Thursday, May 30, 2024
முகப்புகட்சிகள்அ.தி.மு.கஅம்மா சாராயம் எப்போது?

அம்மா சாராயம் எப்போது?

-

அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா மருந்தகம்… அம்மா சாராயம் எப்போது?

ம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா தங்கும் விடுதி, அம்மா திரையரங்கம், அம்மா விதை, அம்மா தேயிலை, அம்மா பெட்டகம்! கிலுகிலுப்பையிலிருந்து சாவுமேளம் வரையில் தமிழக மக்களின் வாழ்வின் மீது அம்மாவின் தனிப்பெரும் கருணை பொழிந்து கொண்டிருக்கிறது.

அம்மா உணவகம்

சென்னையில் ஏதேனும் ஒரு அம்மா உணவகத்துக்குச் சென்று பாருங்கள். கூலித்தொழிலாளிகள், ஓய்வு பெற்ற நடுத்தர வர்க்க முதியவர்கள், கண்கள் பஞ்சடைந்த செக்யூரிட்டிகள், ஆட்டோ ஓட்டுனர்கள், சீருடை அணிந்த மாணவர்கள், கூர்க்காக்கள், வீட்டு வேலை செய்யும் பெண்கள், பி.பி.ஓ. வில் பணியாற்றும் ஐ.டி. ஊழியர்கள், வடமாநிலத் தொழிலாளர்கள் – என உழைக்கும் வர்க்கத்தின் எல்லாப் பிரிவினரையும் அங்கே பார்க்கலாம். எல்லா மொழிகளையும் அங்கே கேட்கலாம். பசிதான் அம்மா உணவகத்தின் தேசியமொழி.

சென்னையில் தொடங்கிய அம்மா உணவகம் இன்று தமிழகமெங்கும் பரவிவிட்டது. வடமாநில அரசுகள் எல்லாம் இதனைக் கற்றுக் கொள்ளப் படையெடுக்கின்றன. அன்றாடம் யாருக்காவது தானம் செய்யாவிட்டால் தூங்க முடியாத கர்ணனைப் போல அம்மா தவிக்க, புதியதொரு அம்மா திட்டத்தைத் தொடங்கத் தவறினால் தமக்கு நேரக்கூடிய கதியை எண்ணி அமைச்சர்கள் தூக்கம் வராமல் புரள்கிறார்கள்.

பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளையும் அம்மா திட்டங்களுக்குத் திருப்பி விடுவதன் மூலமும், ஏற்கெனவே பல துறைகளிலும் அமலாகிக் கொண்டிருக்கும் திட்டங்களுக்கு அம்மா பெயரை சூட்டுவதன் மூலமும் அம்மா தேயிலை, அம்மா உப்பு என்பன போன்ற பித்தலாட்டங்கள் மூலமும், இந்த வக்கிரம் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது. அம்மா சாராயமும் அம்மா சுடுகாடும் மட்டும்தான் பாக்கி. தனது அமைச்சர்களும் கட்சியினரும் மட்டுமின்றி, தமிழக மக்கள் அனைவருமே தனது கருணையில்தான் உயிர் தரித்திருப்பதாகக் கருதுகிறார் ஜெயலலிதா.

***

ன்னொரு புறம், பார்ப்பன ஊடகங்களுக்கும், தனியார்மயக் கொள்கையின் ஆதரவாளர்களான வலதுசாரி வெறியர்களுக்கும் பாரதிய ஜனதா கும்பலுக்கும் ஜெயலலிதாவின் ஆட்சி தேனாக இனித்தாலும், இந்த அம்மா திட்டங்கள் மட்டும் வேப்பங்காயாய் கசக்கின்றன. சிறுபான்மை மதத்தினருக்கான சலுகைகளை மட்டுமல்ல, ரேசன் அரிசி, இலவசத் திட்டங்கள், இட ஒதுக்கீடு போன்ற அனைத்தையுமே ஓட்டுவங்கி அரசியல் என்று கூறித்தான் பா.ஜ.க. வெறுக்கிறது என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும். அம்மா திட்டங்களின் மீது இவர்கள் கொண்டிருக்கும் வெறுப்பென்பது அம்மாவின் மீதான வெறுப்பல்ல, ஏழைகளின் மீதான வெறுப்பு.

“இலவசத் திட்டங்களுக்கு” எதிரான இவர்களுடைய பிரச்சாரத்தின் விளைவாக இத்தகைய திட்டங்களால் பயனடையும் ஏழை மக்களே கூடத் தங்களுக்கு உரிமையில்லாத, நியாயமற்ற ஒரு சலுகையை அம்மாவுடைய கருணையின் காரணமாகத்தான் அனுபவிக்க முடிவதாக எண்ணும்படி ஆக்கப்பட்டிருக்கிறார்கள். இதன் காரணமாக ஜெயலலிதா, புதிய தாராளவாதக் கொள்கை விதிக்கின்ற கட்டுப்பாடுகளை மீறி ஏழைகளுக்கு மானியம் வழங்கும் “புரட்சி”த் தலைவியாகவும், ஏழை மக்களுக்கு கஞ்சி ஊற்றிக் காப்பாற்றும் “அம்மா” வாகவும் அவதரித்து விடுகிறார்.

அம்மா அரிசி

இதைவிடக் கேவலமான மோசடியோ, அயோக்கியத்தனமோ வேறில்லை. ஒரு ரூபாய் இட்லி முதல் கிலுகிலுப்பை வரையிலான அம்மா திட்டங்களை விட்டுத்தள்ளுங்கள். அவற்றைவிடப் பன்மடங்கு அதிகமான, அடிப்படையான பல உரிமைகளைத் தமது குடிமக்களுக்கு வழங்குவதாக இந்தியா உள்ளிட்ட பல உலக நாட்டு அரசுகள் சர்வதேச மன்றத்தில் ஒப்புக்கொண்டிருக்கின்றன. ஐ.நா. மன்றத்தில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ள பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை (1954) கீழ்க்கண்ட உரிமைகளை மக்களுக்கு வழங்குவது ஒரு மக்கள் நல அரசின் கடமை என்று கூறுகிறது.

போதுமான உணவு, உடை, இருப்பிடம் உள்ளிட்ட போதுமான தரத்திலான வாழ்க்கை; அனைவருக்கும் இலவச ஆரம்பக் கல்வி, உயர்நிலைக்கல்வி, எளிதில் கிடைக்கத்தக்க உயர்கல்வி; வரையறுக்கப்பட்ட வேலை நேரம், போதிய ஓய்வு, முறையான ஊதியத்துடன் கூடிய ஆண்டு விடுமுறைகள்; நோய், ஊனம், பேறுகாலம், பணியிட விபத்து, வேலையின்மை, முதுமை ஆகியவற்றிலிருந்து குடிமக்களைப் பாதுகாப்பதற்குப் பொருத்தமான காப்பீடு ஆகியவற்றை வழங்குவது எல்லா நாட்டரசுகளும் ஏற்றுக் கொண்டுள்ள கடமையாகும்.

உணவுக்கான உரிமை என்பது ஒரு குடிமகனின் உணவுத் தேவைகளை ஈடு செய்யும் அளவிலும் தரத்திலும் இருக்க வேண்டும் என்றும், உணவுக்கான உரிமை என்பது தண்ணீருக்கான உரிமையையும் உள்ளடக்கியது என்றும் கூறுகிறது இவ்வுடன்படிக்கை. இவை மட்டுமல்ல, மருத்துவம், ஓய்வூதியம், கட்டுப்படியாகும் செலவில் வீட்டு வசதி, பொதுப்போக்குவரத்து ஆகியவற்றை உத்திரவாதம் செய்வது, உற்பத்தியைப் பெருக்குவதற்கும், தேசிய ஒற்றுமைக்கும் சமூக அமைதியைப் பேணுவதற்கும் அவசியம் என்றும் கூறுகிறது ஐ.நா. மன்றத்தின் உடன்படிக்கை.

(முதலாளித்துவ) பொருளாதார அமைப்பின் இயக்கத்தை மாற்றீடு செய்வதற்கும், அதனை மீறிச் செயல்படுவதற்கும் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்துவது என்பதுதான் ஒரு மக்கள் நல அரசின் சமூகக் கொள்கை என்று முதலாளித்துவ அறிஞர்களே வரையறுத்துக் கூறியிருக்கிறார்கள். இத்தகைய வாழ்வுரிமைகளை வழங்குவதாக உத்திரவாதம் செய்ததன் அடிப்படையில்தான், குடிமக்கள் மீது அதிகாரம் செலுத்துவதற்கான நியாய உரிமையை எல்லா அரசுகளும் பெற்றிருக்கின்றன.

அம்மா மடிக்கணினி

மேற்கூறிய உடன்படிக்கைகளிலெல்லாம் கையெழுத்திட்டுள்ள இந்திய அரசோ, அதன் மாநில அரசுகளோ இவற்றில் ஒரு சதவீதத்தினையேனும் நிறைவேற்றியிருக்கின்றனவா? 2000-க்குள் அனைவருக்கும் குடிநீர், 2005-க்குள் மின்சாரம், 2010-க்குள் கழிப்பறை என்று மாறிமாறித் தேதிகளை அறிவித்திருக்கின்றனரேயன்றி இவற்றை நிறைவேற்றும் திசையில் ஒருஅடி கூட முன்னெடுத்து வைக்கவில்லை. எனவேதான், மனித வளர்ச்சி குறியீட்டெண்ணில் இந்தியா மிகவும் பின்தங்கிய இடத்தில் இருக்கிறது.

35 ஆசிய நாடுகளில் அமலாக்கப்படும் சமூகப் பாதுகாப்புக் கொள்கைகள் குறித்து ஆய்வு செய்த ஆசிய வளர்ச்சி வங்கி சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இந்தியா 23-வது இடத்தில் (இலங்கை, பிலிப்பைன்சு போன்ற நாடுகளை விட பின்தங்கிய நிலையில்) உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. உணவு, வீடு, கல்வி, மருத்துவம், ஓய்வூதியம், வேலையற்றோர் நிவாரணம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக ஜப்பான் தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 19.2 விழுக்காட்டை செலவிடுகிறது. உஸ்பெகிஸ்தான் 10.2%, மங்கோலியா 9.6%, இலங்கை 3.2% செலவிடுகின்றன. இந்திய அரசு செலவிடும் தொகையோ வெறும் 1.7% தான். அம்மாவின் ஆட்சியையும் உள்ளடக்கிய இந்திய அரசமைப்பு, எத்தனை மக்கள் விரோதமானது என்பதற்கு இதுவே சான்று.

இலவசத் திட்டங்களை வாரி வழங்கியதால் கஜானா காலியாகி விட்டது என்று கூறுவதும், மக்களுக்கு வழங்கப்படும் மானியங்கள் அதிகரித்து விட்டதன் காரணமாகத்தான் வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்த முடியவில்லை என்று கூறுவதும் வடிகட்டிய பொய். உணவு, இருப்பிடம், வேலை, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட மக்களின் அடிப்படையான தேவைகளை, எவற்றையெல்லாம் மக்களின் உரிமை என்று அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறதோ, அவற்றை நிறைவேற்றாமல் குடிமக்களை மோசடி செய்திருக்கிறது. இந்த மோசடியில் ஆளும் வர்க்கங்களும், அதிகார வர்க்கமும், ஜெயலலிதா உள்ளிட்ட அனைத்து ஓட்டுக்கட்சிகளும் கூட்டாளிகள்தான். இந்த மோசடியை மறைப்பதற்கு, பசித்து அழும் பிள்ளையைத் திசைதிருப்ப காட்டப்படும் வேடிக்கை போன்றவையே அம்மா திட்டங்கள். இவற்றின் மூலம் மக்களின் மீது கருணை மழை பொழிவது போல ஜெயலலிதா விளம்பரப்படுத்திக் கொள்கிறார். ஆளும் வர்க்கமோ இலவசத் திட்டங்களுக்காக கஜானா கொள்ளையிடப்படுவது போலக் கூச்சல் எழுப்புகிறது.

இந்த நாடகம் வெகு நேர்த்தியாக அரங்கேற்றப்படுகிறது. சமீபத்திய நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசு அடைந்த படுதோல்விக்கு மிக முக்கியமான காரணம், தனியார்மய – தாராளமயக் கொள்கைகள்தான் என்பதை நாடறியும். இந்தக் கொள்கைகளால் வாழ்வாதாரங்களை இழந்த மக்களைச் சமாளிப்பதற்கு நூறு நாள் வேலை போன்ற திட்டங்களை அமலாக்கிய போதிலும், மன்மோகன் அரசால் தோல்வியைத் தடுக்க முடியவில்லை என்பதே உண்மை.

அம்மா குடிநீர்

ஆனால் “நூறு நாள் வேலை போன்ற திட்டங்களை வாக்காளர்கள் எதிர்க்கிறார்கள்; தொழில் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் அளிக்கின்ற குஜராத் மாடலையே மக்கள் விரும்புகிறார்கள்; அதனால்தான் காங்கிரசை மக்கள் நிராகரித்து விட்டார்கள்” என்று இத்தேர்தல் முடிவுக்கு தலைகீழ் பொழிப்புரை சொல்கிறார்கள் ஆளும் வர்க்க அறிவுத்துறையினர். நாற்காலியில் உட்கார்ந்த கணம் முதல் மானிய வெட்டு மானிய வெட்டு என்று கூவி வரும் மோடி அரசு, முதலாளி வர்க்கத்தின் மேற்கூறிய கருத்தைத்தான் வழிமொழிகிறது.

இந்தியாவைக் காட்டிலும் பின்தங்கிய நாடான மங்கோலியா, தனது மக்களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்குச் செலவிடும் அளவில் நான்கில் ஒரு பங்கைக்கூட இந்திய அரசு செலவிடவில்லை. இருந்த போதிலும் மக்களுக்கு மானியங்கள் வழங்கியே திவாலாகி விட்டதைப் போன்ற ஒரு பொய்த்தோற்றத்தை ஆளும் வர்க்கங்கள் திட்டமிட்டே உருவாக்குகின்றன.

ஏனென்றால், என்னென்ன அடிப்படைத் தேவைகளை இந்த அரசு மக்களுக்கு உத்திரவாதம் செய்ய வேண்டுமோ அவையெல்லாம் – உணவு, குடிநீர், வீடு, கல்வி, மருத்துவம், போக்குவரத்து – தனியார் முதலாளிகள் கொள்ளையடிப்பதற்கான விற்பனைச் சரக்குகளாக மாற்றப்பட்டு விட்டன. இவை விற்பனைச் சரக்குகளாக்கப்பட வேண்டும் என்பதுதான் “காட் ஒப்பந்தம்”. இந்த துறைகளெல்லாம் பெரும் தரகு முதலாளிகளும், பன்னாட்டு நிறுவனங்களும் கொள்ளை இலாபமீட்டுவதற்குத் திறந்து விடப்பட்டிருக்கின்றன. தனியார் பள்ளிகளும், மருத்துவமனைகளும், தண்ணீர் கம்பெனிகளும் நடத்தி வரும் இலாபவேட்டைக்கு இடையூறு செய்யக்கூடாது என்பதுதான் இவற்றிலிருந்தெல்லாம் அரசு விலகுவதற்கான காரணமேயன்றி, மக்கள் நலத் திட்டங்களுக்கு மானியம் கொடுத்து கஜானா காலியாகிவிட்டது என்பதல்ல. உண்மையில் கஜானாவைக் காலியாக்குபவர்கள் பன்னாட்டு முதலாளிகளும் தரகு முதலாளிகளும்தான். இவர்களுக்கு வழங்கப்படும் வரிச்சலுகைகளும் மானியங்களும்தான் ஆண்டுதோறும் கூடி வருகின்றது என்பதை பத்திரிகையாளர் சாய்நாத் ஆண்டுதோறும் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி வருகிறார்.

பெரு முதலாளிகளுக்கு வரி விதித்து, அந்த வருவாயின் மூலம் மக்களுக்கான சமூகநலத் திட்டங்களை அமல் படுத்துவது – இதுதான் மக்கள் நல அரசு என்பதற்கு முதலாளித்துவ அரசியலாளர்களே கூறுகின்ற இலக்கணம். தனது சுரண்டலைத் தொடர்வதற்கும், அதனைப் பாதுகாக்கின்ற அரசமைப்புக்கு மக்கள் மத்தியில் நியாயவுரிமை பெறும் நோக்கத்திலும்தான் மக்கள் நல அரசு என்ற கருத்தாக்கத்தை முதலாளித்துவ வர்க்கம் உருவாக்கியது.

அம்மா டாஸ்மாக்

ஆனால், இன்று மக்கள் நலத்தைப் பேணும் பொறுப்பிலிருந்து அரசு விலகிக் கொள்ள வேண்டுமென்று உலக முதலாளி வர்க்கம் விரும்புகிறது. எனினும், அவ்வாறு விலகும்பட்சத்தில் மக்கள் மத்தியில் எழக்கூடிய லண்டன் கலகம் போன்ற சமூக கொந்தளிப்புகளைக் கண்டு அஞ்சவும் செய்கிறது. இலண்டன் கலகத்தைப் போன்றதொரு கலகம் அமெரிக்காவில் வெடிக்காமல் தடுக்க வேண்டுமானால், அமெரிக்க முதலாளிகள் கூடுதல் வரி விதிப்பை விரும்பி ஏற்றுக் கொள்ள வேண்டுமென்ற உலக கோடீசுவரன் வாரன் பஃபேயின் அறிவுரைப்படி, புதிய வரி விதிப்பை அறிமுகப்படுத்தினார் ஒபாமா. இதே காரணத்தினால்தான் மானிய வெட்டு குறித்து உலகத்துக்கு உபதேசிக்கும் ஐரோப்பிய நாடுகளிலேயே பல சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் தொடர்கின்றன.

ஐரோப்பிய நாடுகளில் அமல்படுத்தப்படும் இலவசக் கல்வி, மருத்துவம், உணவு மானியம், வேலையற்றோர் நிவாரணம் போன்ற சமூக நலத்திட்டங்களில் பத்தில் ஒரு பங்குகூட இந்தியாவில் அமல்படுத்தப்படுவதில்லை. அது மட்டுமல்ல, பெருமுதலாளிகள் மீதான வருமான வரி, தொழில் வரி, சொத்து வரி போன்ற நேர்முக வரிகள் மிகவும் குறைவாக விதிக்கப்படுகின்ற நாடுகளில் ஒன்று இந்தியா.

கடந்த இருபது ஆண்டுகளாக அமல்படுத்தப்பட்டு வரும் தனியார்மய-தாராளமயக் கொள்கைகள், இந்திய சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் விளைவுகளை இந்தப் பின்புலத்தில் வைத்துப் பார்க்க வேண்டும். விவசாயத்தின் அழிவையும் நகரமயமாக்கத்தையும் ஊக்குவிக்கும் அரசின் கொள்கை, தொழில் வளர்ச்சி என்ற பெயரில் தரகு முதலாளிகளின் கொள்ளைக்காக விவசாயிகள், பழங்குடி மக்களின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டு அவர்கள் ஏதிலிகளாகத் துரத்தப்படுதல், தாராளமயக் கொள்கையால் போண்டியாகிப் போன இலட்சக்கணக்கான சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் – இவையனைத்தும் கோடிக்கணக்கான மக்களை வேலையற்றோர் பட்டாளமாக உழைப்புச் சந்தைக்குள் துரத்துகின்றன. கல்வி, மருத்துவம், தண்ணீர் உள்ளிட்ட அனைத்தும் விற்பனைச் சரக்குகளாக்கப்பட்டு விட்டதால், வரம்பின்றி அதிகரிக்கும் குடும்பச் செலவுகள் மிகப்பெரும் அளவில் பெண்களையும் உழைப்புச் சந்தைக்குள் தள்ளியிருக்கின்றன. இவர்களன்றி, ஒன்றுக்குப் பத்தாகத் தனியார் கல்லூரிகளால் உற்பத்தி செய்யப்படும் பொறியாளர்களும், பல்வேறு தொழிற்கல்விகள் பயின்ற பட்டதாரிகளும் வந்து குவிகிறார்கள்.

வேலையற்றோர் பட்டாளம் அதிகரிக்க அதிகரிக்க ஊதியம் குறைகிறது. பொறியாளர் பட்டம் பெற்ற இளைஞர்கள் மாதம் நாலாயிரம், ஐயாயிரம் ஊதியத்துக்கே அலைமோதுகிறார்கள். மறுபுறம் விலைவாசி உயர்வு, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஊதியத்தின் உண்மை மதிப்பை ஒவ்வொரு நாளும் குறைத்து வருகிறது.

இந்த இடத்திலிருந்து அம்மா உணவகத்தைப் பாருங்கள். காக்கிச் சட்டை போட்ட துப்புரவுத் தொழிலாளிகள் முதல் கவுரவமாக உடையணிந்த பட்டதாரி இளைஞர்கள் வரையிலான பல்வேறு பிரிவு உழைப்பாளிகள், நீங்கள் இதற்கு முன் ஒரே கூரையின் கீழ் பார்த்திருக்க முடியாத பல வர்க்கத்தினரை இங்கே கொண்டு சேர்த்தது எது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

விண்ணை முட்டும் கட்டிடங்கள், மால்கள், நவீன கார்கள், கைபேசிகள் என்று மின்னும் சென்னை நகரத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவில் கையேந்திபவன்களும் கூழ் விற்கும் பெண்களும் முளைத்து வருவதை அவதானித்த சென்னை மேயர் துரைசாமி, பெருகி வரும் உழைக்கும் வர்க்கத்தின் அழிபசியை அம்மாவுக்கு ஆதரவாக அறுவடை செய்து கொள்ளும் நோக்கத்திலும், அப்படியே “சுகாதாரமற்ற” கையேந்தி பவன்களை ஒழிக்கும் மத்திய அரசின் நோக்கத்தை (Food Standards and Safety Act) நிறைவேற்றிக் கொள்ளும் நோக்கத்திலும் அறிமுகப்படுத்தியதுதான் அம்மா உணவகம்.

பணவீக்கத்திலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கையே அம்மா திட்டங்கள் என்று கூறுகிறது தமிழக அரசு. பணவீக்கத்துக்குப் பொருத்தமான ஊதியத்தை வழங்குமாறோ, சட்டப்படியான குறைந்தபட்ச ஊதியம் வழங்குமாறோ முதலாளிகளுக்கு அம்மா உத்தரவிட மாட்டார். ஏனென்றால், குறைந்த பட்ச ஊதியம், பணிப் பாதுகாப்பு, தொழிற்சங்க உரிமை போன்றவையெல்லாம் அம்மாவின் ஆதர்சக் கொள்கையான புதிய தாராளவாதக் கொள்கைக்கு எதிரானவை. சாலைப் பணியாளர்கள், மக்கள் நலப் பணியாளர்கள் அனுபவிக்கும் துயரம் அம்மாவின் பெருங்கருணையை விளங்கிக் கொள்வதற்கு ஒரு சான்று.

இருந்த போதிலும் உழைப்பாளிகள் அரை வயிறு கஞ்சியாவது குடித்தால்தான் அடுத்த நாள் உழைக்க முடியும் என்ற அறிவியல் உண்மையை அம்மா அறிவார். அம்மா உணவகத்தில் உழைப்பாளிகள் விழுங்கும் ஒவ்வொரு கவளமும் மறு கணமே, பி.பி.ஓ.விலும், கட்டுமானத்தொழிலிலும், சென்னை மெட்ரோவிலும் மலிவு விலை உழைப்பாக மாற்றப்பட்டு முதலாளிகளுக்குத்தான் வழங்கப்படுகிறது. ஆகவே, ஒரு ரூபாய் இட்லியும் சப்பாத்தியும் முதலாளிகளுக்கு அம்மா வழங்கும் மறைமுக மானியம் என்பதே உண்மை. அம்மா உணவகம் முதல் பெட்டகம் வரையிலான திட்டங்களும் இலவச அரிசி, தங்கும் விடுதிகள் போன்றவையும் இந்த ரகத்தைச் சேர்ந்தவையே.

அம்மா மருந்தகம், அம்மா வாட்டர் போன்ற திட்டங்கள் தனியார்மய கொள்கைகளால் அதிருப்தியுற்றிருக்கும் நடுத்தர வர்க்கத்தை ஏமாற்றுவதற்கானவை. மருந்துக்கு விலைக்கு உச்ச வரம்பே கூடாது என்ற தாராளவாதக் கொள்கையைத் தடுக்காமல், கழிவுத்தொகையை தள்ளுபடி செய்கிறது அம்மா மருந்தகம். லிட்டர் ஒன்னேகால் பைசா விலையில் கோகோ கோலாவுக்குத் தண்ணீரைக் கொடுத்து, அதை லிட்டர் 20 ரூபாய்க்கு விற்க அனுமதித்து விட்டு, லிட்டர் பத்து ரூபாய்க்கு மலிவு விலை அம்மா வாட்டர்; ஐநூறுக்கும் ஆயிரத்துக்கும் டிக்கெட் விலை வைப்பதற்கு திரையரங்குகளை அனுமதித்து விட்டு, அம்மா திரையரங்கம் – இவையனைத்தும் தனியார்மயக் கொள்கைகளுக்கு எதிராக மக்களின் கோபம் வெடித்து விடாமல் காப்பாற்றும் பாதுகாப்பு வால்வுகள்!

இலவச அரிசியும், ஒரு ரூபாய் இட்லியும் இல்லாவிட்டால் வாழ முடியாது என்ற நிலைக்கு உழைக்கும் மக்களை ஆளாக்கியது யார், எந்தக் கொள்கை? இந்தக் கேள்வியையே எழுப்பவிடாமல் தடுத்து, சுரண்டப்படும் மக்களின் வறுமையை அவர்களுடைய துர்ப்பாக்கிய நிலையாகச் சித்தரித்து, கருணை அடிப்படையில் அவர்களுக்கு கஞ்சி ஊற்றுவதாக காட்டுபவையே அம்மா திட்டங்கள்.

அம்மா உணவகம் முதல் பெட்டகம் வரையிலான திட்டங்கள் யாருடைய பணத்தில் நிறைவேற்றப்படுகின்றன? இவற்றை நிறைவேற்றும் செலவுக்காக முதலாளிகள், பணக்காரர்கள்மீது ஜெயலலிதா அரசு சல்லிக்காசு கூட கூடுதல் வரி விதிக்கவில்லை. இதுதான் நாம் கவனிக்க வேண்டிய அம்மாவின் பெருங்கருணை!

இத்திட்டங்களுக்கான ஒவ்வொரு ரூபாயும் உழைக்கும் மக்களிடமிருந்துதான் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. மக்களைப் போதைக்கு அடிமையாக்கிப் பிடுங்கப்படும் சாராய வருமானத்திலும், எண்ணற்ற வழிகளில் மக்களிடமிருந்து பிடுங்கப்படும் மறைமுக வரிப் பணத்திலிருந்தும்தான் அம்மா திட்டங்கள் அனைத்தும் அமல்படுத்தப்படுகின்றன. தற்போதைய டாஸ்மாக் விலை உயர்வின் மூலம் மட்டுமே 2500 கோடி ரூபாய் திரட்டத் திட்டமிட்டிருக்கிறது, ஜெ.அரசு.

தான் இதுவரை பெற்றிருக்கும் பட்டங்களிலேயே அம்மா என்ற பட்டத்தைத்தான் பெரிதாகக் கருதுவதாகக் கூறியிருக்கிறார் ஜெயலலிதா. ஒரு வக்கிரமான பாசிஸ்டு ஆளுமையின் சுய விளம்பர மோகம், இரக்கமற்ற ஆளும் வர்க்கச் சுரண்டலை மறைப்பதற்கான முகமூடியாகப் பயன்பட்டு வருகிறது.

தனது அடிமைகளான உழைக்கும் வர்க்கத்துக்கு சோறு போடுவதற்குக் கூட வக்கில்லாத ஒரு வர்க்கம் வரலாற்றிலேயே முதலாளி வர்க்கம் மட்டும்தான் என்பார் கார்ல் மார்க்ஸ். அது மட்டுமா, அடிமையின் சோற்றுப்பானையில் கைவிட்டுத் திருடி வயிறு வளர்க்கும் வர்க்கமும் முதலாளி வர்க்கம்தான். முதலாளி வர்க்கத்தின் கவுரவத்தைக் காப்பாற்றும் பொருட்டு, அவர்களின் சார்பில் நம் சோற்றுப்பானையில் திருடி எடுத்த கவளத்தை, மலிவு விலையில் நமக்கே விற்பனை செய்யும் அம்மா, அன்னலட்சுமி என்று அழைக்கப்படுகிறார்.

– சூரியன்
________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2014
________________________________

  1. இப்போது டாச்மார்க் சாராய வகைகள் எல்லாம் சின்ன அம்மா சாராயம்தானாமே! சமீபத்தில் அய்கோர்ட்டு கூட செல்லமாக , மற்ற பிராண்டுகளும் விற்கும்படி பரிதாபமாக கெஞ்சி கேட்டுள்ளதே!
    அதன் விளைவு தானே எலைட் டாஸ்மார்க் ! இது பெரிய அம்மா சாராயம்! தமிலனுக்கு கொண்டாட்டம்தான்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க