Thursday, January 16, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கஅம்மா கிளிசரின் !

அம்மா கிளிசரின் !

-

கண்ணிலே நீர் எதற்கு … …?

அழு!
இல்லையேல்
அழ வேண்டி வரும்.

எதை நினைத்தாவது
எங்களோடு சேர்ந்து
அழுதுவிடு.

ஜெயா - திரைத்துறை
படம் : ஓவியர் முகிலன்

இல்லையேல்
பேருந்துகளைக் கொளுத்தி
கடைகளை உடைத்து
கல்லால் அடித்து
அழ வைக்கப்படுவாய்!

கண்ணையாவது கசக்கிவிடு…
இல்லையேல்
காவல் தெய்வம்
உன்னைக் கசக்கிவிடும்!

தின்ன சோற்றுக்கு
திரையுலகே தெருவுக்கு வந்து
“அன்னமிட்ட தாய்க்கு அநீதியா?!”
என்று ஆர்ப்பரிக்கையில்
கன்னத்தில் ஒருதுளி
கண்ணீர் வழியாவிட்டால்
நீ கண்காணிக்கப்படுவாய்.
ஆகையினால்,
உன் விதியை நினைத்தாவது
அழுதுவிடு!

தேம்பித் தேம்பி
பதவியேற்றவர்களின்
திருமுகத்தைப் பார்..
உனக்கும் அழுகை வரும்!

அழக்கூடிய மூஞ்சிகளா அவை?
அம்மாவின் அடிபணிந்து
அடங்கிப்போகும்
ஓருணர்ச்சியன்றி
வேறுணர்ச்சி அறியாத
அவர்களுக்கே அழுகை வரும்போது
உனக்கு வராதா என்ன?!
உடனே அழுதுவிடு!
இல்லையேல்
சந்தேகத்திற்குள்ளாவாய்!

மக்களைப் பொறுத்தவரை
சிக்கல் இல்லை,
தொலைந்துபோன ஒரு
செருப்பை நினைத்தால் கூட
உடனே அழுகை வரும்!

குடித்துக் குடல்வெந்து
இறந்துபோன மகனை நினைத்தவுடன்
அழுகை வரும்…

எப்படி அழுவது
என்று தெரியாமல்
தடுமாறும் வர்க்கமே,
‘அம்மாவை நினை’
உடனே அழுகை வரும்!

பதினெட்டு ஆண்டுகள்
வனவாசம் போன நீதிக்கு
அப்படியென்ன அவசரம்?

ஓ.பி.எஸ்-சும், இ.பி.கோ.-வும்
வேறு, வேறு என்று யார் சொன்னது?

அம்மா சொன்ன நீதிபதி…
அம்மா சொன்ன நீதிமன்றம் … …
அம்மா சொன்ன நீதி மட்டும் தராமல்… … …
அம்மாவுக்கு வரும்
கோபத்தை நினைத்தால்
அழுகை வந்தே தீரும்!

விடுதலைப் புலிகளால் உயிருக்கு ஆபத்து
எனத் தாயுள்ளத்தோடு தவிக்கும் அம்மாவை
விடுதலை செய்தால்தான்
நீதியான அரசு நிலைக்குமென
அற்புதத்தம்மாளே
தளுதளுக்கும்போது
நீ அழுது தொலைத்தால்தான் என்ன?

தனது வாழ்வுரிமையையே
பணயம் வைத்து
தமிழக வாழ்வுரிமைக்காக
அம்மாவை சிறை மீட்க
கண்ணீரைக் கனலாக்கும்
வேல்முருகனைப் பார்த்தாவது
அழுகை வராதா?

பேருந்துப் படிக்கட்டில்
பாட்டுப்பாடி, தொங்கிவரும்
மாணவர்களை
காலிகள் எனக் கருவலாம்,

கார்ப்பரேட் முதலாளிகளின்
கொள்ளைக்கு எதிராக
போராடும் மக்களை
“வேறு வேலையில்லை” என்று
முகம் சுளித்து ஒதுங்கிப்போகலாம்,,

ஆனால்,
சட்டப்படி கைதான அம்மாவுக்காக
சட்டத்தைக் கையில் எடுத்து
வெறியாடும் ரத்தத்தின் ரத்தங்களிடம்
அழுது காட்டுவதுதான்
நீ பிழைக்கும் வழி!
ஆகையால்
உன் நிலைமையை நினைத்து அழுதுவிடு!

லூயி போனபார்ட்டின்
டிசம்பர்-10 கும்பல்
கோழிக்கறி வாழ்க! கோமான் வாழ்க!
எனக் கூவியதைப்போல
அம்மாவின் தினசரிக் கும்பல்
அம்மா உணவகம், அம்மா குடிநீர்,
அம்மா லேப்டாப்.. என்று கத்துவது
உன் காதுகளுக்குக் கேட்கவில்லையா?
அதை நினைத்தாவது
அழுதுவிடு!

சட்டத்தின் ஆட்சியைக்
கரைத்துக் கொள்ள
அடிமைகளின்
விழிகளைப் பிதுக்கி
விழிநீர் எடுப்பதற்கு
அம்மா யாரைக் கேட்கவேண்டும்?
தமிழகமே அம்மாவினுடையது
என்று ஆனபிறகு
உன் கண்ணீர் மட்டும் உனக்கா சொந்தம்?

சட்டத்தை யாரும்
கையில் எடுக்கக் கூடாது!
அம்மாவே
நம் கண்ணில் எடுக்கிறார்…
அழுதுவிடு!

ஒன்று விழ வேண்டும்
இல்லை, அழ வேண்டும்!

அம்மாவின் ஜனநாயகத்திற்குள்
உனக்கு அவ்வளவுதான் வாய்ப்பு.
பாவம் …
என்ன செய்வாயோ.. .. … கண்ணே!

– துரை. சண்முகம்

  1. கவிதை சூப்பர் எனக்கும் கண்ணீர் வந்து விட்டது அம்மா தெய்வத்தையே உள்ளே சரத்குமாருக்குகூட தரிசனம் தர விடாமல் வைத்துவிட்டார்களே ,சினிமாவில் சோக காட்சிக்கே கண்ணீர்விடும் தமிழர்கள் இந்த சோக காட்சிக்கு கண்ணீர் விடவில்லை என்று அதிமுக கண்டன அறிக்கை விடலாம் எனவே அழுது தொலையுங்கள் தமிழர்களே திமுக தேதிமுக பாமக பாஜாக என்ற எதிர்கட்சிகளும் சேர்ந்து அழ வேண்டும் இல்லை சந்தோசபடவில்லை என்பதையாவது காட்டிக்கொள்ள வேண்டும்…..

  2. கவிதை அருமை. திரைப்பட உலகினரின், யாரை எதிர்த்து போராட்டம் என்ற திசை தெரியாமல், சும்மா வெற்று வெளியை எதிர்க்கும் போராட்டத்தின் உண்மை நிலமையை விரிவாக எடுத்து்ரைக்கிறது. எனக்கு தெரிந்து, கிராமங்களில் ஏதேனும் மரண சம்பவம் நடந்து விட்டால், மரண சடங்கு முடிந்த்தும் மூத்த பெண்கள் இப்படி பேசிக்கொள்ளுவார்கள், “என்ன அவர் கொஞ்சம் கூட அழாமல் இருக்கிறார் அல்லது ஏதோ கொஞ்சம் தான் அழுதார் அவருக்கு இறந்தவர் மேல் இவ்வளவு பாசம் தானா? என்று புறம் பேசிக் கொள்வார்கள். இதற்காகவே அழுகை இய்ற்கையாக வராவிடினும், வராதவர் செற்கையாக அழுவர். அதே போல ஒரு சம்பவத்தை இப்ப இந்த நேரத்திலே நான் பார்க்கிறேன். இது திரைப்பட உலகினர் மற்றும் பல துறையினர் அழுத் நிகழ்ச்சி மட்டுமல்ல, அமைச்சரவை பதவி ஏற்பு நிகழ்ச்சியிலும், எவனோ ஒரு புண்ணியவாண் அழுவாச்சி காவியத்தை தொடங்கி வைக்க, மற்றவர்கள் தன் மீது தலைமைக்கு கோபம் வரக்கூடாது அல்லது மற்றவரை விட தாம் அதிகமாக அழுது தலைமையின் அருள் பெற வேண்டும் என்று அழுத போட்டியாகவே எனக்கு தெரிகிறது

  3. என்ன செஇவீங்கலோ,எப்படி செஇவீஙலோ…
    மஞசல் துண்டை உடனே உள்ளே வைத்து அம்மாவின் ஆசி பெற. ஓ.ப
    செயலில் இறங்கினார்….

  4. அடிமைகளுக்கு அழுவதைத் தவிர வேறு வழி இல்லை.அதிமுகவிலிருந்து ஸ்பார்டகஸ் வர முடியுமா? நாமம் போட்ட அம்மாவுக்கு ராம் ஜேத்மலானி நல்ல ஜோடிதான். நல்லவர்கள் யாரும் அம்மாவுக்கு வரமாட்டார்கள். நாறப் பயலுக தான் வருவானுக.ஒரு கத்தோலிக்கப் பாதிரியாரு அதிமுக பக்த்தர்களோட பிரார்த்தனை செயப் போறதா டிவில சொல்றாரு.இயேசுவே இவர்களை மன்னியாதிரும்.ஆமேன்.சொட்டாங்கி போடுகிற கவிதை.கண்ணீர் சே… சே தேன் சுரக்கும் கவிதை.அம்மா நீடூழி வாழ்க சிறையில்.

  5. எங்க அம்மா அசைந்தால் அண்ட சராசரங்களும் ஆடும்! பாவம், இப்போது பரப்பன அக்ரகாரத்தில் பரிதாபமாய் உள்ளாரே! இதற்கெல்லாம் காரணமான ஜால்ராக்களை இனியேனும் அம்மா அடையாளம் கண்டு கொள்வாரா? உசுப்பேற்றி உசுப்பேற்றியே உச்சாணி கிளைக்கு கொண்டுபோய் தடாலென தள்ளிவிட்ட அண்டங்காக்கைகளை அம்மா இனிமேலும் அண்டவிடலாமா? கருணானிதி எதிர்ப்பு எனும் பழிவாங்கும் கொள்கையை விடுத்து, நம்பி வாக்களித்த? (அல்லது கள்ள வோட்டு போட்ட) மக்கள்நலனை மட்டுமே சிந்திப்பாரா? எலெக்சன் கமிசனையும், ஏவல்படையையும்நம்பாமல் ஏழைகளை நம்பி கட்சி நடத்தினால், அதுவே கடந்த கால தவறுகளுக்குநல்ல பிராயச்சித்தமாக இருக்கும்! செய்வாரா? அம்மையார் செய்வாரா?

  6. மகா பிரசாதத்தை பூசிக்கொண்டு
    காஞ்சி மகானை தரிசிப்பதி நல்லது

  7. jayalalitha vai um pjp yai um ivlo vimarsikkum neengal karunanithi kudumbathin pakam sellathathu yeno?
    na j supporter um illa pjp supporter um illa. tamilinathirku niyam kidaikatha yena yengum satharana tamilan avlothan.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க