Thursday, September 28, 2023
முகப்புகட்சிகள்இதர கட்சிகள்கோவையில் இன்று பகத்சிங் பிறந்தநாள் அரங்கக் கூட்டம்

கோவையில் இன்று பகத்சிங் பிறந்தநாள் அரங்கக் கூட்டம்

-

ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி தோழர் பகத்சிங் பாதையில் அணி திரள்வோம்

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, மாணவர்களே, இளைஞர்களே,

ன்று இந்தியாவிற்கு வணிகம் செய்ய வந்த கிழக்கிந்தியக் கம்பெனி பிறகு நம் நாட்டை அடிமைப்படுத்தி இங்குள்ள வளங்களை ஏராளமாகக் கொள்ளையடித்துச் சென்றது. அதிகாரத்தைக் கையிலெடுத்துக் கொண்டு உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பறித்து அடக்குமுறைகளை ஏவியது. ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து தாய்நாட்டின் விடுதலைக்காகப் போராடியவர்களை தீவிரவாதிகள் என்றும் தேசத் துரோகிகள் என்றும் கூறிக் கைது செய்து கடுமையாக சித்ரவதை செய்தது.

எனினும், கைது, சிறையெல்லாம் துச்சமாக மதித்து இம்மண்ணிலிருந்து அந்நிய ஆதிக்கத்தைத் துடைத்தெறிய தீரமிக்க போராட்டத்தை நடத்திய போராளிகள் ஏராளம். இன்று பெயரளவுக்கேனும் சுதந்திரம் இருக்கிறதென்றால் அது அந்த தியாகத்தின் பலன்தான். சுதந்திரம் என்பது வெறும் வார்த்தையல்ல, அது நம் முன்னோர்களின் ரத்தத்தையும், கண்ணீரையும், சுவாசத்தையும் கலந்து தியாகத்தால் எழுதப்பட்ட சரித்திரம். இப்படிப்பட்ட சரித்திரத்தைப் படைத்தவர்களின் முன்னோடிதான் தோழர் பகத்சிங்

செப்-28, தாய் நாட்டின் மானம் காக்க தூக்குக் கயிற்றைத் துணிந்து முத்தமிட்ட பஞ்சாப் சிங்கம் பகத்சிங்கின் பிறந்த நாள் !

ஆங்கிலேய ஏகாதிபத்திய அடிவருடியாக இருந்த காந்தி மற்றும் காங்கிரஸின் துரோகத்தை தோலுரித்தார் பகத்சிங்.

வெள்ளை ஏகாதிபத்தியத்தை இம்மண்ணிலிருந்து விரட்டி சமத்துவ சமுதாயம் படைக்க வேண்டும் எனும் உன்னத லட்சியத்திற்காக போராடியவர், பகத்சிங்.

இந்தத் தீரமிகு போராட்டத்தில் மக்களின் உணர்வுகளைத் தட்டியெழுப்ப தன் மரணத்தையே வேலைத் திட்டமாக முன்வைத்தார், பகத்சிங்

“புரட்சி ஓங்குக!” என்ற பகத்சிங்கின் முழக்கம் நாடு முழுக்க வியாபித்தது. தனது 23-வது வயதிலேயே தாய்நாட்டின் விடுதலைக்காகப் போராடி இன்னுயிர் ஈந்த பகத்சிங்கின் மரணம் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான கிளர்ச்சியைத் தோற்றுவித்தது.

அன்று ஒரு கிழக்கிந்தியக் கம்பெனி கொள்ளையடித்தது என்றால் இன்றோ பல பன்னாட்டுக் கம்பெனிகளின் வேட்டைக்காடாகி வருகிறது நமது நாடு. காடுகளும், மலைகளும் இன்னபிற மதிப்புமிக்க இயற்கை வளங்களும் பன்னாட்டுக் கம்பெனிகளின் லாப வேட்டைக்காக இரக்கமின்றி சூறையாடப்படுகின்றன. அனைத்துத் தரப்பு உழைக்கும் மக்களும் சுரண்டப்படுகின்றனர். நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை பறிக்கப்பட்டு பன்னாட்டுக் கம்பெனிகளின் கப்பல்கள் நமது கடல் வளத்தை அபகரிக்கின்றன. இதனால் மீன் வளமும் அழிந்து மீனவர்களின் வாழ்க்கையும் அழிந்து வருகிறது.

பணம் இல்லாதவனுக்குப் படிப்பு இல்லை. படித்தவனுக்கு வேலை இல்லை. வேலை கிடைத்தவனுக்கு அது நிரந்தரமில்லை என்று பெரும்பாலான உழைக்கும் மக்களின் வாழ்வு நிர்க்கதியாகிவிட்டது. லஞ்சம், ஊழல், முறைகேடுகளில் அதிகார வர்க்கமே புழுத்து நாறுகிறது. கொலை, கொள்ளை, பெண்கள் மீதான பாலியல் வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காற்றும், நீரும், உணவும் நஞ்சாகி நோய்கள் பெருகுகின்றன. வாழவழியின்றி தற்கொலைச் சாவுகள் அதிகரித்திருக்கின்றன.

இவற்றிற்கெல்லாம் என்ன காரணம் ? இந்த அரசு என்பது மக்கள் நல அரசு அல்ல.

மோடி ஆட்சிக்கு வந்தால் தேனும், பாலும், ஆறாக ஓடும் என மக்கள் நம்ப வைக்கப்பட்டனர். ஆனால் நடப்பதென்ன? பன்னாட்டுக் கம்பெனிகளின் நலனுக்கான, பார்ப்பன கும்பலுக்கான ஆட்சிதானே நடக்கிறது? சமஸ்கிருதத் திணிப்பு, இந்தித் திணிப்பு, ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் 250-க்கும் மேற்பட்ட மத மோதல்களை நடத்தியுள்ளது சங்கப் பரிவாரக் கும்பல்.

தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தப்பட்டு தொழிலாளிகளின் உரிமை பறிக்கப்படுகிறது. விலைவாசி உயர்வு, ரயில் கட்டண உயர்வு, விவசாயிகளுக்கு மானிய வெட்டு, தடை செய்யப்பட வேண்டிய மரபணு மாற்று பயிர்கள் பயிரிட அனுமதி, கல்விக்கான மானியம் குறைப்பு, வரி அதிகரிப்பு என பாசிச மோடியின் ஆட்சியில் மக்கள் வாட்டி வதைக்கப்படுகின்றனர்.

அன்று நாட்டைக் காட்டிக் கொடுத்த துரோகிகள் எட்டப்பன், தொண்டைமான், ஆற்காடு நவாப் என்றால் இன்று காங்கிரஸ், பாஜக மற்றும் பெரிய, சிறிய ஓட்டுக்கட்சிகள்,  அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் (என்‌.ஜி‌.ஓ.க்கள்).

எனவே, மாறி மாறி ஓட்டுப்போட்டு பலனில்லை, பன்னாட்டு கம்பெனிகளை இம்மண்ணிலிருந்து விரட்டி உழைக்கும் மக்களின் அரசமைய பகத்சிங் மேற்கொண்ட புரட்சி பாதை இன்று அவசியமாகியுள்ளது.

பகத்சிங்க்கின் வாரிசுகளாய் சமுதாய மாற்றத்தைப் படைப்போம் வாரீர் !

“இந்தப்போர் எங்களோடு துவங்கவும் இல்லை
எங்கள் வாழ்நாளோடு முடியப்போவதும் இல்லை”
– தோழர்.பகத் சிங்

poster

அரங்குக் கூட்டம்

நாள் : 26.09.2014
இடம் : அண்ணாமலை அரங்கம் (சாந்தி திரையரங்கம் அருகில், கோவை)
நேரம் : மாலை 4.00 மணி

நிகழ்ச்சி நிரல

தலைமை
தோழர் உமா,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

வரவேற்புரை
தோழர் திலீபன்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

சிறப்புரை
தோழர் காளியப்பன்,
மாநில இணைச் செயலாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்

புரட்சிகர கலை நிகழ்ச்சி
புமாஇமு குழுவினர்

நன்றியுரை
தோழர் கிரிஷ்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

தகவல்

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கோவை
8220840468
rsyfkovai@gmail.com

  1. தோழர் பகத் சிங்கின் பெயரால் உறுதி கொள்வோம். இந்த மறுகாலனியாக்க சூழலில், அவரது புரட்சிகரமான சிந்தனைகளை நெஞ்சில் ஏந்தி . அவரது வழியில் புரட்சிகரமான சமூக மாற்றத்திற்கு பாடுபடுவோம் என்று சூளுரைப்போம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க