கொண்டவர்கள் அந்தக் கம்பெனி தொழிலாளர்கள் மட்டுமல்ல. டி.வி.எஸ் உள்ளிட்ட பத்து நிறுவனங்களின் தொழிலாளர்களும், தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்களும் பெற்றோரும் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றிருக்கிறார்கள். ஏசியன் பெயின்ட்ஸின் ஏ.ஐ.சி.சி.டி.யு தொழிற்சங்கம் பொன்றோர் போராட்டத்தை வாழ்த்தி ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். இந்த வர்க்க ஒற்றுமை எதிரிகளை ஆத்திரம் கொள்ள வைத்திருக்கிறது.

இப்போராட்டம் திருப்பெரும்புதூர் தொழிலாளிகள் மத்தியில் அகஸ்டு 15 சுதந்திரம் பற்றிய மாயையை அகற்றத் தொடங்கியிருக்கிறது. “என்ன இருந்தாலும் சுதந்திர தினத்தன்று போராடலாமா?” என்று பேசிக் கொண்டிருந்த தொழிலாளிகள் கூட, “எத்தனை பிரச்சினை இருந்தால் பெண்டாட்டி பிள்ளைகளுடன் போராட வருவார்கள்?” என்று அதன் நியாயத்தை புரிந்து கொண்டிருக்கிறார்கள். “சங்கம் வைக்கவே சுதந்திரம் இல்லை, அப்புறம் என்ன வெங்காய சுதந்திரம்?” என்றும் “கொரியா கம்பெனிக்காரனுக்குத்தான் சுதந்திரம் இருக்கு, நமக்கு எங்கடா இருக்கு?” என்ற தெளிவு தொழிலாளிகளிடையே பரவத் தொடங்கியிருக்கிறது. இந்தத் தெளிவு எதிரிகளைத் திகிலடைய வைத்துள்ளது.

ஆகஸ்டு-25 திங்கட்கிழமை :

பிணையில் வெளியே வந்த தொழிலாளர்கள் திருப்பெரும்புதூர் ஆலைக்கு பணிக்கு செல்கின்றனர். திருப்பெரும்புதூர் போலீசு, உளவுத்துறை போலீசார், விஷ்ணு காஞ்சி சட்டம் ஒழுங்கு போலீசு என ஒரு பெரும்படையே ஆலை வாயிலில் நிற்கிறது. தொழிலாளிகள் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். அனைவருக்கும் பணிநீக்க உத்தரவு வழங்கப்படுகிறது. எதிர்காலம் குறித்த பயம், பட்டினி குறித்த அச்சம்! இதுதானே தொழிலாளி வர்க்கத்தை மிரட்டிப் பணிய வைப்பதற்கு முதலாளி வர்க்கம் பயன்படுத்தும் ஆயுதம்!

இதே ஹூண்டாய் நிறுவனத்திற்கு உதிரிப்பாகம் செய்து தரும் ஒய்.எஸ்.ஐ ஆட்டோமோடிவ் என்ற கம்பெனியில் 6 ஆண்டுகள் இரவு பகலாக உழைத்து, பணி நிரந்தரம் செய்யவிருப்பதாக நிர்வாகம் சொன்னதை நம்பி திருமணம் செய்தார், பாலாஜி என்ற தொழிலாளி. குழந்தையும் பிறந்துவிட்டது. திடீரென்று சென்ற மே 8-ம் தேதியன்று, ஆட்குறைப்பு என்ற பேரில் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். “இனி நான் எங்கே போவேன்” என்று கெஞ்சிய பாலாஜியை “எங்கேயாவது போய் செத்துத்தொலை” என்று எச்.ஆர் கூறவே, ஆலையில் இருந்த தின்னரைக் குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். சக தொழிலாளிகள் உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று காப்பாற்றி விட்டனர். “இது தற்கொலை முயற்சியல்ல நாடகம்” என்று கூறி, மருத்துவ செலவைக் கூட ஏற்க மறுத்து விட்டது நிர்வாகம்.

பணி நீக்கம் செய்யப்பட்ட 55 தொழிலாளிகளைப் பணியமர்த்தக் கோரியதற்காக GSH நிர்வாகம் வழங்கியிருக்கும் தண்டனை – அத்தனை பேருக்கும் பணி நீக்கம்! சங்கம் அமைக்கும் சுதந்திரம் கேட்டதற்காக சிறை! மாருதி தொழிலாளர்களை வீடு வீடாகச் சென்று மிரட்டிய குர்கான் போலீசைப் போலவே, தற்போது சிறை சென்ற தொழிலாளர் குடும்பத்தினரை வீடு வீடாகச் சென்று மிரட்டி வருகிறது போலீசு. ஆனால் எதிரிகள் எதிர்பார்ப்பதைப் போல தொழிலாளிகள் அஞ்சவில்லை. இந்த அச்சமின்மைதான் எதிரிகளை அச்சுறுத்துகிறது. மாருதி போராட்டத்தைத் தொடர்ந்து குர்கான் வட்டார முதலாளிகள் தொழிலாளி வர்க்கத்துக்கு எதிராக கூட்டு சேர்ந்ததைப் போலவே, இங்கேயும் முதலாளிகள் “மகா பஞ்சாயத்து” அமைக்கிறார்கள்.

இதை எதிர்கொள்ள வேண்டுமானால், பாலாஜியைப் போன்ற தொழிலாளிகளின் தற்கொலை முயற்சியைத் தடுக்க வேண்டுமானால், அவர்களது குழந்தைகள் அநாதைகளாகாமல் காப்பாற்ற வேண்டுமானால் தொழிலாளிகள் ஒன்றுபடவேண்டும். தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமையை சாத்தியமாக்குவோம்!

அன்பார்ந்த நண்பர்களே, தோழர்களே,

இந்தப் போராட்டம், கைது, பிணை தொடர்பான பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கும், வழக்குகளை நடத்துவதற்கும், போலீசும் நிர்வாகமும் செய்து வரும் பொய்ப்பிரச்சாரங்களை முறியடிப்பதற்கும் சில லட்சங்கள் செலவாகியிருக்கின்றன. மேலும் பல செலவுகள் காத்திருக்கின்றன. நீங்கள் செய்யும் நிதி உதவி என்பது இந்தப் போராட்டத்துக்குச் செய்யும் பேருதவியாகும். உங்கள் நன்கொடைகளை கீழ்க்கண்ட வங்கிக் கணக்கிற்கு அனுப்பக் கோருகிறோம்.

பெயர் : Sudesh Kumar.M.J

வங்கிக் கணக்கு விபரங்கள்

A/C.No.: 30080252767
State Bank Of India ( SBI)
Janapanchatram Branch
Sholavaram
Thiruvallur Dist
IFSC Code: SBIN0007594
Branch Code : 007594

அலைபேசி : 94444 42374

நன்றி

இவண்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி