Wednesday, July 24, 2024
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம் வீடு கட்டுவோம் - தடுத்தால் தடுப்பவனுக்கு பாடை கட்டுவோம்

வீடு கட்டுவோம் – தடுத்தால் தடுப்பவனுக்கு பாடை கட்டுவோம்

-

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் வட்டாரத்துக்குட்பட்ட பொய்கை அரசூர் கிராம தலித்து மக்கள், தொடர்ந்து 40 வருடங்களாக வீட்டு மனைக்காக போராடி வருகின்றனர். இவர்கள் தனி வட்டாட்சியர், தாசில்தார், மாவட்ட ஆட்சியாளர் என்று சந்தித்து மனு கொடுப்பது என்ற வழிமுறையில் போராடிய போது, விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர்களும் உடன் ஆதரவளித்து வந்தனர்.

தமிழக கிராமங்கள் பலவற்றில் நிலப்பிரபுக்கள் பல்வேறு முறைகேடான வழிகளில் சுருட்டிய நிலங்களை வைத்து முழு கிராம சமூகத்தையும், கிராம பொருளாதாரத்தையும் கட்டுப்படுத்துகிறார்கள். இவர்கள் சொத்து சேர்த்தது சட்டபூர்வமாகவோ இல்லை தார்மீக நெறிமுறைப்படியோ எந்த வகையிலும் சேர்த்தி இல்லை. நிலமற்ற விவசாயிகளாக வாழ்க்கையை நடத்தும் தாழ்த்தப்பட்ட மக்கள் இருக்கும் துண்டு துக்காணி நிலங்களை கூட இவர்களிடம் இப்படித்தான் இழந்து விடுகிறார்கள்.

இந்த போராட்டம் அப்படி பறிகொடுத்த நிலங்களை மீட்பதற்கான ஒரு துவக்கம்.

இதற்க்கிடையில் வி.வி.மு சார்பாக தனி தாசில்தாரைக் கண்டித்து சுவரொட்டி இயக்கம் எடுக்கப்பட்டது. இதன் விளைவாக அந்த அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டார். அதன் பின் வந்த அதிகாரியால், நில உரிமையாளரை சந்தித்து 2012-ல் நிலத்தை வாங்குவதற்கான ஒப்புதல் கடிதம் எழுதி வாங்கப்பட்டது. அதன் பின் மனை சம்மந்தமாக அரசு தரப்பில் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இந்த நிலையில் கிராம மக்களை கூட்டி அந்த மனையைப் பெற வேண்டும் என்றால் அதற்கு போராட்டம் தான் தீர்வு என்று முடிவு செய்து அதற்கு இளைஞர்கள், தோழர்கள் என 6 பேர் கொண்ட போராட்டக் குழு ஒன்று அமைத்து வீடு கட்டும் போராட்டம்  27-09-14 அன்று நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

வீடு கட்டுவோம். தடுத்தால் தடுப்பவனுக்கு பாடை கட்டுவோம்’ என்ற முழக்கத்தோடு 150 சுவரொட்டிகளைத் தயாரிக்கப்பட்டு, 23-09-14 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் போன்ற முக்கியமான இடங்களில் ஒட்டப்பட்டது. அதன் மறுநாள் தனித் தாசில்தார் நேரில் வந்து ‘ஏன் இது போன்ற போஸ்டர் ஒட்டினீர்கள்? இது சம்மந்தமாக அரசு தரப்பில் முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு தயார் செய்கிறோம். கலந்து கொள்ளுங்கள்’ என்று கூறினார். ஒட்டிய சுவரொட்டியை எடுத்து வந்து தோழர்களிடம் விவாதித்தார்.

தோழர்களும் ‘உங்களிடம் பேசுவதால் எந்த விதமான பலனும் இல்லை. இதற்கு முன்னும் பல முறை பேசி எதுவும் நடக்கவில்லை. போராட்டம்தான் தீர்வு’ என்று கூறி அவரைத் திருப்பி அனுப்பி விட்டனர். இதற்கிடையில் நில உரிமையாளாரிடம் (ராமலிங்க நாயுடு – நிலப்பிரபு) கங்காணியாக வேலை செய்யும் கண்ணன் என்பவர் தோழர்கள் 3-பேர் மீது காவல் நிலையத்தில் பொய்ப்புகார் கொடுத்தார். இந்தத் தகவலை அறிந்த மக்கள் 100 பேருக்கும் மேல் திரண்டு சென்று காவல் நிலையத்தில் ‘பொய் புகாரை வாப்ஸ் வாங்குங்கள்’ என்று கோரி முற்றுகை இட்டனர்.

அப்போது காவல் உதவி ஆய்வாளார், ‘பேசிக் கொள்ளலாம். முதலில் இந்த இடத்தை விட்டு காலி செய்யுங்கள்’ என்று  சமாளித்தபடி மக்களை அங்கிருந்து போகச் செய்தார். அன்று இரவே பெரிய பிளக்ஸ் பேனர் ஏற்கனவே சொன்ன தலைப்பில் அரசூரில் கட்டபட்டது. அந்த பேருந்து நிறுத்தத்திற்கு வருபவர்கள் நின்று கவனித்து படித்துவிட்டுதான் சென்றனர். அவ்வட்டாரத்தில் இது பரபரப்பான செய்தியாக மாறியது. பல நண்பர்கள் ‘இதுதான் சரியான முழக்கம்’ என்றும், ‘இது போன்ற முழக்கத்தை வி.வி.மு தோழர்கள்தான் வைப்பார்கள்’ என்றும் பேசிக் கொண்டனர்.

அதன்பின் போராட்டத்தின் முதல் நாள் 300 பிரசுரங்களை தயார் செய்து இந்த போராட்டதில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு கொடுத்தோம். இரவு ஐந்து இடங்களில் தெரு முனை கூட்டங்களைப் போட்டு இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளுவது மற்றம்  வெளியூரில் இருக்கும்  உறவுக்காரர்களை வரவழைப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் கருங்காலியாகச் செயல்படும் அல்லக்கைகைளை அம்பலப்படுத்திப் பேசிய பிறகு மக்கள் போராட்டத்திற்கு தயாரானார்கள். மக்களும் கழி,கீற்று போன்ற வீடுகட்டும் உபகரணங்களை தயார் செய்தனர்.

போராட்டத்தின் முதல் நாள் காலை 8 மணிக்கு நில உரிமையாளர் (நிலப் பிரபு) தாமே முன்வந்து ஊர் நாட்டாமை மற்றும் முக்கியஸ்தர்களை அழைத்து ‘நிலத்தை நான் இலவசமாக கொடுக்கிறேன். போராட்டம் வேண்டாம்’ எனறு சொல்லி அனுப்பியுள்ளார். அதைப் போராட்ட குழுவிற்கு அவர்கள் தெரிவித்தனர். ஆனால் அதை போராட்ட குழு ஏற்றுக் கொள்ளவில்லை.

அன்று காலை 11 மணி அளவில் காவல் நிலையத்தில் இருந்து எங்களைத் தொடர்பு கொண்டு ‘போராட்டத்தைக் கைவிடுங்கள். பேச்சுவார்த்தைக்கு தயார் செய்கிறேன்’’ என்று ஆய்வாளர் தெரிவித்தார். அதையும் போராட்டக் குழு நிராகரித்து ‘போராட்டதை நடத்துவோம்’ என்று அறிவித்தனர். அதன் பின் நண்பகல் 12 மணி அளவில் காவல்துறை ஆய்வாளர், உதவி ஆய்வாளர்  உட்பட 8 காவல்துறையினர் மற்றும் 3 க்யூ பிரிவு போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் கிராமத்திற்குள் முகாமிட்டனர்.

சம்மந்தப்பட்ட தோழர்களிடம் ‘பேச்சுவார்த்தைக்கு வாருங்கள். நான் உத்திரவாதம் தருகிறேன்’ என்று நைச்சியமாக பேசினர். ஊர்த் தலைவர் மூலம் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தனர். அதை தோழர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ‘கிராம மக்களை கைது செய்வோம்’ என்று மிரட்டிப் பார்த்தனர்.  ‘உங்களால் முடிந்ததை செய்யுங்கள்’ என்று மக்களும் பதிலுக்கு கூறினார்கள் . இப்படி பல வழிகளில் போராட்டத்தை முடக்க முயற்சி எடுத்தனர். தலைவர் மூலமாக தூதும் அனுப்பியிருந்தனர். இந்த நிலையில் ‘ஜெயாவின் தீர்ப்பு இருக்கிறது. அதனால் எங்களுக்கு ஒத்துழைப்பு தாருங்கள்’ என்ற காவல் ஆய்வாளர் கேட்டுக் கொண்டார். ‘நான் இதற்கு பொறுப்பு ஏற்றுக் கொள்கிறேன்’ என்றார்.

அப்போது தோழர்கள் ‘இதற்குமுன் பள்ளிக் கூடத்திற்கு அடிப்படை வசதி கேட்டு போராடிய போது இது போல உறுதி அளித்தார் ஆய்வாளர். அதன் பின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ என்று சுட்டிக் காட்டினர். அதுபோல ‘ஊராட்சி ஒன்றியப் பொறியாளர் அப்போது போராட்டத்தை  கைவிட்டால் தான் பேச்சு வார்த்தை என்று கூறினார். அதனடிப்படையில் அப்போது போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால் பள்ளியில் அடிப்படை வசதிகள் இன்னும் செய்து முடிக்கப்படவில்லை’ என்று அம்பலப்படுத்தி பேசினார்.

மாலையில் போராட்டக் குழு கூடி ‘நாளை ஜெயாவின் தீர்ப்பு இருக்கிறது. அதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதனால் உயர் அதிகாரிகள் முன்னிலையில் பேச வேண்டும்.  அதுவும் மக்கள் மத்தியிலேயே பேச்சு வார்த்தை நடைபெற வேண்டும்’ என்ற முடிவு செய்தது. அதனை காவல் ஆய்வாளரிடம் கூறிய போது, ‘உயர் அதிகாரிகள் இப்போதைக்கு வர முடியாது, நேரமில்லை. சம்மந்தப்பட்ட அதிகாரியான வட்டாட்சியர் வருவார். அதிகாரிகளை மக்கள் மத்தியில் பேச வைப்போம். அடுத்தகட்ட நடவடிக்கைக்கு நான் உறுதி ஏற்கிறேன்’ என்று ஆய்வாளர் உறுதி கூறினார்.

இந்நிலையில் போராட்டக் குழு ஒன்று கூடி பேச்சுவார்த்தைக்குத் தயாரானார்கள். பொது மக்கள் 300 பேருடன் தலைவர் இந்தப் பேச்சுவார்த்தைக்கு தயாரானார். இந்தப் பேச்சு வார்தையில் தனி வட்டாட்சியர்  ‘இன்னும் எனக்கு 15 நாட்கள் அவகாசம் கொடுங்கள்’ என்று கேட்டார். ஆனால் மக்களோ ‘நாங்கள் சுவரொட்டி ஒட்டி 5 நாட்கள் ஆகியும் சம்மந்தப்பட்ட துறையினைச் சார்ந்த நீங்கள் முறையான நடவடிக்கை எடுக்காமல் காவல் துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்படுக்கிறது’ என சுட்டிக்காட்டிய போது துணை வட்டாட்சியர் ‘நான் இருந்தபோது நில உடமையாளரிடமிருந்து ஒப்புதல் கடிதம் பெறப்பட்டது. அதற்கு பின்னர் செட்டியார் என்பருடைய நிலம் யாருடைய பெயரில் உள்ளது என்ற விவரத்தை தெரிந்துகொள்ள முடியாமல் போனது. ஆகவே இரண்டு நில உரிமையாளர்களிடமும் நிலம் தொடர்பான விவரங்களை வாங்கி நாங்களே முன்னின்று அதற்கான நடவடிக்கைளை எடுக்க ஆவன செய்கின்றோம்’ என்றனர்.

அதற்கு மக்கள் ‘கடந்த 5 ஆண்டுகளாக உங்களை நம்பிதான் காத்துக் கொண்டு இருந்தோம் ஆனாலும் வேலைகள் எதுவும் நடைபெறவில்லை. ஆகவே உயர் அதிகாரிகள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடைபெற வேண்டும்’ என்று திட்டவட்டமாகக் கூறினார்கள். அதற்கு ஆய்வாளர் ‘அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி முடிவு செய்ய 15 நாள் அவகாசம் கொடுங்கள். அதற்கு தேவையான ஏற்பாட்டை செய்கிறோம்’ என்று உறுதி அளித்தார். மக்கள் அதனை எழுத்துப் பூர்வமாக எழுதி வந்திருக்கும் அனைத்து அதிகாரிகளும் அதில் கையொப்பம் இட்டுத் தர வேண்டும் என்று கோரினோம். அதன் அடிப்படையில் தனி வட்டாட்சியர் மற்றம் உதவி வட்டாட்சியர், காவல் துறை ஆய்வாளர், வருவாய்த் துறை ஆய்வாளர் , கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் கிராம பஞ்சாயத்து தலைவர் முன்னிலையில் கையொப்பம் இட்டு தந்துள்ளனர். விரைவில் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவோம் என அறிவிக்கப்பட்டது.  

இந்த போராட்டத்தின் துவக்கத்தில் மக்களிடம் ஒருவித அஞ்சும் போக்கு இருந்தது. ஆனாலும் போராட்டத்தின் தன்மையையும் நோக்கத்தையும் தனியாக எடுத்து விளக்கிய பிறகு தைரியமடைந்த அவர்கள் போராட்டத்திற்கு தயாரானார்கள். இளைஞர்கள் மத்தியில் முன்னர் அமைப்புடன் நெருக்கம் இல்லாமல் இருந்த நிலைமை தற்போது மாறி அவர்களும் அமைப்பு தோழர்களிடம் நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் பழகத் துவங்கியுள்ளனர்.

படங்களை பெரிதாக பார்க்க சொடுக்கவும்.

தகவல்: விவசாயிகள் விடுதலை முன்னணி
திருவெண்ணெய்நல்லூர் வட்டாரம்.

  1. இந்த பதிவுக்கு பின்னூட்டம் ஏதும் இல்லாதது வியப்பளிக்கவில்லை.. இழப்பதற்கு அடிமைச் சங்கிலிகளைத் தவிர வேறு எதுவும் இல்லாத வர்க்கம்தான் புரட்சியின் முன்னணியில் தலைமை தாங்கும் என்ற மார்க்ஸின் வார்த்தைகள் மீண்டும் நிறுவப்பட்டிருக்கிறது.. கடினமான பாதையில் அடியெடுத்து வைக்கும் வி.வி.மு. தோழர்களுக்கு பொறுப்பும் கூடியிருக்கிறது.. வாழ்த்துக்கள்..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க