privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகதைவிஷக்காலிகள்

விஷக்காலிகள்

-

“ஏய்… சின்னண்ணா நம்மூர் கயினி வெளியில எலி புடிக்க வருவாரே, பாவம் அவுரு, செத்துட்டார் தெரியுமா?…”

“யாரு வில்லியா…?…!” ஆச்சரியமாய் ஆரம்பித்த ஆதிகேசவன் சற்றுயோசித்து “வில்லி போய் பாம்பு கடிச்சி செத்துட்டாரா?” நிறுத்தி நம்பிக்கையில்லாமல் கேட்டான். “இன்னா கிண்டல் பண்றயா நாயே…” என்று கேலி, கோபம், ஆதங்கம், வேதனை அனைத்தும் கலந்த குரலில் மறுபடி மெதுவாகக் கேட்டான்.

“அய்ய… மூஞ்சப்பாரு, எது எதுல கிண்டல் பன்னுவாங்கன்னு வெவஸ்தையே இல்ல உனக்கு” உதடுகள் துடிக்க புருவங்களை நெருக்கிக் கொண்டு சற்று கோபமாகவே ஷானு சொன்னாள்.

“இல்லம்மா, எப்பேர்க் கொத்த பாம்புக் கடிக்கும் வெறும் பச்செல மருந்த குடுத்து, வைத்தியம் பாத்து செரியாக்குற வில்லி போய் பாம்பு கடிச்ச செத்துட்டார்னா நம்பவா முடியுது… ” சிறிதே நம்பிக்கை வந்தவன் நினைவுகள் பின்னுக்கு ஓடின.

“உனக்கு தெரியுமா ஷானு… ம்… நீயெல்லாம் அப்ப பொறக்கவே இல்ல நானே அஞ்சாவுதுதான் படிக்கர(ன்).”

“ஒரு நாள் ராத்திரி நல்ல அம்மாச கருக்கல் பன்னெண்டு மணியிருக்கும்; திடீர்னு கோழிகத்தற சத்தம் கேட்டு இன்னாடா இன்நேரத்துல கத்துத, காட்டு பூனை கீட்டுபூன வந்து புடிக்குதா, பொத்த கூடையால இல்ல கோழிகவுத்தம்னு துடிச்சிபுடிச்சு எழுந்து ஓடி கூடைய தொட்டுகீறாரு நைனா.

“சுருக்குனு குத்திகீது. ஒடனே இருட்ல இன்னாடா குத்துதன்னு, பக்கத்துல தடவினா அடுப்புக்கு தறிச்சி வக்கும் வேலிக்காத்தான் முள்ளைகூட காணல. சந்தேகம் வந்து ‘ஜ்ஜேய் பொண்ண கருக்காமலையா சீக்கரம் வெளக்க கொளுத்தியா, இன்னமோ சுருக் சுருக்குனு குத்துனமாரி இருந்திச்சி, ….ன்னதும் வாரிசுருட்டிக்கினு சித்தி ஓடி காலெளக்க (காடா விளக்கு) கொளுத்தியாந்து பாத்தா, நல்லபாம்பு கோழிகாலபோட்டு வலுவா பின்னிக்கினு தலைய கூடை பொத்தல் வழியா வெளிய வுட்டு நட்டுகினு பாத்துங்கீது.

“இன்னா பண்ணுவ, சித்தி பாவம் ‘கூவோ மொறையோன்னு’ கத்தி கூச்சல் போட்டதுல நம்ம சந்து ஜெனம் பூரா கூடிப்போச்சி. மாரிமுத்து அவுங்க அப்பன் ஓடியாந்து, இடுப்புல கட்டியிருந்த அண்ணாகவுர அறத்து கடிவாய்க்கு மேல நல்லா விகிஞ்ஜி கட்டு போட்டாரு.

“நடந்தா வெசம் விறுவிறுன்னு ஏறி தலமாடு கொண்டுடும்னு, கட்டல்ல படுக்கவச்சி ரெண்டுபேரா தலமேலையே தூக்கிக்கினு ஓடனாங்க. நாங்கூடத்தான்…

“மணி ஒன்னு ஒன்ற இருக்கும், கொரல் குடுத்தத்தான் தாமசம், அந்த வில்லி அறக்க பறக்க எழுந்து வெளிய ஓடியாந்து, இன்னா ஏதுன்னு விஷயத்த கேட்டு. ‘நீங்க யாருனா கடிவாய கடிச்சி வெசத்த உறிஞ்சி எடுத்தீங்களா சாமி…’ன்னதும், இவுங்க எல்லாரும் ‘இல்லை..ய்ய்யா கட்டுத்தான் போட்டோம்’னாங்க. அப்பல்லாம் நைனாவுக்கு ஒடம்பெல்லாம் தண்ணியா உட்டு தன்னமீறி போச்சி. கீரத்தண்டுமேரி வெலவெலன்னு உழுந்துட்டாரு.

“இந்த விசயத்த எல்லாம் கேட்டுக்குனே, சிடுக்கா நாழியில பச்செல மூலிகைய எடுத்தாந்து ‘நாலு கடி’ மருந்த உள்ளுக்கு குடுத்தாரு. நல்ல வேள வாந்தி வரல, வாந்தி மட்டும் வந்திருந்திச்சு ஆள கண்டுபுடிக்கறது அறிகண்ணாயமாயிட்டும் இருக்கும்.

“அன்னக்கி ராத்திரி வில்லிவூட்டு புள்ளகுட்டியெல்லாம் முழிச்சிக்கிச்சி. சும்மா சொல்லக்கூடாது. பொழுந்து விடியரவெரிக்கும் ஒருத்தரும் கண்ணாட கண்ணு மூடல, அந்தாளு சம்சாரம் பாவம் அந்நேரத்துல சூடா சுக்காப்பி போட்டு போனஜெனம் பூராத்துக்கும் குடுத்தாங்க.

“நாங்கூட குடிச்சேன், நல்லா நெனப்பு கீது ஷானு” என்றவன் சொல்லும்போது இப்போதுதான் அந்த காப்பியை குடித்ததுபோல் ரசித்து எச்சிலை கூட்டிக் கூட்டி விழுங்கினான்.

“அத்தோடவா வுட்டாங்க, பாம்பு கடிபட்டவங்க இருவத்தினாலு மணி நேரம் தூங்கக்கூடாதுல்லா, அதால வில்லிவூட்டு பசங்க அவுங்க கொலதெய்வத்த வேண்டி கூத்தாடுறதும், வில்லிங்க வீரத்த கதையா சொல்லும் ‘வில்லி வில்லி நாங்கத்தான் வேட்டக்காரு நாங்கத்தான்…’ பாட்ட பாடறதும், ஒரே அமுக்களம்.

“பளபளன்னு பொழுது வெடிஞ்சதும் சூரியன கும்புட்டு ஒரு வேள மருந்த கைல குடுத்து, ‘இனிமே கல்லால அடிச்சாலும் சாவு கெடையாது பயப்படாத கூட்டிம்போங்கம்மா” என்று சொன்னவர், “சொல்ல மறந்துட்டேன் மூணு நாளுக்கு உப்பில்லாத கஞ்சிதான் குடிக்கணும். நெனப்பு இருக்கட்டும் நாட்டு மருந்து பத்தியம் இல்லான்னா உசுருக்கு ஆபத்தாயிடும்”ன்னு தடித்த குரல்ல சொன்னார்.

சொன்னது சொல்லாங்காட்டியும், சித்தி அவர் கால்ல உழுந்து நீ நல்லா இருக்கணும் எப்பா, எனுக்கு மடிப்பிச்ச குடுத்த மவராசான்னு சொல்லிக்கினே எழுந்து, முந்தானியில முடிஞ்சி வச்சிருந்த பத்து ரூவாவ அவுத்து குடுத்தா.

வில்லி நெருப்ப தொட்டது போல “எம்மா இன்னா காரியம் பன்ன எங்க கொலதேவத டேண்டமாரிய பத்தி உனுக்கு தெரியாதா, இந்த பூலோக மக்க(ள்) உசுரகாக்கற இந்த மருந்துக்கு கூலியா பச்சதண்ணிகூட வாங்கமாட்டாம்னு சத்தியவாக்கு பண்ணிட்டு தான், ஆத்தா நல்ல பச்சலமூலிகய வச்சி படைச்சிட்டு மருந்தையே அம்மியில வச்சி அரைப்போம். அவ வாக்க மீறுனா எங்க குடும்பத்த வரக்கா சொறக்காவா ஆக்கிடுவான்னு சொல்லி வானத்தைப் பாத்து கும்பிட்டார்.

‘உடனே என்ன மன்னிச்சிடு யாம் பத்தினி மாரியம்மா புத்திகெட்டன் பீயத்துன்னன்’னு இன்னாவோ ஆணைக்கி கட்டுப்பட்டாமாரி ரெண்டு கைகளாலும் கன்னத்தில் மாறிமாறி புத்தி போட்டுக்குனு அழுதுடிச்சி சித்தி. வூட்டுக்குப் போவ காலெடுத்து வச்சது திரும்பி, ‘ஐயா மறந்தே பூட்டன் இவர கூட்டியார அவுசரத்துல பாம்பு எந்த பக்கம் போச்சின்னு அடிக்காம உட்டுட்டு ஓடியாந்துட்டம். இன்னிக்கி வூட்டான்ட வந்து அந்த கருமத்த புடிச்சாந்துடு சாமி, புள்ளகுட்டிவ நடமாடர எடம்’ன்னுட்டு வூட்டுக்கு கெளம்பினாங்க.

“கோழிய கடிச்சிபோட்டு சாக்கடை உள்ளே கொட்டிவச்சிருந்த பனங்கொட்டைங்க சந்துல போய் கமுக்கமா படுத்துக்குனு இருக்குது. இது தெரியாம மருந்து குடுத்து கூட்டியாந்த மனுசன வாசல்லயே ஒக்கார வச்சிட்டாங்க, பாம்பு எங்க வூட்டு உள்ளே போய்டுச்சோன்ற பயத்துல.

“சிவாவும், பாலண்ணனும் வாசல் எதுருல ஊடு கட்ட பதுவுபோட்டு வைச்சிருந்த பனஓலை, வெருவு எல்லாத்தையும் கலைச்சி போட்டுட்டு தேடினாங்க.

“ஆனா வில்லி வந்த ஒடன சொல்லிவச்சமேரி எறும்பு மொச்சிங்கெடந்த கோழிய பாத்துட்டு, நேரா அந்த பாம்பு போன வழிய கண்டு போய், கோமணத்த நல்லா இருக்கிவுட்டுக்கினு இடுப்புல கட்டிவச்சிருந்த மருந்த எடுத்து வாய்ல அடக்கிக்கினு பனங்கொட்டைங்க சந்துல கையவுட்டு லபுக்குனு புடிச்சி அசால்ட்டா இழுத்தார், மொழங்கால் கனத்துக்கு நெளியுது. வில்லிங்களுக்கு பாம்பு போற காலடி கரக்ட்டா தெரியும், அதான் பாம்பு எங்க போனாலும் புடிச்சிடறாங்க.

“அப்பவே வாய நெகிட்டி வெஷப்பல்ல புடிங்கிட்டு வாசல்ல உட்டாரு; மொறம் அகலத்துக்கு படம் எடுத்துக்கினு, பந்து எகுருறமாதிரி மனசன் மேல சீறிக்கினு பாயுது. நானு, மோகனு, கோய்ந்து எல்லாம், பெரியவங்களும் எங்ககூட சுத்தி நின்னுக்கினு வேடிக்க பாத்தோம்.

கொஞ்ச நேரம் வெள்ளாட்டு காட்டிட்டு பேனாகெத்தியால தலையாண்ட ஒரு கீறு கீறி புடிச்சி இஸ்தாரு. அப்பிடியே சொக்காய கழட்டுன மாதிரி தோலு உரிச்சிக்கினு வந்திச்சி.

“தோல உரிச்சிட்டதும் உக்கரம் ஜாஸ்தி ஆய்டிச்சி, வில்லிய எகிறி எகிறி அடிக்கிது. அத புடிச்சி சின்ன பசங்க மேல போடறமாதிரி காட்னதும் நான் ஓடியாந்து எங்க வூட்டு உள்ளே பூந்துக்கின(ன்).

“வூட்ட சுத்தி உப்பு மந்திரிச்சி கொட்டினார். உப்பு மந்திரிச்சி போட்டார்னா அத்தாண்டி பாம்பு உள்ளே வராது. வில்லி நாகராஜன் கிட்ட சத்தியம் வாங்கிடுவார். அத மீறி உள்ளே வந்த எந்த பாம்பா இருந்தாலும் செத்துடும்.

“சித்திய கூப்புட்டு ‘கோழிகள இங்க கவுக்கவேணாம். கோழிபீநாத்தத்துக்குத்தான் நல்லபாம்பு வரும். அதால இனிமே அந்த பூர்சமரத்து ஒட்டி தனியா கவுருங்கன்’னுட்டு, பாம்பு தோல கழுத்துல போட்டுக்குனு, உரிச்சிட்ட பாம்ப கைல சுத்தி புடிச்சிக்கினு, வில்லி தெருவுல நடந்து போவும்போது ஊர் ஜெனமே வாய்மேல வெரல வச்சிக்கினு பாத்திச்சி. சூராதி சூரனை பார்க்கறமேரி.

***

முடிந்த அளவு ஞாபகம் வந்த விசயங்களைக் கூறியதற்கே ஆதிகேசவனைச் சுற்றி சின்னபிள்ளைகள் கூட்டம் கூடிவிட்டது அதை பெருமையுடன் பார்த்து ஒரு மெல்லிய சோகம் கலந்த புன்னகையை வெளியிட்டான் ஆதி.

“ஆமாம்… யாரு டேண்ட டேண்ட டேண்ட மாரியம்மாளே…” பாட்டுப் பாடி பொம்பள வேஷம் கட்டிக்கினு ஆடுவரே அவரையா சொல்ற.” என்ற ஆதியின் மனதுக்குள் வில்லியர் மாரியாத்தா கும்பிடுவதற்காக ஆளாளுக்கு வேஷம் கட்டிக்கொண்டு வருவதும்; ஒத்தை மேளத்தை (பறை) தோளில் மாட்டிக்கொண்டு வீடு வீடாய் சென்று ஆடும் ஆட்டங்களும், வித விதமான ராகங்களில் ஏற்ற இறக்கங்களுடன் பாடும் பாடல்களும் அலை அலையாய் வந்து சென்றன.

“இல்லை சின்னண்ணா மோளம் அடிச்சிக்கினே ஆடுவாரே அசப்புல நம்ம ஏமாறச்சக்கண்ணு பெரிப்பா மாதிரி…” ஷானு வார்த்தையை இழுத்து முடிப்பதற்குள் கெவுளியைப்போல் உச்சுக்கொட்டினான் ஆதி.

“அய்யய்யோ… ரெண்டு பேருமே மருந்து குடுப்பாங்க. நான் முன்ன சொல்லல நைனாவுக்கு மருந்து குடுத்தார்னு அவரும்மா, ச்… எத்தினி பேருக்கு பாம்பு வெஷத்துலர்ந்து காப்பாத்தி உசுர் குடுத்த மனுசன் கடைசில பாம்பே அவுருக்கு எமனாய்ட்டு கீதே.”

நுரையீரலுக்குள் உருவான வெப்பக்காற்றை ஸ்…. ஸ்சூ என ஊதி வெளியேற்றிவிட்டு மறுபடி நினைவில் நீந்திப் பேச ஆரம்பித்தான் ஆதி.

“நல்லா நெட்ட பனையாட்டம் இன்னா தேககட்டு. மல்லாட்ட கொல்லையில எலிபுடிக்க வந்தார்னா ஊதலான் வச்சி பொகை ஊதி எத்தினி எலிபுடிச்சாலும், நாங்க சின்ன பசங்கள்ளாம் சுட்டுத்தின எலிவேணுன்னு கேட்டா புடிச்சத பூராத்தையும் எங்களாண்ட குடுத்துட்டு மொளச்சி போன நெல்லையும், மல்லாட்டையையும் தான் அள்ளிக்கினு போவார்.

“களத்துமேட்டில் நெல்லோ, மொளகாயோ எது காஞ்சிங்கெடந்தாலும் யாரும் காவலுக்கு இல்லாட்டா கூட கையவச்சி தொடமாட்டார் நம்பளா மனசு வந்து குடுத்தா உண்டு.

“ச்சே எப்பேர்பட்ட மனுசனுக்கெல்லாம் எப்பிடியெல்லாம் சாவுவந்து தொலைக்குது… அது செரி ஷானு. எங்க… எப்பிடி செத்தாரு. மருந்து கைல வச்சில்லய்யா…

ஆதியை மறித்து ஷானு வில்லிக்கு நேர்ந்ததைச் சொல்ல ஆரம்பித்தான்.

“நம்ம உண்டை பெரியப்பா வூட்டு கயினில்ல மடுவா இருக்கு. அங்க… அந்த கயினில நண்டு வள நோண்டும் போது நோண்ட நோண்ட ஆழமா போய்க்கீது “எம்மா பெரிய ஆழன்டா எப்பான்தான் கையவுட்டு பாத்துக்கீறாரு. வலைல இருந்த பாம்பு வெடுக்குனு கைய கடிச்சிகீது. அப்ப இவுரு “கைய்யாடி கடிக்கிர உன்ன உப்பு மொளகா தடவி சுட்டு கடவாய்ல வச்சி கடிக்காம வுடரதில்லன்னு” புடிச்சி இஸ்துகீறாரு. நல்லா வெட பாம்பு ஒரு ஆள் நீட்டுக்கு கைல நாய் கோத்துபுடுங்கறமாறி புடுங்கிக்கினு தொங்குதாம்.”

“…ம்… டக்குனு மடியில கட்டியிருந்த பச்செல மருந்த வாயில போட்டு அடக்கி சிரிச்சிக்கினே என்னையாடி கடிக்கர உன்னை எலியின்னுல்ல நெனச்சேன் இன்னா பண்றன் பார்னு பல்ல ஒடச்சிட்டு தோலை உரிச்சி வேஷ்டியில் வைச்சி மூட்டை கட்டிக்கினு பாம்ப அடிச்சி கெணத்து மேட்டில் பள்ளந்தோண்டி பொதச்சிட்டு பஸ் ஸ்டேண்டு போவாங்காட்டியும் தலை சுத்த ஆரம்பிச்சிட்டு இருக்குது.

“அய்யய்யோ அப்பறம்…”- ஆதி பதறினான்.

“பயந்துபோய் ராஜி டாக்கடர் வூட்டுக்கு ஓடி இந்தமாரி இந்தமாரின்னு வெவரத்த அழமாட்டாத கொரையா சொல்லிகீறாரு. அதுக்கு அந்த டாக்கடர் முன்னூத்தி அம்பது ரூவா ஆவும்ன்னானாம். “ஆனா ஆயிட்டு போவுது வுசுருக்கு மிஞ்சியின்னா மசுரு சொல்லும்மா” என்று திண்ணையிலிருந்த ஆதி மேடை நுனிக்கே வந்துவிட்டான்.

“பாம்பு தோல், சேறும் மண்ணுமா கெடந்த மொளவிட்ட நெல்லு, மல்லாட்ட எல்லாத்தையும் சேத்து, கிழிஞ்சி போன அழுக்கு வேஷ்ட்டியால கட்டின மூட்டைய செவுத்து ஓரமா வச்சிட்டு, காச வூட்டுக்கு தான் போய் எடுத்தார்னும்னு வில்லி முடிக்காங்காட்டியும். “போய்யா… போய்… மொதல்ல காச எடுத்துட்டு வான்”னு சொன்னானாம் ராஜி.

“அடக் கொடும்… பாவி…” கண்களை மூடி மூடித் திறந்து கொண்டு ஆதி சொன்னதும், ஷானுவும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் பேசினாள்.

“பாவம் அந்த வில்லி. ராஜி டாக்கட்டர் கால்ல நெடுஞ்சாண்கட்டையா விலுந்து ரெண்டு காலையும் கெட்டியமா புடிச்சிக்கினு, ‘அய்யா என் உசுர காப்பாத்துங்க நான் இப்பிடியே காட்லர்ந்து தான் வர்ரேன். சின்னதும் சீத்தானுமா ஆறும் பொட்டபுள்ளங்க சாமி, என்னை வுட்டா அவுகளுக்கு நாதி கெடையாது. மருந்த தாங்க நான் வூட்டுக்கு போய் பணத்த கொண்டாந்து தந்துடரேன். உங்க புள்ள குட்டிவளுக்கு கோடி… கோடி… புண்ணியம் வந்து சேரும்’ன்னு. இன்னான்னாவோ சொல்லி அழுது பொலம்பி கெஞ்சியிருக்கறார். ‘வாத்தியார் கூலியும் வைத்தியர் கூலியும் குடுக்காதவங்களுக்கு எமதண்டியில இன்னா தெண்டனன்னு எனுக்கு தெரியும் சாமின்னு கூட சொல்லி கலங்கியிருக்கார்.

“அந்த கலுவாநெஞ்சுக்காரன் யோவ் இன்னாய்யா உட்டா தத்துவமு எல்லாம் பேசிட்டு இருக்கர காசு இருந்தா குடு இல்லன்னா எடத்தகாலி பண்ணுன்னு கராரா சொல்லி… கழுத்த புடிச்சி வெளிய தள்ளி கதுவசாத்திட்டானாம்.

“கண்டிப்பா நீ ஒன்னாபாரு ராஜி செத்தான்னா அவனுக்கு அட்டகுழி, அரணகுழி, பாம்பு குழி, பல்லி குழிதான்….” எச்சிலை கூட்டி கூட்டி முழுங்கி அழுத்தி அழுத்தி கூறும்போது ஷானுவின் கண்கள் கலங்கியிருந்தன.

“யார் காந்தி டாக்டரா, வைஜெயந்திமாலாவா நல்லா யோசிச்சி சொல்லு, ராஜி டாக்டர் அப்படி செஞ்சிருக்கமாட்டாரே.”

இவ்வளவையும் கேட்டபின்பு ஆதி இப்படி கேட்டது ஷானுவுக்கு அளவில்லா கோபத்தை உண்டாக்கியது.

“நான், ராஜி… ராஜின்னு.. படிச்சி படிச்சி சொல்ரன் வெடிய வெடிய ராமாயணம் கேட கதயா இன்னா பேசர நீ” என்று நிறுத்தினாள் ஷானு.

ச்சே. ஒரு டாக்டர், தாசிகூட செய்யக்கூசுற காரியமல்லவா, இவன்லாம் நினைக்க நினைக்க உலைகொதிப்பது போல் கொங்கியது கோபம். இதுநாள் வரை மருத்துவர்கள் மீது ஆதி வைத்திருந்த அதீதமரியாதைகள் என்ன ஆனதென்று அவனுக்கே தெரியவில்லை.

“அந்த பொறுக்கி ராஸ்கோலை சும்மாவா வுட்டாங்க ஜனங்க.”

“தெற்கசேரி ஜெனங்க மட்டும்….” ஷானு வாயெடுப்பதற்குள் இன்னொரு குரல் எழுந்தது.

“ஆமாம் போய் கீய்… ச்சிட்டாரு பணம் இல்லாம எவன்தான் மருந்து குடுப்பான்” கட்டையாக சம்பத்தின் குரல். இவன் எப்ப வந்தான் இங்க என்பது போல ஆதி திரும்பிப் பார்த்தான்.

“டே… செம்போத்து உசுர்டா காலகாலப்புடிச்சி செஞ்சிக்கீறான். நெனச்சாலே நெஞ்சி அபுக்குன்னுதுடா.”

“ஆமாம் பெர்… ரீ… ய உசுரு அவன் எம்மாம் செலவு பண்ணி படிச்சி பட்டம் வாங்கியிருப்பான்.”

“…யான்டா டேய்… டாக்டருக்கு படிக்கறது ஊர் ஜெனங்களுக்கு உயிர்பிச்ச குடுக்கடா, ஏழை பாழை தாலியறுத்து எள்ளுந்தர்ப்பனை பண்ரதுக்கா இல்ல.”

“போடா டேய் அவன சாவடிச்சது இன்னாவோ டாக்கடர்ன்ர மாதிரி பேசற ஃபஸ்ட் எயுடு கூட பண்ணிக்க தெரியாதது அந்த வி…ல்…லியோட தப்பு”

‘வில்லி’ என்ற பெயரை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேவலமாக உச்சரித்தான் சம்பத் தொடர்ந்து.

“கண்ட கண்ட மருந்தல்லாம் வேற தின்றது திருந்தாத ஜென்மங்க, அது சரி மருந்துன்னா டாக்டருக்கு மட்டும் சும்மாவா கெடக்கிது, நீயெல்லாம் இருந்தா வில்லிய திரும்பி கூட பாத்திருக்க மாட்ட ஏதோ அவரா இருக்கவோ நின்னு பதிலாவது சொன்னாரு”

நிறுத்தி அக்கம்பக்கம் பார்த்துவிட்டு,

“நாய்ங்க ஒரு டாக்டர்னுகூட பாக்காம வூட்டு ஜன்னல் கண்ணாடியெல்லாம் ஒடச்சியிருக்குதுங்க. இன்னாதான் இருந்தாலும் சேரி புத்திய காட்டிருச்சிங்க பார்”

நிறுத்தியதுதான் தாமதம்.

“அந்த நாதாகு படிச்ச புத்திய கான்னதுக்கப்புறம் இவுங்க சேரி புத்திய காட்டினதுல இன்னாடா தப்பு. அவன போஸ்ட் கம்பத்துல கட்டி செருப்பெடுத்து சிங்காரிச்சியிருக்கணும்டா ஏற… எறங்க… அத செய்யாம வுட்டதுதான் ஜெனங்க தப்பு” என்று வரவோட்டில் போட்ட நெல்மணிகளைப்போல் பொறிந்து தள்ளிவிட்டு “இதுக்கு மேல அந்தப் பரதேசி நாய்க்கு பரிஞ்சி பேசன…” பட்டென்று நிறுத்தி சரசரவென்று வீடுபோய்ச் சேர்ந்தான் ஆதிகேசவன்.

இரவு நீண்ட நேரம் ஆதிக்கு தூக்கமே வரவில்லை. சிறுவயதில் இவன் கற்பனை செய்திருந்த டாக்டர்கள் நினைவுத்திரையில் கழுத்திலும் காதிலும் மாட்டிக்கொண்டு பெரிய பெரிய கட்டிடங்களின் வரண்டாக்களில் இங்கும் அங்கும் ஓடினார்கள்.

“டாக்டருக்கு படிக்கரதுதாண்டா ஒலகத்திலயே புண்ணியமான படிப்பு”

“டாக்டருங்க தெய்வத்துக்குச் சமானம்”

“கட்ன பொண்டாட்டிங்கூட படுத்திருந்தாகூட நோவாளி வந்தா எழுந்து வந்து பாக்கணும்னு படிக்கப் போவும் போதே சத்தியவாக்கு வாங்கிக்குவாங்களாம்”

அம்மாவும், அன்னக்கிளி அத்தையும் சிறியவனாய் இருந்தபோது பேசிக்கொண்ட வார்த்தைகள் பாழுங்கிணற்றில் போட்ட கல்லின் ஒலியாய் விட்டுவிட்டு ஒலித்தன.

எப்போது தூக்கம் வந்தது என்றே தெரியவில்லை படுபயங்கரமான கனவுகள், ஆதிகேசவன் கழனிக்கு குளிக்க செல்கிறான். அதுவரை மீன்கள் மட்டுமே நீந்திக் கொண்டிருந்த தண்ணீரில் இவன் இறங்கியவுடன் கிணறு முழுக்க தண்ணீர் பாம்புகள் நீந்துகின்றன. திடீரென்று எல்லாவற்றுக்கும் பெரிய பாம்பு ஒன்று சிரித்துக் கொண்டே இவனைத் துரத்துகிறது.

பயந்துபோய் வேகமாய் நீந்தி படியேற முயல்கிறான் கால்கள் தன்னாலேயே பின்னுக்கு இழுக்கின்றனவே தவிர முன்னால் செல்வது கடினமாக இருக்கிறது. ஆனால் பாம்பு மட்டும் சர்… சர் என்று ராக்கெட் வேகத்தில் பாய்கிறது. படியேறி எப்படியோ மேலே வந்து மூச்சு விடும்போது பாம்புக்கு இரண்டு பக்கமும் ரெக்கை முளைத்து பறந்து தரைக்கு வந்து உடனே நல்ல பாம்பாக மாறித் துரத்துகிறது. எப்படியும் தப்பிவிடலாம் என்று ஓடும்போது காலில் எட்டி குத்திவிட்டு மீண்டும் சீறுகிறது பாம்பு. சரி ஏதாவது வைத்தியம் பார்க்கலாம் என்று நினைப்பதற்குள் விஷம் ஏறிவிழுந்து தான் செத்துவிட்டது போல் ஆன உடன், பட்டென்று கனவில் தொடர்பு அறுந்து ஆதிகேசவன் கண் எதிரிலேயே வில்லி வாயில் நொப்பும் நுரையும் தள்ளி சுருண்டு விழுந்து சாகிறான்

ராஜி டாக்டர் அலட்சியமாய் திரும்பிச் சென்று கதவடைக்கப் போகிறான் உடனே அலறி துடித்து “டாக்டர் அந்த வில்லிய பாம்பு கடிச்சிடிச்சி காப்பாத்துங்க காசு நான் தரேன் காப்பாத்துங்க” என்று தூக்கக் கலக்கத்திலேயே எழுந்து உட்கார்ந்து கொண்டு கத்தியவுடன் பக்கத்து திண்ணையில் படுத்திருந்த அவன் அம்மா அன்னம்மா “இன்னாடா பையா எங்க… இன்னா பாம்பு” என்று கூறிக்கொண்டே தட்டுத்தடுமாறி ஓடிவந்து, இவன் கையை காலை பிடித்து உருவிவிட்டுக் கொண்டே பதறினாள்.

“இன்னா எப்பா பயந்துகியந்து பூட்டாயா” என்று அம்மா கேட்பதைக் கூட உணர முடியாமல் ஆதிகேசவன் “அடப்பாவி… சாவுடிச்சிட்டயே…. ராஜி… வில்லி… டாக்டர்…. என முணகிக் கொண்டே இருந்தான்.

– நிதி. கோமேதகம்
______________________

புதிய கலாச்சாரம் 1999
______________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க