‘கோயம்பேடு சந்தையில் விதிமுறைகளை மீறி கருவாடு விற்கப்படுகிறது, அது அங்கு காய்கறி வாங்கப் போகும் சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது’ என்று தி இந்து நாளிதழ் ஆகஸ்ட் 17-ம் தேதி செய்தி வெளியிட்டது. அதைத் தொடர்ந்து 19-ம் தேதி, கோயம்பேடு சந்தையில் விதிமீறி விற்கப்பட்டுக் கொண்டிருந்த ரூ 20,000 மதிப்புள்ள கருவாடு பாக்கெட்டுகளை அதிகாரிகள் கைப்பற்றினர், இந்து செய்தி எதிரொலி என்று வெற்றி அறிவிப்பு வெளியிட்டது அந்நாளிதழ்.
இந்துவின் அசைவ உணவு மீதான வன்மம் தொடர்பான இந்த பார்ப்பன ஆதிக்கத் திமிரைக் கண்டித்து வினவில் வெளியான பதிவு சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிர்ந்து கொள்ளப்பட்டது. வினவிலும் பின்னூட்டங்களில் விவாதங்கள் நடைபெற்றன. இந்துவைக் கண்டித்து பேஸ்புக்கில் பலர் ஸ்டேட்டஸ் போட்டனர்.
பேஸ்புக் மற்றும் பிற சமூக வலைத்தளங்களில் வெளியான அந்த எதிர்வினைகளை தொகுத்து வினவில் பதிவுகளாக வெளியிட்டோம், அவை வாசகர்களிடையே மேலும் விவாதத்தை கிளப்பின.
இந்த விவாதங்களில் வெளியான கருத்துக்கள், கேள்விகளை பொதுவாக பார்ப்பனர்கள் முன்வைக்கும் அசைவ உணவு மீதான தீண்டாமை கருத்துக்களை மக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதை பதிவு செய்யும் விதமாக கோயம்பேடு வியாபாரிகள், அங்கு கருவாடு சப்ளை செய்யும் வணிகர்கள், அங்கிருந்து கருவாடு வாங்கிச் செல்லும் கடைக்காரர்கள், சுமை தூக்கும் தொழிலாளிகள், காய்கறிக் கடைக்காரர்கள், தரைக்கடை வணிகர்கள் ஆகியோரிடம் பேசினோம்.
கே.கே. நகருக்கு அருகில் முக்கிய காய்கறிச் சந்தையான எம்.ஜி.ஆர் நகர் சந்தையில் இறைச்சி, மீன் மற்றும் காய்கறிக் கடைகள் அக்கம்பக்கமாக இயங்கி வருகின்றன. அங்கு வரும் மக்களின் பல்வேறு பிரிவினரிடம் பெண்கள், வேலைக்குப் போகிறவர்கள், வயதானவர்களிடம் இது தொடர்பாக கருத்து கேட்டோம். மேலும் பார்ப்பனர்களின் தரப்பு கருத்துக்களை பதிவு செய்ய மேற்கு மாம்பலத்திலுள்ள அயோத்தியா மண்டபத்தில் சிலரிடம் பேசினோம். இன்னொரு குழு மொத்தக் கருவாட்டு மண்டிகள் செயல்படும் வால்டாக்ஸ் சாலையில் உள்ள மூலக்கொத்தளம் கருவாட்டுச் சந்தையில் மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகளிடமும் பேசினோம்.
இந்தப் பதிவுகளை ஒரு ஆவணப்படமாக தொகுத்திருக்கிறோம்.
முதலாவதாக, கருவாடு மற்றும் அசைவ உணவு சாப்பிடுபவர்கள் மீது பார்ப்பனர்களுடைய வன்மம், இப்போது இந்துத்துவ சக்திகள் அதிகாரத்தை கைப்பற்றியிருக்கும் நிலையில் அவர்களது பார்வை, அது குறித்து கடைக்காரர்கள், வியாபாரிகள், உழைக்கும் மக்களின் எதிர்வினையை பேசுகிறது இந்த ஆவணப்படம்.
இரண்டாவது பகுதியில் கோயம்பேடு சந்தையில் கருவாடு விற்பது மீதான நடவடிக்கை மட்டுமின்றி, பொதுவாக அசைவ உணவு உண்பவர்கள் பற்றிய கருத்தியல்கள், பதிவுகள், வினவு கட்டுரைகளிலேயே பின்னூட்டம் போட்டவர்கள் சொன்ன, ‘அசைவம் சாப்பிட்டவர்கள் குசு விட்டால் நாறும்’ போன்ற கருத்துக்களை பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பதிவாகியுள்ளது.
மூன்றாவதாக, துர்நாற்றத்தின் குறியீடாக கூறப்படும் கருவாட்டின் மருத்துவ குணங்கள் என்ன, அது உழைக்கும் மக்களின் வாழ்க்கையோடு எப்படி பிணைந்துள்ளது என்பது குறித்து வியாபாரிகள், உழைக்கும் மக்கள் மற்றும் மீன்வளத் துறை அதிகாரியின் கருத்துக்களை பதிவு செய்துள்ளோம்.
அடுத்தபடியாக அசைவ உணவு சாப்பிடுபவர்களால்தான் நாட்டில் பாலியல் மற்றும் வன்முறை குற்றங்கள் அதிகரிக்கின்றன என்று தினமணி வைத்தி எழுதிய தலையங்கம் சொல்வது போல ஒரு நபருடைய பண்புகளை அசைவ உணவுதான் தீர்மானிக்கிறதா என்ற கேள்விக்கு பார்ப்பனர்கள், உழைக்கும் மக்கள் கூறும் பதில் பதிவாகியுள்ளது.
தொடர்ந்து, ஒருவரது அறிவு, ஆளுமை, பதவி இவற்றுக்கும் நான்-வெஜ் அல்லது வெஜ் சாப்பிடுபவதற்குமான தொடர்பு உள்ளதா என்று விவாதிக்கப்படுகிறது.
இறுதியில், கோயம்பேடு சந்தையில் கருவாடு பறிமுதல் என்ற பிரச்சினையைத் தாண்டி இந்துத்துவ சக்திகள் அரசியல் ரீதியாக செல்வாக்கு பெற்றிருக்கும் வட இந்திய மாநிலங்களான ராஜஸ்தான், குஜராத், மும்பை போன்ற பகுதிகளில் அசைவ உணவுக்கு எதிராக நிலவும் மறைமுகத் தடை, இப்போது மோடி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பசுவதை தடைச்சட்டம் போன்ற கோரிக்கைகள் முன்னணிக்கு வந்திருக்கும் நிலை இவற்றுக்கு தமிழகத்தின் பதில் என்ன, இதற்கு தமிழகம் எப்படி எதிர்வினையாற்றும் என்ற கேள்வியுடன் ஆவணப்படம் முடிகிறது.
மொத்தம் 40 நிமிடம் ஓடும் இந்த ஆவணப்படம் அதன் அரசியல் ரீதியான உள்ளடக்கம், பன்முக பரிமாணம், மற்றும் அரசியலை மக்கள் கருத்துக்களாக வெளிப்படுத்துவதன் மூலம் விறுவிறுப்பான ஒரு வடிவத்தை பெற்றுள்ளது. குறிப்பாக கருவாடு, பொதுவாக அசைவ உணவு உண்பது குறித்து மக்கள் மத்தியில் நிலவும் கருத்தை பதிவு செய்யும் பணியைத்தான் வினவு செய்திருக்கிறது.
இதை பரவலாக கொண்டு சேர்ப்பதற்கு, பெரிய அளவில் விளம்பரப்படுத்துவது சாத்தியமில்லை. ஆவணப்படத்தை டி.வி.டிகளாக வெளியிட்டு ஒரு டிவிடி க்கு ரூ 100 நன்கொடை பெறவிருக்கிறோம். கீழைக்காற்று விற்பனையகத்திலும் புதிய கலாச்சாரம் அலுவலகத்திலும் டி.வி.டிக்களை நேரில் வாங்கிக் கொள்ளலாம்.
புதிய கலாச்சாரம்,
எண் 16, முல்லை நகர் வணிக வளாகம்,
2-வது நிழற்சாலை, அசோக் நகர்,
சென்னை – 600 083
தொலைபேசி – (91) 99411 75876
கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு,
எல்லீஸ் சாலை,
சென்னை – 600002
914428412367.
தபால் மூலம் பெற விரும்புபவர்கள் தபால் செலவாக தமிழ்நாட்டிற்குள் அனுப்ப ரூ 50 சேர்த்து பணம் அனுப்பவும். வெளிநாட்டில் தபால் மூலம் பெற விரும்புபவர்கள் தொடர்பு கொண்டால் உங்கள் நாட்டுக்கான தபால் செலவை அறியத் தருகிறோம்.
5 டிவிடிக்கு மேல் வாங்கினால் ஒரு டிவிடிக்கு ரூ 20 கழிவு தரப்படும். தமிழ்நாட்டுக்குள் 5 டி.வி.டிக்கு மேலும் வெளிநாடுகளுக்கு 50 டிவிடிகளுக்கு மேலும் வாங்குபவர்களுக்கு அனுப்புவதற்கான தபால் செலவை நாங்களே ஏற்றுக் கொள்கிறோம்.
வெளியீட்டுக்குப் பிறகு இந்த ஆவணப்படம் விரைவில் வினவில் வெளியிடப்படும். ஆவணப்படத்துக்கு தொழில்நுட்ப ரீதியில் முடிந்த அளவு சிறப்பான வடிவம் அளிக்க ஆன பொருட்செலவை ஈடு கட்டவும் பல்வேறு இடங்களில் திரையிடுவதற்கான செலவுகளுக்கும் வாசகர்கள் நன்கொடை அளித்து ஆதரிக்குமாறு கோருகிறோம்.
நன்கொடை அனுப்ப வேண்டிய விபரங்களை அறிய இந்த சுட்டியில் பார்க்கவும்.
கருவாடு ஆவணப்படம் வெளியீடு, திரையிடல்
நாள் : செப்டம்பர் 20, 2014 சனிக்கிழமை
நேரம் : மாலை 5.30 முதல் இரவு 8.30 வரை
இடம் : டிஸ்கவரி புக் பேலஸ் கட்டிடம் 2-வது மாடி, எண் 6, முனுசாமி சாலை, கே கே நகர், சென்னை
ஆவணப்படம் வெளியீடு
சிறப்புரை : தோழர் கதிரவன், மாநில செயற்குழு உறுப்பினர், மக்கள் கலை இலக்கியக் கழகம்
திரையிடல்
வாசகர்கள் அனைவரையும் இந்நிகழ்ச்சிக்கு வருகை தருமாறு அன்புடன் அழைக்கிறோம்.