Tuesday, May 28, 2024
முகப்புகட்சிகள்பா.ஜ.கபார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பு - புமாஇமு கருத்தரங்கம்

பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பு – புமாஇமு கருத்தரங்கம்

-

மோடி அரசின் சமஸ்கிருதத் திணிப்பு
பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பே!

“மோடி அரசின் சமஸ்கிருதத் திணிப்பு என்பது வெறும் மொழித்திணிப்பு மட்டுமல்ல; இந்நாட்டின் பல்தேசிய இன மக்கள், மொழி, பண்பாடு ஆகியவற்றின் மீதான பார்ப்பனப் பண்பாட்டு படையெடுப்பே” என்பதை வலியுறுத்தும் வகையில் 16.07.14 அன்று புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சார்பில் பூவிருந்தமல்லி அருகில் உள்ள கரையான் சாவடி கல்யாணி சீனிவாச பத்மாவதி மண்டபத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது.

கருத்தரங்கம் நடைபெற்ற முதல் நாள் இரவு முதல் காலை வரை பெய்துகொண்டிருந்த மழையால் மாநகரம் மந்தமாக இருந்தது என்றாலும் புமாஇமு தோழர்கள் மழையை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் கூட்டத்திற்கான வேலைகளை அதிகாலை முதலே சுறு சுறுப்பாக செய்து கொண்டிருந்தனர். சாலை நெடுகிலும் புமாஇமுவின் கொடிகள் அரங்கத்திற்கு வழிகாட்டிக் கொண்டிருக்க, மோடி அரசின் சமஸ்கிருதத் திணிப்பை அம்பலப்படுத்தும் வகையில் சென்னை மாநகர் முழுவதும் புமாஇமு வின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. தன் வாழ்நாள் இறுதிவரை பார்ப்பனீயத்தை எதிர்த்து போராடிய தந்தை பெரியார் வேடமணிந்த தோழர்கள் இருவர் காலை 9 மணி முதல் கரையான்சாவடியில் நின்று பிரசுரங்களை வினியோகித்து உழைக்கும் மக்களை கருத்தரங்கிற்கு அணிதிரட்டிக் கொண்டிருந்தனர்.

16 -ம் தேதி காலையில் பெய்த மழையினால் மக்கள் இயக்கம் குறைவாக இருந்த கரையான்சாவடி பகுதியில் 10 மணி முதல் பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் சாரை, சாரையாக அரங்கத்தை நோக்கி அணிவகுத்து வந்துகொண்டிருந்தனர். குறிப்பாக பல்வேறு பள்ளி மாணவர்கள் பள்ளித் தேர்வை பொருட்படுத்தாமல், அரசியல் தேர்வை எதிர்கொள்ளும் துணிவுடன் பள்ளிச் சீருடையுடன் வந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது, அரங்கமே நிரம்பி வழிந்தது.

நூற்றுக்கணக்கில் மாணவர்கள், தொழிலாளர்கள், பெண்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், ஜனநாயக சக்திகள் நிறைந்திருந்த இந்த கருத்தரங்கிற்கு தலைமை வகித்த பு.மா.இ.முவின் மாநில அமைப்பாளர் தோழர். கணேசன் “மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்ததும் இந்தித் திணிப்பு, சமஸ்கிருத வாரக் கொண்டாட்டம், ஆசிரியர் தினத்தை குரு உத்சவ் என பெயர் மாற்றியது என அடுத்தடுத்து தனது பார்ப்பனீய பண்பாட்டு திணிப்பை செய்து வருகிறது. இவையெல்லாம் அடுத்து வரப்போகும் அபாயத்தின் ஒரு முனை. இந்நாட்டிலுள்ள பல்தேசிய இன மக்கள் பேசும் மொழி, பண்பாடு ஆகியவற்றை அழித்து, இந்நாட்டின் வரலாற்றை திரித்து நாட்டையே சமஸ்கிருதமயமாக்குவது – பார்ப்பனீயமயமாக்குவது – இதன் மூலம் அகண்ட பாரதம் என்ற கனவை ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி நிறைவேற்ற துடிப்பதுதான் பார்ப்பன பாசிச அபாயம்.

மோடி அரசின் இந்தித் திணிப்பைப் பற்றி கடந்த இரண்டு மாதங்களாக நாங்கள் பிரச்சாரம் செய்தபோது சிலர் அப்படி நடந்துவிடுமா என்று நினைத்திருக்கலாம். ஆனால், தற்போது மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் ‘பல்கலைக்கழகங்களில், பட்டப்படிப்புகளில் இந்தியை கட்டாயம் பயிற்று மொழியாக்க வேண்டும்’ என்று சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. நாங்கள் சொன்னது உண்மை என்பதற்கான ஆதாரம் இதுதான். இந்த ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன கும்பலின் திட்டத்தை தகர்க்கும் வல்லமை பார்ப்பன எதிர்ப்பு தமிழ் மொழிக்கும், தமிழ் பண்பாட்டுக்கும், வீரமிக்க தமிழ் மரபுக்கும் தான் உண்டு.

இப்படிப்பட்ட தமிழின் பெருமையை திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற ஆய்வு நூலின் மூலம் உலகறியச் செய்து சமஸ்கிருத மயக்கத்தை தெளிய வைத்த தமிழறிஞர் கால்டுவெல்தான். மீண்டும் ஆரிய பார்ப்பன கும்பல் பண்பாட்டுப் படையெடுப்பை நடத்தத் தொடங்கி இருக்கும் இத்தருணத்தில் கால்டுவெல்லை போர்வாளாக ஏந்தி உழைக்கின்ற மக்களாக ஒன்றிணைந்து போராட வேண்டும்.

1960-களில் இந்தியை திணிக்க முற்பட்ட போது அதை எதிர்த்து பள்ளி, கல்லூரி, வீதிகள் தோறும் போர் முழக்கமிட்டு போர்க்குணமாக போராடியவர்கள் தமிழக மாணவர்கள். இன்றும் அத்தகைய மாணவர் போராட்ட மரபை உயர்த்திப் பிடித்து களம்காண மாணவர்கள் முன்வரவேண்டும். மோடி அரசின் சமஸ்கிருதமயமாக்கம் – பார்ப்பனீயமாக்கம்- அகண்ட பாரத கனவுக்கு சவக்குழி வெட்ட வேண்டும் ” என்று அறைகூவி அழைத்தார்.

அடுத்ததாக, “உயர்தனிச் செம்மொழியாம் பார்ப்பன எதிர்ப்பு தமிழ் மரபை உயர்த்திப்பிடிப்போம் !” என்ற தலைப்பில் உரையாற்றிய ஜெனரல் கரியப்பா மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் முனைவர் ப.முருகையன் அவர்கள், “ஐந்தாயிரம் ஆண்டுகளாக வழக்கில் உள்ள உயர்தனிச்செம்மொழியான தமிழை அழிக்க இந்த மோடி அரசு முயல்கிறது என்றால் அதை செய்யவிடாமல் பார்ப்பன எதிர்ப்பு மரபை காக்க வேண்டிய அவசியம் நமக்கு இருக்கின்றது. தமிழை அழிக்க நினைப்பவனின் நாக்கை அறுத்து குடலை எடுக்க வேண்டுமென்று பழங்கால இலக்கியம் கூறியதை நடைமுறைப்படுத்த வேண்டிய காலம் வந்திருக்கிறது” என்று சுட்டிக்காட்டினார்.

மேலும் அவர் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய பள்ளியில் ஒரு விழாவுக்கு மபொசியை அழைத்து, அவ்விழாவிலே தன் பள்ளியில் தமிழ் வழியில்தான் கல்வி கற்றுக் கொடுக்கப்படுகின்றது என்று பெருமையாகப் பேசியதையும் அதற்கு பதில் அளித்த மபொசி, “குழந்தைக்கு தாய்ப்பாலை கொடுக்காமல் நாய்ப்பாலையா கொடுப்பார்கள்? தமிழ் வழிக்கல்வி கொடுக்கின்றேன் என்பதை பெருமையாகப் பேசலாமா?” என்று பதிலளித்ததை நினைவுகூர்ந்து, இன்று அரசு ஆரம்பப்பள்ளி முதல் ஆங்கிலவழிக் கல்வியை கொண்டு வந்து தமிழை அழிக்க முயற்சி செய்கிறது என்றார். வெற்றிலைப்பாக்கு வாங்கிவா என்றால் வெற்றிலையும் பாக்கையும் மட்டும் வாங்கி வரும் ஆங்கிலக்கல்வி மாணவர்களையும், வெற்றிலைப்பாக்கு என்றாலே சுண்ணாம்பையும் சேர்த்து வாங்கிவர வேண்டும் என்ற இயல்பான அறிவு பெற்ற தமிழ்வழிக்கல்வி மாணவர்களையும் ஒப்பிட்டு தாய்மொழி இயல்பான அறிவாக இருப்பதையும் விளக்கினார்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக திட்டமிட்டு தமிழ்ச்சுவடிகளை அழித்ததன் மூலம் ஒழுக்கத்தை போதிக்கும் தமிழ் நூல்கள், மருத்துவ நூல்கள் என பலவற்றையும் இல்லாமல் செய்து கொக்கரித்தது ஆரியக்கூட்டம். தமிழரின் வாழ்வியல் முறைகளை அழித்து அதில் பார்ப்பனீயத்தை திணித்ததற்கு எதிராக அன்று முதல் இன்று வரை எத்தனையோ இலக்கியங்கள் தோன்றி தமிழ் என்றால் அது பார்ப்பன எதிர்ப்பு மரபு தான் என்றும், இன்னும் 100 ஆண்டுகளில் அழியப்போகிற மொழிப்பட்டியலில் இருந்து தமிழை மீட்க முடியும் என்ற நம்பிக்கை அரங்கில் இருந்த மாணவர்களைப் பார்க்கும் போது தனக்கு ஏற்பட்டதாகக் கூறினார் முனைவர் முருகையன். தமிழ் இனி மெல்லச்சாகாதிருக்க வேண்டுமென்றால் சூடு சொரணையுடன் என் சாவிலும் தமிழ் மணந்து சாக வேண்டும் என்ற உணர்வுடன் இவ்வளவு காலம் எவ்வாறு பார்ப்பன எதிர்ப்பினை கடைபிடித்தோமோ அதை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டிய அவசியத்தையும் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

அடுத்ததாக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர் துரை.சண்முகம், உழைக்கின்ற மக்களால் உருவாக்கப்பட்டு, உயர்வாக்கப்பட்டு , நிலைநிறுத்தப்பட்ட உயர்தனிச்செம்மொழியான தமிழை, தான் பேசுவதிலும் அதை மாணவர்கள் , தொழிலாளர்கள் கேட்பதிலும் உள்ள மகிழ்ச்சியை வெளிப்படுத்தி “எல்லா ‘கட்’டும் ‘கட்’டல்ல, தமிழுக்காக இன்று அடித்த ‘கட்’டே ‘கட்’” என்று “மோடி அரசின் சமஸ்கிருதத்திணிப்பு! பார்ப்பனப் பண்பாட்டுத் திணிப்பே!” என்ற தலைப்பில் தனது சிறப்புரையை தொடங்கினார்.

உயர்தனிச்செம்மொழியான தமிழ் நமது தாய் மொழியாக இருக்கும் போது எழுத்து வடிவமே இல்லாத, உருவாக்கப்பட்ட மொழியான சமஸ்கிருதத்தை அனைவரும் கற்க வேண்டும் என்பது அநியாயம். இது வெறும் மொழிப்பிரச்சினை மட்டுமல்ல. சமஸ்கிருதத் திணிப்பு என்பது ஆர்.எஸ்.எஸ் கும்பலின் இந்து ராட்டிர – அகண்ட பாரதம் என்ற அபாயத்தின் ஒரு முனை. அவ்வாறு உணர்ந்து தான் சித்தர்கள் முதல் பெரியார், பகுத்தறிவுவாதிகள், கம்யூனிஸ்டுகள் வரை அந்த அயோக்கியத்தனத்துக்கு எதிராகப் போராடினார்கள். 15,000 சிபிஎஸ்இ பள்ளிகளில் சமஸ்கிருத வாரக்கொண்டாட்டம் என்பது சமஸ்கிருத பண்பாடு, கலாச்சாரத்தை திணிக்கும் தொலை நோக்கான ஆர்.எஸ்.எஸ்-ன் திட்டத்தின் முதல்படி.

உழைக்கும் மக்களை சூத்திரன் என்று கூறி அவர்களை அடிமைப்படுத்தி வைத்த பார்ப்பனீயத்தின் கொலைக்கருவிதான் சமஸ்கிருதம். சமஸ்கிருதத்தை ஏற்றுக்கொள்வது என்பது அடிமைத்தனத்தை நாம் விரும்பி ஏற்பதாக அர்த்தம். சூடு சொரணையுள்ள எந்த மனிதனும் ஏற்க மறுக்கும் அடிமைத்தனத்தை நாம் ஏற்க மறுப்பதாலேயேதான் சமஸ்கிருதத்திணிப்பு என்ற பார்ப்பனீயமயமாக்கத்தை எதிர்க்கின்றோம்.

நமது தமிழ் மரபு எப்படிப்பட்டது?

தமிழ் என்றால் இனிமை, எளிமை, நீர்மை என்று பிங்கலந்தை நிகண்டில் எழுதப்பட்டிருப்பதில் இருந்து தமிழை இயற்கையின் மூலமாக வர்ணித்து இருப்பதையும் தமிழோடு சேர்ந்து இருப்பதுதான் கடவுளுக்கே சிறப்பு என்று கவிஞர்கள் கூறியதையும் விளக்கினார். ஒழுக்கம் என்பதை அனைவருக்கும் போதித்து அனைத்து உணர்ச்சிகளையும் அழகாக, விரசமின்றி, நயமாக, நாகரீகமாக எடுத்துக்கூறிய தமிழையும் அதன் பண்பாட்டையும் ஒழித்துவிட்டு அந்த இடத்தில் மறைந்து இருந்து கொல்லும் கோழைத்தனத்தையும், ஆபாச இலக்கியத்தையும் மட்டுமே போதிக்கும் பார்ப்பன பண்பாட்டை கொண்டு வந்து வைப்பதுதான் மோடியின் திட்டம். இந்தப் பின்னணியில் இருந்து வரும் எதிரியை வீழ்த்த நாம் தமிழின் பெருமைகளையும் அதன் பண்பாட்டையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

இலட்சக்கணக்கான மக்கள் பேசக்கூடிய கோண்டு மொழியும், சந்தால் மொழியும் அட்டவணையில் இல்லை. 1961-ல் கணக்கெடுப்பின் போது 2,500 பேர் மட்டுமே பேசிய மொழியான சமஸ்கிருதம் 1962-ல் மொழிகளுக்கான அட்டவணையில் இணைக்கப்பட்டது என்றால் அது அதிகாரவர்க்கத்தின் மொழி என்பதால்தான். அதனால்தான் பல ஆண்டுகளுக்கு முன்னரே செம்மொழியாகவும் சமஸ்கிருதம் ஆக்கப்பட்டது. உயர்தனிச் செம்மொழியான தமிழைக் காக்க வெண்டுமென்றால் தமிழ்ப் பண்பாட்டை காக்க வேண்டுமென்றால் பார்ப்பன எதிர்ப்புப் பண்பாட்டை உயர்த்திப்பிடிக்க வேண்டும்.அந்த மொழிப்போரில் நெஞ்சில் குண்டேந்தி சுயமரியாதை உணர்ச்சியுடன் இந்தியை திணித்ததற்கு எதிராக பள்ளி மாணவர்கள் உட்பட அனைத்துப் பிரிவினரும் போராடி வென்றதுதான் தமிழ் மரபு. அந்த மரபை, வர்க்க உணர்வுடன் இன்றைய தலைமுறையைச் சேர்ந்த மாணவர்கள் கையிலேந்த வேண்டும்” என்று தனது உரையை நிறைவு செய்தார்.

பார்ப்பன பண்பாட்டை அம்பலப்படுத்தும் வகையில் ம.க.இ.க வின் புரட்சிகர பாடல்கள் பு.மா.இ.மு தோழர்களால் பாடப்பட்டன. மாணவர்கள், தொழிலாளர்கள், பெண்கள் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூட்டத்தின் இறுதி வரை இருந்து ஆர்வமாக கவனித்தனர். பல மாணவர்கள் பேச்சாளர்களின் பேச்சை குறிப்பெடுத்த வண்ணம் இருந்தனர். செஞ்சட்டை தோழர்களின் பிரச்சாரத்தால் அணிதிரண்டு வந்த மாணவர்களுக்கு இக்கருத்தரங்கம் பார்ப்பனப் பண்பாட்டு படையெடுப்புக்கு எதிராக உழைக்கும் வர்க்கத்தின் உணர்வூட்டப்பட்ட மாணவர் படையாக களத்தில் நிற்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாக இருந்தது.

அரங்கத்தில் இருந்த புத்தகக் கடையில் மாணவர்களும், இளைஞர்களும் ஆரம்பத்திலிருந்தே புத்தகங்களை ஆர்வமாக வாங்கினர். பு.மா.இ.மு தொடர்பு அலுவலகத்தில் பல மாணவர்கள் தாங்களாகவே முன்வந்து உறுப்பினரானார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்களை ரவுடிகள் , பொறுக்கிகள், விட்டேத்திகள் என அரசும், ஊடகங்களும் சித்தரிப்பது எவ்வளவு பொய் என்பதற்கு இவையெல்லாம் ஒரு சான்று.

**** **** **** ****

ழைக்கும் மக்களே, நண்பர்களே,

மிகப்பெரிய ஜனநாயக அரசு என பீத்திக்கொள்வதன் யோக்கியதையைப் பாரீர்…

இந்த நாட்டில் ‘குடிமக்கள் அனைவருக்கும் பேச்சுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, சங்கம் அமைக்கும் உரிமையை இந்திய அரசியல் சட்டம் வழங்கி இருப்பதாக’ யாராவது கருதினால் இந்த சம்பவங்களை படித்து புரிந்துகொண்டு உண்மையான ஜனநாயக உரிமைகளுக்காக போராட வாருங்கள்.

உண்மையிலேயே ஜனநாயக உரிமை உள்ளதென்றால், கூட்டம் நடத்துவதற்கும், எமது கருத்தை சொல்வதற்கும் யாருடைய அனுமதியும் தேவையில்லை. ஆனால், இந்த அரசமைப்பில் அப்படி ஒன்றை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன, என்றாலும், இரண்டு சம்பவங்களை மட்டும் சொல்கிறோம்.

சம்பவம் – 1

பா.ஜ.க ஆட்சிக்கும், மோடி பிரதமராவதற்கும் முன்னால் குஜராத் மாடல் வளர்ச்சி என்று பா.ஜ.க கூவியதையும், காவி பயங்கரவாதம் கார்ப்பரேட் பயங்கரவாதத்துடன் இணைந்து உழைக்கும் மக்களை கூறுபோட துடிப்பதையும் அம்பலப்படுத்தி எமது புரட்சிகர அமைப்புகள் சார்பில் 6 மாதங்களுக்கு முன்னாள் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தர்ம பிரகாஷ் என்ற மண்டபத்தில் “மோடி வளர்ச்சி எனும் முகமூடி” என்ற தலைப்பில் ஒரு நூலை வெளியிட்டு கூட்டம் நடத்தியதை அனைவரும் அறிந்திருப்பீர்கள்.

ஒரு தனியார் இடத்தில் கூட்டம் நடத்த போலீசு அனுமதி கேட்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனாலும், அக்கூட்டத்திற்கு தர்ம பிரகாஷ் மண்டப உரிமையாளர் கோரியபடி முறையான போலீசு அனுமதி பெற்றுக் கொடுத்துத்தான் கூட்டம் நடத்தினோம். கூட்டத்தின் முதல் நாளில் தொடங்கி, கூட்டம் முடிந்த அடுத்த நாள் வரை மண்டப உரிமையாளரை ஐ.எஸ் எனும் உளவுத்துறை போலீசார் மிரட்டியுள்ளனர். அப்போது மண்டப உரிமையாளர் போலீசாரிடம், “உங்களிடம் முறையான அனுமதி பெற்று வந்த பின்புதான் சார் நான் பணம் வாங்கினேன்” என்று சொல்ல அதற்கு உளவுப் போலீசார் “இப்ப சொல்றேன் கேட்டுக்கோ நாங்க அனுமதி கொடுத்தாலும் புரட்சினு பேசுற இவங்கள மாதிரி அமைப்புக்கு இடம் கொடுக்கக் கூடாது, மீறி கொடுத்தா அதற்கான விளைவை நீ அனுபவிக்க வேண்டி வரும்” என்று நேரடியாக மிரட்டியுள்ளனர்.

தற்போது சமஸ்கிருதத் திணிப்புக்கு எதிரான கூட்டத்திற்கு இடம் கேட்டுச் சென்றபோது அமைப்பு பெயரைக் கேட்டு உளவு போலீசு மிரட்டியதையெல்லாம் சொல்லி தேதி காலியாக இருந்தாலும் இடம் கொடுக்க முடியாது என்று மறுத்துவிட்டார், மண்டப உரிமையாளர்.

சம்பவம் -2

மஸ்கிருதத் திணிப்புக்கு எதிரான இந்தக் கருத்தரங்கத்திற்கு இடம் பார்க்க சென்ற போது போலீசு நெருக்கடி, பணம் நெருக்கடியால் பல இடங்கள் கிடைக்காமல் போக, இறுதியாக கரையான் சாவடியில் கல்யாணி சீனிவாச பத்மாவதி மண்டபத்தில் முழுமையாக பணம் கட்டி இடத்தை பதிவு செய்தோம். பிரசுரத்தில் இடத்தை அறிவித்து பிரச்சாரமும் செய்தோம்.

இதைத் தெரிந்து கொண்ட உளவு போலீசு மண்டபத்தின் நிர்வாகத்தினரிடம் சென்று இடம் கொடுக்கக் கூடாது என்று 13-ம் தேதி மிரட்டியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மண்டப நிர்வாகி எமது தோழரை தொடர்பு கொண்டு  “15-ம் தேதி காலை முகூர்த்தத்திற்கு இடம் கொடுத்திருந்தேன். அவர்கள் அடுத்த நாளும் கேட்டார்கள். நான் மறந்துபோய் உங்களிடம் பணம் வாங்கிவிட்டேன். நீங்கள் உங்கள் பணத்தை வாங்கிக்கொண்டு வேறு இடம் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார்.

நாம் அவரிடம் “இடம் பதிவுசெய்த போது காலண்டரை பல முறை பார்த்து எந்த நிகழ்ச்சியும் இல்லை என்று உறுதிபடுத்திக்கொண்டுதானே முழு வாடகையும் பெற்றுக்கொண்டு பதிவு செய்தீர்கள். இப்போது மாத்திப் பேசுறீங்களே, நாங்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டோமே” என்றதும்,

“ஏற்பாடு பணத்தையும் நான் கொடுத்து விடுகிறேன், வேறு இடம் பார்த்துக்கொள்ளுங்கள்” என்றார்.

“அப்படி முடியாது” என்று உறுதியாக மறுத்த போது,

“நான் மாப்பிள்ளையுடன் பேசி விட்டு உங்களை தொடர்புகொள்கிறேன்” என்றவர் திரும்ப பேசவில்லை.

முதல் நாள் அப்படியொரு திருமண நிகழ்ச்சி இருப்பதாக அவர் அன்று சொல்லவில்லையே, இதில் வேறு ஏதோ பிரச்சனை உள்ளது என்று கருதி இது பற்றி மண்டப உரிமையாளரிடம் நேரில் சென்று பேசும் போதுதான் தெரிகிறது, அப்படி ஒரு திருமண நிகழ்ச்சியே இல்லையென்பது. அந்த நடக்காத திருமணத்தின் பெயரால் எமது கூட்டத்தை தடுக்க முயற்சி செய்த மாப்பிள்ளை வேறு யாருமல்ல ஐ.எஸ் எனும் உளவுத்துறை போலீசுதான்.

நாம் கூட்டத்தை நடத்துவதில் உறுதியாக இருந்ததால் மாப்பிள்ளைகள் கருத்தரங்க கூட்டத்தினை கவனமாக குறிப்பெடுத்துக்கொண்டு இருந்தார்கள். பார்ப்பனீயத்துக்கு அரசு மாமா வேலைப் பார்க்கும் போது போலீசு தானே மாப்பிள்ளையாக இருக்க முடியும். நிற்க, நடக்க, பேச என எதற்கும் உரிமை இல்லை. நடப்பதெல்லாம் பாசிச ஆட்சி, யாரை ஏமாற்ற ஜனநாயக ஆட்சி என்ற பெயர்?

இதுதான் இந்த ஜனநாயக அரசு என்பதன் யோக்கியதை. கார்ப்பரேட் முதலாளிகள் இந்நாட்டைக் கூறு போட்டு கொள்ளையடிக்கவும், அவர்களுக்கு ஜால்ரா அடிக்கும் ஓட்டுக் கட்சிகள் கூட்டம் போட்டு அதை நியாயப்படுத்தவும் , பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன கும்பல் மதவெறியாட்டம் போட்டு உழைக்கும் மக்களை கொள்ளுபவர்களுக்குமான ஜனநாயகம்தான் இங்குள்ளதே தவிர, இந்த அநீதிகளை எதிர்த்துப் பேசவும், எழுதவும், போராடவுமான உழைக்கும் மக்களுக்கான ஜனநாயகம் இல்லை என்பதை மக்கள் எங்கள் அனுபவம் மூலமாக மட்டுமல்ல உங்கள் சொந்த அனுபவம் மூலமாகவே கூட உணரமுடியும். இப்படி உணருகின்ற நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடும் போதுதான் உண்மையான ஜனநாயகத்தை படைக்க முடியும்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்
புரட்சிகர மாணவ – இளைஞர் முன்னணி,

சென்னை.

9445112675

 1. “10 மணி முதல் பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் சாரை, சாரையாக அரங்கத்தை நோக்கி அணிவகுத்து வந்துகொண்டிருந்தனர். குறிப்பாக பல்வேறு பள்ளி மாணவர்கள் பள்ளித் தேர்வை பொருட்படுத்தாமல், அரசியல் தேர்வை எதிர்கொள்ளும் துணிவுடன் பள்ளிச் சீருடையுடன் வந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது”

  உங்கள் சேவை மகத்தானது ! இது போன்று இன்னும் பல நிகழ்ச்சிகளை எல்லா தேர்வு சமயங்களிலும் ஏற்பாடு செய்யவும்.

  “உழைக்கின்ற மக்களால் உருவாக்கப்பட்டு, உயர்வாக்கப்பட்டு , நிலைநிறுத்தப்பட்ட உயர்தனிச்செம்மொழியான தமிழை, தான் பேசுவதிலும் அதை மாணவர்கள் , தொழிலாளர்கள் கேட்பதிலும் உள்ள மகிழ்ச்சியை வெளிப்படுத்தி “என்று “மோடி அரசின் சமஸ்கிருதத்திணிப்பு! பார்ப்பனப் பண்பாட்டுத் எல்லா ‘கட்’டும் ‘கட்’டல்ல, தமிழுக்காக இன்று அடித்த ‘கட்’டே ‘கட்’” திணிப்பே!” என்ற தலைப்பில் தனது சிறப்புரையை தொடங்கினார்.”

  ஆஹா என்ன ஒரு தமிழ்ப் பயன்பாடு ! பண்பாடு !

 2. அடிப்படை தமிழ் அறிவே கேள்விக்குறியாகி வருகிறது.
  சமஸ்கிருத திணிப்பை எதிர்ப்பதை விட தமிழ் மொழியின் வளர்ச்சியை நோக்கி உங்கள் கவனத்தை செலுத்தினால் நன்றாக இருக்கும்.
  தமிழில் உள்ள நல்ல நூல்களை,இலக்கிய படைப்புகளை இளைய தலைமுறைக்கு கொண்டு செல்ல முயற்சியுங்கள் , தமிழ் வளர்ச்சிக்கு உங்கள் உழைப்பை செலவிடுங்கள்.இளைய தலைமுறைக்கு தமிழின் முக்கியதுவத்தை புரியவைக்க பாடுபடுங்கள்.

 3. //அடிப்படை தமிழ் அறிவே கேள்விக்குறியாகி வருகிறது.//
  சரியான கருத்துதான்! ஆனால் சந்தடி சாக்கில் , தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிகளில் கலந்து, தமிழ் கருத்து கருவூலங்களை மறைத்து, ஆதிக்கம் செலுத்தவரும் சமஸ்க்ரிதத்தை ஏன் எல்லோரும் தந்தை மொழி ஆக்கிக்கொள்ள வேண்டும் என்பது ஏன்?

  சமஸ்கிருத திணிப்பை எதிர்ப்பதுடன், அறிவியல் தமிழ் மொழியின் வளர்ச்சியை நோக்கி உங்கள் கவனத்தை செலுத்தினால் நன்றாக இருக்கும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க