Monday, June 17, 2024
முகப்புசெய்திதிருச்சியில் குடிக்கு எதிராக பெண்கள் விடுதலை முன்னணி

திருச்சியில் குடிக்கு எதிராக பெண்கள் விடுதலை முன்னணி

-

 • குடிமகன்களே! நீங்க தள்ளாடும் வரை தான் இந்த அரசு ஸ்டெடியா இருக்கும்.
 • நமது குடி கெடுப்பதே இந்த அரசுதான் என்பதை உணரும் போது உன் வாழ்க்கை வசப்படும்!

என்கிற தலைப்பில் 25.9.2014 அன்று திருச்சி மாநகரம் முழுவதும் பெண்கள் விடுதலை முன்னணி சார்பாக வேன் மூலம் சென்று 8 இடங்களில் தெருமுனைக்கூட்டம் நடத்தப்பட்டது. மொத்தம் 18 பெண் தோழர்கள் சீருடை அணிந்து குழந்தைகளுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

“இன்றைக்கு பொதுத்துறை அனைத்தையும் தனியார்மயமாக்கி வரும் சூழலில் டாஸ்மாக் சாராயக் கடையை மட்டும் அரசு தானே ஏற்று நடத்துகிறது. இதன் மூலம் குடிப்பவரின் உடல்நிலை கெட்டுப் போவதும், அதன் மூலம் சமூக சீரழிவுகள் அதிகமாவதும், சாலையில் விபத்துகள் ஏற்படுவதும் அதிகரித்துள்ளது.

இன்னொரு புறம் பெண்கள் மீதான பாலியல் வன்முறை அதிகரித்து வருகிறது. மூன்று வயது பெண் குழந்தை முதல் 80 வயது மூதாட்டி வரை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகும் கொடுமை, எண்ணிப் பார்க்க சகிக்காத நிலை ஏற்பட்டுள்ளது. குடிவெறியில் கழுத்தறுப்பு, குழந்தைகள் அடித்துக் கொலை, மனைவி துடிதுடித்து சாவு என அன்றாடம் விழி பிதுங்குகிறது தமிழகம்.

அரசின் வருவாயில் சரிபாதியாக 35,000 கோடி ரூபாயை டாஸ்மாக் விற்பனை சில ஆண்டுகளில் எட்டிப்பிடித்து விடும். இதை இலக்காக வைத்து குடிமக்களின் உயிருடன் விளையாடுகிறது, அரசு. இதில் கருணாநிதி , ஜெயலலிதா போன்ற அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் கூட்டாளிகளாக உள்ளனர். ஆக அரசின் கொள்கையை எதிர்த்துக் கேட்கவோ, பேசவோ சுயநினைவுடன், சுயமரியாதையுடன் மக்கள் வாழக் கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது.

நாட்டின் வளங்களை கோடீஸ்வர முதலாளிகள் சூறையாடவும், தங்கு தடையில்லாமல் சேவை செய்யவும்தான் அரசு மக்களை போதையில் மூழ்கடித்து வருகிறது, இந்த உண்மைகளை மறைக்கும் விதமாக சாராய வருமானத்தில் இருந்து மூன்றில் ஒரு பங்கு தொகையை, வருடத்திற்கு ரூ 8,000 கோடியை இலவசமாக, மானியமாக, விலையில்லா பொருட்கள் மூலம் வாய்க்கரிசி போடுகிறது.

இந்த உண்மையை உணர்ந்து நமது வாழ்வை அழிப்பது அந்த அரசுதான் என்பதை அறிந்து கொள்வோம், கையேந்தியது போதும் நமது துயரத்துக்கு காரணமானவன் இந்த அரசு தான் என்பதை உணர்ந்து போராடக் களமிறங்குவோம்”

என்று பிரச்சாரத்தின் ஒவ்வொரு இடத்திலும் பெண் தோழர்களே பேசினர், அமைப்பு பாடல்களும் பாடப்பட்டது. டாஸ்மாக் அவலத்தை உணர்த்தும் வகையில் நாடகமும் போடப்பட்டது, ஒவ்வொரு இடத்திலும் மக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது, 5 இடங்களில் 138 பேரிடம் கையெழுத்து பெறப்பட்டது.

மக்கள் பேசும் போது கண்டிப்பாக இதை எதிர்க்க வேண்டும் என ஆர்வமுடன் கையெழுத்து போட்டனர்.

சில குடிமகன்களிடம் கருத்து கேட்டபோது

 • ஏம்மா நாங்க கஷ்டப்பட்டு உழைக்கிறதுக்கு உடம்பு வலி தீர குடிக்கிறோம், அதையும் வேணாங்கிறீங்க.
 • சாராயக்கடை இல்லன்னா இந்த அரசாங்கமே இயங்காது.
 • இப்பிடி நீங்க நின்னு தெருவில பேசுறதவிட கடைய அடிச்சு நொறுக்குறதுக்கு போங்க, நாங்களும் ஆதரவு தாரோம்.

இன்னொரு இளைஞர், கூனி குறுகிப்போய் நமது பெண் தோழர் ஒருவரை தனியே அழைத்து “நான் M.B.A முடித்துள்ளேன் வேலை கிடைக்காததினால் வீட்டில் இருந்தேன், ஆனா அப்பா பேசுறத சகிக்க முடியல, சோறு தின்னும் போதும் கேவலமா பேசுறாரு, அத பொறுத்துக்க முடியாம குடிக்க பழகி விட்டேன், ஏதாவது வேலை கிடைச்சா போதும்னு பெயிண்டிங் வேலைக்கு போகிறேன். நீங்க சொல்லும் போது எனக்கு கண்ணீரே வருகிறது” என மிக உணர்ச்சி பொங்க கூறினார்.

வருங்கால சமுதாயத்தின் குடிமகன் குடிகாரனாக மாற அவன் காரணமில்லை, அரசுதான் காரணம் என்பதை பிரச்சாரம் உணர்த்தியது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

செய்தி:
பெண்கள் விடுதலை முன்னணி,
திருச்சி.

 1. இதை, இதைத்தான்நான் எதிர்பார்த்தேன்! குடியினால் பாதிக்கப்படுவது குடிக்கும் ஆண் மட்டுமல்ல! அவந்து மொத்த குடும்பமும், தாய், மனைவி, மகள், மகன் என அனைவருமே! குடியினால் கோடீஸ்வரர்கள் கூட குடும்ப மானம் இழந்து,நடுத்தெருவிற்கு வந்ததுண்டு! எனது உறவினர்,நண்பர் என்று பலர் குடிப்பழக்கத்தால் குடும்பச்சொத்தை இழந்த வரலாறு உண்டு! குடிப்பழக்கம் , போதை மருந்து பழக்கம் இவைகள் மனிதனை மனநோயாளி ஆக்கிவிடும்!

  ஆகவே சகோதரிகள், மகன், மகள் அனைவரும் ஒன்றாக திரண்டு போராட முன் வர வேண்டும்! ஊழல் பேர்வழிக்கு வக்காலத்து வாங்கி போராடுவதை விடுத்து, குடியை கெடுக்கும் குடி எதிர்த்து போராடும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்! யாரொ கொள்ளையடிக்க தமிழ் பெண்களின் தாலி அறுக்க வேண்டுமா?

 2. வினவு குழுவுக்கு ஒரு சின்ன வேண்டுகோள் . போஸ்டர் அடிக்கும் போது அப்படியே “அருகாமையில் உள்ள மது அடிமை மீட்பு மையத்தின் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணையும்” வெளியிட்டீர்கள் என்றால் நன்மை பயக்கும்

 3. ஜுரத்துக்கு வைத்தியம் பாக்கவே காசு இல்ல ராமன்….. அரசுக்கு வருமானம் வந்தது பத்தாதுன்னு டாக்டரோட வருமானத்துக்கும் வழி பாக்குரீறு……. மீட்பு மையத்துக்கு ஆயிரமாயிரமா எப்படி அழ முடியும் ?? சிம்ப்ளா கடைய மூடிட வேண்டியது தான…..??

  • அரசாங்க மருத்துவ காப்பீடு கைகொடுக்கும் என்று நினைகிறேன் . விவரம் அறிந்தவர்கள் சொல்லுங்களேன்

 4. திருச்சியில் மட்டும் தானே மகளிர் போராட்டம் தொடங்கியுள்ளது? மற்ற இடங்களிலும் இது போன்று தொடங்கப்பட வேண்டும்! பாதிக்க பட்ட குடும்பங்களை செர்ந்த பெண்கள் அவசியம் முன்வரவேண்டும்! பெண்களிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த படித்த பெண்கள், அரசியலுக்கு அப்பாற்பட்ட இயக்கமாக இதை வழிநடத்த முன் வர வேண்டும்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க