privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்முசுலீம்கள் தீபாவளி இனிப்பு சாப்பிடலாமா ? படங்கள்

முசுலீம்கள் தீபாவளி இனிப்பு சாப்பிடலாமா ? படங்கள்

-

மற்ற மதத்தவர்களை விட முசுலீம்கள் மட்டும் தமது மதத்தை அதி தீவிரமாக கடைபிடிப்பவர்கள் என்ற கருத்து பொதுவில் வலுவாக உருவாக்கப்பட்டிருக்கிறது. அதுவே இந்துமதவெறியர்களது மூலதனமாகவும் செயலாற்றுகிறது. இசுலாமிய கடுங்கோட்பாட்டு அடிப்படைவாத இயக்கங்களும் இத்தகைய கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாகவே செயல்படுபகின்றன. மற்றவரது பண்பாடு, வழிபாடு, பண்டிகைகளை முசுலீம்கள் வெறுக்கிறார்கள் என்பதாக ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரம் செய்கிறது. 

இவை உண்மையல்ல என்பதை நடைமுறை மூலம் நிரூபிக்க விரும்பினோம். தீபாவளி அதற்கு பொருத்தமான நேரம். இதோ சென்னை வாழ் இசுலாமிய மக்கள் பேசுவதைப் பாருங்கள். இடையே ஓரிரு கிறித்தவ, ‘இந்து’க்களும் கூட உண்டு.  உழைக்கும் மக்களிடையே மதவெறிக்கும், மதவாதத்திற்கும் வேலை இல்லை என்பதை அவர்கள் வாயாலேயே கேளுங்கள்!

ஆனால் வாடகை வீடுகள் முசுலீம்களுக்கு இல்லை என்று உறுதியாக இருக்கும் பார்ப்பன – ஆதிக்க சாதி இந்துக்களும் இந்த நாட்டில் இருக்கிறார்கள் என்றால் மதவெறியும், மதவேறுபாடும் யாரிடம் இருக்கிறது?

– வினவு

அலிப் உசேன்
அலிப் உசேன், வயது 14: “லச்சுமி பட்டாசு வெடிச்சேன். ஈஸ்வரி ஆண்டி ஜாங்கிரி, பொங்கல், பழமெல்லாம் கொடுத்தாங்க. அவங்க செஞ்சா நமக்கு, நம்ம செஞ்சா அவங்களுக்கு….”
சாதிக்
சாதிக், வயது 45, பூஜை பொருட்களை விற்பவர்: “பிரண்ட்ஷிப்தான் சார் முக்கியம். மனசு தான் காரணம். மத்தபடி தீபாவளி பலகாரம் சாப்டறதுல பிரச்சினையில்லை. இந்த தொழில் செய்றதுல என்ன தப்பு சார்? நான் திருடுறனா இல்ல பொய் சொல்றனா? இந்த தொழில்ல முதலீடு கம்மி. ஜமாத்துல கூட கற்பூரம், குங்குமம், திருஷ்டிக் கயிறு விற்க கூடாதுங்குறாங்க. வெறுமன தேங்காயும், வெத்தலையும் வித்தா யாரு வருவாங்க? பக்கத்துல பூஜை கடை வைச்சிருக்குறவரும் டிஎன்டிஜேவுல இருக்குறவரோட தம்பிதான். போரூருக்கு பக்கத்துல அந்த டிஎன்டிஜே பாயும் இதே மாதிரி கடை வெச்சிருக்கார். நமக்கு ஒரு சட்டம், அவங்களுக்கு ஒரு சட்டம்.”

 

ரியாஸ்
ரியாஸ், வயது 34, ஆட்டோ டிரைவர்: “அண்ணன் தம்பியா பழகுறோம். அதனால தீபாவளி, கிறிஸ்மஸ் எல்லாம் வாங்குவோம் சார். தர்காவுக்கு நான் போக மாட்டேன், போறவங்கள தடுக்க மாட்டேன்.”
முஜீப்
முஜீப், வயது 32, அல் அமீன் மட்டன் ஸ்டால்: “நாங்க கொடுத்தா அவங்களும், அவங்க கொடுத்தா நாங்களும் சாப்பிடுறது காலங்காலமா நடக்குது. இது ஒரு சந்தோசமான நாள் சார். இப்பத்தான் பக்கத்து வீட்ல கறி வாங்கிட்டு போனாங்க. அங்க இருந்து எங்க வீட்டுக்கு பணியாரம் வந்திருக்கும். அத சாப்பிட்டா ஹரம்னு சொன்னா அதான் தப்பு. இப்போ நானே பிரியாணி தர்றேன். ருசியே இல்லாட்டி கூட பாய் நம்ம மதிச்சு தர்றாருனு வாங்கி சாப்பிடுவீங்க. இது பரஸ்பரம் இருக்கணும்.”

 

கலாவதி
ஆர். கலாவதி, வயது 45, வருமான வரித்துறையில் வேலை, இந்துவாக இருந்து கிறிஸ்தவராக மதம் மாறியவர்: “மனசுதான் சார் காரணம். எல்லோருக்கு ரத்தம் செவப்புதானே? நான் இங்கயே பொறந்து வளந்தவ. வேண்டாம் வேண்டாம்னாலும் கூப்பிட்டு கொடுப்பாங்க. நாங்களும் கிறிஸ்துமசு அப்போ கேக்கும், பிரியாணியும் கொடுப்போம். சாமிக்கு படைக்கறதுக்கு முன்னாலயே தனியா எடுத்ததுன்னு சொல்லித் தருவாங்க. உறவுதான முக்கியம்?”
பார்த்திபன்
பார்த்திபன், வயது 25, ஏர்செல் மார்க்கெட்டிங் வேலை: “அப்பா இறந்துட்டாரு. ஆனா அவரோட பிரண்டு சுல்தான் டெய்லர் அண்ணனுக்கு காலைல ஸ்வீட்ஸ் பாக்ஸ் கொடுத்தேன். என்னோட பெஸ்டு பிரண்டு முகமது யாக்கோப். அவங்க வீட்டு கிச்சன் வரை போய் வருவேன். மாமா, மச்சானுதான் பேசிக்குவோம். அவனுக்கு நாங்க வச்சிருக்க பேரு கெளவி”
ஜாபர் நிசா
ஜாஃபர் நிசா, வயது 50, பூ வியாபாரம்: “நம்ம கஸ்டமரு கிருஷ்ணா ஸ்வீட்ஸ் பாக்சு தந்தாங்க. ஆனா கற்பூரம் ஏத்தி பூஜ பண்ணிருந்தா சாப்பிட மாட்டோம். அவங்களும் அப்படி தர மாட்டாங்க இல்லியா”
ஜாஹீர் உசேன்
ஜாஹிர் உசேன், 21, மெக்கானிக்கல் டிப்ளமோ: “போன வருசம் தந்தாங்க. இந்த வருசம் வரல. ஏன்னா ஊருக்கு போயிட்டாங்க. போன வருசம் லட்டு, அதிரசம், சுண்டல் எல்லாம் வந்துச்சு. வெடியெல்லாம் சின்ன வயசுல போட்டேன். இப்போ இன்ட்ரஸ்டு இல்லை. எனக்கு திக் பிரண்டு சக்தி சரவணன், மாமா மச்சானுதான் கூப்பிட்டுக்குவோம். மத்த மத பண்டிகை பலகாரங்கள சாப்பிடுறதெல்லாம் ஹரமில்லை சார். நாங்க கொடுத்தா அவங்க சாமிய வேண்டிட்டு சாப்பிட போறாங்க. அவங்க கொடுத்தா எங்க சாமிய வேண்டிட்டு சாப்பிடுவோம். அவ்ளோதான்.”
ஹீரின் பேகம்

ஹரின் பேகம், வயது 40, பார்ப்பனர் வீட்டில் சமையல் வேலை, அருகில் அவரது குடும்ப நண்பர் கஸ்தூரி, வயது 58, துணை நடிகை: பேகம் – “அவங்க கொடுத்தா நாங்களும், நாங்க கொடுத்தா அவங்களும் சாப்பிடுறோம். அன்பா தர்றாங்க சார். எல்லாரையும் போல நானும் புள்ளக்கு மாச மாசம் சீட்டுப் கட்டி 1000 ரூபாய்க்கு பட்டாசு வாங்கி கொடுத்தேன். அல்லாரும் வெடிக்கைல எம் புள்ள மட்டும் மூஞ்சிய பாத்துக்கிட்டிருக்க வேணாம்னுதான். சாமிக்கு படைச்சதையே தந்தா சாப்பிட கூடாது தான். ஆனா பிஸ்மில்லா னு சொல்லிட்டு சாப்பிடலாம். தப்பில்லை.”

 

 

 

 

 

முகமது இப்ராஹிம்
முகமது இப்ராஹிம், வயது 50, லிப்ட் டெக்னீசியன், ஹீரின் பேகத்தின் கணவர்: “சாப்பாட்டுல என்ன சார் இருக்கு? வந்தா விடக் கூடாது. அநியாயமா சம்பாதிக்கிறதுதான் தப்பு”

 

ஜீனத்
ஜீனத், வயது 40: “நாங்க முசுலீம்தான். என்னோட வூட்டல இருக்குற சரசாகிட்ட இருந்து அதிரசம், முறுக்கு வந்துச்சு. மதிங்கிற குடும்ப நண்பர் ஸ்வீட் பாக்ஸ் கொடுத்தாரு. பூசை பண்ணி சாப்பிட கூடாது தான். ஆனா எம்மதமும் சம்மதம்னு இருந்தா சாப்பிடலாம். நான் சாப்பிடுவேன். அப்பிடி பாத்தா என் வீட்ட இந்துக்களுக்கு வாடகைக்கே விடக் கூடாது. அதெல்லாம் முடியுமா. சின்ன விசயத்த பெரிசாக்குறாங்க. எல்லாத்துக்குமே மனசு தான் காரணம்.”

 

பஷீர் அகமது
பஷீர் அகமது, வயது 52, மளிகைக்கடை  5 வருசத்துக்கு முன்னாடி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்துல சேந்தேன். பக்கத்து வீட்டுக்காரங்க கொடுக்கும் தீபாவளி பலகாரங்களை நான் சாப்பிடறதில்லை. கற்பூரம் காட்டியதை நான் தொடமாட்டேன். ஆனா முன்ன இந்து பிரன்ட்ஸ்ங்கக்கூட ஒரே கிளாஸுலதான் குடிப்பேன். நாகூர் தர்க்காவுக்கு முன்ன போனேன். இப்ப இல்ல. ஆனா என் பொண்ட்டாட்டி கூப்புட்டதால…. இப்ப போனேன். ஊர்ல்ல இருந்து தம்பிங்க வந்தா அவங்ககூட.. தர்க்காவுக்கு போவேன், இல்லனா அவங்க கோவிச்சுக்குவாங்க. தவ்ஹீத் ஜமாத்துல சேந்தாலும் நான் சூனியத்தை நம்புறேன். அவருக்கு (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர்) யார்னா சூன்யம் வைச்சா..அப்ப.. தெரியும்! தவ்ஹீத் ஜமாத் ஐ நிர்வாகிங்க கூட வரதட்சணைக் கொடுத்துதான் கல்யாணம் பண்ணாங்க!

 

muslim woman

– புகைப்படங்கள், நேர்காணல் – வினவு செய்தியாளர்கள்.