Friday, October 18, 2019
முகப்பு கட்சிகள் இதர கட்சிகள் அனந்தமூர்த்தியின் மரணம் ஆர்.எஸ்.எஸ் மகிழ்ச்சி

அனந்தமூர்த்தியின் மரணம் ஆர்.எஸ்.எஸ் மகிழ்ச்சி

-

ன்னடத்தின் புகழ்பெற்ற முற்போக்கு எழுத்தாளரும், காந்திய கொள்கைகளில் பற்று கொண்டவருமான யு.ஆர். அனந்தமூர்த்தி கடந்த ஆகஸ்டு 22 அன்று, 82 வது வயதில் பெங்களூருவில் மரணமடைந்தார். ஞானபீட பரிசை வென்ற எட்டு கன்னட எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். இவரது சம்ஸ்காரா, பார்வதிபுரம் போன்ற நாவல்கள் ஒரு மாறி வரும் சமூகத்தின் நிகழ்வுகளையும், அதில் உள்ள சமூகப் பிரச்சினைகளையும் களமாகக் கொண்டு தனிநபர்களிடம் நடக்கும் புதுமைக்கும், பழமைக்குமான போராட்டங்களையும் உணர்த்துகிறது.

u_r_ananthamurthyஆகவே அனந்தமூர்த்தியோடு பழம்பெருமை பேசும் இந்துமதவெறியர்கள் எந்த முறையிலும் நேசத்தை கொண்டிருக்க இடமில்லை. ஆம், அவரது மரணத்தை மங்களூரில் பஜ்ரங் தள் என்ற பரிவார கும்பல் வெடிபோட்டு மகிழ்ந்து கொண்டாடியிருக்கிறது.

கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள மெலிகே கிராமத்தில் 1932 டிசம்பர் 1-ம் தேதி பிறந்த உடுப்பி ராஜகோபாலாச்சார்ய அனந்தமூர்த்தி ஒரு வைதீக பார்ப்பன பின்னணியைக் கொண்டவர். ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். பிறகு ஆய்வுப் படிப்புக்காக இங்கிலாந்து சென்ற இடத்தில் அவரது பேராசிரியரின் ஆலோசனையின் பேரில் மாறி வரும் இந்திய சமூகத்தை பற்றிய நாவல் ஒன்றை எழுத முனைந்தார். அதுதான் சம்ஸ்காரா நாவல்.

1965-ல் வெளியான இந்த நாவல் அப்போதைய அளவில் பார்த்தால் கன்னட இலக்கியத்தில் பெரும் கலகம்தான். நவோயா இயக்கம் என்ற பெயரில் அவரும், கிரீஸ் கர்னாட்டும் அங்கே புகழ்பெற்றிருந்த காலம் அது. கர்நாட் எழுதிய துக்ளக் நாடகமும் கூட மிகவும் புகழ்பெற்றது தான். அதன் அரசியல் நகைச்சுவைகளை பார்த்த பிறகு அதன் பாதிப்பில் சோ ராமசாமி போட்டுக் கொண்ட சூடுகள் தான் அவரது துக்ளக் காமெடி நாடகம்.

அக்ரகாரம் மட்டுமே இருக்கும் ஒரு மேற்கு கர்நாடக கிராமம் ஒன்றுதான் சம்ஸ்காரா நாவலின் கதைக்களம். அங்குள்ள இரு இளைஞர்களில் ஒருவன் சனாதனவாதி. கடுமையாக இந்துமத கொள்கைகளை, சாதி அனுஷ்டானங்களை கடைபிடித்து மோட்சத்திற்கு செல்ல முயல்பவன். காசிக்கு சென்று சமஸ்கிருதம் படித்து வந்த அவனை ஊரே கொண்டாடுகிறது. திருமணம் செய்து கொண்டு தாம்பத்ய உறவை தவிர்த்து அதன் மூலம் தனது மனைவிக்கும் மோட்சத்திற்கு வழிகாட்டுவதாக அவன் கருதிக் கொள்வான். அதே ஊரில் இன்னொரு பார்ப்பன இளைஞன் இருப்பான். நகரத்திற்கு சென்று படிக்கும் அவன் எல்லா ‘கெட்ட’ பழக்கங்களும் உள்ளவன். விபச்சாரத்தில் ஈடுபடும் ஒரு பெண்ணை கூட்டி வந்து அவளுடன் தனது வாழ்க்கையை அக்கிராமத்தில் துவங்குவான். அப்போது ஊரில் நடக்கும் கெட்டவை, பிளாக் நோய்கள் அனைத்துக்கும் அவனைத்தான் காரணமாக கூறுவார்கள். சாதியை விட்டு விலக்கி வைப்பார்கள்.

அவன் வேறு சாதிப் பெண்ணை சேர்த்து கொண்டதுடன், மாமிசம் சாப்பிடவும் பழகி விட்டான் என்றும் கூறி அவனுக்கு தண்டனை தரும்படி முதலாவது நல்லவனிடம் கூறுவார்கள் மக்கள். அவன் திருந்தி விடுவான் என்று அவர்களுக்கு பதில் சொல்வான் அவன். இரண்டாமவன் ஒருநாள் எதிர்பாராத விதமாக நோய்வாய்ப்பட்டு இறந்து போவான். அவனை எரிக்க யாருமே முன்வர மாட்டார்கள். பார்ப்பன பிணத்தை பார்ப்பனர்கள்தான் எரித்தாக வேண்டும். அவன் பிணத்தை எரிக்கும் வரை மற்ற பிராமணர்கள் சாப்பிட கூடாது என்பது மரபு. இந்நிலையில் இரண்டாமவனது மனைவி நல்லவருக்கு பிணத்தை எரிக்க பண உதவி செய்வாள். அவளது அழகில் இவரும் மயங்கி விடுவார். அவருக்கு உதவியாக பணத்திற்காக சில பிராமணர்கள் வைதீகத்தை கொஞ்சம் மூட்டை கட்டி வைப்பார்கள். பிறகு அவர் திரும்பி ஊருக்கு வருவார். முடிவை வாசகர்கள் எடுக்குமாறு இந்தக் கதை பின்னப்பட்டிருக்கும்.

பலமான பார்ப்பனர்களின் எதிர்ப்பை இதனால் சம்பாதித்துக் கொண்ட அனந்தமூர்த்தி எஸ்தர் என்ற கிறிஸ்தவப் பெண்ணை காதலித்து மணந்து கொண்டார். சம்ஸ்காரா பிறகு 1972-ல் திரைப்படமாக்கப்பட்டு சர்வதேச அளவில் பல விருதுகளை பெற்றதும் குறிப்பிடத்தக்கது. இன்னொரு நாவலான பாரதிபுரா விலை மாதர்களைப் பற்றியது. இதுபோக மூன்று நாவல்களையும், மூன்று சிறுகதை தொகுப்புகளையும் எழுதியிருக்கும் இவர் ஒரு கவிஞரும் கூட.

அவரது அவஸ்தை நாவல் மாறிவரும் அரசியல் போக்குகளைப் பற்றிய ஒரு காந்தியவாதியின் சலிப்புடனே பேசும். அதனால் பிற எல்லா அரசியல் கோட்பாடுகளையும் அந்நாவலில் கேள்விக்குள்ளாக்குவார். தெலுங்கானா போராளிகளை மாத்திரம், தியாகத்திற்கு நிகராக தனி மனித ஒழுக்கத்தை சரிவரப் பேணாதவர்கள் என்ற அவதூறையும் போகிற போக்கில் தூவி விட்டுச் சென்றிருப்பார். பிறப்பு என்ற நாவல் சாமான்ய குடும்பத்தில் வளர்ந்து வரும் பெண்களிடம் இருக்கும் சமூக கோபங்களை வெளிப்படுத்தும் சிறிய நாவல்.

ஆங்கில பேராசிரியராக, துணைவேந்தராக, மத்திய பல்கலையின் வேந்தராக எனப் பல பொறுப்புக்களையும் வகித்த இவர், நேஷனல் புக் டிரஸ்ட், சாகித்ய அகாதெமி போன்றவற்றிலும் பல முக்கியமான பொறுப்புக்களை வகித்தவர். பலமுறை ஜனதா தளக் கட்சி சார்பில் ராஜ்யசபாவிற்கும், மக்களவைக்கும் போட்டியிட்டு தோற்ற அனந்த மூர்த்தி தீவிரமான காந்தி பக்தர். அந்த வகையில் ராம் மனோகர் லோஹியாவின் எழுபதுகளின் இளைஞர்கள் இயக்கத்தில் இணைத்துக் கொண்டார்.

காந்தியை ஆதரித்த காரணத்தால் நேருவை விமர்சிக்க புகுந்த அவர், அதன் ஊடாக சர்வதேசிய கோட்பாடுகளை விமர்சிக்கவும் தயங்கவில்லை. அதனால் தான் காந்தி முன்னிறுத்தும் ராமனை, ‘தியாக’ மனிதனாக பார்க்கிறார். அதனாலேயே காந்தியின் தவறுகளை ராமனை வைத்து சமனப்படுத்த முயல்கிறார். கம்யூனிஸ்டுகள் காரிய சாத்தியமான விசயங்களை காந்தியை போல பரிசீலிக்க தவறுவதாக விமரிசிக்கிறார்.

அனுபவத்தின் மூலமாக மாற்றிக் கொள்ள ஏற்கெனவே திட்டம் என எதுவும் வைத்துக் கொள்ளாமல் தன்னையே தனது செயலுக்கு நீதிபதியாக நியமித்து பக்கசார்பின்றி நடந்து கொண்டார் காந்தி என்று சொல்லி, கோட்பாடுகளை, திட்டங்களை வைத்திருப்பவர்களை விட காந்தி உயர்ந்தவர் என நிலைநாட்ட முயல்கிறார். ஆனால் காந்தியமே ஒரு கோட்பாடு என்ற முறையில் ஜனநாயகத்தை மறுக்கும் பிடிவாதமாகவே காந்தியிடம் வெளிப்பட்டது. மக்களின் எதிர்ப்புணர்வை தணிப்பதற்கு காந்திய முறைகளும் கொள்கைகளும் ஆபத்தற்ற முறையில் இருந்ததாலேயே ஆங்கிலேயர்கள் சத்யாகிரகத்தை அனுமதித்தார்கள். போராட்டம் எல்லை மீறும் போது ஆங்கிலேயர்கள் பதட்டம் அடையத் தேவையின்றி காந்தியே கோபம் கொண்டு நிறுத்தியிருக்கிறார். இத்தகைய ஆளும் வர்க்க அடிப்படையை புரிந்து கொள்ளுமளவு அனந்தமூர்த்தியின் வரலாற்று பார்வை வளரவில்லை. அன்றைய கால முற்போக்கில் இத்தகைய பார்வை கொண்டோரும் கணிசமாக இருந்தனர்.

அதே நேரம் இந்திராவின் பாசிச அடக்குமுறைகளை எதிர்த்து பேச அவர் தயங்கியதே இல்லை. பி.எம்.ஸ்ரீ, சிவராம் காரந்த், மஸ்தி வெங்கடேஷ் ஐயங்கார், டி.பி.கைலாசம் என இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப கால இலக்கிய முன்னோடிகள் அனைவருமே பெண்ணடிமைத்தனம், சாதி அடக்குமுறை போன்றவற்றை ஆதிக்க சாதிப் பின்னணியிலிருந்து வந்தே எதிர்க்க ஆரம்பித்திருந்தனர். நாற்பதுகளில் ஏ.என் கிருஷ்ணா ராவ், டி.ஆர். சுப்பாராவ் (தா.ரா.சு) போன்றவர்கள் சமூக மாற்றத்துக்கான கருவியாக இலக்கியத்தை மேற்கொண்டனர். தாராசுவின் மசனாட கூவு என்ற நாவல் விலை மாதர்களைப் பற்றியது, ஹம்ச கீதா என்பது சித்ரதுர்கா பகுதியில் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு சூபி பாடகனின் திப்பு மீதான அர்ப்பணிப்பான வாழ்வு பற்றிய வரலாற்றுப் புதினம்.

அறுபதுகளில் தான் ராம் மனோகர் லோஹியாவின் சீடர்கள் இலக்கிய உலகில் பிரகாசிக்க துவங்குகிறார்கள். அவர்களில் ஒருவர் இன்று இந்துத்துவா கொள்கையை தூக்கிப் பிடிப்பதற்காக 2007-ல் அவுரங்கசீப்பின் ஆட்சிக் காலத்தை கொடூரமானதாக சித்தரிக்கும் நாவலை எழுதிய பைரப்பா. இது போக ஜி.எஸ். சிவருத்ரப்பா, பி.லங்கேஷ், நிசார் அகமது என ஒரு பெரிய படைப்பாளிகள் பட்டாளமே அரங்கிற்கு வந்தது. தொன்னூறுகளில் வந்தவர்கள் இதற்கு எதிரான நவயோதரா பிரிவை சேர்ந்தவர்கள். பூர்ணசந்திர தேஜஸ்வி, தேவனூர் மகாதேவா போன்றவர்கள் இப்போது வந்துள்ளனர். சமூக வேலையிலும் புறக்கணிக்கப்பட்ட பிரிவினரை பிரதிநிதித்துவம் செய்யும் எழுத்தாளர்களாக இவர்கள் பரிணமித்தனர்.

கன்னட எழுத்தாளர்கள் பொதுவில் சமூக அக்கறை உள்ளவர்களாகவே இருந்திருக்கின்றனர். மதக் கலவரங்கள், கன்னட இனவெறியர்களது தமிழர்களுக்கெதிரான கலவரங்கள் போன்றவற்றை எதிர்த்து பேரணி, பொதுக்கூட்டம், போராட்டம் என தங்களுக்குள் இணைந்து போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். இத்தகைய நிலைமைய தமிழக இலக்கிய உலகில் நாம் காண முடிவதில்லை.

பொதுப் பிரச்சினைகளுக்காக முதல்வர்களை சந்தித்து அங்குள்ள எழுத்தாளர் சங்கங்கள் மனு அளிப்பதும் அவ்வப்போது நடக்கும். பெங்களூரு உள்ளிட்ட பத்து நகரங்களின் பழைய பெயர்களை மீண்டும் சூட்டக் கோரி அரசுக்கு ஆலோசனை வழங்கி பழைய பெயர்களை காலனிய முறையில் இருந்து மீட்டவர் யு.ஆர்.அனந்தமூர்த்தி. தாமே தேவையான போது கையால் எழுதிய சுவரொட்டிகளை எடுத்துக் கொண்டு போய் வீதியில் ஒட்டி விட்டு வருவார்கள் அங்குள்ள எழுத்தாளர்கள். அனந்தமூர்த்தி அப்படி பலமுறை செய்திருக்கிறார்.

2004-ல் தேவ கவுடாவின் மதச் சார்பற்ற ஜனதா தள வேட்பாளராக தேர்தலில் நின்று படுதோல்வி அடைந்தார் அனந்தமூர்த்தி. பிறகு அதே மதச்சார்பற்ற ஜனதா தளம் பாஜகவுடன் கூட்டணி வைத்தபோது, ‘முன்னாள் நண்பர்களே! உங்களது இந்த இழிவுச் செயலை நான் எப்போதும் மறக்கவே மாட்டேன்’ என்றும் குறிப்பிட்டார். ஆனால் சேரும்போதே தேவகவுடா கும்பலின் ஆளும் வர்க்க அடித்தளத்தை புரிந்து கொள்ளும் தேவை அவரது சிந்தனையில் இல்லை. 2007-ல் பைரப்பாவின் நாவல் ஔரங்கசீப் ஆட்சியில் நடந்த லவ் ஜிகாத் என்ற புனைவினை முன்வைத்த போது ‘பைரப்பாவுக்கு எழுதவே தெரியவில்லை’ என்று மென்மையாக தனது கண்டனத்தை முன்வைத்தார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் ஒரு கூட்டத்தில் ‘மோடி பிரதமரானால் நான் இந்தியாவின் பிரஜையாக இருப்பதை விரும்ப மாட்டேன். அப்படி ஒருவேளை வந்துவிட்டால் நேருவும், காந்தியும் கனவு கண்ட இந்தியா நமக்கு கிடைக்காது. ஊழல் செய்தார்கள் என்பதனால் காங்கிரசு தண்டிக்கப்பட வேண்டுமேயொழிய, மோடியை தேர்ந்தெடுப்பது அதற்கு தீர்வாகாது’ என்றும் பேசினார். இந்துத்துவ வானரங்கள் இதனால் அவருக்கு எதிராக கடுமையான மிரட்டலை கண்டனங்களாக பதிவு செய்தன. அதனாலேயே, தான் உணர்ச்சிவசப் பட்டு சொன்னதாக கொஞ்சம் பின்வாங்கினார் யு.ஆர். அனந்தமூர்த்தி. இந்துமதவெறியை எதிர்த்து ஒரு காந்தியவாதி இவ்வளவு உறுதியாக இருப்பதே பெரும் விசயம். அதே நேரம் அதுவே அவரது வரம்பையும், அச்சத்தையும் ஏற்படுத்துவதற்கு காரணமாக இருக்கிறது.

மோடி வென்ற பிறகு அனந்தமூர்த்திக்கு பாகிஸ்தான் விமான டிக்கெட் போட்டு அவருக்கே அனுப்பி வைத்தனர் இந்துமத வெறி பாசிஸ்டுகள். தொடர்ந்து மெயில்கள், செல்பேசிகள் மூலமாக அவருக்கு தொல்லைகள் பலவற்றை கொடுத்து வந்தனர். பல இந்துத்துவா அமைப்புகளிடமிருந்து கொலை மிரட்டல்கள் வருவது அதிகரித்ததால் காவல்துறையினரின் பாதுகாப்பு அவருக்கு தரப்பட்டது. எனினும் மன உளைச்சல் அதிகரித்த நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மரணமடைந்துள்ளார்.

அவர் மரணமடைந்த அன்று உடனடியாக மோடி இரங்கல் செய்தியினை தெரிவித்துள்ளார். ஆனால் மங்களூர் நகரத்தில் உள்ள மோடி ரசிகர்களான பஜ்ரங் தள் அலுவலகத்தில் அன்று அதனை வெடி போட்டு கொண்டாடி இருக்கிறார்கள். மோடியின் இரங்கல் ஒரு நாடகம் என்பதை அந்த வெடிகள் உலகிற்கு தெளிவாக அறிவித்தன. அம்பேத்கரின் மறைவு நாளான டிசம்பர் ஆறு அன்றுதான் பாபர் மசூதியை இடிக்க ஆர்.எஸ்.எஸ் முடிவெடுத்தது. மசூதியை இடித்த கொண்டாட்டத்தையும், அம்பேத்கரின் திவசத்தையும் ஒரு விழா போல கொண்டாடினார்கள்.

இத்தகைய மதவெறியர்களிடம் அனந்த மூர்த்தியின் மறைவன்று மட்டும் நாகரிகத்தை எதிர்பார்ப்பது எப்படி சரியாக இருக்க முடியும்.?

–    கௌதமன்.

  1. காந்தியை போலவே [அனந்தமூர்த்தி]அவரும் ஹிந்து மதத்தை மெச்சி அது ஒரு மாபெரும் மதம் என்று கூறும் விடயத்தை இக் கட்டுரை ஆசிரியர் தவிர்த்தது ஏனோ ? ஹிந்து பாசிஸ்டு rss bjp ஆகியவற்றை எதிர்க்கும் அவருக்கு, அவற்றின் இயக்கு சக்தியாகிய ஹிந்து மதம் மட்டும் “மாபெரும் மதமாக” தோன்றுவதற்கு காரணம் அவர் அறிவின் முரண்பாடு எல்லாம் இல்லை. அதற்கு பெயர் அவர் சார்ந்த பார்பன சாதியின் சுய பெருமையும் , காங்கிரஸ் கொண்டு உள்ளது போன்ற மிதவாத ஹிந்து மத நம்பிக்கைகளும் தான் என்பதை இக் கட்டுரை ஆசிரியர் உணரவேண்டும்.

    இவரை எல்லாம் ஜனநாயக பூர்வமானவர் ,மத சார்பற்றர் என்று கூறுமளவுக்கு இவரிடம் ஏதும் நடுநிலைமை இருந்ததாக இவரின் வாழ்வு தடம் சுட்டிகாட்டவில்லை. வேண்டுமானால் ஹிந்து மதத்தின் மிதவாதம் பேசும் குழுவுக்கு தலைவர் ,பிரதிநிதி என்று கூறலாம்.

    அனந்தமூர்த்தி கூறும் “எல்லோரையும்போல கங்கையைப் புனிதம் என நம்புவதிலும், இராமயணம், மகாபாரதம் மற்றும் உபநிடதங்களில் ஆழ்ந்த ஆன்மீக தரிசனங்கள் உள்ளன என ஏற்பதிலும் ஒரு அகன்ற பார்வையில் நானும் ஒரு இந்துதான். எல்லாவற்றையும் நானும் நம்புகிறேன்”

    இந்த விடயம் அவரின் சிந்தனையின் உள் ஒளியை காண மிகவும் முக்கியமானது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க