மணிப்பூர் மாநிலத்தில் செயல்பட்டு வரும் போலி மோதல்கொலைகளால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சங்கமும் மனித உரிமை விழிப்புணர்வு அமைப்பும் அம்மாநிலத்தில் கடந்த 25 ஆண்டுகளில் போலி மோதல்படுகொலைகளில் 1528 பேர் கொல்லப்பட்டிருப்பதாகக் குற்றஞ்சுமத்தியிருப்பதோடு, இப்படுகொலைகள் குறித்து சிறப்புப் புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உச்சநீதி மன்றத்தில் வழக்கும் தொடுத்தன.
இவ்வமைப்புகள் குறிப்பிட்டுள்ள இப்போலி மோதல்கொலைகளுள் குறிப்பிடத்தக்க சில வழக்குகள் மணிப்பூர் மாநில அரசாலும், அம்மாநில நீதிமன்றங்களாலும் விசாரிக்கப்பட்டு, அவை அரசுப் படைகளால் சட்டவிரோதமான முறையில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள்தான் என்பதும் கொல்லப்பட்டவர்கள் தீவிரவாத இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் அல்ல, அப்பாவிகள் என்பதும் ஏற்கெனவே நிரூபணமாகியிருக்கிறது. ஆனாலும், இப்படுகொலைகளை இழைத்த அரசுப் படையினர் இதுவரை தண்டிக்கப்படவில்லை. காரணம், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம். தீவிரவாதத்தை ஒழிப்பது என்ற பெயரில் அரசுப் படையினர் அம்மாநிலத்தில் நிகழ்த்திவரும் படுகொலை, பாலியல் வன்முறை, ஆட்கடத்தல் உள்ளிட்ட சகலவிதமான சட்டவிரோத, பயங்கரவாதக் குற்றங்களிலிருந்தும் அவர்களைக் காக்கும் கேடயமாக இச்சட்டத்தைப் பயன்படுத்தி வருகிறது, மைய அரசு. பல ஆண்டுகளாகப் போராடியும் நீதி கிடைக்காத நிலையில்தான் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சார்பாக உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதி மன்றம் அவ்வமைப்புகள் குறிப்பிட்டுள்ள போலி மோதல்கொலைகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆறு படுகொலைகளை எடுத்துக்கொண்டு, அவை குறித்து விசாரிப்பதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தலைமையில் விசாரணை கமிசனை கடந்த ஆண்டு ஜனவரியில் நியமித்தது. இப்படுகொலைகளை விசாரித்த ஹெக்டே கமிசன், அவை அனைத்தும் போலி மோதல்படுகொலைகள்தான்” என்பதை உறுதி செய்து கடந்த ஆண்டு ஏப்ரலில் தனது அறிக்கையை உச்சநீதி மன்றத்திடம் அளித்தது.
இதற்கு தற்பொழுது பதில் அளித்துள்ள மோடி அரசு, “ஹெக்டே குழுவின் அறிக்கை தவறானது; சட்டப்படி பொருத்தமற்றது. ஆயுதப்படையினர் மீது விசாரணை நடத்த வழங்கப்பட்டுள்ள பரிந்துரையும் ஏற்கத்தக்கதல்ல” எனக் குறிப்பிட்டு, நீதிபதி ஹெக்டேயின் அறிக்கையை முற்றிலுமாக நிராகரித்துவிட்டது. மேலும், இவ்வழக்கின் நீதிமன்ற நண்பரான மேனகா குருசாமி நடுநிலையாக நடந்துகொள்ளாமல், புகார் அளித்தவர்களின் வழக்குரைஞராக நடந்து கொண்டிருப்பதாகவும் குற்றஞ்சுமத்தியிருக்கிறது. உச்சநீதி மன்றத்தால் நீதிமன்ற நண்பராக நியமிக்கப்பட்ட மேனகா குருசாமி அறிக்கையிலுள்ள நியாயத்தை ஆதரித்த ஒரே காரணத்திற்காக மோடி அரசால் தீவிரவாதிகளின் நண்பராக ஆக்கப்பட்டுவிட்டார்!
நடந்திருப்பது ஓரிரு படுகொலைகள் அல்ல; 1,528 படுகொலைகள். இவற்றுள் பல படுகொலைகள் போலி மோதல்கொலைகளென்று நீதிமன்ற விசாரணை, தனிநீதிபதி விசாரணை, தேசிய மனித உரிமை கமிசன் விசாரணை ஆகியவற்றின் மூலம் நிரூபணமாகியிருக்கிறது. முகத்தில் அறையும் இந்த உண்மைகளை ஒருபொருட்டாக மதிக்காமல் ஒதுக்கித் தள்ளியுள்ள மோடி அரசு, அம்மாநிலத்தில் நல்ல நோக்கத்தோடு இந்திய இராணுவமும், போலீசாரும் பணியாற்றி வருவதாகவும் அவர்களைத் தேவையற்ற சிக்கல்களில் மாட்டிவிட வேண்டும் என்ற உள்நோக்கத்தோடுதான் போலி மோதல்படுகொலை குறித்துப் பிரச்சாரம் நடத்தப்படுவதாகவும் கோயபல்சு பாணியில் அறிக்கை நெடுகிலும் புளுகித் தள்ளியிருக்கிறது.
சாலையில் பேருந்துக்காக நின்று கொண்டிருந்தவர்களை அசாம் துப்பாக்கிப் படை நாயைப் போலச் சுட்டுக் கொன்ற மாலோம் படுகொலை ஒன்றே, இந்திய அரசுப் படைகள் மணிப்பூரில் எத்தகைய பஞ்சமா பாதகங்களைத் துணிந்தும், தம்மை யாராலும் தண்டிக்க முடியாது என்ற திமிரோடும் செய்துவருகின்றன என்பதை நிரூபித்திருக்கிறது. பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இப்படுகொலைக்கு இதுநாள் வரை நீதி கிடைக்கவில்லை. இப்படுகொலைக்குப் பிறகுதான் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை மணிப்பூரிலிருந்து விலக்கக் கோரி ஐரோம் ஷர்மிளா தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். அவரது போராட்டமும் பதினான்கு ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்துவருகிறது.
கடந்த 2004 ஜூலை 11 அன்று தங்ஜம் மனோரமா என்ற பெண்ணைத் தீவிரவாதி என முத்திரை குத்திக் கடத்திச் சென்ற துணை இராணுவப் படையினர், அவரைப் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி, அதன் பின் சாட்சியத்தை அழிக்கும் கிரிமினல் நோக்கத்தோடு அந்தப் பெண்ணின் பிறப்புறுப்பைத் துப்பாக்கி குண்டுகளால் சிதைத்துக் கொன்றனர். இப்படுகொலைக்கு நீதி கேட்டு மணிப்பூர் தாய்மார்கள் நடத்திய நிர்வாணப் போராட்டமும், அப்போராட்டத்தின்பொழுது “இந்திய இராணுவமே, எங்களையும் பாலியல் வல்லுறவு கொள்” என அத்தாய்மார்கள் எழுப்பிய முழக்கமும் உலகத்தையே உலுக்கிப் போட்டது.
எப்பொழுது மணிப்பூர் வலுக்கட்டாயமாக இந்தியாவுடன் இணைக்கப்பட்டதோ அப்பொழுதிலிருந்தே அம்மாநிலத்தில் சுயநிர்ணய உரிமை கோரியும், ஜனநாயக உரிமைகளைக் கோரியும், இராணுவத்தை வெளியேறக் கோரியும், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்கக் கோரியும் தாய்மார்கள், பெண்கள், வாலிபர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என அச்சமூகத்தின் பெரும்பான்மையோர் போராடி வருகின்றனர். உச்சநீதி மன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கை இந்தப் பின்னணியிலிருந்துதான் பார்க்க வேண்டும்.
அம்மக்களது போராட்டம் இந்திய அரசின் தேசிய இன ஒடுக்குமுறையைக் கேள்விக்குள்ளாக்குகிறது என்ற ஒரே காரணத்திற்காகத்தான், மோடி அரசு துணை இராணுவம் நடத்திய பயங்கரவாதப் படுகொலைகளை விசாரிக்க முடியாதென்றும், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தில் சின்ன சீர்திருத்தம்கூடச் செய்ய முடியாதென்றும் உச்சநீதி மன்றத்திடம் தெரிவித்துவிட்டது. இந்நிலையில் நீதிமன்றமாவது நியாயமான தீர்ப்பை வழங்க வேண்டுமென அரசு பயங்கரவாதத்திற்குப் பலியான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்பார்த்து நிற்கின்றனர். ஆனால், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் குறித்தும், காஷ்மீரில் இந்திய இராணுவம் நடத்திய பத்ரிபால் போலி மோதல்படுகொலைகள் குறித்தும் ஏற்கெனவே உச்சநீதி மன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்புகளைத் திரும்பி பார்த்தால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமா என்பதே கேள்விக்குறியாகிவிடுகிறது
ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்கவே கூடாதென கூறிவருகிறது இந்திய இராணுவம். அரசுப் படைகள் நடத்தியிருக்கும் போலி மோதல்படுகொலைகள் மீது விசாரணை நடத்த முடியாதென அறிக்கை அளிக்கிறது மோடி அரசு. இந்த முட்டுக்கட்டைகளையும் மீறி போலி மோதல்படுகொலைகள் விசாரணைக்கு வந்துவிட்டால், அவ்வழக்குகளை இராணுவமே விசாரித்துத் தீர்ப்பளிக்கலாம் எனச் சலுகை வழங்குகிறது, உச்ச நீதிமன்றம். இப்படிப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைப்பதை எப்படி உறுதி செய்ய முடியும்? நீதி பெறுவதற்கு சட்டத்தையும் நீதிமன்றத்தையும் மட்டுமே நம்புங்கள் என்று கூறுபவர்கள்தான் இக்கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டும்.
– கதிர்
________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2014
________________________________
நடுநிலையாளர்கள் என்று பேசும் நண்பர்கள் இதற்க்கு பதில் சொல்லட்டும். எதற்கும் சட்டப்படியும் அமைதி நிலையிலும் தீர்வுத் தேட வேண்டும் என்று கூப்பாடு போடும் நண்பர்களே , போராட்டம் என்பது தானாக விரும்பி ஏற்றுகொண்ட ஒன்றல்ல மாறாக, வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்ட ஒன்றேயாகும். அனைத்து நிலையிலும் அலைகழிக்கப்பட்டு ,சுயசார்பு அழிக்கப்பட்டு, கையறு நிலையில் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள்
காவல்த்துறை ,நீதித்துறை,சட்டத்துறை ராணுவம்,அரசியல்வியாதிகள் என்றெல்லா அரசுத் தரப்பும் தமக்கு எதிராக இருக்கும் போது, பாதிக்கப்பட்டத் தரப்பு இயல்பாகவே வன்முறையின் பக்கமே திரும்பி நிற்கும். அதுவும் இந்தியா போன்ற பிற்போக்கான சமூகப் பொருளாதார கலாசாரப் பின்னணி கொண்ட நாடுகளில் இதன் உக்கிரம் அதிகமாகவே இருக்கும்.நடுநிலையாளர்கள் என்று தம்மை சொல்லிக் கொள்பவர்கள் மயிலிறகால் தீப்புண்ணைத் தடவிக் கொள்ளத் தான் சொல்கிறார்களே ஒழிய ஒன்று அதற்க்கு மருந்திட மறுக்கிறார்கள் அல்லது மருந்தை எடுப்பவரி தடுக்கிறார்கள்.
நன்றி.