அய்யோ, “அம்மா” கைது! என்று அதிமுகவினர் மட்டும் அலறுகின்றனர் என்று பார்த்தால், படித்த மேல்தட்டு வர்க்கமும் அலறுவதை கண்டு அரண்டுவிட்டேன்.
தீர்ப்புக்கு முன் நாளே, பத்திரிக்கைகளும்,காணொளிகளும் கூட்டு ஒப்பாரிக்கு தயாராகின. மறுநாள்…, “தீர்ப்பு இன்னும் சற்றுநேரத்தில், இன்னும் சற்றுநேரத்தில் என்று கிரிக்கெட் போட்டியின் கடைசி ஓவர் போல சூடேற்றினர்.” கடைசியில் முதல்வர் ஜெயலலிதா கைது” என்று தீர்ப்பும் வந்தது.
இத்தீர்ப்பிக்கு பிறகு ஒரு வாரகாலமாக காஞ்சிபுர நகரின் பேருந்துகளிலும், சுற்றாத்தாரிடமும், வேலையிடத்திலும்,பயணிக்கும்போதும் கண்ட காட்சிகள், கேட்ட கருத்துக்கள்…
“அம்மா” கைதின் எதிரொலி எல்லா டாஸ்மாக்கையும் திக்கு முக்காட வைத்தது.மூச்சு முட்டும் கூட்டம்.
காஞ்சிபுரம் கம்மாளத் தெருவில் பஸ் எரிப்பு, ஏற்கனவே எம்.பி. தேர்தல் முடிவுக்கு முன்பே, “அ.தி.மு.க வெற்றி” என்ற பேனர் வைத்த காஞ்சிபுரம் புல்லட் பரிமளம், இப்போதும் தீர்ப்புக்கு முன்பே “அம்மா வழக்கில் வெற்றி” என்று பேனர் வைத்தார். “அம்மா”விடம் நல்ல பேர் வாங்கத் துடித்த, “புல்லட்” பரிமளம், தானே, தீக்குளித்து இருக்கலாம், இல்லை, தனியார் பஸ்சை கொளுத்தி வீரம் காட்டி இருக்கலாம், ஆனால்,அம்மா அரசு தன்னை எதுவும் செய்யாது என்று தெளிவாக தெரிந்துக் கொண்டு அரசு பஸ்சைக் கொளுத்தி வடிவேலுப் போல”நானும் ரவுடிதான்” என்று பெயர் வாங்கிகொண்டார்.
ஞாயிற்றுக்கிழமை காலை…
காஞ்சிபுரம் பேருந்து நிலையம்,எல்லாக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. ஒரு மருந்துக் கடையை திறக்கலாமா? வேண்டாமா? என்று எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் அதன் ஊழியர்கள். அப்போது, இருசக்கர வாகனங்களில் அதிமுக கொடியுடன் வெறியோடு, வந்த 30க்கும் மேற்பட்ட கும்பல், “ஏய் கடையை மூடு”, என்று நாக்கை மடித்து துருத்தி கட்டளையிட்டனர். வேடிக்கைப் பார்த்தது அங்கிருந்த போலீசு.
பயணி ஒருவர், “பஸ் எதுவும் போகலை, ஷேர் ஆட்டோக்களும் போகல… பஸ் போகாதா?”, என்றார், நடத்துனரிடம். “பஸ் போகாதானு கேப்பீங்க, போனா கொளுத்துவாங்க, நாங்க என்ன செய்யறது? நாங்க இந்த விளையாட்டுக்கு வரலை” என்றார், நடத்துனர்.
அந்த குழப்பத்தில், ஆட்டோ எடுத்த ஆட்டோகாரர், நாங்கள் சொன்ன இடத்திற்கு சவாரி ஏற்றிக் கொண்டார். காரணம், ஆட்டோவில் பயணிகள் இருந்தால், தன் ஆட்டோவை பத்திரமாக வீடு சென்று சேர்த்துவிடலாம் என்ற நம்பிக்கை.
“அம்மா”வின் கைதை வீட்டிலிருக்கும் பெண்கள் எப்படி நினைக்கிறார்கள் என்று தெரிந்துக் கொள்ள உறவுக்கார செல்வியிடம் பேச்சுக் கொடுத்தேன்… “ஜெயலலிதாவை ஜெயில்ல போட்டுட்டாங்களாம்!” என்றேன். அதற்கு அவர், “போட்டது தப்புதான், ஏன்? மத்தவங்க ஒண்ணும் இல்லாமலா இருக்காங்க? பாவம் பொம்பளைய புடிச்சி உள்ள வைச்சிட்டாங்க!” என்று பாவப்பட்டார். அவர் பட்டு தொழில் பறிப்போய், குடிகார கணவரிடம் நாட்களை ஓட்டிக் கொண்டிருப்பவர். எனக்கு அதிர்ச்சி. வாழ்க்கையையே, கேள்விக்குறியா மாத்தின ஜெயாலலிதாவுக்கு பாவப்படவும் பெண்கள் இருக்கிறார்கள் என்று.
நான் அவரிடம், “உனக்கு தறி நெய்யற கூலி ஒழுங்கா கிடைக்கிதா? உங்க வீட்டுக்காரு கூலியை ஒழுங்கா கொடுக்குறாரா? உன் பொண்ணை படிக்க வைக்க முடிஞ்சதா? குடிக்கிற தண்ணிய… நடுராத்திரில புடிக்கிறீங்களே…. அது சரியா?” என்று வினவினேன். , “இதே மாதிரி சொத்து சேத்தவனையும் உள்ளே தூக்கிப்போடுனு, சொல்லாம, ஜெயலலிதாவை ஜெயில்ல போட்டது பாவம்னு சொன்னா எப்படி?” என்றேன். கொஞ்ச நேரம் யோசித்தவர், பிறகு “ஆமா, கரெக்டுதான்” என்றார்.
திங்கட்கிழமை….
ஆங்காங்கே உண்ணாவிரதம். நெரிசலான பல இடங்களில் பெண்களுக்கு 500 ரூபாயும், போராட்டம் முடிந்ததும் பிரியாணி, பந்தலில் தண்ணீர், ஜூஸ் என்று ஆள் பிடித்தனர். “….இவங்க…, ஆர்ப்பாட்டத்தாலே வேலைக்கும் போகமுடியாது, கொலுத்து வேலைக்கு போனாலும்,கூலி 180 ரூபாதான், சும்மா உட்கார்ந்துக் கொண்டு இருப்பதற்கு ரூ.500 கொடுக்கிறார்கள்” என்றனர் பெண்கள். பந்தல் நிறைந்தது.
பேருந்து பயணத்தின்போது, ஒருவருக்கொருவர் ஜெயா கைதை பேசக் கூட தயங்கினர். மருத்துவமனைக்கு செல்லும் முதியவர், “விதியை நினைச்சிக்கினு நாம கெடக்கறோம், வேலையில்லாதவனுங்க கொழுப்பெடுத்து அலையறானுக? ஆஸ்பத்திரியலயும்,டாக்டருங்க இருக்கிறானுகளோ, இல்லையோ,வலி உயிர எடுக்குது!” என்றார்.
நான், செங்கல்பட்டு மருத்துவமனையில் கேண்டீன் நடத்தும் சேட்டனிடம், “சேட்டா அம்மாவை உள்ள தள்ளிட்டாங்க தெரியுமா?” என்றதும், அவர், “ரொம்ப தப்பு பண்ணீட்டாங்கமா,பொம்பளனுக்கூட பாக்காம இப்படி செய்து இருக்கக் கூடாது, அவங்களுக்கு உடம்பு வேற சரியில்ல, நம்ம ஊரு (செங்கல்பட்டு) எம்.எல்.ஏ. வா இருக்கிற கணிதா சம்பத்தோட சொத்து மதிப்பு எவ்ளோ தெரியுமா? 400 கோடி. அப்ப முதலமைச்சரா இருக்கிறவங்க,சினிமாவுல நடிச்சவங்க, ஏன் நிறைய சொத்து வைச்சிருக்கக் கூடாதா” என்றார்.
முறைகேடா சொத்து சேர்ப்பதெல்லாம் சகஜம் என்ற கருத்து இவருக்கு ஏன் ஏற்பட்டது?
எனக்கு தெரிந்து 6 வருட காலமா ஓய்வின்றி, உறக்கமின்றி உழைப்பவர் இந்த, சேட்டன். தினமும் சுமார் 150 பேருக்கு உணவு செய்ய குடும்பத்துடன் உழைப்பவர். தினசரி விலையேற்றத்தை தாங்க முடியாமல் தவிப்பவர். அதை எங்களோடு விவாதிப்பார். இவரிடமிருந்து இப்படி ஒரு பதிலா? நான் எதிர்பார்க்கவில்லை.
அங்கிருந்த, கர்நாடகத்தை சேர்ந்த ராஜ்குமாரும் இந்த கருத்துக்கு உடன்பட்டார். மேலும் அவர், “எவ்ளோ நல்ல திட்டங்களை தமிழ் நாட்டுக்கு தந்து இருங்காங்க, மற்ற மாநிலங்களில் இவை கிடையாது. நல்லா படிச்சவங்க அவங்களப் போய் உள்ள வைச்சிட்டாங்களே? …..வெளிநாட்டுல இருந்து வந்த அர்னால்டே…. “அம்மா”வை பாராட்டிப்பேசி இருக்காரு!,” என்றார்.
அங்கு, வேலைபார்க்கும் செவிலியர்களின் கருத்தும் இதேதான். “அவங்களுக்கு (அம்மா) சுகர், பிபி, இருக்கு. அதுக்கும் மேல தமிழ் நாட்டு ஜனங்கள் எல்லாம் நம்பி ஓட்டுப் போட்டு உட்கார வைச்சிருக்காங்க, ….ஜனங்களுக்கு தெரியாதா சொத்து சேர்த்த விஷயம், ஜனங்களை மதிக்காத தீர்ப்பு இது. இதனால, அம்மாவோட செல்வாக்கு கூடுமே ஒழிய குறையாது,”அம்மாவுக்கு பதிலா அம்மாவே தேர்ந்தெடுத்தெடுத்திருக்கும் ஓ.பி.எஸ் முகத்தை பார்த்தாலே ரொம்ப சாந்தமா, குற்றம் செய்யறமாதிரியே இல்லையே, இவங்களா தப்பு செய்வாங்க” என்றனர். …வெளிநாட்டுலயும் அம்மா பேமசா ஆயிடுவாங்க” என்றனர்.
அங்கிருந்த, நோயாளி குருவிக்கார பெண் சீதா,”புடிச்சி உள்ளே போடட்டும், வீடுதர்றேன், பட்டா தர்றேன், மிக்ஸி, கிரைண்டர் தர்றேன் என்றார், ஆனா ஒண்ணும் தரலை, அதெல்லாம்… எம்.ஜி.ஆரோடு போச்சு” என்றார்
மாலைநேரம்…
ரோட்டில் செல்லவே முடியவில்லை, முஸ்லீம்,கிறித்துவர்கள், இந்துகள் என ரோட்டில் பேனர் வைத்து … யாகம், கூட்டுப் பிரார்த்தனை, பால் குடம், தீமிதித்தல் என்று, கும்பல், கும்பலாக அதிமுகவினர் வழிமறித்தனர். அவர்களுடன் போலிசும் வழியடைத்து நின்றது.
அங்கிருந்த பூக்காரம்மாவிடம் பேச்சுக் கொடுத்தபோது, காதுக்கிட்ட வந்து, “…சத்தமா பேசாதே” என்றார், இரகசியமாக. அவரது அனுபவத்தை சொன்னார்.
“பூ வாங்க, பூக்கடைக்கு போயிருந்தேன். பூ வாங்கிட்டேன், வெளியே வர்றேன், …சினிமாவுல காட்றாமாதிரி எல்லாக் கடையும் தடதடனு மூடுனாங்க, பஸ் எதுவும் போகல……, என்ன செய்யறதுனே தெரியல….., பயந்துட்டேன். ஆனாலும் வேற,வேற பஸ்ச புடுச்சி வீட்டுக்கு வந்தேன், எம் பொண்ணு அழுதுட்டு நின்னுது, எப்படிமா வந்தே?னு, துடிச்சிப்போச்சி. தினம்,தினம் பூவாங்கி வீட்டுக்குவீடு வித்தாதான் பொழப்பு, விக்கிறதுலயேயும் எவ்ளோ கஷ்டம் தெரியுமா? டிவியில பூ விலை கம்மியா சொல்றாங்க…, நீ என்ன அதிகமா சொல்றே….னு பேரம் பேசுவாங்க, அவங்களுக்கு எங்கே தெரியப்போவுது எங்க கஷ்டம், பூவை வாங்க காலையில போயிடனும், பஸ் செலவு, பூ கட்ற வேலை, பூவை வாடாம பாதுகாக்கறது….னு நான் படற கஷ்டத்தை நினைக்காம,பேசுவாங்க, ஏம்மேல பாவப்பட…. யாரும் இல்ல, …தப்பு செஞ்சாதானே உள்ளே வைப்பாங்க, …இவனுங்க ஏன் ஆடுறானுங்கனு தெரியலயே? நீ பத்திரமா போய்ட்டு வா, …குடிகாரனுங்க எதுக்கும் துணிவானுங்க,உஷாரா போம்மா.” என்றார்.
அங்கிருந்த பள்ளி சிறுவர்களோ, “தமிழ்நாட்டுக்கு பவர் போனா யுபிஎஸ், அம்மாவுக்கு பவர் போனா ஓபிஎஸ்” என்று பாடிக் கொண்டிருந்தனர்.
ஜெயலலிதா கைது விவகாரம் தமிழகத்தை உலுக்கிவிட்டது என்பது அதிமுக வடிக்கும் கண்ணீரை, உண்மைதான் என்று நம்புவதாக நடிக்கும் கூட்டம் கையளவு. ஆனால், உழைக்கும் மக்களோ “அம்மா கைது” என்ற அளவுக்கு மீறிய சோக நாடகத்தை ரசிக்கவில்லை.
டிவியும், பத்திரிகைகளும் ‘அம்மா’ கைது குறித்து தினுசு தினுசா சோக கதைகளை எழுதி மக்களிடம் ஒரு கருத்த உருவாக்க நினைக்கிறாங்க. டிவி சீரியல் பார்த்து வீட்டுப் பிரச்சினைகளை உருவாக்கி கொள்ளும் மக்கள் இந்த பத்திரிகை அறிவாளிங்க சொல்றத மட்டும் நம்பாமவா போவாங்க?
ஆனா கொஞ்சம் உக்காந்து யோசிச்சு பேச வைச்சா அவங்களும் உண்மையை ஒத்துக்குவாங்க. அதிமுக ரவுடிங்க ஆள் போட்டு நடத்தும் ரவுடித்தனமும், கூலிக்கு அழச் சொல்லும் ஒப்பாரிகளும் பார்க்க பிரம்மாண்டமா இருந்தாலும் உள்ள கீறிப் பாத்தா பல்லிளிக்கும்.
அது பூக்கார அம்மாவுக்கு தெரிஞ்சிருக்கு! அவங்கிட்ட பேரம் பேசி வாங்கும் அறிவாளிங்களுக்கு தெரியலையே?
– மலர்விழி, காஞ்சிபுரம்.
எனது கணிப்பு என்னவென்றால் “எதுக்கு தேவை இல்லாமல் கருது சொல்லி அப்புறம் வீட்டு முன்னாடி ரவுடிகள் வந்து நிற்பார்கள் ” என்கின்ற பயமாக இருக்கலாம் .
மற்றவரகள் பொதுவாக வருத்தப்படும்போது , தேவை இல்லாமல் கருத்து சொல்லி ஏன் வீண் வம்பை விலைக்கு வாங்கணும் என்கின்ற மனபோக்காக இருக்கலாம்.
மற்றவரகள் வருதபடுகிரார்கள் என்கின்ற இந்த பொது கருத்து ஊடகங்களால் தான் உருவாக்கபடுகிறது, அவை தம் பணியை சரிவர செய்யவில்லை .
அது போன்ற ஊடகங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு மக்களின் உணர்வுடன் ஒன்றிக் கருத்துக்களை உருவாக்குவதில் வினவு முன் நிற்பதில் மிக்க மகிழ்ச்சி.
// “எதுக்கு தேவை இல்லாமல் கருது சொல்லி அப்புறம் வீட்டு முன்னாடி ரவுடிகள் வந்து நிற்பார்கள் ” என்கின்ற பயமாக இருக்கலாம் //
தடிஎடுத்தவனெல்லாம் தண்டல்காரனாக ஏற்றுக்கொள்ளும் மனோபாவமே, நம்மை ஜனனாயகத்திற்கு தகுதியற்றவராக ஆக்கிவிடுகிறது! மதவாதிகளின் ஆதிக்கம் பெருக காரணமே,மக்களின் இந்த பயம்தான்!நீண்ட காலம் அடக்குமுறைக்கு பயந்தே இருந்துவிட்டதால், சுதந்திரம் என்ற வார்த்தையின் பொருள் கூட புரியவில்லை! எதை கண்டாலும் பயம், பயம்,பயம்தான்! அதை பக்தியாக்கி பிழைக்க ஒரு கூட்டம்!
அது போன்ற ஊடகங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு மக்களின் உணர்வுடன் ஒன்றிக் கருத்துக்களை உருவாக்குவதில் வினவு முன் நிற்பதில் மிக்க மகிழ்ச்சி.