Thursday, September 28, 2023
முகப்புகட்சிகள்அ.தி.மு.கவேதாரண்யம் அதிமுக எம்.எல்.ஏ காமராஜ் ரவுடித்தனம்

வேதாரண்யம் அதிமுக எம்.எல்.ஏ காமராஜ் ரவுடித்தனம்

-

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் கோடியக்காடு கிராமம் சுமார் 400 குடும்பங்களைக் கொண்டது. இங்கு வாழும் மக்கள் மீன் பிடித்தொழிலையும் உப்பளத் தொழிலையுமே நம்பி வாழ்ந்து வருகிறார்கள். அன்றாடம் உழைத்து வாழ்க்கைத் தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் நிலையில் இருக்கும் இம்மக்களின் ஒற்றுமையை குலைக்க அரசும் அதிகார வர்க்கமும் மற்றப் பகுதிகளில் செயல்படுத்தும் தந்திரங்களைப் போல இங்கு உருவாக்கப்பட்டதுதான் வீர சைவப் பேரவை (பண்டாரம்) என்கிற சாதிச் சங்கம்.

காமராஜ்
வேதாரண்யம் எம்.எல்.ஏ காமராஜ்

இப்பகுதியில் வசித்துவரும் விவசாயிகள் விடுதலை முன்னணி ஆதரவாளர் குமார் என்பவரின் குடும்பப் பிரச்சினையில் தலையிட்டு கட்டப்பஞ்சாயத்து செய்யும் இச்சங்கத்தின் செயல்பாடு குறித்து அவர் வேதாரண்யம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார். கட்டப்பஞ்சாயத்தாரின் அழுத்தம் காரணமாக காவல் நிலையத்தில் புகார் ஏற்கப்படாமல் போக உயர்நீதி மன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. காவல்துறை வழக்கின் மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. குமாரின் மனைவி லதாவை மானபங்கப்படுத்தி தாக்கியது தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் மூலம் அளித்த புகாரின் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. புகார் கொடுத்த காரணத்தால் கட்டப்பஞ்சாயத்தினர், பாதிக்கப்பட்ட குமாருக்கு அபராதம் விதிக்கின்றனர்.

இதனை ஏற்காத குமார் மீது சாதி சங்கத்தின் தூண்டுதலின் பேரில் அவரது தந்தையும் சகோதரர்களும் சேர்ந்து கடுமையாக கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். பாதிக்கப்பட்ட குமார் ரத்தம் வழிந்து கிடந்ததை பார்த்து அப்பகுதியை சேர்ந்த 5 குடும்பத்தினர் உதவியோடு வேதாரண்யம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது வாக்குமூலத்தை பதிவு செய்து புகார் பதிவு செய்யப்படுகிறது. ஆனாலும் தாக்குதல் தொடுத்த நபர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

கட்டப்பஞ்சாயத்து நபர்களையும் தாக்கியவர்களையும் கைது செய்யக்கோரியும் நடவடிக்கை எடுக்காத காவல்துறையினரைக் கண்டித்தும் வி.வி.மு சார்பாக சுவரொட்டி ஒட்டப்பட்டது. மேலும் முதலமைச்சர், மனித உரிமை ஆணையம், மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் என புகார் மனுக்கள் அனுப்பப்பட்டதோடு மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் இருவரையும் நேரில் சந்தித்தும் நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டது.

வி.வி.மு வின் இந்நடவடிக்கை கட்டப்பஞ்சாயத்தினருக்கு ஆத்திரமூட்டியதால் குமார் மற்றும் அவருக்கு ஆதரவாகச் செயல்பட்ட 6 குடும்பங்களையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர். திருமணம், இறப்புக்கு ஒதுக்கி வைத்தல், குடிநீர் எடுக்க விடாமல் தடுப்பது, கடைகளில் சாமான்கள் கொடுக்கக்கூடாது என மிரட்டுவது என அராஜக நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இந்நிலையில் வேதாரண்யம் காவல்துறை துணை கண்காணிப்பாளரின் பரிந்துரையின் அடிப்படையில் வட்டாட்சியர் தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது.

சமாதானக் கூட்டத்தில் நாங்கள் இனி அவ்வாறு செய்யமாட்டோம் என எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்ற கட்டப்பஞ்சாயத்தினர் 6 குடும்பத்தினரையும் தொடர்ந்து மிரட்டுகின்றனர். இதனையொட்டி காவல் துறையினரிடம் புகார் செய்யப்படுகிறது. இதனால் மேலும் ஆத்திரமடைந்த கட்டப்பஞ்சாயத்தினர் கும்பலாகச் சேர்ந்து குமார் என்பவரை மீண்டும் கடுமையாக தாக்குகின்றனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு குமாருக்கு ஆதரவானவர்களையும் தாக்க முற்படுவதோடு குமாரை மருத்துவமனைக்கு கொண்டு போக முடியாமல் தடுக்கின்றர்.

இதனைக் கேள்விபட்ட வி.வி.மு. பொறுப்பாளர் தோழர் தனியரசு காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கவே காவலர்கள் சென்று தாக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு அழைத்து வருகின்றனர். அன்று இரவு குமாருக்கு ஆதரவானவர்களை 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு கற்களாலும் ஆயுதங்களாலும் தாக்க முற்படுகின்றனர். இதனை அறிந்த வி.வி.மு அமைப்பினர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கின்றனர். எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாதக் காரணத்தால் இரவு 12 மணியளவில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் சென்று முறையிடுகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த துணைக் கண்காணிப்பாளர் புகார் கொடுக்கச் சென்ற அனைவர் மீதும் 307  பிரிவில் வழக்கு போடுவேன் என மிரட்டுகின்றார்.

அதன்பின் கோடியக்காடு பகுதிக்கு இரண்டு காவலர்களை ரோந்து பணிக்காக அனுப்புகின்றார். போலிசைக் கண்டதும் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் ஓடிவிடுகின்றனர். காலையில் போலிசு சென்றதும் பால்சாமி, அவரது மகன் மற்றும் அவரது மகள் ஆகியோரின் வீடுகளையும் அவர்களையும் கல் வீசியும் ஆயுதங்களாலும் வீடு புகுந்து தாக்குகின்றனர், ரவுடிக் கும்பல். இதனை அறிந்த வி.வி.மு. தோழர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கின்றனர். போலிசு அங்கு சென்ற பிறகு தாக்குதல் தொடுத்தவர்கள் ஓடிவிடவே தாக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் தோழர்களுடன் சென்று புகார் தெரிவிக்கின்றனர்.

வீசியெறியப்பட்ட அறைக்கலன்கள்
வீசியெறியப்பட்ட அறைக்கலன்கள்

அதன்பிறகு வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ என் வி. காமராஜ் என்பவர் வி.வி.மு தோழர்கள் தனியரசு, வெங்கடேசன் ஆகிய இருவரையும் அவரது ஆட்களை அனுப்பி வலுக்கட்டாயமாக தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று கதவு, ஜன்னல்களை மூடிவிட்டு சாதி சங்க கட்டப்பஞ்சாயத்து கும்பல் மற்றும் அவரது அடியாட்கள் முன்னிலையில் தோழர்கள் இருவரையும் கடுமையான வார்த்தைகளால் வசைபாடி,

“எல்லா பிரச்சனைகளிலும். வி.வி.மு, ம.க.இ.க எதுக்குடா வரிங்க? நாங்க ஆளுங்கட்சி இருக்கிறோம்டா, நாங்க இருக்கிறப்போ நீங்க எதுக்கடா வரிங்க? எல்லா ஊரிலும் அ.தி.மு.க ஆளும் கட்சி எவ்வளவு ரவுடித்தனம் செய்றாங்க பாத்தியா? இதுக்கப்புறம் எந்த பிரச்சினையிலும் தலையிடக் கூடாது. அப்படி மீறி தலையிட்டா உங்கல ரோட்ல ஓடவுட்டு வெட்டுவேன், கடையெல்லாம் அடிச்சு நொறுக்கிடுவேன். பொய் வழக்கு போட்டு உள்ள தள்ளுவேன்”

என மிரட்டி அனுப்பி வைத்தார்.

இது தொடர்பாக வி.வி.மு சார்பில் தோழர் தனியரசு முதலமைச்சர், மனித உரிமை ஆணையம், மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அனைவருக்கும் புகார் மனுக்கள் அனுப்பப்பட்டதோடு காவல்துறை கண்காணிப்பாளரை நேரில் சந்தித்தும் நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும், வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினரைக் கண்டித்து வி.வி.மு மற்றும் பு.மா.இ.மு. சார்பில் சுவரொட்டி மாவட்டம் முழுதும் ஒட்டப்பட்டது.

இதனால் மேலும் ஆத்திரமுற்ற எம்.எல்.ஏ தனது ஆட்களை அனுப்பி வேதாரண்யம் பகுதியில் தோழர் தனியரசு நடத்தி வந்த காமட் பர்னிச்சர் கடையை உடைத்து சுமார் 1 லட்சத்துக்கும் மேலான மதிப்புள்ள பொருட்களை சேதப்படுத்தி ரோட்டில் வீசியெறிந்திருக்கிறார். சட்டமன்ற உறுப்பினரின் ஆட்கள் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களையும், ரூபாய் 30,000 ரொக்கத்தையும் திருடிச் சென்று விட்டனர்.

சூறையாடப்பட்ட கடை
சூறையாடப்பட்ட கடை

இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.  சூறையாடப்பட்ட கடையை படம் எடுத்த ஊடகங்களை மிரட்டி படத்தை அழித்தனர், காமராஜின் ஆட்கள். இதனால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட பத்திரிக்கையாளர்கள் செய்தி வெளியிடவில்லை.

தனது கட்டப்பஞ்சாயத்து ரவுடித்தனத்திற்கு எதிராக இருந்த நபர்களை ஒடுக்க மீனவர்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தி கலவரத்தை உண்டாக்கிய எம்.எல்.ஏ என்.வி, காமராஜ் அதற்கு எதிராக யார் வாயை திறந்தாலும் அவர்களை நிம்மதியாக விடுவதில்லை. விவிமு தோழர்கள் மீது கொலை மிரட்டல் விடுவதற்கு இன்னும் பல காரணங்கள் உள்ளன.

 • வேதை நகரப்பகுதியில் பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த டாஸ்மாக் சாராயக் கடைக்கு எதிராக விவிமு-பு.மா.இ.மு. அமைப்புகள் நூற்றுக்கணக்கான மக்களை திரட்டி சாலை மறியல் மற்றும் முற்றுகை செய்த போது அக்கடையின் சாக்னா கடையை இவரது எடுபிடிக்கு மாற்றிக்கொடுக்க இருந்ததால் அந்த போராட்டத்தை கைவிடுமாறு தோழர்களிடம் பேசினார். தோழர்களிடம் அது எடுபடாமல், சாராயக்கடை அகற்றப்பட்டது.
 • நகராட்சியில் துப்புரவு பணிக்கு ஆதிக்க சாதியினரை ( தேவர், முத்தரையர்) தேர்ந்தெடுத்து அவர்களை அந்த வேலையில் ஈடுபடுத்தாமல் அலுவலக பணியில் ஈடுபடுத்தியது எம்.எல்.ஏ தலைமையில்தான் நடந்தது. இதற்கு எதிராக தாழ்த்தப்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் சார்பாக விவிமு துணையோடு அனைத்து துறை அதிகாரிகளுக்கும், முதல்வருக்கும் மனு போடப்பட்டது. இது தொடர்பாக எம்.எல்.ஏ என்.வி. காமராஜ் தோழர்களை அழைத்து கட்டப்பஞ்சாயத்து செய்து பார்த்தார். தோழர்கள் அடிபணியவில்லை.
 • ஏற்கனவே பகுதியில் உள்ள கெம்பிளாஸ்ட் நிறுவனத்தில் உப்பள தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்காக விவிமு தலையிட்டு சம்பள உயர்வு பெற்றுத் தந்தது காமராஜூக்கு எரிச்சல் ஊட்டியிருந்தது.
 • இதே பகுதியில் பெண்கள் அரசு மேல்நிலை பள்ளியில் ஆண்டு விழாவில் ஆபாச நடனம் ஆட விடப்பட்டது தோழர்களால் தட்டிக்கேட்கப்பட்டது. அதனால் ஆபாச நடனம் நிறுத்தப்பட்டது. அப்போது விழாவில் அமர்ந்து ரசித்துக் கொண்டிருந்த இப்பள்ளியின் பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவரும், எம்.எல்.ஏ-வுமான  காமராஜூக்கு கோபம் தலைக்கு ஏறியது. அன்றைக்கு ஏதும் பேச முடியவில்லை.
 • பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் சரியான முறையில் மருத்துவர் வருவதில்லை. இது தொடர்பாக தோழர் தனியரசு ஒரு நாள் மருத்துவ மனையில் போராடி,  மருத்துவமனைக்கு வட்டாட்சியர் வருகிறார், அவரிடம் முறையிடுகிறார், பிரச்சினை பெரிதாகிறது. அன்று இரவு மருத்துவராக இருந்தவர் அதிமுக பிரமுகரின் மகள் என்பதால் இச்சம்பவம் எம்.எல்.ஏ.வுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

இறுதியாகத்தான் கோடியக்காடு மீனவர் பிரச்சனையில் விவிமு தோழர்களின் தலையீடு அவருக்கு இன்னும் எரிச்சல் ஊட்டியிருக்கிறது.

இவ்வாறு தொடர்ச்சியாக மக்களுக்கான கோரிக்கைகளூக்காக விவிமு தோழர்கள் போராடி வந்துள்ளார்கள். இத்தகைய போராட்டங்கள் எப்போதும் மக்களின் வாழ்வாதாரத்தை சூறையாடுகிற, சுரண்டுகிற, கட்டபஞ்சாயத்து செய்கிற மக்கள் விரோத அரசியல்வாதிகளுக்கு பிடிப்பதில்லை. ஆகையால்தான் விவிமு தோழர்களுக்கு எதிராக வேதை அதிமுக எம்.எல்.ஏ என்.வி, காமராஜின் கொலை மிரட்டல், கடை சூறையாடல் நடத்தப்பட்டுள்ளது.

ரவுடி எம் எல் ஏ காமராஜ் 5 ஆண்டுகளுக்கு முன்னர் வரை பாரதிய ஜனதாவில் இருந்தார். சாதாரண உப்பளத் தொழிலாளியாக வாழ்க்கையை ஆரம்பித்தவர் இந்த இரண்டு கட்சிகளில் இருந்து, தற்போது எம்.எல்.ஏவாக மாறி குறுக்கு வழியில் சம்பாதித்து திடீர் பணக்கார அரசியல் ரவுடியாக உருவெடுத்துள்ளார். சமீபத்தித்தில் இவரது மகனது திருமணம் சில கோடி ரூபாய் செலவழித்து நடத்தப்பட்டது. ஆளும் கட்சி திமிரிலும், அதிகார வர்க்க அரவணைப்பிலும் இந்த காமராஜும், கட்டப்பஞ்சாயத்தினரும் செய்யும் அராஜகங்களை எதிர்த்து விவிமு இறுதி வரை போராடும்.

poster

தகவல்
விவசாயிகள் விடுதலை முன்னணி,
வேதாரண்யம்

மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு

நாள் : 24.09.2014

க. காளியப்பன்,
மாநில இணைப் பொதுச்செயலாளர்,
1, அண்ணாநகர்,
சிவாஜி நகர் வழி, தஞ்சாவூர் – 613 001,
தொலைபேசி : 04362-272765, 9443188285

பத்திரிகை செய்தி

விவசாயிகள் விடுதலை முன்னணி தோழரின் கடையை அடித்து நொறுக்கி, பொருட்களைக் கொள்ளையடித்த வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினர் காமராஜையும், அவரது அடியாட்களையும் கைது செய்!

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் எமது தோழமை அமைப்பான விவசாயிகள் விடுதலை முன்னணியின் அமைப்பாளர் தோழர் தனியரசு அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு, அவரது சிறிய வீட்டு உபயோகப் பொருட்கள் கடையை அடித்து நொறுக்கி, சுமார் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களையும், ரூ 30,000 பணத்தையும் வேதாரண்யம், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் காமராஜூம், அவரது அடியாட்களும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மக்களின் உடைமைகளுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டியவர் என்று கருதப்படுகின்றன ஒரு சட்டமன்ற உறுப்பினரே இத்தகைய அராஜக, ரௌடித்தனத்தில் இறங்கியிருப்பது மிகவும் ஆபத்தானது, கடும் கண்டனத்திற்குரியது.

இப்பகுதியில் செயல்பட்டு வரும் எமது தோழமை அமைப்பான விவசாயிகள் விடுதலை முன்னணி பல்வேறு மக்கள் பிரச்சனைகளுக்காக போராடி வருகிறது. குறிப்பாக, சாதிப் பஞ்சாயத்து, உள்ளூர் கட்டப் பஞ்சாயத்து ஆகியவற்றுக்கு எதிராக சட்டபூர்வ நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் மக்கள் வசிக்கும் பகுதியில் பெரும் தொல்லையாக இருந்த டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்துவதில் போராடி வெற்றி கண்டது. இத்தகைய எமது செயல்பாடுகளால் தமது செல்வாக்கும், அதிகாரமும் பாதிக்கப்படுவதாகக் கருதிய சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் எமது தோழர் தனியரசுவைக் கடத்திக் கொண்டு போய் நாகூசும் சொற்களால் அவமானப்படுத்தி கொலைமிரட்டல் விடுத்து அனுப்பியுள்ளார். சட்டமன்ற உறுப்பினர் காமராஜின் அந்த அராஜகத்தைக் கண்டித்து 19.09.2014 அன்று வி.வி.மு அமைப்பினர் சுவரொட்டி ஒட்டியுள்ளனர். இதனால் ஆத்திரமுற்ற காமராஜ் 24.09.2014 அதிகாலை சுமார் 3 மணிக்கு தனது அடியாட்களை அனுப்பி எமது தோழர் தனியரசுவின் கடையை உடைத்து நொறுக்கி அதிலிருந்த இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களையும், ரூ 30,000/- பணத்தையும் கொள்ளையடித்துள்ளனர். தகவலறிந்து செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களையும் மிரட்டி அனுப்பியுள்ளனர்.

எனவே, காவல்துறை உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுத்து சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், அவரது அடியாட்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும். கொள்ளையடிக்கப்பட்ட பணம், பொருட்களை மீட்டுத் தருவதுடன், தோழர் தனியரசுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி முதல் கட்டமாக வரும் 30-ம் தேதி நாகையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். 1-ம் தேதி வேதாரண்யத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

நன்றி.

தங்கள் உண்மையுள்ள

க. காளியப்பன்

 1. வடிவேலு ஒரு படத்தில் தன்னை ரவுடி என வெளிப்படுத்த போலீஸ் வேனில் தொங்கிக் கொண்டு நானும் ரவுடிதான்,நானும் ரவுடிதான், ரவுடிதான்,ரவுடிதான் என்று கூவிக்கொண்டே செல்வார்.ஆனால் அதற்கு அவசியமே இல்லாமல் எம்.எல்.ஏ வின் நெற்றியிலேயே எழுதி இருக்கிறது.கள் குடித்த குர்ங்காக அதிகார போதையில் ஆட்டம் போடலாம். அதிகாரம் பறிபோனவுடன் துணிவும் காணாமல் போகும்.ஆனால் தோழர் தனியரசு போன்றவர்களின் துணிவு அவர் சார்ந்திருக்கும் அமைப்பின் வழிவந்தது.எத்தகைய ரவுடிகளையும் எதிர் கொள்ளும் ஆற்றலை பெற்றது.

 2. கண்டிக்கிறேன்.

  ம.உ.பா.மைய உண்மை அறியும் குழுவினர் வரவுள்ளதாக அறிகிறேன்.

  திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளுக்கு எதிராக இன்னுமொரு இயக்கம் எடுக்கப்பட வேண்டுமோ எனக் கருதுகிறேன்.

  வேதை சுற்று வட்டாரப்பகுதி சனநாயக சக்திகளை , இணையதள நண்பர்களை ஆர்ப்பாட்டத்திற்கு வருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க