Thursday, January 16, 2025
முகப்புசெய்திகொடிக் கம்பத்தை திருடிய சி‌ஆர்‌ஐ பம்ப்ஸ் முதலாளி

கொடிக் கம்பத்தை திருடிய சி‌ஆர்‌ஐ பம்ப்ஸ் முதலாளி

-

கோவை சி‌ஆர்‌ஐ பம்ப்ஸ் தொழிலாளர்கள் தங்களது உரிமைக்காக சட்டப்படி சங்கம் அமைத்தார்கள். மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் தங்களது கொடி மரத்தையும் சங்க அறிவிப்புப் பலகையும் வைத்துக் கொண்டார்கள்.

சி‌ஆர்‌ஐ தொழிலாளர்கள்21-10-2014 அன்று கொடியேற்று விழா நடந்து முடிந்தது. சி‌ஆர்‌ஐ முதலாளியின் சின்னப்புத்தியை அறிந்த தொழிலாளர்கள் நள்ளிரவு 12 மணி வரை கண்காணித்தபடியே இருந்தார்கள். விடிந்தால் தீபாவளிப் பண்டிகை என்பதால் இனி ஏதும் பிரச்சினை இருக்காது என எண்ணி தோழர்கள் அவரவர் வீடுகளுக்குச் சென்று விட்டனர். பின்னர் அதிகாலை 4 மணிக்கு வந்தால் கொடிக்கம்பத்தையும் காணவில்லை. அறிவிப்புப் பலகையும் காணவில்லை.

யார் எடுத்தார்கள் என தெரியவில்லை. இரவோடு இரவாக 12 மணிக்கு மேல் வந்து எடுத்து போனவன் எவன்…? சரி காவல் துறையிடம் புகார் கொடுக்கலாம் என்றால் புகார் கொடுக்க போன நம் மீதே வழக்கு போடுவார்கள். அனுமதி இல்லாமல் கொடிக்கம்பம் வைத்தது தவறு என நீட்டி முழக்குவார்கள்.

சரி யார்தான் திருடியது என்று எப்படி முடிவு செய்வது…? நமக்கும் சி‌ஆர்‌ஐ நிர்வாகத்துக்கும் தான் பிரச்சினை; சின்னவேடம்பட்டியில் வேறு யாருக்கும் நமக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை.

எனவே முதலாளிதான் திருடி இருப்பான் என்பது தெட்டத் தெளிவாகிறது. இவ்வளவு பிரமாண்டமான கார்ப்பரேட் முதலாளி இது போல சின்னத் தனமான் காரியத்தை இரவில் செய்வாரா என்றால்… நடந்துள்ளதே…..? முதலாளியின் அடியாள்படை பகலில் வந்தால் சந்திக்கலாம். யாருமில்லா இரவில் வந்தால் எப்படி எதிர்கொள்வது….?

கொடிமரமும் அறிவிப்புப் பலகையும் இரும்பில் செய்யப்பட்டுள்ளதால் நமக்கு சில ஆயிரங்கள் செலவானது. எனவே, அடியாள் படையை எதிர்கொள்ள சவுக்கு மரத்தில் கொடிக்கம்பம் தயார் செய்து 23-10-2014 அன்று காலை 8 மணிக்கு நாட்டு மீண்டும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி கொடியை பறக்க விட்டு உள்ளோம்.

சி‌ஆர்‌ஐ முதலாளிகள் ஆலையின் பக்கத்தில் மிகப்பெரிய மின் மயானம் கட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட்டுள்ளார்கள். கட்டணம் பெற்றுத்தான் பிணங்களை எரிக்கிறார்கள். “மோக்ஷ க்ருஹா” என்று சமஸ்கிருதத்தில் பெயர் வைத்துள்ளார்கள். பிணத்தை எரிகுழிக்கு அனுப்பியவுடன் அதன் ஆத்மா சாந்தியடைய ஒரு பாடல் வேறு போடுவார்கள். அந்த மயானத்துக்கு சொர்க்க எஃபெக்ட் கொடுக்க புல்வெளி, சிறிய நீர் நிலை அதனுள் வாத்துகள், ஆங்காங்கே இந்து மத தத்துவங்கள் என ஏக பில்ட்-அப்பாக இருக்கும். ஆனால் இப்படி ஒரு மின்மயானம் நிறுவி இந்த சமூகத்தில் ஒரு பெரிய மனிதனாகவும் வள்ளலாகவும் இந்த முதலாளி பெற்றிருக்கும் இந்த அடையாளத்தின் உண்மை முகம் என்ன? தொழிலாளர்களுக்கு சம்பளம் தராமல், போனஸ் தராமல் சங்கம் வைக்கும் உரிமை தராமல் கொல்லாமல் கொல்வதும் இதே முதலாளிதான். இறந்து போனவர்களுக்கு சேவையும் உயிரோடுள்ளவர்களுக்கு வதையும்தான் இம்முதலாளியிடம் வெளியிடப்படும் கருணையின் இலட்சணம்.

தொழிலாளர்கள் தங்களது சம்பளத்தில் அஞ்சும் பத்துமாக சேர்த்து சில ஆயிரம் செலவு செய்து கொடிக்கம்பம் அமைக்கிறார்கள். அதனை நள்ளிரவில் டெம்போ கொண்டுவந்து திருடிக்கொண்டு போகிறாயே, உன் சிந்தனைதான் எவ்வளவு மட்டமானது. எத்தனை அசிங்கமானது, மிகவும் கீழ்த்தரமானது என்று மனதில் உறைக்கவில்லையே…! இவர்கள் மனிதர்கள் எனும் தகுதியில் கோவை மண்ணில் நடமாடவே தார்மீகத் தகுதி இல்லாதவர்கள்.

“இப்போது மீண்டும் தொழிலாளி வர்க்கத்தின் கொடி உனது ஆலை வாயிலில் பறக்கிறது.”

மாநகராட்சி மூலமும், மாநகர காவல்துறை மூலமும் அடுத்த கட்ட வேலைகளை சி‌ஆர்‌ஐ முதலாளிகள் செய்வார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அதையும் சந்திப்போம்.

“முதலாளித்துவம் தனக்கான சவக்குழியை தானே தோண்டிக்கொள்ளும்”  என்ற கூற்றுக்கேற்ப கோவை மண்ணில் முதலாளித்துவத்தின் சவக்குழிக்கு அடிக்கல் நாட்டு விழாவை புஜதொமு துவங்கியுள்ளது.

தகவல்: புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, கோவை