Thursday, May 30, 2024
முகப்புஉலகம்அமெரிக்காவண்ணப் புரட்சிகள்: "மேட் இன் அமெரிக்கா!"

வண்ணப் புரட்சிகள்: “மேட் இன் அமெரிக்கா!”

-

தெற்காசியாவில் அமைந்துள்ள ஆப்கான், மேற்காசியாவைச் சேர்ந்த இராக், மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தான், யுரேசிய பகுதியிலுள்ள ஜார்ஜியா, கிழக்கு ஐரோப்பாவிலுள்ள உக்ரைன், வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள எகிப்து மற்றும் துனிசியா – இந்த நாடுகள் வேறுவேறான சமூகப் பொருளாதார, கலாச்சார பின்னணியை, கட்டமைப்பைக் கொண்டவை என்றபோதும், இந்த நாடுகள் அனைத்திற்கும் ஒரு பொதுவான ஒற்றுமை உண்டு. இவையனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக கடந்த பத்து – பன்னிரெண்டு ஆண்டுகளில் அதிரடியான ஆட்சி மாற்றத்தைச் சந்தித்தன என்பதுதான் அந்தப் பொதுவான ஒற்றுமை.

கெய்ரோ ஆர்ப்பாட்டம்
எகிப்தை ஆண்டு வந்த இராணுவச் சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக்குக்கு எதிராகத் தலைநகர் கெய்ரோவில் நடந்த ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)

ஆப்கான் மற்றும் இராக் மீது அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகள் தொடுத்த ஆக்கிரமிப்பு போரின் மூலமாக அந்நாடுகளில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. எகிப்திலும், துனிசியாவிலும் இலட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கியதையடுத்து, அந்நாடுகளை ஆண்டு வந்த இராணுவ சர்வாதிகாரிகள் முபாரக்கும் அலிபென்னும் பதவியிழந்து, தேர்தல்கள் மூலம் புதிய அரசுகள் பதவியேற்றன. ஜார்ஜியா, உக்ரைன், கிர்கிஸ்தான் நாடுகளில் நடந்த ஆட்சி மாற்றங்களை முதலாளித்துவ ஊடகங்கள் “புரட்சி” என்றழைத்தன.

ஒரு ஆக்கிரமிப்பு போர் மூலம் ஆப்கானிலும் இராக்கிலும் கொண்டு வரப்பட்ட ஆட்சி மாற்றம் உலகெங்கிலும் பலத்த கண்டனத்தையும் எதிர்ப்பையும் சந்தித்த அதே சமயம், பிற நாடுகளில் நடந்த ஆட்சி மாற்றங்கள் வரவேற்பைப் பெற்றன. எகிப்திலும், துனிசியாவிலும் நடந்த ஆட்சி மாற்றங்கள் இணைய தளப் புரட்சியென்றும், புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சிகளால் முன்நிறுத்தப்படும் ஆயுதந்தாங்கிய புரட்சிக்கு மாற்றென்றும் முதலாளித்துவ அறிவுஜீவிகளால் கொண்டாடப்பட்டன. அதேபோல ஜார்ஜியா, உக்ரைன், கிர்கிஸ்தான் நாடுகளில் நடந்த ஆட்சி மாற்றங்கள் “வண்ணப் புரட்சி”யென மேற்கத்திய ஊடகங்களால், ஏகாதிபத்திய நாடுகளால் கவர்ச்சிகரமாக முன் நிறுத்தப்பட்டன.

இப்புரட்சிகள் அந்தந்த நாடுகளைச் சேர்ந்த சர்வாதிகார ஆட்சியாளர்களை எதிர்த்து ஜனநாயகத்திற்காக நடத்தப்பட்டதென்றும், எந்தவொரு கட்சி சார்பின்றி மக்கள் தன்னெழுச்சியாகத் திரண்டு நடத்திய அரசியல் போராட்டங்களென்றும் முதலாளித்துவ ஊடகங்களால், முதலாளித்துவ அறிவுஜீவிகளால் சித்தரிக்கப்படுகின்றன. இந்தக் கூற்றில் எந்தளவிற்கு உண்மை இருக்கிறது என்பதுதான் நாம் முன் நிறுத்தும் கேள்வி.

எகிப்தும் துனிசியாவும் இராணுவ சர்வாதிகாரி ஆட்சியின் கீழும்; முன்னாள் சோவியத் நாடுகளான ஜார்ஜியா, உக்ரைன், கிர்கிஸ்தான் நாடுகள் புதுப் பணக்காரக் குற்றக்கும்பல்களின் ஆட்சியின் கீழும் இருந்தன என்பதற்கு அப்பால் இப்புரட்சிகள் பற்றிக் கதைக்கப்படும் பல விசயங்கள் பொய்யும் புனைவும் கலந்தவை. ஜார்ஜியாவிலும், உக்ரைனிலும், கிர்கிஸ்தானிலும் நடந்த ‘புரட்சிகள்’ அமெரிக்க அரசு தயாரித்துக் கொடுத்த திட்டத்தின்படி, அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்பட்டன. ஓட்டுக்கட்சிகள் காசு கொடுத்துக் கூட்டம் சேர்ப்பதைப் போல இத்தொண்டு நிறுவனங்கள் அமெரிக்க டாலர்களைக் கொட்டி இளைஞர்களையும் தொழிலாளர்களையும் அணி திரட்டின. அமெரிக்க மேல்நிலை வல்லரசின் ஆதரவு, நிதியுதவி மற்றும் மேற்கத்திய ஊடகங்களின் பின்புலம் ஆகியவற்றை வைத்துக்கொண்டு இப்புரட்சிகள் ஜனநாயகத்திற்காக நடத்தப்பட்டதைப் போல பிரச்சாரம் செய்யப்பட்டது. எகிப்தில் ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிராக நடந்த தெருப் போராட்டங்களை அமெரிக்கா விரும்பவில்லை என்றாலும், அமெரிக்காவிலுள்ள ஆல்பிரட் ஐன்ஸ்டீன் இன்ஸ்ட்யூட் என்ற சிந்தனைக் குழாமைச் சேர்ந்த பின்நவீனத்துவவாதியான ஜென் ஷார்ப்-ன் சித்தாந்தம்தான் எகிப்திலும் துனிசியாவிலும் நடந்த போராட்டங்களுக்கு வழிகாட்டியாக இருந்தது.

உக்ரைன்
உக்ரைனில் அமெரிக்கா திட்டமிட்டு நடத்திய ஆரஞ்சு வண்ணப் புரட்சியின் போது நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் ஒரு பகுதி. (கோப்புப் படம்)

அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது மேலாதிக்க நோக்கங்களுக்குத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைப் பயன்படுத்திக் கொள்வது புதிய விசயமல்ல. இட்லருக்கு எதிரான இயக்கங்களை வளைத்துப் போடும் நோக்கத்தோடு இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்கு முன்பாகவே சர்வதேச மீட்பு கமிட்டி (International Rescue Committee) என்ற பெயரில் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை உருவாக்கி இயக்கி வந்தது அமெரிக்கா. இச்சர்வதேச மீட்பு கமிட்டி தன்னை மனிதாபிமானத் தொண்டு நிறுவனமாகக் காட்டிக் கொண்டது. இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு, மேற்கு ஐரோப்பிய நாடுகளை கம்யூனிச அபாயத்திலிருந்து காக்கும் நோக்கில் சுதந்திர இல்லம் (Freedom House) என்ற பெயரில் தொண்டு நிறுவனத்தை உருவாக்கி இயக்கி வந்தது. இத்தொண்டு நிறுவனம் தன்னை ஜனநாயகத்திற்கு குரல் கொடுக்கும் இயக்கமாகக் காட்டிக் கொண்டது.

1983-ல் ரொனால்ட் ரீகன் அமெரிக்க அதிபராக இருந்த சமயத்தில், “உலகெங்கிலுமுள்ள ஜனநாயக நிறுவனங்களைத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் வலுப்படுத்துவது” என்ற திட்டத்தோடு, ஜனநாயகத்திற்கான தேசிய அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டது. அமெரிக்க அரசு அந்த அறக்கட்டளை நிறுவனத்தை அரை அரசு அமைப்பாக அங்கீகரித்ததோடு, அதற்கு நேரடியாகவே நிதியுதவியும் அளிக்கத் தொடங்கியது. இந்த அறக்கட்டளை அமெரிக்க அரசிடமிருந்து பெறும் நிதிகளை சர்வதேச விவகாரங்களுக்கான தேசிய ஜனநாயக நிறுவனம், சர்வதேச குடியரசு நிறுவனம், தேர்தல் முறைக்கான சர்வதேச பவுண்டேஷன், சர்வதேச ஆராச்சி மற்றும் பரிமாற்ற வாரியம், சுதந்திர இல்லம் உள்ளிட்டு அமெரிக்க அரசின் ஆதரவு பெற்ற மற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் வழியாக கீழ்மட்டம் வரை கொண்டு செல்கிறது.

“ஜனநாயகத்திற்கான தேசிய அறக்கட்டளைக்குத் தேவைப்படும் நிதியில் 97 சதவீதத்தை அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வழங்குகிறதென்றும், மீதியை வலதுசாரி கொடை நிறுவனங்களான பிராட்லி பவுண்டேஷன், தி வொயிட்ஹெட் பவுண்டேஷன், ஓலின் பவுண்டேஷன் ஆகியவை வழங்கிவருகிறதென” வில்லியம் ப்ளம் என்ற ஆய்வாளர் குறிப்பிடுகிறார். இதுவொருபுறமிருக்க, அமெரிக்க அரசின் ஆதரவு பெற்ற தன்னார்வத் தொண்டு நிறுனங்களின் அதிகாரமிக்க பதவிகளில் சி.ஐ.ஏ.வைச் சேர்ந்த முன்னாள் அதிகாரிகள், ஜனநாயகக் கட்சியிலுள்ள வலதுசாரிகள், குடியரசுக் கட்சியை அதிதீவிர வலதுசாரிகள், நிதி, எண்ணெய் மற்றும் ஆயுதத் தளவாட உற்பத்தி நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள்தான் அமர்த்தப்படுகிறார்கள்.

கிர்கிஸ்தான்
கிர்கிஸ்தானில் நடந்த துலிப் புரட்சியின் ஒரு பகுதியாக, ஜலால் அபாத் நகரில் எதிர்த்தரப்பு நடத்திய ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)

“நவீன காலத்தில் நேரடி இராணுவ நடவடிக்கையால் ஏற்படும் அபரிதமான செலவு, வேறுவகையான அமைப்புகளையும் சாதனங்களையும் பயன்படுத்துவதைக் கோருகிறது” என்கிறார் ஜோஸப் நியே என்ற ஆய்வாளர். அந்தச் சாதனங்கள் ஆயுதந்தரிக்காத தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்தான். நேரடியான இராணுவ நடவடிக்கையை மட்டுமே அந்நியத் தலையீடாகக் கருதும் முதலாளித்துவ அறிவுஜீவிகளின் அணுகுமுறையை நியேவின் கருத்து தவிடுபொடியாக்குகிறது.

“பொதுமக்களுக்குச் சேவை செய்யும் நல்ல நோக்கத்திற்காகத்தான் ஏகாதிபத்திய நிறுவனங்களிடமிருந்து காசு வாங்குவதாக”த் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அனைத்தும் யோக்கிய சிகாமணிகளைப் போல பேசித் திரிகின்றன. ஆனால், இது முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் பொய் என்பதைத் தேசிய ஜனநாயக அறக்கட்டளையின் முதல் தலைவரான ஆலன் வெயின்ஸ்டெனின் கூற்று அம்பலப்படுத்துகிறது. “25 ஆண்டுகளுக்கு முன்பு சி.ஐ.ஏ. திரைமறைவாக எவற்றைச் செய்ததோ, அவற்றைத்தான் இன்று நாங்கள் செய்கிறோம்” என வெளிப்படையாக ஒப்புதல் வாக்குமூலமே அளித்திருக்கிறார், அவர். மனிதாபிமானம், மனித உரிமை, ஜனநாயகம் என்ற முழக்கங்களை முன்வைக்கும் இத்தொண்டு நிறுவனங்கள் அனைத்தும் உண்மையில் அமெரிக்க மேலாதிக்கத்தின் காலாட்படைகள் என்பதற்கு இவை தவிர வேறு சான்றுகள் தேவையில்லை.

எனினும், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த தனது இராணுவத்தை எங்கு இறக்கிவிடுவது, தனது தொண்டு நிறுவனங்களை எங்கு இறக்கிவிடுவது என்பதை அமெரிக்க அரசுதான் முடிவு செய்கிறது. இராக்கில் சதாம் ஹுசேன் ஆட்சியைத் தூக்கியெறிந்த ஊதா நிறப் புரட்சியை (Purple Revolution) நிறைவேற்ற தனது இராணுவத்தை இறக்கிவிட்ட அமெரிக்கா, ஜார்ஜியாவில் ரோஜா வண்ணப் புரட்சியை, உக்ரைனில் ஆரஞ்சு வண்ணப் புரட்சியை, கிர்கிஸ்தானில் துலிப் புரட்சியை நிறைவேற்ற ஜனநாயகத்திற்கான தேசிய அறக்கட்டளையைக் களமிறக்கியது.

***

சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு, நேடோ இராணுவக் கூட்டணியில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளை இணைத்து, அதனை விரிவாக்குவதைத் தனது நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுவரும் அமெரிக்காவின் மேலாதிக்கத் திட்டத்தில், Kஅமெரிக்காவின் பாதுகாப்புக் கொள்கையில் உக்ரைனின் பாதுகாப்பு மையமானது”, Kயுரேசிய பகுதியில் ரசியா மீண்டும் வல்லரசாவதைத் தடுத்து நிறுத்துவதற்கு உக்ரைன் சுதந்திர நாடாக இருப்பது அவசியமானது” எனக் குறிப்பிடுமளவுக்கு உக்ரைன் முக்கியமான இடத்தில் உள்ளது. இதற்கு அப்பால், அமெரிக்காவின் கூட்டாளிகளான ஐரோப்பிய யூனியன் நாடுகள் தமது எரிசக்தி தேவைக்கு ரசியாவைச் சார்ந்திருப்பதை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு உக்ரைனை ரசியாவின் செல்வாக்கிலிருந்து விடுவிப்பது மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகளுக்கு அவசியமானதாக இருந்து வருகிறது.

பயிற்சி பட்டறை
அமெரிக்காவின் ஜனநாயகத்திற்கான தேசிய அறக்கட்டளையும், சோரோஸ் பவுண்டேஷனும் இணைந்து, உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த இளம் பத்திரிகையாளர்களுக்கு, ‘முரண்பாடுகளை அமைதி வழியில் தீர்ப்பது’ குறித்து கிர்கிஸ்தானின் பிஷ்கேக் நகரில் நடத்திய பயிற்சி பட்டறை.

இரண்டாயிரம் ஆண்டுகளின் தொடக்கத்தில் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களோடு நெருக்கமாக இருந்த உக்ரைனின் குச்மா அரசு, ஒடிஸா-ப்ரோடி எண்ணெய்க் குழாய் பாதையை, போலந்திலுள்ள க்டான்ஸ்க் பகுதி வரை நீட்டிப்பது என்ற ஒப்பந்தத்தை அமெரிக்க அரசோடு செய்து கொண்டது. காஸ்பியன் கடல் பகுதியில் கிடைக்கும் கச்சா எண்ணெயை, ரசியாவைச் சார்ந்திராமல் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு எடுத்துச் செல்வதும்; உக்ரைன் தனது எரிபொருள் தேவைக்கு ரசியாவைச் சார்ந்திருப்பதைப் படிப்படியாகக் கைவிடுவதும்தான் இந்த ஒப்பந்தத்தின் பின்னுள்ள நோக்கம். ஆனால், அப்பொழுது உக்ரைன் அதிபராக இருந்த குச்மா ஜூலை 2004-ல் இத்திட்டத்தைக் கைவிடுவதாகத் திடீரென அறிவித்ததையடுத்து, அமெரிக்காவின் பேராசையில் மண் விழுந்தது. இதனையடுத்து மேற்கத்திய ஏகாதிபத்தியங்களுக்குச் சார்பான ஒரு அடிவருடி ஆட்சியை உக்ரைனில் உருவாக்கும் திட்டத்தைச் செயல்படுத்த முனைந்த அமெரிக்கா, அதற்கு உக்ரைனில் நவம்பர் 2004-ல் நடந்த அதிபர் தேர்தலைப் பயன்படுத்திக் கொண்டது.

அந்த அதிபர் தேர்தல், தாக்குதல் நிலையிலிருந்த அமெரிக்காவிற்கும், தற்காப்பு நிலையிலிருந்த ரசியாவிற்கும் இடையே தத்தமது மேலாதிக்கத்தைப் பரீட்சித்துப் பார்க்கும் போர்க்களமானது. அதிபர் தேர்தலில் போட்டியிட்ட விக்டர் யானுகோவிச்சை ரசியா ஆதரித்தது. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட விக்டர் யுஷ்சென்கோவை அமெரிக்க அரசும், அதனின் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் ஜனநாயகக் காவலராகச் சித்தரித்து ஆதரித்தன.

உக்ரைன் அதிபர் தேர்தலை எதிர்கொண்டிருந்த சமயத்தில், குச்மா அரசிற்குள்ளேயே விக்டர் யுஷ்சென்கோவிற்கு ஆதரவாக வேலை செய்யும் அமெரிக்கக் கைக்கூலிகள் உருவாக்கப்பட்டனர். உக்ரைன் இராணுவம், உள்துறை அமைச்சகம், உளவுத் துறை ஆகிய அரசின் கேந்திரமான துறைகள் அனைத்தும் குச்மா அரசின் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிய மறுத்ததோடு, அரசின் முக்கிய முடிவுகளை எதிர்த்தரப்பான விக்டர் யுஷ்சென்கோவிற்குக் கடத்திச் செல்லும் ஐந்தாம் படைகளாக வேலை பார்த்தனர். இன்னொருபுறம் அமெரிக்காவைச் சேர்ந்த ஜனநாயகத்திற்கான தேசிய அறக்கட்டளையால் உக்ரைனில் உருவாக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மக்களின் கருத்தை விக்டர் யுஷ்சென்கோவிற்கு ஆதரவாக மாற்றும் விதத்தில் ஒரு பிரச்சார யுத்தத்தையே நடத்தின.

தொண்டு நிறுவனங்கள்
“நவீன காலத்தில் நேரடி இராணுவ நடவடிக்கையால் ஏற்படும் அபரிமிதமான செலவு, வேறுவகையான அமைப்புகளையும் சாதனங்களையும் பயன்படுத்துவதைக் கோருகிறது” என்கிறார் ஜோஸப் நியே என்ற ஆய்வாளர். அந்தச் சாதனங்கள் ஆயுதந்தரிக்காத தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்தான்.

ஜனநாயகத்திற்கான தேசிய அறக்கட்டளையும் அதன் துணை நிறுவனங்களும் 1990-களின் தொடக்கத்திலேயே உக்ரைனில் நுழைந்துவிட்டன. 1999-ல் அமெரிக்கத் தூதரகம், உலக வங்கி, ஜனநாயகத்திற்கான தேசிய அறக்கட்டளை மற்றும் சோரோஸ் பவுண்டேஷன் ஆகியவை கூட்டாகச் செயல்பட்டு விருப்பத் தேர்வின் சுதந்திரக் கூட்டணியை உருவாக்கின. இவையும், யு.எஸ்.எய்ட் மற்றும் சுதந்திர இல்லத்தின் நிதியுதவியைப் பெற்றுவந்த போலந்து-அமெரிக்கா-உக்ரைன் கூட்டுறவு செயல் மையம், கொள்கை ஆவிற்கான சர்வதேச மையம் ஆகிய தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இணைந்து நின்று விக்டர் யுஷ்சென்கோவிற்கு ஆதரவாகச் செயல்பட்டன.

குறிப்பாக, ஜனநாயகத்திற்கான தேசிய அறக்கட்டளை அமெரிக்காவிலிருந்து நூற்றுக்கணக்கான தேர்தல் ஆய்வாளர்களை வாடகைக்குப் பிடித்து வந்து, யுஷ்சென்கோவிற்கு ஆதரவான கருத்துக் கணிப்புகளை நடத்தி வெளியிட்டு வந்ததோடு, யுஷ்சென்கோ தலைமையின் கீழ் எதிர்த்தரப்பை ஒன்றுதிரட்டும் அரசியல் மாமாவாகவும் வேலை செய்தது. தேர்தல் முடிந்த பிறகு, மேற்கத்திய தூதரக அலுவலகங்களின் துணையோடு தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை யுஷ்சென்கோவிற்கு ஆதரவாக வெளியிடுவதற்கு ஏற்பாடு செய்தது.

2004 நவம்பரில் நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்ட இரண்டு தரப்புமே பல்வேறு முறைகேடுகளில், மோசடிகளில் ஈடுபட்டிருந்தது அம்பலமானபோதும், தொண்டு நிறுவனங்களும் மேற்கத்திய ஊடகங்களும் கூட்டுச் சேர்ந்து கொண்டு ரசிய சார்பு வேட்பாளரான யானுகோவிச்சின் முறைகேடுகளை மட்டுமே ஊதிப்பெருக்கி வெளியிட்டன. இதனையடுத்து அத்தேர்தலை ரத்து செய்யக் கோரி கீவ் நகரில் தொடர்ச்சியான அரசியல் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்தது, ஜனநாயகத்திற்கான தேசிய அறக்கட்டளை.

இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு ஆட்களைத் திரட்டுவதற்கும், அதனை மக்கள் புரட்சியாக விளம்பரப்படுத்துவதற்கும் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் – போக்குவரத்து, தங்குவதற்கான கூடாரங்கள், பசியாறுவதற்கான சமையற் கூடங்கள், கழிப்பறைகள் தொடங்கி ஆயிரக்கணக்கான புகைப்படக் கருவிகளும், வெப்பமூட்டும் சாதனங்களும், மருத்துவர்களும், பத்திரிகை விளம்பரங்களும், தொலைக்காட்சி ஒளிபரப்புகளுமென அமர்க்களப்படுத்தப்பட்டதற்குப் பின் அமெரிக்காவின் நிதியுதவி வெள்ளமெனப் பாந்ததாகக் குறிப்பிடுகிறார், டேனியல் உல்ஃப் என்ற ஆய்வாளர்.

உக்ரைனில் ஆரஞ்சு புரட்சியை ஏற்றுமதி செய்வதற்கு அமெரிக்க அரசு செலவு செய்த தொகை ஏறத்தாழ 1.4 கோடி அமெரிக்க டாலராகும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை உக்ரைனின் மக்கள் இயக்கங்களாகக் காட்டுவதற்கு உக்ரைனுக்கான வாஷிங்டன் என்ற சிந்தனைக் குழாம் வழியாக ஒதுக்கப்பட்ட நிதி 6.5 கோடி அமெரிக்க டாலராகும். இவற்றுக்கு அப்பால் சோரோஸ் பவுண்டேஷன், சுதந்திர இல்லம் ஆகிய சிந்தனைக் குழாம்கள் அதிபர் தேர்தலையொட்டி யுஷ்சென்கோவிற்கு ஆதரவாக உருவாக்கிய திட்டங்களை நடைமுறைப்படுத்தியதற்குச் செலவழித்த தொகை தனிக் கணக்காகும். அமெரிக்க டாலரும் அமெரிக்காவின் சர்வதேசிய தொண்டு நிறுவனங்களும் இணைந்து நடத்திய இந்த ஆரஞ்சு புரட்சியின் விளைவாக, 2004 நவம்பரில் நடந்த அதிபர் தேர்தல் உக்ரைன் உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டு, மறுதேர்தல் டிசம்பரில் நடத்தப்பட்டு, அமெரிக்காவின் கைக்கூலியான விக்டர் யுஷ்சென்கோ உக்ரைனின் அதிபராக அமர்த்தப்பட்டார்.

***

னது பொருளாதார இயக்கத்திற்கு ரசியாவின் உதவியைப் பெரிதும் நம்பியிருந்த கிர்கிஸ்தானை ஐ.எம்.எஃப். கடனுதவி என்ற தூண்டிலை வீசிப் பிடித்துக் கொண்டது, அமெரிக்கா. முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளிலேயே கிர்கிஸ்தான்தான் ரசியாவின் ரூபிள் நாணய பரிமாற்ற வளையத்திலிருந்து வெளியேறிய முதல் நாடாகும். 1990-களின் இறுதியில் கிர்கிஸ்தானை ஆண்டு வந்த அஸ்கர் அகயேவ் அரசு, தனது நிதிப் பற்றாக்குறையை ஈடுசெய்வதற்கு, அமெரிக்காவின் இராணுவத் தளத்தை கிர்கிஸ்தானிலுள்ள மானாஸ் பகுதியில் அமைத்துக் கொள்ளவும் அனுமதித்தது. ஆப்கான் மீது மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகள் நடத்தி வந்த ஆக்கிரமிப்புப் போருக்குத் தேவையான இராணுவத் தளவாடங்களை விரைந்து கொண்டு சேர்க்கும் விதமாக இந்த இராணுவத் தளம் அமைக்கப்பட்டது.

அதேபொழுதில், கிர்கிஸ்தான் மீது ஐ.எம்.எஃப். விதித்த நிபந்தனைகள் அந்நாட்டில் அரசியல் போராட்டங்களை உருவாக்கின. சமயம் பார்த்துக் காத்திருந்த ரசிய வல்லரசு இந்த எதிர்ப்பை முறியடிப்பதற்கு அகயேவ் அரசுக்கு உதவியது. இதற்குப் பிரதிபலனாக அமெரிக்காவின் இராணுவத் தளத்திலிருந்து முப்பது கிலோ மீட்டர் தொலைவிலுள்ள காண்ட் எனுமிடத்தில் ரசியாவின் இராணுவ விமான தளத்தை அமைக்க அனுமதித்தார் அகயேவ். மேலும், இதேசமயத்தில் சீனாவுடனான வர்த்தக உறவுகளை மேம்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அகயேவ் அரசு மீண்டும் ரசியா பக்கம் சாகிறது என முடிவெடுத்த அமெரிக்கா, கிர்கிஸ்தானில் ஓர் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு பிப்ரவரி 2005-இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலைப் பயன்படுத்திக் கொண்டது.

அகயேவ் அமெரிக்காவின் பக்கம் இருந்தவரை அவரது ஊழல் குற்றங்களையும் அடக்குமுறைகளையும் கண்டுகொள்ளாமல் இருந்த அமெரிக்க அரசு, அவர் ரசியாவின் பக்கமும் சாயத் தொடங்கியவுடன், தனது கைப்பாவைகளான தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைத் தூண்டிவிட்டு, ஜனநாயகக் கூச்சலை எழுப்பச் செய்தது. குறிப்பாக, அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் எதிர்த்தரப்பின் பெயரில் ஒரு செய்தித் தாளைத் தொடங்கியது. ஜனநாயகத்திற்கான தேசிய அறக்கட்டளை 2003-ம் ஆண்டு தொடங்கியே தேர்தலின் மூலம் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தத் தொடங்கியது. இதற்காக 170-க்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இந்த அறக்கட்டளையாலும் அமெரிக்க அரசாலும் உருவாக்கப்பட்டன. வெறும் 50 இலட்சம் மக்கள் தொகை கொண்ட கிர்கிஸ்தானில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக 2.6 கோடி அமெரிக்க டாலர்களைக் கொண்டு வந்து கொட்டியது, அமெரிக்க அரசு. தேர்தல் முறைகேடுகளை அம்பலப்படுத்துவது என்ற பெயரில் யு.எஸ்.எய்ட் 20 இலட்சம் அமெரிக்க டாலர்களைத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு அளித்தது.

அமெரிக்காவிற்கு வரவழைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்ட குர்மான்பேக் பாகியேவ், ஃபெலிக்ஸ் குலோவ், ஓமுர்பேக் தெகேபாயேவ் ஆகியோர் ஜனநாயகவாதிகளாக முன்நிறுத்தப்பட்டனர். துலிப் வண்ணப் புரட்சியின் விளைவாக அகயேவ் நாட்டைவிட்டு வெளியேறிய பிறகு, இவர்கள்தான் முறையே கிர்கிஸ்தானின் அதிபராகவும், பாதுகாப்புத் துறை அமைச்சராகவும், நாடாளுமன்ற சபாநாயகராகவும் பதவியேற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத் தகுந்தது.

அந்நாட்டின் மேல்தட்டு வர்க்கத்திற்கு மேற்கத்திய கருத்தியல் குறித்த பயிற்சி அளிப்பதற்கு கருத்தரங்குகளும், ஆவரங்குகளும் நடத்தப்பட்டதோடு, அமெரிக்காவிற்கும் அழைத்துச் செல்லப்பட்டனர். அடித்தட்டைச் சேர்ந்த இளைஞர்கள் உக்ரைனின் கீவ் நகரத்திற்கு, அங்கு நடந்த ஆரஞ்சு புரட்சியின் பார்வையாளர்களாக அழைத்துச் செல்லப்பட்டு, ‘ஜனநாயகத்தின்’ பக்கம் வென்றெடுக்கப்பட்டனர். எதிர்த்தரப்பு நடத்திய பத்திரிகைகளுக்குத் தேவையான இயந்திரங்கள், ஜெனரேட்டர்கள் உள்ளிட்ட சாதனங்கள் அனைத்தும் அமெரிக்க தூதரகத்தின் ஆதரவோடு, சோரோஸ் பவுண்டேஷன் மற்றும் சுதந்திர இல்லம் ஆகிய சிந்தனைக் குழாம்கள் மூலம் வழங்கப்பட்டன.

பிஷ்கேக் நகரில் அமைந்திருந்த அதிபர் அகயேவ் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் மற்றும் ஓஷ், ஜலால் அபாத் நகரங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்களை ஜனநாயகத்திற்கான தேசிய அறக்கட்டளை ஏற்பாடு செய்து நடத்தியதோடு, ஆர்ப்பாட்டம் எங்கு நடைபெறுகிறது, எப்படி வர வேண்டும் என்ற தகவல்களை அரசின் கட்டுப்பாட்டில் இருந்த வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் வழியே ஒளிபரப்பக்கூடிய அளவிற்கு அரசுக்குள் அமெரிக்காவின் கையாட்கள் உருவாக்கப்பட்டிருந்தனர். “ரசியாவை ஆத்திரப்படுத்தாமலும், அரசுதந்திர விதிகளை மீறாமலும் இருக்கும் பொருட்டு அமெரிக்கா எந்தவொரு எதிர்க்கட்சியையும் நேரடியாக ஆதரிக்கவில்லை. ஆனால், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் வலைப்பின்னலை அமெரிக்கா பயன்படுத்திக் கொண்டது” என்கிறார், பிலிப் ஷிஷ்கின் என்ற ஆவாளர்.

எகிப்து, துனிசியா, ஜார்ஜியா, உக்ரைன், கிர்கிஸ்தான் நாடுகளில் நடந்த ‘புரட்சிகள்’ அந்நாடுகளைச் சேர்ந்த அடித்தட்டு மக்களுக்கு ஜனநாயகத்தையோ, அடிப்படையான வேலைவாப்பையோ, வாழ்க்கை உத்தரவாதத்தையோ அளிக்கவில்லை என்பதை இப்புரட்சிகளுக்குப் பிறகு அந்நாடுகளில் நடந்துள்ள சம்பவங்கள் நிரூபிக்கின்றன. குறிப்பாக, யுகப்புரட்சி போல வரவேற்பைப் பெற்ற எகிப்து மீண்டும் இராணுவ சர்வாதிகாரத்திற்குள் சிக்கிக் கொண்டு விட்டது. உக்ரைன் நவீன நாஜிக் கும்பலின் பிடியிலும், உள்நாட்டுப் போரிலும் சிக்கி சீரழிந்து நிற்கிறது. இப்பின்னடைவுகள் பொதுமக்களிடம் அவநம்பிக்கையை, தோல்வி மனப்பான்மையை ஏற்படுத்தி, முதலாளித்துவத்துக்கு எதிரான போராட்டத்தைப் பலவீனப்படுத்தும் அபாயம் நிறைந்தது. ஆனால், அ.மார்க்ஸ் உள்ளிட்ட முதலாளித்துவ அறிவுஜீவிகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், “இதனைத் தோல்வியாகப் பார்க்கக் கூடாது. நாடு முன்னைக் காட்டிலும் ஒரு படி முன்னேறி இருப்பதாகப் பார்க்க வேண்டும்” எனக் கூறி, இம்மோசடி புரட்சிகளை நியாயப்படுத்தி வருகிறார்கள்.

– திப்பு

குறிப்பு: இந்தக் கட்டுரை சிறீராம் சௌலியா என்ற ஆய்வாளர் எழுதிய “ஜனநாயகமயமாக்கம், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் வண்ணப் புரட்சிகள்” என்ற கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.
________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2014
________________________________

  1. ஏன் வினவு மாற்றிப் பேச வேண்டும்?

    2011 ஆம் ஆண்டு புரட்சியாக தெரிந்த அரபு வசந்தம் த்ற்போது வண்ணப் புரட்சி (ஸ்பான்சர்டு பை அமெரிக்காவா)

    பார்க்க :
    https://www.vinavu.com/2011/02/07/egypt/

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க