Monday, August 15, 2022
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க குண்டர் சட்டத் திருத்தம்: திறந்தவெளி சிறையாகும் தமிழகம்!

குண்டர் சட்டத் திருத்தம்: திறந்தவெளி சிறையாகும் தமிழகம்!

-

ந்தியா ஒரு ஜனநாயக நாடு என்று ஆதாரபூர்வமாக இல்லையானாலும் ஒரு வாதத்திற்காவது சொல்லக்கூடியவாறு இருப்பவை, அரசியல் சட்டப் பிரிவுகள் 21,22. அவைதாம் இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவரின் வாழ்வுரிமையையும் குடியுரிமையையும் ஜனநாயகவுரிமையையும் உறுதி செய்கின்றன. 1975-76-ம் ஆண்டுகளில் இந்திராவின் அவசரகால ஆட்சி அவ்வுரிமைகளை இரத்து செய்தது; அதனால், ஒரு போலீசு அதிகாரி தன் சொந்தக் காரணங்களுக்காக ஒரு குடிமகனைச் சுட்டுக்கொல்வதும் ஏற்கப்படுகிறதா என்று உச்ச நீதிமன்றத்திடம் கேட்கப்பட்டது. “ஆம், அப்படித்தான் ஆகிறது” என்று சொன்னார்கள். இப்போது, இந்திய அரசியல் சட்டத்தின் 21,22-வது பிரிவுகளை இரத்து செய்துவிடும் விதமாக, அதாவது தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் வாழ்வுரிமையையும் குடியுரிமையையும் ஜனநாயகவுரிமையையும் பறித்து எந்தவொரு குடிமகனையும் விசாரணையின்றி ஓராண்டு சிறையிலடைக்கும் அதிகாரத்தை அதிகாரிகளுக்கு வழங்கும் குண்டர் சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியிருக்கிறது, ஜெயலலிதா அரசு. இதன் மூலம் அவசரகால பாசிச ஆட்சியைத் தமிழகத்தில் மறைமுகமாகப் பிரகடனம் செய்திருக்கிறது. இந்த வகையில் பிற மாநில அரசுகளுக்கு முன்னோடியாக இது விளங்குகிறது.

1982-ல் பாசிச எம்.ஜி.ஆரால் குண்டர் தடுப்புச் சட்டம் முதன்முதலாக நிறைவேற்றப்பட்டது. கடந்த 32 ஆண்டுகளில் தொழில்முறை ரவுடிகள், கள்ளச் சாராய வியாபாரிகள், போதை மருந்துக் குற்றவாளிகள், வனக்குற்றவாளிகள், விபசாரத் தொழில் குற்றவாளிகள், மணல் கடத்தும் குற்றவாளிகள், புறம்போக்கு – குடிசைப் பகுதி நில அபகரிப்பாளர்கள், திருட்டு வீடியோ தயாரிப்பவர்கள், பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிப்பவர்கள் – என்று ஒவ்வொன்றாகச் சேர்த்து ஊதிப் பெருக்கி, இக்குற்றங்களில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளவர்களையும் ஓராண்டு காலம் விசாரணையின்றிச் சிறையில் அடைப்பதற்கானதாக மாறியது.

இந்தச் சட்டத்தை மேலும் சில திருத்தங்களோடு கடுமையாக்கியுள்ளது, ஜெயலலிதா அரசு. இதன்படி இதுவரை தெளிவாக, கறாராக வரையறுக்கப்படாமல், கேடாக ஏவப்படும் இணையக் குற்ற வழக்குகள்; குற்றவாளிகளுக்கே சாதகமாக முடிந்து போகும் பாலியல் குற்ற வழக்குகள் – இவையும் விசாரணையின்றித் தண்டிக்கக் கூடியவையாகும். இதுவரை, கிரிமினல் குற்றங்கள் புரிவதை வழக்கமாகக் கொண்டவர்கள் மட்டும், அதாவது மூன்று, நான்கு முறை குற்றப்பதிவுக்கு ஆளானவர்கள் மீது மட்டும்தான் குண்டர் சட்டம் பாயும் எனச் சொல்லப்பட்டதை, இனி, முதல்முறை குற்றம் செய்தவர்கள் மீதும் இக்குற்றங்களில் ஈடுபடுவார்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் மீதும் பாயும் வகையில் இந்தச் சட்டம் திருத்தப்பட்டுள்ளது. குற்றங்களைத் தடுப்பது, குறைப்பது என்ற பெயரில் கிரிமினல் குற்றவழக்கு முறைமைகளுக்கு எதிராகவும் அரசியல் எதிரிகளைப் பழிவாங்கவும் நிரபராதிகளையும் தண்டிக்கவும் அரசும் ஆட்சியாளர்களும் கைக்கொள்ளும் பாசிச முறையிலானது இந்தச் சட்டம்.

கிரிமினல் குற்றங்களைப் புரிந்து விட்டு, சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்திக் குறுக்கு வழிகளில் தப்பித்துக் கொள்பவர்கள் மேலும் குற்றங்கள் செய்யாமல் தடுப்பதற்கான வழிதான் குண்டர்கள் தடுப்புச் சட்டம் என்று அரசியலற்ற பலர் நம்புவதுதான் அரசுக்கும் ஆட்சியாளர்களுக்கும் வசதியாக உள்ளது. ஆனால், பெரும்பான்மை வழக்குகளில் குண்டர் சட்டத்தைப் பயன்படுத்தியது தவறெனவே நீதின்றங்கள் தீர்ப்பளித்துள்ளன. ஜெயலலிதாதான் பல கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதியப்பட்டும், குறுக்குவழிகளில் பல ஆண்டுகளாகத் தப்பித்துக்கொள்ளுவதை வழக்கமாகக் கொண்டவர். ஆகவே, நீதிமன்றத் தீர்ப்புகளை மதியாது குற்றங்களைத் தொடரும் அவர்தான் முதலில் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் தள்ளப்பட்டிருக்க வேண்டியவர்.

– தலையங்கம்
________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2014
________________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க